ஏகாக்ஷர் சொன்னார்: சர்வதன் கடோத்கஜனின் வலப்புறம் நின்று போரிட்டுக்கொண்டிருந்தான். அன்று மாலை போர் தொடங்கும்போதே அவனிடம் பீமன் எந்நிலையிலும் கடோத்கஜனின் வலப்புற நிலையை ஒழியலாகாது, அவன் அம்புகள் உடனிருக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான். சொல்சூழ் அவையிலிருந்து வெளிவந்து அவனை ஒருமுறை நோக்கியபின் சில அடிகள் முன்னால் சென்று வேறெங்கோ பார்த்தபடி பீமன் நின்றான். அது அவர் தன்னிடம் பேசுவதற்கான அழைப்பென்பதை உணர்ந்து அருகே சென்று குரல் கேட்கும் தொலைவில் கைகட்டி நின்றான் சர்வதன். அவனை நோக்காமல் “இப்போர் முழுமையாக இடும்பனை நம்பி நிகழவிருக்கிறது” என்று பீமன் சொன்னான். மிகமிகத் தன்னணுக்கமுள்ள ஒன்றை சொல்கையில் உருவாகும் தத்தளிப்பு அவன் உடலில் வெளிப்பட்டது.
அதை உணர்ந்து உள்ளூர புன்னகைத்தபடி “ஆம், அவர்கள் இருளில் போரிடும் ஆற்றல் மிக்கவர்கள்” என்று சர்வதன் சொன்னான். “அரக்கர்கள் அனைவருக்குமே அத்திறன் உண்டு. இருளில் ஆற்றல்கொள்பவை குரங்குகளும் நாகங்களும். அவன் நாகங்களின் தலைவன்” என்றான் பீமன். பீமன் என்ன சொல்கிறான் என்பதை சர்வதன் புரிந்துகொண்டான். “போர் ஒருவனை மட்டுமே மையம் கொண்டிருக்கையில் முழுப் படையும் அவனுக்கெதிராக எழுவதற்கே வாய்ப்பு. இப்போர் இடும்பனை நாம் கர்ணன் முன் கொண்டுசென்று நிறுத்துவதுதான்” என்று பீமன் சொன்னான். “நமது படைகள் இவ்விரவில் பெரும்பாலும் விழியற்றவையாகவே இருக்கும். கிராதரும் நிஷாதரும் அசுரரும் தங்களுக்கான போரை தாங்களே வகுத்துக்கொள்வார்கள். இடும்பன் தன் படையுடன் தனித்து விடப்படுவான்.”
சர்வதன் “நான் துணையிருக்கிறேன், தந்தையே” என்றான். “உன் மூத்தவன் எனக்கு நிகரான இடங்கொண்டவன் என்று உணர்க! அவன் வலக்கையருகே உனது வில்துணை என்றுமிருக்க வேண்டும்.” சர்வதனின் உள்ளத்தில் எழுந்து அகன்ற ஐயத்தை உடனே உணர்ந்து பீமன் “அவர்கள் போரிடும் முறை நமக்கு புரியாது. வளையும் கழைகளிலும் எறிகயிறுகளிலும் தொற்றி விண்ணில் பறந்து விழுந்து போரிட்டு மீண்டு வந்தமைவது அவர்களின் வழக்கம். வானில் அவர்கள் பேராற்றல் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் கால்கள் ஆற்றல் குறைந்தவை. இங்கு அவர்கள் மண்ணிறங்கும் அந்தக் கணத்தில் அவர்கள் முற்றிலும் செயலற்றவர்கள்” என்றான்.
சர்வதன் “ஆம்” என்றான். பீமன் “அவனை அவர்கள் இன்னமும் கூர்ந்து நோக்கவில்லை. அவன் வெல்லற்கரியவன் என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் இன்று அவனால் கௌரவப் படை அழியத்தொடங்குகையில் ஒவ்வொரு விழியும் அவர்களை நோக்கும். அவன் ஆற்றலை முதலில் அஞ்சும். அச்சத்தின் கூர்மை அளப்பரியது, அது அனைத்து வழிகளையும் தேடும், ஊசிநுழையும் வழிகளையும் கண்டடையும். அவர்கள் அவனுடைய ஆற்றல் குன்றிய இடத்தை கண்டறிவார்கள். பறந்தெழுகையில், இறங்கித் தாக்குகையில் அவர்களை எதிர்கொள்ளல் அரிது. ஆனால் மீண்டு தங்கள் மையத்திற்கு அவர்கள் வந்திறங்கும்போது அங்கே அம்புகள் நிறைந்திருந்தால், அங்கே கதையுடன் காத்திருந்தால் அவர்களை வெல்ல இயலும். உன் பணி உன் தமையன் வந்து இறங்கும் இடத்தை அம்புகளால் வேலியிட்டுக் காப்பதே” என்றான்.
சர்வதன் தலைவணங்கினான். பீமன் “உன்னுடன் இளையோரில் பிறிதொருவனை அழைத்துக்கொள்க! இன்று நீங்கள் கௌரவத் தரப்பினரின் போரை எதிர்கொள்ள இயலாது. அப்போர் உங்கள் விழிகளுக்கு அப்பால் நிகழ்ந்துகொண்டிருக்கும். உங்களுக்கு இன்றைய கடன் இதுவென்றே கருதுக!” என்றபின் பெருமூச்சுவிட்டு கைகளை வீசி அசைந்து நடந்து சென்றான். அந்த நடையை தொலைவு வரை நோக்கிக்கொண்டு சர்வதன் நின்றான். ஒரு சிறு மின்னலென அதில் கடோத்கஜனின் நடைச்சாயல் இருப்பதை அவன் உணர்ந்தான். இடும்பர்காட்டில் பிறந்த கடோத்கஜன் தந்தையிடமிருந்து பெற்ற நடையை கொண்டிருக்கிறார். அல்லது இடும்பர்காட்டிலிருந்து தந்தை தன் நடையில் ஒரு சாயலை மட்டும் பெற்றுக்கொண்டிருக்கிறாரா? அது இத்தருணத்தில் வெளிப்படுகிறதா?
அவனருகே வந்த சுதசோமன் “தந்தையின் ஆணை என்ன?” என்றான். “மூத்தவர் எழுந்து தாக்கி வந்திறங்கும் புள்ளியை வலம் இடமிருந்து காத்துக்கொள்ள நாமிருவரும் பணிக்கப்பட்டிருக்கிறோம்” என்றான் சர்வதன். சுதசோமன் “உண்மையில் நானும் அதை எண்ணினேன். அவர்கள் களமெங்கும் பரவினாலும் வந்திறங்கும் புள்ளி ஒன்றுதான். அது சுழிக்காற்றின் மையம்போல மெல்ல களத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. பகலில் அவர்கள் நமது படைக்குள் பரவி எழுந்து போரிட்டு மீண்டு கொண்டிருக்கையில் அதை கண்டறிவது மிகக் கடினம். மேலும் அச்சுழி எப்போதும் நமது படைப்பிரிவுகளுக்கு நடுவிலேயே அமைந்திருந்தது. இன்று அந்திப்போரில் அவர்கள் முகப்புப் படையாக நிற்கவிருக்கிறார்கள். இரவில் அவர்களின் அசைவுகள் பிறரின் அசைவுகளிலிருந்து முற்றாக தனித்தும் தெரியும். மிக எளிதில் அச்சுழிமையத்தை கண்டடைய முடியும்” என்றான்.
சர்வதன் “தந்தை கவலைகொண்டிருக்கிறார்” என்றான். சிரித்தபடி “வாய்ப்புண்டு” என்று சுதசோமன் சொன்னான். “படை கிளம்புவதற்கு முன்பு நிகழ்ந்த நிமித்திகர் களச்சூழ்கையில் மூத்தவர் விழக்கூடும் என்று சொல்லுரைக்கப்பட்டது.” திகைப்புடன் “எப்போது?” என்று சர்வதன் கேட்டான். “உபப்பிலாவ்யத்தில் நிமித்திகர் சொற்கூடல் நிகழ்ந்தது. மூதன்னை குந்திதேவியால் அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவ்வாறு நிமித்திகரிடம் சூழ்ந்துகொள்ளலாகாது, இறப்பு குறித்து எதுவும் உசாவப்படலாகாது என்று மூத்த தந்தை அறிவுறுத்தியிருந்தார். ஆகவே எவருக்கும் தெரியாமல் பேரரசி அதை அமைத்திருந்தார். உண்மையில் அன்னைக்குக்கூட இவை தெரியாது. அன்று தற்செயலாக அங்கு தந்தை சென்றார். நானும் உடன் செல்ல நேர்ந்தது. மைந்தரின் வாழ்வைப்பற்றிய வினாவை குந்திதேவி எழுப்ப நமது பிறவி ஓலைகளை நிமித்திகர் பெற்றுக்கொண்டனர். அன்னை நம் ஓலைகளை அளித்ததும் குந்திதேவி தன் அறையிலிருந்து மூத்தவர் கடோத்கஜனின் ஓலையை கொண்டுவந்து அளிக்கச் சொன்னார்” என்று சுதசோமன் தொடர்ந்தான்.
நிமித்திகர் ஓலைகளை எடுத்து நாற்களத்தில் வைத்து சோழிகளை உருட்டி கணித்து “இவருடைய குருதியிலிருந்து பேரரசு ஒன்று எழும். பாரதவர்ஷத்தை கலியுகத்தில் ஆளும் முதற்பேரரசாக அது அமையும். அவர்களின் குருதியிலிருந்து மேலும் அரசகுலங்கள் எழுந்து இம்மண்ணை நிரப்பும். ஆயிரம் மடங்கு உயிர்விசை கொண்ட விதைபோன்றவர் இம்மைந்தர். ஆயினும்…” என்றார். “சொல்க!” என்று அரசி கேட்டபோது இரண்டு சோழிகளை நீக்கி வைத்து “இவர் இப்போரில் களம்படக்கூடும்” என்று நிமித்திகர் சொன்னார். “எவ்வண்ணம்?” என்று குந்திதேவி கேட்டார். “அரசி, இறக்கும் முறை கருவில் பொறிக்கப்பட்ட பின்னரே உயிர்கள் மண்ணில் பிறக்கின்றன. இவருடைய கால்களில் என்றுமுள்ளது அந்த அச்சம். இவர் நாகத்தால் உயிர்துறப்பார்” என்றார்.
தந்தையின் வருகையறிவிப்பதற்காக நான் அருகே சென்று நின்றுகொண்டிருந்தேன். என்னை நிமிர்ந்து பார்த்து “யார்?” என்று பேரரசி கேட்டார். அவர் உடல் பதறிக்கொண்டிருந்தது. முகம் வியர்வை பூத்திருந்தது. நான் “தந்தை பீமசேனர் வருகை கோருகிறார்” என்றேன். “சற்று பொறுக்கச் சொல். நான் இங்கொரு சொல்சூழ்கையில் அமர்ந்திருக்கிறேன் என்று உரை” என்றார். மேலாடையால் முகத்தை துடைத்துக்கொண்டார். நான் வெளியே சென்று தந்தையிடம் தலைவணங்கி “பேரரசி ஒரு சொல்சூழ்கையில் இருக்கிறார். சற்று பொறுக்கும்படி கூறினார்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே தந்தையின் விழிகள் மாறின. “நிமித்திகர் உள்ளே இருக்கிறார்களா?” என்றார். நான் இல்லை என்று சொல்லலாமா என நாவெடுத்து ஆமென்று தலையசைத்தேன். என்னை இடக்கையால் தள்ளி விலக்கியபடி எடைமிக்க காலடியோசையுடன் தந்தை உள்ளே நுழைந்தார்.
கூடத்திற்குள் நுழைந்து “என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று உரக்கக் கூவினார். அன்னை திகைத்து எழுந்து அப்பால் விலக பேரரசி “நான்! மைந்தா…” என்று திகைத்து சொல்லெடுத்தபடி எழுந்தார். தந்தை நிமித்திகர்களிடம் “சோழிகளையும் களவரைவையும் எடுத்துக்கொண்டு இக்கணமே கிளம்புக! இனியெங்கேனும் மைந்தர்நலம் உசாவும் பொருட்டு சோழியுருட்டினீர்கள் என்று அறிந்தால் உங்கள் தலைஅறைந்து வீழ்த்துவேன். உங்கள் குடி முழுதையும் அழிப்பேன்… செல்க!” என்றார். உடல் நடுங்கியபடி அவர்கள் தங்கள் சோழிகளையும் களவரைவுகளையும் சுருட்டி எடுத்துக்கொண்டு தோள்குறுக்கி புறம்காட்டாது வெளியே சென்றனர். சினத்துடன் இரு கைகளையும் முறுக்கி பற்கள் நெரிபடும் ஓசையுடன் “எவருக்காக இதை பார்க்கிறீர்கள்?” என்று தந்தை கூவினார்.
பேரரசி அதற்குள் உளம் மீண்டுவிட்டார். “என் பெயர்மைந்தருக்காக… என் மைந்தருக்காக” என்றார். “மைந்தர் களம்படுவார் என்றறிந்தால் இப்போரை நிறுத்திவிடுவீர்களா?” என்று தந்தை கேட்டார். பேரரசி தவிக்க “எவர் களம்பட்டாலும் குடி முற்றழிந்தாலும் இப்போரிலிருந்து பின்னடையமாட்டீர்கள். எனில் இதை எதற்காக பார்க்கிறீர்கள்? ஐயம் வேண்டாம், இப்போருக்குப் பின் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். எண்ணிய வெற்றியை அடைந்து அதில் திளைப்பீர்கள்” என்றார். “என்ன சொல்கிறாய்?” என்று உரக்க கேட்டபடி கையை ஓங்கி அறைய வந்தார் பேரரசி. சற்றும் குன்றாமல் நின்று அவர் விழிநோக்கி “உங்கள் நலம் காக்கப்படும் என்கிறேன். உங்கள் சொல் இங்கே நிலைநிற்கும். உங்கள் குருதி நீடுவாழும். அதற்கப்பால் அழிவையும் விழிநீரையும் குருதியையும் கணக்கிடும் தேவை உங்களுக்கில்லை. அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றபின் திரும்பிப்பார்க்காமல் தந்தை வெளியேறினார்.
பேரரசியின் முகம் வெளுத்து கண்களில் நீர் பரவியதை நான் கண்டேன். அவர் கால்பதறி தடுமாற தோளை அணுக்கச்சேடி பற்றிக்கொண்டாள். அவர் மெல்ல பீடத்தில் திரும்ப அமர்ந்தார். நான் திரும்ப ஓடி தந்தையை அடைந்தேன். அவர் விரைந்த காலடிகளுடன் நடந்துகொண்டிருந்தார். பின்னர் நின்று திரும்பிப்பார்க்காமல் “இறுதியாக நீ கேட்டதென்ன?” என்றார். நான் பேசாமல் நின்றேன். “அது இடும்பனின் பிறவிஓலை என்று எனக்குத் தெரியும். நிமித்திகர் சொல்லி முடித்தது அவன் வாழ்வைப்பற்றி என்றும் அறிவேன். சொல்க!” என்றார். நான் பேசாமல் நின்றேன். “சொல், அறிவிலி!” என்று திரும்பி நோக்கினார். “அவர் களம்படுவார் என்று நிமித்திகர் கூறினார்” என்றேன். அவர் உடலிலொரு நடுக்கு நிகழ்ந்தது. பின்னர் திரும்பிப்பார்க்காமல் விரைந்து நடந்து அகன்றார்.
சர்வதன் “அவ்வாறு ஏதோ சொல்லை பெற்றிருக்கிறார் என்று நானும் உணர்ந்தேன்” என்றான். சுதசோமன் “இக்களத்திற்கு வரும் அத்தனை அரசர்களும் நிமித்திகர்களின் சொல்சூழ்ந்த பின்னரே வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் களத்தில் சாவென்று நிமித்திகர்களால் சொல்லுரைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் முழுவிசையுடன் களம்நின்று பொருதுகிறார்கள். ஒருவர்கூட கேடயமும் கவசமுமின்றி களம் வந்ததில்லை” என்றான். சர்வதன் நகைத்து “நாம் இக்களத்தில் எஞ்சுவோமா? நிமித்திகர் சொல் என்ன?” என்றான். “தந்தையின் ஆணைக்குப் பின் எவரும் அதை பார்த்திருக்கமாட்டார்கள்” என்று சுதசோமன் சொன்னான். சர்வதன் “ஆம்” என்றான். “ஆனால் ஒருவர் பார்த்திருப்பார். உறுதியாக” என்றான் சுதசோமன். சர்வதன் அவனை கூர்ந்து பார்த்தான். “மூத்த தந்தை யுதிஷ்டிரர்” என்றபின் சுதசோமன் புன்னகைத்தான்.
கடோத்கஜன் களத்திற்கு தன் இடும்பர் படையுடன் வந்து நின்றபோது சர்வதனை திரும்பிப்பார்த்தான். “இளையோனே, இப்போரில் நீ ஆற்றுவதற்கொன்றுமில்லை என எண்ணுகிறேன்” என்றான். “இச்சுழிமையத்தை வில் கொண்டும் கதை கொண்டும் காக்கும்படி எனக்கு ஆணை” என்றான் சர்வதன். ஒருகணம் குனிந்து நிலத்தைப் பார்த்து “ஆம், ஒருவேளை அதற்கு தேவை இருக்கலாம்” என்ற பின் புன்னகைத்து “தந்தை என்னை முற்றறிந்திருக்கிறார்” என்றான். “தந்தையர் மைந்தரை அறிவார்கள்” என்றான் சர்வதன். சுருதசேனன் மறுபக்கத்தில் வந்து “நானும் உடனிருக்க வேண்டுமென்று ஆணை” என்றான். “மூவரா? தந்தை மிகையான எச்சரிக்கை கொண்டிருக்கிறார்” என்றான் சர்வதன். “அவர் அஞ்சிக்கொண்டிருக்கிறார்” என்றான் சுதசோமன். “அவர் அஞ்சி அறிந்ததில்லை” என்றான் சுருதசேனன். “மைந்தரின்பொருட்டே தந்தையர் கோழைகளும், தன்னலமிகளும், சிறுமைகொண்டவர்களும் ஆகிறார்கள். அதை தெய்வங்கள் விரும்புகின்றன” என்றான் சர்வதன்.
கடோத்கஜன் “எங்கள் போர்முறை விளிம்புகள் கூரான படையாழி ஒன்று சுழன்று எழுந்து இறங்கிச் சுழன்று சுழல்விசையால் வெட்டி குருதிகொண்டு மேலெழுந்து மீண்டும் விரல்நுனிக்கு மீள்வது போன்றது. நாங்கள் ஆயிரத்துஎட்டு இடும்பர்கள் இணைந்து உருவாக்கியது இது. இதை ஆழிச்சூழ்கை என்கிறோம். ஆழியை ஏந்தும் சுட்டுவிரல் என இம்மையம் அமைந்துள்ளது. இதில் பன்னிரண்டு முறை இறங்குகையில் ஆறுமுறை இது சுழன்று இடம் மாறியிருக்கும்” என்றான். “நான் விழிகளால் உங்களை மட்டுமே தொடர்கிறேன், மூத்தவரே. உங்கள் கால்களை நான் நன்கு அறிவேன்” என்று சர்வதன் சொன்னான். கடோத்கஜன் புன்னகைத்து அவன் தோளைத் தட்டி “நோக்கி இரு… இன்று நீ பிறிதொரு போர்நிகழ்வை காண்பாய்” என்றான்.
வானில் பிறைநிலவு எழுந்ததும் போர்முரசின்றியே பாண்டவப் படை கௌரவப் படையை சென்று அறைந்தது. பல்லாயிரம் அறிவிப்பு விளக்குகள் படைமுழுக்க சுழன்று விழிகள் அறியும் மொழியொன்றை நிகழ்த்தின. ஒளியின் ஆணைகளுக்கேற்ப இருளென பெருகிக்கிடந்த பாண்டவப் படை அலைவு கொண்டது. அதன் பரப்பில் சிலிர்க்கும் கரிய கம்பிளிப்புழு என பல்லாயிரம் கைகள் எழுந்தன. கால்கள் ஆயிரங்களின் மடங்குகளில் பெருகின. அது சூடிய படைக்கலங்களின் முனைகள் மட்டும் ஒளிகொண்டிருந்தன. இரவின் வெளியில் மின்மினிப்படை திரண்டு எழுந்ததுபோல தோன்றியது. இருள் முழக்கமிட அது கௌரவப் படையை தாக்கியது. இரு படைகளும் மோதிக்கொள்ளும் இடத்தில் இருளின் அலைவை காணமுடிந்தது. “இரு வேழங்கள் இருளில் மோதிக்கொள்வதுபோல” என்றான் சர்வதன். சுதசோமன் ஒன்றும் சொல்லவில்லை.
இடும்பர்கள் கழைகளுடன் சற்றே உடல் சாய்த்து காத்து நின்றனர். கடோத்கஜன் கௌரவப் படை முதலில் அடைந்த சிறிய பின்னடைவுக்குப்பின் முரசுகளால் ஆணையிடப்பட்டு விளக்குச்சுழற்சிகளால் வழிகாட்டப்பட்டு எழுந்து பாண்டவப் படையைத் தாக்குவதை நோக்கிக்கொண்டிருந்தான். “அங்கே அரக்கர்கள் தலைமைகொண்டிருக்கிறார்கள்” என்றான் சர்வதன். “எனில் நம் தாக்குதலை முன்னரே அறிந்திருக்கிறார்கள் என்று பொருள்.” சுதசோமன் கௌரவப் படையையே நோக்கிக்கொண்டிருந்தான். கடோத்கஜனின் ஆணைக்காக இடும்பர்கள் காத்திருந்தார்கள். மறுபக்கம் அரக்கர்களால் வழிகாட்டப்பட்ட கௌரவப் படை ஐந்து விரல்கள்போலப் பிரிந்து பாண்டவப் படையை எதிர்கொண்டது. கடோத்கஜன் அந்த ஒளிச்சுழல்கைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அந்த மொழியை உணர்ந்து படையமைவை காட்சியாக்கிக் கொள்கிறான் என சர்வதன் உணர்ந்தான்.
ஓர் இடும்பன் கழையில் தொற்றி மேலேறி உடனே இறங்கி கௌரவப் படையின் அமைப்பை விரைந்த கையசைவுகளால், விரல் முத்திரைகளால் கடோத்கஜனுக்குச் சொல்ல அவன் அதை ஆணை கலந்து தன் விரல்களால் சொல்ல இருபுறமும் நின்றிருந்தவர்கள் அதை விரலசைவுகளாலும் உடலாட்டத்தாலும் தங்கள் படையினருக்குச் சொன்னார்கள். அவர்கள் அதைக் கேட்டு அதே கையசைவுகளையும் விரல் முத்திரைகளையும் திருப்பிக் காட்டினர். ஒலியும் ஒளியும் இன்றி அச்செய்தி அவர்களிடையே பரவியது. சர்வதன் அந்த அசைவுகளை நோக்கியபின் “தேனீநடனம்போல” என்றான். சுருதசேனன் புன்னகைத்து “நானும் அதையே எண்ணினேன், எறும்புகள் பேசிக்கொள்வதுபோல. ஒரு நொடியில்…” என்றான்.
சுதசோமன் கடுமையான தாழ்ந்த குரலில் “நாம் சொல்லெடுக்காமலிருந்தால் மட்டுமே இவர்களுடன் இணைந்துகொள்ள முடியும்” என்றான். சர்வதன் தலையசைத்தான். அவர்கள் அமைதியாக அந்த உடல்களினூடாக செய்தி ததும்புவதை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு மாபெரும் குரங்குத்தொகை என்னும் எண்ணம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது. அப்போது அவர்கள் பூச்சிகளைப்போல ஒற்றைஉள்ளம் கொண்டவர்கள் எனத் தோன்றியது. அவர்களின் உடலசைவுகள் நின்றபோது நீர்த்துளி என ஒவ்வொரு உடலிலும் ஒரு நிறைததும்பல் எஞ்சியிருந்தது. விரைந்து விழியோட்டி மொத்தமாக நோக்கியபோது அவர்கள் அனைவரும் இணைந்து ஒற்றைத் ததும்பல் என்றாகிவிட்டிருப்பது தெரிந்தது.
ஒவ்வொரு கணமும் எடைமிகுந்து அழுத்தியது. அவனால் நிற்க இயலவில்லை. ஆனால் கடோத்கஜன் அங்கே நிகழ்வதை அறியாதவன் போலிருந்தான். அவன் படையினரும் முற்றாக உறைந்துவிட்டிருந்தார்கள். மெல்ல சர்வதன் தன்னை எளிதாக்கிக்கொண்டான். என் பணி இங்கே காத்துநிற்பது மட்டுமே என தனக்கே சொல்லிக்கொண்டான். கடோத்கஜன் மிக மெல்லிய குரலில் உறுமியபோது அங்கிருந்த அனைவருக்கும் அது கேட்டது. தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து தலையை அண்ணாந்து நீண்ட ஊளை ஒன்றை அவன் எழுப்பினான். அந்த ஊளையில் அனைத்து இடும்பர்களும் இணைந்துகொள்ள அது ஒலிநதி என பெருகிப் பெருகி சென்றுகொண்டே இருந்தது. பின்னர் சுழன்று விசைகொண்டு சுழியாகியது. அச்சுழற்சியால் தூக்கிச் சுழற்றப்பட்டதுபோல இடும்பர்கள் சுற்றிவந்தனர். விசைகொண்டு சுழன்று வந்த போக்கில் கடோத்கஜன் தன் கழையை ஊன்றிஎழுந்து வண்டுபோல் மேலே தாவிச் சென்றான். உடன் அவன் கழையும் வால் போலாகி சென்றது. சில கணங்களில் அங்கிருந்த இடும்பர்கள் அனைவரும் விண்ணின் இருளில் எழுந்து மறைந்தனர்.
சர்வதன் தன் தேரை அந்தச் சுழியின் விளிம்பினூடாக மெல்ல சுற்றி வரச்செய்தான். மறுமுனையில் வில்லேந்தியபடி சுருதசேனனும் சுற்றி வந்தான். சுதசோமன் வில்லுடன் அசைவிலாது நின்றான். அந்த ஆழி பறந்தெழுந்து சென்றிறங்கிய இடத்தை அங்கே நின்று நோக்கியபோது ஒரு கொந்தளிப்பாகவே உணரமுடிந்தது. விழிகளை மூடி ஒலியைக் கேட்டபோது அதில் ஒரு சுழியை உணர்ந்தான். திறந்து நோக்கியபோது இருளுக்குள் ஒரு கரிய சுழிப்பை கண்டான். அது உளமாயமா என வியந்து இமைகொட்டிப் பார்த்தான். பெரிய பாறை ஒன்று ஏரிநீர்ப்பரப்பில் விழுந்ததுபோல அங்கே அலையலையாக கௌரவப் படை விரிந்தகல நடுவே அந்த சுழி விரிந்துகொண்டிருந்தது. பின்னர் மீன்வலை இழுபடுவதுபோல அந்தச் சுழி சுருங்குவதை கண்டான். அங்கிருந்து இடும்பர்கள் எழுந்து வானில் பறந்து திரும்புகிறார்கள் என்பதை கண்டான். சுழலும் ஆழியிலிருந்து நீர்த்துளிகள் தெறிப்பதுபோல வாள்வட்டமாக, வீசப்படும் மணிமாலைபோல இடும்பர்கள் வானிலிருந்து வந்திறங்கினர்.
முதலில் வந்திறங்கியவன் கடோத்கஜன். மண்ணில் காலூன்றி வளைய பேருடல் ஒருகணம் அலைபாய இறங்கி நீண்ட வட்டமாக ஓடி அதன் மையம் நோக்கி வந்து வட்டத்திலிருந்து மீண்டும் கழையூன்றி எழுந்து பறந்து சென்றான். தொடர்ந்து இடும்பர்கள் வந்திறங்கி வளைந்த அலையென எழுந்து இருண்ட வானில் மறைந்தனர். சில கணங்களுக்குப் பின் அதை ஒரு சுழல்காற்று நிலத்தை ஊதி எழுந்து செல்வதுபோல உணரமுடிந்தது. ஒரு நோக்கில் மாபெரும் ஆழி ஒன்று வான்முதல் தரைவரை சரிந்திருப்பதுபோலத் தோற்றமளித்தது அது. மெல்ல சுழன்றுகொண்டே அது நகர்ந்து செல்ல சர்வதனும் உடன்பிறந்தாரும் அதை நீட்டிய விற்களுடன் தொடர்ந்தார்கள். முதல்முறை வந்திறங்கியபோது அவர்களின் உடல்களிலிருந்து குருதியும் நிணமும் தெறித்து அவர்களை நனைத்தது. அந்த மையத்து நிலம் வழுக்கும் சேறாலானதாக மாறியது. பின்னர் குருதித் துளிகளாலான சிறிய மழை எழுந்தது. மழைத்துளிகளை சுழற்றிச்செல்லும் சூறை என. அவன் உடல் குருதித்துளிகளால் நனைந்து குளிர் கொண்டது.
சற்று நேரத்தில் அச்சுழியை துரோணர் அடையாளம் கண்டுகொண்டார் என்பதை அவன் கௌரவர் தரப்பிலிருந்து அறிவிப்பு விளக்குகளின் ஒளிரும் சரடுகள் ஒன்றையொன்று தொடுத்துக்கொண்டு வலைபோல் விரிந்து அணுகுவதிலிருந்து புரிந்துகொண்டான். “சுழியை அணுகுகிறார்கள்” என்று அவன் சுதசோமனை நோக்கி கூவினான். சுதசோமன் கையசைக்க அவர்களை துணைக்கும்பொருட்டு இந்திரப்பிரஸ்தத்தின் வில்லவர்கள் பதினெண்மர் தங்கள் அம்புகளுடன் ஒருங்கி நிற்க சீரான விரைவில் துரோணரின் படை அணுகிவந்தது. அருகணையுந்தோறும் எரிந்துசூழும் காட்டெரி எனத் தோன்றியது. “அவர்கள் நம் அம்புவளையத்திற்குள் வரும் வரை காத்திரு” என சுதசோமன் சொன்னான். “நாம் இங்கு காத்திருப்பதை அவர்கள் திரும்பமுடியாதபடி சூழ்ந்த பின்னரே அறியவேண்டும்.” சர்வதன் “ஆணை” என்றான்.
இடும்பர்கள் ஒரு சுழல் வீச்சென வந்தமைந்து எழுந்துசெல்ல இறுதியாக கடோத்கஜன் நிலத்தில் வந்து அமர்ந்ததுமே துரோணரின் படையிலிருந்து அம்புகள் வந்து அச்சுழியை அறையலாயின. அனைத்து அம்புகளுமே இடும்பர்களின் கால்களை நோக்கி குறிவைக்கப்பட்டிருந்தன. இடும்பர்கள் கால்களில் கவசமணிந்திருக்கவில்லை. அவர்களின் மெலிந்து சற்றே வளைந்த ஆமைக்கால்கள் வெவ்வேறு வகையில் வளைந்து நிமிரக்கூடியவையாக இருந்தன. கழைகளில் துள்ளி மேலெழவும் அதே விசையில் இறங்கவும் அக்கால்களின் குழைவே அவர்களுக்கு உதவியது. அம்புகள் அக்கால்களில் வந்தறைய இடும்பர்கள் அலறியபடி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் மேல் மேலும் இடும்பர்கள் விழுந்தனர்.
சுதசோமன் கையசைக்க சுருதசேனனும் சர்வதனும் தங்கள் அம்புகளால் ஒரு வலைக்கூரை அமைத்து எழுந்து வந்தமைந்த அம்புகளை தடுத்தனர். சுதசோமன் தரையில் கால்மடித்து அமர்ந்து மேலே அம்புகளை தொடுத்தான். சுதசோமன் கையசைவால் ஆணையிட சர்வதன் ஒரு கணத்தில் பாய்ந்து இரு வீரரின் தோள்மேல் ஏறி நின்று துரோணரின் படைகளை நோக்கி அம்புகளை எய்தான். இந்திரப்பிரஸ்த வீரர்கள் ஒருகணம் இன்னொருவர் மேல் ஏறி அம்புதொடுத்து நிலத்திலமர இன்னொரு அணி மேலேறி அம்பு தொடுத்தது. அவ்வாறு அங்கிருந்து அம்புகள் எழும் என எதிர்பார்த்திராத துரோணரின் உத்தரபாஞ்சால வில்லவர்கள் திகைத்து கூச்சலிட்டனர். முதல் அணியின் வில்லவர்களை சர்வதனும் வில்லவரும் வீழ்த்தினர். எஞ்சியவர்கள் பின்னடைய அவர்களின் அம்புகள் விசையிழந்தன. அவர்கள் தயங்கியதுமே மேலும் ஊக்கம்கொண்டு அம்புளால் இடைவிடாது அறைந்து பின்னடையச் செய்தனர் சுதசோமனும் சுருதசேனனும். கௌரவப் படைகளின் அம்புகளை முற்றாக செறுக்க ஒருகணத்தில் அவர்களால் இயன்றது.
“அவர்கள் மீண்டும் சுழியை அடையாளம் காண இயலாதபடி சிதறடிப்போம். அவர்கள் மீண்டும் சூழ்கை வகுத்து அணுகுவதற்குள் இடும்பர்கள் பேரழிவை உருவாக்கியிருப்பார்கள்” என்று சுதசோமன் சொன்னான். “அவர்களை அறைந்து வீழ்த்திக்கொண்டே இருப்போம்… அவர்களை இடும்பர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை அவர்களின் கவசங்களே. கவசங்கள் அம்புகளை ஈர்ப்பதை அவர்கள் இன்னமும் அறிந்துகொள்ளவில்லை.” சர்வதன் இருளுக்குள் மெல்லிய செந்நிற அலைவுகளாகத் தெரிந்த கௌரவப் படையினரின் கவசங்களை பார்த்தான். வில்லவனின் கவசத்தின் ஒளியிலிருந்து அவன் தேர்வலன் எங்கிருக்கிறான், புரவிகள் எங்குள்ளன என்று காணமுடிந்தது. மிக மெல்ல அவன் கவசங்களின் இடுக்குகளைக்கூட உள்ளம் நோக்கிஅறிந்தது. அவர்கள் இருளுக்குள் மறைந்திருக்க நோக்கு சென்றுவிரியும் வெட்டவெளியில் நின்றிருந்தனர் துரோணரின் வீரர்கள்.