நெல்லை கட்டண உரை தந்த நம்பிக்கையில் சென்னையிலும் ஒர் உரைக்கு ஒழுங்குசெய்யலாம் என்று நண்பர் அகரமுதல்வன் சொன்னார். ஆகவே வரும் மார்ச் 2 அன்று ஏற்பாடாகியிருக்கிறது.
இடம் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம் [எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரி எதிரில்]
‘மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?” என்று தலைப்பு. சென்ற ஒருநூற்றாண்டில் நமக்கு மரபுடனான உறவு எவ்வண்ணம் கட்டமைக்கப்பட்டது என்பதை விவாதிக்க விரும்புகிறேன். வழக்கம்போல இலக்கியப் படைப்பாளி என்னும் என் எல்லைக்குட்பட்டு, இலக்கியதினூடாக.
கட்டண உரை என்பது பேசுபவரும் கேட்பவரும் அந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதுதான். ஆழ்ந்த உரை ஒன்றை நிகழ்த்தவும் கேட்கவும் தங்களுக்குத் தாங்களே ஓர் ஆணையைப் போட்டுக்கொள்வது அது. பொதுவாக இன்றைய இலக்கியக் கூட்டங்கள் வெறும் சம்பிரதாய நிகழ்ச்சிகளாக ஆகிவிட்டிருக்கின்றன. அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக. தயாரிப்பில்லாமல் பேசுபவர்களும் அக்கறையில்லாமல் பாதியில் வந்து அமர்ந்து முடிவதற்குள் எழுந்துசெல்பவர்களுமாக கேட்பவர்களும் கூட்டங்களைக் கீழிறக்குகிறார்கள். அதற்கு எதிரான ஒரு முயற்சியாகவே கட்டண உரை என்னும் எண்ணம் எழுந்தது. எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் நிகழ்த்தும் இத்தகைய உரைகள் தொடர்ந்து நிகழ்வது ஓர் ஆக்கபூர்வமான மாற்றத்தை உருவாக்கும் என நினைக்கிறேன்
என் நண்பர்களும் வாசகர்களும் ஆதரவளித்து நிகழ்ச்சி வெற்றிபெறச் செய்யவேண்டும் என விரும்புகிறேன்
தொடர்புக்கு 9962371849
நுழைவுச்சீட்டினை இணையத்தளம் வழியாகவும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். டிஸ்கவரி புத்தக நிலையம் மற்றும் பனுவல் புத்தக நிலையத்திலும் பணம் செலுத்தி பெறலாம்.