சிரிஷ் யாத்ரி- தாமரைக் கண்ணன்

siria

ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?

ஷிரிஷ் எழுதிய Instagram பதிவு: https://www.instagram.com/p/BrlHFmoBZIz/?utm_source=ig_share_sheet&igshid=90leueb4xyvc

அன்புள்ள ஜெ

புதுவை வெண்முரசு கூடுகையில் மழைப்பாடல் நூல் முடிந்து, வண்ணக்கடல் அலைவீச ஆரம்பித்துள்ளது. இளநாகன் எங்களுக்குள் பயணிக்கிறான். வண்ணக்கடலின் கரையிலேயே இளநாகனின் சித்திரம் மனதில் ஆழப்பதிந்து விடுகிறது, அவன் பாணன் என்பதாலா பயணி என்பதாலா, ஏதென்று அறியாமலேயே அவன் மீது ஒரு பிரேமை.

பாரதத்தின் மைய நிலத்தில், இந்திரன் நகரிலிருந்து ஒரு இளநாகன் கிளம்புகிறான், அவன் ஊர்ப்புறத்தில் பருத்தி வெடித்து பறந்து செல்வதை கண்டு கண்டு அவன் சிந்தை பயணிப்பது ஒன்றே வாழ்வு எனப்புரிந்து வைத்திருக்கிறது. காஷ்மீரம் முதல் குமரிமுனை வரை பயணிப்பது அவனது ஒரு கனவு, ஊர்தி உணவு உறையுள் இவற்றிற்கு பணம் செலவழிப்பதில்லை என்பது அவன் நோன்பு. மீண்டு வா என்னும் தந்தையின் ஆசியோடு அடிவைத்தவன் விரிநிலமெங்கும் மானுடத்தை தரிசித்துக்கொண்டு வருகிறான்.

சிரிஷ் யாத்ரியை நாங்கள் கண்டது நண்பர் மணிமாறனின் அலுவலக வாசலில், எந்தப்பூதம் சுமந்து வந்தது என்று தெரியாது, சரியான இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தார். சிரிஷை பற்றி படித்ததுமே ஒவ்வொருவரும் பெருவியப்புக்கும் அகஎழுச்சிக்கும் ஆட்பட்டோம், அவரை நேரில் கண்டதும் அது பன்மடங்காகியது. மாலை அருகிருந்த புதுவை கடற்கரையில் நண்பர்களுடன் சிறு சந்திப்பு, பின் நண்பர் அரிவீட்டிற்கு சென்று வந்தபின் வில்லியனூரில் ராத்தங்கல்.

sr

சிரிஷுக்கு பயணிப்பது மிகவும் பிடித்திருந்திருக்கிறது, முதலில் இரு நாள் பயணம் துவங்கியவர் இப்போது மாதக்கணக்கில் பயணத்திலேயே இருக்கிறார். அடிக்கடி பையன் எங்கு காணாமல் போகிறான் என்று தெரியாத குடும்பத்தினர் உள்ளூர் பத்திரிக்கையொன்றில் இவரைப்பற்றிய சிறுபத்தி ஒன்றைக் கண்டபின்தான் தெளிந்திருக்கிறார்கள். முதுகில் உள்ள பயணப்பை மலையேற்ற வீரர்களுக்கானது. அதன் எடை பன்னிரெண்டு கிலோவுக்கு குறையாது, இளங்கலை இதழியல் முடித்தவர் முதலில் கிரியேட்டிவ் ரைட்டராக சில மாதங்கள் பணியாற்றிய போது, சிறு அறைக்குள் இருந்து கொண்டு உலகைப்பற்றி எழுதுவதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் விளையாட்டுப்பொருட்கள் விற்கும் டெக்கத்லான் நிறுவனத்தில் சேர்ந்த பின் அவர் வாழ்வில் நிறைய மாற்றங்கள். மலையேற்றப் பயிற்சி முகாம்கள், நிறைய மனிதர்களுடனான சந்திப்புகள். பின் பாரதம் முழுதும் ஹிச்ஹய்க்கிங் முறையில் பயணிக்க வேண்டும் என்று கிளம்பி விட்டார்.

அவர் பயண விவரங்களை பகிர்ந்து கொள்வது, சந்தித்த மனிதர்கள் பற்றி, தங்குமிடத்தேவை குறித்து தகவல் அளித்து உதவி பெறுவது  எல்லாமே சமூக வலைத்தளங்கள் மூலம் தான். அவர் முழுப்பயணமும் லாரிகள், டிரக்குகள், லோடு வண்டிகள், இருசக்கர வண்டிகளில். ஆரம்ப காலத்தில் சேரவேண்டிய இடத்தில் இறங்கிய பின் சிலர் பணம் எதிர்பார்க்க, இப்போதெல்லாம் சிரிஷ் தன் பயண முறையை ஓட்டுனரிடம் சொல்லி பணம் தரமுடியாது என தெளிவுறுத்திய பிறகே வண்டியில் ஏறுகிறார். செல்லிடம், அதன் நிலஅமைப்பு இவற்றை முன்பே தெரிந்து கொள்கிறார். அந்தந்த ஊரில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்ப்பது முக்கியம் கிடையாது, நிலத்தை, மனிதர்களை, கடக்கும் இடங்களை, கவனிக்கிறார். அந்த இடத்தின் கலாசாரத்தை மரபை அறிவதில் ஆர்வம் உண்டு. உணவைப்பற்றி கவலைப்படுவதேயில்லை, கிடைப்பது எதுவாயினும் அமிழ்தெனவே கொள்கிறார் ( மணி முகம்சுளித்த கலக்கியை இறுதித்துளிவரை). நம் நண்பர்கள் ஜெய்ப்பூரில் இறக்கி விட்ட பிறகு, வெவ்வேறு ஊர்வழியே பெங்களூரு, தமிழகத்தில் வேலூர், சென்னை வந்து பின் புதுவை வந்திருந்தார்.

sr2

அன்றைய இரவு மிக அழகானது, நள்ளிரவு வரை உரையாடிக்கொண்டிருந்தோம், தென்னகக் கலாச்சாரம், சங்க இலக்கியம், பெரியார், அகழ்வாய்வுகள், காப்பியங்கள், பாரதியார், பிரெஞ்சிந்தியா என மிக நீண்ட உரையாடல், அவருக்கு இன்னும் தெரிந்துகொள்ள விருப்பம் இருக்கிறது. கொற்றவை புத்தகத்தையும் பாரதியார் கவிதைகளையும் பேச்சினிடையே காண்பித்தேன், புத்தகங்களைப்பிரித்து ஆழமுகர்ந்தார், இலக்கிய வாசனைல்லா` தமிழகத்தின் விழுமியங்கள் பற்றி ஒரு எளிய ஆங்கிலப்புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

மறுநாள் காலை வில்லியனூரில் திருக்காமீசர் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டதில் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி. அங்குள்ள குதிரை வீரர் தூண்களை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். பின் நண்பர் திருமாவுடன் திருவக்கரை கல்மரப்பூங்கா, ஊசுட்டேரி சென்றுவந்தபின் பாண்டிச்சேரியை அவரது பாணியில் சுற்றிவந்தார். மாலை மீண்டும் கடற்கரையில் அதிக நண்பர்களுடன் சந்திப்பு. பின் அடுத்த நாள் காலை சென்றுவிட்டார்.

நண்பர்கள் இளநாகனிடம் கொண்ட செவ்வி பின்வருமாறு

ஏன் தொடர்ந்து பயணிக்கிறீர்கள்?

பயணம், ஒரு புலி குருதிச்சுவையை அறிவது போன்றது, ஒருமுறை ருசி தெரிந்துவிட்டால் பின் விடமுடியாது.

 

என்றாவது ஏன் இதைத்துவங்கினோம் என வருந்தியதுண்டா ?

ஒரேயொரு முறை, உடல்நலம் மிகவும் கெட்டுப்போனது, வெகுநேரம் தங்குமிடம் எதுவும் கிடைக்கவில்லை, அன்று மிகவும் உளத்தளர்ச்சியுற்றேன். அன்று ஒரு தம்பதி என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர், என் மனச்சோர்வை நீக்கி நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எனக்கே புரியவைத்தனர், அவர்களுக்கு நன்றி. மீண்டும் அப்படி ஒரு நிலை நேராது என நம்புகிறேன்.

 

எப்படி இந்த எண்ணம் வந்தது ?

மோட்டார் சைக்கிள் டயரி புத்தகம் படித்தது ஒரு காரணம்

 

புத்தகம் படிப்பீர்களா ?

என் பயணப்பையில் எப்போதும் புத்தகம் உண்டு. புனைவுகளை விட ,

அபுனைவுகள், சுய சரிதைகள் பிடிக்கும், காந்தியின் சத்தியசோதனை மிகவும் பிடிக்கும்.

 

எத்தனை காலம் உங்களால் இப்படி பயணிக்க முடியும் ?

அதற்கு வயதும் சூழலும் ஒரு தடை இல்லை என்றே நினைக்கிறேன் , எல்லாக்காலத்திலும் இது சாத்தியமே.

 

இந்தியாவில் பலரும் பயணிக்கிறார்கள், உங்கள் பயணமுறை மட்டுமே வேறு, இதில் என்ன புதிதாய் இருக்கிறது

ஆம், நான் இதை ஒப்புக்கொள்கிறேன், இருந்தாலும் நான் எனக்காக மட்டுமே பயணிக்கிறேன். என் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் கூட, நான் எனக்காகவே பயணிக்கிறேன், இது ஒருவகையில் சுயநலமே.

 

உங்கள் வருங்காலத்திட்டங்கள் என்ன?

இந்தப்பயண அனுபவங்களைக்கொண்டு என் முப்பதாவது வயதில் ஒரு படம் எடுக்க வேண்டும். அடுத்து வரும் வருடங்களில், இதே முறையில் உலகத்திலுள்ள வேறு நாடுகளில் பயணிக்க வேண்டும்.

 

சிரிஷ் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா என்றார் எங்களிடம், அது ஒரு பூ என்றதும் புன்னகைத்தார். அது ஆயிரம் கரம் நீட்டி உலகை அறியத்துவங்கும் இளஞ்சிவப்பு வாகையினப்பூ,

 

 

தாமரைக்கண்ணன்

பாண்டிச்சேரி

முந்தைய கட்டுரைபோலிச்சீற்றங்கள்
அடுத்த கட்டுரைசிரீஷும் மதுரையும்