இருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு

mathi

மத்தி [கவிதைத்தொகுதி ] வாங்க 

இலக்கியம் எங்கு, என்ன வகையில்,எதை நோக்கி தொழில்படுகிறது என அவதானித்தால் அதன் அடிப்படையை இவ்வாறு வரையறை செய்யலாம். சித்தம் எனும் அமைப்பின் மீது ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷுப்தி,துரியா எனும் அலகுகளின் தொகை கொண்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் மனத்துக்கு, மொழி எனும் படிமப் பெருவெளியே சாரமாக இலங்குகிறது. இந்த சாரம், நாம் கொண்டிருக்கும் உடல் எனும்  ஜடம் கொண்டு , புலன்கள் வழியே புறவயமான தூல ஜடப் பிரபஞ்சத்துடன் நிகழ்த்தும்  முரண் இயக்கம் வழியே கிடைத்ததாகஇருக்கிறது.

இலக்கியம்,  நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த மனதில்,மொழிவழியே  ஸ்வப்னத்துக்கான [தர்க்கங்கள் இளகிய] தனி மொழியில், அந்த மொழி கிளர்த்தும் கற்பனையை பாதையாகக் கொண்டு, ஷுஷூப்தி நிலையை ஊடறுத்து,ஜாக்ரத் எனும் தளம் கொண்ட ஆழம் வரை செல்ல முனைகிறது. சத் சித் ஆனந்தம் என்கிறது மரபு. இந்த ஆனந்தத்தை அடைய, மனம் எனும் இயக்கத்தை கடந்து சித்தம் எனும் ஆனந்த அமைப்பை அடைய  யோகம் தியானம் பக்தி என பல முறைகள் இருக்க, இலக்கியமும் கலைகளும் கற்பனையை அந்த பாதையின் வாகனமென  கையாளுகிறது.  இலக்கியகர்த்தாவோ, இலக்கிய வாசகனோ ஒரு ரமணர் கிடையாது. அனால் ரமண நிலை எதுவோ, அதை பாவித்துக் கொள்ளும் வகைமையை, இலக்கிய இன்பம் அளிக்கிறது. நிகர் வாழ்வின்  ரமணநிலையை சூரியன் எனக் கொண்டால், இலக்கியம் பாவனை வழியே அளிக்கும் ரமண நிலையை, புல் நுனி மேல்,பனித்துளிக்குள் பிரதிபலிக்கும் சூரியன் எனக் கொள்ளலாம்.

அமுதம் வேண்டி கடையப்பட்ட பாற்கடலில் முதலில் எழுந்தது நஞ்சு என்கிறது புராணம். யோக தியான மரபிலும் அது அவ்வாறே. இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்க என்று பிரார்த்திக்கிறது  ஒரு ஆதிக் கவி உள்ளம். அமுதம் எழுவதற்கு முன்பான நஞ்சு, அமுதம் என ஒன்றில்லை என நம்பும் அளவு சமன் குலைக்கக் கூடும். ஒளிக்கு முன்பான இருள், அப்படி ஒரு ஒளியே இல்லை என நம்ப வைப்பதன் வழியே, தனது இருள்  அடர்த்தியை பெருக்கக்கூடும். அத்தகு நஞ்சில், இருளில் இடறி ஸ்தம்பித்து சிதறி  நிற்கும் தன்னுணர்வு ஒன்றின் கலைவெளிப்பாடு என சா.துரை கவிதைகளை வகைப்படுத்த முடியும். தொகுப்புக்குள் ஒரு கவிதைத் தொடரின் தலைப்பே வாழ்வின் விஷத்தன்மை என்பதாகத்தான் இருக்கிறது.

..

நகரின் வெகுநிசப்தமான சப்வே ஒன்றை

கடக்கையில்தான் அதுநடந்தது

உங்களுக்கு இதுமாதிரி நடப்பதில்

அத்தனைபெரிய ஆச்சரியமொன்றும்

இல்லையென்றார்கள்

ஆமாம்

அப்போதுதான் நான் எனது

இடதுகால் கட்டைவிரலால்

எனது இடதுகால் கட்டைவிரலை தொட்டேன்.

உங்களுக்கு இது மாதிரி நடப்பதில் அத்தனை பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை என சொல்பவர் எவர் ? மன நோய் வைத்தியரா? அல்லது ஆத்மீக குருவா? அவர் வசம் இதை சொல்பவர் யார் சித்த பிரம்மையின் முதல் இடரில் முட்டியவனா? இந்த ”தன்னிலை சிதறல்” எனும் அம்சத்தை பீதியூட்டும் வகையில், விளையாடும் வகையில், வித விதமான வடிவங்களில்  கவிதைகளில் நிகழ்த்திப் பார்க்கிறார் சா.துரை.

ஒரு போத்தலை திறக்கிறமாதிதான்

அவன் பிறந்தான்

பின்பொருநாள் போத்தல் உடைகிறமாதிரி சிரித்தான்

யார்யாரோ அவனை பெருக்கி அள்ளி

குப்பையில் வீசினார்கள்

அவன்தான் பிறகொருநாள் என்னிடம் இதைச்சொன்னான்

இந்த வாழ்வில்

சப்தமில்லாமல் புரண்டு படுத்தல்போல

பெரிய அவஸ்தை ஏதுமில்லை .

பிரசவ சிக்கலில் வேக்வாம் சக்கர் வைத்து உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் குழந்தை, ஒரு சாராய போத்தலின் கார்க், அந்த போத்தலின் வாயில் இருந்து எவ்வாறு உறுவப்படுமோ அவ்வாறே தோற்றம்தரும். அவ்வாறு பிறந்தவன். செல்ல மகனின் முதல் சிரிப்பு மிகச்சிறிய கண்ணாடிக் குடுவை விழுந்து உடையும் ஒலி. குடித்து குடித்து போதையில் நினைவுகளை மழுங்கடித்து, மழுங்கடித்த நினைவுகள் வழுவி சித்த பிரம்மையின் முதல் எல்லைக்குள் அடி எடுத்து வைக்கும் சித்திரம். டேபிளில் இருந்து உருண்டு விழுந்து உடைந்த மது பாட்டில், அவனது செல்ல மகனாகி தனது மழலையில் சொல்கிறது, சப்தமில்லாமல் புரண்டு படுப்பதில் நிகழும் அவஸ்தைகளை.

….

என்றாவது ஒரு மலையுச்சி ஏறி நின்று

அவ்வளவுதான் என்று கத்தியிருக்கிறீர்களா

அப்படிக் கத்துவது அவ்வளவானதில்லை

என்று உணர்ந்திருக்கிறார்களா

நேற்று அவன் வெகு உயரமான

காற்றின்மீது ஏறிநின்று

நிலம் பார்த்து

அவ்வளவுதான் என்று உரக்கக்கத்தினான்

அத்தனை பெரிய

துயரமொன்று அங்கு நிகழ்ந்தது

நிலமும்

அவ்வளவுதான் நீ என்று திருப்பிக் கத்தியது.

ஒரு நிலை மாற்றம். சரிவிலிருந்து மேலும் சரிவு என  இத் தொகுதியின்  கவிதைகளில் தொழில்படுகிறது. இந்த நிலைமாற்றத்தை குறிப்புணர்த்த படிமங்களை ஒரு குழந்தையைப்போல,அல்லது முதல் கட்ட நரம்புச்சிக்கல் நோயாளி போல, கலைத்துப்போட்டு ஒன்றை இன்னொன்றாக்கி,ஒரு விளையாட்டுப் போல,பித்துப் போல  ஆடிப்பார்க்கிறார் துரை. வண்ணங்கள் வாசனையாக,வாசனைகள் ஒளிச் சிதறல்களாக, உடல்கள் சொல்லாக, சொற்கள் மௌனத்தின் உடலாக மாற, என வித விதமாக கலைத்து அடுக்கிறது இவரது கவிதை வெளி. இக் கவிதைகளுக்குள் வரும்   மனித உடலே சர்வதோர் டாலி ஓவியத்தின் மனித உடல் போல, பல இழுப்பறைகள் கொண்ட மேஜை போல காட்சி அளிக்கிறது.

இப்படி கலைத்து அடுக்கி இக் கவிதைகள் வழியே மானுடப் பொதுவான துயரங்களை விசாரணை செய்ய முயல்கிறார் துரை. குறிப்பாக மைந்தத் துயர். இரண்டு ஒன்று மூன்றென நடனமாடுபவர்கள் கவிதையில்,சுழன்று ஆடும் பெண், காலத்தில் சுழன்று பின்னோக்கி சென்று விடுகிறாள். அதில் உரையாடலின் ஒரு வரி …

அப்பா நீங்கள் இன்னும் சாகவில்லையா …

ஆம் மகளே .அப்பாக்கள் சாவதில்லை.

இப்படி சாகாவரம் கொண்ட தந்தையர் இங்கே செய்ய வந்தது என்ன என்பதை, பெற்ற குஞ்சை அதன் தலையை உண்ணும் தந்தை ஆந்தை எனும், உக்கிரமான படிமம் வழியே கீறிப் பார்க்கிறது இரண்டு பின்னிரவுகள் கவிதை.  விஷ்ணுபுரம் நாவலில், சித்தனும் சிறுவனும் சுரங்கத்தின் கீழே, குளத்து நீரில் பிரதிபலிக்கும் ராஜ கோபுரத்தை கண்டபடி அமர்ந்திருப்பார்கள். பிரதிபலிக்கும் தலைகீழ் ராஜ கோபுரம்,அது எவ்வாறு தோற்றம் கொள்கிறது எனும் சித்திரம் வரும். அந்த சித்திரம் போல அனைத்தும் கலைந்து கலங்கி தன்னிலை அழிவின், அந்த  அழகியலின் வெவ்வேறு வண்ண பேதங்களை சமைத்துக் காட்டுகின்றன துரையின் கவிதைகள். அறிவுக்கும் இச்சைக்குமான சமரில் மூளையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென அறியாமல் என்ன என்னவோ செய்துபார்க்கிறது,மூளையை இடம் பெயர்த்து அந்த இடத்தை எடுத்துக்கொண்ட ஆப்பிள் ஒரு கவிதையில்.  மற்றொரு கவிதையில் விபத்தில் சிக்கிக்கொள்கிறான் ஒரு ஆப்பிள் வியாபாரி.பயனாக அனைத்தும் கலைந்து, அடிபட்ட ஆப்பிளாக வியாபாரி மாற, போதம் மீண்ட ஆப்பிள்கள் வியாபாரியை கிலோ இவ்வளவு என கூவி விற்கத் துவங்குகின்றன.  வித விதமான ரூபம் கொள்ளும் ஆப்பிள், மேற்கத்திய ஓவியங்களில் இடம் பெறும் ஆப்பிள் போல இவரது கவிதைகளில் இடம்பெற்றாலும், அந்த ஆப்பிள் போல அன்றி, இந்த ஆப்பிள் பல்வேறு தன்னிலைகளின் களனாக மாறிப்போகிறது.

அட்டைப்பட ஓவியத்தில் [ஓவியர் மணிவண்ணன்] உடல் கிழிக்கப்பட்ட செத்த மீனொன்று, அந்த கிழிசலை இழுத்துப் பிடித்து இன்னும் பெரிய பிளவாக ஆக்கும் வண்ணம் கயிறுகள் கொண்டு தளைக்கப்படிருக்கும்.அந்தப் பிளவில் கடல் கொண்ட ஊரொன்றின் சிதிலமடைந்த தேவாலயம் தலைகீழாக இருக்கும். இவர் கவிதைகளில் வரும் கர்த்தர் அந்த தேவாலயத்தில் இருந்தவர். அல்லது அந்த தேவாலயம் விட்டு நீங்கியவர்,அல்லது அந்த தேவாலயத்தில் இருப்பவர். உயிர்த்தெழும் சார்லஸ், தூண்டிலுடன் கர்த்தரை இருபத்தியோரு முறை கடலில் வீசி,நான்கு வாளை மீன்களை பிடிக்கிறார். அந்த நிலத்தின் பெண்,அக் கடலின் கரையில்  இளமையும் வாழ்வும் வீணாக மரமாக, உவர் நிலமாக   காலமெல்லாம் காத்திருக்கிறாள்.

கடற்பாறையொன்றின் மீது

வாழ்வை உலரவைத்தேன்

இரைகிடைக்காத கிழட்டுப் பருந்துகள் வந்தமர்கின்றன

இடைகால மீன்தடைகளில்

படகுகள் கட்டப்படுகின்றன

மீன்குஞ்சுகளும் விஷமிகுந்த

அஞ்சாலைகளும் உரசிப் போகின்றன

ஆண்டுகளாகி உலர்ந்த வாழ்வை

மீட்டெடுக்க வந்த போது

விலாங்கு மீன்பிடி இளைஞனொருவன்

பழுத்த தென்னை ஓலைகளை

பின்னியபடியே சொன்னான்

நல்ல வாழ்வுதான் ஆனால் வீணாய்ப் போகிறது.

….

கடல் பாறையில் உலரவைத்து வீணாய்ப் போகும் இந்த வாழ்வை ஒரு குழந்தை உலகம் போல பல சமயங்களில் சித்தரிக்கிறது சில கவிதைகள். ஒரு கவிதை குழந்தைக் கவிதைகள் போலவே நான்தான் சர்கஸ் கூடாரம் நண்பா, என சர்கஸ் கூடாரத்தின் தன்னுரையாக துவங்குகிறது. மற்றொரு கவிதை இவனோவிச் செய்த உலகின் மிகச் சிறிய மீன் தொட்டிக்குள் வாழும் மீன்களின் குரலில் பேசுகிறது. மீன்கள் பறந்து வந்து கூரை மேல் அமர்கின்றன, கடல் தூண்டில்களை வீசி காகங்களை பிடிக்கிறது, கடல் பிடித்த காகங்கள் காகம் போல் தோற்றம் தரும் மீன்களாகின்றன, மீன்கள் ஆடுகளாகின்றன, ஆப்பிள்கள் பல்லிகள் பாலித்தின் பைகள் என விதவிதமான உருக்கள் உயிர் தன்னிலை  கொண்டு பேசுகின்றன.

காஞ்சுரிங் படத்தில் வரும் பொம்மை போல இந்த படிமங்கள் தோற்றத்தில் குழந்தைக்கு உரிய ஒன்றைக் காட்டி, சாரத்தில் அமானுடமான ஒன்றில் சென்று முட்டி நிற்கின்றன. வண்ணப் பந்துகளின் துள்ளலை பேசத் துவங்கும் கூடாரம், தனது வாயிலிருந்து பிழையாக தவற விட்ட, பார் விளையாடும் பெண் குறித்த சித்திரத்தில் முடிகிறது. மீச்சிறு தொட்டிக்குள் உலவும்,மீச்சிறு மீன்கள், அளவுகளுக்கு வெளியே நிற்கும் பசி குறித்து பேசுகிறது,  கடல் உண்ட காகங்கள் வலை சேரும்போது, பிரளயம் வந்த கடல் பின் வாங்கி கண்காணாமல் சென்று மறைகிறது. காகங்கள் நிலப் பட்சியாகி, கடலற்ற மீனவனை வழிநடத்தி, அவனை வைதரணி நதிக்கரையில் வந்து நிறுத்துகிறது.

கூடாமொன்றினுள் அடுக்கிய

டம்ளர் கோபுரத்தின் மீது

பந்து எறியப்படுகிறது

டம்ளர்கள் சரிகின்றன

துளிமோதி நினைவுகள்

உதிருமே அதுபோல

பெரிய எலும்புத்துண்டை

கெளவிய டாபர்மேனைப்போல துள்ளுகிறான்

எல்லோரும் கைத்தட்டுகிறார்கள்

கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும்

பழையபடி டம்ளர்களை

சோர்வோடு கோபுரங்களாய்

அடுக்கிற கிழவனே

நீதான் நீயேதான்

பழஞ்சேர்த்தி

ஞாபக அழுத்தி

நினைவடர்த்தி

மீள் மனதி.

ஆழ்மன சிக்கலின் சித்திரங்களை, முற்றிலும் புறவயமாக, ஒரு கோப்பை மதுவுக்குள் மிதக்கும் பனிக்கட்டி போல அத்தனை துல்லியமாக, ஸ்தூலமாக,குளிராக  முன்வைக்கும் இத் தொகுதியின் கவிதைகள் வேறொரு புள்ளியில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பாக மாறி நின்று, இந்த தொகுதியை கவிதைகள் அடங்கிய தொகுதி எனும் நிலையில் இருந்து விடுவித்து, கவிதைவெளி என மாற்றுகிறது.  குறிப்பாக பின்னொரு  கவிதையில் தனது மரணத்தை ஓவியமாக வரையும் சார்லஸ்தான், முன்வரும்  கவிதையில் கனகாலம் சென்று உயிர்த்தெழுந்து,கர்த்தரை கடலுக்குள் வீசி மீன் பிடிக்கிறார் எனும் தொடர்பை வாசக மனம் உணர வருகையில்,  உடன் நிகழ்வாக இத் தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் இடையே அப்படி ஒரு பின்னல் இருப்பதையும் வாசகன் அறிய நேர்வான்.

மன அடுக்குகளை ஊடுருவும் இலக்கியத்ப் பிரதியின் பயணத்தில், நாவல்களாலும்,சிறுகதைகளாலும் அதன் வடிவ காரணம் கொண்டு கைக்கொள்ள இயலா தனித்தன்மை ஒன்று கவிதை எனும் வடிவத்துக்கு உண்டு. ஒரு வலிமையான கவிதைக்குள் தர்க்கம் கற்பனை உள்ளுணர்வு அனைத்தயும் ஒரே கூறுக்குள் அடக்கிய, அனைத்தயும் ஊடுருவும் ஒன்று அமைந்திருக்கும். ஒரு எரி கல் விழுந்து,ஊடுருவி  பூமிப் பந்தின் மைய கன்மதத்தைநோக்கி பயணிப்பது போல,ஒரு செயல்பாட்டை கொண்டது கவிதை. இந்தத் தொகுதியின் கவிதைகள் அப்படி வாசக மன அடுக்கில் விழுந்து ஊடுருவி,இறங்கி, ஒளிக்கு முன்பான இருளில் தட்டி திகைத்து நிற்கிறது.

….

கேள்வி  இருளுக்கு

பதிலானது  ஒளி

எவ்விதம்

இருளை உற்று நோக்க நோக்க

இருளே ஒளியானது.

[தேவதேவன்]

….

இருளிருந்த்து ஒளிக்கு கொண்டு செல்ல பிரார்த்தித்த ஆதி கவியின் பிரார்த்தனைக்கு ஒளியின் செவிசாய்ப்பு தேவதேவனின் கவிதை எனக் கொண்டால்.

தவளையொன்று இருளுக்குள் பாய்ந்தது

இருளுக்குள் நுழைய கதவுகளே இல்லையென்றார்கள்

உண்மைதான்

வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் நுழைய கதவுகளே இல்லை

ஆனால் இருளுக்குள் இருந்தது

இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கு

நிறைய தடுப்புகள் இருக்கிறது.

[சா.துரை]

….

அந்த ஆதிகவியின் பிரார்த்தனை நோக்கி ,ஒரு இருளில் இருந்து இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கான தடையின் விரிசலிலிருந்து கசியும் குரல் சா.துரையின் குரல்.

இது இவரது முதல் தொகுதி. அதற்குரிய பலமும் பலவீனமும் இதில் உண்டு. இவற்றைக் கடந்து நம்பிக்கை தரும் கவிஞராக சா. துரை அவர்களை தாராளமாக சொல்லலாம் , எனும் புத்தம் புதிய,இதுவரை எந்த விமர்சகருமே சொல்லாத திடுக்கிடவைக்கும்  அவதானிப்புடன் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தொகுதி இல்லை இது என்று மட்டுமே இக் கணம் சொல்ல இயலும்.

மத்தி.   கவிதைகள்.   சா.துரை.   சால்ட் பதிப்பகம் .

முந்தைய கட்டுரைகுர்ஆன் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசென்னை கட்டண உரை – நுழைவுச்சீட்டு வெளியீடு