சென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள்

kattana

சென்னை கட்டண உரையை திட்டமிட்டபோது அகரமுதல்வன் சொன்னார் ”எத்தனை குறைந்தபட்ச வருகை இருந்தால் சரி என நினைப்பீர்கள்?” நான்  “200 இருக்கைகள் நிறைந்திருந்தால்” என்றேன். அகரன் “முந்நூறு என் இலக்கு… முந்நூறுபேர் வசதியாக அமரும் கூடம் பார்க்கப்போகிறேன்” என்றார்.

பொதுவாக இந்தவகையான அறிவிப்புகளில் ஒரு சவால்தான் உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஓர் இலக்கிய- பண்பாட்டு உரையை, எந்த விதமான கேளிக்கையம்சங்களும் இல்லாத நிகழ்வை பணம் கொடுத்துக் கேட்கவும் இங்கே ஆளிருக்கிறார்கள் என்னும் அறைகூவல். ஆனால் அறிவிப்பு முடிந்ததுமே பதற்றம் ஆரம்பமாகிவிடும். ஏனென்றால் எல்லாவித இலட்சியவாதங்களையும் முகத்திலறையும் ஒரு வழக்கமும் நம்மிடம் உண்டு.

நான் இளைஞனாக இருந்தபோது,1983-இல் என நினைவு, சி.சு.செல்லப்பா சென்னையில் மணிக்கொடி ஐம்பதாவது ஆண்டுவிழாவையும் எழுத்து இதழின் இருபத்தைந்தாவது ஆண்டுவிழாவையும் ஒரே நிகழ்வாக நடத்தினார். அவரே விழாவுக்கு ஏற்பாடுசெய்திருந்தார். நான் அதற்குச் சென்றபோது அரங்கில் அவர் மட்டுமே இருந்தார். நூறு இருக்கைகள் போட்டிருந்தார். இருக்கைகளை அவர் நெருக்கமாக ஆக்கிக்கொண்டிருந்தார். என்னிடம் உதவும்படி சொன்னார். நான் “என்ன செய்கிறோம்?” என்று கேட்டேன்.  “இருபது சேர் ஜாஸ்தி போடலாம்னுதான்…” என்றார்.

அது அபத்தமான நம்பிக்கை. அந்த நிகழ்ச்சி தொடங்கவிருந்த நேரத்தில் அங்கே ஏழுபேர்தான் இருந்தனர். செல்லப்பா அவரே பேச ஆரம்பித்தார். மிகுந்த வருத்தத்துடன் அங்கே வந்திருப்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். கூட்டம் முடியும்போது பதினெட்டுபேர் இருந்தனர். செல்லப்பா டீ ஏற்பாடு செய்திருந்தார். அன்றைக்கு ஒருவகை நாடோடியாக இருந்த நான் நாலைந்து டீயை குடித்துவிட்டு கிளம்பிச்சென்றேன்.

இப்படித்தான் எப்போதும் நிகழ்கிறது. இருபத்தைந்தாண்டுகளில் இந்த வருகையாளர் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இருபது மடங்காக ஆக்க முடிந்திருக்கிறது. அதுவே பெரிய சாதனைதான். இன்னும் நூறுபேர் வருவார்கள் என்றால் முழுவெற்றி என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

தொடர்புக்கு 9962371849

நுழைவுச்சீட்டினை இணையத்தளம் வழியாகவும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். டிஸ்கவரி புத்தக நிலையம் மற்றும் பனுவல் புத்தக நிலையத்திலும் பணம் செலுத்தி பெறலாம்.

சென்னையில் ஓரு கட்டண உரை  

முந்தைய கட்டுரைராயகிரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68