நெல்லை தொல்.திருமாவளவன் நிகழ்ச்சி

thiru1

நேற்று முன்நாள் [24-2-1019] அன்று நெல்லையில் நவபோதி அமைப்பின் சார்பில் தொல்.திருமாவளவன் அவர்களின் ‘அமைப்பாய் திரள்வோம்’ என்னும் நூலைப் பற்றிய கருத்துரைக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். நாகர்கோயிலில் இருந்து மாலை மூன்று மணிக்குக் கிளம்பி நெல்லை சென்றேன். லக்ஷ்மி மணிவண்ணனும் உடன் வந்தார்.

நிகழ்ச்சி நான்கு மணிக்கு என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் திருமாவளவன் வந்துசேர ஆறுமணியாவது ஆகுமென நான் நினைத்தேன். ஏனென்றால் அவர் காரில்தான் வருவார். வரும் வழிதோறும் அவர் நிற்காமலிருக்க முடியாது. அவருடன் சென்று மக்கள் அளிக்கும் மெய்யான உணர்ச்சிக்கொந்தளிப்பான வரவேற்புகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் பலசமயம் சாலையோரத்திலிருந்து ஐம்பது அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருந்துகூட வந்திருப்பார்கள்.

thiru5

திருமாவளவனின் நிகழ்ச்சியை ஒளிப்பதிவுசெய்ய என் நண்பர் ராம்தாஸ் திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்தார். ராம்தாஸ் ஏஷியாநெட்டில் பணிபுரிகிறார். நான் கல்பற்றா நாராயணனுக்கு இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் கவிதைகள் பற்றி எழுதிய நீண்ட கடிதங்களை நூலாக்குகிறார்.

ராம்தாஸை அவர் தங்கியிருந்த வெங்கடேஸ்வரா விடுதிக்குச் சென்று சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். தமிழக தலித் அரசியல்சூழல் பற்றி. பிணராய் விஜயனைப் பற்றி. ஒரு கட்டத்தில் உரையாடலை அவர் ஒளிப்பதிவுசெய்துகொண்டார். ஏதேனும் டிவியில் வரலாம்.

thiru

அங்கிருந்து ஏழு மணிக்கு அரங்குக்கு வந்தேன். திருமாவளவன் வந்திருக்கவில்லை. நிகழ்ச்சி தொடங்கவிருந்தது. ஆங்காங்கே கலைந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஓவியர் சந்ரு மாஸ்டர் வந்திருந்தார். பேரா.ராஜ் கௌதமன் வந்திருந்தார். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

வழக்கம்போல ராஜ் கௌதமனுடனான எல்லா உரையாடல்களும் வெடிச்சிரிப்புகள்தான். அன்று அவருடைய முன்னாள் ஆசிரியர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இளம் வாசகியான லக்ஷ்மி வந்திருந்தார். பனிமனிதன் அப்போதுதான் படித்ததாக சொன்னார்.

thiru2

எட்டுமணிக்குத்தான் திருமா வந்தார். அவர் வந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. நண்பர் நட.சிவகுமார், சிவசங்கர் ஆகியோர் அவருடைய மதமும் மதமாற்றமும் என்னும் நூல் பற்றி பேசினர். மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றிய அவருடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல்வடிவம் அது. தொடர்ந்து அரசியல்களப்பணியாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப்பொறுப்பாளர்களின் பேச்சு.

திருமாவளவன் அவர்களின் அரசியல் கூட்டம், அவர் கலந்துகொண்ட இலக்கியக்கூட்டம் இரண்டிலும் பங்கேற்றிருக்கிறேன். இலக்கியக்கூட்டத்தில் அவர் இலக்கியவாதியாகவே கலந்துகொள்வார், அதற்குரியவர்களே உடன்வருவார்கள். அரசியல்கூட்டத்தின் உளவியல் வேறு. அது ததும்பிக்கொண்டே இருக்கும். அவரைத்தவிர எவரையுமே அவர்கள் கேட்க விரும்புவதில்லை என்று தோன்றும். அவரைப் பார்ப்பதன் பரவசத்தில் ஆழ்ந்திருப்பார்கள். நகர் எல்லையில் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பது முதல் அவரை அரங்குவரை கொண்டுவருவது வரை அது ஒரு பெரும் மானுடக்தொந்தளிப்பு.

thiru3 (2)

எப்போதும் அவர் கைகளை கவனித்திருக்கிறேன். அவரை நோக்கி ஓடிவந்து முட்டி மோதி அவரை தொடமுயல்பவர்களின் கைநகங்கள் பட்டு பூனைக்கையால் அறைபட்டதுபோல நகக்கீறல்கள் நிறைந்திருக்கும். ரத்தக்கோடுகளைக்கூட பார்த்திருக்கிறேன். [எம்ஜி.ஆர் இக்காரணத்தால் கையில் மெல்லிய தோலுறை அணிந்து அதற்குமேல் முழுக்கை சட்டைபோட்டிருப்பார் என கமல் ஒருமுறை சொன்னார்]

திருமாவளவன் பேசுவதற்காகக் காத்திருப்பவர்கள் பிறருக்கு பொறுமையின்மையை காட்டிக்கொண்டிருப்பார்கள். எவர் பேசினாலும் அனைத்துவிழிகளும் அவர்மேலேயே இருக்கும். அவருடைய பேச்சின்போது மட்டுமே ஆழ்ந்த அமைதி இருக்கும். ஆகவே அவருடைய அரசியல்கூட்டத்தில் பேசுவதென்பது ஒருவகை சம்பிரதாயம் மட்டுமே.

thiru4

ஆனாலும் இப்படி அவர் பங்கெடுக்கும் கூட்டத்தில், அவரைப்பற்றிப்  பேசுவதென்பது எழுத்தாளனாக ஒரு கௌரவம் என்றே நினைக்கிறேன். தனிப்பட்டமுறையில் வேறெந்த அரசியல்மேடையிலும் பேச நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வேறெவரையும் தலைவர் இடத்தில் நிறுத்திப் பார்க்கவும் இயலவில்லை. தமிழகத்தில் பல அரசியல்தலைவர்களுடனான விழாக்களுக்கு அழைக்கப்பட்டுள்ளேன், அவற்றை தவிர்த்தே வந்திருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான்.

இது என் தனிப்பட்ட உணர்வு. இது எவ்வகையிலும் அதிகாரத்துடன் தொடர்புடையதல்ல, எவ்வகையிலும் அரசியலும் அல்ல. அரசியலின் ஏற்பு மறுப்பு சார்ந்து இதை விவாதிக்கவும் மாட்டேன். பொதுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டே அவரை பார்த்துவருகிறேன். அவர் ஒரு வரலாற்றுக் கருவி. இந்தக் காலகட்டத்தின் மானுட விடுதலைக்கான எழுச்சி அவரை கண்டடைந்திருக்கிறது. சூழ்ந்திருக்கும் சிறிய அரசியல்வாதிகள் நடுவே எப்போதும் ஒரு நிலைகொள்ளாமையுடன், தத்தளிப்புடனேயே அவர் இருப்பதை காண்கிறேன்.

thiru3

ஓர் எழுத்தாளனாக என் ஆழுள்ளத்திற்கு திருமாவளவன் அளிக்கும் நுண்ணிய அதிர்வு அவரை மிக அணுக்கமானவராக எனக்கு காட்டுகிறது.  அவர் ஒரு வரலாற்று நிகழ்வு என்றே நினைக்கிறேன். அரசியல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் சென்று நோக்கினால் அவர் ஒரு சமகாலப் பேராளுமை. யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தி போல. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்போல.

இதை மீளமீள பதிவுசெய்கிறேன், ஆனால் எவருக்கும் என்னால் இதை விளக்கிவிட முடியாது. ஆகவே எவருடனும் இதைப்பற்றி விவாதிக்கவும் நான் முற்படுவதில்லை. இது ஒரு புகழ்மொழியாக சிலருக்குப் படலாம், ஆனால் எழுத்தாளன் என்பவன் பெரிய ஆளுமைகளின் முன் எளியசொல்லுடன் நிற்பவன் என்பதே என் எண்ணம்.

நான் அந்த உணர்வை தர்க்கபூர்வமாக விளங்கிக்கொள்ள முயல்வதுண்டு. தொடர்ந்து அவரை பார்த்துவருகிறேன். நான் பல அரசியல்வாதிகளை நேரில் அறிவேன். முற்றிலும் பாவனைகள் இல்லாத, நேரிலும் மேடையிலும் நடிப்பு அம்சமே இல்லாதவர் அவர். மக்களிடம் அவருக்கு இருக்கும் பேரன்பைக் காண்பது எப்போதுமே என்னை நெகிழச்செய்யும் அனுபவம். அவர் விழிகளையே நோக்கிக்கொண்டிருப்பேன். அதிலிருக்கும் கனிவே அத்தனை மக்களை அவரை நோக்கி வரச்செய்கிறது.

thiru7

உண்மையில் அவருக்கு அவர்களுடன் பேசுவதற்கான ஊடகம் என ஏதுமில்லை. அவர் திரையிலோ சின்னத்திரையிலோ தோன்றிக்கொண்டிருப்பதில்லை. அவருடைய பேச்சு பெரும்பாலானவர்களுக்கு முழுக்க புரிவதும் அல்ல. அவர் நேரில் தொடர்ச்சியாக அவர்களை சந்திக்கிறார். அவர்கள் அவருடைய முகத்தையும் கண்களையும் பார்க்கிறார்கள், அவரை அறிந்துகொள்கிறார்கள். அந்தத் தொடர்பால் மட்டுமே அவ்வியக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

அவருக்கு அந்தரங்கம் என்பதே கிடையாது. உள்ளாடைகளைக்கூட நூறுபேர் நடுவே மாற்றிக்கொள்ளவேண்டிய நிலை. ஒருநாளில் நான்குமணிநேரம் பெரும்பாலும் வாகனங்களில் தூங்குகிறார். பலவகையான மனிதர்கள். ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான சிக்கல்கள். இவற்றுக்கு பதிலாக தனிப்பட்ட முறையில் தான் பெற்றுக்கொள்வது ஏதுமில்லை. மெய்யாகவே மனிதர்கள்மேல் பேரன்பு கொண்டவர்களால்தான் இத்தகைய ஓர் அலைநடுவே வாழமுடியும்.

thiru4

நான் சுருக்கமாக பேசினேன். அதன்பின் ராஜ் கௌதமன் பேசினார். ஓவியர் சந்துரு புத்தர் முன் வணங்கும் யானை ஒன்றின் சிலையை திருமாவளவன் அவர்களுக்கு பரிசளித்தார். இறுதியாக திருமாவளவன் அவர்களின் உரை. தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் அவர் என்பது என் எண்ணம். சீரான உச்சரிப்பு, தொடர்ச்சியான வலுவான கருத்துக்கள். உணர்ச்சிகரமும் சிந்தனையும் சரியாக முயங்கிய உரை. அதிகாரம் என்பது எவருக்கும் எதிரானதாக அல்லாமல், தன் உரிமைக்கானதாக மட்டுமே ஆகும் நிலையைப் பற்றிய உரை.

திரும்பிச்செல்லும்போது பதினொன்றரை மணி ஆகிவிட்டது. சந்ரு மாஸ்டர் வடிவமைத்த அம்பேத்கரின் சிலை ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. இரவு ஒருமணிக்கு வீடுதிரும்பினேன். அருண்மொழியிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்து தூங்க இரண்டரை மணி.

முந்தைய கட்டுரைசென்னை கட்டண உரை – நுழைவுச்சீட்டு வெளியீடு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65