சொற்களை தழுவிச்செல்லும் நதி

42829154_728744974145658_690232821066760192_n

கவிதைகளில் சொற்களின் நடுவே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு கூற்று உண்டு. இளம் வயதில் அந்த வரியை வாசிக்கையில் நான் நேரடியாகவே அந்தக் காட்சியை கற்பனைசெய்துகொண்டேன். ஒவ்வொரு சொல்லும் ஒரு பாறை. இன்னொரு பாறை தாவிக்கடக்கலாம் என்று ஆர்வத்தையும் விழுந்துவிடுவோமோ என்னும் அச்சத்தையும் ஒருங்கே உருவாக்கும் தொலைவில். நடுவே பெருநதி. நுரையுடன் ஆவேசமாக கொந்தளித்துச் செல்வது.

அந்த வரி நெடுங்காலம் நினைவில் நின்றதனால்போலும் கவிதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்வது என்னும் கூற்று எப்போதுமே எனக்கு அபத்தமான ஒன்றாகவே ஒலிக்கிறது. என் வரையில் கவிதை போல அர்த்தங்களை உருவாக்கிக் கொள்ள வாசகனைக் கட்டாயப்படுத்தும் இன்னொரு இலக்கியவடிவம் இல்லை. உண்மைதான் ஒரு சொல்லில் இருந்து இன்னொன்றுக்குச் செல்ல நெடுந்தொலைவு இருக்கிறது. தாவியாகவேண்டும். ஆனால் எவ்வண்ணம் எங்கே செல்வது என்பதை கவிதைதான் முடிவெடுக்கிறது. ஒப்புநோக்க மிக அதிகமான வாசக சுதந்திரத்தை அளிக்கும் வடிவம் நாவல்தான்.

போகனின் இக்கவிதையை சிலநாட்களுக்கு முன் வாசித்தேன்:

நதியின் ஆழத்தில் என்ன நடக்கிறது?
எனக்கு தெரியவில்லை.
மேலே ஒரு பறவை பறக்கிறது.

நான் கட்டுப்பாடின்றி பேசத் தொடங்குகிறேன்
சாலைகளில் என்னைவிட்டு விலகும் கண்களில்
அச்சத்தைப் பார்த்தேன்.

நதியின் ஆழத்தில் என்ன நடக்கிறது?
மேலே பறவை
ஒரு வட்டத்தை விட்டுவிட்டு போய்விட்டது.

புதுக்கவிதை சொற்களுக்கிடையே நீடித்த தொலைவுகளை விடுவதற்கு கவிஞனுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆயினும் இக்கவிதையில் விடப்பட்டிருக்கும் தொலைவு மிக அதிகம். நதியின் ஆழத்தில் நிகழ்வனவற்றுக்கும் மேலே வட்டமிடும் பறவைக்குமான தொலைவு. அந்தப்பறவை வட்டமிட்டு வட்டமிட்டு கட்டுப்படுத்தியிருக்கும் நதிக்கும் சொற்களுக்குமான தொலைவு. அந்தப்பறவை சொற்களிலிருந்து எழுந்து பறந்தகல்கிறது.

william_carlos_williams

நவீனக் கவிதைகளில் இந்தச் சொல்லிடைவெளி சற்று மிகுதியாக இருக்கும் கவிஞர்களில் ஒருவர் வில்லியம் கார்லோஸ் வில்லியம். துரதிருஷ்டவசமாக அவருடைய கவிதைகள் ஆங்கில இலக்கியத்திற்கு பாடமாக அமைகின்றன. கவிதையை அதன்பாட்டுக்கு சொற்களுக்கு மேல் மிக உயரத்தில் வட்டமிட விட்டுவிடும் ஆசிரியர்கள் அமைந்தால் நன்று. இல்லையேல் மலையாள நாட்டார்க்கதையில் மேகத்தை பிடித்துக்கொண்டுவந்து தொழுவில்கட்டி பால்கறக்க முயன்ற ஒரு பித்தரைப்போல் ஆகிவிடும்.

இந்தக் கவிதையை நான் வாசித்த அன்று சைதன்யா டெல்லியில் இருந்து அழைத்திருந்தாள். வழக்கமாக இங்கே பாடமாக இருக்கும் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின்

so much depends
upon

a red wheel
barrow

glazed with rain
water

beside the white
chickens.

என்னும் குறுங்கவிதையில் தன் ஆசிரியை கண்டடைந்த சமூக – அரசியல் – பொருளியல் உண்மைகளைப் பற்றி சொன்னாள். இந்திய, அமெரிக்க, உலக வரலாற்றையே வேண்டுமென்றால் கண்டுபிடிக்கலாம் என்று நான் பதில் சொன்னேன். ஆனால் போகனின் இக்கவிதை வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் கவிதைக்கு எத்தனை அணுக்கமானது என்னும் எண்ணம் ஏற்பட்டது. உடனே நினைவுக்கு வந்தது மெல்லிய பாதங்களால் நடந்து தாவி அமரும் இந்த அழகிய பூனை

As the cat
climbed over
the top of

the jamcloset
first the right
forefoot

carefully
then the hind
stepped down
into the pit of
the empty
flowerpot

மொழியாக்கம் செய்யலாம், ஆனால் வில்லியம் கார்லோஸ் வில்லியம் சொற்களுக்கு இடையே பெருகவிடும் அந்த நதி மறைந்துவிடும். ஏனென்றால் அர்த்தப்படுத்திக்கொள்ளாமல் நம்மால் மொழியாக்கம் செய்ய முடியாது. அர்த்தப்படுத்திக்கொள்வதென்பது சொற்களுக்கு நடுவே பாலம்கட்டுவதுதான்.

http://famouspoetsandpoems.com/poets/william_carlos_williams/poems

ஏன் அது பறவை?

அலைகளில் அமைவது

போகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்

முந்தைய கட்டுரைபால் அரசியல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70