பால் – பாலா கடிதம்

mil

நீர்க்கூடல்நகர் – 1

அந்த டீ – ஒரு கடிதம்

பால் – கடிதங்கள்

பால் – மேலும் கடிதங்கள்

அன்பின் ஜெ,

எதிர்வினைகளைப் படித்ததும் சிரித்துவிட்டேன். நன்றி!

நீங்கள் உத்திரப் பிரதேசம் செல்லும் வழியில் ஒரு கடையில் டீக் குடிக்கிறீர்கள். குமட்டுகிறது. கலப்படம் செய்யப்பட்ட பால் எனத் தோன்றுகிறது. உடனே உங்கள்கட்டுரையில் இருந்து கருத்துக்கள் புறப்படுகின்றன. இத்தனை பேர் குடிக்கும் பாலுக்கான மாடுகள், சாணி வைக்கோல் இவை எல்லாம் எங்கே என வியக்கிறீர்கள். நாம் அருந்தும் பாலில் பெரும்பகுதி மாவு, யூரியா மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்து செய்யப்படுகிறது எனச் சொல்கிறீர்கள். அரசுப் பால்நிறுவனங்கள் கூட இதைத் தான் செய்கின்றன என்கிறீர்கள். இதனால் தைராய்ட் உள்படப் பலப் பிரச்சினைகள் வருகிறது எனவும் சொல்கிறீர்கள்.

அத்தனைக் கருத்துக்களுக்கும் நீங்கள் சாலையில் குடித்த ஒரு டீ யைத் தவிர தரவுகள் இல்லை. நீங்கள் பால்துறையைப் பற்றி அறிந்தவரோ / மருத்துவ நிபுணரோ இல்லை. எனவேதான் நான் சில தரவுகள் மூலம் விலகல்களைச் சொல்ல வேண்டியதாயிற்று. முதலில், கால்நடை எண்ணிக்கை குறைந்து விட்டது என்னும் கருத்து. –மனிதர்களுக்கான கணக்கெடுப்பு இருப்பதைப் போலவே கால்நடைகளுக்கும் கணக்கெடுப்பு உண்டு. தவிர, இந்தியா இன்று ஏற்றுமதி செய்யும் பால் பவுடர் வளர்ச்சி,கால்நடை இறைச்சி ஏற்றுமதி வளர்ச்சி – இவை அனைத்துமே, உங்கள் கருத்து தவறு என்பதைச் சொல்பவை.

உங்கள் இரண்டாவது கருத்தான கலப்படப் பால் – என் பதில் மிகத் தெளிவாக, இந்தப் பிரச்சினை வட மாநிலங்களில் அதிகமாகவும், சிறு வியாபாரிகள் செய்யும் பால்வணிகத்திலும் மிக அதிகம் எனச் சொல்கிறது. எனவேதான், டெட்ரா பேக்கில் கிடைக்கும் அமுல் பாலைக் கொண்டு செல்லுங்கள் எனப் பரிந்துரைத்தேன். மூன்றாவதாக உங்கள் கருத்து – அரசு நிறுவனங்கள் கூட இதைத் தான் செய்கின்றன எனச் சொல்லியிருந்தீர்கள். நான் அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, பெரும் தனியார்நிறுவனங்களிலும் இது சாத்தியமேயில்லை எனச் சொன்னேன்.

இதற்கான பதிலில் – என்னைப் பற்றிய உங்கள் கணிப்பைப் படித்தேன். ‘பாலா உணவு உற்பத்தித் துறையில் உயர்நிலையில் பணியாற்றியவர். அவரிடம் வரும் தகவல்கள்வழியாகச் செயல்பட்டவர்’. இந்தக் கருத்துக்கு ஆதரவாக, ஈரோடு கிருஷ்ணனையும், ஜாஜாவையும் மேற்கோள் காட்டியிருந்தீர்கள். எனக்கு அவர்களின் துறை பற்றியும், அவர்களின்பங்களிப்பைப் பற்றியும் அதிகம் தெரியாது. எனவே, நான் என்னைப் பற்றி மட்டும் கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன்.

உங்கள் வரி மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த்தைக் கொண்டு சென்ற தருமியை நினைவு படுத்தியது. என் பணி வாழ்க்கையில் முதல் பத்து வருடங்கள், முதல் நிலை மேலாளனாக,செயல்தளங்களில் பணியாற்றியிருக்கிறேன். இந்தியாவின் முன்மாதிரி கார்ப்பரேட் கரிம வேளாண் பண்ணையை, துவங்கி நடத்தியிருக்கிறேன் (நம்மாழ்வார் இன்று போல் பெரிதாகப் புகழ்பெறுவதற்கு முன்பு). வேளாண் பொருள் கொள்முதலுக்காக, ராய்ச்சூர் அதோனி, தாவண்கெரெ, துறையூர் போன்ற நகரங்களில், வருடத்தின் பல மாதங்கள் வாழ்ந்திருக்கிறேன். பின்னர், அடுத்தநிலையில், கொள்முதலுக்காக, இந்தியாவின் பெரும் வேளாண் மாநிலங்களில் (குஜராத், மஹராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உ.பி, பஞ்சாப், ஹரியானா, கேரளா, ஆந்திரம், மேற்கு வங்காளம்,தமிழகம் உட்பட), பெரும்பாலும் தரைவழியாகப் பயணித்திருக்கிறேன். மும்பை ஆரே மில்க் காலனியில் ஒரு வாரம் தங்கியிருக்கிறேன்.

நான் 10 ஆண்டுகள் பணிபுரிந்த கவின்கேர்நிறுவனத்துக்கு இரண்டு பெரும் பால் பதனிடும் நிலையங்கள் உள்ளன. பால் கொள்முதலில் உள்ள பிரச்சினைகளை அறிந்திருக்கிறேன். இருந்தாலும், நான் சந்திக்கும்,உணரும் விஷயங்களை, உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தரவுகளைச் சரிபார்க்காமல் எழுதுவதில்லை. தொழில்துறைகளில், தரவுகளின்றிப் பேசுதல் பாவம். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, இதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் – ‘In God we trust. For the rest, we demand Data!’

வேளாண்மை, பொருளாதாரத் தளங்களில், என் அனுபவங்களை, அதையொட்டி நான் படித்த விஷயங்களை மட்டுமே எழுதுகிறேன். மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்ததைச் சொல்வதில்லை. கீழிருந்து, உழைத்துத்தான் மேலே சென்றிருக்கிறேன். ஓரிரவில் உயர்நிலையில் பணிபுரியத் தொடங்கிவிடவில்லை. தன் துறை இயங்கும்செயல்தளங்களுடன் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ளாதவர்கள் நீடித்து இயங்குதல் கடினம்.

மாரிராஜ் அவர்களின் கடிதம் படித்த உடன், என் கல்லூரி ஜூனியரும், இன்று பால் கொள்முதலில் துறையில் பணிபுரிபவருமான கணேஷ் அவர்களிடம் பேசினேன். என்தரவை அவர் உறுதி செய்கிறார். தனி மனித, சிறு வியாபார மோசடிகள் இருக்க வாய்ப்புகள் உண்டு – ஆனால், நிறுவனங்கள் இதை ஒரு தொழில்முறையாகச் செய்யவாய்ப்பேயில்லை என்கிறார். மாரிராஜ் விரும்பினால், எனது ஈமெயிலுக்கு ([email protected]) தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். உண்மையாக இருப்பின்,அவர் குறிப்பிடும் பெரும் நிறுவனங்களில் களையெடுப்பது எளிது.

பாலில் வேண்டுமென்றே யூரியா போன்ற உடல் நலனுக்குத் தீங்கான பொருட்களை கலத்தல், பெரும்நிறுவனங்களில் சாத்தியமேயில்லை. அதன் பின் விளைவுகள் சாதாரணமானவை அல்ல.

அன்புடன்

பாலா

முந்தைய கட்டுரைதலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகட்டண உரையின் தேவை