நீர்க்கடன்

water

அன்புள்ள ஜெ.,

தங்களுடைய ”நீர்கூடல் நகர்” வழக்கம் போலவே சிறப்பாக, பொறாமையை அல்லது ஆற்றாமையைக் கிளப் புவதாக  இருந்தது. வாழ்க்கையை வாழ்கிறீர்கள் அதன் உண்மையான அர்த்தத்தில். போகட்டும். என்னுடைய கேள்வி வேறு? போன வருடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாவ் மற்றும் ஹாலிவுட் நடிகர் வில்பர்ன் ஸ்மித் போன்றோர் காசி மற்றும் கயாவிற்கு வந்திருந்தனர் தம்முடைய உறவினர் மற்றும் நண்பர்களுக்காக நீர்க்கடன் செலுத்த.

என் அம்மா கூட சொல்லிக்கொண்டேயிருப்பார் “உயிரோடு இருக்கும்போது யார் வேண்டுமானாலும் சாப்பாடு போடலாம்.ஆனால், போனப்புறம் பிள்ளைதான் போட்டாகணும். குழந்தைகள்லாம் நன்னா இருக்க வேண்டாமா” என்று.என் மாமா நூறு திவசங்களுக்கு மேல் போட்டவர். தள்ளாத வயதிலும் – பார்ப்பவர்களுக்கு இவருடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கமே திவசம் போடுவதுதானோ என்று தோன்றும் அளவுக்கு – இன்றும் விஸ்தாரமாகச் செய்து கொண்டிருப்பவர்.

நான் உங்கள் எழுத்துக்களைப் படிப்பது என் அம்மாவுக்குத் தெரியும்.அதனால்தானோ என்னவோ நான் ஒழுங்காக திவசம் போடுவேனோ என்று சந்தேகமும் உண்டு.’என்னைக்கின்னு சொல்லு.வாத்தியாரைக் கூப்பிட்டு trial திவசம் போட்டுக்காட்டுகிறேன்’ என்றும் சொல்லி சிரிப்பில் முடித்து விடுவேன்.

என்னுடைய வாதம் “எனக்கு திவசம் போடாவிட்டால் பிடிசாபம் ” என்று யாராவது வாரிசுகளைச் சபிப்பார்களா? என்பது. ஆனால் அதற்கும் ஒரு புராணம் சொல்கிறார்கள்.பித்ருக்களின் உலகத்தின் பிரஜைகள் நீர்க்கடன் பெறாமல் அவதியுறும் பொழுது,அவர்களுடைய அதிபதிதான் பித்ருக்களின் சார்பாக வாரிசுகளுக்கு சாபம் கொடுப்பார் என்கிறார்கள்.

தகழியின் கயிறு நாவலில் ஒரு இடத்தில் தந்தை சாகும் தறுவாயில் தன்னுடைய கம்யூனிஸ்டு மகனிடம் தனக்கு நீர்க்கடன் கொடுக்கச் சொல்வார். தனக்கு அதில் நம்பிக்கை கிடையாதே? என்பான் மகன். அதனால் பரவாயில்லை. நம்பிக்கை இல்லாவிட்டாலும் கொடு என்பார். நீங்கள் பல முறை காசிக்குப் போயிருக்கிறீர்கள். உங்கள் வெண்முரசிலும் பல இடங்களில் நீர்க்கடனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.உங்கள் தாய்,தந்தைக்கு நீர்க்கடன் செலுத்த வேண்டும் என்று தோன்றியதில்லையா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

என் குடிவழக்கப்படி என் மூத்தவர்தான் நீத்தார் கடன்கள் செய்யவேண்டும் – ஆடி அமாவாசை அன்று மட்டும். அவர் அதை முறையாக செய்கிறார். மற்றவர்கள் செய்யவேண்டியதில்லை. முதல்முறை காசி சென்றால் மட்டும் ஒரு நீர்க்கடன் செய்யவேண்டும், அதை செய்திருக்கிறேன்.

சடங்குகளை பலகோணங்களில் பார்க்கலாம். நேரடியான பொருளில், மரபார்ந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளலாம். இங்கே அளிக்கப்படும் அன்னமும் நீரும் எங்கோ இருக்கும் முன்னோரை சென்று சேர்கிறது என கருதலாம். அதை செய்யாவிட்டால் அவர்கள் துயருறுவார்கள், பழிசேரும் என நினைக்கலாம். அது நம்பிக்கையின் வழி. மதநம்பிக்கையினூடாக செல்பவர்களுக்குரியது. நீங்கள் நம்பிக்கையின் வழியை தெரிவுசெய்திருக்கிறீர்கள் என்றால் அதை செய்யலாம். அப்போது அதை பகுத்தறிவதோ விவாதிப்பதோ வீண்தடை மட்டுமே.

அறிவின் பாதையினூடாகச் செல்பவர்கள் நம்பிக்கை சார்ந்து சடங்குகளை அணுகுவதில்லை. அச்சடங்கை அவர்கள் தங்கள் வரலாற்றறிவால், பண்பாட்டறிவால், நடைமுறைநோக்கால் பகுத்தறிந்து ஏற்கலாம். இல்லையேல் மறுக்கலாம். அத்வைதிகளில் கணிசமானவர்கள் இத்தகைய எல்லா சடங்குகளையும் விலக்குபவர்கள்.

ஆனால் நீத்தார் சடங்கை ஒரு குறியீட்டுச் செயலாக எடுத்துக்கொள்ளலாம் என்பது என் எண்ணம். சென்றவர்களை இருப்பவர்கள் எண்ணிக்கொள்வதனூடாக ஒரு நீடித்த தொடர்ச்சியை உருவாக்குவது அது. என்றுமிருக்கும் காலத்தின் ஊழின் அறத்தின் வடிவென ஓடும் நதிகளிலோ நிலைகொள்ளும் கடலிலோ தோன்றி மறையும் மானுடரை கரைப்பது. அது ஓர் ஆழமான உளநிறைவை அளிக்கிறது.

அச்சடங்கை செய்வதனூடாக நாம்  அதை நம் ஆழத்தில் நாமே பதியவைத்துக்கொள்கிறோம். தர்க்க அறிவின் படலத்தைக் கடந்து ஒன்றை ஆழுள்ளத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி குறியீடுகள், படிமங்கள்தான். சடங்குகள் எல்லாமே குறியீட்டுச்செயல்பாடுகள். நான் குறியீட்டுச்செயல்பாடாகப் பார்க்கும் கோணம் கொண்டவன், அந்த குருமரபைச் சேர்ந்தவன். சடங்குகளில் மூழ்குவதில்லை, சடங்குகளில் எனக்குத் தேவையெனத் தோன்றுவனவற்றை துறப்பதுமில்லை.

இரு வழிமுறைகளில் உங்கள் இயல்புக்கு ஏற்ற ஒன்றை, உங்கள் வழிகாட்டிகளால் அளிக்கப்பட்ட ஒன்றை நீங்கள் கொள்ளலாம். அல்லது மறுப்புநோக்கை எடுத்துக்கொண்டு செய்யாமலிருக்கவும் செய்யலாம். உங்கள் பாதை என்ன என்பதை பிறர் ஆணையிடமுடியாது அல்லவா? ஆனால் நீங்கள் எந்த நிலை எடுத்திருந்தாலும் அது ஏன் என எண்ணி தெளிவுகொண்டிருக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஉச்சவழு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77