ராயகிரி

rayakiri

நான் பொதுவாக முகங்களை நினைவில் வைத்திருப்பவனல்ல. என்னைப்பற்றிய பேச்சுக்களை வைத்து என் நினைவாற்றலை மதிப்பிட்டிருப்பவர்களுக்கு இது வியப்பாக இருக்கும். பல்லாயிரம் வாசகர்களை நினைவில் வைத்திருக்கிறேன், அவர்கள் எழுதியவற்றையும் பேசியவற்றையும் உடனே நினைவுகூர்கிறேன் என பலர் எழுதியிருக்கிறார்கள். அதுவும் உண்மை. ஆனால் நான் நினைவு வைத்திருப்பது கருத்துக்களைத்தான். அவற்றை சொன்னார்கள் என்றுதான் அந்த மனிதர்களை நினைவுகூர்கிறேன். வெறும் முகங்களை அல்ல.

நான் ரயிலில், பேருந்தில் பயணம் செய்துகொண்டே இருப்பவன். முகங்களை பார்ப்பது என் போதை. பிழையாக நினைக்க வேண்டியதில்லை, ஆண்களின் முகங்களையும் பார்ப்பதுண்டு. ஆனால் அவை என் நினைவில் தன்னிச்சையாக பதியவேண்டும் என எதிர்பார்ப்பேன். அது ஒருவகை ரகசியக் கருவூலமாக ஆகவேண்டும். பின்னர் எப்போதாவது நான் கதைகள் எழுதும்போது அவை என்னை அறியாமலேயே உருமாறி எழவேண்டும். பல முகங்களை நான் ‘இதை எங்கே பார்த்தேன்? யார் இவர்?” என்று எண்ணி எண்ணி தேடிச்சலிப்பதுண்டு. அப்படி எழுதப்படாத பல்லாயிரம் முகங்கள் உள்ளே இருக்கக்கூடும் என்பது ஒரு நம்பிக்கை.

sudar

வாசகர்கள் என்பவர்கள் வெறும் முகங்கள் அல்ல. அவர்கள் இலக்கியச்சூழலுக்குள் நுழைந்ததுமே ஒரு கருத்துநிலையாக ஆகிவிடுகிறார்கள். அவர்களின் எண்ணங்களை ஏதோ ஒருவகையில் இலக்கியச்சூழலுக்குள் கொண்டுவருகிறார்கள். எழுத்தாளர்கள் போலவே அவர்களும் சூழலை பாதிக்கிறார்கள். ஆகவே ஒவ்வொரு வாசகரும் ஒரு தரப்பு என்பதே என் எண்ணம். அவரை அவ்வாறு இயல்பாக வகுத்துக்கொள்கிறேன். அவர்களை அவ்வாறே நினைவுகூர்கிறேன். பலசமயம் ஒரு வாசகரின் கூரிய கருத்து ஒன்றாகவே அவரை நினைவில்கொள்கிறேன், ஆகவே மறப்பதில்லை.

ஆகவே நான் நினைவுடன் விளையாடுவதில்லை. அதேசமயம் ஒவ்வொரு முறை ஒரு வாசகரை சந்திக்கும்போதும் ஒரு விளையாட்டு நடந்துகொண்டும் இருக்கிறது. உதாரணம் நண்பர் ராயகிரி சங்கர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2003-இல், அவர் கரூரில் இருந்து தன் இன்னொரு நண்பருடன் என்னை பார்க்கவந்திருந்தார். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சேர்ந்தே வந்தோம். ஆனால் அன்று அஜிதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் அருண்மொழி பதற்றத்தில் இருந்தமையால் நான் உடனே மருத்துவநிலைக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர்களிடம் விரிவாக பேசமுடியவில்லை. அவர்கள் அன்று எனக்குப் பரிசாக ஒரு போர்வை கொண்டு வந்திருந்தனர். நெடுநாட்கள் அதை பயன்படுத்தி வந்தேன். அன்று அவர் தன்னை சங்கர் என அறிமுகம் செய்துகொண்டார். வீடுதேடி வந்த அவர்களுடன் அதிகம் பேசாதுபோன குற்றவுணர்ச்சியை நான் எங்கோ எழுதவும் செய்திருந்தேன்.

raya

பின்னர் பத்தாண்டுகளுக்குப்பின் அவரை சந்திக்கையில் அவர் தன்னை சங்கரநாராயணன் என அறிமுகம் செய்துகொண்டார். அப்போது ராயகிரி சங்கர் என்ற பேரில் சில கடிதங்கள் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் எழுதிய ஆளுமையுடன் தன்னை பிணைத்துக் கொள்ளவில்லை. முன்னர் வந்து என்னை சந்தித்ததையும் சொல்லவில்லை. பலமுறை கூட்டங்களில் ஓரிரு சொற்கள், புன்னகை. நெல்லையில் புத்தகவிழாவில் சந்தித்தபோது ராயகிரி சங்கர் என்பது தன் பெயர் என்றார். முதல்முறையாக ஒன்றோடொன்று மூன்று ஆளுமைகளும் இணைந்து ஒர் உருவம் உருவானது. அவர் என்னை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார். என்னுடன் ஓர் உரையாடலில் இருந்திருக்கிறார். ஆனால் மிகமிகக் குறைவாகவே பேசியிருக்கிறோம்.

சமீபத்தில் அவருடைய முதல் கவிதைத் தொகுதி [சுடர்களின் மது – ராயகிரி சங்கர். இளங்கோ படைப்பகம்]  எனக்கு வந்தது. வழக்கமான பாணியில் அமைந்த கவிதைகள், ஆனால் அந்தரங்கமானவை. அந்தத் தொகுதியே அவரை எனக்கு உண்மையில் காட்டியது. அகம் அறிதல் வழியாகவே ஒருவரின் முகத்தையும் அறிகிறோம்.

சிலநாட்களுக்கு முன் நாகர்கோயில் புத்தகக் கண்காட்சியில் அவர் நண்பருடன் நெல்லையிலிருந்து வந்திருந்தார். சந்தித்து ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டோம். தன்னை சங்கரநாராயணன் என்று அறிமுகம் செய்துகொண்டார். எனக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டேன். புன்னகையுடன் ’ஆம், முன்பு’ என்று சொன்னார். முகம் எனக்கு நினைவுகளை தொந்தரவு செய்தது. ஆனால் சென்றடைய முடியவில்லை. பின்னர் ராயகிரி சங்கர் போலிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டேன், ஆனால் பொதுவாக இந்த நெல்லை, சங்கரன்கோயில் வட்டாரத்தில் பலமுகங்கள் பொதுவானவை அவருடைய நண்பரின் பெயர் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்கு உரியது – சொல்லுடையார். சங்கர் சாதாரணமான பெயர்தான். ராயகிரி நல்ல பெயர். ராய என்றால் பாறை. கிரி என்றால் மலை. பிராகிருதமும் சம்ஸ்கிருதமும் கலந்தது. தமிழில் என்றால் பாறைமலை.

rayaki

ஒரு சுற்று கடைகளை பார்த்துவிட்டு வரும்போது மீண்டும் வசந்தகுமாரின் கடையில் அவரை பார்த்தேன். “ஜெயன், இவரு ராயகிரி சங்கர்… உங்க வாசகர்” என்றார் வசந்தகுமார். நான் உண்மையில் சிறிய அதிர்ச்சியை அடைந்தேன். சிரித்துக்கொண்டு “தெரியும், ஆனா அவர் சங்கரநாராயணன்னு சொன்னார்” என்றேன். பின்னர் அவருடைய முதல் வருகையை, பின்னர் நடந்த சந்திப்புகளை நினைவுகூர்ந்தேன். முப்பரிமாணத்தில் இரண்டு பிம்பங்கள் மெல்ல இணைந்து ஒன்றாவதுபோல அவர் முழுத்து உருக்கொண்டு வந்தார்.

மீண்டும் சந்திக்கையில் பலதுண்டுகளாகவே இருப்பார். ஒரு துண்டில் இருந்து மற்ற துண்டுகளை நினைவுகூர்ந்து இணைத்து ஒன்றாக்கிக் கொள்ளவேண்டும். அதற்குப்பதில் அந்தக் கவிதைகள்தான் அவர் என நிறுவிக்கொள்வதே எனக்கு எளிதானது. அப்படி நிறுவிக்கொண்ட பல வாசகர்கள் நினைவில் உள்ளனர். சிலசமயம் எழுதும்போது அவர்கள் முகங்களாகப் பெருகி என் முன் நின்றிருக்கிறார்கள் அவர்கள். எவரும் என்னை முழுமையாக வந்தடைந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரிலும் ஒருசொல் சிலசொற்களாக நானும் சிதறிப்பரந்திருக்கிறேன்.

முந்தைய கட்டுரைகட்டண உரையும் வருவாயும்
அடுத்த கட்டுரைசென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள்