சிரீஷும் மதுரையும்

 Shirish 2

ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?

கையில் பணமில்லாமல், வழியில் வண்டிகளிடம் கை காட்டி ஏறிக்கொண்டு இந்தியாவை சுற்றிவரும் சிரிஷ் யாத்ரி பற்றி எழுதியிருந்தேன். நூறுநாட்களுக்கு முன் லடாக்கிலிருந்து பயணத்தைத் தொடங்கி இப்போது கன்யாகுமரி வரை வந்து சேர்ந்து பயணத்தை முடித்திருக்கிறார். கன்யாகுமரியில் நண்பர் ஷாகுல் ஹமீது அவர்களின் நண்பரின் இல்லத்தில் தங்கியிருக்கிறார்.

சிரீஷின் கொள்கைகளில் ஒன்று, பேருந்தில் ஏறுவதில்லை. மக்கள் அளிக்கும் இலவசப் பயணம் மட்டுமே. பேருந்துச்சீட்டு எடுத்துக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வதில்லை. உணவு வாங்கிக்கொடுத்தால் உண்பார், ஆனால் கையோடு எடுத்துச்செல்ல மாட்டார். பண உதவிகளை ஏற்றுக்கொள்ள மாட்டார். சென்ற நூறுநாட்களில் ஒருநாள்கூட இந்தியாவின் எப்பகுதியிலும் அவருக்கு வண்டி கிடைக்காமலிருந்ததில்லை. நான் எழுதியபின் தமிழகத்திற்கு வெளியிலேயே என் வாசகர்களால் அவர் அடையாளம் காணப்பட்டார். சென்னை பாண்டிச்சேரி திருச்சி ஈரோடு மதுரை என எல்லா இடங்களிலும் அவர் நம் நண்பர்களை சந்தித்தார்.

ஆனால் ராமேஸ்வரத்திலிருந்து கன்யாகுமரி வருவதற்காக முயன்றவர் ஒருநாள் முழுக்க நின்றும் எவரும் ஏற்றிக்கொள்ளவில்லை. மதுரையிலிருந்தும் எந்த வண்டியும் நிறுத்தவில்லை. ஆகவே முதல்முறையாக பேருந்தில் கைவசம் இருந்த பணத்தில் பயணச்சீட்டு எடுத்து கன்யாகுமரி வரநேர்ந்தது. சற்று உடல்நலம் குன்றியிருக்கிறார்.

உண்மையில் நான் பலரையும் இதைக்குறித்து எச்சரித்திருக்கிறேன். சிரீஷிடம் சொல்லவேண்டும் என நினைத்தேன், அவருடைய நம்பிக்கையை ஏன் கெடுக்கவேண்டும் என சொல்லாமல் தவிர்த்தேன். மையத் தமிழகம், குறிப்பாக மதுரை -ராமேஸ்வரம் வட்டாரம் அன்னியர் மேல் எந்தவகையான பரிவும் கொண்டது அல்ல. பயணிகளுக்கு இந்தியாவிலேயே மிகமிக இடர் அளிக்கும் வட்டாரம் இதுவே. பல பயண நூல்களில் இதை என் அனுபவம் சார்ந்து எழுதியிருக்கிறேன். அதற்கு எவராவது உளம்புண்பட்டு பதிலும் எழுதுவார்கள். இங்குள்ள மக்கள் மட்டுமல்ல பயணிகளை நம்பிவாழும் வணிகர்கள், வண்டிக்காரர்கள், உதவவேண்டிய அரசூழியர்கள் வழிப்பயணிகள்கூட மிகக்கடுமையாகவே இருப்பார்கள். ரவுடிகளின் தொல்லை இருக்கும். சிறுவணிகர்கள் ஏமாற்றுவார்கள், அடித்துப்பிடுங்குவார்கள். மக்கள் எவரும் உதவிக்கு வரமாட்டார்கள். இப்பகுதிகளிலுள்ள சட்டம் ஒழுங்கற்ற தன்மை, பொதுவான குற்றச்சூழல் இந்த உளநிலையை உருவாக்கியதா எனத் தெரியவில்லை.

எதுவானாலும் இறுதியாக தமிழகத்தைப் பற்றிய இந்த உளச்சித்திரம் சிரீஷிடம் எஞ்சுவது, என்றும் அவருடைய பயணக்குறிப்புகளின் ஒருபகுதியாக இது நீடிக்கும் என்பது சற்று சங்கடம் அளிக்கிறது.

முந்தைய கட்டுரைசிரிஷ் யாத்ரி- தாமரைக் கண்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-60