சஞ்சயன் சொன்னான்: அரசே, இது முன்னரே எழுதப்பட்டுவிட்ட கதை. இது ஒரு பெருங்காவியத்தின் வரிகள். அந்த ஆசிரியனாக அமர்ந்து அதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதன் வரிகளில் விழியோட்டிக்கொண்டிருக்கிறேன். அதை தனிப்பயணி என மலையடுக்குகள் சூழ்ந்த பாதையில் பாடிக்கொண்டு செல்கிறேன். அந்தத் தொல்கதைக்குள் அமர்ந்து இக்கதையை உங்களுக்கு சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்.
இருளில் அர்ஜுனன் மேலும் கைகளும் வில்லும் பெருகியவன் போலிருந்தான். அவன் அம்புகள் அனைத்து திசைகளிலிருந்தும் எழுந்து சீறல் ஓசையுடன் வந்து அறைந்தன. கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்ட முதற்சில கணங்கள் அந்த ஓசைகளும் அரையிருளில் அவை மின்னி வந்த காட்சிகளும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் திகைத்தான். இரண்டு அம்புகள் அவன் தேர்த்தூணில் வந்து அறைந்தன. ஒன்று அவன் வலத்தோள் கவசத்தை அறைந்து ஓசையுடன் அப்பால் சென்று விழுந்தது. பிறிதொரு அம்பு முழங்கியபடி அவன் தலைக்கு குறி கொண்டு அணைய இயல்பாக உடல் திருப்பி அதை ஒழிந்து சுழன்றெழுந்தபோது அறியாக் கணமொன்றில் அவன் விழி முற்றாக மறைந்து செவி காட்சித் திறன் கொண்டது.
பின்னர் அக்களத்திலிருக்கும் அனைத்து அம்புகளையும் அவன் பார்த்தான். அனைத்து அம்புகளையும் தன் அம்புகளால் அறைய முடியுமென்பதை அறிந்தான். காட்சி விரைவானது. ஆகவே அது தான் காண்பவற்றை விரைந்து தொடுத்து மின்னிமின்னிப் பெருகும் புடவி ஒன்றைப் படைத்து சூழ நிறுத்தியது. ஓசை விரைவு குறைந்தது. ஆகவே ஓசைகளால் சமைக்கப்பட்ட உலகு தளர முடையப்பட்டதாக இருந்தது. அதில் ஒவ்வொரு அம்பும் தனி அடையாளம் கொண்டிருந்தது. தனக்கென ஒரு சொல் கொண்டிருந்தது. சீறியது, சலித்துக்கொண்டது, தேடியது, சென்றறைந்து எக்களித்தது, உதிர்கையில் நீள்மூச்செறிந்தது. விழுந்து கிடக்கையில் ஆமென தன்னை அமைத்துக்கொண்டது.
அர்ஜுனனை தன் செவிகளால் பார்த்தபோது பெருகும் அவன் கைகளை கண்டான். இருபுறமும் பதினாறு கைகள் கிளைபிரிந்து தனித்தனியாக இயங்க மறுபக்கம் இருந்து அவன் ஆவக்காவலனின் கைகளும் பெருகி அத்தனை கைகளுக்கும் அம்பு தேர்ந்து அளித்தன. காண்டீபம் துள்ளித் துள்ளி ஒன்றிலிருந்து ஒன்றெனப் பிறந்து பதினாறும் அதன் பன்னிரு மடங்கும் அதன் பன்னிரு மடங்குமென பெருகி ஒரு திரும்பலில் ஒன்றுடன் ஒன்று படிந்து மீண்டும் ஒன்றென்றாகி சுழன்று மீண்டும் எழுந்தது. அதை அறிய அறிய தானும் அவ்வண்ணமே பெருகுவதை கர்ணன் அறிந்தான். பெருகிப்பெருகி வானளாவி இருளில் நிறைந்து அவனும் அர்ஜுனனுடன் போரிட்டான். எப்போதும் எழும் அந்த உளப்பெருக்கு. அவன் நானே என்னும் எண்ணமாக அதை அவன் மாற்றிக்கொண்டிருந்தான். ஒருவருக்கு ஒருவர் ஆடிப்பாவை என உருவாக்கிப் பெருக்கி களம் நின்றிருக்கிறோம். அவன் தோள்கள், அவன் கைகள், அவன் உடலின் அந்த நடனம். அவனுடைய அசைவின்மை நான். எனது அசைவு அவன்.
பின்னர் எங்கோ ஒரு புள்ளியில், அணுவிடையில், அதற்கும் குறைவான சிற்றணுவிடையில், மெல்லிய பூமுள்ளை நாவால் தொட்டறியும் நுண்ணிய அறிதலென ஒன்றை உணர்ந்தான். அது ஆணவமா, கசப்பா, விலக்கமா, அனைத்தாலும் உணர முடியாத பிறிதொன்றா? அவனால் அதை அத்தருணத்தில் வகுத்தறிய இயலவில்லை. ஆனால் அத்தனை போர்நடனத்திற்கு அடியில் அது என்ன என்று உள்ளம் தொட்டுத் தேடி தவித்துக்கொண்டும் இருந்தது. அது ஒரு தன்னுணர்வு மட்டுமே என்று ஒரு கணத்தில் எண்ணினான். அது ஒரு அச்சம் என்று அக்கணமே உருமாறியது. அது தன்னுணர்வு கரைவதைக் குறித்த அச்சமா என்ற ஐயமாக உருவெழுந்தது. அவன் தன் ஆவநாழியிலிருந்து அம்பொன்றை எடுத்து கூர் உணர்ந்து நாணிழுத்து எய்து அது விண்ணில் எழுந்த கணத்தில் அறிந்தான், அவ்வுணர்வே அந்த அம்பென்றாகி எழுந்தது என்று.
தன்னிலிருந்து அகன்று செல்லும் அதை பருப்பொருளென பார்த்தபோது அது என்னவென்று உணர்ந்தான். அது அவனை அர்ஜுனனிலிருந்து முற்றாகப் பிரித்தது. அர்ஜுனனைக் கொன்றாலொழிய தான் இல்லை என்று அவனுக்கு சொன்னது. அர்ஜுனன் அழிந்து பின்னர் எழுந்த தான் ஒன்றிலேயே தன்னால் முழுதமைய முடியுமென்று அறிந்தது. பின்னர் அவன் ஆவநாழியிலிருந்த அனைத்து அம்புகளும் அவ்வுணர்வை ஏற்று பற்றிக்கொண்டன. அவன் உடலுக்குள் எங்கோ எண்ணமென்றிருந்து, குருதிக்கசப்பென்று ஊறி, கால்விரல்களை அதிரச்செய்து, வயிற்றில் கொப்பளித்து, மூச்சில் அனல்கொண்டு, கைவிரல்களை பதறச்செய்து, உதடுகளை உலரவைத்து, விழிகளை எரியச்செய்து, முகம் கனல நெற்றிப்பொட்டில் மோதி கூர்கொண்டது அது. கொல் கொல் கொல் கொல் கொல் என அது கூவிக்கொண்டிருந்தது. அவன் காற்றையும் வானையும் அச்சொல்லால் நிறைத்தது. கொல்க அவனை! கொன்றெழுக அவனை! கொன்று விஞ்சுக! கொன்று நிலைகொள்க!
அர்ஜுனனைக் கொன்று எஞ்சவேண்டுமென மட்டுமே உளம்கொண்டவனாக அவன் அம்புகளை அறைந்தான். இதோ இதோ என அவன் உடலிலிருந்து ஆயிரம் நச்சு நாகங்கள் எழுந்து படம் விரித்து அம்புகளை செலுத்தின. அவனை வந்தறைந்த அர்ஜுனனின் அம்புகளிலிருந்து தான் செலுத்திய அதே அம்புகள் அவை என உணர்ந்தான். சென்றவையே அவ்வடிவிலேயே மீள்கின்றன என்பதுபோல் அவனுடைய ஆவநாழியிலிருந்து கிளம்பியபோதிருந்த அதே வஞ்சத்துடன், அதே மாறா விசையுடன் அவை திரும்பி வந்தன. அத்தனை அம்புகளையும் நான் எனக்கே என செலுத்திக்கொள்கிறேனா? என் ஆவநாழியே அவன் தோளிலும் தொங்குகிறதா? இல்லை, நான் விஞ்சும் ஒரு துளி நஞ்சு கொண்டவன். அவனை ஏழுமுறை பொசுக்கும் கருநஞ்சு என் அம்புத்தூளியில் பொறுமையிழந்து நெளிகிறது.
ஆனால் அதை அவனால் தொடமுடியவில்லை. கை அதை நோக்கி செல்லவில்லை. எண்ண எண்ண கை நெளிந்து அகன்றதுபோல. நான் இன்னும் எண்ணவில்லை. எண்ணமென்றே ஆகாத வஞ்சமென்றிருக்கிறதா? அவன் உரக்க “கீழ்மகனே, உன்னைக் கொன்றாலன்றி தீராத தழல் இது” என்று கூவினான். சொற்களென எழுந்ததுமே அவ்வெண்ணம் பருவடிவு கொண்டது. பருவிசையென கையை எடுத்துக்கொண்டது. அவன் கை சுழன்று ஆவநாழிக்குள் சென்று அரவம்பின் மேல் தொட்டது. அவன் தன் உடலுக்குள் குளிர்ந்த வேல் ஆழப்பதிந்து நின்றதுபோல் உணர்ந்தான். அவன் அரைக்கணத்திற்கும் குறைவாகவே செயலற்றிருக்கக்கூடும். அதற்குள் அர்ஜுனனின் ஏழு அம்புகள் வந்து அறைந்து அவனை தேர்த்தட்டில் வீழ்த்தின.
கர்ணனின் தேரை ஓட்டிய அவன் குலத்து இளையோனாகிய துருமன் கடிவாளங்களை இழுத்து பக்கவாட்டில் திருப்பி கர்ணனின் தோளில் இருந்த கவசத்தை முன்னால் காட்டச் செய்து மேலும் எழுந்த அம்புகளிலிருந்து அவனை காத்தான். தோள்கவசங்களை அறைந்து உதிர்ந்த அர்ஜுனனின் அம்புகள் அவனைச் சூழ்ந்து தெறித்தன. தேரைத் திருப்பி கர்ணனை மீட்டு அப்பால் கொண்டுசென்றபோது அவன் நோயுற்றவன்போல் நடுங்கிக்கொண்டிருப்பதை துருமன் கண்டான். “மூத்தவரே! மூத்தவரே!” என்று அவன் கூவினான். தாழ்ந்த குரலில் “செல்க! செல்க!” என்று கர்ணன் சொன்னான். பெருவிடாய் கொண்டவன்போல் தளர்ந்திருந்தது அவன் குரல். “மூத்தவரே” என்றான் துருமன். “செல்க, படைமுகம் செல்க!” என்றான் கர்ணன். துருமன் கடிவாளத்தை தளர்த்தி சவுக்கோசை எழுப்பி புரவிகளை முன்செலுத்தினான்.
அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே முன்பெனவே போர் மூண்டெழுந்தபோது துருமன் கர்ணனிடமிருந்த கை நடுக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கர்ணனின் கால்கள் தேர்த்தட்டில் வழுக்குவதுபோல் தோன்றின. ஒருகணம் அவன் விழுந்துவிட்டான் என்ற உணர்வையே துருமன் அடைந்தான். தன் விசை அனைத்தையும் திரட்டிக்கொண்டு கர்ணன் மீண்டும் எழுந்து அர்ஜுனனை தாக்கத் தொடங்கினான். அவர்களிடையே போர் கணம் குறையா நிகர்விசையுடன் நிகழ்ந்தபோது துருமன் முதற்கணம் ஆறுதல் அடைந்தான். இதோ எழுந்து அறைந்து வெல்வார், இதோ விஞ்சுகிறார், இதோ பேருருக்கொள்கிறார், இக்கணம் இப்போர் முடிவடையும், இன்னும் சில கணங்கள்… ஆனால் அவன் அகத்திலிருந்த அடுத்த ஐயம் எழுந்துவந்து அசைவிலா தூண் என முன்னால் நின்றது. அறியா விசையொன்றால் கர்ணன் கைபற்றி நிறுத்தப்படுவதை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். ஒருகணம்தான், ஆனால் அர்ஜுனனுடனான போரில் அதுவே பெரும் பின்னடைவாகிறது.
கர்ணனின் அம்புகள் எழுந்து அர்ஜுனன் பின்னடையத் தொடங்கியபோது நேர்மாறாக துருமனின் உள்ளம் சுருங்கிக்கொண்டிருந்தது. கர்ணனால் ஒருபோதும் பாண்டவ ஐவரையும் கொல்ல இயலாது என்று அவன் உறுதியாக உணர்ந்தான். அர்ஜுனனை கர்ணன் தன் அம்புகளால் அறைந்து அறைந்து பின்னடையச்செய்து பாண்டவப் பின்னணிப் படைகளின் மேல் அழுத்தி விசையழியச் செய்தான். அர்ஜுனனுக்குப் பின்னால் விழுந்து கிடந்த இரண்டு யானைகளின் உடலால் அவன் தேர் தடுக்கப்பட இளைய யாதவர் தேரைத் திருப்பி அர்ஜுனனை கர்ணனின் அம்புகளிலிருந்து அகற்ற முயன்றபோது மீண்டும் கர்ணனின் உடலில் அந்தத் துடிப்பு குடியேறுவதை துருமன் உணர்ந்தான். இழுத்துக்கட்டிய பாய்மரத்தில் காற்றதிர்வதுபோல் அதிர்வுகொள்ள வைத்தது அத்துடிப்பு. இக்கணம் இக்கணம் என்று அவன் உள்ளம் பொங்கியெழுந்தது. இதோ அர்ஜுனன் நச்சு தீண்டி விழப்போகிறான். இதோ போர் முடியப்போகிறது. இதோ அனைத்தும் அழியப்போகிறது. இக்கணம்! இக்கணத்தில் நான் வாழ்கிறேன். மறுகணத்தில் இறந்தால்கூட இக்கணத்தை இனி எவரும் நினைவுகூரவில்லையென்றால்கூட இக்கணத்தில் வாழ்வதனூடாகவே இந்த யுகத்தை அறிந்திருக்கிறேன். ஆம் இக்கணம்!
ஆனால் மீண்டும் கர்ணன் தேர்த்தட்டில் உடல் தளர்ந்து அப்பால் சரிந்தான். அவன் தோள் சென்று தேர்த்தட்டில் ஒரு தூணை அறைந்தது. துருமன் வலப்புரவியை பிடித்திழுத்து தேர் அடைந்த அச்சரிவை தவிர்த்து அதை வளைத்து கொண்டுசெல்ல அர்ஜுனனின் அம்புகள் அவன் தோள்மேலும் தலைக்கவசத்தின் மேலும் அறைந்தன. தேர்த்தட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொற்தகடுகள் மூடிய தூண்களை அம்புகள் வந்து அறைந்து பொறிபறக்கச் செய்தன. கர்ணன் நீள்மூச்சு விடுவதை துருமன் கேட்டான். அவன் புண்பட்டிருக்கிறான் என முதல் எண்ணம் எழுந்தது. உடனே பதற்றம்கொண்டு ஆடிகளில் நோக்கி அவ்வாறல்ல என உணர்ந்தான். தேரைத் திருப்பவா என எண்ணியபோது கர்ணன் மூச்சை இழுத்து மீண்டும் எழுவதை கண்டான். அவன் உள்ளத்தில் முதல் முறையாக கர்ணனின் மேல் ஒருதுளி வெறுப்பு எழுந்தது.
துருமன் கர்ணனை தன் தந்தை வடிவாகவே அறிந்திருந்தான். மறு எண்ணமில்லாத பணிவையே அவனிடம் கொண்டிருந்தான். அது குடிமூத்தான் என்பதனால் மட்டும் அல்ல. அவன் அறிந்த மானுடரில் முதன்மையானவன் கர்ணனே என்பதில் அவனுக்கு ஐயமிருக்கவில்லை. இளமைமுதல் அவன் கர்ணனைக் கண்டு வழிபட்டு வளர்ந்தான். கர்ணனின் தந்தை அதிரதரின் இளையோன் உக்ரரதரின் மூன்றாவது மைந்தன் அவன். அதிரதர் உக்ரரதரைவிட பதினெட்டு அகவை மூத்தவர். அதிரதரின் தந்தை மகாரதரின் நான்காவது துணைவியின் மைந்தன் உக்ரரதர். அவர்களின் குடிக்கு மூத்தவராகிய அதிரதர் இளமையிலேயே உள்ளத்தால் முதியவராகிவிட்டவர். அங்கநாட்டில் தேர்ப்படையின் பகுதியாக அவர்களின் குடி இருந்தது. அச்சிறுநகரில் ஒருபோதும் படைப்புறப்பாடுகளை அறிந்திராத தேர்ப்படையில் அவர்களின் நான்கு தலைமுறைகள் வளர்ச்சியின்றி வாழ்ந்தனர். களத்தில் நின்று பொருதவோ நெடுந்தொலைவிற்கு தேர்களை கொண்டுசெல்லவோ தங்களால் இயலுமென்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
மகாரதர் இறந்ததும் அவரது முதற்துணைவி பார்ஸ்வையின் மைந்தனாகிய அதிரதர் அவர்கள் குடிக்கு மூத்தவரானார். தந்தையிடமிருந்து அமரத்தில் அமர்ந்து புரவிகளை சவுக்கால் அறைந்து ஓட்டுவது, அவற்றை காலையில் நீராட்டுவது, இலைகளால் உடலுருவி விடுவது, பயிற்சியோட்டம் அளிப்பது என்னும் எளிய பணிகளுக்கு அப்பால் அதிரதர் புரவிக்கலைகள் எதையுமே அறிந்திருக்கவில்லை. மூத்தவர் என்றே வளர்ந்தமையால் எப்போதும் கவலைகொண்ட பாவனையும் தற்பெருமையும் மேட்டிமைப்பேச்சும் அவரிடமிருந்தது. அங்கநாட்டின் புரவிக்கொட்டிலின் பொறுப்பாளராக அவர் ஆனபோது தன்னை தன்னைவிடப் பெரிய இடத்தில் நிறுத்திக்கொண்டார். மேலும் மிதப்பும் நடிப்பும் கொண்டவராக ஆனார். ஆனால் பெருமிதத்தால் சிறுத்து கேலிப்பொருளாவோர் உண்டு. பெருமிதத்தால் தங்களை வளர்த்து எண்ணியவாறே பெருகுபவரும் உண்டு. அதிரதர் புரவிக்கொட்டிலுக்கு பொறுப்பான பின்னரே புரவி நூல்களை பயிலத்தொடங்கினார். இரவும் பகலும் புரவிகளுடன் இருந்தார். கற்றவற்றை கண்ணால் பார்த்தார். அவற்றை தன் குடியினருக்கு கற்பித்தார். ஒவ்வொரு நாளுமென அறிதல் பெருகி புரவிகளின் உள்ளறிந்தவரானார். தேரின் விசைகளை கடிவாளங்களால் உணர்பவர் என மாறினார்.
“அதிரதரின் கையில் தேர் ஒரு யாழ். கடிவாளங்கள் அதன் நரம்புகள். அவரது தேரில் ஊர்வது இனிய இசையொன்றின் ஒழுக்கில் செல்வது” என்று மன்னர் அவரை ஒருமுறை புகழ்ந்தார். தன் இளையோர், மைந்தர் அனைவரையுமே அதிரதர் அங்கநாட்டுப் படைகளுக்குள் கொண்டு வந்தார். அவரது ஏழு இளையவர்களுக்கும் மைந்தர்கள் பிறந்தனர். அவருக்கு மட்டும் மைந்தர்கள் அமையவே இல்லை. இளையோரின் மைந்தர்களையே தன் மைந்தர்கள் என்று அவர் கொண்டார். அவர்களுக்கு கற்பித்தார், பேணி வழிகாட்டினார். பின்னர் அவருக்கு யமுனையின் பெருக்கில் வந்த மைந்தன் ஒருவன் கிடைத்தபோது அதை தன் இளையோரின் மைந்தர் மீது கொண்டுள்ள பேரன்பின் கனிவென்றே கருதினார்.
“மைந்தர்கள் பிறக்காதவர்கள் உளம் சுருங்குகிறார்கள். பிற மைந்தர்களையெல்லாம் தனக்கு மறுக்கப்பட்ட மைந்தர்கள் என்றே எண்ணுகிறார்கள். அவர்கள் மேல் வெறுப்பும் அகல்வும் கொண்டு அகம் இறுகிவிடுகிறார்கள். இறுகிய அகம் என்பது விரல் மூடி குவிக்கப்பட்ட கைகள் போன்றது. மேலிருந்து அதில் ஈய நினைக்கும் தேவர்கள் தயங்கி தங்கள் கையை பின்னெடுத்துக்கொள்கிறார்கள். பிற மைந்தர் அனைவரையும் தனக்குப் பிறக்காத தன் மைந்தர் என்றே எண்ணி உளம் விரிபவன் கைகளை தெய்வத்தை நோக்கி விரித்து நீட்டுபவன். அந்த ஏந்திய கைகளுக்கு பரிசளிக்காதிருக்க தெய்வங்களால் இயலாது. என் இளையோன் மைந்தர் மீது நான் கொண்ட பேரன்பினால் இம்மைந்தன் எனக்கு நீரன்னையால் அளிக்கப்பட்டான். இவன் நிழலில் என் மைந்தர் பெருகுவார்கள்” என்றார் அதிரதர்.
கர்ணன் தன் உடன்குருதியினர் அனைவருக்கும் இனியவனாக இருந்தான். அங்கநாட்டிலிருந்து அஸ்தினபுரிக்குச் சென்ற அதிரதர் தன் இளையோரையும் இளையோர் மைந்தரையும் அஸ்தினபுரிக்கு அழைத்துக்கொண்டார். ஒவ்வொருவரையும் பெருந்தேர் வல்லவர்களாக பயிற்றுவித்தார். கர்ணன் அங்கநாட்டுக்கு அரசனானதும் அரச குடியினருக்குரிய தலையணி உரிமை, இடைக்கச்சை உரிமை, மணியணியும் தகுதி ஆகியவற்றைப் பெற்று துருமனும் அவன் தந்தையும் குடிகளும் அங்கநாட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு அரசனும் தந்தையும் தெய்வ உருவுமாகவே கர்ணன் இருந்தான். கர்ணனுக்குத் தேரோட்டிகளாகவும் வில்துணைவராகவும் அதிரதரின் குலத்து மைந்தர்கள் அமைந்தனர். முதல்நாள் முதல் போர்க்களத்தில் ஒவ்வொருவராக மறைகையில் பிறர் அவ்வாய்ப்பு தனக்கு அமைகிறதென்றே எண்ணினர்.
அன்று கர்ணன் துருமனை நோக்கி “இளையோனே, இன்று நீ என் தேரை தெளி” என்று கூறியபோது தன் வாழ்வின் முதன்மைப் பெருந்தருணம் அமைகிறதென்று எண்ணி துருமன் தலைவணங்கி விழிநீர் கோத்தான். தேர்த்தட்டில் ஏறி அமர்ந்து அமரத்தை தொட்டு வணங்கி கடிவாளக் கற்றையை கையிலெடுத்தபோது “மூதாதையரே! தெய்வங்களே!” என்று உள்ளத்தால் கூவினான். ஒருவேளை இதுவே அந்நாளாக இருக்கக்கூடும். இத்தருணமே அதுவரை அவன் குலம் கொண்டுள்ள நீடுதவத்தின் விளைவென அமையலாம். இன்று அங்கர் போர்வென்று அஸ்தினபுரியின் அரசனுக்கு முடிசூட்டி மீளலாம்.
அன்று களத்தில் கர்ணன் முழு ஆற்றலுடன் வெளிப்பட்டபோது துருமன் “இன்று என் இறைவனின் பொழுது. எழுகதிரவனின் தருணம்!” என்று உளம் எழுந்தான். ஆனால் அர்ஜுனனுடன் அவன் பொருதுகையில் கர்ணனிடம் உருவாகும் அறியாத தவிப்பொன்றை அவன் உணர்ந்தான். விசை கொண்டெழும் ஒன்று, அதை எதிர்த்து சற்றே மேலெழும் பிறிதொன்று என தேர்த்தட்டில் நின்று கர்ணன் நிலையழிவதை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அவனுக்கு இருபுறமும் இருந்த ஆடிகளில் அவன் ஓரவிழிகள் கர்ணனை பார்த்துக்கொண்டிருந்தன. அவன் முகக்குறிகளால், கையசைவுகளால் ஆணைகளை பெற்றன. அவ்வொத்திசைவும் மெல்ல மெல்ல அணைந்து ஒருகணத்தில் அவனே தேர்த்தட்டில் நிற்பவனாகவும் ஆகி போர் புரிந்தான். தேர் உடலென்றாகி அதற்குள் உயிரென்று கர்ணனும் உளமென்று தானும் மாறிவிட்டதுபோல். அத்தேரே தயங்கியும் வளைந்தும் பாய்ந்தும் ஒழிந்தும் தன் போரை நிகழ்த்துவதுபோல்.
கர்ணன் பாண்டவ இளையோரையோ அர்ஜுனனையோ கொல்லக்கூடுமென்ற நம்பிக்கையை துருமன் இழந்துகொண்டே இருந்தான். ஆனால் அத்தருணத்தில் கர்ணன் மேலும் மேலுமென விசைகொண்டு உறுமி அர்ஜுனனை அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தான். அர்ஜுனனின் தேர்மகுடம் உடைந்து தெறித்தது. அவன் தலைக்கவசம் சிதைந்தது. தோளிலைகள் ஒவ்வொன்றாக பறந்து அப்பால் விழுந்தன. அவன் தேர்த்தட்டெங்கும் கர்ணனின் அம்புகள் அறைந்து விழ ஏழுமுறை தேரில் விழுந்தும் ஒருமுறை தேரிலிருந்து வெளியே தாவி ஓடி பிறிதொரு புரவிமேல் பாய்ந்து மீண்டும் தேர்த்தட்டில் வந்தமைந்தும் அர்ஜுனன் தன்னை காத்துக்கொண்டான். அவன் நெஞ்சிலும் தோள்களிலும் அம்புகள் பாய்ந்தறைந்தன. எக்கணமும் பேரம்பொன்றால் கர்ணன் அர்ஜுனனின் நெஞ்சு பிளக்கக்கூடும் என்று துருமனின் உளம் எண்ணினாலும் ஆழத்தில் பிறிதொரு குரல் அல்ல அல்ல என்று முணுமுணுத்தது.
அவனுள் அனைத்து முடிச்சுகளும் தளர்ந்து உள்ளம் முற்றமைந்துகொண்டே இருந்தது. கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரே முகம் என்பதை இளமையிலேயே அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். அது ஏன் என்பதை ஒரு முணுமுணுப்பாக அவர்கள் குடிக்குள் பெண்டிர் பேசிக்கொண்டும் இருந்தனர். ஆனால் அந்தக் களம் என்பது ஒவ்வொருவரும் தன் உடன்பிறந்தாருக்கெதிராக நிகழ்த்தும் போர். கௌரவ பாண்டவ குடிகள் மட்டுமன்றி அங்கிருக்கும் அத்தனை ஷத்ரியருமே எவ்வகையிலோ உடன்குருதி உறவு கொண்டவர்கள். உடன்குருதியினரை கொல்வதே அக்களத்தின் வெற்றியின் உச்சமென்றாயிற்று. அவ்வெல்லையைக் கடந்தவனே அங்கு வெல்லவும் மீளவும் முடியுமென்று அமைந்தது. நூற்றுவரைக் கொல்வேன் என்று வஞ்சினம் உரைத்து பெரும்பகுதியினரின் குருதியாடி நின்றிருந்தான் பீமன். கொன்றவர்கள் நுண்ணிய எல்லைக்கோடொன்றை கடந்துசென்று பிறிதொருவர் ஆயினர். அவர்கள் எதை இழந்தனர் என அவர்களே அறிந்தனர். அவர்கள் தளரா போர்வல்லமையை ஈட்டினர்.
கர்ணனும் கொல்லக்கூடும் என்று துருமன் முன்னர் எண்ணியிருந்தான். கொல்வேன் என்று வஞ்சினம் உரைத்து அன்று காலை கர்ணன் எழுந்தபோது “ஆம்!” என்று அவனுளமும் பொங்கியெழுந்தது. உடல் மெய்ப்பு கொள்ள விழிநீர் படர்ந்தது. தேரில் எழுகையில் அன்று அது நிகழும் என்று எதிர்பார்த்தான். நான்கு முறை நகுலனையும் சகதேவனையும் கர்ணன் அக்களத்தில் எதிர்கொண்டான். ஒருமுறை பீமனை. இருமுறை யுதிஷ்டிரரை. ஒவ்வொரு முறையும் அம்புகளால் அவர்களை அறைந்து கொல்லும் தருணம் வரை சென்று இயல்பாக திரும்பிக்கொண்டு அவர்களை விடுவித்தான். ஒருமுறை யுதிஷ்டிரரிடம் “செல்க! இங்கு வீணாக தலைகொடுத்து அழியவேண்டாம். அந்தத் தலை குருதிபடிந்த இம்மண்ணில் உருளும் அளவுக்கு எடைகொண்டது அல்ல” என்று ஏளனம் உரைத்த பின்னரே எடுத்த அம்பை மீள வைத்தான். யுதிஷ்டிரர் கண்களில் சீற்றத்துடன் பற்களைக் கடித்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்பும் செயலற்றிருக்க நோக்கியபின் தலைகுனிந்து பாகனிடம் தன் தேரை திருப்பும்படி ஆணையிட்டார்.
கர்ணன் அர்ஜுனனுக்காக தன் இறுதி நஞ்சையும் திரட்டுவதாக துருமன் எண்ணினான். ஆனால் அர்ஜுனனுடனான போரில் இறுதித் தருணத்திலும் அவன் வில் தழைவதை கண்டான். நம்பிக்கையிழந்து அவன் அகம் தளர்ந்திருந்தபோது கர்ணன் மேலெழுந்து அர்ஜுனனை வென்று சென்றுகொண்டிருந்தான். அதை அறிந்ததும் அவன் உள்ளம் மீண்டும் எழுந்தது. ஒரு தருணத்தில் விழிகளுக்கும் செவிகளுக்கும் அப்பால் பிறிதொன்றால் அவன் கர்ணனை உணரத்தொடங்கினான். கர்ணனின் எண்ணங்களுக்கும் எடுத்த அம்புகளுக்கும் முன்பு இருந்த தருணங்களையும் தயக்கங்களையும் தானென்று உணர்ந்தான். அம்புகளைக்கொண்டு அர்ஜுனனை அறைந்தறைந்து பின்செலுத்திக் கொண்டிருந்தான். அர்ஜுனன் அனைத்துக் கவசங்களும் சிதற இடைக்குமேல் கவசங்களே இல்லாத வெற்றுடலுடன் திகைத்தவன்போல் தன் தேரில் நின்றிருந்தான்.
பெருங்கூச்சலுடன் வஞ்சினச் சொல்லுரைத்தபடி கர்ணன் தன் நாகபாசத்தை எடுத்தான். உடல் கல்லென்றாகி அனைத்து அசைவுகளும் அழிய, அக்கணம் மட்டுமே முன்னால் விரிந்திருக்க துருமன் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தான். வில்லிலிருந்து கிளம்பிய நாகபாசம் எட்டு சிறகுகளை விரித்தது. நீல நச்சுத் துளியொன்றை அலகென சூடி முழங்கியபடி அர்ஜுனனை நோக்கி பாய்ந்தது. இளைய யாதவர் தேரை முன் தெளித்து விந்தையான முறையில் சற்றே முன்திருப்ப அதன் இடப்பக்கச் சகடம் மண்ணில் இறங்கி புதைந்து தேர் பக்கவாட்டில் கவிழ்வதுபோல் குடை சாய்ந்தது. அர்ஜுனனின் தலைக்கு மேலாக காற்றைச் சீவியபடி உறுமிச்சென்ற நாகபாசம் அப்பால் சுழன்று மேலெழுந்து ஏழுமுறை வட்டமிட்டு சிறகோசையுடன் மீண்டும் கர்ணனிடம் வந்தது. அதைப் பிடித்து கையிலெடுத்தபோது கர்ணனிடம் நீள்மூச்சொன்று எழுந்தது.
இளைய யாதவர் சவுக்கால் வலப்பக்கப் புரவியை அறைந்து தேரை முன்னெடுத்து மீட்டு வளைத்து அப்பால் கொண்டுசென்றார். மீண்டும் கர்ணன் நாகபாசத்தை ஏவுவான் என எதிர்பார்த்து, உடல் துடிக்க திரும்பி, கர்ணன் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து பெருமூச்சுடன் தானும் உளம் தளர்ந்தான் துருமன். பின்னர் அவன் உள்ளத்தில் அக்கணம் ஒவ்வொரு தனியசைவாக விரியத் தொடங்கியது. அக்களத்தில் எங்கும் ஆழ்ந்த பிலங்கள் உண்டென்று அவன் அறிந்திருந்தான். அவற்றில் மென்மணல் பொருக்கு மூடியிருக்கையில் தேர்ச்சகடங்கள் ஆழ்வது பலமுறை நிகழ்ந்திருந்தது. எந்தத் திறன்கொண்ட தேராளியும் மறைந்திருக்கும் அந்த ஆழ்வெடிப்புகளை முன்னுணர இயலாது. எனினும் அத்தருணத்தின் ஒத்திசைவு அவனை உளம் வியந்து அமையச்செய்தது. தெய்வங்கள் அமைத்த ஒரு கணம். அல்லது அத்தேரின் அமரத்தில் தெய்வமே அமர்ந்திருக்கிறது.
அவன் விழிமலைக்க இளைய யாதவரை நோக்கிக்கொண்டிருந்தான். ஒருகணம் அறிந்தான் தன் தேரில் தன் வடிவில் அமர்ந்திருப்பதும் அவரே என. அத்தருணத்தில் அர்ஜுனனின் அம்பு எழுந்து வந்து அவன் தலையை கொய்தெறிந்தது.