கும்பமேளா கடிதங்கள் – 2

Day 7-121 C

நீர்க்கூடல்நகர் – 6

நீர்க்கூடல்நகர் – 5

நீர்க்கூடல்நகர் – 4

நீர்க்கூடல்நகர் – 3

நீர்க்கூடல்நகர் – 2

நீர்க்கூடல்நகர் – 1

அன்புள்ள ஜெ

உங்கள் கும்பமேளா பதிவுகள் மிக வியப்பூட்டுபவை. பலமுறை வாசித்தேன். அவற்றிலுள்ள வர்ணனைகளுக்காகவே வாசிக்கவேண்டியிருந்தது. இருளில் ஓடும் கங்கையின் வர்ணனை எங்கே ஆழமானதாக ஆகிறதென்றால் கரையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த கும்பமேளாவை அது அறியாது என்று சொல்லுமிடத்தில்தான்.

போகிறபோக்கில் அப்படி ஏராளமான சித்திரங்கள் வந்தபடியே இருந்தன. அதிலும் பாபா தன் கூடாரத்துக்குக் கதவாக கொண்டுவைத்திருந்த தட்டியில் ஒரு ஹைடெக் சாமியாரின் படம் இருந்தது என்பது பகடியாகவும் தோன்றியது, ஆழமான அர்த்தம் உடையதாகவும் இருந்தது.

கும்பமேளாவை புரிந்துகொள்வதை விட இந்தியாவைப் புரிந்துகொள்வதுதான் இந்தப்பயணத்தின் வழியாக நிகழ்ந்தது. இன்றைய இந்தியாவின் டிரெண்டுகளும் என்றும் மாறாத இந்தியாவின் இயல்பும் ஒரே கட்டுரைத்தொடரில் வெளிப்படுவதுபோலிருந்தது

நன்றி ஜெ

பாஸ்கர்.எம்

அன்புள்ள ஜெ,

கும்பமேளாப் பதிவுகள் வழியாக நான் அகோரிபாபாக்களைப் பற்றி புரிந்துகொண்டேன். அவர்களைப்பற்றி மிகமிக கீழ்த்தரமான ஒரு சித்திரத்தையே ஊடகங்கள் அளித்தன. நிர்வாணச்சாமியார் என்ற வார்த்தையே மிகவும் கேவலப்படுத்துவது. அதைத்தான் இங்கே தமிழ் ஊடகங்கள் பயன்படுத்தின. பிச்சைஎடுப்பதுதான் நோக்கம் என்றால் ஏன் நிர்வாணமாக அலையவேண்டும், ஏன் வெறுந்தரையில் படுக்கவேண்டும் என்றெல்லாம்கூட எவரும் எண்ணிப்பார்ப்பதாகத் தெரியவில்லை. உங்கள் கட்டுரை வழியாக அது ஒரு பெரிய நோன்பு, அதற்கு மிகப்பெரிய நோக்கம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். ஓர் அகோரி ஆவதற்காக பத்தாண்டுகளாக முயலும் உங்கள் ஊர்க்காரரான சாமியார் ஆச்சரியப்படுத்துகிறார். அகோரி என்பது என்ன நிலை என அது காட்டியது.

நானெல்லாம்கூட இதெல்லாம் நமக்குக் கேவலம் என நினைத்திருந்தவன். ஆனால் இத்தகையவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். நான் முதல்முதலாக வாசிங்டன் சென்றபோது வெள்ளைமாளிகை முன்னால் இதேபோல ஒருவர் கோமணம் மட்டும் உடுத்து நின்றிருந்தார். அதைப்போலச் சிலரைப் பார்த்தேன்[இதைப்பற்றி நீங்களும் எங்கோ எழுதியிருந்ததாக ஞாபகம்] அவர் ஒரு டிரக் அடிக்ட் என்று சொன்னார்கள். நான் முதலில் அவரையும் கேவலமாகவே நினைத்தேன். ஆனால் என்னுடன் வேலைபார்த்த ஒரு அமெரிக்கவெள்ளையர் சொன்னார். உலகையே ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் வெள்ளைமாளிகை முன்னால் இப்படி ஒருவர் நின்றிருப்பது எவ்வளவு பெரிய எதிர்ப்புக்குரல்.,அது எவ்வளவுபெரிய ஸ்பிரிச்சுவாலிட்டி என்று.

அமெரிக்கா என்றால் ஃபோர்டு காரோ வெள்ளைமாளிகையோ மட்டும் அல்ல. இந்த எதிர்ப்பாளர்களும் கலகக்காரர்களும்தான். இவர்கள்தான் அமெரிக்காவின் மாற்றுக்கலாச்சாரம். அமெரிக்காவின் பேரலல் ஸ்பிரிச்சுவாலிட்டியின் மையம். இவர்களைப் புரிந்துகொண்டால்தான் அமெரிக்காவின் மனசாட்சியையும் அமெரிக்காவின் சுதந்திரவேட்கையையும் புரிந்துகொள்ளமுடியும். அமெரிக்கா ஒருபோது ரஷ்யாவோ சீனாவோ அல்ல என்பதையும் அப்படி அந்நாடு ஆகாமலிருப்பது இந்த மனிதர்களில் வெளிப்படும் எதிர்ப்பால்தான் என்று புரிந்துகொள்ளமுடியும் என்றார் அந்த நண்பர். அது எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது.

இன்றைக்கு அகோரி பாபாக்களைப் பார்க்கும்போது அந்த எண்ணம் மீண்டும் வலிமையாக உருவாகிறது. நம்முடைய அரசர்கள், செல்வம் எல்லாவற்றுக்கும் எதிர்நிலையாக நின்றிருக்கும் இவர்கள்தான் நம்முடைய உண்மையான ஸ்பிரிச்சுவாலிட்டியின் முகம் என்று நினைக்கிறேன். நம்முடைய சுதந்திரம், கட்டில்லாத தன்மை எல்லாம் இவர்கள்தான். இவர்கள்தான் உண்மையான கலகக்காரர்கள். இவர்களில்தான் நம் வேதகால ரிஷிகளின் தொடர்ச்சி இருக்கிறது. இவர்களை கஞ்சாகுடிப்பவர்கள் கேவலமானவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாரும் எஸ்டாபிளிஷ்மென்டின் எல்லா அநீதிகளுடனும் ஒண்டிக்கொண்டு இச்சகம் பேசிப்பிழைக்கும் நடுத்தவர்க்கத்தினர். சுரண்டிக்கொழுக்கும் உயர்மட்டத்தினர். இந்தியா வாழ்வது இவர்களிடம்தான் என்றுதான் நான் நினைக்கிறேன்.

உங்கள் கட்டுரை அளிக்கும் திறப்புக்கள் முக்கியமானவை.

மகேஷ்

அன்புள்ள ஜெ

கும்பமேளா பற்றிய உங்கள் கட்டுரைக்கு அரவிந்தன் கண்ணையன் எதிர்ப்பை எழுதியிருந்தார். அது ஒரு இந்துத்துவா கட்டுரை என்று. அது ஒரு இந்துத்துவ எதிர்ப்புக் கட்டுரை என்று அரவிந்தன் நீலகண்டன் ஆக்ரோஷமாக எழுதியிருந்தார். உங்கள் பார்வைக்கு

https://contrarianworld.blogspot.com/2019/02/2019.html?fbclid=IwAR3qbNDFeIkZ2UiQMtwAFVpSowWaaADr6iVS-xbu1ary3VTYe-Lm_DPIBZQ

ராஜ்

அன்புள்ள ராஜ்

சரிதான், இரு எல்லைகளில் இருந்தும் எதிர்ப்பு வருகையில் நம் நிலைபாட்டை நாம் உறுதிசெய்துகொள்கிறோம், சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது .

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைமிசிறு