மருதையன் சொன்னது…

அன்புள்ள ஜெயமோகன்,

சூப்பர்லின்க்ஸ் எழுதிய வெட்டி பதிவை தெரியாத்தனமாகப் படித்தேன். (இதைஎல்லாம் பதிவில் போட்டு, அட ஏன் சார்!) அப்போதிலிருந்தே ஒரு morbid curiosity-யோடு இந்த மருதையன் உங்களைப் பற்றி என்ன சொன்னார் என்றுதெரிந்துகொள்ளப் பார்த்தேன், இன்றுதான் முடிந்தது.

மருதையனின் பேச்சில் நீங்கள் இப்படி நக்கல் அடிக்கும்படி என்ன
இருக்கிறது? NCBH, க்ரியா பதிப்பகம் போன்றவற்றில் நானும் புத்தகம் தேடிஇருக்கிறேன். அனேகமாக நீங்களும் தேடி இருப்பீர்கள். கீழைக்காற்றுஎன்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை, ஆனால் இடதுசாரிப் புத்தகங்களைவிற்கிறார்கள், ம.க.இ.க.வை விமர்சனம் செய்யும் புத்தகங்களை விற்கிறார்கள்என்கிறார். என்ன தவறு? ஓவியர் மருது என்பவர் நன்றாக படம்வரைந்திருக்கிறாராம். அது எனக்கும் உங்களுக்கும் பிடிக்கிறதோ இல்லையோஅவரது ரசனை அப்படி. நடுத்தர வர்க்கம் பிள்ளைகளை படி படி என்றுவிரட்டுகிறது என்கிறார். உண்மைதானே! விரட்டுங்கள், ஆனால் பாடங்களைத்
தாண்டி புனைவுகளை, இலக்கியத்தை படிக்க வையுங்கள் என்று நீங்கள் கூடஅடிக்கடி சொல்வீர்கள். ஆர்காட்டு “நவாபுக்கு” இன்னும் மான்யம் என்கிறார்.

“நவாப்” என்ன ஸ்பெஷல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? தொலைக்காட்சி(இளைஞர்கள்) மூளையை மழுங்க அடிக்கிறது என்கிறார். நீங்கள் தொலைகாட்சிஅதிகம் பார்ப்பதில்லை என்று சொன்ன நினைவு இருக்கிறது. “ஜனநாயகம் என்றால்
என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு …அது எதுவும் தொலைக்காட்சியில் பேசப் படுவதில்லை. எதுவும் நின்றுவிவாதிக்கப் படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி.”

என்கிறார். சரிதானே? அவர் சொல்லும் காரணத்தை நான் மறுக்கிறேன் – “இவ்வாறுசிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களைஉருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.” ஆனால்கேள்வியில் என்ன குறை காண்கிறீர்கள்? “உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன்
தலைமுறை அறியாது!” என்பதை நீங்கள் மறுக்கலாம். ஆனால் கனமான விஷயங்கள்மேலும் மேலும் மலினப்படுகின்றன, அதற்கு ட்விட்டர், எஸ் எம் எஸ்,எல்லாமும் ஒரு காரணம், சென்சேஷன், 15 நிமிஷ பிராபல்யம் என்பதுதான் இன்றுஊடகங்களின் நோக்கம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அவர் “நோக்கமற்ற
இன்பவாதப் படிப்பினால் பலனில்லை!” என்று சொல்வதைத்தானே இன்னொரு விதமாகரமணி சந்திரனையும் கோவி.மணிசேகரனையும் பற்றி என்ன நினைக்கிறோம்? அதுவும் அவர் முதலாளித்துவத்திலும் நல்லஎழுத்தாளர்கள் உண்டு, அவர்களைப் படிப்பது அவசியம் (மறுத்துப்பேசுவதற்காகத்தான்) என்கிறார்.

உங்களைப் பற்றி அவர் “இன்பவாதப் படிப்பு” என்கிறார். இதில் என்ன
சந்தேகம்? உங்களைப் படிப்பதில் துன்பம் இருந்தால் யார் படிப்பார்கள்? :-)அப்பா அம்மா பரீட்சை என்ற நோக்கத்தோடு படி என்கிற மாதிரி இவர் புரட்சிஎன்ற நோக்கத்தோடு படிக்க வேண்டும் என்கிறார். ஒரு வேலை அதனால்தான் பாட்டாஎன்கிறீர்களோ?

நீங்கள் சூப்பர்லின்க்ஸ் பதித்த சுத்த முட்டாள்தனமானகருத்துகளுக்குசீரியசாகப் பதிலளித்ததும், இவரது “எல்லா படிப்பும் ஒரு இலக்குக்கே (அதுஇவருக்கு புரட்சி)” மாதிரி ஒரு சீரியசானபேச்சைக் கிண்டல் செய்துஎழுதியதும் எனக்கு கொஞ்சம்ஆச்சரியமாக இருக்கிறது!

அன்புடன்
ஆர்வி

==============================================

அன்புள்ள ஆர்வி,

மருதையன் அவர்களின் உரையை நான் கேலியாகச் சுட்டிக்காட்டியமைக்கு முக்கியமான காரணம் அந்த இணையதளத்தின் பாவலாதான். கண்மூடித்தனமான மதவெறியர்களின் அதே மனநிலை. அவர்களின் நோக்கில், அவர்களின் தரப்பு முழுக்க முழுக்க உண்மை. ஆகவே பிற அனைத்துமே பொய். அந்த ‘பொய்யை’ எள்ளிநகையாடவும், அவதூறுசெய்யவும், எந்த எல்லைக்கும் இறங்கிச்சென்று வசைபாடவும் அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் திருப்பி அவர்கள் மென்மையாக கிண்டல்செய்யப்பட்டாலோ, தர்க்கபூர்வமாக எதிர்க்கப்பட்டாலோ தாங்க மாட்டார்கள். பொங்கி கொந்தளித்துவிடுவார்கள். ஏனென்றால் அது ’உண்மை’யின் மீதான தாக்குதல் அல்லவா?

வினவுவின் எல்லா கட்டுரைகளிலும் நீங்கள் இந்த முதிர்ச்சியற்ற மனநிலையைக் காணலாம். அவர்கள் தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களை, கலைஞர்களை, எழுத்தாளர்களை என்னென்ன வார்த்தைகளில் எவ்வளவு தரமிறங்கி வசைபாடியிருக்கிறார்கள் பாருங்கள். ஆனால் அவர்களின் ஒரு தலைவரை சாதாரணமாக விமர்சனம் செய்தால் ‘அய்யயோ மக்களுக்காக வாழும் தலைவரை கிண்டல் செய்கிறானே, கேட்பாரில்லையா?’ என்ற பிலாக்காணம் எழுகிறது பார்த்தீர்களா?

இதைச் சுட்டிக்காட்டத்தான் அந்தக் கிண்டல் குறிப்பை எழுதினேன். உண்மையில் என்னுடைய தனிப்பட்ட நாகரீகத்தாலும், கருத்தியக்கம் என்பது என்றுமே மாற்றுத்தரப்புகளால் முன்னெடுக்கப்படுவது என்ற என் புரிதலாலும் நான் வினவு தளம்போல தரமற்ற சொற்களை பயன்படுத்துவதில்லை.

ஆனால் ஒரு மாற்றுத்தரப்பாக கொள்ளும் அளவுக்குக்கூட அடிப்படைத்தகுதியுடன் மருதையனின் பேச்சு இல்லை என்பதைத்தான் அதை எதிர்ப்பதற்கான காரணம். அந்தக் குறிப்பிலேயே அதை இரு வரிகளில் சுட்டியும் இருந்தேன். மார்க்ஸிய அறிமுகமிருப்பவர்களுக்கு நான் சுட்டிக்காட்டும் குறை என்ன என்பது அந்த வரிகளிலேயே புரிந்திருக்கும். ஆனால் இணையத்தில் அதுபற்றி மறுப்புகள் எழுதிய எவருக்குமே அது புரியவில்லை என்பது உண்மையில் இங்கே பேசிக்கொண்டிருப்பவர்களின் தரமென்ன என்பதை காட்டியது.

மருதையனின் உரையில் நான் காணும் போதாமைகள் இரண்டு. ஒன்று அவர் தன்னை மார்க்ஸியர் என்று சொல்லிக்கொண்டு அடிப்படை மார்க்ஸியநோக்கு கூட இல்லாமல் பொத்தாம்பொதுவாக தோன்றியதைப் பேசுகிறார். இரண்டு, இலக்கியம் பற்றி ஸ்டாலினிஸ்டுகளும் மாவோவின் கலாச்சரா புரட்சியாளர்களும் போல்பாட்டிஸ்டுகளும் முன்வைத்த அதே அறியாமையின் விளைவான அபாயகரமான நோக்கைக் கொண்டிருக்கிறார்.

*

மருதையனின் பேச்சு சாதாரணமாக, தன் சொந்த அனுபவத்தை மட்டுமே வைத்து, எந்தவிதமான தத்துவ ஆய்வுக்கருவிகளுடைய உதவியும் இல்லாமல், சமகாலத்தைப்பார்க்கும் ஒருவரின் உரை. அந்த உரையை இன்று ஒரு ஐம்பது வயதான எவரும் ஆற்றிவிடமுடியும். முழுக்க முழுக்கத் தெரிந்த கருத்துக்களும் கேட்டுப்புளித்த மதிப்பீடுகளும் மட்டுமே அதிலுள்ளன.

தன்னை ஒரு மார்க்ஸியர் என்று சொல்லிக்கொள்பவரிடமிருந்து ஓர் அறிவுச்சூழல் எதிர்பார்க்கும் ஆய்வுக்கருத்து இதுவாக இருக்க முடியாது. அவர் இன்னும் கொஞ்சம் வாசித்திருக்கவேண்டும், இன்னும் கொஞ்சம் விவாதித்திருக்கவேண்டும், இன்னும் கொஞ்சம் சிந்தித்திருக்கவேண்டும். நான் கிண்டலாகச் சுட்டிக்காட்டியது இதையே.

பொதுவாக காலமாற்றத்தை நசிவு என்று பார்க்கக்கூடிய கோணம் மிகப்பிரபலமான ஒன்று. கொஞ்சம் வயதானவர்கள் அதை எப்போதுமே சொல்வார்கள்.’அந்தக்காலத்தில் இப்படியா’ என்று ஆரம்பிக்காத பெரிசே கிடையாது. ஆனால் மார்க்ஸியத்தின் வரலாற்றாய்வுமுறைமை ஒருபோதும் அப்படிப்பட்ட ஒற்றைப்படைப் பார்வையை அனுமதிக்காது.

நான் அந்த சிறு குறிப்பிலேயே சுட்டிக்காட்டியபடி மார்க்ஸியநோக்கில் வரலாற்றின் மாற்றம் என்பது வளர்சிதை மாற்றம்தான். வளர்ச்சியும் கூடவே சிதைவும் இருக்கும். அந்த வளர்ச்சி என்பது முரண்படும் பொருளியல்சக்திகளின் விளைவாக உருவாகும் முன்னகர்வு மட்டும்தான், ஒருபோதும் பின்னகர்வு அல்ல.

உதாரணமாகப் பார்ப்போம். நம்முடைய அமைதியான, அழகான கிராமங்கள் இன்றில்லை. கிராமத்து விளையாட்டுக்கள் , கிராமியக் கலைகள் , கிராமியத் திருவிழாக்கள் அழிகின்றன. கிராமத்து மதிப்பீடுகள் அழிந்துவிட்டன. வீட்டுவந்த எவருக்கும் சோறுபோடாமல் அனுப்பக்கூடாதென்று நம்பிய தலைமுறை அழிகிறது. பக்கத்துவீட்டுக்காரனின் துயர் தன்னுடையதே என நினைக்கும் மனிதர்கள் வயதாகி மறைகிறார்கள். ஒரு சாவுக்காக கிராமமே துயர்காத்த காலம்போய் பக்கத்து வீட்டில் பிணம் கிடக்கையில் இந்த வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம், இதெல்லாம் இழப்புகள். சிதைவுகள்.

இந்த சிதைவுக்கு ஒரு மறுபக்கம் உண்டு. இன்றுதான் சமத்துவம் என்ற கருத்தே நம் கிராமங்களுக்கு வந்துள்ளது. எழுபது வயதான தலித் பெரியவரை பத்துவயதான உயர்சாதிப்பையன் அடே போட்டு அழைக்கும் காலம் மாறியிருக்கிறது. இன்றுதான் கிராமத்து வறுமை இல்லாமலாகியிருக்கிறது. எழுபதுகளில்கூட கிராமங்களில் பட்டினி என்பது ஒரு மையப்பிரச்சினை. மூன்றுவேளை எதையாவது சாப்பிடக்கூடியவர்கள் மிகச்சிலரே. கிராமமே கஞ்சி கூழ் என வெறி பிடித்து அலையும். இன்று அந்நிலை இல்லை

இன்றுதான் சேரிகளில் ஓட்டுக்கூரைகள் வந்திருக்கின்றன. இன்றுதான் ஏழைக்குடியானவப்பிள்ளைகள் படிக்கச் செல்கிறார்கள். இன்றுதான் தன் மகன் தன்னைவிட ஒருபடியேனும் மேலே உள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நம் எளிய மக்களுக்கு உருவாகி உள்ளது. அதற்கான வாய்ப்புகளும் பெருகியிருக்கின்றன.

அனைத்துக்கும் மேலாக இன்றுதான் நம் நாட்டின் கோடானுகோடி எளிய மக்களுக்கு அவர்களுக்கும் அரசாங்கத்தில் அதிகாரமுள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக சாலையை மறிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆள்வோர்களை வீட்டுப்பெண்கள் வழிமறித்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த உரிமைக்குரல்கள் போராட்டங்களாக ஆகின்றன. அவர்களுக்காக அவர்களே கட்சிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். சங்கங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக வாழ்க்கை முன்னால் நகர்ந்திருக்கிறதா? ஒரு மார்க்ஸிய ஆய்வாளன் ஆம் என்றே சொல்வான். அப்படித்தான் நிகழும்,வேறு வழியே இல்லை என்றும் சொல்வான். ஏனென்றால் மேலே சொன்ன அழியும் மதிப்பீடுகள் நிலப்பிரபுத்துவம் சார்ந்தவை. அத்தனை மதிப்பீடுகளும் விழுமியங்களும் இருந்தாலும்கூட நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் மேலானது, முற்போக்கானது.

முதலாளித்துவம்தான் நிலப்பிரபுத்துவத்தில் இருந்த நில அடிமைத்தனத்தை ஒழித்தது. வெறும் குழுக்களாகவும் கும்பல்களாகவும் கருதப்பட்ட மனிதர்களை தனிமனிதர்களாக உணரச்செய்தது. ஒவ்வொருவருக்கும் சுயமரியாதையை அளித்தது. ஒவ்வொரு மனிதரையும் ஓர் உற்பத்தி அலகாகக் கணக்கிட்டது. உழைப்புக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வகுத்தது. ஒரு வணிகச்சூழலை உருவாக்கி உழைப்பை விலைபேசச்செய்தது. அதன் விளைவாகவே பட்டினி அகன்றது. ஒருவன் தன் உழைப்பைக்கொண்டு தானும் சுற்றமும் முன்னேற முடியும் என்ற நிலை உருவாக்கியது.

ஆனால் மருதையன் என்ன சொல்கிறார்? “இவ்வாறு, சிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களை உருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.” . அவர் பேசுவது மார்க்ஸியமே அல்ல என்பதற்கு இந்த ஒரு வரி சான்று போதும். மார்க்ஸிய நோக்கில் அது அப்படியா? நிலப்பிரபுத்துவ காலகட்ட உழைப்பாளியைவிட பலமடங்கு விடுதலைபெற்றவனாகவே மார்க்ஸியம் முதலாளித்துவ உழைப்பாளியை மதிப்பிடும்.

தன்னுடைய நிலையைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரிந்தவனே முதலாளித்துவ உழைப்பாளி. தன் வணிகமதிப்பை அறிந்தவன். அதை வைத்துக்கொண்டு பேரம்பேசக்கூடியவன். விசுவாசம், ஆசாரம் போன்ற நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தபடாதவன் அவன். ஒருங்கிணைந்து போராடி தன் பேரம்பேசும் வலிமையை அதிகரித்துக்கொண்டவன். ஒருபோதும் அவன் சிந்திக்கும் திறனற்ற வெறும் மிருகம் அல்ல. நேர் மாறாக, அவன் சுயநலம் மிக்கவன், கோரிக்கைகள் கொண்டவன்.இதை உங்கள் ஊரில் முப்பது வருடம் முன்பிருந்த தொழிலாளியின் மனநிலையையும் இன்றைய தொழிலாளியின் மனநிலையையும் சும்மா ஒப்பிட்டாலே அறியலாம்.

மார்க்ஸிய நோக்குள்ளவர் இன்றைய தொழிலாளியை ஆராய்ந்தால் எப்படி மதிப்பிடுவார்? முதலாளித்துவத்தால் உருவாக்கப்படும் இந்த தொழிலாளிதான் கம்யூனிச இயக்கத்தின் கச்சாப்பொருள் என்றார் மார்க்ஸ். நிலப்பிரபுத்துவ காலகட்ட தொழிலாளியிடம் கம்யூனிசம் பற்றி பேசமுடியாது. காரணம் விசுவாசத்தாலும் இனக்குழு ஆசாரத்தாலும் பிரக்ஞை கட்டப்பட்டவன் அவன். முதலாளித்துவம் அந்த உழைப்பாளிகளை விடுவிக்கிறது .

முதலாளித்துவம் தொழிலாளியை சுயநலம் மிக்கவனாக ஆக்கியிருக்கிறது. தனிப்பட்ட பொருளியல் கனவுகள் கொண்டவனாக. உழைப்பில் இன்பம் காணாதவனாக, படைப்பதன் நிறைவை அறியாதவனாக ஆக்குகிறது. ஆகவே பொருளீட்டுவதும் கேளிக்கையில் ஈடுபடுவதும் மட்டுமே அவனது ஆர்வமாக உள்ளது. ஆகவே சுயநலம் கருதி பேரம்பேசுவதற்கல்லாமல் வேறெதற்கும் அவன் திரளமுடியாதவனாக ஆகிறான். இதுவே அவனுடைய சிக்கல்.

இன்றைய தொழிலாளிகள் சிந்திக்கும் திறனோ தேவையோ அற்ற மிருகங்கள் என்றால் இதைச் சொல்பவருக்கு அவர்களைப்பற்றி இருக்கும் மரியாதை என்ன ? அந்த தொழிலாளர்கள்மேல் இவருக்கு ஒரு அதிகாரம் கிடைத்தால் இவர் அவர்களை எப்படி நடத்துவார்? அவர்களின் ஆசைகளை இலக்குகளையும் எப்படி மதிப்பிடுவார்?

ஒரு மார்க்ஸியன் மேலேசொன்னபடி வளர்சிதை மாற்றமாகவே சமூகவளர்ச்சியை அணுகுவான். கணிப்பொறி, கைபேசி எல்லாவற்றையும் இப்படி இருதளங்களையும் கணக்கில் கொண்டே ஆராய்வான். அதன்பின்னர் இந்த முதலாளித்துவத்தின் சிக்கல்களை அவன் சுட்டிக்காட்டுவான். இங்கே மனிதர்கள் வெறும் உழைப்பாளிகளாக ஆக்கப்பட்டு அவர்களின் படைப்பூக்கம் இல்லாமலாக்கப்படுகிறது. ஆகவே உழைப்பாளி உழைப்பில் இருந்து அன்னியமாகிறான். ஆகவே அவனுக்கு வெற்றுக்கேளிக்கைகள் தேவைப்படுகின்றன. முதலாளித்துவம் அந்த கேளிக்கையை அளவில்லாமல் அளித்து அவனை அதற்கு அடிமையாக்குகிறது

முதலாளித்துவம் உபரியை மையம் நோக்கி குவித்துக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக மாபெரும் முதல்அதிகாரமையங்கள் உருவாகின்றன. அவை அரசையும் ஒட்டுமொத்த பொருளியல் சூழலையும் ஆட்டிப்படைக்கின்றன. விளைவாக பிற உற்பத்திக்கூறுகளான இயற்கைவளம், [நிலம்] உழைப்பு, நிர்வாகம் ஆகியவற்றுக்கு மதிப்பே இல்லாமலாகிறது. இதன் விளைவாக அவ்வப்போது மாபெரும் நெருக்கடிகள் உருவாகின்றன. இந்நெருக்கடிகள் போர்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன. அந்த போரின் அழிவுகளையும் நெருக்கடியின் இழப்புகளையும் எளிய மக்களே சுமக்கிறார்கள்.

ஆகவே முதலாளித்துவம் அழிவுத்தன்மை உடையது. அறம் அற்றது. எனவே இன்னமும் மேலான அறம் உடைய ஆக்கபூர்வ்மான ஓர் அமைப்பு தேவை. அது கம்யூனிச அமைப்பே. அதைநோக்கிச்செல்ல மார்க்ஸிய தத்துவமும், மார்க்ஸிய -லெனினிய- மாவோயிய செயல்திட்டமும் தேவை.

–இதுதான் ஒரு மார்க்ஸியர் முன்வைக்கக்கூடிய வாதங்களாக இருக்கமுடியும்.

ஆனால் மருதையனுக்கு எல்லா மாற்றங்களும் அழிவுகள்தான். கம்ப்யூட்டர் அழிவுசக்தி என்றால் காகிதம் மட்டும் முற்போக்கு சக்தியா? இணையம் பார்க்கும் தலைமுறை சோளப்பொரி என்றால் செய்தித்தாள் பார்த்த தலைமுறை அதற்கு முந்தைய தலைமுறைக்கு என்ன? காலமாற்றமெல்லாம் தீங்கு என்றால் பின்னால்சென்று நிலப்பிரபுத்துவத்துக்கா செல்லப்போகிறார்?

பிள்ளைகள் இன்று இரவுபகலாக டியூஷன் படிக்கின்றன என்றால் அப்படிப்படித்தால் வேலைவாய்ப்பு உண்டு என்னும் நிலை இன்று உள்ளது என்பதனாலேயே. எண்பதுகளில் நான் கல்லூரியில் படிக்கும்போது அந்நம்பிக்கையே இல்லை. படிக்கையிலேயே எங்களுக்கு எந்த உறுதிப்பாடும் இருக்கவில்லை. அன்று தெருத்தெருவாக வேலையில்லா பட்டதாரிகள். அன்றைய கதைகளும் சினிமாக்களும் முழுக்க அவர்களையே சித்தரித்தன.

இன்று அந்நிலை இல்லை. பலவேலைகளுக்கு ஆளில்லாத நிலை இன்றுள்ளது. அந்த வேலை அந்த இளைஞர்களைச் சுரண்டுகிறதா என்பது அடுத்த கேள்வி. ஆனால் வேலை இருப்பதனால்தான் படிப்புவெறி இருக்கிறது. அது முதலாளித்துவத்தின் கொடை. அது உழைப்பாளிகளை லாபத்தை உருவாக்க ஏற்ற இயற்கை வளங்களாகவே காணும். வீணாக்காது.

எழுபதுகளில் பட்டப்படிப்புக்கு செல்பவர்களின் எண்ணிக்கை பள்ளியிறுதி வெல்பவர்களில் ஐந்து சதவீதம் என்றால் இன்றுள்ளவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். குமரிமாவட்டத்தில் அன்றிருந்தவை ஒன்பது கல்லூரிகள். இன்று கிட்டத்தட்ட நூறு கல்லூரிகள். ஆகவே கல்வி உக்கிரமான போட்டி நிறைந்ததாக உள்ளது. நேற்று ஒரு எளியகுடும்பத்தில் இருந்து ஒருவர் உயர்கல்விகற்று வேலைக்குச் செல்வது மிக அபூர்வம். இன்று அது மிகமிக சாதாரணம்.

கடுமையாகப்படித்து டியூஷன் எடுத்து வென்று கணிப்பொறித்துறையில் வேலைக்குச் சென்ற கிறிஸ்டோபர் போன்ற ஒருவரிடம் சென்று மருதையனின் உரையை கொடுத்து அவரது வளர்ச்சி ஒரு வீழ்ச்சி என்றால், அவரை பாப்கார்ன் தலைமுறை என்றால், என்ன நினைப்பார்? இந்தவகையான ஒற்றைப்படை கூச்சல்களுக்கெல்லாம் சிந்தனை என்ற கௌரவத்தை அளிக்கலாகாது என்றே நான் நினைக்கிறேன்.

மருதையன் அத்தனை பக்கங்களில் பேசும் அனைத்துக்குமே மேலே சுட்டியபடி மார்க்ஸிய நோக்கில் வளர்சிதை மாற்றங்களாக கண்டு விளக்கம் அளிக்க முடியும். அவ்வாறு சிந்திக்கையில்தான் நாம் உண்மையான சிக்கல்களைச் சென்று சந்திக்கிறோம். அதற்குத்தான் வாசிப்பும் சிந்தனையும் தேவை. மருதையனின் இந்த முறையீடுகளை யாரும் செய்ய முடியும். எல்லாரும் செய்துகொண்டிருக்கிறார்கள். எந்த பயனும் இதற்கில்லை. சிந்தனை தளத்தில் இடமும் இல்லை

இந்திய சமூகம் அதன் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கிச் செல்கிறது. சமூக மாற்றம் அதற்குரிய வகையில் ஒழுங்கற்றும் சீரற்றும் நிகழ்கிறது. சில இடங்களில் அது வேகமான பாய்ச்சலை நிகழ்த்தும். சில இடங்களில் அது மெல்ல நிகழும். சில இடங்களில் அது பண்பாட்டுமாற்றத்துடன் நிகழும். சில இடங்களில் அப்படி இல்லை.

ஒரு மார்க்ஸியனுக்கு இந்த மாற்றம் வரவேற்புக்குரியதே. மார்க்ஸின் கருத்துப்படி முதலாளித்துவ சமூகமே கம்யூனிசத்தின் விளைநிலம். அங்கே கல்வி கற்றவன் இருக்கிறான். தொடர்புச்சாதனங்கள் இருக்கின்றன. பல்வேறு உழைப்பாளர்க்குழுக்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே கம்யூனிசத்துக்குச் சாதகமான விஷயங்கள். அவற்றைக் கைப்பற்றுவதன் மூலமே மார்க்ஸிய எழுச்சி சாத்தியம். மருதையனுக்கு அவையெல்லாமே வீழ்ச்சிகளாகப் படுகின்றன என்றால் இவர் என்ன மார்க்ஸியம் கற்றிருக்கிறார் ?

*

கடைசியாக அந்த ’இன்பவாத வாசிப்பு’ என்ற வரி. நம் கிராமங்களில் சில சித்தப்புகள் புத்தகம் என்றாலே காதல்கதை என்று நினைத்துக்கொண்டிருக்கும். அந்த மனநிலையில்தான் மருதையனும் இருக்கிறார். இலக்கியம் என்னும்போது சின்ன வயசிலே அவர் வாசித்த ராணிமுத்து அமுதா கணேசன் கதைகள்தான் அவர் மனதில் இருக்கின்றன. இலக்கியம் படிப்பவர்கள் அந்த ’இன்ப’த்துக்காக வாசிக்கிறார்கள் என்று மனமார நம்புகிறார்.

இவருக்கு தெரிந்ததைவிட பலமடங்கு தீவிரமாகவும் முழுமையான நோக்குடனும் நம் இலக்கியங்கள் நம் சமூக மாற்றத்தின் சித்திரத்தை முன்வைத்துள்ளன என்று யார் இவருக்குச் சொல்வது? அறிவார்ந்த சவாலை கொடுப்பவையாக, வாழும் காலத்தை விரிவாகபp்புரிந்துகொள்ள வைப்பவையாக உள்ளவை இலக்கியங்கள். மருதையனின் இந்த அப்பாவித்தனமான பேருரையை விட மிக நுட்பமாகவும் பலதளங்களை தொட்டு விரியக்கூடிய முழுமையான பார்வையை அளிக்கக்கூடியவையாகவும் இருபத்தைந்து தமிழ் நாவல்களாவது உள்ளன.

மருதையனின் இந்த பொதுப்படைப் பேச்சில் இருந்து அவர் மீண்டு தெளிவு பெறுவதற்காக நான் முன்வைக்க விரும்புபவை தமிழின் தரமான இலக்கியங்களையே. பூமணியின் பிறகு, நான் எழுதிய ரப்பர், இமையத்தின் கோவேறு கழுதைகள், சோ.தருமனின் தூர்வை, எம்.கோபால்கிருஷ்ணனின் மணல்கடிகை, கண்மணி குணாசேகரனின் அஞ்சலை என ஏதேனும் ஒரு நாவலை வாசிக்கட்டும். கடந்த அரைநூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த வளர்சிதை மாற்றம் என்ன என்று புரியும். அதன்பின் இத்தகைய முதிராபார்வையை இத்தனை தன்னம்பிக்கையுடன் முன்வைக்க மாட்டார்.

*

ஏன் இந்த வகையான பொதுப்படையான மூர்க்கம் அபாயகரமானது என்று சொல்கிறேன்? இதை ஏன்ஏதோ ஒருவரின் புலம்பல் என நிராகரிக்கமுடியவில்லை?

சீன அரசின் அதிகாரபூர்வ அனுமதியுடன் சாங் யிமோ [ Zhang Yimou ] இயக்கி 1994 ல் வெளிவந்த To Live என்ற படத்தில் 1966 முதல் 1976 வரை சீனாவில் மாவோவால் கொண்டுவரப்பட்ட கலாச்சாரப்புரட்சி காட்டப்படுகிறது. அதை ஒரு ரத்தக்காலகட்டம் என்றுதான் அந்த சீனபப்டமே சொல்கிறது. பண்டையச் செவ்வியல் நூல்களும் சமகால இலக்கியங்களும் அனைத்தும் ’இன்பவாத’ நோக்குள்ளவை என்று கருதும் மாவோவின் அரசு அத்தனை நூல்களையும் அழித்துவிட ஆணையிடுகிறது. நூல்கள் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. கலைகள் அழிக்கப்படுகின்றன. கதைநாயகனின் பழைய தோல்பாவைக்கூத்து பொம்மைகள்கூட தேடி எரிக்கப்படுகின்றன

அடுத்தகட்டத்துக்குச் சென்று பழையபாணியில் கல்வி கற்ற அனைவரும் அழிக்கப்படுகிறார்கள். மூத்த மருத்துவர்கள் பொறியாளகள் அனைவரின் வேலைகளும் பிடுங்கப்பட்டு அவர்கள் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு மண் அள்ளச்செய்யப்படுகிறார்கள். அவர்கள் அங்கேயே செத்து அழிகிறார்கள். எந்த பயிற்சியும் இல்லாத சிறுமியர் மார்க்ஸிய நோக்கில் மருத்துவம் செய்ய ஆரம்பிக்கவே நோயாளிகள் அழிகிறார்கள். ஒருகட்டத்தில் நாடே சீர்குலைய ஆரம்பிக்க வேறு வழியில்லாமல் முகாம்களில் எஞ்சியிருந்தவர்கள் திரும்ப கொண்டு வரப்படுகிறார்கள்.

அந்த படத்தில் ஒரு காட்சி. ஓர் இளம்பெண் பிரசவத்துக்காக கொண்டுசெல்லப்படுகிறாள். பயிற்சியற்ற நாலைந்து சிறுமியர் அவளுக்கு பிரசவம்பார்க்க அவள் நிலை சிக்கலாகிறது. அவர்கள் பயந்துவிடுகிறார்கள். கைதுசெய்யப்பட்டு கட்டி போடப்பட்டிருக்கும் மூத்த மருத்துவரை கொண்டு வருகிறார்கள். பலநாட்களாக அவருக்கு உணவளிக்கப்படவில்லை. அவர் உணவு கேட்கிறார். ரொட்டி கொடுக்கிறார்கள். பசிவெறியில் ரொட்டியை ஆவேசமாக தின்று நெஞ்சடைந்து மருத்துவர் செத்து விழுகிறார். கர்ப்பிணியும் சாகிறாள்.

அந்தக்காட்சி என்னை உலுக்கியது. மனிதர்கள் முட்டாள்களாக ஆவதற்கு அளவே இல்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் ’முதலாளித்துவ அவதூறு’ அல்ல. சீனாவே அனுமதித்த படம். மருதையனின் பேச்சை வாசிக்கும்போது அந்த எண்ணம் மீண்டும் வந்தது. பரிபூர்ணமான அறியாமையையே வலிமையாக கொண்டிருக்கும் மனிதர் அவர்.

சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மேல் வினவு தளத்தில் தெறிக்கும் வெறுப்பையும் வசையையும் பாருங்கள். மாவொவும் போல்பாட்டும் செய்ததை, இஸ்லாமிய முல்லாக்கள் செய்து கொண்டிருப்பதைச் செய்வதற்கான அடங்கா விழைவே அதில் உள்ளது.

மருதையன் ருஷ்யாவில் கமிஸாராக இருந்திருந்தால் அங்கே ஸ்டாலினிய ‘தூய்மைப்படுத்தலை’ திறம்படச் செய்திருப்பார். மாவோவின் சீனாவில் இருந்திருந்தால் ‘கலாச்சாரப்புரட்சியை’ சிரமேற்கொண்டிருப்பார். போல்பாட்டின் கம்போடியாவில் பிறந்திருந்தால் ‘மறுசீரமைப்பை’ தீவிரமாக முன்னெடுத்திருப்பார். அவரது கணக்கில் ஒரு இரண்டாயிரம் தலைகளாவது வரவு வைக்கப்பட்டிருக்கும். இங்கே வாய்ப்புத் தேடி காத்திருந்து மனம்தளர்ந்து பேசுகிறார்.

மருதையன் முன்வைக்கும் கருத்துக்கள் இந்துத்துவ பிரச்சாரங்கள் போல, இஸ்லாமிய பிரச்சாரங்கள் போல, அதே அறிவு எதிர்ப்புத்தன்மை கொண்டவை. விவாதங்களை மறுப்பவை. நம்பிக்கைகளில் ஊன்றியவை. தங்கள் சொந்த துண்டுப்பிரசுரங்களை மட்டுமே வாசித்து அதற்குள்ளேயே உழலும் மனநிலையை உருவாக்குபவை. முந்தையவை பிற்போக்கு என்றும் இது முற்போக்கு என்றும் முத்திரையடிக்கப்பட்டிருக்கும் அபத்தத்தை மட்டுமே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

ஜெ

வினவு

முந்தைய கட்டுரைபடித்துறை
அடுத்த கட்டுரைகும்பமுனியின் காதல்