கும்பமேளா கடிதங்கள் 4

Day5-128

நீர்க்கூடல்நகர் – 6

நீர்க்கூடல்நகர் – 5

நீர்க்கூடல்நகர் – 4

நீர்க்கூடல்நகர் – 3

நீர்க்கூடல்நகர் – 2

நீர்க்கூடல்நகர் – 1

ஜெ

தங்களின் நீர்கூடல் கட்டுரை படித்தேன். அருமை .காற்றின் மொழி திரைப்படத்தில் நாயகி ஹரித்வார் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வர், ஆனால் பிறகு அவர் பயணம்செல்லவில்லை என்றும் அம்மாவிடமிருந்து கேட்ட அனுபவத்தை சொன்னதாகவும் சொல்வார்  தங்களின் பயண கட்டுரைகள் எனக்கு அவ்வாறு சென்ற அனுபவங்களை அளிக்கிறது. ஸ்வச் பாரத் சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கேட்பது சந்தோஷம்.

தற்போதைய நடுத்தர வர்க்கத்தினர் இது போன்ற திருவிழாக்களில் அதிகம் ஈடுபடுவதில்லை என்று எழுதியிருந்தீர்கள் இதுவும் நாம் விவசாய சமூகத்திலிருந்து சேவை , தொழில் மற்றும் அலுவலக சமூகமாக மாறிவருவதினால்  உண்டாகும் ஒரு விளைவாக இருக்கும் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் விடுமுறை நாட்களுக்காவது இது போன்ற திருவிழாக்களுக்கு சென்று வரலாம். நமது நகரங்களில் தற்பொழுது திருவிழாக்கள் பிரதோஷ வழிபாடு மற்றும் கிரக பெயர்ச்சி வழிபாடுகளாக மாறியிருப்பதாக நினைக்கிறன்

ராம்குமரன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீர்கூடல்நகர் பதிவுளை வாசித்த போது நானும் உங்களுடன் அங்குதானிருந்தேன் .கடந்த மாதம் நாகர்கோயில் திருச்சிலுவை கல்லூரி விழாவில் பேசும்போது கும்பமேளா செல்லவிருப்பதைப் பற்றி சொன்னீர்கள் .அப்போது ஆசை எழுந்தது உங்களுடன்  வரவேண்டுமென.அந்த பயண தேதிகளில் கண்டிப்பாக பணிக்கு அழைத்துவிடுவார்கள் என எனக்கு தெரியும் .உங்கள் பதிவுகள் வழியாக கும்பமேளா என்றால் என்ன என்பதை விரிவாக தெரிந்துகொண்டேன் .பிராப்தம்  இருந்தால் நேரில் காணும் வாய்ப்பு அமையும் எனும் சாமாதானம் இப்போது .

நீர்கூடல் பதிவுகளை தொடர்ந்து நீங்கள் 2010 ஆண்டு சென்றுவந்த ஹரித்துவார் கும்பமேளாவின் எட்டு பதிவுகளையும் வாசித்தேன் .

கங்கா ஆரத்தியில் //அதில் ஒரு பெண் ஒருகையால் பூசைத்தட்டைச் சுழற்றியபடி மறுகையால் தன்னை செல்பேசியில் படமும் எடுத்துக்கொண்டிருந்தாள். அசட்டுத்தனத்தின் உச்சம். ஆனால் அங்கே பலர் செல்பேசியில் படம் எடுத்துக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டினர். பெரும்பாலும் அவர்கள் அனைவருமே படித்த உயர்குடியினர். எளிய கிராம மக்கள் மாறாத பக்திப்பெருக்குடன் அதில் ஈடுபட்டிருந்தார்கள்.//

இந்த காட்சிகளை நான் 2010 அக்டோபர் மாதம் ஹரித்துவாரில்  நடக்கும் கங்கா ஆரத்தியில் கண்டேன். ஆனால் முன்வரிசையில் இருந்து பாடிய பெரும்பாலானவர்கள் சேலை உடுத்து,நெற்றியில் குங்குமம் வைத்த வெளிநாட்டு பெண்கள் .இதை நீங்களும் பார்த்திருப்பீர்கள் .சேலை கட்டிய ஒரு வெள்ளைகார பெண்ணிடம் பெயர் என்ன என கேட்டேன் லக்ஷ்மி என அழகாக உச்சரித்தாள் ,அவள் தனது தந்தையுடன் ஜெர்மனியிலிருந்து வந்திருந்தாள் . மேலும் இன்றுள்ள யோகா அமைப்புகளின் மையங்களிலும்,பல ஆன்மீக அமைப்புகளிலும்  வந்த நோக்கத்தை விட்டு விட்டு அனேகம்பேர் செல்போனில் ,புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகளாவே வலம் வருகின்றனர் .இரண்டாண்டுகளுக்கு முன்பு மக்காவில் புனித காபாவின் முன் நின்றிருக்கையிலும் பலர் வீடியோ காலில் பேசிகொண்டிருந்ததை பார்த்தேன் .அது ஒரு அரிய வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வாழ்வில் கிடைக்கவாய்ப்பிருக்காது.நீங்கள் சொல்வதுபோல் எளிய மக்கள் மட்டுமே மாறாத பக்தியுடன் ஈடுபடுகிறார்கள் .

// கும்பமேளா எண்ணுவதுபோல் பெரும் திரள் அல்ல அரைகோடி பேர் கூடும் இடத்தில் ஒரு குப்பையை கூட பார்க்கவில்லை ,பல்லாயிரக்கணக்கான குப்பைத்தொட்டிகள். ஆறுநாட்களில் ஒருநாள்கூட ஒருமுறைகூட திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் ஒருவரை பார்க்கநேரவில்லை//.

இதில் மக்களின் ஒழுக்கம் தெரிகிறது .மேலும் எளிய மக்கள் அனேகமாக குப்பையே போடுவதில்லை ,அதற்கு நமது மெரினாவை ஒப்பிட்டு கூறினீர்கள் .நம் ஊர்களில் சிலநூறுபேர் கூடும் கல்யாண வீடுகளில் கூட குப்பையை யாரும் குப்பைதொட்டிகளில் போடும் கலாசாரம் இன்னும் நம்மவர்களுக்கு வரவில்லை .

// ஓர் இனக்குழுவின் தோற்றத்திற்கும் பிறிதொன்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விழியிடுங்கிய சுருக்கங்கள் அடர்ந்த சீனத்து மஞ்சள் முகங்கள். செங்கல்நிறமான சித்தியன் முகங்கள். பச்சைவிழிகளும் பரந்த தாடையும் சிவந்த உதடுகளும் கொண்ட மத்திய ஆசிய முகங்கள். கன்னங்கரிய முகங்கள்.  அனைவருமே இந்துக்களோ பௌத்தர்களோ ஜைனர்களோ சீக்கியர்களோ.//

ஒரு கும்பமேளாவில் முழு இந்தியாவையும் பார்த்துவந்துள்ளீர்கள்.அகோரி ,நாகா பாபாக்களை பற்றி இப்போதுதான் தெரிகிறேன் .ஐந்து உடல் துன்பங்கள் ,ஐந்து உளநிலைகளை கடந்தவர் மட்டுமே மெய்மையை  காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்!” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.

//ஒரு நிர்வாணத்துறவி தனியாக நடந்துசெல்ல அவரை மக்கள் கூட்டம் கூட்டமாக காலில் விழுந்து வணங்கினார்கள். அந்தப்பெருங்கூட்டம் நடுவே  அப்படிச்செல்வதன் உக்கிரமான தனிமை என்னை பீதியுறச்செய்தது. பெரும் பித்து அல்லது முழு விடுதலை இன்றி அது சாத்தியமில்லை.//

சந்தேகமேயில்லை அது முழு விடுதலை தான் .வெட்டவெளியில் குளிரில் படுத்துறங்கி,அங்குள்ள பொது கழிப்பறைகளில் காலை கடன்களை கழித்து,சார்தார்ஜிகளின் உணவுக்கூடத்தில் வரிசையில்(இந்த வரிகளை படிக்கும்போது என கண்கள் நிரம்பியது ) நின்று,வயிறு நெருக்குற அளவு சாப்பிட்டு,கால் கடுக்க நாள்முழுவதும் மனித திரள் நடுவே நடந்து திரியவும் முழு விடுதலை அடைந்த ஒருவாரால் தான் முடியும் .அதை பித்து என என்னால் சொல்ல முடியாது .ஜீன்ஸ் அணிந்து நேரில் காணும் போது சகோதரா என அன்போடு கட்டியணைப்பதும் அதே ஜெயமோகன்தான் .

மணீஷா கொய்ராலாவின் தங்கை போன்ற ஒரு பேரழகிக்கு நேப்பாளிகள் கூடி ஏதோ சடங்கு செய்துகொண்டிருந்தார்கள்.அது என்ன சடங்கு என கேட்டபோது ஷாதி என்றார்கள் .பின்னர் அதை இணையத்தில் திருமணம் என கண்டுபித்தைதை படித்து வாய்விட்டு சிரித்தேன்.

// கும்பமேளா அப்பேரனுபவத்தின் ஒருதுளியை ஒருமுறையேனும் அடைந்த ஒருவர் தவறவிடக்கூடாத ஓர் அருநிகழ்வு.//

அப்பேரனுபவம் பிராப்தம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும் .

எல்லா பயணங்களுக்கு பிறகும் குன்றா ஆரோக்கியத்துடன் இருக்கும். நீங்கள் மேலும் இதுபோல் பயணம் செய்வீர்கள் .நீர்கூடல் ,கும்பமேளா பயணத்தில் உங்களுடன் கலந்துகொண்ட நண்பர்களுக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும் .

ஷாகுல் ஹமீது ,

நாகர்கோயில் .

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61
அடுத்த கட்டுரைஇளம்வாசகர் சந்திப்பு – கடிதங்கள்