‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70

ele1சுழிமையம் நோக்கிச்சென்று இடும்பர்களைத் தாக்கும் தன் போரை துரோணர் மிகக் கூர்மையாக திட்டமிட்டு உகந்த வில்லவர்களை முன்னிறுத்தி வலை ஒருக்கியிருந்தார். முன்னரே தங்கள் தாக்குதலை எதிர்பார்த்து பாண்டவர் சூழ்கை அமைத்திருப்பார்கள் என அவர் சற்றும் எண்ணாததால் பாண்டவ மைந்தர் ஏவிய அம்புகள் வந்துவிழுந்து தன் படைவீரர்கள் விழத்தொடங்கியதும் சற்றுநேரம் திகைத்தார். முதலில் அந்த அம்புகள் இடும்பர்கள் அருகிலிருந்து எங்கோ ஏவுவது என அவர் நினைத்தார். பின்னர்தான் அவை சுழியின் கரையிலிருந்து இருளில் எழுந்து இறங்குகின்றன என உணர்ந்தார். அத்தனை தொலைவில் இருந்து இலக்கு பிழைக்காமல் அம்புகள் வருகின்றன எனில் அங்கே அர்ஜுனனோ திருஷ்டத்யும்னனோ சாத்யகியோ இருக்கவேண்டும் எனத் தோன்றியது.

பின்னர்தான் அவர் பாண்டவ மைந்தரை நினைவுகூர்ந்தார். முதுமையால் அவர் இளையவரை நினைவுகூர எப்போதும் பிந்தினார். ஆகவே அவர்களை எண்ணாமலேயே எல்லாச் சூழ்கைகளையும் வகுத்தார். வில்லுடன் இளையோர் எதிரில் வரும்போதுகூட அவர்கள் போருக்கெழுந்திருக்கிறார்கள் என அவர் உள்ளம் எண்ணவில்லை. அவர்களின் அம்புகளில் சில அவருடைய கணிப்புகளைக் கடந்து தாக்கி உள்ளத்தை அதிரச்செய்யும்போது மட்டுமே அவர் அவர்களை வில்லவர் என உணர்வார். சீற்றம்கொண்டு அம்பெடுக்கையில் இருக்கும் விசை நாணிழுக்கையில் இல்லாமலாகும். அவர்களின் அம்புகள் எழுந்து தன்னை நோக்கி வருகையில் அவற்றை அறைந்து வீழ்த்தும்போதுகூட அவர்கள் ஆற்றும் பிழைகளை உள்ளம் கணக்கிடும். அரிதாக அவர்கள் பெருந்திறலுடன் வெளிப்படுகையில் மகிழ்வுறும்.

மைந்தரில் தந்தையர் வெளிப்படும் விந்தையை அவர் அப்போது வியந்துகொண்டிருந்தார். அம்புகளின் இயல்பிலிருந்தே பீமனின் மைந்தர் சுதசோமனும் சர்வதனும் தெரிந்தனர். பீமனின் மைந்தரின் அம்புகளில் தோள்வல்லமை இருந்தது. வந்தறைந்த அம்புகள் விசையால் ஆழ இறங்கி நடுங்கின. விசைமிகுதியால் அவை எப்போதுமே நேர்கோட்டுப்பாதையில் சீறி வந்தன. “அம்புகள் விசையால் ஆனவை, ஆனால் மிகையான விசையை அளித்தால் காற்றுக்குரிய தெய்வங்கள் சினம்கொள்கின்றன. பலனும் அதிபலனும் தங்களை நோக்கி அந்த அம்பு ஏவப்பட்டதாகவே எண்ணுகின்றனர். அந்த அம்புகளை அவர்கள் எதிர்நின்று ஊதி திசைமாற்றுகின்றனர். மிகைவிசை கொண்ட அம்பு கட்டற்றது. காற்றில் அது துள்ளி அதிர்ந்தபடி செல்வதை நீ காண்பாய். காற்றில் விரையும் அம்பின் தேவையற்ற ஒவ்வொரு அசைவும் திசைமாற்றுவதே” அவர் பீமனிடம் சொன்னார். அவன் எய்த அம்பு மரக்கிளை ஒன்றை ஒடித்து வீழ்த்தியிருந்தது.

அருகே அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் அவர் தொடர்ந்தார் “அறிக, சிறந்த அம்பு பலனை வழிபடுவது! அதிபலனின் வாழ்த்துக்களை பெற்றது. தவழும் குழவி தந்தைமேல் என அது பலனின் தலைமேல் ஏறிக்கொள்கிறது. அதிபலனின் தோளில் அமர்ந்திருக்கிறது. நீரலைகளின் மேல் அன்னம் என அது காற்றில் செல்கிறது. எழுவிசையில் துளியும் குறையாமல் இலக்கைச் சென்றடைகிறது. எதிர்க் காற்றும் எண்திசைக்காற்றுகளும் அதை குழப்புவதில்லை. நாண் விட்டெழும்வரைதான் அம்பு உன்னுடையது. உன் ஊழ்கத்தில் கனிந்த சொல்லை அது பெற்றுக்கொள்ளட்டும். அந்த அம்புக்குரிய தெய்வங்களிடம் அம்பை அளித்துவிடுக! அது தன் வழியில் உன் இலக்கை நாடட்டும்.” அர்ஜுனன் விட்ட அம்பு மரக்கிளையை கடந்து சென்றது. ஒருகணம் தயங்கியபின் கிளை மெல்ல வெட்டுண்ட விளிம்புடன் மண்ணில் விழுந்தது. சுருதசேனனின் அம்புகளை அவர் அர்ஜுனன் என ஒருகணம் எண்ணி மறுகணம் சகதேவனை கண்டுகொண்டார்.

அவர் தேர்மேலும் கவசங்கள் மீதும் பாண்டவ மைந்தர்களின் அம்புகள் பட்டுத் தெறித்தன. நீளம்பு ஒன்று அவர் தோள்கவசத்தை உடைக்க அவர் நிலைதடுமாறி மீண்டார். அவருடைய புரவிகளில் ஒன்றின்மேல் நீளம்பு ஆழ்ந்திறங்கியது. அவர் தன் தேரை பின்னடையச்செய்து புரவியை மாற்ற ஆணையிட்டார். அப்போது அவருடைய படையினர் பாண்டவ மைந்தரின் அம்புகளால் தயங்கி பின்னடைய எண்ணிக்கொண்டிருந்தனர். துரோணரின் தேரின் பின்னகர்வை பின்வாங்குவதற்கான ஆணை என புரிந்துகொண்டு மொத்தப் படைவளையமும் விரிந்து அகன்றது. தேர்ப்பாகன் புண்பட்ட புரவியை அறுத்து விட்டுவிட்டு அருகே நின்ற இன்னொரு புரவியை கொண்டுவந்து கட்டும்பொழுதில் தன் படை பின்வாங்குவதைக் கண்ட துரோணர் “எழுக! எழுக! முன்னெழுந்து இடும்பர்களை தாக்குக!” என்று ஆணையிட்டார்.

ஆனால் அந்த ஆணை ஒளியென்று மாறி எழுந்தபோது உத்தரபாஞ்சாலர்களால் அதை உய்த்துணர முடியவில்லை. இயல்நிலையில் ஒளியாணையை மொழிப்படுத்திக்கொண்ட அகவுணர்வு இடர்நிலையில் கலைந்து பழகிப்போன ஆணைகளுக்காக தேடியது. ஆணை எழாதொழிய மேலும் படைகள் பின்னடைந்தன. துரோணர் சீற்றத்துடன் “எழுக… முன்னெழுந்து தாக்குக! அங்கே சிலர்தான்! முன்னெழுக!” என்று கூவினார். அவர் தன் தேரை விசையுடன் முன்னால் செலுத்தியிருந்தால் அதுவே கண்கூடான ஆணையென எழுந்து உத்தரபாஞ்சாலப் படையினரை இடும்பர்களின் நடுச்சுழி நோக்கி செல்லவைத்திருக்கும். ஆனால் அவருக்கும் அந்தப் பதற்றத்தில் தன் ஒளியாணைகள் சென்றுசேரவில்லை என்பதனாலேயே உத்தரபாஞ்சாலர் பின்னடைகிறார்கள் என்பது புரியவில்லை. தன் ஆணைகள் உளம்கொள்ளப்படவில்லை என அவர் எண்ணினார். சினம் வெறியென்றாக “அறிவிலிகள்! முன்னேறிச் செல்க! பின்னடைவோர் கொல்லப்படுவார்கள்!” என்று கூவினார். காலால் தேர்த்தூணை ஓங்கி உதைத்தார்.

தன் சூழ்கை பின்னடைய அதை சொல்லால் ஆளமுடியாததை ஒரு தருணத்தில் தன் உடலுக்கும் உள்ளத்துக்குமான தொடர்பு அற்றுப்போய்விட்டதைப் போலவே உணர்ந்தார். அது அளித்த பதற்றத்தை அவரால் கடக்கமுடியவில்லை. அந்தச் செயலின்மையில் சுருதசேனனும் சுதசோமனும் சர்வதனும் அம்புகளால் அவருடைய படைகளை அறைந்து வில்லவர்களை வீழ்த்தினர். இடும்பர்களின் சுழிமையம் விலகி அப்பால் சென்றது. அங்கிருந்து இடும்பர்கள் பொங்கி எழுந்து அலையலையாக இறங்கி எடைமிக்க கதைகளால் அறைந்து தேர்களைச் சிதறடித்து வில்லவர்களை தலையறைந்து கொன்றனர். இடும்பர்கள் விண்ணிலிருந்து இறங்க அவர்களை அஞ்சி விலகிய கௌரவப் படைவீரர்களை பக்கவாட்டிலிருந்து பாண்டவ இளையோர் அம்புகளால் அறைந்து வீழ்த்தினர். இருள் பெருந்திரையாக மறைக்க அங்கிருந்து எழுந்த அம்புகள் நாகங்கள் என நெளிந்துவந்து அவர்களின் உயிர்களை கொய்தன.

கௌரவப் படை பின்னடைய இடும்பர்களின் சுழி இடம்மாறியது. வீழ்ந்த இடும்பர்களின் இடத்தை நிரப்பும் புதிய இடும்பர்கள் வந்து சேர மீண்டும் விசையுடன் அரக்கர்கள் விண்ணிலெழுந்து கௌரவப் படையை தாக்கினார்கள். கௌரவர்கள் அவர்களால் சிதைத்து பரப்பப்பட்டு தனித்தனியாக முட்டி மோத அவர்களைக் கொன்று மேலெழுந்து இறங்கி மீண்டும் எழுந்து சென்றனர் இடும்பர். “வால்சொடுக்கிப் பாயும் வண்டுகள்… இவர்களை எதிர்கொள்ளும் படைக்கலம் ஷத்ரியர்களிடம் இல்லை” என்று சர்வதன் சொன்னான். அம்புகளை ஏவியபடி “துரோணர் மீண்டும் வரக்கூடும்… அவர் எழுகிறார் என்றே கொள்க!” என்று சுதசோமன் சொன்னான். “அவரால் போரிடவே இயல்கிறது. படைகளை நடத்த இயலவில்லை” என்றான் சர்வதன். “ஆம், ஆனால் அஸ்வத்தாமர் அரசரென அரியணை அமர்ந்தவர். ஆணையிடக் கற்றவர். தந்தையின் உதவிக்கு அவர் எழக்கூடும். சுழியின் அமைப்பை அவர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணுக!” என்றான் சுதசோமன்.

“நாம் மேலும் படைகளை துணைக்கென அழைக்கவேண்டுமா?” என்றான் சுருதசேனன். “நம் படைகள் தந்தையரை பாதுகாத்துச் சூழ்ந்து நின்றிருக்கின்றன. இன்று நாகரான கர்ணன் மும்மடங்கு விசை கொண்டிருப்பார் என்கிறார்கள்” என்றான் சுதசோமன். அச்சொற்கள் அவர்களுக்கு மேலும் உளக்கூர்மையை அளித்தன. விழிகளால் மட்டுமே போரிடத் தடையாக இருந்த அனைத்தையும் சித்தத்திலிருந்து உரையாடல் அகற்றியது. கைகள் உள்ளத்தைவிட போரிடக் கற்றிருந்தன. அச்சூழலை அவை நன்கு கையாண்டன. கடோத்கஜன் வந்திறங்கி மேலே சென்ற சுழியைப் பாதுகாத்தபடி அவர்கள் மெல்லிய சுழற்சியாக சுற்றிவந்தபடி போரிட்டனர். மூன்றாவது முறை கடோத்கஜன் அங்கே வந்திறங்கியபோது அச்சுழியை நோக்கி விண்ணிலிருந்து கரியபெரும்பாறைகள் பொழிவதுபோல் அரக்கர் கூட்டம் இறங்கத்தொடங்கியது. முதற்சில கணங்கள் எண்ணிக்கைக்கு மிகுதியான இடும்பர்களே அங்கு வந்திறங்குகிறார்கள் என்று சர்வதன் எண்ணினான். இறங்கியவர்கள் வலுவான கால்களும் மேலும் பெரிய உடலும் கொண்டிருந்ததை, அவர்கள் கதைகளால் இடும்பர்களை அறைந்து வீழ்த்துவதைக் கண்ட பின்னர்தான் அவர்கள் கௌரவர் தரப்பினர் என புரிந்துகொண்டான்.

“அலம்புஷரின் அரக்கர் குடியினர்!” என்று சுருதசேனன் கூவியதும்தான் என்ன நிகழ்கிறதென்று புரிந்துகொண்டு “ஆம், அவர்களின் கைகள் சற்று சிறியவை… கால்களில் கவசமணிந்திருக்கிறார்கள்!” என்று சுதசோமன் கூவினான். சுழி இரைவிழுந்த இடத்தில் மீன்கள்போல் இருளின் தேக்கத்தில் அசைவுகளாக கொதித்துக் குமிழியிட்டுக் கொப்பளித்தது. அந்த உடற்பெருக்கலைக்கொந்தளிப்பில் ஒவ்வொரு அரக்கரையாக அடையாளம் கண்டு சர்வதன் அம்புகளால் அறைந்தான். சில கணங்களுக்குள் இடும்பர்களையும் அலம்புஷரின் படைகளையும் பிரித்துக்கொண்டது அவன் உள்ளம். உளமறியும், சொல்லில் திரளும் அடையாளங்களுக்கு அப்பால் விழிமட்டுமே அறியும் அசைவுகளால் அவர்கள் வேறிட்டுத் தெரிந்தனர். அவர்களின் நெஞ்சக்கவசங்கள் எடைமிக்க இரும்பாலானவை. கால்களிலும் கைகளிலும் எருமைத்தோலுக்குள் கம்பிவலை வைத்த கவசங்கள். அவர்களின் கழுத்துக்களையோ விலாவையோ குறிவைக்க இயலாது. அவன் அம்புகள் அறைந்து வீணானதுமே அவர்களின் கையிடுக்குகளே சிறந்த இலக்குகள் என அவன் கண்டுகொண்டான்.

கை தூக்காமல் கதைசுழற்ற இயலாது. கதை ஒன்று உயர்ந்ததுமே அவன் விழிகள் உயரத்தைக் கணித்து கீழே அம்புகளை செலுத்தின. அவன் அம்புகளை தொடுத்த முறையில் இருந்தே அந்தத் திட்டத்தை சுதசோமனும் சுருதசேனனும் அறிந்துகொண்டார்கள். அவர்களின் உள்ளங்கள் வெவ்வேறு சுழற்சிகளில் இருந்தாலும் விற்களாலும் அம்புகளாலும் இணைக்கப்பட்டிருந்தன. நோக்கி எண்ணி புரிந்துகொள்ளாமலேயே அவர்கள் ஒரே வகையில் அம்புகளை எய்தனர். அவர்களின் அம்புகள் பட்டு அரக்கர்கள் அலறி நிலம் விழ, மேலிருந்து எருதுபோன்ற அமறல் ஓசையுடன் வந்திறங்கிய அலம்புஷர் கடோத்கஜனை கதையால் அறைந்தார். ஒரே அறையில் கடோத்கஜனின் தலையை சிதறடித்துவிடும் விசைகொண்டிருந்தார். ஆனால் கடோத்கஜன் நிலத்தில் நேராக ஊன்றாத கால்கள் கொண்டவன் என்னும் கணிப்பு அவரிடமிருக்கவில்லை.

உடலில் எஞ்சியிருந்த தன்னுணர்வால் கடோத்கஜன் தணிந்து ஒழிய இலக்கு பிழைத்த அவருடைய கதை காற்றை விம்மச்செய்தபடி சுழன்று அப்பால் சென்றது. அந்த ஒரு கணமே கடோத்கஜனுக்கு போதுமானதாக இருந்தது. கையூன்றி எழுந்து கதையுடன் சுழன்று அலம்புஷரின் இடையில் அறைந்தான். அலம்புஷரின் கவசங்களில் அந்த அறை விழுந்தமையால் ஓர் அடி பின்னெடுக்க நேர்ந்தமைக்கு அப்பால் அவருக்கு ஒன்றும் நிகழவில்லை. ஆனால் அவருடைய உடலில் ஓர் எச்சரிக்கை குடியேறி அவருடைய கதைவீச்சில் தயக்கமென, விசையிழப்பு என வெளிப்பட்டது. அதுவே கடோத்கஜனுக்கு நிகராக அவரை ஆக்கியது. இருவரும் கதைகளால் மோதிக்கொண்டபடி அச்சுழிமையத்தில் சுற்றிவந்து போரிட்டனர்.

அலம்புஷரின் படையினர் முழுமையாகவே சுதசோமனாலும் சர்வதனாலும் சுருதசேனனாலும் கொன்றழிக்கப்பட அலம்புஷர் தன் கொக்கிக்கயிற்றை வீசி அப்பால் எங்கோ இருந்த தேரொன்றில் தொடுத்துக்கொண்டு துள்ளி இருளில் மறைந்தார். நெஞ்சில் ஓங்கி அறைந்து போர்க்குரல் எழுப்பியபடி கடோத்கஜன் அவரை தொடர்ந்து சென்றான். கௌரவப் படைக்குள் அந்த இடத்தில் பெரும்போர் நிகழ்வதை சூழ நிகழ்ந்த உடல் அலைகளிலிருந்து சர்வதன் கண்டான். “அவரை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!” என்று சர்வதன் சொன்னான். “அலம்புஷரின் படைகளும் இருளில் விழி துலங்குபவை. மூத்தவர் தனியாக அவர்கள் நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறார். நாம் துணைக்கு செல்ல வேண்டுமா?” என்றான். சுதசோமன் “இச்சுழியை காப்பதொன்றே நமது பணி” என்றான். “அவர்களின் போரில் நாம் நுழைய முடியாது. நமது படைக்கலங்களும் திறனும் அங்கே பயனற்றவை. அங்கே இடும்பர்களை செல்ல வைப்போம். அவர்கள் மட்டுமே அவரை காக்கமுடியும்…”

ஆனால் இடும்பர்களுக்கு ஆணையிடும் மொழி அவர்களுக்கு தெரியவில்லை. இடும்பர்கள் தங்கள் பழகிய சுழன்றெழுந்தமையும் முறையிலேயே கௌரவர்களை தாக்கி சிதறடித்துக்கொண்டிருந்தனர். கடோத்கஜன் மேல் விண்ணிலிருந்து இறங்கிய அலம்புஷரின் படையின் அரக்கன் ஒருவனை தொலையம்பை செலுத்தி சர்வதன் வீழ்த்தினான். “இங்கிருந்து மூத்தவர் போரிட்டுக்கொண்டிருக்கும் இடத்தை உய்த்துணர முடிகிறது. மேலிருந்து அங்கு அவர் மீதிறங்குகிறார்கள் அரக்கர்கள். அவர்களை விண்ணிலேயே வீழ்த்துவோம்” என்று அவன் கூவினான். “ஆனால் அம்புகள் இடும்பர்கள் மேல் படலாகாது…” என்றான் சுதசோமன். அவர்கள் இருவரும் தொலையம்புகளால் அலம்புஷரின் அரக்கர்களை தாக்கினார்கள். ஆனால் மேலிருந்து விழுபவர்களை இலக்குகொள்வது எளிதாக இல்லை. பெரும்பாலான அம்புகள் இருளிலேயே புதைந்து சென்றன.

“அவர்கள் அணிந்திருக்கும் கவசத்தில் நமது அம்புகள் பட்டு செயலிழக்கின்றன. ஆனால் அவர்கள் விழும் ஒழுங்கை நம்மால் சற்று குலைக்க முடிகிறது. ஆகவே நிலையழிந்து பேரெடையுடன் மண்ணில் விழுகிறார்கள். அவர்கள் நிலைகுலைந்து எழுவதற்குள் இடும்பர்களால் தாக்க முடியும்… மூத்தவரே அலம்புஷரை பார்த்துக்கொள்வார்” என்றான் சுதசோமன். சர்வதன் “ஆனால் அவர் தனியாக அங்கிருக்கிறார். மேலும் மேலும் அலம்புஷரின் படையினர் அவரை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இருளறியும் விழிகளும் பெருந்தோள்களும் கொண்டவர்கள்” என்று சொல்லி அங்கு பேரொலி எழுந்ததைக் கேட்டு நிறுத்தி “என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது அங்கே?” என்று கூவினான்.

இடும்பர்கள் அனைவரும் தங்கள் நெஞ்சில் அறைந்து குரலெழுப்பினர். “மூத்தவர் விழுந்தாரா? என்ன ஆயிற்று? இது எதைக் குறிக்கும் ஓசை?” என்று சுதசோமன் கூவினான். சர்வதன் “அவர்களின் மொழியும் உணர்வுகளும் முற்றிலும் மாறாக உள்ளன. அவர் மட்டுமே நமது குருதி. பிறர் நாமறியா தொல்குடியினர்” என்றான். இடும்பர்கள் ஒரு சுழியென வானிலெழுந்து சுழன்று சுழிமையத்தில் இறங்கினர். “மூத்தவர் எங்கே? மூத்தவர் எங்கே?” என்று சுதசோமன் கூவினான். விண்ணிலிருந்து விசையுடன் கடோத்கஜன் சுழியிலிறங்கி தன் கையிலிருந்த அலம்புஷரின் தலையைத் தூக்கி மேலெறிந்து அது கீழிறங்கியதும் தலையால் தட்டி அப்பாலிட்டான். அரக்கர் குடியினர் அத்தலையைப் பிடித்து தூக்கிக் காட்டி ஒருவரோடொருவர் வீசிப்பிடித்தனர். நெஞ்சில் அறைந்து கூவினர்.

அலம்புஷரின் தலை இடும்பர்களின் கைகள் வழியாக வட்டமிட்டு வந்தது. மீண்டும் சுழி விசைகொள்ள கடோத்கஜனும் இடும்பர்களும் விண்ணிலெழுந்து இருளில் மறைய சுழிமையத்தில் விழித்த கண்களும் திறந்த வாயுமாக கிடந்தது. “அவர்கள் குடிவஞ்சம் எனும் நெறிகொண்டவர்கள். பகரின் குருதிவஞ்சத்திற்காக வந்தவர் இவர். இதோ இன்னொரு குடிவஞ்சம் சேர்ந்துள்ளது. இனி இது தலைமுறைகளில் ஏறி காலம் கடந்து செல்லும்” என்று சர்வதன் சொன்னான். “அவர்களின் குலமே முற்றழிவதுவரை இது நீடிக்கும். அவர்கள் இம்மண்ணில் பெருகலாகாது என்று எண்ணும் தெய்வத்தின் ஆணை இது. எந்த உயிரும் அதை வகுத்து இங்கு அனுப்பிய தெய்வத்தின் ஆணையை மீற இயலாது” என்றான் சுதசோமன். சுருதசேனன் “மூத்தவரே, இவ்வஞ்சமே அரக்கர்களை ஆற்றல் கொண்டவர்களாக்குகிறது” என்றான். “ஆம், நலிவுறுகையில் அவ்வஞ்சம் அவர்களால் தாளவியலா எடையாக மாறி அழிக்கிறது. காட்டில் பெருங்களிறுக்கு தந்தங்கள் அணியென்றும் படைக்கலன் என்றும் ஆகும். முதுமையில் அதன் தலையை மண்ணோக்கி இழுத்து கால்களில் நிற்கவியலாதாக்கி வீழ்த்தி உயிர்குடிப்பவையும் அவையே” என்றான் சுதசோமன்.

அப்பால் போர்முரசுகள் முழங்கின. அறிவிப்புகளின் ஓசைகள் அதிர்ந்ததிர்ந்து சுழல அவ்வோசையும் விளக்கொளியும் இணைந்து சொல்லொன்றை அமைத்தன. “என்ன செய்தி?” என்று சர்வதன் கூவினான். சுதசோமன் கைநீட்டி விளக்கொளியை தொட முயல்வதுபோல் அசைத்து, தொட்டுத்தொட்டு வாசித்து “அங்கரும் இளைய தந்தை அர்ஜுனரும் போரிடுகிறார்கள்” என்றான். “அவரிடம் நாகஅம்பு உள்ளது. இரவில் அது ஏழு மடங்கு நஞ்சும் விசையும் கொண்டதாக இருக்கும்” என்று சர்வதன் சொன்னான். “எந்நஞ்சுக்கும் காப்பென்று அவருடைய தேரின் அமரத்தில் அமர்ந்திருக்கிறார் யாதவர்” என்றான் சுருதசேனன். “என்ன சொல்கிறது செய்தி? என்ன செயல் என்று நோக்குக!” என்று சர்வதன் கேட்டான். “நாகஅம்பு பிழைத்தது. அங்கரின் இளையோன் துருமன் வீழ்த்தப்பட்டான். அங்கர் பின்னடைகிறார்” என்றான் சுதசோமன்.

விண்ணிலிருந்து இடும்பர்கள் சுழல்நிரையென வந்திறங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் அரக்கர்களின் தலைகள் இருந்தன. ஊளையிட்டு உடலை அசைத்து நடனமாடியபடி அவற்றைத் தூக்கி வீசி பிடித்தனர். தலைகளினாலான ஒரு மாலை அச்சுழியில் ஒழுகிச் சுழன்றது. அலம்புஷர்களில் எஞ்சியவர்கள் வஞ்சமும் வெறியுமாக ஓலமிட்டபடி வந்திறங்க அவர்களை சுதசோமனும் சர்வதனும் சுருதசேனனும் அம்புகளால் அறைந்தனர். “அஸ்வத்தாமர் எழுவார் என்று எண்ணினேன்” என்றான் சுதசோமன். “அங்கர் பின்னடைந்ததால் அவர் அங்கு சென்றிருக்கலாம்” என்றான் சர்வதன். மீண்டும் இடும்பர்கள் விண்ணிலெழுந்து மறைய சுழி முழுக்க அலம்புஷரின் அரக்கர் குடியின் தலைகள் குவிந்து கிடந்தன. இறுதியாக நிகழ்ந்த சுழற்சி அவை மண்ணில் கிடந்த வளைவான அமைப்பிலேயே எஞ்சியிருந்தது.

முரசு வெறிகொண்டதுபோல் ஒலிக்கலாயிற்று. “என்ன நிகழ்கிறது?” என்று சர்வதன் கூவினான். “அங்கர் முழுவிசையுடன் எழுந்து தந்தையை தாக்குகிறார். அவருக்கும் பீமசேனருக்குமிடையே போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது நிகர்நிலை அற்ற போர்… தந்தையால் அங்கரை எதிர்நின்று பொருத இயலாது” என்று சுதசோமன் சொன்னான். “இம்முறை அங்கர் நாகஅம்பை தந்தைக்கெதிராக எடுக்கக்கூடும்” என்றான் சர்வதன். அதை அக்கணமே தானும் எண்ணிய சர்வதன் திகைத்து “தந்தைக்கு அங்கே எவர் துணையிருக்கிறார்கள்?” என்றான். சுதசோமன் ஒளிஅசைவுகளை நோக்கி மின்னிச்செல்லும் ஆணைகளை தொட்டுத் தொட்டு வாசித்தறிய முயன்றான். பதைப்புடன் “ஒருமுறை எழுவது பிறிதொருமுறை எழுவதில்லை. ஒளியாணைகளை விழிவிசையால் தொடரமுடியவில்லை” என்றான். “அறிந்து சொல்க… தந்தை எந்நிலையில் இருக்கிறார் என்று சொல்க!” என்றான் சர்வதன்.

மேலிருந்து மீண்டும் விழுந்து எழுந்து பறந்தகன்றனர் இடும்பர். அவர்களை எஞ்சிய அலம்புஷ அரக்கர்கள் தாக்கிக்கொண்டே இருந்தனர். அவர்களை அம்புகளால் தடுத்துப்போரிட்டபடி துழாவித் துழாவி அவ்வொளி ஆணைகளை அறிய முயன்று சுதசோமன் சொன்னான் “அஸ்வத்தாமர் இளைய தந்தை அர்ஜுனரை எதிர்கொள்கிறார். சல்யரும் கிருபரும் இணைந்து சுருதகீர்த்தியையும் சதானீகனையும் தடுத்துவிட்டிருக்கிறார்கள். துரோணரால் திருஷ்டத்யும்னர் செறுக்கப்பட்டுவிட்டார். பாஞ்சாலர் சிகண்டி துரியோதனரை எதிர்கொள்கிறார்.” சர்வதன் “அவ்வாறெனில் தந்தை தனியாக அங்கர் முன் சிக்கிக்கொண்டிருக்கிறார். இரவின் ஆற்றலும் வஞ்சத்தின் சீற்றமும் கொண்டிருக்கிறார் அங்கர்… அவரிடம் இருக்கிறது தடுக்கமுடியாத நஞ்சு” என்று கூவினான். “தந்தைக்கு துணையாக நாம் சென்றாக வேண்டும்… உடனே சென்று தந்தையின் இருபுறமும் நிற்கவேண்டும்.”

“தந்தையின் ஆணை நாம் மூத்தவரைத் காத்து நின்றுகொள்ள வேண்டும் என்று, நாம் அதற்கு முழுமையாகவே கட்டுப்பட்டவர்கள்” என்றான் சுதசோமன். “மூத்தவருக்கு இப்போது இடரென ஒன்றுமில்லை… துரோணர் பின்னடைந்துவிட்டார். இச்சுழியில் வந்தறையும் அரக்கர்களும் இனி எவரும் இல்லை. நாம் தந்தைக்கு துணையெனச் செல்வதே இப்போது இயற்றக்கூடுவது” என்று சர்வதன் சொன்னான். “நாம் ஆணைகளை விலக்கிக்கொள்ள உரிமைகொண்டவர்கள் அல்ல” என்றான் சுதசோமன். விசையுடன் அவர்கள் நடுவே வந்திறங்கிய கடோத்கஜன் “செல்க, தந்தையின் வலமும் இடமும் நின்று காத்துக்கொள்க!” என்றான். சுதசோமன் நாவெடுப்பதற்குள் “இது என் ஆணை… செல்க!” என்றபின் கடோத்கஜன் மீண்டும் வானிலெழுந்தான். சர்வதன் “நாம் மூத்தவரின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்றான். “ஆம்” என்றான் சுதசோமன்.

அவர்கள் கலைந்து அலையடித்துக்கொண்டிருந்த பாண்டவப் படையினூடாகச் சென்றனர். நிலமாக இறந்த உடல்களின் பரப்பு விரிந்திருக்க அதன்மேல் வீரர்கள் அலறியபடி ஓடிக்கொண்டிருந்தனர். வானில் இளநீல ஒளி ஒன்று மின்னி மின்னி அணைந்துகொண்டிருந்தது. “பேரழிவு நிகழ்ந்திருக்கிறது… எவரால்?” என்று சர்வதன் கேட்டான். எதிரே கூச்சலிட்டபடி ஓடிய படைத்தலைவன் ஒருவனிடம் “என்ன நிகழ்கிறது? ஏன் இத்தனை அழிவு?” என்றான். “இளவரசே, அங்கர் வஞ்சத்தின் உச்சியில் எழுந்துள்ளார். அவருடைய அம்புகளுக்கு ஈடுசெய்ய இளைய பாண்டவர்கள் இருவராலும் இயலவில்லை. அங்கருக்குத் துணையாக அஸ்வத்தாமரும் துரோணரும் நின்றிருக்கையில் இங்கே பூச்சிக்கூட்டங்களைப்போல் வீரர்கள் விழுந்து சாகிறார்கள்… இப்போர் தொடங்கிய பின்னர் இன்றுதான் பேரழிவு… கிராதரும் நிஷாதரும் இப்போருக்குப் பின் ஒருவரேனும் எஞ்சுவார்களா என்பதே ஐயம்தான்” என்றான். “ஏன்? அவர்கள் இரவுப்போர் அறிந்தவர்கள் அல்லவா?” என்றான் சர்வதன். “ஆம், ஆனால் இரவுக்குரியவை நாகங்கள்… இளவரசே, பாதாளத்தின் வாய் அங்கரின் ஆவநாழிக்குள் திறந்திருக்கிறது என்கிறார்கள்” என்றான் படைத்தலைவன்.

தொலைவிலேயே அவர்கள் கர்ணனின் கொடி பறப்பதை கண்டனர். அங்கே இருந்த அனலொளியில் அதன் பட்டுப்பரப்பு மென்மையாக ஒளிவிட்டுக்கொண்டிருந்தது. கர்ணனின் நாணொலி விம்மலோசையென, கொடிகள் பாறைகளில் அறையும் ஒலி என எழுந்தது. காற்றின் சீறலோசை ஒன்று இருளை நிறைத்திருந்தது. காட்சி நீர்ப்பாவைகளால் நிறைந்திருப்பதுபோல் நெளிந்து அலைகொண்டது. சுருதசேனன் “நோக்குக!” என்று கூவினான். அவன் சுட்டிக்காட்டிய திசையில் நோக்கிய சர்வதன் அங்கே இடைவெளியில்லாதபடி விழுந்து பரவிக்கிடந்த கிராதர்களின், நிஷாதர்களின் உடல்களினூடாக நெளிந்த நாகங்களை நோக்கினான். விழி அவற்றை நோக்கத் தொடங்கியதும் ஆயிரக்கணக்கான நாகங்களை அக்களமெங்கும் கண்டான்.

“எங்கிருந்து வருகின்றன இவை?” என்றான் சர்வதன். “நிலத்துக்கு அடியில் அரவுகள் நிறைந்துள்ளன. மானுடத்தின் வேர்கள் அவை” என்றான் சுருதசேனன். “அவற்றை மேலெழச்செய்யும் நுண்சொல் ஒன்று அவரிடம் இருக்கிறது.” அச்சொற்கள் செவியில் விழுந்த உடனே அதை சர்வதன் கேட்டு உணர்ந்தான். தலைக்குமேல் சென்று இறங்கிய அம்பு அரவுபோல் சீறியது. அவ்வொலி கேட்டு நிலத்தில் நெளிந்துகொண்டிருந்த பாம்புகள் சீறி தலைதூக்கின. அம்புகளும் அரவுகளும் அவ்வோசையால் உரையாடிக்கொண்டன. அம்புகளின் நிழல்கள் அரவுகளுடன் சேர்ந்து நெளிந்தன. அம்பு சென்றபின்னரும் நிழல் அரவென அங்கே புளைந்து ஓடியது. அம்புகள் சீறிச் செல்லச்செல்ல குருக்ஷேத்ரத்தின் மண்ணில் கொப்புளங்கள் வெடித்து துளையெனத் திறக்க நாகங்கள் கிளைத்தெழுந்தபடியே இருந்தன.

முந்தைய கட்டுரைசொற்களை தழுவிச்செல்லும் நதி
அடுத்த கட்டுரைதீ – கடிதங்கள்