மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாடமி விருது

 

2008 வருடத்துக்கான சாகித்ய அக்காதமி விருது மேலாண்மைப் பொன்னுச்சாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலாண்மைப் பொன்னுச்சாமி தமிழக முற்போக்கு இலக்கியத்தின் பிரபலமான முகங்களில் ஒன்று. அவரது இலக்கியப்படைப்புகள் மீது எனக்கு கடுமையான விமரிசனங்கள் உண்டு. அவரது இலக்கியப்படைப்புகளில் பல  கட்சிநிலைப்பாட்டை ஒட்டி உருவாக்கபப்ட்ட கருத்துக்களை செயற்கையான வாழ்க்கைச்சூழலில் வைத்து சித்தரிக்கும்தன்மை கொண்டவை. ஆகவே அவற்றில் பெரும்பாலானவற்றை நான் இலக்கியரீதியாகப் பொருட்படுத்துவதில்லை.

மேலாண்மைப்பொன்னுச்சாமியைவிட பலமடங்கு முக்கியத்துவம் கொண்ட பல படைப்பாளிகள் தமிழில் உள்ளன. மூத்த பெரும்படைப்பாளியான ஆ.மாதவனுக்கு இன்னமும் சாகித்ய அக்காதமி விருது வழங்கப்படவில்லை. தமிழ்ப்புதுக்கவிதையின் திருப்புமுனையான ஞானக்கூத்தன் பெயர் பரிசீலிக்கப்படவேயில்லை. வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், பூமணி, ராஜேந்திரசோழன்,கலாப்ரியா, தேவதேவன், விக்ரமாதித்யன் என தகுதியுடைய இலக்கியச்சாதனையாளர்களின் பட்டியலை நீட்டலாம்

ஆனால் சாகித்ய அக்காதமி விருது என்பது ஒரு போட்டி முடிவாக அளிக்கப்படுவது அல்ல. அது இலக்கியத்தின் பொதுவான பங்களிப்புக்காக பல்வேரு பரிசீலனைகளின் அடிப்படையில் வழங்கப்படுவது. அவ்வகையில் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கியமான பிரிவான முற்போக்கு இலக்கியத்தின் முதன்மை முகமான மேலாண்மை பரிசு பெறுவது இயல்பான ஒன்றே. மேலாண்மைப் பொன்னுச்சாமி அவரது நோக்கில் வரண்ட மையநில தமிழ்நாட்டின் ஒரு சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.  எளிய மக்களின் அன்றாடவாழ்க்கையின் துயரை தன் சொற்கள் வழியாக நம் பண்பாட்டுமையம் வரை ஒலிக்கச்செய்திருக்கிறார். அப்பங்களிப்பு அர்த்தமுடையதே. எல்லா வகையிலும் தமிழிலக்கியத்திற்குப் பெருமைசேர்ப்பதே

மேலாண்மைப் பொன்னுச்சாமிக்கு வாழ்த்துக்கள்.

 

 

முந்தைய கட்டுரைஅம்பைக்கு இயல் விருது
அடுத்த கட்டுரைஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்