தீ – கடிதங்கள்

fire

தீ

அன்புள்ள ஜெ

தீ ஒரு அருமையான கதை –கட்டுரை. அனுபவத்துடன் புனைவு கலக்கும் இத்தகைய எழுத்துக்களுக்கு இன்று உலகளாவ ஒரு செல்வாக்கு உள்ளது. தமிழில் நீங்கள் இதை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்விலே ஒருமுறை இதில் முக்கியமான ஒரு புத்தகம். தமிழில் அது ஒரு தொடக்கநூல் என்றுதான் சொல்வேன்

வாழ்க்கையின் சில தருணங்கள் முக்கியமான திருப்புமுனைகள். அப்போதுதான் நாம் யார் என நாமே அறிகிறோம். அத்தகைய ஓர் இடம் அந்தக்கதையில் வருவது. நாம் யார் என நாம் அறிந்ததும் வரும் ஒரு விடுதலையை அந்தக்கதையில் காணமுடிந்தது

மகேஷ்

அன்புள்ள ஜெயமோகன் சார்

“தீ” படித்தேன். இதை முன்பே உங்கள் தளத்தில்  படித்திருந்தேன்.அப்போது படித்து முடித்தவுடன் இது கட்டுரையா ? இல்லை கதையா ?  இல்லை அனுபவமா ? என குழம்பியது இன்னும் நினைவில் இருக்கிறது. முதல் காரணம் அனுபவம் என்றால் இதை அப்படி அப்பட்டமாக சொல்லமுடியுமா என்று இன்னொன்று தீ என்றால் என்ன என்று ? குற்றாலத்தில் சீசனுக்கு ரூம் எடுக்க செல்லும்போது முதல் முறையாக ” போத்தி” எண்ணும் சொல்லை பத்து அல்லது பனிரெண்டு வயதில் கேள்விபட்டேன். போத்தி,பட்டர் எல்லாம் அப்போது குற்றாலத்தில் சர்வசாதாரணமாக கேட்க்கும். லாட்ஜ்களில் வேலை செய்கிறவர்கள், குற்றாலத்தை ஒட்டிய கோவில்களில் வேலைசெய்கிறவர்களை இப்படி அழைக்கபடுவதை கேட்டிருக்கிறேன். பிறகுதான் அவர்கள் கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள் என்பதை உங்கள் எழுத்துக்கள் மூலம் தெரிந்துகொண்டேன். இதே போல் நிறைய கட்டுரைகள் உங்களின் தளத்தில் படித்திருக்கிறேன் ” சென்னையில் ஒரு பிராமணரின் வீட்டில் இருக்கும் சிரியன் கிறிஸ்தவ பெண், மங்களூர் டிரெயினில் சந்தித்த முஸ்லீம் பெண்கள் ”  பின்தொடரும் நிழலின் குரலில் வரும் “கம்னியூசம் என்னும் சித்தாந்தம்” “விஷ்ணுபுரம் ” என நிறைய. எல்லாமே காலம் என்னும் தீயினால் எரிந்து சாம்பல் ஆனவை. அவற்றின் சூட்டையே நீங்கள் முன்னும் பின்னும் சென்று விசிறி மாபெரும் காட்டுதீயாக்குகிறீர்கள்.” முப்பது நாட்களில் அம்பானியாவது எப்படி ? ” “தன்னம்பிக்கையே தும்பிக்கை ” போன்ற நூல்களை வாசிக்கும் காலத்தில் ஒரு காலத்தின் வீழ்ச்சியை அல்லது சரித்திரத்தின் கடைசி துளியை  கேட்கவே ஏன் நினைக்கவே மனம் கசக்கிறது. நாம் நினைத்தாலும் தள்ளினாலும் அது வாழ்க்கை. “வாழ்ந்துகெட்ட குடும்பம் ” என்பது எல்லாம் தேய்வழக்காகிப்போன இன்றைய கதைபரப்பில் உங்களின் இந்த அனுபவ புனைவுகள் வாசிக்கும்போது நெஞ்சு துடிப்பு எகிறுகிறதே ஏன்? …. கதைகளில் வேண்டும் என்றால் அவை வேறு வார்த்தைகளில் குறிப்பிடப்படலாம், ஆனால் இன்றும் வேறோரு ரூபத்தில் அல்லது வார்த்தையில் [ஆங்கிலத்தில்?] இருந்து கொண்டு தானே இருக்கும் ? , நான் வேலை பார்க்கும் துறையில் இது மிகவும் சகஜம்.

மந்தபுத்திகாரன் என்னை தொட்டுபார்த்து “சோறு,சோறு” என்று கூறினான் என்பது அன்றைய தமிழகத்தின் எண்பது சதவீத குழந்தைகளின் நிலையாகத்தான் இருந்தது. அன்று திராவிடம் எண்ணும் தீ ஓங்கி இருந்த நேரம் கோயில் கொடைகள், பண்டிகைகள் எல்லாம் கூட ஒரு மாத்ரி  நகைச்சுவையாக இருந்திருக்கும். நிலபிரபுத்துவம் , லட்சியவாதம் என்னும் தீ ஜுவாலைகள் எல்லாம் மாற்றத்தில்,பசியில் சாம்பலாகி கரைந்து நகர்களில்  தூவபட்டு கொண்டிருந்த காலம். அடுத்த என்ன காலம் என எண்ணி சுதாரிக்காதவர்கள் பசியிலும் தனிமையிலும் இப்படிதான் எரிந்திருப்பார்கள். இவர்களின் சாம்பல் மீதுதான் வேறொரு காலம் எழுகிறது. இதை படிக்கும்போது “வெண்முரசில் “துரோணர் வணிகர்களின் முன் ஒரு பசுவுக்காய் தலைகவிழ்ந்து நின்றது நினைவுக்கு வருகிறது. அபிமன்யு கூடத்தான் “பால் ,பால் ” என்று அதே நினைவில் இருக்கிறான். கிருபிக்காவது ஒரு துரோணர் இருந்தார்.

பாட்டி “கள்ளிகாட்டு யட்சி பாடல்களையும் ,லீலா  நாக யட்சி “பாடலகளையும் படிக்கிறார்கள். நாக யட்சி கள்ளிகாட்டு யட்சிக்கு மூத்தவள். காலம் முற்றாக அழிவது இல்லை போல. அதற்கு தேவையானதை சேகரித்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கிறது. லீலா என்னும் யட்சி உங்கள் எழுத்தில் வாழ்வது போல. இவளை நாளைய தலைமுறை என்ன எட்சியாய் புனையுமோ?

தீ என்பது வயிற்றின் தீயா? உடலின் தீயா? தனிமை என்னும் தீயா? தனது பாட்டுக்கு கிடைத்த பாராட்டு என்னும் தீயா? இல்லை  எதிர்காலம் தெரியாத தவிப்பின் தீயா? அவமானத்தின் தீயா ?  என எண்ணி எண்ணி மீண்டும் படித்துகொண்டிருக்கிறேன்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘தீ’ படித்தேன்.  திகில் கதை படித்த உணர்வை தந்தது. நினைவில்  பழைய காலங்களில் வாழும் அந்த  மனிதர்களிடம் நீங்கள் காட்டிய அன்பும்  பரிவும் உங்கள் மேல் உள்ள மதிப்பை மேலும் உயர்த்தியது.  முடிவில், முதற்பரசுரம் ஆன நாளுடன் நேரம் ‘@0.00’ என்று போட்டிருந்தது. அது என்ன ‘0.00’.  அமானுஷியங்கள் நிகழும்  நேரமா?

இப்படிக்கு,

டி. சங்கர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70
அடுத்த கட்டுரைவல்லினம் இமையம் சிறப்பிதழ்