முச்சந்திக் கூச்சல்

bee

அன்புள்ள ஜெ,

சென்ற சிலநாட்களாகவே முகநூலில் இருந்து தனிப்பட்ட நண்பர்கள் வரை ஒரே சச்சரவு. இவரை எப்படி அவர் அழைக்கலாம், இவரை வைத்து எப்படிக் கூட்டம் நடத்தலாம், இவரை எப்படி பக்கத்தில் உக்கார வைக்கலாம் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன இது ஒரே சலம்பலாக இருக்கிறதே என்று பார்த்தால் மொத்தமாகவே ஒரு மூன்றுநான்குபேர் முகநூலில் கிடந்து இந்தச் சத்தத்தை உருவாக்குகிறார்கள். இத்தனைக்கும் எதையும் படிப்பவர்களோ, இதுவரை சொல்லும்படி எதையும் எழுதியவர்களோ இல்லை. ஒருவகையான மூர்க்கமான வேகம் கொண்டவர்கள். தனிப்பட்ட வெறுப்பு, காழ்ப்பிலிருந்து எழும் வேகம் அது. அப்படி ஒரு வேகம் இருந்தாலேபோதும் இங்கே ஒரு சலசலப்பை உருவாக்கிவிடமுடியும், ஒரு பத்துப்பதினைந்து அப்பாவிகளையும் வெத்துவேட்டுக்களையும் அதைப்பற்றிப் பேசவைத்துவிடமுடியும் என்பதுதான் ஆச்சரியமானதாக நினைக்கிறேன்

செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்குமார்,

இலக்கியம் வாசிப்பவர்கள், இலக்கியத்தை உணர்ந்தவர்கள் அறிவது ஒன்று உண்டு. இலக்கியம் தனக்கென தனியே அறிதல் –வெளிப்படுத்தல் முறைகளைக்கொண்ட ஓர் அறிவுத்துறை. அது அரசியல், மதம், தத்துவத்தின் அடிமை அல்ல. அத்துறைகளை தன் மூலப்பொருளாக அது எடுத்துக்கொள்ளலாம், அத்துறைகளில் ஊடுருவி உரையாடலாம். அத்துறையின் குரலாக அது ஒருபோதும் ஒலிக்காது.

இவ்வகையில் இலக்கியத்தை அறிந்தவர்கள்தான் இலக்கியவாதியை இலக்கியத்தின் தரப்பு என்று பார்க்கிறார்கள். எந்த அரங்கிலும் அவனை ஓர் இலக்கியவாதியாக அமரச்செய்கிறார்கள். அவன் சொல்வதற்கு என்ன உள்ளது என்று கேட்கிறார்கள். அந்த வாசகர்கள் என்றும் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள், மதவாதிகளில் மிகமிக எளிய தரப்பினர் உண்டு. அவர்களுக்கு அரசியலும் மதமும் வெறும் தன்னடையாளம் மட்டுமே. அந்த அறிவுத்தளங்களின் ஆழமும் நுட்பமும் அவர்களுக்குத் தெரியாது. வெறுமனே ஒரு தரப்பு எடுத்து கூச்சலிட்டு தனக்கென ஓர் அடையாளம் தேடுவது மட்டுமே அவர்களின் இயல்பு. அதை தனிப்பட்ட காழ்ப்புகள் பொறாமைகளுடன் இணைத்துக்கொண்டால் வெறி கிளம்பிவிடுகிறது.

இவர்கள் இலக்கியத்திற்கு இலக்கியவாதிகளுக்கு அடையாளங்களை சூட்டுகிறார்கள். இலக்கியத்தை படிக்காமல், படித்தாலும் தலைவால் புரியாமல் இந்த மொண்ணைகள் சூட்டும் அடையாளங்களை இலக்கியவாசகர்களும் இலக்கியவாதிகளும் தாங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களை இலக்கியம் அறிந்தவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை, வெற்றுக்கூச்சல் என்பதற்கு அப்பால் அவற்றுக்கு மதிப்பே இல்லை என்பதை அவர்கள் எத்தனை பட்டாலும் புரிந்துகொள்வதில்லை. மீண்டும் மீண்டும் அதே தெருமுனைக்கூச்சல், கூட்டக் குரைப்பு.

இது எப்போதும் இப்படித்தான் நிகழ்ந்தது, நாளையும் இப்படித்தான் நிகழும். இவர்களை ஒருவகையான பேன் தொல்லை என்பதற்கு அப்பால் பொருட்டாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை

ஜெ

ஜெ,

மதுரை இறையியல் மையம் ஒட்டியிருந்த போஸ்டரில் உங்கள் பெயருடன் பிரபல சினிமா இயக்குநர் என்று இருந்தது. அதை வைத்து கும்பல் கும்மியடித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் பார்வைக்கு

ராஜ்

அன்புள்ள ராஜ்

அந்த போஸ்டரை நானும் மதுரையில் நுழைந்தபோது பார்த்தேன். புன்னகைத்துக்கொண்டேன்.

இறையியல் மையம் என்பது கிறித்தவ போதகர்களுக்கான மையம். அங்கிருக்கும் பலருக்கு உண்மையிலேயே சினிமா இயக்குவதும் எழுதுவதும் வேறு என தெரிந்திருக்காது. அலெக்ஸ் உட்பட பலருக்கு தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களையே தெரியாது என்பதை கண்டிருக்கிறேன்.

இந்த முகநூல் முட்டாள்களுக்கு இவர்களுக்குத் தெரிந்த சினிமாச்செய்திகள் மெய்ஞானம், அதை அறியாதவர்கள் எல்லாம் அசடுகள்.

ஜெ

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைசெழியனின் டு லெட் – கடலூர் சீனு