பால் – ஒரு கடிதம்

mil

நீர்க்கூடல்நகர் – 1

அந்த டீ – ஒரு கடிதம்

பால் – கடிதங்கள்

பால் – மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

பல விவாதங்களில் ஒரு குறிப்பிடட “இரு தரப்புகள்” எல்லா விவாதங்களிலும் இருக்கிறது. விவாத அடிப்படையில் இரண்டுமே ஒருவகையில் ஏற்புடையதாகவும் இருக்கிறது.

“உள்ளிருந்து விபரங்கள் அடிப்படையில் பேசுபவர்கள்”

“வெளியில் இருந்து அனுபவ அடிப்படையில் பேசுபவர்கள்”

எந்த ஒரு விவாதத்திலும் வித்தியாசம் “உள்ளிருந்து பேசுபவர்கள்” மற்றும் “வெளியில் இருப்பவர்கள்” என்பது மட்டும்தானா என்றே பல சமயங்களில் தோன்றி இருக்கிறது.

பாலா பால் வணிகம் சார்ந்து உள்ளிருந்து பேசுகிறார், ஒவ்வொருநாளும் அதில் வாழ்பவர் அல்லது வாழ்ந்தவர்    – மற்றவர்கள் பாலின் சுவை அறிந்த, அது சார்ந்த கலப்பட செய்திகளை செய்தி ஊடகங்களில்  கடந்து போகும் வெளியில் இருப்பவர்கள்.

அரசு ஊழியரான நமது நண்பர் ஒருவர் சமீபத்திய அரசுஊழியர் வேலைநிறுத்தம் சார்ந்து அதை ஆதரித்து, அந்த பக்க நியாயங்களை பேசினார், அவர் சொன்னது எல்லாமே உண்மைதான்,  மற்ற எல்லோரும் தம் அனுபவங்களை முன்வைத்து அவரை எதிர்த்து வாதாடினார்கள், அதுவும் உண்மைதான்.

ஜாஜா, அந்த துறையின் உள்ளிருந்து பேசுகிறார், ஆனால் terms and conditions அதற்கு பின்னாடி clauses என்று வைத்து மருத்துவ காப்பீடுக்கான பணத்தை கொடுக்காமல் மறுப்பதே இவரது ஒட்டுமொத்த திறமையுமோ என்று எண்ணும்படி  மறுப்பதற்கான எல்லா காரணங்களையும் கொண்டு வந்து கொட்டி, ஏமாற்றப்படும்  பயனாளியாக வெளியில் நான் …. ஆனால் எவ்வளவு “நான்” கள் என்பதில்தான் உண்மை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

உள்ளிருப்பவர்களுக்கு உண்மையிலேயே அதில் நிறைய விஷயங்கள் தெரியும் அதனாலேயே அதன் நியாயங்களை, அதில் சாத்தியமற்றவைகளை பேசுகிறார்கள். எல்லா துறைகளையும் போல தவறுகள் நடக்கின்றன என்றாலும், நடக்காமல் இருக்க இருக்கும் கட்டுப்பாடுகளை  பேசுகிறார்கள் என்று சொல்வதா…..  அல்லது உள்ளிருப்பவர்களுக்கு தன் இருத்தலுக்கான ஒரு “நியாயப்படுத்தல் அழுத்தம்” உண்டு, அதனாலேயே தற்காத்தலும் இயல்பிலேயே உண்டு என்பதா ….

இதில் இரண்டு விஷயங்களை பற்றி என் கருத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன். விவசாய பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்து என்னுடன் PhD செய்து, சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் விஞ்ஞானியாக இருந்து, ஊரில் பால்பண்ணை நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி, பால் பதப்படுத்தி விற்கும் ஒரு நிறுவனமாக  அதை மாற்றி இப்போது மொத்தமாக ஊருக்கு திரும்பிவிடட என் நண்பன், ஒவ்வொருநாளும் சந்தித்து பேசிக்கொண்டிருந்த நடபு. இந்த பால் கலப்படங்கள், சாத்தியங்கள், கள  நிலைமை பற்றி நிறைய பேசி இருக்கிறேன். அது எந்த சார்பும் இல்லாமல் நடந்த தனிப்படட பேச்சுக்கள், அதில் எந்த நியாயப்படுத்தல் தேவைகளும் இல்லாமல் நடந்தது.

எனது நண்பரின் பால் நிறுவனத்தில் ஒவ்வொருநாளும் சோதித்தே வாங்குகிறார்கள், குறிப்பிடட இடைவெளியில் தனியார் மற்றும்  அரசு சோதனை நிலையங்களில் மற்ற கலப்படங்களுக்காக சோதனை செய்கிறார்கள். ஆனால் இதுவரை, இவ்வளவு வருடங்களிலும் ஒரு முறை கூட யூரியா பாலில் இருந்ததாக ஒரு புகாரும் இவர்களிடம் இல்லை. பால் இந்தியா முழுவதுமே முற்றிலும் கொழுப்பின் அளவைக் கொண்டே தரம் நிர்ணயிக்கப்படுகிறது, அதில் வேறு என்ன கலந்தாலும் அதனால் பயன் என்று எதுவுமே இல்லை. தாவர எண்ணெய்யை கலக்கலாம், 1. பாலில் எண்ணெயயை கலப்பது அவ்வளவு எளிது அல்ல. 2. அது விவசாயிகளுக்கு லாபமும் அல்ல.

ஆனால் காஞ்சிபுரத்தில் பால் குடித்துவிட்டு சென்னைக்கு வந்து குடித்தாலே அவனால் அதன் சுவை மாறுபாடடை உணரமுடிகிறது என்பதை ஒத்துக்க கொள்கிறான்.  உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் நிலையங்களுக்கு பால் வர ஆகும் காலதாமதம் அல்லது முதல்நாள் பாலை விவசாயிகள் மறுநாள் கொண்டுவந்து கொடுப்பது, கடைகளில் குளிர் பெட்டிகளில் வைக்காமல் இருப்பது போன்றவை பாலின் சுவையை பாதிக்கலாம், ஆனால் அதற்க்கு கலப்படம் காரணமாக இல்லை என்பதை உறுதியாக சொல்கிறான்.

ஒவ்வொரு நிறுவனமும் போட்டி சந்தையில் தமது பெயரை காப்பாற்றி நிலை பெற அவ்வ்ளவு கஸ்டப்பட வேண்டி இருக்கிறது, இதில் கலப்படங்கள் மூலம் நிலைபெற நினைப்பது தற்கொலைக்கு சமம். ஒருநிறுவனம் கலப்படத்தில் ஈடுபடுகிறது எனில் அதன் போட்டி நிறுவனமே  அதை காட்டிக் கொடுத்துவிடும் பயம் எல்லோருக்கும் உண்டு என்கிறான். 2017 ம் வருடம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்ததை தொடர்ந்து தனியார் பால் நிறுவங்கள் அமைச்சர் மேல் அவதூறு வழக்கு தொடந்து அரசை, அமைச்சரை பகைத்துக் கொள்ளும் அளவுக்கு அவை நேர்மையாகவே இருக்கின்றன என்கிறான்.  வழக்கு தொடந்து இரண்டு வருடங்களாக நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த இரண்டு வருடத்தில் கூட அமைச்சர் கலப்படத்தை கண்டுபிடித்து கோர்ட்டில் அதை நிரூபித்து இருக்கலாம். அதை சிபிஐ க்கு மாற்ற சொல்லி  நீதிமன்றத்தில்  கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. போன மாதம் கூட அது செய்தியில் வந்தது.

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டி இருக்கிறது. குறிப்பிடட சில பெயர்களுக்கான பொதுவான அர்த்தப்படுத்தல்கள் வேறு, அதன் தனித்துறையில் வேறு அர்த்தம். டிடெர்ஜென்ட் என்று சொல்லப்படும்போது பொது மக்களுக்கு அது சோப்புத்தூள். ஆனால் உணவு துறையில் அல்லது நான் சார்ந்திருக்கும் அறிவியல்துறையில்  டிடெர்ஜென்ட் என்பது ஒரு மாலிக்யூல், அதன் தலை பகுதி தண்ணீரை விரும்பும் (Hydrophilic) பகுதியாகவும் அதன் வால்  பகுதி தண்ணிரை வெறுக்கும் (Hydrophobic) பகுதியாகவும் இருக்கும் சிறப்பு அமைப்பை கொண்டது. அதன் வேலை மேற்பரப்பு இழுவிசை (surface tension) யினைக் குறைப்பது, அதன்முலம் ஒரு குறிப்பிடட அளவில் பயன்படுத்தப்படும் போது அது புரதத்தை நீரில் நன்றாக கரைந்த நிலையில் வைத்திருக்கும் ஒரு பொருள். பலவகையான டிடெர்ஜென்ட்கள் உள்ளன.  Sarcosyl ம் ஒரு டிடெர்ஜென்ட்தான். Sodium lauroyl sarcosinate என்றும் சொல்லலாம். இது ஒரு பதப்படுத்தும் பொருளாக (stabilizer or preservative ) உணவுத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இது பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட்துதான். அதேபோல் உணவுப்பொருள் நிலையங்களில் sanitizers ஆக ஹைட்ரஜன் பெராக்ஸைட் அனுமதிக்கபடது.  நிருபர்களுக்கு இது எல்லாம் தெரியாது, “பாலில் டிடெர்ஜென்ட்” என்றாலே ஸ்கூப் நியூஸ்தான்.   இது நீண்ட தூரம் பால் பயணப்படும்போது பால்  கெட்டுவிடாமல் இருக்க பயன்படடிருக்கலாம், எல்லாவற்றிலும் இருப்பது போல் அதீத எச்சரிக்கையில் அனுமதிக்கப்படட அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் கொடுத்திருந்த ஒரு இணைப்பில் traces of detergent இருந்தது அதற்க்கு மேல் அதில் எந்த தகவலும் இல்லை. ஆனால் சோப்புத்தூளை பாலில் கலந்தால் பால் திரிந்துவிடவே சாத்தியம் அதிகம், சோப்புத்தூளின் பண்பே அதுதான்.

எங்கோ படித்த ஒன்று ஞாபகம் வருகிறது. முன்பு திருச்செந்தூர் கோவில் வைரவேல் களவாடப்பட்ட பிரட்ச்சனையில் கலைஞரின் நடைபயணத்தை தடுக்க என்ன செய்யலாம் என்று எம்ஜிஆர் ஆலோசனை கூடடம் நடத்த, அதில் பங்குபெற்ற கமிஸ்னர் சொன்னாராம்.  கலைஞரின் கோபாலபுரம் வீடு வீதிகளை  மீறி கடடபட்டிருப்பதாக அதன் ஒரு பகுதியை இடித்துவிடலாம். “அந்த வீடு விதிமுறைகளை மீறியா கடடபட்டிருக்கிறது”  என்று எம்ஜிஆர் ஆர்வமாக கேட்க அதற்க்கு கமிஸ்னர் சொன்னாராம், “அது சரியாக தெரியவில்லை, ஆனால் மெட்றாஸில் ஒரு வீடு கட்டப்பட வேண்டும் என்றால் அது எதாவது ஒரு விதியை மீறித்தான் கட்டப்பட முடியும்”  :-)

அதுபோல் இன்று நீங்கள் அனுமதிக்கப்படட அளவு என்று ஒன்றை எடுத்தால், எந்த ஒரு உணவு பொருளும் அதை மீறித்தான் இருக்கும். விவசாயிகளின் நலனுக்காக, அவர்கள் தற்கொலைக்காக, அவர்களின் விளைபொருட்களுக்கு தகுந்தவிலை கொடுக்கப்படாமல் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவதற்காக  குரல் கொடுக்கும் அதே நேரம் பூச்சிக் கொல்லிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி எல்லாம் விளைபொருட்களை விஷமாக்கிக் கொண்டிருப்பதற்கு எதிராகவும் பேசத்தான் வேண்டும். இரண்டுமே முக்கியம்.

பாலின் சுவை சார்ந்த நம் எண்ணம் சரிதான். ஆனால் இன்று எந்த உணவு பொருட்களும் விளைவிக்கப்படட அல்லது உருவான இடத்தில் இருந்து நம்மை அடைவதுற்கு நாட்களில் இருந்து மாதங்கள் வரை ஆகிறது. ஒரு நாள் அலுவலகத்துக்கு எடுத்துவந்து இரண்டுவாரம் மறந்து போன ஆப்பிள் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியே இருக்க, நம் நண்பர்களுக்கு ஒவ்வொரு வாரமும் அதை படம் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தேன். 60 நாட்கள் வரை சிறு சுருக்கம் கூட அதன் தோலில் இல்லை. 90 நாளில் வெட்டி தூக்கிபோட்டுவிடடேன், அப்போது தோல் சுருக்கம் இருந்தாலும் உள்ளே கெடவேயில்லை. எனவே இன்று கலப்படமற்ற அல்லது பதப்படுத்தும்  பொருட்கள் சேர்க்காத எந்த உணவு பொருளும் இல்லை.    எல்லாமே அனுமதிக்கப்படட அளவுக்கு அதிகம்தான். எதுவும் விளைவிக்காத கட்டாந்தரை மண்ணிலும், நிலத்தடி நீரிலும் பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியம் இருப்பதாய் ஒரு ஆய்வு வெளிக் காட்டி இருந்தது.

இந்தியா உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரும் பால் உற்பத்தி செய்யும் நாடு. இது சார்ந்த தகவல்கள், கால்நடைகளின் எண்ணிக்கை வரை அதிகாரப்பூர்வமாகவே கிடைக்கிறது.   கிடடதடட உற்பத்தியாகும் எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே பயன்படுத்துகிறோம். ஏற்றுமதி மிகக் குறைவு. ஏற்றுமதியில் நியூசிலாந்து முதலிடம். மாட்டுக் கறி ஏற்றுமதியிலும் நாம்தான் உலகிலேயே இரண்டாவது நாடு. போனவருடம் முதலிடத்தில் இருந்த பிரேசிலை வீழ்த்தி முதலிடத்துக்கு வந்தோம், இப்போது என்ன நிலை என்று தெரியவில்லை.

பால் கலப்படம் இல்லை என்று சொல்ல வரவில்லை. எந்த ஒன்றிலும் இருக்கும் கலப்படம் போல் பாலிலும் இருக்கலாம் என்றே நினைக்கிறேன். எந்த ஒன்றிலும் கலப்படத்துக்கான செய்திகளை எடுத்துக் கொண்டுவந்துவிட முடியும்.  ஆனால் அதன் உற்பத்தி மற்றும் வழங்களின் பிரமாண்டத்துக்கு முன் கலப்படம் சார்ந்த நிகழ்வுகள் எந்த அளவு என்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். பாலின் சுவை சார்ந்த அனுபவத்தை நேரிடையாக பெறும் நாம், அது சார்ந்த மனக்குறை உள்ள நாம், அதற்கான காரணங்களாக செய்திஊடகங்களின் வழி கலப்படங்களை பற்றிய செய்திகளை அறியும் போது இரண்டையும் இணைத்து புரிந்து கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அல்லது பாலா சொன்னதுபோல்  கடைநிலை வியாபாரிகளால் அதன் கெட்டித்தன்மைக்காக சேர்க்கப்படலாம், அல்லது வட இந்தியாவில் இது அதிகமாக இருக்கலாம்.

புள்ளிவிபரங்கள் பற்றி சொல்லியிருந்தீர்கள். புள்ளிவிபரம் என்பதன் மேல் ஒரு சந்தேகத்தன்மை நமக்கு உள்ளது. ஒருவிதத்தில் நம்மை ஏமாற்றுகிறார்களோ என்று, அது உண்மையும் கூட. ஆனால் சரிபார்க்க இயலும் விபரங்கள் (Verifiable facts) இல்லாத எந்த ஒரு விவாதமும் விவாதம் இல்லை. சமூக திட்ட்ங்கள், அல்லது  அரசியல், அரசு திட்ட்ங்கள், அல்லது அதன் செயல்பாடுகள் சார்ந்த விவாதங்களை குறைந்தபட்ஷ சரிபார்க்க இயலும் விபரங்கள் இல்லாமல் செய்வது விவாதம் இல்லை, அது அறிவார்ந்ததும் இல்லை. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அதுதான் கிடக்கிறது. யாரு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும், என்ன கருத்தை வேண்டுமானாலும் சொல்ல்லிவிட்டு போகலாம். எந்த அரசையும் புகழ் பாடலாம். அதற்க்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஒரு கருத்துக்கு நான் எதிர் கருத்தாக இன்னொன்றை சொல்லிவிட்டு போகலாமே தவிர, அந்த கருத்து தப்பு என்று நான் நிரூபிக்க முடியாது.  Statistical deception உண்டுதான், ஆனால் புள்ளி விபரங்கள் இல்லாமல் எந்த ஒரு துறையிலும் எந்த ஒரு முடிவையும் யாரும் எடுத்துவிட முடியாது. ஆனால் சரிபார்க்க இயலும் விபரங்கள் முன்வைத்து ஒரு நிலைப்பாட்டுக்கு ஏன் வந்தேன் என்று ஒருவர் சொல்லும்போது, அந்த விபரங்கள் மூலம் அது ஏன் தவறு என்று மற்றவர்  மறுப்பதர்க்காவாவது ஒரு வழி இருக்கிறது. அவர் அந்த முடிவுக்கு வந்ததற்கு ஒரு அறிவார்ந்த காரணத்தை முன்வைக்கிறார், அப்படி இல்லாத எந்த கருத்தும்  கற்பிதங்கள், மனாசாய்வுகள் வழி வந்தவைதான், அவற்றுக்கு ஒரு “விவாதத்தில்” எந்த மதிப்பும் இல்லை என்றே நினைக்கிறேன்.

எந்த ஒரு அறிவுத்துறைக்கும் அதை புரிந்து கொள்ள ஒரு உழைப்பு தேவைப்படுகிறதோ அதேபோல்தான் ஒரு புள்ளி விபர தகவலை எப்படி சரி பார்க்க நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதும் முக்கியமானது. ஒரு தகவலை ஒருவர் சொல்லும்பதே அவர் அதில் மறைக்கும் அல்லது துருத்தி நிற்கும் ஒரு  தகவல் சார்ந்த அடிப்படை கேள்விகள் மனதில் எழுந்துவிடும். அவர் எல்லாரையும் ஏமாத்திவிட முடியாது. புள்ளி விபரங்கள் மூலம் ஏமாற்ற முனைபவர்களை அதை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் உடைக்கலாமே தவிர,  தகவல்கள் அல்லது புள்ளிவிபரங்கள் மேலான கருத்துக்கள் அறிவார்ந்த தன்மைக்கு எதிரானதாக ஆகிவிடக் கூடாது என்றே நினைக்கிறேன்.

அன்புடன்

சரவணன் விவேகானந்தன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62
அடுத்த கட்டுரைமிசிறு கடிதங்கள்