ஈரோடு புதியவாசகர் சந்திப்பு நிகழ்ச்சிக்காகச் செல்லவிருந்தபோதுதான் நண்பர் ராஜமாணிக்கத்தின் தந்தை மறைந்த செய்தி தெரியவந்தது. காந்தியவாதியும், தமிழக சர்வோதய இயக்கத்தின் மாநிலப்பொறுப்பில் பத்தாண்டு இருந்தவர். வினோபாவின் நூற்றாண்டுவிழாவின்போது ஓராண்டுக்காலம் நடந்தே தமிழகத்தைச் சுற்றிவந்தவர். சிலமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். 15 ஆம்தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பி அதிகாலை ஆறு மணிக்கு நேரடியாக திருப்பூருக்கே சென்று இறங்கிவிட்டேன். ராஜமாணிக்கம் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து நேராக பெருந்துறை வழியாக காஞ்சிகோயில்.
நண்பர் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில்தான் நிகழ்ச்சி. அங்கே நிகழும் மூன்றாவது புதியவாசகர் சந்திப்பு நிகழ்ச்சி இது. இம்முறை 27 பேர். தங்குவதற்குக் கொஞ்சம் வசதிக்குறைவுதான். ஆனால் அதை ஒரு விடுமுறைவேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடிந்தால் ரசிக்கலாம். மேலைநாடுகளில் பண்ணைவீடுகளில் தங்குவதை ஒரு சுற்றுலாவாகவே செய்கிறார்கள். ஈரோடு டிசம்பரில் இதமான தட்பவெப்பம் கொண்டிருக்கும். பிப்ரவரியில் கோடை தொடங்கிவிட்டிருந்தது.
புதியவாசகர் சந்திப்பின்போது எந்த விதமான திட்டமும் இல்லாமல் கேள்வி-பதில் என உரையாடலாம் என்பதே முதலில் நான் எண்ணியிருந்தது. அவ்வாறுதான் தொடங்கினோம். ஆனால் மெல்லமெல்ல அதற்கு ஒரு முறைமை உருவாகி வந்துவிட்டிருந்தது. இலக்கியத்தின் அடிப்படைகள், வெவ்வேறு இலக்கியவடிவங்களைப் பற்றிய அறிமுகங்கள், இலக்கிய வரலாற்றுச் சித்திரங்கள் என்றே உரையாடல் எப்போதும் அமைகிறது. பெரும்பாலான இளம் வாசகர்கள் எழுதக்கூடியவர்களும் என்பதனால் அவர்களின் எழுத்துக்களை விவாதிப்பது அதில் சேர்ந்துகொண்டது.
இந்த ஆண்டு ஒரு சிறப்பு விருந்தினர். பணமே இல்லாமல் கஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை பயணம் செய்யும் சிரிஷ் யாத்ரி பற்றி எழுதியிருந்தேன். அவர் சென்னைக்கு நண்பர் செந்தில் இல்லம் வந்து அங்கிருந்து பாண்டிச்சேரி திருச்சி என நம் நண்பர்களில் விருந்தினராக பயணம் செய்து ஈரோடு வந்திருந்தார். அங்கிருந்து மதுரை ராமேஸ்வரம் வழியாக கன்யாகுமரி சென்று தன் பயணத்தை நிறைவுசெய்யவிருக்கிறார். அவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவருடன் ஒரு சிறிய உரையாடல். அவருடைய பயண அனுபவங்கள் பற்றி. உங்களுக்கு எங்கேனும் உயிராபத்து இருந்ததா என்ற கேள்விக்கு அவர் சிரித்தார். கிருஷ்ணனிடம் ‘இந்தியாவில் பயணம் செய்யாதவர்கள் அதன் ஆபத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பயணம் செய்பவர்கள் மக்களின் வரவேற்பைப்பற்றிப் பேசுவார்கள்’ என்றார்.
சனி காலை பத்துமணிமுதல் இரவு பத்தரை மணிவரை உரையாடல். சனி மாலை ஒன்றரை மணிநேரம் நீண்ட நடை. ஞாயிறு மதியத்துடன் நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக முடிந்தது. சிலர் கிளம்பிச் சென்றார்கள். எஞ்சியவர்கள் இரவு ஏழுமணி வரைக்கும் இருந்தனர். நண்பர்சந்திப்புக்கு உரிய சிரிப்பும் கொண்டாட்டமுமாகச் சென்றது நாள். இரவு எட்டு ஐம்பதுக்கு எனக்கு நாகர்கோயில் ரயில். இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் எஞ்சியவர்களுக்காக நாமக்கலில் வரும் மார்ச் மாதம் 16,17 தேதிகளில் ஒரு சந்திப்பை ஒருங்கிணைக்கலாமா என நண்பர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?