‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68

ele1சோமதத்தரின் தேர் விசைகொண்டு களமுகப்பு நோக்கி சென்றது. பூரி அதைத் தொடர்ந்து தன் தேர் செல்லும்படி ஆணையிட்டான். சோமதத்தரின் தேர் போரிட்டுக்கொண்டிருந்தவர்களை பிளந்து வகுந்தபடி சென்றது. பாம்புசென்ற புல்விரிவுத் தடம்போல தேரின் பாதை தெரிந்தது. அதனூடாக தன் தேரை விரையச்செய்தான் பூரி. சோமதத்தரின் தேரின் விரைவு பூரிக்கு வியப்பேற்படுத்தியது. தேரில் ஊர்பவரின் உளவிரைவை தேர்ச்சகடங்களும் கொள்கின்றன. ஒருகணம்கூட பிந்தக்கூடாதென்று ஏன் தோன்றுகிறது? ஒழுகும் கலத்தில் நீர் கொண்டுசெல்பவரைப்போல் ஏன் விரைவுகொள்கிறார்? சினமும் வஞ்சமும் அத்தனை விரைவாக ஒழுகிவிடக்கூடியவை என அவரே அறிந்திருக்கிறாரா?

அவரால் சாத்யகியை எதிர்கொள்ளமுடியாது என பூரி அறிந்திருந்தான். அவனும் அவரும் இணைந்தாலும்கூட சாத்யகியை எதிர்த்து வெல்லமுடியாது. அவர்களின் போர்முறைகள் வேறு. அங்கே மலைகளில் மிகமிக அரிதாகவே போர்கள் நிகழ்ந்தன. மலையிறங்கிவரும் தொல்குடியினர் சிலபொழுது ஊர்களை தாக்குவதுண்டு. அவர்களை எதிர்கொள்வதற்காகவே பால்ஹிகர்கள் போர்க்கலை பயின்றார்கள். மற்றபடி அவர்கள் அறிந்த விற்கலை என்பது மலைச்சரிவுகளில் மான்களை வேட்டையாடவும் மேய்ச்சல் விலங்குகளை வேட்டையாட வரும் ஓநாய்களை எதிர்ப்பதற்கும் மட்டுமே. எதிரில் வில்லுடன் நில்லாத உயிர்களுடன் போரிடுவதற்கானது நம் முன்னோரின் விற்கலை என்று பூரிசிரவஸ் அதை ஏளனம் செய்வதுண்டு.

இரண்டு தலைமுறையினருக்கு முன் அவனுடைய முதுதந்தை பூரிசிரவஸ் மலைமக்கள் ஏன் ஊர்களை தாக்குகிறார்கள் என்பதை கண்டறிந்தார். கன்றுகளுக்கு நோய்வந்து இறந்தாலோ பனியால் விளைநிலங்கள் அழிந்தாலோ அவர்கள் வறுமைகொண்டு உணவில்லாமல் ஆகும்போது மட்டுமே அவர்கள் மலையிறங்கி வந்து ஊர்களை தாக்குகிறார்கள். அவர் மலைமக்களிடம் தூதர்களை அனுப்பி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். மலைகளில் உணவில்லாமல் ஆகுமென்றால் அவர்கள் மலையுச்சியில் மூன்றுநாட்கள் புகையிடவேண்டும். அவர்களுக்குரிய உணவு மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டு மேலே சிவப்புக்கொடி பறக்கவிடப்படும். இரவில் அவர்கள் வந்து எடுத்துச்செல்லலாம்.

அமைச்சர்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “இதுவே எளிய வழியென அவர்கள் எண்ணக்கூடும். உணவை முழுமையாகவே நம்மிடமிருந்து பெற எண்ணக்கூடும்.” ஆனால் பூரிசிரவஸ் உறுதியாக இருந்தார். “மலைமக்களின் ஆணவம் உணவை அவ்வாறு கொள்வதை ஒருபோதும் ஏற்கச்செய்யாது. கொள்ளையிட்டு கொண்டுசெல்லும் உணவை அவர்கள் உண்பதுபோல் இவ்வுணவை மகிழ்வுடன் உண்ணமாட்டார்கள். உணவை நாம் அளித்த பின்னரும் கொள்ளையிடுவார்கள் என்றால் அதையும் அவர்களின் அகச்சான்று ஏற்றுக்கொள்ளாது.” அவர் சொன்னதே நிகழ்ந்தது. மலைமக்கள் கொள்ளையிடுவது முற்றாக நின்றது. அடுத்த நூறாண்டுகளுக்குள் பன்னிருமுறை மட்டுமே அவர்களுக்கு உணவளிக்கவேண்டியிருந்தது.

மலைமக்களை பால்ஹிகர் தூயவர்கள் என நம்பினர். நிகர்நிலத்து மக்களைவிட தாங்கள் தூயவர்கள் என்பதனாலேயே உச்சிமலைமக்கள் தங்களைவிடத் தூயவர் எனக் கருதினர். அவர்கள் வெண்பனிநிறமும் நீலக்கண்களும் கொண்டிருந்தனர். பனியை போர்வையெனப் போர்த்திக்கொண்டு துயில்பவர்கள் அவர்கள் என தொல்கதைகள் கூறின. மலைக்குடிகளுக்கு உணவளிக்க பால்ஹிகர் விரும்பினர். ஆகவே மலையடிவாரங்கள் அனைத்திலும் மலைத்தெய்வங்களுக்கான ஆலயங்கள் கட்டப்பட்டன. அங்கே ஒவ்வொரு நாளும் சிறிதளவு உணவு பரிமாறப்பட்டு அவர்களுக்காக காத்திருந்தது. அதுவே சடங்கென்றாகியது. ஆண்டுக்கொருமுறை மலைமக்களுக்கு உணவூட்டும் விழாவென மாறியது. மலைவிருந்துக்கு மலைக்குடிகள் தங்கள் மயிராடைகளுடன், கொம்புத்தலையணிகளுடன், குலக்கோல்களுடன் வந்திறங்கினர். உண்டு, குடித்து, களியாடிச் சென்றனர். வரும்போது மலைக்கு மேலிருந்து மயிராடைகளையும் எலும்புச்செதுக்கு அணிகளையும் பரிசுகளாகக் கொண்டுவந்தனர். ஒளிரும் அருமணிகளை அள்ளிக்கொண்டுவந்து அளித்தனர். அவர்களுக்குப் பரிசாக வேட்டைக்கத்திகளையும் அம்புகளையும் அளித்தனர் பால்ஹிகர்.

மலைமக்கள் உணவுக்காக வருவது ஒழிந்ததும் பால்ஹிகர்களின் விற்கலையும் அழியலாயிற்று. ஆனால் கீழிருந்து வணிகர் மேலே வரத் தொடங்கினர். அவர்களின் தடம்பற்றி கொள்ளையரும் சிறுபடையினரும் மேலே வந்தனர். அவர்களிடமிருந்து ஊர்களைக் காக்க இளையோருக்கு விற்கலை கற்றுக்கொடுக்கப்பட்டது. மத்ரநாட்டிலிருந்தும் சௌவீரத்திலிருந்தும் பயிற்சியாளர்களை வரவழைத்து விற்பயிற்சி அளித்தனர். ஆனால் பால்ஹிகர்களின் விற்கலை என்பது உயர்ந்த மலைமுடிகளின்மேல் ஒளிந்து அமர்ந்தபடி கீழே ஆழத்தில் அசைந்துவரும் இலக்கை நோக்கி அம்பைச்செலுத்துவதாகவே அமைந்தது. அல்லது புரவியில் விசையுடன் சரிவில் பாய்ந்திறங்கியபடி கீழிருந்து மேலே வருபவர்களை அம்புகளால் தாக்குவது. அவர்களின் இலக்குகள் பெரும்பாலும் பிழைப்பதில்லை. ஆனால் அவர்களால் மலையுச்சி நோக்கி அம்பு விட இயலாது. விண்ணில் பறக்கும் பறவைகளை வீழ்த்த முடியாது. பால்ஹிகர்களின் அம்புகள் ஒருபோதும் மேல்நோக்கி எழாது என்னும் சொல் மலைக்குடிகளிடையே புழக்கத்திலிருந்தது.

அவன் குடியில் பூரிசிரவஸ் மட்டுமே படைக்கலங்கள்மேல் ஆர்வம்கொண்டிருந்தான். வில்லுக்குமேல் வாளும் பயின்றான். சலன் தேவையான அளவுக்கே படைக்கலப்பயிற்சி எடுத்துக்கொண்டான். அவனுடைய படைக்கல ஆர்வம் சோமதத்தரை வியப்புறச் செய்தது. “நீ வேட்டைக்காரனாக வாழப்போகிறாயா என்ன?” என்று இளமைந்தனிடம் அவர் கேட்டார். “நான் நிலமிறங்கிச் செல்லப்போகிறேன். விரிந்திருக்கும் நிகர்நிலத்தில் என் நகரை அமைக்கவிருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நிகர்நிலமா? அங்கே நாமறியா நஞ்சுகள் நிறைந்துள்ளன. மைந்தா அறிக, வெண்மை அமுது! நீலமே நஞ்சு. கீழ்நிலத்தை நோக்கு, அது நீலத்தால் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் காற்றில் நோய்நஞ்சு உள்ளது. அங்கிருந்து வரும் அனைத்துப் பொருளிலும் நஞ்சுள்ளது என்று நம் முன்னோர் நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.”

பூரிசிரவஸ் “ஆனால் இங்குள்ள நதிகள் அனைத்தும் அந்நிலத்தை நாடியே செல்கின்றன. அங்கேதான் அவற்றால் பரவமுடிகிறது. நாம் மலைமுகடில் இருந்தால் இப்படியே சுருங்கியிருப்போம். நாம் மூதாதையர் புதைத்து வைத்த விதை போன்றவர்கள். நாம் முளைத்தெழுந்தாகவேண்டும். கொடிவீசி அந்நிலத்தில் பரவி நிறையவேண்டும்” என்றான். சோமதத்தர் சீற்றத்துடன் “நதிகள்தான் மலையிறங்குகின்றன. இறங்குந்தோறும் அழுக்கடைகின்றன. இந்நதி அங்கு ஒழுகுகையில் அதன் நீரின் ஒரு மிடறை நீ அருந்தினால் உன் உடல் நஞ்சாகும்… அறிவிலி, உச்சிமலைப்பாறை அங்குதான் இருக்கும். அது மலையிறங்கும் கனவுடன் அமைந்திருக்கவில்லை. விண்ணுடன் உரையாடிக்கொண்டிருக்கிறது” என்றார். “தந்தையே, இந்த ஆறுகள் அனைத்தும் அந்த உச்சிமலைப்பாறையின் கனவுதான்” என்றான் பூரிசிரவஸ். “நான் உன் ஆசிரியனிடம் பேசுகிறேன். எங்கிருந்து நீ இந்த வீண் எண்ணங்களைக் கற்றாய் என நோக்குகிறேன்” என்றார் சோமதத்தர்.

பூரிசிரவஸ் வெறியுடன் படைக்கலம் பயின்றான். “படைக்கலங்களுக்கு உங்களை ஒப்புக்கொடுக்கிறீர்கள், மூத்தவரே” என்றான் பூரி. “இவ்வண்ணம் நம்மை அதற்கு அளித்தால் அது நம்மை வடிவமைக்கும் என்பார்கள்.” பூரிசிரவஸ் “இவ்வுலகில் உள்ள ஏதேனும் ஒன்றுக்கு தன்னை ஒப்புக்கொடுக்காதோர் எவர்? வளைதடிக்கு நம்மை வழங்காமல் அது நம்மை நாடி திரும்பிவருமா என்ன?” என்றான். “ஆனால் வளைதடி இங்குள்ளது. இந்த வாளும் வில்லும் இங்குள்ளவை அல்ல. அவை அங்கு வார்க்கப்பட்டவை, அவர்களின் உளச்சொற்களிலிருந்து எழுந்தவை. நான் வாளை கையிலெடுக்கையிலேயே அவற்றை ஆக்கிய உள்ளத்தின் எண்ணத்தையே தொடுகிறேன் என உணர்கிறேன்” என்றான் பூரி.

பூரிசிரவஸ் நகைத்து “உண்மை… ஆனால் அந்தச் சொல் அவன் நம்மை ஆள்வதற்குரியது மட்டும் அல்ல. அதிலேறிச் சென்று நாம் அவனை வெல்லக்கூடும். தன்னை தவமிருந்து அடைபவர்களுக்கு தெய்வமென்றாகி அருள்வதே சொல்லின் இயல்பு” என்றான். “அறிக, இவை சிறகுகள்போல! அனைத்துப் பறவைகளும் சிறகுகளை தவம்செய்து பயின்றே சூடிக்கொள்கின்றன. பின்னர் சிறகுகளில் ஏறி வானை வெல்கின்றன.” எப்போதும் அங்கிருந்து கிளம்பும் முகத்தையே பூரிசிரவஸ் கொண்டிருந்தான் என பூரி நினைவுகூர்ந்தான். அக்களத்திலிருந்து அவன் பால்ஹிகபுரிக்கு மீண்டிருக்கமாட்டான். அவன் உள்ளம் தேடிக்கொண்டிருந்த பிறிதொரு இடத்திற்குச் சென்றிருப்பான்.

போர்முனையில் சோமதத்தர் தன் அம்புகளை ஏவியபடி இணைந்துகொண்டபோது அவருக்கு இணையாகச் சென்று நின்று அவனும் போரிடத் தொடங்கினான். திரிகரன் சோமதத்தரின் பின்புறம் காக்க அவருக்கு இடப்பக்கத்தை உத்தண்டன் காத்தான். அன்று சோமதத்தரின் அம்புகளில் விசை ஏறி ஏறி வந்தது. அவர் நிலத்திலிருந்து வண்டுகள்போல் ஊர்ந்து எழுந்த கிராதர்களை அம்புகளால் வீழ்த்தினார். வானிலிருந்து விழுந்து தாக்கிய இடும்பர்களை அவர்கள் மண்ணில் விழுந்து எழுவதற்கு முந்தைய கணத்தில் தாக்கிக் கொன்றார். பூரி ஒவ்வொரு முறை அவர் அம்புகள் சென்று தைக்கும்போதும் உடல் அதிர்ந்தான். அறியாத மக்கள். கண்டிராத கரிய உடல்கொண்டவர்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன பகைமை? அவர்கள் அன்னை வயிற்றில் பிறந்து முலையுண்டு வளர்ந்தெழுந்தது இப்படி எங்கள் அம்புகளில் சாவதற்கு என்றால் எங்களை ஆள்வது எந்த தெய்வம்? இந்த அறியா மக்களின் அம்புகளால் நாங்கள் வீழ்வதென்றால் மலைகளில் எங்கள் அன்னையரின் கருவை ஆள்கின்றனவா இவர்களின் தெய்வங்கள்?

போர்க்களத்தில் ஓயாதோடும் உள்ளம்போல் தடை பிறிதில்லை என பூரி உணர்ந்தான். அவன் நாணை தளரச்செய்தது அந்த எண்ணப்பெருக்கு. வில்லை வளைவதற்குள் நிமிரச்செய்தது. அம்புகளில் ஏறி குறிபிழைக்க வைத்தது. அவன் அம்புகள் ஒருமுறைகூட இலக்கை அடையவில்லை. ஒருதுளிக் குருதியைக்கூட சிந்தாமல் அவை இருண்ட வானில் இருந்து உதிர்ந்து மண்ணில் விழுந்தபடியே இருந்தன. இந்தக் காரிருள் என் விழிகளுக்கு அயலானது என்று அவன் சொல்லிக்கொண்டான். மலைகளில் வானம் எப்போதும் தன்னொளி கொண்டிருக்கும். அந்த வெளிச்சம் மலைச்சரிவுகளில் எப்போதும் இருக்கும். மெல்லிய விளிம்பாக பாறைகளை துலங்கச்செய்யும். ஓநாய்களின் பிசிர்மயிர்களை ஒளிரச்செய்யும். இங்கே கீழே நீரின் அடிவண்டல் என இருள் தேங்கிக்கிடக்கிறது. இருளில் புழுக்களென இந்த மக்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று தின்றே வாழமுடியும். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டே நெளியமுடியும்.

வெறிக்கூச்சலிட்டபடி சோமதத்தர் தன் தேரை முன்னெடுப்பதைக் கண்டு பூரி கைநீட்டி அவரைத் தொடரும்படி தன் பாகனுக்கு ஆணையிட்டான். சோமதத்தர் எதிரே வந்த சாத்யகியை நோக்கி சென்றார். “நில்! நில்! இழிந்தவனே, நில்!” என்று கூவினார். “என் மைந்தனை நீ கொன்றாய். அதற்கு முன் நீ அறமென்பதைக் கொன்றாய்… உன்னைக் கொல்லாமல் களம்மீண்டால் நான் ஆண்மகனல்ல!” சாத்யகி திரும்பி நோக்கி ஏளனமாக நகைத்து “கள்வெறியில் இருக்கிறீர்கள் முதியவரே, செல்க!” என்றான். “கீழ்மகனே, கீழ்மகனே!” என வீறிட்டலறியபடி சோமதத்தர் தன் அம்புகளால் அவனை அறைந்தார். சாத்யகியின் தேரில் அவர் அம்புகள் சென்று தைத்தன. அவன் விழிகள் மாறுபட அதை உணர்ந்தவனாக தேர்ப்பாகன் அவன் தேரை சோமதத்தரை நோக்கி கொண்டுவந்தான். சாத்யகியின் அம்புகள் சோமதத்தரின் தேரின் தூண்களில் வந்து அறைந்து நின்றன. அவர் கவசங்கள் உடைந்தன.

“செல்க! செல்க!” என்று பூரி தன் பாகனை ஊக்கி அவர் அருகே சென்று நின்று தானும் சாத்யகியை தாக்கினான். சாத்யகி அவன் வந்ததையோ போரிடுவதையோ அறிந்திருப்பதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் கைகளிலிருந்து எழுந்த அம்புகள் மிக எளிதாக பூரியின் அம்புகளை முறித்தெறிந்தன. பூரி அதனால் சீற்றம்கொள்வதற்கு மாறாக உளம்சோர்வுற்றான். “தந்தையே, திரும்புக… நாம் நம் எதிர்ப்பை காட்டிவிட்டோம்” என்று அவன் கூவினான். “இது பொருந்தாப் போர்… இது நம் களமே அல்ல. தந்தையே, திரும்புக… தந்தையே!” ஆனால் அவன் சொற்கள் மேலெழவில்லை. சோமதத்தரின் தலைக்கவசம் உடைந்தது. அவர் நெஞ்சக்கவசமும் உடைய அதில் ஓர் அம்பு ஆழப்பாய்ந்தது. அவர் அலறிச்சரிய பின்னால் நின்றிருந்த திரிகரன் ஓலமிட்டபடி அம்பு தொடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தான். சாத்யகியின் பிறைமுனை அம்பு அவன் தலையை அறுத்தது. அவன் உடல் முன்னால் பாய்ந்து தேரிலிருந்து சாத்யகியின் முன் விழுந்தது.

சோமதத்தர் கூச்சலிட்டபடி தன் வில்லை மீண்டும் எடுத்து அம்புதேர்வதற்குள் அடுத்த அம்பால் அவர் தலையை சாத்யகி துணித்தான். அம்பு கடந்துசெல்ல சோமதத்தரின் தலை ஓசையுடன் தேர்த்தட்டில் விழுந்து நிலத்திற்குச் சரிந்தது. அந்த ஓசை பூரியின் நெஞ்சை அறைய அவன் உடல் உதறிக்கொண்டது. கைகால்கள் இழுத்து அகல அவன் தேர்த்தட்டில் மல்லாந்து விழுந்தான்.

ele1பூரி விழித்துக்கொண்டபோது படைகளின் பின்னணியில் இருந்தான். பேரோசை அவனைச் சூழ்ந்திருக்க அவன் அதை ஒரு விழவுக்களம் என உணர்ந்தவனாக எழுந்துகொண்டு “என்ன நிகழ்கிறது? மலைமக்களா?” என்றான். மலையூட்டு விழாவின்போது மலைகளிலிருந்து தொல்குடிகள் மலைமாடுகளில் ஏறி கூச்சலிட்டபடி ஒரே பொழுதில் ஆற்றங்கரை நோக்கி இறங்குவார்கள். அவர்களைக் கண்டதும் ஊர் மக்கள் கைகளையும் படைக்கலங்களையும் வீசி கூவி ஆர்ப்பரிப்பார்கள். ஊளையோசைகளும் கூச்சல்களும் முரசொலிகளும் கொம்புகளும் குழல்களுமாக பால்ஹிகபுரி பெருமுழக்கமிடும். அவன் முன் அமர்ந்திருந்த உத்தண்டன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முகத்தைப் பார்த்ததுமே உணர்ந்துகொண்ட பூரி எழுந்து நின்றான்.

உத்தண்டன் “நாம் இப்போதே கிளம்புவோம், இளவரசே” என்று சொன்னான். “நான் இங்கே கேட்டேன். இங்குள்ள முறைமைப்படி தந்தையருக்கு மைந்தர் எரிகடன் இயற்றவேண்டும் என்பதில்லை. அனைவருக்கும் ஒரே சிதை, அதை அரசரின் கையிலிருந்து வரும் நெருப்பே பற்றவைக்கிறது.” பூரி ஒன்றும் சொல்லாமல் சிவந்த கண்களால் வெறுமனே நோக்கினான். “இது நம் நிலம் அல்ல. இங்கே நாம் நம் சடங்குகளைச் செய்வதும் இயலாது. நீங்கள் தந்தையின் உடலுக்கு எரிகடன் இயற்ற இங்கே நீடிக்கவேண்டியதில்லை” என்று உத்தண்டன் தொடர்ந்தான். “நாம் இங்கிருந்து முடிந்தவரை விரைவாகக் கிளம்புவதே சிறந்தது. நம் முன்னோர் சொன்னதன் பொருள் என்ன என்று இன்றுதான் உணர்கிறேன். முன்னோர் இங்கே நிகர்நிலத்தில் நஞ்சு நிறைந்திருப்பதாகச் சொன்னார்கள். நோயின் நஞ்சு மட்டும் அல்ல அது. செயலெனும் தொடரின் நஞ்சு. இங்கே ஒன்றைச் செய்பவன் நூறில் சிக்கிக் கொள்கிறான். ஒருபோதும் சென்ற பாதையில் இருந்து அவனால் மீளமுடியாது. எண்ணிய எதையும் ஒழிய முடியாது. இங்கு எவரும் விடுதலையை உணரமுடியாது.”

“இங்கே ஒவ்வொருவரும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். விழைவுகளில், வஞ்சங்களில்… நாம் இதை அறியாது தொட்டுவிட்டோம். அதற்குரிய விலையையும் அளித்துவிட்டோம். இந்த நெருப்பு நம்மை முற்றெரிக்கும்வரை நாம் காக்கவேண்டியதில்லை. உலையில் இட்ட கையை பின்னிழுத்துக்கொண்டு விலகி ஓடி குளிர்நீரில் மூழ்கவைத்து நோய் அகற்றி மீள்வதே அறிவுடைமை. நம் நிலம் நமக்காகக் காத்திருக்கிறது. அங்கே சென்று நம் வாயில்கள் அனைத்தையும் மூடிக்கொள்வோம். இனி நிகர்நிலத்திலிருந்து ஒன்றும் அங்கே வந்துசேர வேண்டியதில்லை. பொன்னும் மணியும் அணியும் துணியும் எதுவும் நமக்குத் தேவையில்லை. ஒரு சொல்கூட இங்கிருந்து அங்கே எழவேண்டியதில்லை. நாம் மீளமுடியும். நம் முன்னோர் நமக்கு உருவாக்கி அளித்த வாழ்க்கை அங்கே நமக்காகக் காத்திருக்கிறது.”

இடையில் கைவைத்தபடி நின்ற பூரி நடுங்கிக்கொண்டிருந்தான். உத்தண்டன் “இளவரசே, இனி எண்ணுவதற்கு ஏதுமில்லை. இந்த மானுடரின் போரில் நாம் இயற்றுவதற்கு ஒன்றுமில்லை. இப்போரை இவ்வடிவில் இங்கே காண்பதுதான் நமக்கு திகைப்பளிக்கிறது. நிகர்நிலத்தில் எங்கும் எப்போதும் போர்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றார்கள் நமது முன்னோர். அது உண்மை. நாம் வாழ்வது வேறொரு உலகில்” என்றான். “நான் சென்று புரவிகளை ஒருக்கும்படி ஆணையிடுகிறேன். இக்கணமே இங்கிருந்து கிளம்புவோம். இங்கு நின்றிருக்கும் ஒவ்வொரு கணமும் இந்த மண் நம்மை வேர்களால் பின்னி சிறைப்பிடித்துக்கொண்டிருக்கிறது.” பூரி ஒன்றும் சொல்லாததைக் கண்டு “நான் வீரர்களுக்கு ஆணையிடுகிறேன்” என்று அவன் திரும்ப பூரி தணிந்த குரலில் “அவர்கள் கிளம்பட்டும், நான் வர எண்ணவில்லை” என்றான்.

“இளவரசே” என்றான் உத்தண்டன். “எந்தை தன் மைந்தருக்காக பழிநிகர் செய்யச் சென்றார். எனில் அவருக்காக நன் பழிநிகர் செய்யவேண்டும் என்றே அவர் விரும்பியிருப்பார்” என்றான் பூரி. “இதென்ன பேச்சு…” என ஊடே புகுந்த உத்தண்டனை கையமர்த்தி பூரி சொன்னான் “எந்தை அதை விரும்பியிருப்பார் என தோன்றிவிட்டது. இல்லை என சொல்லி நிறுவுதல் எளிது. இக்களத்திலிருந்து நீங்கிய பின்னர் எந்தை அதை விரும்பினாரா எனும் ஐயம் எழுந்தால் என் வாழ்க்கை துயரும் சிறுமையும் நிறைந்ததாகிவிடும். நான் செய்வதற்குப் பிறிதொன்றுமில்லை, இங்கே நின்று பொருதி உயிர்விடுவதைத் தவிர. தந்தைக்காக பழிகொள்ள நான் வந்துள்ளேன் என அந்த யாதவனிடம் சொல்லும் ஒரு தருணமன்றி நான் எதிர்பார்க்க ஏதுமில்லை.”

உத்தண்டன் நீள்மூச்சுடன் உடல்தளர்ந்தான். “நீர் படைவீரர்களுடன் கிளம்புக! அங்கே என் இளையவனிடம் என் ஆணையைச் சொல்க! இனி பால்ஹிகநாடு நிகர்நிலத்துடன் எந்த உறவையும் கொள்ளலாகாது. அனைத்து வணிகப்பாதைகளும் பெரும்பாறைகளால் முழுமையாக மூடப்படவேண்டும். நிகர்நிலத்து மக்களிடமிருந்து பெற்ற அனைத்துப் பொருட்களும் அழிக்கப்படவேண்டும். பொன்னும் மணியும் முழுமையாகவே அரசக்கருவூலத்திற்கு அளிக்கப்படவேண்டும். முழுமையாக, எச்சமின்றி, பால்ஹிகபுரி நம் பழைய வாழ்க்கைக்கே திரும்பவேண்டும்.” உத்தண்டன் தலை வணங்கினான். “இது என் ஆணை, நானும் எந்தையும் என் இரு உடன்பிறந்தவரும் நம் குடியின் எந்தக் கதையிலும் சொல்லப்படலாகாது. எங்களுக்கு அங்கே நடுகல்லோ நினைவிடங்களோ கூடாது. ஆண்டுதோறும் அளிக்கப்படும் நீர்க்கடன்களில் எங்கள் பெயரை எங்கள் கொடிவழி வந்த எவரும் சொல்லலாகாது. இங்கே இவ்வண்ணம் நாங்கள் முற்றாக முடிந்துவிடவேண்டும்.”

உத்தண்டன் “என்ன சொல்கிறீர்கள்… இது…” என்று பதைக்க அவனைத் தடுத்து “இது என் ஆணை… நாங்கள் முற்றாக மறக்கப்பட்டாலொழிய பால்ஹிகபுரி மீண்டும் பழைய மலைவாழ்வுக்குத் திரும்பாது” என்றான். உத்தண்டன் “ஆனால்…” என சொல்லத் தொடங்க அதை உணர்ந்துகொண்டு “ஆம், மூத்தவர் கட்டிய கோட்டை அங்கிருக்கும்… அதையும் நகரையும் முழுமையாகவே கைவிடும்படி சொல்க! அங்கிருந்து நம் குடி ஆற்றின் கரையினூடாக மேலும் மலைச்சரிவில் ஏறிச்சென்று புதிய ஊர் ஒன்றை அமைத்துக்கொள்ளட்டும். அந்த ஊரிலிருந்து நோக்கினால் இன்றைய பால்ஹிகபுரி தெரியக்கூடாது. ஊரிலிருந்து நம் தொல்தெய்வங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சென்றபின் ஒருபோதும் இந்த நகருக்கு திரும்பலாகாது.”

“இருமுறை பெருவெள்ளமும் பனிப்பொழிவும் எழுந்தால் கோட்டை மண்ணுக்குள் சென்றுவிடும். ஒருதலைமுறைக்காலம் சொல்லொழிந்தால் நம் உள்ளத்திற்குள்ளும் மறைந்துவிடும்… கைவிடுக! சோமதத்தர் பிறக்கவே இல்லை எனக் கொள்க! அதற்குப் பின் நிகழ்ந்த காலத்தை முழுமையாகவே உதறிவிடுக… என் ஆணை இது.” உத்தண்டன் “நான் தங்களுடன் போருக்கு வந்து உயிர்விடவேண்டும் என விழைகிறேன். வீரனாக இதைக் கோரும் உரிமை எனக்கு உண்டு” என்றான். “ஆம், ஆனால் அதை நான் அளிக்கப்போவதில்லை. உமது சொற்களில்தான் என் ஆணை அங்கே எழவேண்டும்… கிளம்புக!” என்றான் பூரி. உத்தண்டன் கண்கள் நீர்நிறைந்திருக்க தலையில் மெல்லிய நடுக்கு ஓடிக்கொண்டிருக்க வெறுமனே நின்றான். “செல்க!” என்றான் பூரி. உத்தண்டன் தலைவணங்கி தளர்ந்த நடையுடன் புரவிக்காவலரை நோக்கி சென்றான்.

பூரி திரும்பி அப்பால் நின்ற ஏவலனை அருகழைத்து “என் தேர் ஒருங்கட்டும், நான் மீண்டும் களம்புகவிருக்கிறேன்” என்றான். ஏவலன் விரைந்தோடினான். பூரி தன் இடைக்கச்சையைக் கட்டி இறுக்கிக்கொண்டு காத்திருந்தான். தேர் வந்து நின்றது. பூரி அதில் ஏறிக்கொண்டு ஆவக்காவலனிடம் வில்லுக்காக கைநீட்டினான். அவன் தந்த வில் பலமுறை போருக்குச் சென்று மீண்டது. இறந்த வீரன் ஒருவனின் கையிலிருந்து எடுக்கப்பட்டது. ஆகவே அதில் ஈரக்குருதி வழுக்கியது. நன்று என பூரி புன்னகைத்துக்கொண்டான். “செல்க!” என்று ஆணையிட்டான். “போர்முனைக்குச் செல்க… யுயுதானரைச் சென்று எதிர்க்கவேண்டும் நான்.” பாகன் அவனை திரும்பி நோக்கினாலும் சொல்லெடுக்காமல் தேரை போர்முனை நோக்கி ஓட்டிக்கொண்டு சென்றான்.

கடோத்கஜனின் படைகளின் தாக்குதல் உச்சவிசை கொண்டிருந்தது. கௌரவப் படை காற்றில் உலையும் காடு என கொந்தளித்துக்கொண்டிருந்தது. எங்கும் குருதியின் வீச்சம் நிறைந்திருப்பதை பூரி உணர்ந்தான். அதனூடாக தேரில் செல்கையில் விழிகளால் சாத்யகியை தேடிக்கொண்டிருந்தான். அவன் மேல் குருதித்துளிகள் மழைபோல பெய்துகொண்டிருந்தன. அவன் தலையிலிருந்து வழிந்து மூக்கு நுனையில் துளித்துச் சொட்டின. விண்ணிலிருந்து இடும்பர்களும் மண்ணிலிருந்து கிராதர்களும் தோன்றிக்கொண்டிருந்தனர். பின்னிரவு கடந்துவிட்டிருந்தபோதிலும்கூட காற்றில் வெம்மை இருந்தது. குருதியின், வியர்வையின் வெம்மை என பூரி எண்ணிக்கொண்டான். இந்தப் போரில் அவனை நான் சந்திக்காமல் உயிர்துறக்கலாகாது. தெய்வங்களே, அறியாத அரக்கன் ஒருவனால் நான் கொல்லப்படலாகாது. அவன் தொலைவிலேயே சகுனியுடன் போரிட்டுக்கொண்டிருந்த சாத்யகியை பார்த்துவிட்டான். தன் தேரை சாத்யகியை நோக்கி செலுத்த கையசைவால் ஆணையிட்டான்.

இரு கைகளும் சுழன்றுகொண்டிருக்க தேரில் வெறியாட்டெழுந்ததுபோல் போரிட்டுக்கொண்டிருந்த சாத்யகி பூரி அணுகுவதைக் கண்டான். அவன் முகத்தில் கசப்பு நிறைந்த சிரிப்பு எழுவதை பூரி கண்டான். அந்த இருளில் உண்மையில் முகம் நிழலுருவாகவே தெரிந்தது. ஆனால் அதிலும் உணர்ச்சிகள் எழுந்தன. உணர்ச்சிகளை மானுட உள்ளம் அடையாளம் கண்டுகொள்கிறது. மிகச்சிறு அசைவுகளில். நிழலிலேயே ஒருவர் கொண்ட சினம் தெரிவதுபோல. இந்த எண்ணங்களே என்னை போரிலிருந்து விலக்குகின்றன. நான் இப்போது இவனிடம் சொல்லியாகவேண்டும். நான் பழிநிகர் செய்ய வந்துள்ளேன் என்று. பூரி சாத்யகியை நோக்கிச் சென்று தொடர்ந்து மூன்று அம்புகளை சாத்யகியை நோக்கி செலுத்தினான். அவற்றை திரும்பி நோக்காமலேயே காற்றில் உடைத்தெறிந்த சாத்யகி “செல்க!” என்று கூவியபடி கைகாட்டினான்.

“யாதவனே, என் தந்தையின் பொருட்டு உன்னிடம் பழிநிகர் செய்ய வந்துள்ளேன்” என்றான் பூரி. ஆம், சொல்லிவிட்டேன். இச்சொல்லை சொல்வதற்காகவே இப்புவியில் பிறந்தேன். இதுவரை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் எதையும் இயற்றியதில்லை. சாத்யகி சலிப்புடன் தலையை அசைத்தபடி அம்புகளால் அவனை அறைந்தான். அவன் கொடியையும் தேர்மகுடத்தையும் உடைத்தான். அவன் கவசங்களை உடைத்துவீசினான். அவனை அச்சுறுத்தி திருப்ப முயல்கிறான் என்று தெரிந்தது. பூரி மேலும் மேலும் அம்புகளை அவன்மேல் எய்தபடி அணுகிச் சென்றான். அம்பெல்லையைக் கடந்து அருகணைந்தான். சாத்யகி தேரைப் பின்னிழுத்து தன்னை போரிலிருந்து விலக்கிக்கொள்ள முயன்றான். பூரி “நில்… என்னிடம் போரிடு… உன் குருதியைக் கொள்ளவே வந்தேன்” என்றான்.

ஆனால் ஒரு சிறு அசைவில் அவனுக்கு சாத்யகியின் எண்ணம் தெரிந்துவிட்டது. அவன் கை எழுந்ததை, நீளம்பை தொட்டு எடுத்ததை, நாண் விலகி விரிய வில் முறுகி வளைந்ததை, விம்மலோசையுடன் அம்பு எழுந்து சற்றே வளைந்து அணுகி தன் நெஞ்சில் இறங்கி மறுபுறம் சென்று தன்னை தேரின் மரத்தட்டுடன் சேர்த்து அறைந்ததை அவன் உணர்ந்தான். அந்த ஒருகணத்தில் அவன் தன் மலைநாட்டின் இனிய குளிரில் ஒளிநிறைந்த பனிமலை முகடுகளை நோக்கியபடி சரிந்திறங்கும் ஆற்றின் ஓசையைக் கேட்டபடி அமர்ந்திருந்தான். மலைநிழல் பிறிதொரு மலைநோக்கி சென்றது. மலை மலையைப் புணர்வது என்பார்கள் பால்ஹிகர்கள். பேருருவங்களின் புணர்வு. பெருங்காமம். நிழல்கொள்ளும் மலை அன்னை, ஒளிகொண்ட மலை தந்தை. புணர்ச்சிக்குப் பின் அன்னை ஒளிகொண்டு எழுந்தாள். கண்கூசும்படி ஒளி வானில் பரவியிருந்தது. மலைகளுக்கு மேலிருந்த வெண்பனி கூர்முனை என வானை நோக்கி நீட்டியிருந்தது. அங்கே ஒரு சொல்லும் இல்லை என்று அன்னையர் சொல்வதுண்டு. அங்கே சென்றவர்கள் முற்றாக சொல்லை இழப்பார்கள். ஒரு சொல்கூட இல்லாத வெறுமை. இனிய வெறுமை. தெய்வங்கள் திளைக்கும் வெறுமை.

முந்தைய கட்டுரைசென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள்
அடுத்த கட்டுரைவலைத்தளமும் விளம்பரமும்