குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா

yu1

 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சொற்பொழிவுகளின் வரிசையால் ஆனது என ஆகிவிட்டது. நேற்று முன்னாள் [23-2-2019] மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குளச்சல் மு யூசுப் அவர்கள் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருதை பெற்றதற்கான பாராட்டுவிழா. லக்ஷ்மி மணிவண்ணனின் நிழல்தாங்கல் அமைப்பும் சிலேட் இதழும் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி.

 

காலை பத்துமணிக்கு செட்டிகுளம் ஏபிஎன் பிளாசாவில் நிகழ்ச்சி. 25 பேர் கலந்துகொண்டார்கள். நாகர்கோயிலில் பொதுவான இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மிகக்குறைவாகவே மக்கள் பங்கேற்பு இருக்கும். எனக்கு மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் அரங்கு அமைவது இங்கேதான். ஏனென்றால் இங்கு ஏராளமான இலக்கியவாதிகள். எல்லாருக்கும் அவரவருக்கான கணக்குகள்.

yu3
பிரேம்குமார்

 

யூசுப் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நெடுங்கால உறுப்பினர். விழாவைத் தலைமைதாங்கி நடத்தியவர் கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவரான சொக்கலிங்கம் அவர்கள். ஆனால் இந்த விழாவுக்கு கலையிலக்கியப் பெருமன்றத்தினர் நான்கைந்துபேர், யூசுப்பின் நண்பர்கள், மட்டுமே வந்திருந்தனர். அவர்களே எடுக்கும் விழா என்றால் ஐம்பதுபேர் இருப்பார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தவர் எவருமில்லை.

 

இஸ்லாமிய இலக்கியநிகழ்ச்சிகள், கிறித்தவ இலக்கிய நிகழ்ச்சிகள், நெய்தல் நிலத்து மக்களின் இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு அந்தந்த தரப்பினரின் பங்கேற்பு பெரிதாக இருக்கும். அந்த முகங்களை இங்கே பார்க்கமுடியவில்லை. இங்கே ஒருவர் இன்னொரு தரப்பினரின் விழாக்களில் அரிதாகவே கலந்துகொள்வார்கள், அதாவது தனிப்பட்ட கட்டாயம் இருந்தால். இங்கே மரபிலக்கியத்திற்கு என ஒரு கூட்டம் உண்டு, அவர்கள் நவீன இலக்கியம் பக்கம் அண்டமாட்டார்கள்.

yu4
பி விமலா

 

சொக்கலிங்கம் அவர்கள் சுருக்கமாக யூசுப் அவர்களின் மொழியாக்கத்திறன் பற்றி பேசினார். யூசுப் அவருடைய மொழியாக்கத்திற்குத் தெரிவுசெய்யும் படைப்புகளின் கருப்பொருள் அடித்தள மக்களின் வாழ்க்கை, இஸ்லாமிய சமூகத்தின் தன்விமர்சனம் ஆகியவற்றைச் சார்ந்தே இருப்பதாகச் சொன்னார்.

 

ஆர்.பிரேம்குமார் யூசுப் இறுதியாக மொழியாக்கம் செய்த பாரசீக மகாகவிகள் என்னும் நூலை முன்வைத்து அவருடைய தெரிவுகளையும் அவர் அளிக்கும் அறிமுகக்குறிப்புகளையும் பற்றி விரிவாகப் பேசினார். இன்னொருவர் மொழியாக்கம் செய்த நூலில் விடுபட்ட பாரசீகக் கவிஞர்கள் இருவர் யூசிப்பின் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பெண். இன்னொருவர் அனல் ஹக் [நானே மெய்மை] என்னும் வரியைச் சொன்னமைக்காக தண்டிக்கப்பட்ட சூஃபி கவிஞர்.

yu5

விமலா தமிழ் மலையாள மொழியாக்கங்களைப்பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்பவர். யூசுப்பின் மொழியாக்கங்களைப் பற்றி ஆய்வுநிறைஞர் ஆய்வுசெய்திருக்கிறார். யூசுப்பின் நூல்களைப் பற்றி அவர் பேசினார். வி.என்.சூரியா சுருக்கமாக யூசுப்பின் முதல் மொழியாக்கநூலான மீசான் கற்கள் உருவாக்கும் மொழிநடைபற்றிப் பேசினார். இன்னொருவர் பேசினார், அவர் பேசிய ஒரு சொறொடர்கூட எனக்குப் புரியவில்லை. உண்மையாகவே ஒரு சொற்றொடர்கூட புரியவில்லை. எனக்குத்தான் ஏதாவது சிக்கலா என தெரியவில்லை

 

இறுதியாக நான் பேசினேன். மொழியாக்கம் என்னும் கருதுகோள் உருவாகி வந்த விதம், தமிழ்-மலையாள மொழியாக்கங்களின் இதுவரையிலான சுருக்கமான வரலாறு, யூசுப்பின் மொழியாக்கத்திறன் என அமைந்திருந்தது என் நாற்பதுநிமிட உரை. யூசுப்பின் மொழியாக்கத் திறனை அடையாளம் காண இரண்டு ஆசிரியர்களை அவர் மொழியாக்கம் செய்திருப்பதை ஒப்பிட்டு நோக்கினால் தெரியும். புனத்தில் குஞ்ஞப்துல்லா நவீனத்துவர். பஷீர் நாட்டார் அழகியல்கொண்ட தனித்துவமான நடையை உருவாக்கிய செவ்வியல்படைப்பாளி. இருவரையும் இருவேறு மொழியில் அவர் தமிழில் ஆக்கியிருக்கிறார் என்பதை வாசகர் காணமுடியும்

yu6
வி என் சூர்யா

 

பஷீர் மிக எளிமையான படைப்பாளி. ஆனால் எளிமையை மொழியாக்கம் செய்வது கடினம். ஏனென்றால் அவருடைய அடித்தளம் மலபார் மாப்பிளா பண்பாட்டில், அதன் சூஃபி பின்புலத்தில் உள்ளது. ஆழத்தில் பஷீரை நோக்கிச் செல்லும் ஒரு தனி உளப்பாதை இருந்தால் மட்டுமே பஷீரை மொழியாக்கம் செய்யமுடியும். யூசுப் பஷீரை படிப்பதற்காகவே மலையாளம் கற்றுக்கொண்டவர். பஷீரைச் சென்றடைந்தவர்.

 

யூசுப் மொழியாக்கம் செய்த பலநூல்கள் பொதுவான சமூக உளவியலைப் பேசுபவை. அவருடைய சாதனை என்பது மலையாளப் புனைவிலக்கியத்தை மொழியாக்கம் செய்ததுதான். பஷீரியம் என்றே சொல்லத்தக்க ஒரு மலையாள அழகியல்மரபு உண்டு. யூ.ஏ.காதர், என்.பி.முகம்மது, டி.வி.கொச்சுபாவா  போன்ற ஓர் எழுத்தாளர்நிரை அதில் உண்டு. அவர்களையும் யூசுப் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்று நான் பேசிமுடித்தேன்.

yu7

யூசுப்பின் ஏற்புரை சுருக்கமானதாக அமைந்திருந்தது. அவர் படித்தது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே. பள்ளிக்குச் செல்பவர்களை ஏக்கத்துடன் ஒளிந்திருந்து பார்த்தவர் கைக்குக் கிடைத்ததை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தார்.நடைபாதை வணிகம் உட்பட பல வேலைகளைச் செய்திருக்கிறார். கடுமையான பொருளியல்நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறார். அனைத்திற்குநடுவிலும் வாசிப்பை தக்கவைத்துக்கொண்டார்.

 

ஒருநாள் பழைய தாள்களுடன் இருந்த வைக்கம் முகமது பஷீரின் கதைகளை யூசுப் பார்த்தார். ஒரு கேரள நண்பர் பஷீரை மலையாளத்தில் படிக்கவேண்டும் என ஆலோசனை சொன்னார். யூசுப் தன் முயற்சியால் மலையாளம் கற்றார். பஷீரை மொழியாக்கம் செய்யும் எண்ணம் அப்போது இருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பின்னரே மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தார். மொழியாக்கப்பணி  அவருக்கு டையாளமாக, இந்த வயதில் வாழ்க்கையின் வெற்றியாக அமைந்தது. அவரை மீட்டது.

yuu1
சி சொக்கலிங்கம்

 

யூசுப் இருபதாண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்கவந்திருந்ததை நினைவுகூர்ந்தார். அன்று அவர் என்னிடம் மொழியாக்கம் செய்ய விரும்புவதைச் சொன்னார். நான்தான் அவர் மலையாள புனைவிலக்கியத்தை மொழியாக்கம் செய்யலாம் என்று சொல்லி புனத்தில் இக்காவின் படைப்புகளையும் அளித்தேன். அவர் மொழியாக்கம் செய்த முதல்நூல் அது. அதுதான் தொடக்கம்,

 

அன்று நான் அவரை மொழியாக்கம் செய்ய ஊக்குவித்ததும் நூல்களை அளித்ததுமே தன்னம்பிக்கையை அளித்தது என்றார் தொடர்ந்து இன்றுவரை அவருடன் எல்லாவகையிலும் அணுக்கமான உறவு அவருடன் எனக்கு இருக்கிறது

yu8
குளச்சல் மு யூசுப்

விழாவுக்கு பல தெரிந்த நண்பர்கள் வந்திருந்தனர். அனீஷ்கிருஷ்ணன் நாயர் வந்திருந்தார். வேதசகாயகுமார் வந்திருந்தார். முக்கியமாக அருண்மொழி பல ஆண்டுகளுக்கு பின் இலக்கியக்கூட்டத்திற்கு வந்திருந்தாள்

 

இந்த அரங்கில் முதன்முதலாக இலக்கியக்கூட்டத்தை நிகழ்த்தியது நானும் அருண்மொழியும்தான். அதற்கு முன் நாகர்கோயிலில் வேறுவேறு அரங்குகளில்தான் இலக்கியச் சந்திப்புகள் நிகழ்ந்தன. நாஞ்சில்நாடனின் அறுபதாவது ஆண்டுவிழாவை குளிர்சாதன அரங்கில் நிகழ்த்தவேண்டும் என திட்டமிட்டு இங்கே ஒருங்கிணைத்தோம். அதன்பின் வேதசகாயகுமார், அ.காபெருமாள் போன்றவர்கள் ஓய்வுபெற்றமைக்கான விழாக்களையும் நானும் அருண்மொழியும் இங்கே நடத்தினோம்

 

yuu

 

அனைவருக்கும் மதியம் சாம்பார்சாதம் ஏற்பாடு செய்திருந்தார் மணிவண்ணன். சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி வந்தோம். பேசிக்கொண்டிருக்கையில் மணிவண்ணன் சொன்னார். யூசுப்புக்கு விருது அறிவிக்கப்பட்டபோது வீட்டுக்குச் செய்தியாளர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசுவதை எண்ணியபோது யூசுப்புக்கு பதற்றம் ஏற்பட்டு ரத்த அழுத்தம் எகிறி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும்படி ஆயிற்று என்று. “கொஞ்சநாளில் பாராட்டுக்கள் பழகிவிடும். ஆறுமாசம் பாராட்டுக்கள் கிடைக்காமலிருந்தால் ஏமாற்றமாக தெரியும்” என்று சொன்னேன்

 

புகைப்படங்கள் லைம்லைட் ராஜேஷ்குமார்

முந்தைய கட்டுரைகட்டண உரையின் தேவை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64