லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா

lax

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்ட காந்தியர் பலர். லக்‌ஷ்மி சந்த் ஜெயின் என்னும் எல்.சி.ஜெயின் அவர்களுள் முக்கியமானவர்.

விடுதலைப் போராட்ட வீர தம்பதியினர் ஃபூல் சந்த் ஜெயினுக்கும், சமேலி (மல்லிகை) தேவிக்கும், 1925 ஆம் ஆண்டு, ஆள்வார் என்னும் சிற்றரசில் உள்ள பஹதூர்பூர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை ஃபூல் சந்த் ஜெயின், குலத் தொழிலான நகை வணிகத்தில் பயிற்சி பெற்றவர். ஆனாலும், விடுதலை வேட்கை, அவரை காங்கிரஸ் இயக்கத்தை நோக்கித் தள்ளியது.

1929 ஆம் ஆண்டு, தேச விரோத நடவடிக்கைகளுக்காக, காந்திஜி பங்கு பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது, தந்தை ஃபூல்சந்த் ஜெயின் கைது செய்யப்பட்டார். சிறையில், புரட்சிகர இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் குழுவினால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்தார். பகத் சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்றோரை உறுப்பினர்களாகக் கொண்ட புரட்சிக் குழு அது. சந்திரசேகர ஆஸாத்துக்கு, இவர்தான் முதல் கைத்துப்பாக்கியை வாங்கித் தந்தார் எனக் கூறப்படுகிறது.

சிறையில் புரட்சிகர இதழான “அர்ஜுன்” பத்திரிகையின் ஆசிரியர் இந்திர வித்யவாச்சஸ்பதியைச் சந்தித்த ஃபூல் சந்த் ஜெயின், பத்திரிகையாளரானார். நகை வணிகம் விலகி, அரசியலும் பத்திரிகைத் தொழிலும் அவரது வாழ்க்கையாயிற்று.

1932 ஆம் ஆண்டு, சமேலி தேவி, கணவர் ஃபூல் சந்த் ஜெயினுடன் வாதிட்டு, அந்நியத் துணி விலக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு,  லாஹூர் சிறையில் அடைக்கப்பட்டார்.   பொதுவெளிக்கே அதிகம் வராத ஜெயின் சமூகத்தில், ஒரு பெண் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றது, காந்தி என்னும் ஆளுமை நிகழ்த்திய அதிசயங்களில் ஒன்று. தன் அன்னை சிறை சென்றதால், மகன் லக்‌ஷ்மி சந்த் ஜெயின், பள்ளியில் மிகப் பிரபலமானார்.

தந்தை ஃபூல்சந்த் ஜெயின், பின்னர், தில்லிக் காங்கிரஸின் செயலாளரானார். இந்தப் பதவி அவரை, காந்திஜி, மற்றும் நேருஜியின் அருகில் கொண்டு சென்றது. அதனால், சிறுவன் லக்‌ஷ்மி சந்த் ஜெயின், இருவரையும் மிக அருகில் கண்டு வளர்ந்தான்.

வெள்ளையனே வெளியேறு!

1942 ஆம் ஆண்டு, காந்திஜி, “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் துவங்கினார். அதன், “செய் அல்லது செத்து மடி” என்னும் அரசியல் கோஷம், அப்போது 17 வயது இளைஞரான லக்ஷ்மி சந்த் ஜெயினுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தில்லி இந்துக் கல்லூரியில் படிக்கத் துவங்கியிருந்த அவரும், நண்பர்களும், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியின் தொலைபேசிக் கம்பிகளைத் துண்டித்தார்கள். அருணா ஆஸஃப் அலி என்னும் புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர், விடுதலை வீரர்களின் குழந்தைகளை ஒருங்கிணைத்து, போராட்டச் செய்திகளைக் கொண்டு செல்லவும், சிறு வேலைகளைச் செய்யவும், நிதி திரட்டவும் பணித்தார். சில சமயங்களில், பொது இடங்களில் குண்டு வைப்பது போன்ற பயங்கர வாதச் செயல்களும் உண்டு. லக்‌ஷ்மி சந்த் ஜெயின் அந்தக் குழுவில் ஒருவர்.  இந்த ரகசிய வேலைகளுக்காக, லக்‌ஷ்மி சந்த் ஜெயின், சந்தோஷ் எனப் பெயர் வைத்துக் கொண்டார்.

ஒரு நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியரும், காந்திஜியின் மகனுமான தேவதாஸ் காந்தி, லக்ஷ்மிச் சந்த் ஜெயினை அழைத்தார்.  அப்போது, ஆகா கான் மாளிகையில் காந்திஜி காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் துவங்கியிருந்தார். அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், முல்தான் (இன்றைய பாகிஸ்தான்) சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்னும் செய்தியை, முல்தான் காங்கிரஸ் தலைவர் கேவல் கிஷன் மூலம் சொல்லி அனுப்ப வேண்டும் என்னும் பணியைச் செய்யப் பணித்தார். அதிர்ஷடவசமாக, முல்தான் ரயில் நிலையத்தில், ரயிலில் கைதியாக அமர்ந்திருந்த தன் தந்தையையே லக்‌ஷ்மி சந்த் ஜெயின் ரகசியமாகச் சந்தித்து, தகவல் சொல்லித் திரும்பினார். தில்லி ஹிந்துஸ்தான் டைம்ஸின் அலுவலகத்துள் நுழைந்த, லக்‌ஷ்மி சந்த் ஜெயின், ஒரு பயங்கரச் செய்தியைக் கண்டார். “காந்திஜி மறைந்தார்” என, கருப்புக் கட்டமிட்டு, ஹிந்துஸ்தான் டைம்ஸின் முதல் பக்க டம்மி அங்கே இருந்தது. “பயப்படாதே.. பாபுஜி சாகவில்லை. நிலைமை மோசமாக இருக்கிறது. ஒரு செய்தித் தாளாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் தயாராக இருக்கிறது..”  என ஆறுதல் சொன்னார் தேவதாஸ் காந்தி.

1945 ஆம் ஆண்டு இறுதியில், தந்தை ஃபூல்சந்த் ஜெயின், சிறையில் இருந்து விடுதலையானார்.  20 வயதான லக்‌ஷ்மி சந்த் ஜெயினுக்கு திருமணப் பேச்சைத் துவங்கினார். ஏற்கனவே, ஒரு முறை திருமணம் ஆகி, அதை,விடுதலைப் போராட்ட்த்தைக் காரணம் சொல்லி, மறுத்திருந்த நிலையில், மீண்டும் திருமணப் பேச்சு அவருக்குப் பிடிக்கவில்லை. மறுத்து, தந்தையுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்களுடன் வசிக்கத் துவங்கினார்.  மாணவர் காங்கிரஸில் மிகத் தீவிரமாக ஈடுபடத் துவங்கினார்.

ஆசிய உறவுகள் மாநாடு!

விடுதலை மிக அருகில் என உணர்ந்த ஜவஹர்லால் நேரு, சர்வ தேச அரங்கில் இந்தியாவின் தகுதியை நிறுவிவிட வேண்டும் என்னும் நோக்கில், “ஆசிய உறவுகள் மாநாடு” என்னும் ஆசிய நாடுகளின் மாநாட்டை, 1947 ஆம் அண்டு மார்ச் மாதம்  நடத்தத் திட்டமிட்டார்.  அந்த மாநாடு, புராணா கிலா (பழைய கோட்டை) என்னும் தில்லியின், புராதன கோட்டை வளாகத்தில் நடக்கவிருந்த்து. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க, அன்றைய  தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் சர்.மார்ட்டிமர் வீலர் தயங்கினார். மிகவும் மதிப்பு வாய்ந்த தொல்பொருட்கள் உள்ள இடத்தில் 10 ஆயிரம் பேர் கூடினால், அவை நாசம் அடைந்து விடும் என்ற பயந்தார். அவரைச் சமாதானப்படுத்தி, தில்லிப் பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்றை அமைத்து, புரானா கிலாவுக்கு எந்த சேதமுமின்றி, அந்த மாநாட்டை நடத்த உதவியாக இருந்தார் லக்‌ஷ்மிச் சந்த் ஜெயின்.

விடுதலை அருகில் நெருங்க, பிரிவினைக் கலவரங்களில், வட இந்தியா பற்றியெரியத் துவங்கியது.  அவருக்கு ஆபத்து எதுவும் நேர்ந்துவிடக் கூடும் எனப் பயந்த லக்‌ஷ்மி சந்த் ஜெயினின் அன்னை, அவரைத் திரும்பவும் வீட்டுக்கு வர அழைத்தார். அப்போது அவர்கள், சொத்துத் தகராறு காரணமாக, தங்களது சாந்தினி சௌக் கூட்டுக் குடும்பத்தை விட்டு, தில்லி நகருக்கு வெளியே புதிதாக உருவாகத் துவங்கியிருந்த பல்கலைக் கழக நகரில் வசிக்கத் துவங்கியிருந்தார்கள்.

பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகள், இஸ்லாமியர்களைக் கொன்று, தெருவில் வீசி, அவர்களின் வீடுகளை ஆக்கிரமிக்கத் துவங்கியிருந்தார்கள். தெருவில் கிடந்த பிணங்கள் அழுகத் துவங்கின.  சாத்வீக மதத்தில் பிறந்த லக்‌ஷ்மிச் சந்த் ஜெயினும், பி.என். தர் என்னும் அவர் நண்பரும் இணைந்து, பிணங்களை அப்புறப்படுத்தும் பணியைத் துவங்கினார்கள். தந்தை ஃபூல் சந்த், நகராட்சி அலுவலகம் மூலமாக, லாரிகளை வரவழைத்து, துப்புரவுப் பணியாளர்கள் மூலமாக பிணங்களை வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். ஜெயின்கள், காயஸ்த், பனியாக்கள் என 3 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்த தில்லி, அகதிகள் வருகையினால் பஞ்சாபிகளின் நகரமாகத் துவங்கியது.

அகதிகள் முகாம் நிர்வாகம்!

1946 ஆம் ஆண்டு, தன் இளங்கலைக் கல்வியை முடித்திருந்தார் லக்‌ஷ்மிச் சந்த் ஜெயின். உடல் நிலை மற்றும் அரசியல் ஈடுபாடு காரணமாக, ஒரு ஆண்டு படிக்க வில்லை. பின்னர் முதுகலை பயில மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். 1947 செப்டம்பர் மாதம் ஒரு நாள் நண்பர்களுடன் கன்னாட் ப்ளேஸ் காஃபி ஹௌஸில் பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு, விடுதலைப் போராட்ட வீரரும், கிருப்ளானியின் மனைவியுமான சுசேதா கிருபளானியிடம் இருந்து அழைப்பு வந்தது.

தில்லி கிங்ஸ்வே அகதிகள் முகாமில் இருந்த அகதிகள் சிலரும், அந்த முகாமைப் பார்த்துக் கொள்ள வேண்டிய காங்கிரஸ் தொண்டர் சிலரும் சேர்ந்து, ஒரு இஸ்லாமியரை இழுத்து வந்து, காந்திஜி நடத்திக் கொண்டிருந்த கூட்டத்தின் முன்பு வைத்து அடித்தே கொன்றார்கள். போலீஸ் வந்து, குற்றத்தில் ஈடுபட்ட அகதிகளையும், காங்கிரஸ் ஊழியர்களையும் கைது செய்து, சிறையில் அடைத்தார்கள்.

”கிங்ஸ்வே அகதிகள் முகாமைக் கவனித்துக் கொள்ள யாருமில்லை. உடனே சென்று, பொறுப்பேற்றுக் கொள்” என்றார் சுசேதா கிருபளானி.

“நான் முதுநிலை படிக்க, பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டேனே தீதீ (அக்கா)” எனத் தயங்கினார் லக்‌ஷ்மிச் சந்த் ஜெயின்.

“படிப்பா?  உன் படிப்பு முடிந்தது. போய், சொன்னதைச் செய்” என இரைந்தார் சுசேதா கிருபளானி.

கிங்ஸ்வே அகதிகள் முகாம், தில்லியின் மிகப் பெரிய அகதிகள் முகாம்.  அதில் , எட்வர் லைன்ஸ், அவுட்ரம் லைன்ஸ், ஹட்ஸன் லைன்ஸ் என மூன்று பிரிவுகள் இருந்தன. 10 ஆயிரம் அகதிகள் கொண்ட ஹட்ஸன் லைன்ஸுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார் லக்‌ஷ்மிச் சந்த் ஜெயின். முகாம் அகதிகளையும், காங்கிரஸ் தொண்டர்களையும் போலீஸார் கைது செய்ததில், முகாம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இரவு கவியத் துவங்கியது. கல்லூரி மாணவராக இருந்த லக்ஷ்மிச் சந்த் ஜெயினுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. எல்லோரும் போலீஸை அழை எனச் சொன்னார்கள்.  இது போன்ற சமயத்தில் காந்திஜி என்ன செய்வார் என யோசித்தார் – நிச்சயம் போலீஸை அழைக்க மாட்டார் என எண்ணி, போலீஸை வரவழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.

காலை எழுந்ததும் மேலும் குழப்பம்.  என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் காந்திஜி அவர் நினைவுக்கு வந்தார். “இது போன்ற சமயங்களில் காந்திஜி மக்களிடம் பேசுவார். நீ மக்களிடம் கேள்” என்று அவர் மனதுள் ஒரு குரல் எழுந்தது. மக்களிடம் பேசினார். அவர்கள் லக்ஷ்மி சந்த் ஜெயினுக்குத் தைரியம் சொன்னார்கள். “கவலைப் பட வேண்டாம். நாங்கள் உதவுகிறோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் மூலம் இந்த முகாமை நிர்வகிப்போம்” என ஆலோசனை சொன்னார்கள்.

இரவில் கொந்தளித்த அகதிகளில் சிலர், சமையல் அறையில் புகுந்து, சமைக்கும் பாத்திரங்களை உடைத்தெறிந்தார்கள். உணவு தானியங்களைச் சூறையாடினார்கள். அவர்களை எதிர்த்து, முகாம்களின் பெண்கள் முன்வந்து, கிடைத்த பாத்திரங்களை வைத்து சமையல் செய்யத் துவங்கினார்கள். பெண்கள் முன்னெடுப்பைக் கண்ட கலவரக்காரர்கள் பின்வாங்கினார்கள். கொந்தளிப்பு இறங்கி, நிலைமை சீரடையத் துவங்கியது.

பின்பு, மாலையில், முகாமின் மக்கள் அவரிடம் வந்து, “கலவரக்காரர்களை, முகாமை விட்டு வெளியேற்ற வேண்டும்” என முறையிட்டார்கள்.

”எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அவர்களும் நம் குழந்தைகள் தானே? நாம் வெளியேற்றி விட்டால், வேறு எந்த முகாமும் அவர்க்ளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்” எனச் சொல்லி அனுப்பினார்.

அன்றிரவு, அவர் முகாமின் கதவு தட்டப்பட்டது.  கதவைத் திறந்தால், வெளியே, கலவரம் செய்த இளைஞர்கள்.

“என்ன வேண்டும்”, என்று கேட்டார் லக்‌ஷ்மிச் சந்த் ஜெயின்.

“நாங்கள் இந்த முகாமுக்கு பலத்த சேதம் விளைவித்தோம். ஆனாலும், நீங்கள், எங்களை, “நம் குழந்தைகள்” என்று சொன்னீர்கள். தப்பு செய்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்” எனக் கை கூப்பினார்கள்.

அந்தக் கணம் முதல் காந்தியே அவரின் வழிகாட்டியானார்.

அதே போல, வேறு யாரும் ஏற்றுக் கொள்ள மறுத்த 400 மாணவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் முகாம் நிர்வாகத்தை மேம்படுத்தும் பணியைக் கொடுத்தார் லக்‌ஷ்மி சந்த் ஜெயின். உணவு, சுகாதாரம், மருத்துவம்,  பொழுது போக்கு என பல வகையான திட்டங்களையும் குழுக்களையும் ஏற்படுத்தி, நிர்வாகத்தைச் செம்மையாக்கத் துவங்கினார்கள். ஒலிபெருக்கி மூலம், ஒரு முகாம் வானொலி நிலையைத்தை ஏற்படுத்தினார்கள். பிரிவினைத் துயரத்தின் பாரத்தைக் குறைக்க, அது மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது.

ஹட்ஸன் முகாம் மிக நன்றாக நடப்பதைக் கேள்விப்பட்டு, அகதிகள் மறுவாழ்வுப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த லேடி மவுண்ட்பேட்டன், ஒரு நாள் முகாமுக்கு வந்தார். முகாமின் நிர்வாகக் குழுவை முன்னிறுத்தி, முகாமைச் சுற்றிக் காட்டப் பணித்தார் ஜெயின்.  மிகவும் நெகிழ்ந்து போன அவர், ஜவஹர்லால் நேருவிடம் சொல்லி, அவரை அனுப்பி வைத்தார்.

சென்ற இடமெல்லாம், அகதிகளிடம் வசவையும், அவமதிப்பையும் மட்டுமே பெற்ற நேரு, ஹட்ஸன் முகாமில், ஒரு மாறுபட்ட வரவேற்பைப் பெற்றார்.

“நேருஜி.. இந்த நாட்டைக் காக்கும் பெரும் சுமை உங்கள் தோள்களில் விழுந்திருக்கிறது.. நாங்கள் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்” என்றார்கள் ஹட்ஸன் முகாம் அகதிகள்.

அவர்களைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார் நேரு.

”இந்த முகாமுக்கு பாபுஜி வரவேண்டும்.. அவர்தான் எவ்வளவு துயரங்களைச் சுமக்கிறார்” எனச் சொல்லிவிட்டுச் சென்றார் நேரு. ஆனால், பாபுஜி வரவேயில்லை. அடுத்த ஏழாம் நாள் கொலை செய்யப்பட்டார்.

அகதிகள் மறுவாழ்வுசத்தர்பூர்ஃபரீதாபாத் முயற்சிகள்!

1948 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாத்த்தில் ஒருநாள், கமலா தேவி சட்டோபாத்யாயா ஹட்ஸன் முகாமுக்கு வந்தார். ஆச்சார்ய நரேந்திர தேவ், ஜெயப்ப்ரகாஷ் நாராயண், ராம் மனோஹர் லோஹியா, யூஸுஃப் மெஹரலி என்னும் சோஸலிசக் காங்கிரஸ் குழுவில் ஒருவர். அரசியல் சட்ட நிர்ணயக் குழுவின் அங்கத்தினர் பொறுப்பை மறுத்தவர். செயல் வீரர்.

“இந்த அகதிகளின் வருங்காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம்?” என ஜெயினைக் கேட்டார். அதுவரை, முகாம் அகதிகளின் ஒவ்வொரு வேளை உணவுக்கும் போராடிக் கொண்டிருந்த லக்‌ஷ்மி சந்த் ஜெயினுக்கு, அந்தக் கேள்வி எழவேயில்லை.  என்ன பதில் சொல்வதென்றும் தெரியவில்லை.

ஒரு குழுவை அமைத்து, அகதிகள் மறுவாழ்வைப் பற்றிய திட்டங்கள் தீட்டினார். அகதிகள், தங்கள் வருங்காலத்தை, தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அரசும், மக்கள் நலப்பணியாளர்களும் உதவியாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு மக்களுக்கு உதவி செய்ய, கூட்டுறவு முறைதான் சரியாக இருக்கும் என முடிவெடுத்து, இந்தியக் கூட்டுறவு யூனியன் (Indian Cooperative Union) என்னும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார் கமலாதேவி சட்டோபாத்யாயா.

அகதிகள் உதவியோடு, தில்லிக்கு அருகேயிருந்த சத்தர்பூர் கிராமத்தில், முஸ்லீம்கள் விட்டுச் சென்றிருந்த 6000 ஏக்கர் நிலங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றை, சில அரசாங்க அதிகாரிகள், தங்களுக்குத் தாங்களே தானம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலங்களை, ஜவஹர்லால் நேரு உதவியுடன் மீட்டார் கமலா தேவி. கிராமக் கூட்டுறவுகள் மூலமாக, நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அலஹாபாத் வேளாண் பல்கலைக்கழக வேளாண் அதிகாரிகள் மூலம், விதைகள், இடு பொருட்கள் வழங்கப்பட்டன. பயிர்க்கடன்கள், உழவர் குழுக்கள் மூலமாக, நிர்வாக அமைப்பு எதுவும் இன்றி வழங்கப்பட்டது. கடன் வாங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற பணிகளை, இந்தியக் கூட்டுறவு யூனியனின் வழிகாட்டுதலோடு கிராமக் கூட்டுறவு சங்கங்களே செய்தன. வேளாண்மை மிக நல்ல முறையில் நடந்து, 98% கடன்கள் திரும்ப அடைக்கப்பட்டன.  இதன் வெற்றியைக் கண்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகளும், பாரத ரிசர்வ் வங்கியும்,  குற்றம் கண்டு பிடிக்கத் துவங்கினார்கள். கிராமியக் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டு, மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் உள்ளே வந்தன. ஊழலும் உடன் வந்தது. இந்தியக் கூட்டுறவு யூனியனின் தன்னார்வத் தொண்டரான லக்‌ஷ்மிச் சந்த் ஜெயினுக்கு அதன் பின் அங்கே வேலையிருக்கவில்லை.

அவருக்கு அடுத்த அழைப்பு உடனே வந்தது. வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் இருந்து, இந்து பத்தானிய அகதிகள் 50 ஆயிரம் பேர் வந்திருந்தார்கள்.  பாதுஷா கான் என அழைக்கப்பட்ட எல்லை காந்தியின் மீது, இந்தியத் தலைவர்களுக்குப் பெரும் மதிப்பிருந்தது. எனவே இந்த அகதிகளுக்கான மறுவாழ்வை, ராஜேந்திரப் ப்ரசாத், நேரு, காந்தியக் கல்விமுறையை முன்னெடுத்த ஆஷா தேவி ஆரண்யகம் போன்றோர் இணைந்து நேரடியாக முன்னெடுத்தார்கள். இந்தக் குழுவின் 21 கூட்டங்களில் 20 ல் நேரு பங்கெடுத்துக் கொண்டது, இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும். இந்த அகதிகள் தங்கள் மறுவாழ்வுக்காக (அன்றைய) பஞ்சாப் மாநிலத்தின் ஃபரீதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஃபரீதாபாத் மேம்பாட்டு வாரியம் (Faridabad Development Board) அமைக்கப்பட்டது. அதன் செயலராக, காந்திஜியின் நம்பிக்கைக்குரிய சுதீர் கோஷ் நியமிக்கப்பட்டார்.

அகதிகள் தங்களுக்கான கட்டமைப்பைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. வடமேற்கு எல்லைப்புர மாகாணத்தில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு உறுப்பினர் என, 17 பேர் கொண்ட ஒரு குழு ஒன்றை, தேர்தல் மூலம் அமைக்க முடிவெடுத்தார்கள். 1949 ஆம் ஆண்டு, ஃபரீதாபாத்தில், வயது வந்தோருக்கான தேர்தல், சிக்கல்கள் இல்லாமல் நடந்தது. இந்தியாவில் வயது வந்தோர் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதல் தேர்தல் அதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களின் அனுமதியில்லாமல், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படமாட்டாது என சுதீர் கோஷும், லக்ஷ்மி சந்த் ஜெயினும் முடிவெடுத்தார்கள்

துவக்கத்தில், அகதிகளுக்கான வீடுகள் கட்டும் திட்டம் தீட்டப்பட்டது. அதற்கான ஒப்பந்தந்தைத் தனியார் வசம் ஒப்படைக்க பஞ்சாப் அரசு அதிகாரிகள் கொண்டிருந்த பேரார்வத்தைத் தகர்த்து, அகதிகள் தங்கள் வீடுகளைத் தாங்களே கட்டிக் கொள்ளும் ஒரு திட்ட்த்தை முன்வைத்தார்கள் இந்திய கூட்டுறவு யூனியனின் லக்‌ஷ்மி சந்த் ஜெயினும், சுதீர் கோஷும். அதைச் செயல்படுத்தும் ஒவ்வொரு படியிலும் முட்டுக் கட்டை போட்டார்கள் அரசு அதிகாரிகள். கமலாதேவி சட்டோபாத்யாயாவும், மிருணாளினி சாராபாயும், நேருவின் மூலமாக, ஒவ்வொரு முறையும் அதை உடைத்தெறிந்தார்கள்.

மொத்தம் 5000 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டன. அகதிகள் குழுக்களாகப் பிரிந்து, தனித் தனி வேலைகளைச் செய்யத் துவங்கினார்கள். தில்லி ஸ்ரீராம் மில்ஸின் பொறியாளர் பட் தலைமையில், அகதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, வீடு கட்டும் படலம் துவங்கியது. குறித்த காலம் முடியும் முன்பே வீடுகள் கட்டப்பட்டு, அகதிகள் குடியேறினார்கள். இது மட்டுமின்றி, கைத்தொழில்கள், நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகள், நெசவு எனப் பல தொழில்கள் கூட்டுறவு மூலம் ஏற்படுத்தப்பட்டன. நேருவுக்கு மிகவும் பிடித்த, காந்திஜியின் நயி தலீம் முறையில், கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இது, குழந்தைகளை, தங்கள் சூழலோடு பொருந்தச் செய்யும் கல்விமுறை. வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல், அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களோடு, வேளாண்மை, நெசவு, சுகாதாரம், தற்சார்பு போன்றவையும் மாணவர்கள் கற்கும் சூழலைத் தரும் கல்வி முறை. இரண்டு ஆண்டுகளில் 8 கல்விக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு, 4800 மாணவ மாணவியர் பயிலத் துவங்கினார்கள். இந்தப் பள்ளிகளை ஆய்வு செய்த,  டாட்டா சமூகவியல் ஆய்வு நிறுவனம், குழந்தைகளைப் பிரிவினையின் வடுக்களை மறக்க வைத்து, சரியான திசையில் செலுத்திய கல்விமுறை எனச் சொல்கிறது.

ஆனால், பஞ்சாப் அரசு நிர்வாகமும், அதிகாரிகளும், பலவகைகளில், முட்டுக் கட்டை போட்டார்கள். மோசமான ஆய்வறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பினார்கள். காந்தியக் கல்வி முறை, தாங்கள் உத்தேசித்திருக்கும் நவீன அறிவியல் வாழ்க்கைமுறைக்கு ஒத்து வராது என தீர்ப்பெழுதினார்கள். ஐந்தாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, ஃபரீதாபாத் மேம்பாட்டு நிறுவனத்தைக் கைப்பற்றியது பஞ்சாப் அரசு. சலித்துப் போன கமலாதேவி சட்டோபாத்யாயா, அனைத்து கூட்டுறவுத் தொழிற்கூடங்களையும், பள்ளிகளையும் இழுத்து மூடிச் சாவிகளை, அரசு நிர்வாகியிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறச் சொன்னார்.

கைவினைத் தொழில் வாரியம்!

1953 ஆம் ஆண்டு, மத்திய அரசு, கைவினைத் தொழில், கதர், கைத்தறி, கயிற் தொழில், பட்டு என ஐந்து வாரியங்களை, கிராம மக்கள் மேம்பாட்டுக்காக அமைத்தது. கைவினைத் தொழில் வாரியத்துக்குத் தலைமை தாங்க, கமலாதேவி சட்டோபாத்யாயா அழைக்கப்பட்டார். ஃபரீதாபாத்தில் இருந்து லக்‌ஷ்மி சந்த் ஜெயின் தில்லிக்கு அழைக்கப்பட்டார்.   அடுத்த இரண்டு வருடங்கள், லக்‌ஷ்மி சந்த் ஜெயினும், பேராசிரியர் ராஜ் கிருஷ்ணாவும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் அலைந்து, இந்தியாவில் உள்ள கைவினைப் பொருட்கள் பற்றிய ஒரு ஆய்வறிக்கையைத் தயாரித்தார்கள்

தில்லி ஜன்பத்தில் இருந்த கைவினைப் பொருள் எம்போரியத்தை நவீனப்படுத்தினார்கள். நுகர்வோர் பொருட்களைக் கண்டு வாங்கும் வகையில், அங்காடியில் கண்ணாடி ஷெல்ஃபுகளைப் அமைத்தார்கள்.  மாநிலம் வாரியாக அமைக்கப்பட்டிருந்த அங்காடியைப், பொருள் வாரியாக பிரித்தல் என நுகர்வோர் பார்வையில் அங்காடியை சீரமைத்தார்கள். முதலில் சேலை வாங்கும் ஒரு நுகர்வோர், ஒவ்வொரு மாநிலப் பகுதிக்கும் சென்று சேலைகளைப் பார்வையிட வேண்டும் என்பதை மாற்றி, சேலைகள் என்னும் ஒரு பிரிவை ஏற்படுத்தி, எல்லா மாநிலச் சேலைகளும் ஒரே பகுதியில் இருக்குமாறு மாற்றியமைத்தார்கள். இதனால் விற்பனை பலமடங்கு அதிகமாகியது. இதைக் கண்ட அகதிகளில் பலர், ஜன்பத் சாலை ஓரங்களில் அவர்கள் ஊர்க் கைவினைப் பொருட்களைத் தயாரித்து விற்றார்கள். ஜன்பத் கைவினைப் பொருட்கள் எம்போரியத்தில், கைவினைப் பொருட்கள் வாங்குவது தில்லி மத்திய தர வர்க்கத்து மோஸ்தரானது. முதலில், கைவினைப் பொருட்கள் விற்ற பின்பு, அதை உருவாக்கியவர்களுக்குப் பணம் தரும் முறையை மாற்றி, ரொக்க்க் கொள்முதல் முறையை அறிமுகப்படுத்தினார்கள். இதனால், உற்பத்தியாளர்களுக்கு உடனே உற்பத்திக்கான வருவாய் கிடைத்தது. வருட இறுதியில் கிடைத்த லாபத்தில் 25% த்தை, உற்பத்தியாளர்களுக்கு அளித்தார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில், இந்தியக் கைவினைப் பொருட்களுக்கான அங்காடிகளைத் திறந்தார்கள். இதைக் கண்ட பல தனியார் தொழில் நிறுவனங்களும், தைரியமாகத் தங்களது அங்காடிகளை வெளிநாடுகளில் திறந்தார்கள். இது பெரும் வெற்றி பெற்றது. இதைக் கண்ட பல மாநில அரசுகளும், மாநிலக் கைவினைப் பொருட்கள் நிறுவனங்களை ஏற்படுத்தி, மாநிலக் கைவினைப் பொருட்களுக்கான அங்காடிகளைத் திறந்தார்கள். இது, கைவினைத் துறை நசிந்துவிடாமல் காத்து, கலைகளையும், கலைஞர்களுக்கான ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தது. 1950 களில் 6 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்ட ஏற்றுமதிச் சந்தை, 2000 ஆம் ஆண்டு 2 பில்லியன் டாலரைத் தாண்டியது.

வழக்கம் போல, இதன் வெற்றி அரசு நிர்வாகிகளுக்கு பெரும் அசூயையை ஏற்படுத்தியது. நிறுவனத்தை அரசு நிர்வாகம் கையகப்படுத்த முயற்சித்தது. இந்தியக் கூட்டுறவு யூனியன் பணியாளர்கள் மறுத்தனர். இறுதியில் அரசு நிர்வாகமே வென்றது. அரசிடம் நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டு, 1966 ஆண்டு வாக்கில், இந்தியக் கூட்டுறவு யூனியன் வெளியேறியது.

இந்தியாவின் முதற்பெரும் சில்லறை அங்காடி!

1966 ஆம் ஆண்டு, ஏற்றுமதியை மேம்படுத்த, அரசு, டாலருக்க்தெதிரான ரூபாயின் மதிப்பைக் குறைக்கும் ஒரு முடிவை எடுத்தது. அதன் பின் விளைவாக, பண வீக்கம் அதிகமாகி,  விலைவாசி மிக வேகமாக உயர்ந்தது. புதிதாய்ப் பிரதமராகப் பதவியேற்ற இந்திரா காந்திக்கு இந்த விலைவாசி உயர்வு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதை சமாளிக்க அரசு, இந்தியக் கூட்டுறவு யூனியனை நாடியது.  அவரைக் காண இந்தர்குமார் குஜ்ராலும் (பின்னாளில் பிரதமரானவர்), ரொமேஷ் தாப்பரும் வந்தனர். பலமுறை அரசுடன் இணைந்து செயலாற்றி, கையைச் சுட்டுக் கொண்டதால், இந்த முறை, லக்‌ஷ்மி சந்த் ஜெயின் மறுத்தார். இரவு ஒன்பது மணியளவில், பிரதமரின் தனிச் செயலர் என்.கே.சேஷன் அழைத்தார். வேறு வழியின்றி ஒத்துக் கொண்டு, மறுநாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்ரமணியத்தைப் பார்த்தார்.

விலைவாசி பலூனை உடைக்க ஒரே வழி, பெரும் நுகர்வோர்க் கூட்டுறவு அங்காடிகளைத் திறந்து, நியாயமான விலையில் பொருட்களை மக்களுக்கு விற்பதுதான் என்னும் தன் திட்டத்தை விவரித்தார். முதலில், தில்லியில் ஒரு பெரும் அங்காடியைத் திறப்பது. அதன் பின்னர் சிறு நகரங்களில், அதே மாதிரி அங்காடிகளைத் திறப்பது என அதை அவரிடம் விவரித்தார். வியாபாரிகளின் மேலாதிக்கத்தை அடக்கி, நுகர்வோருக்கு நன்மை பயக்க என இதே போன்ற ஒரு திட்டத்தை, சில வருடங்கள் முன்பே அரசிடம் அளித்திருந்தார் லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அது அரசு ஆவணக் காப்பகத்தில் உறங்கிக் கொண்டிருந்தது. அதை தட்டி எழுப்பி சி.சுப்ரமணியத்தின் முன்பு நிறுத்தினார் லக்‌ஷ்மி சந்த் ஜெயின்.

“எவ்வளவு இடம் வேண்டும்?” என்று கேட்டார் சி.சுப்ரமணியம். 80 ஆயிரம் முதல் 1 லட்சம் சதுர அடி என்றார் லக்ஷ்மி சந்த் ஜெயின்.  அதிர்ஷ்டவசமாக, அவ்வளவு பெரிய இடம் கன்னாட் ப்ளேஸ் அருகில் உள்ள ஷங்கர் மார்க்கெட்டில் இருந்தது.

“எவ்வளவு நாள் அவகாசம் வேண்டும்?” எனக் கேட்டார் சி.சுப்ரமனியம்.  15 நாட்கள் எனப்பதில் அளித்த ஜெயின், தனக்கு வேண்டும் தொழில் துவங்கத் தேவையான அரசு ஒப்புதல்களை அரசே தனக்கு அளிக்க வேண்டும் – யாரிடமும் சென்று காத்திருக்க முடியாது. மேலும், தொழிலை நடத்துவதிலும், ஊழியர்களை நியமிப்பதிலும் எந்த அரசுத் தலையீடும் இருக்க்க் கூடாது எனத் தன் விதிகளைச் சொன்னார்.  ஒத்துக் கொண்ட சி.சுப்ரமணியம், அரசின் தரப்பில் இருந்து எஸ்.வெங்கிட்டராமனை (பின்னாளில் ரிசர்வ் வங்கியின் கவர்னர்), இதற்கெனத் தனி அலுவலராக நியமித்தார். நிலைமையைப் புரிந்து கொண்ட அரசு, ஜெயினுக்குத் தேவையான ஒப்புதல்களை மின்னல் வேகத்தில் தந்தது. தில்லி சூப்பர் பஜார் பிறந்தது.

ஷங்கர் மார்க்கெட்டில் இருந்த அந்தக் கட்டிடம், 350 சிறு கடைகளுக்கென உருவாக்கப் பட்டிருந்தது. தன்னுடன் பணி புரிந்த கட்டிட வரைவாளர் சைரஸ் ஜப்வாலாவை, ஓரிரவில் அழைத்து, அந்தக் கட்டிடத்தைச் சிறு அங்காடிகளாகப் பிரிக்கும் சுவர்களை உடைத்து ஒரே பெரிய அங்காடியாக மாற்றும் தன் திட்டத்தைச் சொன்னார். பெரும் அங்காடிக்கான 40 ஆயிரம் அடி நீளமுள்ள ஷெல்ஃப்களை அமைத்து, அங்காடியின் கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.  உடைக்கப்பட்ட சுவர்களின் கற்கள் மட்டும் 600 லாரிகளில் அகற்றப்பட்டன. 500 க்கும் மேற்பட்ட தச்சர்கள், அங்காடி ஷெல்ஃப்கள் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அங்காடியை நிறுவ, 1 கோடி பணம் தேவைப்பட்டது. பிறந்து சில நாட்களேயான கூட்டுறவு நிறுவனத்துக்கு எந்த வங்கியும் கடன் கொடுக்கத் தயாரில்லை (அப்போது வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டிருக்க வில்லை).  சி.சுப்ரமணியம், மணிப்பால் சிண்டிகேட் வங்கியின் சேர்மன் டி.ஏ.பை அவர்களை அழைத்தார். அவர் அடுத்த நாள் தில்லி பறந்து வந்து, தன் அலுவலகக் கிளையைத் திறந்து,  தில்லி சூப்பர் பஜாரின் மேலாளர் தத்தாவிடம், செக் புக்கை அளித்தார். ஒரு கோடி கடன் வழங்கப்பட்டது. சிண்டிகேட் வங்கியின் முதல் வட இந்தியக் கிளை சூப்பர் பஜாரில் துவங்கியது. சூப்பர் பஜாரின் விற்பனை முடிந்ததும், பணம் வங்கியில் செலுத்தப்படவேண்டி, சிண்டிகேட் வங்கி இரவிலும் இயங்கியது. முதன் முதலாக, கடன் வாங்குவோரின் தேவைக்கேற்ப வங்கி செயல்படுதல் என்னும் முறை துவங்கியது.

முதல் பத்து நாட்களுக்குள், சூப்பர் பஜாருக்கான ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். எஸ்.வெங்கிட்டராமன், அதிகாரிகள் / அரசியவாதிகள்  போன்றோர் இதில் தலையிடாமல், காவல் பூதமாய் நின்றார். கைவினைப் பொருள் அங்காடிகளை நிர்வகிப்பதில் திறன் பெற்றிருந்த இந்தியக் கூட்டுறவு யூனியனின் மேலாளர்களும் பணியாளர்களும் இதன் நிர்வாகத்தை ஏற்றார்கள்

நம்பகமான மேலாளர்கள், பணத்துடன் மொத்த விலை அங்காடிகளுக்குச் சென்று, பொருட்களை வாங்கிவந்தார்கள். பல்வேறு மொத்த விலை அங்காடிகளின் விலைகள் மற்றும் அவற்றின் போக்கு கணிக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட்த்தில் ஈடுபட்டு, அப்போது வணிகம் செய்து கொண்டிருந்தவர்களிடம் இருந்து பொருட்கள் வாங்கப் பட்டன. இதனால், அன்று மிகவும் சாதாரணமாக இருந்த பொருள் கலப்படம் தவிர்க்கப்பட்டது. தில்லி மேம்ப்பாட்டுக் கழகத்தின் கையில் இருந்த 200 ஏக்கர் நிலம் காய்கறிகள் விளைவிக்கக் கையகப்படுத்தப் பட்டது.

தவிர, சூப்பர் பஜாரில், மூன்று பெரும் துணிப்பிரிவுகள் துவங்கப்பட்டன – மில் துணிகள், கதர் மற்றும் கைத்தறித் துணிகளுக்காக.  மில் துணிகள் முயற்சி பெருமளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், கதர், கைத்தறிப் பிரிவுகள் பெருமளவு வெற்றி பெற்றன. இது பொது மக்களுக்கான முயற்சி என்பதால், 15 ரூபாய்க்கும் குறைவான சேலைகள்,  75 ரூபாய் விலையுள்ள ஒரு பாண்ட் ரேடியோக்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. சூப்பர் பஜாருக்குப் பொருள் சப்ளை செய்பவர்களுக்கு சிண்டிகேட் வங்கி கடன் அளித்தது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் மருந்துக்கடையும் சூப்பர் பஜாரின் ஒரு பகுதியாகத் திறக்கப்பட்டது. பாடப்புத்தகங்கள் இன்னொரு பிரிவு.

சூப்பர் பஜாருக்கு வாங்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும், 80% பணம் உடனே பட்டுவாடா செய்யப்பட்டது. அதனால், விலை குறைத்து வாங்க முடிந்தது. சூப்பர் பஜாரில் ஆயிரக்கணக்கான பொருட்கள் வாங்கி விற்கப்படுவதால், அதன் செயல்பாடுகள், தில்லியின் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் மூலம், (இந்தியாவிலேயே முதன்முறையாக) கணிணி மயமாக்கப் பட்டன.

இந்தியாவின், முதல், மக்களுக்கான, கணிணி மயமாக்கப்பட்ட சூப்பர் பஜார், 15-06-1966 ஆம் ஆண்டு, லக்‌ஷ்மி சந்த் ஜெயின் சி.சுப்ரமணியத்துக்குக் கொடுத்த வாக்குறுதியான 15 ஆவது நாளில் துவக்கப்பட்டது.  பஜாரை, இந்திரா காந்தி திறந்து வைக்க வேண்டும் என முடிவெடுத்து, சி.சுப்ரமணியம் அதற்கு அவரின் அனுமதியையும் பெற்றிருந்தார். ஆனால், ஜெயின், இது மக்களுக்கான முயற்சி எனவே கடைக்கு வரும் முதல் நுகர்வோர் தான் அதைத் திறந்து வைக்க வேண்டும் எனச் சொன்னார்.  ஆச்சரியமாக, இந்த எண்ணம் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், அதில் பெரும் பிரச்சினை வந்த்து.. துவக்க நாளன்று கடையின் முன்னால் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள் சேர்ந்துவிட்டது. போலீஸார் தடியடி நடத்த அனுமதி கேட்டனர். அதை மறுத்து, குறித்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பேயே கடை திறக்கச் சொன்னார் ஜெயின். மக்கள் திரளாக நுழைய, கடையின் ஜன்னல்கள் உடைபட்டன. வடிவமைப்பாளர் சைரஸ் ஜப்வாலா ஒரு கவுண்டரின் மீது ஏறி, கடை வெற்றிகரமாகத் திறக்கப்பட்டதாக அறிவித்தார்.

சூப்பர் பஜார் மூலம் பொருட்கள் குறைந்த விலையில் விற்பதையும், ஓப்பன் (வெளி) மார்க்கெட் விலையுடன் ஒப்பிட்டு, தினமும் காலை, மாலை இருவேளையும், தில்லியின் ஆல் இந்தியா ரேடியோ ஒலிபரப்பியது.  தில்லியின் பொதுச்சந்தை விலைகள் மடமடவெனச் சரிந்தன. முதல் ஆண்டில், தில்லி சூப்பர் பஜார் 4.8 கோடி விற்பனை செய்தது.

தில்லி சூப்பர் பஜார், அன்றைய அரசியல் பிரச்சினையை மட்டும் தீர்க்கவில்லை. நுகர்வோருக்கெதிரான எல்லா எதிர்மறை வணிக சூழ்ச்சிகளையும் தகர்த்தது. சில்லறை வணிகர்கள் அதிக லாபம் வைத்து விற்பனை செய்வது, சீரான தரமில்லாப் பொருட்களின் விற்பனை, தினமும் மாறும் விலைகள் என நுகர்வோர் நலனுக்கு எதிரான எல்லா வணிகப் பழக்கங்களுக்கும் எதிரான ஒரு இயக்கத்தின் துவக்கமாக இது இருந்தது.

அன்றைய சில்லறை வணிகத்தில், பெரும் நிறுவனங்கள், தங்கள் பொருட்களின் சில்லறை விலையை நிர்ணையித்து வந்தனர். (Retail Price maintenance). அன்றைய பெரும் நிறுவனமான இந்துஸ்தான் லீவர் அவற்றுள் ஒன்று.  தில்லி சூப்பர் பஜார், தயாரிக்கும் நிறுவனம் நிர்ணயிக்கும் விலையை விடக் குறைவாக விற்பது எங்கள் உரிமை என, இந்துஸ்தான் லீவரை வெளியேற்றியது. இந்துஸ்தான் லீவரின் டால்டா வனஸ்பதியை நிறுத்திவிட்டு, அவர்களின் போட்டியாளரான டி.சி.எம்மின் ரத் வனஸ்பதியை விற்கத் துவங்கியது. விற்பனை அளவைக் கண்டு மிரண்டு போன இந்துஸ்தான் லீவர், எங்களையும் அனுமதியுங்கள், நாங்கள் உங்கள் விதிகளுக்கு ஒத்துக் கொள்கிறோம் என ஒத்துக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தது. Retail Price Maintenance என்னும் நுகர்வோர் நலனுக்கு எதிரான ஒரு வணிக முறை அத்துடன் முடிவுக்கு வந்தது. (அந்தக் காலத்தில் இன்னொரு வணிக முறை இருந்தது. மாநிலத்துக்கு மாநிலம் வரிகள் மாறுவதால், பொருளின் விலை+ உள்ளூர் வரிகள் சேர்த்து விற்பது. இதனால், ஒரு நுகர்வோருக்கு, பொருளின் உண்மையான விலையைச் சரியாக அறிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்தது. ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை இருக்கும். நெருக்கடி நிலைக் காலத்தில், வரிகளை உள்ளடக்கிய அதிக பட்ச சில்லறை விலை என்னும் முறை நாடெங்கிலும் அமுலுக்கு வந்தது. அதனால், வரிகள் சேர்த்து இந்தியா முழுதும் ஒரே விலை என்னும் நுகர்வோருக்குச் சாதகமான முறை உருவானது. இன்று உலகில் இந்த முறை அமுலில் இருக்கும் சில நாடுகளுள் (ஒரே நாடு?) இந்தியா மிக முக்கியமான ஒன்று. (ரயில்வே/சினிமா தியேட்டர் எனச் சில விதி விலக்குகள் தவிர்த்து))

தில்லி சூப்பர் பஜார், இந்திய நுகர்வோர்க் கூட்டுறவு இயக்கத்தின் துவக்கம் எனலாம். இதையொட்டி, ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்தில் கூட்டுறவு விற்பனை அமைப்புகளைத் (தமிழகத்தில் அமுதம், சிந்தாமணி போன்றவை) துவங்கின. இதன் வெற்றியினால் மகிழ்ந்த, சி.சுப்ரமணியம், மேலும் பல அங்காடிகளைத் திறக்க வேண்டினார். தில்லியிலும், பின்னர் வெளிநகரங்களிலும் (முதலில் மதுரை) இந்த அங்காடிகள் துவக்கப்பட்டன. இவை துவங்கி வெற்றிகரமாக இயங்கத் துவங்கியதும், லக்ஷ்மிச் சந்த் ஜெயின், விலகிக் கொண்டார்.

விலகியதும் முதல் வேலையாக, தன் நீண்ட நாள் காதலியான தேவகியை மணந்து கொண்டார். தேவகி, ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்றவர். குவாலியர் திவான் ஸ்ரீனிவாச அய்யங்காரின் மகள். இவர்களின் கதை ஒரு மணிரத்தினம் திரைப்படமாக உருவாக சாத்தியங்கள் உள்ள ஒரு காதல் கதை.

ஜெயின், திருமணத்துக்கு முன்பு வரை, இந்தியக் கூட்டுறவு யூனியனின் தன்னார்வத் தொண்டராக இருந்து, கௌரவச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார். தனது 41 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட பின்பு, குடும்பத்துக்கு ஒரு வருவாய் தேவை என, “தொழிற்துறை மேம்பாட்டுச் சேவை (Industrial Development Services) என்னும் பெயரில், ஒரு ஆலோசனை நிறுவனத்தைத் துவங்கினார்.

1975 ஆம் ஆண்டு, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட உடன், ஜெயப்ப்ரகாஷ் நாரயணுடனான நெருக்கம் காரணமாக, மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டி வந்தது. பேராசிரியர் ராஜ் க்ருஷ்ணா, அருண் ஷோரி, ஜெயின், ஜார்ஜ் வர்கீஸ் என 15 பேர் கொண்ட ஒரு செய்தித் தொடர்புக் குழு அமைக்கப்பட்டது.

திட்டக் கமிஷன், பஞ்சாயத்து ராஜ்!

அதன் பின்னர், ஜெயின் 1977 ஆம் ஆண்டு, உத்திரப்பிரதேசத்தின் திட்டக் குழுவில் பணியாற்றினார். 700 கிராமங்களில், 3500 வறுமையான குடும்பங்களை ஆராய்ந்தார். அரசின் சமூக முன்னேற்றத் திட்டங்கள் எதுவுமே, பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருந்த மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதை அந்த ஆய்வு நிறுவியது. தொடர்ந்து 3 நாட்கள் வேலை இல்லையெனில், பட்டினி என்னும் அவல நிலை அங்கே இருந்தது. அவர்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அதை மேலாண்மை செய்யும் அரசு நிர்வாகிகளுக்கும், ஒப்பந்த்தாரர்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் போய்ச்சேர்ந்தது. இதற்கான முடிவு, அரசியல் அதிகாரம், மையத்தில் இருந்து விலகி, கிராம, வட்ட மாவட்ட அலகுகளுக்குச் சென்று சேர்வதுதான்.  அகதிகள் மறுவாழ்வு, கூட்டுறவு இயக்கம், கைவினைப் பொருட்கள் வாரியம் போன்றவற்றில் பலகாலம் பணிபுரிந்த அனுபவங்களில், அதிகாரத்தையும், பொறுப்பையும் மக்களிடம் அளித்தலே அவர்கள் மேம்பாட்டிற்கு மிகச் சரியான வழி என்னும் புரிதலை அடைந்திருந்தார்.

1929 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலில், சர்தார் படேலின் தலைமையில், ஜே.சி.குமரப்பா, குஜராத்தின் கேடா மாவட்ட்த்தில் உள்ள மட்டார் தாலுகாவில் ஒரு பொருளாதார ஆய்வினை மேற்கொண்டார். உணவு உற்பத்தியும், நுகர்வும் அருகருகே இருத்தலே செயல்திறன் மிக்க வழி என்னும் காந்தியத்தின் பார்வையில் அணுகப்பட்ட ஒரு ஆய்வு.  காந்தியப் பொருளியலில், இந்த திட்ட அறிக்கை ஒரு மைல்கல் எனக் கருதப்படுகிறது. ஜே.சி.குமரப்பா, இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார்.  1989 ஆம் ஆண்டு, வி.பி.சிங் அரசு பதவியேற்றவுடன், ராமகிருஷ்ண ஹெக்டேவின் தலைமையில் அமைந்த திட்டக் கமிஷனின் உறுப்பினரானார்.  ஆனவுடன், ஜே.சி.குமரப்பாவின் மட்டார் தாலூகா பொருளியல் திட்டத்தை 500 காப்பிகள் அச்சிட்டு, திட்டக் கமிஷனின் உறுப்பினர்கள், ஆய்வாளர்கள் என அனைவருக்கும் விநியோகித்தார்.

1993 ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு, தமிழக அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்து, தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்ட்த்தை நிறைவேற்றுவதை முன்னிட்டு, ஒரு அறிக்கை தயாரித்தார் (எல்.சி.ஜெயின் அறிக்கை). அதில், மாவட்ட அளவில், அரசு அதிகாரிகள் வசம் இருக்கும் நிர்வாகத்தை, ஜில்லா பரிஷத் என்னும் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட நிர்வாகிகள் வசம் அளிப்பதற்கான ஒரு வரைவை உண்டாக்கினார்.  அன்றைய அரசு அமைச்சரவையில் (திமுக) அது விவாதிக்கப்பட்டு, சட்ட மன்றத்தில் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் தலைகளின் எதிர்ப்பால் அது நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது. நாடெங்கும் இந்தச் சட்டத்திற்கு இதே நிலைதான்.  இன்றும், அதிகாரம் பரவலாக்கப்படாமலேயே, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதே, உள்ளூர் பங்களிப்பு ஜனநாயகம் என்னும் கருதுகோளுக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்தப் பிரச்சினையின் ஆணிவேர்கள், இந்திய அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே இருக்கின்றன என்கிறார் ஜெயின். இப்போது உள்ள பிரிட்டிஷ் முறையான, மாவட்ட கலெக்டர் வசமுள்ள நிர்வாக அதிகாரத்தை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்காமல், பஞ்சாயத்து ராஜ் முறை முழுமை பெறாது என்பது அவர் வாதம். ஆனால், அது எளிதில் நிறைவேறாது என்பதும் உண்மை.

தென் ஆப்பிரிக்கத் தூதர்!

1997 ஆம் ஆண்டு, இனவெறி ஆட்சி முடிந்து, வானவில் தேசமாகத் தன்னை அறிவித்துக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு, தூதராகச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் ஜெயின்.  அவருக்கு முன்பாக, தென் ஆப்பிரிக்காவின் முதல் தூதராக இருந்தவர் காந்தியின் பேரன் கோபால் காந்தி. காந்திக்கும், தென் ஆப்பிரிக்காவிற்கும் இருந்த தொடர்புகளாலும், அந்த நாடு தன்னை புதிதாக உருவாக்க முனையும் காலத்தில், இந்த்த் துறையில் பெரும் அனுபவம் பெற்றவர் ஜெயின் என்பதாலும், ஜெயின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெயின், ஊரக தென் ஆப்பிரிக்காவின் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, அவர்களுக்கான பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தினார். உள்ளூர் தென் ஆப்பிரிக்கர்கள், தனியார் நிறுவன்ங்களில் வேலைக்குச் சேரும் பயிற்சிகளை, இந்தியத் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுத்தார். அந்த சமயத்தில். இந்தியாவில் அரசியல் சூழல் மாறி, வாஜ்பேயி தலைமையிலான, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. மே 1998 ல், இந்தியா அணுகுண்டுச் சோதனைகளைச் செய்தது. நெல்சன் மண்டேலா, ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு போன்றவர்கள் இதைப் பலமாக எதிர்த்தார்கள். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், இந்தியாவின் நிலையை விளக்க ஜெயின் அழைக்கப்பட்டார்.

“ஒரு காந்தியராக, இந்தியா, அணுகுண்டு வெடித்ததை எப்படி ஒத்துக் கொள்வீர்கள்” எனக் கேட்ட்து உள்ளூர் தொலைக்காட்சி.

“காந்தியரோ, சாமானியரோ, எவருமே அணுகுண்டு என்பதை ஒத்துக் கொள்ளச் சங்கடப்படுவார்கள். ஆனால், இந்தியாவின் அண்டை நாடு, பெரும் அணுசக்தியாக இருக்கிறது. 100 கோடி மக்களுக்கான பாதுகாப்பு என்னும் வகையில், எனவே இது தவிர்க்க இயலாது. அதனால், இந்திய அரசின் இந்த நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனப் பதில் சொன்னார்.. ஆனால், அவர் வாதத்தின் முதல் வாக்கியம் அன்றைய அதிகாரச் சக்தியான ப்ரிஜேஷ் மிஷ்ராவுக்கு உவப்பாக இல்லை. எனவே, அவரைத் திரும்பி அழைத்துக் கொள்ள அரசு முடிவு செய்தது. அதே சமயத்தில், வெளியுறவுத் துறை செயலகத்தில் இருந்து, லலித் மான்சிங், அணுகுண்டு வெடிச் சோதனை தொடர்பான இந்தியத் தூதரகச் செயல்பாடுகளில், தென் ஆப்பிரிக்கத் தூதரகத்தின் செயல்பாடுதான் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகக் கடிதம் எழுதியிருந்தார்.  அவருக்கான வழியனுப்பு விழாவில், தென் ஆப்பிரிக்க வெளியுறவு மந்திரி, அவர் பங்களிப்பைச் சிலாகித்து, “லக்ச்மி விரும்பினால், அவரைத் தென் ஆப்பிரிக்காவின் தூதராக, இந்தியாவுக்கு நாங்கள் நியமிக்கத் தயாராக இருக்கிறோம்” எனச் சொன்னார்.

1989 ஆம் ஆண்டின் ரமான் மகசேசே விருது பெற்றார். 2010 ஆம் ஆண்டு காலமானார். அவர் மனைவி தேவகி ஜெயின் ஒரு காந்தியப் பொருளியலில் நம்பிக்கை கொண்ட பேராசிரியர். பத்ம விபூஷண்.

பாலாவின் கட்டுரைகள்

கலையரசனின் கட்டுரை- பாலா

இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

அன்னிய முதலீடு- பாலா

போற்றப்படாத இதிகாசம் -பாலா

என் கந்தர்வன் — பாலா

தேங்காயும் சில தத்துவச்சிக்கல்களும் -பாலா

எதிர்மறை வருமான வரி- பாலா

மேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா

பணமில்லாப் பொருளாதாரம் – பாலா

முந்தைய கட்டுரைநீர்க்கூடல்நகர் கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு, ஈரோடு