அன்புள்ள ஜெ,
ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் இல்லை” என்றவகையான வாதங்களைத்தான் பார்க்க இயலுகிறது. படைப்பின் முக்கிய அம்சமான உன்னதமாக்கல், கவித்துவ தருணங்களை புரிந்துகொள்ள முடியாத தரப்பிலிருந்து வரும் குரல்களாகவே அவற்றை நினைக்கிறேன். இதுபோன்ற வாசிப்பால் அ.முத்துலிங்கத்தை நிராகரிப்பவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன்.
கற்பனையாக ஒரு நிலத்தைச் சித்திரிக்கும் போது எழுத்தாளனுடைய Flavor நிச்சயம் படைப்பிலிருக்கும். அது அவனுடைய ரசிப்புத் தன்மை, அந்தரங்க விரும்பு சார்ந்தது. கலையின் முக்கிய இடமே sublimation தான் என்கிற போது, மேற்கூறிய நிராகரிப்பின் குரல்கள் இரண்டாம் பச்சம்தான். எனினும் எனக்கிருக்கும் கேள்வி ஒரு புனைவு எழுத்தாளன் இவ்வாறான விவாதங்களை எந்த அளவுக்குப் பொருட்படுத்த வேண்டும்? கலையில் இந்தக் கேள்விக்கான பதில்கள் எந்தளவில் உள்ளன?
அன்புடன்
அனோஜன் பலகிருஷ்ணன்
அன்புள்ள அனோஜன்,
ஓர் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சோர்வூட்டும் தருணம் அழகியல்நோக்கே இல்லாத இத்தகைய விமர்சனங்கள்தான். படைப்பை ரசிக்கும் நுண்ணுணர்வோ அதை மதிப்பிடும் அறிவுப்பயிற்சியோ இல்லாத நிலையில் எழுபவை இவை. ஆனால் இலக்கியப் பயிற்சி இல்லாத ஒரு சமூகத்தில், இலக்கியம் சார்ந்த புரிதல்களை உருவாக்க அமைப்புசார்ந்த எந்த முனைப்பும் இல்லாத சூழலில், இலக்கியத்திற்கு எதிராகவே அரசியல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் களத்தில் இதை தவிர்க்கவும் முடியாது.
ஒரு படைப்பை மதிப்பிட அதன் அழகியலே முதன்மை அளவுகோல். ஏனென்றால் முதன்மையாக ஓர் அழகியல்படைப்பாகவே அது எழுதப்படுகிறது – கருத்துத் தொகையாகவோ செய்தித்தொகையாகவோ அல்ல. அழகியல்ரீதியாக படைப்பை மதிப்பிட வாசகனின் அழகுணர்வு, அந்தச்சூழல் அதுவரை உருவாக்கிய பேரிலக்கியங்களின் இருந்து உருவான ஒப்பீடுகள், இலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகள் என மூன்று அளவீடுகள் உண்டு. அவை எவற்றையுமே அறியாத வாசகர்களிடமிருந்தே இந்தவகையான மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன.
இலக்கியப்படைப்பை மதிப்பிடுகையில் அந்த இலக்கிய ஆக்கத்தின் கலைப்பாவனை [Artistic pretension] இலக்கிய வகைமை [Literary genre] வடிவச்சீர்மை [Structural symmetry] உணர்வுநிலை [Emotionality] தரிசனம் [Vision] ஆகியவற்றை அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கியவிமர்சனத்தில் இருநூறாண்டுகளாக சொல்லப்பட்டுவரும் கருத்து.
உதாரணமாக ஒரு கலைப்படைப்பு தன்னை ஒரு சுயசரிதையாக, அல்லது வரலாறாக, அல்லது கனவாக புனைந்துகொள்ளும் என்றால் அதை அவ்வாறே ஏற்றுக்கொண்டபின்னர்தான் அதை அணுகமுடியும். அந்த புனைவுப்பாவனைக்குள் அதன் கூறுமுறையின் ஒழுக்கும் அமைப்பும் எப்படி நிலைகொள்கிறது என்பதே வாசகனின் கேள்வி.
அப்படைப்பு யதார்த்தவாத அழகியல்கொண்டதா, மிகைபுனைவுத்தன்மை கொண்டதா, அல்லது அனைத்துவகைமைகளையும் கலக்கும் செவ்வியல்தன்மையை நோக்கி செல்கிறதா என்பது வாசகன் அதை மதிப்பிடுவதற்கான அளவுகோலில் இரண்டாவது. ஒவ்வொன்றுக்கும் உரிய இயல்புகளும் இலக்குகளும் வேறுவேறு.
அதன்பின்னரே அப்படைப்புக்குரிய வடிவச்சீர்மையை மதிப்பிடமுடியும். யதார்த்தவாதப்படைப்பு அதற்குள் ஒரு கனவை முன்வைத்தால் வடிவ ஒருமையை இழக்கிறது. நடைமுறைவாழ்க்கையைச் சொல்லும் படைப்புக்குரிய வடிவச்சீர்மை அல்ல கட்டற்ற கனவுத்தன்மைகொண்ட படைப்புக்குரியது. அடிப்படையில் வடிவச்சீர்மையையே அழகியல் விமர்சகர்கள் மதிப்பீட்டின் மாறா அளவுகோலாக கொள்வார்கள்.
அதேபோல எந்த அழகியல்வகைமை என்பது உணர்வுநிலையை மதிப்பிட மிக இன்றியமையாதது. கற்பனாவாதப் படைப்புகளில் உணர்வுநிலைகள் பொங்கிப் பீரிடக்கூடும். இயல்புவாதப் படைப்புகளில் அவை மிகமிக மெலிதாக கோடிட்டுக் காட்டப்படும்.
இவை அனைத்தினூடாகவும் ஒரு படைப்பு சென்றடையும் தரிசனம் என்ன, அது அப்படைப்பின் அனைத்துக்கூறுகளினூடாகவும் திரண்டுவருவதாக உள்ளதா, அந்தப் புனைவுச்சூழலால் முழுமையாக முன்வைக்கப்படுகிறதா என்பது இறுதியான வினா.
படைப்பின் மேல் அரசியல், சமூகவியல், தத்துவம் சார்ந்த கேள்விகளை முன்வைக்கக்கூடாதா? முன்வைக்கலாம், ஆனால் அழகியல்ரீதியாக நிலைகொண்டுவிட்ட படைப்பின்மீதுதான் அவ்வினாக்கள் எழவேண்டும். அழகியல்ரீதியான தோல்வியடைந்த படைப்பின்மேல் பிணஆய்வு செய்வதில் பொருளில்லை. ஆகவேதான் எச்சூழலிலும் இலக்கிய அழகியலே முதன்மை திறனாய்வுமுறையாக இருக்கவேண்டும் எனப்படுகிறது. உலகின் எந்த இலக்கியச்சூழலிலும் அப்படித்தான் இன்றுவரை உள்ளது.
அழகியல்விமர்சனம் எனும்போது அது வெறுமனே பாடப்புத்தகக் கொள்கைகளை இயந்திரத்தனமாக போட்டுப் பார்ப்பது அல்ல. கல்வித்துறை சார்ந்தவர்கள் அழகியல்விமர்சனத்தின் அளவுகோல்களை செக்கேது சிவலிங்கமேது என அறியாமல் போட்டுப்பார்ப்பதை நாம் காணலாம். நான் மேலே சொன்னதுபோல அது வாசகன் என தன்னை நிலைநிறுத்திக்கொள்பவனின் தனிப்பட்ட ரசனையையே முதன்மையாக சார்ந்துள்ளது.
இந்த இலக்கியவிமர்சன அணுகுமுறையில் எங்கும் ‘இது நிசம்மாவே இப்டித்தானா?” பாணி விமர்சனத்திற்கு இடமில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்பு சுந்தர ராமசாமி என்னிடம் இதைப்பற்றி சொன்னார். அப்போதே அவரிடம் முப்பதாண்டுகளுக்கு முன்னரே க.நா.சு சொன்னதைத்தான் சொல்வதாக சொன்னார். சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் எங்கே இருக்கிறது என ஒரு விவாதம் அன்று ஓடியது. க.நா.சு சொன்னாராம், “அப்டி தேடிப்போய் பாக்கமுடியும்னா நாவல் எதுக்கு?” என்று.
தி.ஜானகிராமனின் கும்பகோணம் பற்றிய சித்தரிப்பை சொல்லும்போது சுந்தர ராமசாமி “அது ஜானகிராமனோட கும்பகோணம். அதை மேப்பா வச்சுகிட்டு போனா நாம வேற பல ஊர்களுக்கு போயிடுவோம்” என்றார். சுந்தர ராமசாமியின் நாகர்கோயில் எப்போதுமே இருந்ததில்லை, புளியமரத்தின் கதையில் மட்டுமே அது உள்ளது. ஒரு படைப்புக்கு அப்படி வெளியே திட்டவட்டமான புறவயத்தன்மை இருக்கும் என்றால் அது இலக்கியத்தகுதி அற்றது என்றே சுந்தர ராமசாமி வாதிடுவார்.
ஒரு வட்டார வழக்கை ‘அப்படியே’ பதிவுசெய்வதற்கு இலக்கியம் தேவை இல்லை. அப்படி பதிவுசெய்தால் அதில் எந்த நுட்பமும் இருக்கவும் இருக்காது. புனைவிலுள்ள வட்டாரவழக்கு செவியால் தொட்டு எடுக்கப்படும் சில நுட்பங்களை ஆசிரியன் கற்பனையால் இணைத்து தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு புனைவுமொழி. கி.ராஜநாராயணன் எழுதுவது புனைவுமொழி. அதே நிலம் அப்படியே பதிவாவது பாரததேவியின் வட்டாரக்கதைப் பதிவுகளில்தான். அதில் கலையம்சம் இருக்காது, ஆவணநேர்த்தி மட்டுமே இருக்கும்.
ஒரு நகரை, ஒரு சமூகத்தை ஒரு படைப்பாளி எழுதியபின் நேரடியாக அங்கே சென்றும் அதை காணமுடியும் என்றால் அவர் ஆவணப்படுத்தும் இதழாளர் மட்டுமே. அவருக்கு இலக்கியத்தில் இடமில்லை. இதை நூறாண்டுகளாக இலக்கியத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது என்பது இப்படி ஒரு வினா எழும்போதுதான் புரிகிறது. முப்பதாண்டுகளில் நானே இதை பதினைந்து தடவைகளுக்குமேல் விரிவாக பேசியிருக்கிறேன்.
அ.முத்துலிங்கமும் ஷோபா சக்தியும் உருவாக்கும் ஈழச்சூழல் அவர்களின் கற்பனையால், அவர்களின் தரிசனம் நிகழும்பொருட்டு, உருவாக்கப்பட்ட ஒன்று. அங்கே மெய்யாகவே இருப்பது அல்ல. ஆகவேதான் அவற்றை வாசகர் தங்கள் கற்பனையில் முழுமைப்படுத்திக்கொள்ள முடிகிறது. அங்குள்ள சூழலை ‘அப்படியே’ எழுதும் பலர் இருக்கிறார்கள். அவர்களை பத்துபக்கம் படிப்பதற்குள் நான்கு சுருள் வைக்கோலை மென்று விழுங்கிய சலிப்பு எஞ்சுகிறது
ஏன் புறவயமான யதார்த்தம் ‘அப்படியே’ இலக்கியத்தில் அமையக்கூடாது, அமைந்தால் அது கலையே அல்ல என்று தலைமுறை தலைமுறையாக அழகியல்விமர்சகர்களும் இலக்கியவாதிகளும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? புறவய யதார்த்தம் என்பது, பருவடிவ உலகம் என்பது அந்த ஒழுங்கும் இலக்கும் அற்றது. எந்த அமைப்புக்குள்ளும் அடங்காதது. எல்லா நோக்குகளுக்கும் இடமளிக்கக்கூடியது. கட்டற்றது. வாழ்க்கையைப்போலவே தனக்கென பொருள் ஏதும் அற்றது. இலக்கியம் பொருளற்ற வாழ்வுப்பெருக்கில் பொருளை உருவாக்கும் முயற்சி. ஆகவே பொருளற்ற பருவடிவ உலகில் இருந்து அது தனக்குரியவற்றை மட்டும் தெரிவுசெய்து அடுக்கி பொருளேற்றம் செய்யப்பட்ட ஒர் உலகை தன் படைப்புக்குள் உருவாக்கிக் காட்டுகிறது. அது புறவுலகம்தான், ஆனால் ஆசிரியனின் அகவுலகால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆகவே அது பழைய சைவமொழியில் சொல்லப்போனால் அகப்புறம். புறப்புறம் என்பதற்கு இலக்கியத்தில் இடமே இல்லை.
இலக்கியத்தில் இலங்கை என்னும் நிலம் இல்லை. ஷோபா சக்தியின் இலங்கையும் அ.முத்துலிங்கத்தின் இலங்கையும் ஆசி.கந்தராசாவின் இலங்கையும்தான் உள்ளது. புறவுலகில் ‘சும்மா’ ஒரு பொருள் அங்கே இருக்கமுடியும், இலக்கியத்தில் பொருளற்ற பொருள் என ஏதுமில்லை. அதை பலவகையில் இலக்கியவிமர்சன முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள். இலக்கியம் உருவாக்கும் வெளியில் அனைத்துப்பொருட்களும் குறியீடுகளே என்று ஒரு கூற்று உண்டு. இலக்கியத்தின் தோட்டத்தில் எல்லா மரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று ஒரு கூற்று உண்டு. ஓர் எழுத்தாளனின் புனைவில் எழும் புறவுலகக் காட்சி அவனுடைய அகவுலகத்தின் பருவடிவ வெளிப்பாடே, அவனுடைய உணர்ச்சிகளையும் தரிசனத்தையும் தான் ஏற்றுக்கொண்டதே என்பதை இலக்கியவிமர்சனம் நூறாண்டுகளாக சொல்லி வருகிறது.
நான் சுந்தர ராமசாமி சொன்ன ஓர் உவமையை அடிக்கடி சொல்வதுண்டு. குழந்தைகள் வீட்டுக்குள் ஒரு தெருவை உருவாக்கி விளையாடும். டம்ப்ளர் பேருந்தாகும். ஸ்பூன் சைக்கிள் ஆகும். ஊடே அக்குழந்தையின் கட்டுப்பாட்டில் இல்லாத எறும்புகளும் அலையும். அது புறவுலகமா? அல்ல, அக்குழந்தையின் அகம். ஆனால் புறப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் விரிந்த ஒரு தத்துவநோக்கில் அதற்கும் வெளியே மலைகளும் கடல்களுமாக விரிந்திருக்கும் புறவுலகுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதுவும்கூட அகப்புறம் மட்டுமே.
உங்கள் கேள்வியை இப்படி சுருக்கிக் கொள்கிறேன். இலக்கியவாதி கற்பனையாக ஒரு நிலத்தையும் மக்களையும் உருவாக்கிக் கொள்ளலாமா? விடை இதுதான், கற்பனையால் மட்டும்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அது அவருடையது மட்டுமாக, அவர் படைப்புக்குள் மட்டுமே இருப்பதாக மட்டுமே இருக்கவேண்டும். அவருடைய அகவுலகை, தரிசனத்தை சென்றடைவதற்கான பாதைதான் அது. அவர் தன்னை நிகழ்த்திக்கொள்ள உருவாக்கிய களம் மட்டும்தான் அது. அவருடைய கற்பனையைத் தூண்டும் கூறுகளும், அக்கற்பனையை வாழ்க்கையெனக் கட்டமைக்கத் தேவையான செய்திகளும் மட்டுமே வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படவேண்டும். அதற்குமேல் வாழ்க்கையுடன் நேரடித் தொடர்பிருந்தால் அது இலக்கியம் அல்ல.
இந்த அடிப்படைகள் அனைத்தும் இலக்கியவாசகனுக்காகச் சொல்லப்படுகின்றன, அவனுக்கு இவை புரியும். புரிந்துகொள்ளும் திராணியற்றவர்களே எண்ணிக்கையில் மிகுதி. இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் அந்தப் பெரும்பான்மையின் கூச்சலை அதிகமாகக் கேட்க நமக்கு வாய்க்கிறது. அவர்கள் இல்லை என்றே எண்ணிக்கொள்வதுதான் ஒரே வழி.
ஜெ