தலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்

thiru

தொல்திருமாவளவன் அவர்களுடன் மதுரையில், ஒருபழையபடம்

மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்

அன்புள்ள ஜெ

நேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் ‘திடீரென்று’ ஜெயமோகன் எப்படி தலித் ஆதார மையத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார், எப்படி திருமாவளவன் அவர்களின் கூட்டத்தில் பேசுகிறார் என்றெல்லாம் விவாதித்துத் தள்ளிவிட்டார்கள். சென்ற ஐந்தாண்டுகளாக நீங்கள் எப்படியும் முப்பது தலித்தியக்க மேடைகளிலாவது பேசியிருப்பீர்கள் என்றும், அம்பேத்கர் அயோத்திதாசர் பற்றிய மிக ஆழமான பேருரைகளை ஆற்றியிருக்கிறீர்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியபோது இவர்கள் எவருக்கும் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் அன்றன்றில் வாழ்கிறார்கள். ஒருநாள் கழித்து அனைத்தையும் அழித்துக்கொண்டு அடுத்தநாளுக்குச் சென்றுவிடுவார்கள். நல்லவேளை இவர்களுடன் நீங்கள் உரையாடவில்லை என நான் நினைத்துக்கொண்டேன்

 

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ராஜேந்திரன்

மதுரை இறையியல் கல்லூரியிலேயே தலித் இலக்கியம் , அயோத்திதாசர் பற்றி நான் ஆற்றும் நான்காவது உரை இது. முதல் உரை 2010 ல் நண்பர். வே.அலெக்ஸ் ஏற்பாடு செய்தது. நான் தொல்.திருமா அவர்களுடன் கலந்துகொள்ளும் ஐந்தாவது கூட்டம் இது

 

முகநூலர்கள் ஒருவகையான கிணற்றுத்தவளைகள். மலையடிவார ஊர்களில் அந்த ஊருக்குள்ளேயே வாழ்ந்து அங்கேயே ஒருவருக்கொருவர் பேசிப்பேசி மறைவார்கள். அதைப்போல தங்களுக்குத் தெரிந்த, தங்களை ஏற்கிற நூறுபேருடன் முழு வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். அப்பால் எதுவும் தெரிவதில்லை. அதோடு மிகச்சிறிய வம்புகளிலேயே உழல்வதனால் எதையுமே புரிந்துகொள்ளும் ஆற்றலும் இருப்பதில்லை. தாங்கள் ஏற்கனவே தெரிந்துவைத்திருக்கும் நாற்பதுவார்த்தை பத்தியாக புதிதாக வாசிக்கும் எல்லாவற்றையும் உடனடியாக உருமாற்றிக் கொள்கிறார்கள். ஆகவே எதுவுமே அவர்களுக்குள் செல்வதுமில்லை. அவர்கள் முன் ஒரு கருத்தை வைப்பது வீண்.

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

 

போஸ்டர்களைக் கண்டு தலித் ஆதார மையத்தில் உங்கள் உரையைக் கேட்க வந்திருந்தேன். அறிமுகம்செய்துகொண்டேன். உரை நாற்பது நிமிடங்களுக்குள் சுருக்கமாக ஆனால் முழுமையாக தலித் இலக்கியம் உருவாகி பரவி வேரூன்றிய வரலாற்றையும் விரிவான மதிப்பீட்டையும் முன்வைப்பதாக அமைந்திருந்தது. 1935க்குப்பின் காந்தியின் ஹரிஜன இயக்கத்தின் செல்வாக்கால் இந்திய இலக்கியத்தில் தலித்துக்களின் வாழ்க்கை மேல் உருவான கவனத்தின் விளைவாக உருவானவை தலித் அல்லாதவர்களால் தலித் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட படைப்புக்கள். அவற்றுக்கு உதாரணமாக சிவராம காரந்தின் சோமன துடி, தகழி சிவசங்கரப்பிள்ளையின் தொட்டியின் மகன், புதுமைப்பித்தனின் துன்பக்கேணி ஆகிய படைப்புகளைச் சுட்டிக்காட்டினீர்கள். காரந்த் காந்தியவாதி. தகழி மார்க்ஸியர். புதுமைப்பித்தன் கட்சிசாரா தனிமனிதவாத பார்வை கொண்டவர். இவ்வாறு பகுத்துச்சென்ற பார்வை மிக உதவியாக இருந்தது. இந்தப் பகுப்புமுறை வரலாற்றை நினைவில் வைத்திருக்க உதவியது. தேவனூரு மகாதேவா அவர்களின் குசுமபாலே பற்றிச் சொன்னீர்கள். அதை எவரேனும் தமிழாக்கம் செய்திருக்கிறார்களா?

 

ஜான் ஃபெலிக்ஸ்

 

அன்புள்ள ஜான்

 

இல்லை, அது தமிழில் இன்னும் வெளிவரவில்லை. காரந்தின் சோமனதுடியும் இப்போது கிடைப்பதில்லை

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

மதுரை தலித் ஆதார மையத்தில் நீங்கள் பேசியதை ஒட்டி தலித்துக்களை வசைபாடி எழுதப்பட்ட சில குறிப்புகளை கண்டேன். உங்கள் பார்வைக்கு

 

ராஜ்

 

அன்புள்ள ராஜ்

 

அவற்றை வாசிக்கவேண்டியதே இல்லை. என்ன சொல்வார்கள் என தெரியாததில்லை

 

இந்தக்குரல்களில் எல்லாம் உள்ளது தங்கள் அரசியலின் கொடிபிடிப்போர்களாக தலித் அரசியலாளர் அமையவேண்டும் என்னும் எண்ணம். தலித் சிந்தனையாளர்களுக்கு சுயமான சிந்தனையோ தரப்போ தெரிவோ இருக்கமுடியாது என்னும் முன்முடிவு. அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் என்னும் கணிப்பு. அவர்களிடம் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் இவர்கள். அலெக்ஸ் மிக ஆணித்தரமாக இதற்கு அளித்த பதிலை நினைவுகூர்கிறேன். இன்று தமிழகத்திலுள்ள கீழ்த்தரமான சாதிய மேட்டிமைவாதம் இது.தான்

 

ஜெ

 

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7

அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4

அயோத்திதாசர் என்ற முதற்சிந்தனையாளர்-3

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2

 

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

 

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

 

அம்பேத்கரின் தம்மம்- 1

அம்பேத்கரின் தம்மம் 2

அம்பேத்கரின் தம்மம் 4

அம்பேத்கரின் தம்மம் 3

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63
அடுத்த கட்டுரைபால் – பாலா கடிதம்