மிசிறு

misi

சிலகாலம் முன்னர் பத்மநாபபுரத்தில் என் அந்தக்கால தோட்டம்சூழ்ந்த வீட்டுக்கு என்னை பார்க்க வந்திருந்த தமிழ்நிலத்து நண்பர் ஒருவர் பலாமரத்தை சுட்டிக்காட்டி “ஜே, அது என்ன காய்? கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?” என்றார். நான் பார்த்ததுமே சிரித்துவிட்டேன். “பாத்ததே இல்லியா?” என்றேன். “இல்ல” என்றார். “கொஞ்சம் சீமைப்பலா மாதிரி இருக்கு” நான் “கூர்ந்து பாருங்க” என்றேன். அப்போதும் அவருக்கு சந்தேகம்.

“கொஞ்சம் புளிக்கும், பரவாயில்லையா?” என்றேன்.  “பாப்பம்” என்றார். அதை ஒரு குச்சியைக்கொண்டு பறித்துக் காட்டினேன். ”ஆ!” என்றார். அது மிசிறுக் குடியிருப்பு. மிசிறு என இங்கே சொல்லப்படும் பெரிய சிவப்பு எறும்பு இலைகளை பற்றி தன்பிசினால் இணைத்து பெரிய பொதிபோலச் செய்யும். அதற்குள் பிசினால் பல அடுக்குகளாக கூடுகட்டி உள்ளே ஒரு குடியிருப்பை உருவாக்கிக் கொள்ளும். “இது உண்மையில் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பு… ஒரு மிசிறுக்குலமே இதுக்குள்ள இருக்கு” என்றேன்.

நண்பர் கூர்ந்து நோக்கிவிட்டு “இது ஒரு சின்ன நகரம்னு நினைக்கிறேன். உள்ளே நெடுஞ்சாலை, துணைச்சாலை எல்லாம் இருக்கு. குடியிருப்புகள் பொதுக்கூடங்கள் எல்லாம் இருக்கு” என்றபின் மேலும் கூர்ந்து நோக்கி “உள்ளே பெரிய வர்க்கவேறுபாடும் இருக்குன்னு நினைக்கிறேன். மூணுவெவ்வேறு ஏரியாவா பிரிச்சிருக்காங்க. ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இல்லாதமாதிரித்தான் சாலைகள் இருக்கு” என்றார். “ஒரு பண்பாட்டை அழிச்சிட்டோமே” என்றார். “இல்ல திரும்ப இலைமேலெயே வச்சா போரும்… அப்டியே இடம்மாறிரும்” என்றேன். “இவ்ளவு வளர்ந்த தொழில்நுட்பம் இருந்தா தாக்குப்பிடிக்கவும் தெரிஞ்சிருக்கும்.”

IMG_20190213_080133

குமரிமாவட்டத்தில் மிசிறு என்றும் சுருக்கமாக மீறு என்றும் இதை அழைப்பார்கள். அதிகமும் பாலுள்ள மரங்களில் இருக்கும். கேரளத்தில் நீறு அல்லது நூறு என்பார்கள். புளியெறும்பு என்றும் சிலர் சொல்வதுண்டு. தமிழகத்தில் எந்த இலக்கியப்படைப்பிலும் இதைப்பற்றி எவரும் சொல்லி வாசித்ததில்லை. இணையத்தில் தேடியபோது சிஞ்சிறுக்கான் என்று ஒரு பெயர் கிடைத்தது. இது இலைகளை தைத்து கூடு செய்வதனால் தையல்கார எறும்பு [weaver ant] என வெள்ளைக்காரன் சொல்ல அதையே தப்பாக மொழியாக்கம் செய்து சிலர் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரண கட்டறும்பைவிடவும் பெரியது. நல்ல சிவந்த நிறம். பெரிய கால்கள். நீண்ட கொடிகளினூடாக நிரையாக ஒழுகிப்போவது காலையின் ஒளியில் பார்க்க குருதித்துளிகள் போல தெரியும். ஒளி ஊடுருவும் வயிறு. அருகே மரங்கள் இருந்தால், அவற்றின் ஓர் இலை நம் வீட்டைத் தொட்டுக்கொண்டிருந்தால், அல்லது தொட எண்ணினால், வீட்டுக்குள் வந்து பரவிவிடும். பொதுவாக அங்குமிங்கும் ஆர்வத்துடன் அலைந்துகொண்டிருப்பதை காணலாம். சாதாரணமாக தனியெறும்பு கடிப்பதில்லை. மேலே நம் உடல் அழுந்தினாலும்கூட கடிப்பதில்லை. ஆனால் மரத்தில் தொங்கும் கூடுகளை நோக்கி நாம் செல்வோம் என்றால் போர்தான்.

ராணி எறும்புகள்தான் மிசிறுகளின் சமூகங்களின் மையம். இங்கே குமரிமாவட்டத்தில் பேச்சிஎறும்பு என்பார்கள். பேச்சி எறும்பு கருவுற்றதும் உகந்த இலையை நாடிச்செல்கிறது. தன் உடலில் இருந்து எழும் பிசினால் அந்த இலையை சற்றே சுருட்டி அதில் முட்டை இடுகிறது. முதலில் எழும் எறும்புக்கூட்டங்கள் வேலைக்காரர்கள், மற்றும் போர்வீரர்கள். அவர்கள் அந்த இலையை சூழ்ந்திருந்த இலைகளுடன் சேர்த்து தைத்து நகரை உருவாக்குகிறார்கள். அங்கே மேலும் மேலும் ராணி முட்டையிடுகிறது. அவற்றை அடைகாப்பதும் வேலைக்கார எறும்புகளே.

மெல்லமெல்ல அந்த நகர் பெருகி ஒரு சுறுசுறுப்பான சமூகமாக ஆகிறது. வேலைக்காரர்களும் போர்வீரர்களும் இணைந்து உணவுதேடுகிறார்கள்  ஒவ்வொரு மிசிறுக் குழுவிலும் இருதரப்பினரும் இருப்பார்கள். தங்களுக்குள் உணர்கொம்புகளால் தொட்டும் கால்களால் வருடியும் அசைந்தாடியும் அவர்கள் பேசிக்கொள்வதை கூர்ந்து பார்த்தால் காணலாம். அவர்களின் மொழியில் எல்லாமே சுருக்கமான செய்திகள்தான். ஆகவே அரைநொடிக்குள் உரையாடல் முடிந்துவிடும். இவை ஒரு குறிப்பிட்ட வகை உடல்வேதிகளை [pheromone] உருவாக்கி அவற்றைக்கொண்டு உரையாடுகின்றன. அது ஒரு தனிமொழி, அதில் காவியங்கள்கூட இருக்கலாம், யார் கண்டது?

misiRu1

உணவிருக்கும் இடத்தை நெடுந்தொலைவுக்கு இந்த உடல்வேதி வழியாக இவற்றால் தொடர்புறுத்தமுடியும். ஒரு பெருஞ்சமூகம் இன்னொரு சமூகத்துடன் இந்த உடல்வேதியால் மிகச்சிக்கலான செய்திகளை தனித்தனியாக பகிர்ந்துகொள்கிறது என்கிறார்கள். இவர்களின் சமூகக் கட்டமைப்பு, ஒழுக்கநெறிகள், நீதிமுறைகள் போன்றவை மிகமிகச் சிக்கலான பல அடுக்குகள் கொண்டவை, பொதுவாக இரக்கமற்றவை.

வெவ்வேறு குடியிருப்புகளாக ஒரு மரத்தில் தொங்கும் மிசிறுகளின் சமூகங்கள் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு கூட்டுச்சமூகமாகவும் செயல்படுகின்றன என்பது சமீபகாலமாக கண்டடையப்பட்டது. ஒரு காட்டிலுள்ள அத்தனை மிசிறுச்சமூகங்களும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு மேலும் பிரம்மாண்டமான ஒரு சமூகமாக இருக்கின்றன. ஒரு கூட்டிலிருந்து ராணி எறும்பை இன்னொரு கூட்டுக்கு விதையாக அளிக்கின்றன. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு. ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்கு. அவ்வாறு அவை பரவிக்கொண்டே இருக்கின்றன.

வேறுவேறாக கூடுகள் செயல்பட்டாலும் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டு அரசாகவும் செயல்படுகின்றன. அந்தக் கூட்டரசு மிகமிக அருவமானது. நெருக்கடிகள் மட்டும் எழுந்து தோற்றம் தருவது. உதாரணமாக ஒரு காட்டில் தீ எழுமென்றால் மிசிறுகள் ஒற்றை அமைப்பாக மாறி செயலாற்றத் தொடங்கிவிடுகின்றன. அடிக்கடி தீ போன்ற ஆபத்து உருவாகும் காடுகளில் ஒரு ராணி பல  ராணிமுட்டைகளை இட வேலைக்கார எறும்புகள் அவற்றை காடெங்கும் விரைவாக பரப்புகின்றன.

இவை கூடு கட்டுவதை என் வீட்டு மொட்டைமாடியில் அமர்ந்தால் பார்க்கமுடியும். கீழே நின்றிருக்கும் கொய்யா மரத்திலும் மஞ்சள்மலர் நிறைந்த பொற்கொன்றை மரத்திலும் ஏராளமான கூட்டுப்பொதிகள் கோடையில் நிறைந்திருக்கும். ஓர் இலையின் விளிம்பில் நூற்றுக்கணக்கான எறும்புகள் வரிசையாக நிற்கின்றன. மெல்ல அவற்றின்மேல் அடுத்த நிரையாக எறும்புகள் ஏறி நிற்கின்றன. அவற்றின்மேல் அடுத்த நிரை. அப்படி பத்துநிரை வரை. எறும்புகளால் ஆன ஒரு படலம். அந்தப் படலத்தின் முனை மறுஇலையின் விளிம்பைச் சென்று தொடுகிறது.

ஒவ்வொரு எறும்புநிரையாக இறங்கிச்செல்லத் தொடங்குகிறது. இடைவெளிகுறுகி இலைகள் ஒன்றையொன்று தொடுகின்றன. இணைந்துவிடுகின்றன. நான் சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன், மிசிறுகள் தங்கள் முட்டையிலிருந்து எழும் சிறிய புழுக்களைத்தான் சுமந்து அங்கே கொண்டுசென்று விளிம்பில் நிறுத்துகின்றன என்று. அந்தப்புழுக்களில் இருந்து சுரக்கும் ஒருவகை பிசினால்தான் அவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன அந்தப்பிசின் விரைவிலேயே உலர்ந்து வெண்மையான பட்டுவலை போல ஆகிவிடும்.

msisRu2

இலைகள் கூட்டி தைக்கப்பட்டு கூடு உருவாக ஒருநாள் ஆகும். அதன்பின் புழுக்கள் உருவாக்கும் பிசினை விரல்களால் தொட்டு நூலாக இழுத்து மூத்தமிசிறுத்தொழிலாளர்கள் கூட்டின் உள்ளமைப்பை கட்டுகிறார்கள். மாபெரும் கூட்டு உழைப்பு. இரவுபகல் வேறுபாடில்லை. கூட்டை தொடவேண்டாம், தொட வாய்ப்பிலிருந்தாலே போதும் கடிதான். ஒன்று கடித்தால் உருவாகும் புளிப்புமணம் மற்ற அத்தனை எறும்புகளும் வந்துசேர்வதற்கான போர் அறைகூவல். அதன்பின்னர் கடிப்பெருக்குதான். பார்மிக் அமிலத்தை கொடுக்குகள் நம் உடலுக்குள் செலுத்துவதனால் நல்ல எரிச்சல் இருக்கும். இரண்டுநிமிடங்களுக்குள் நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்துவிடும். கூட்டைக் கட்டியவர்களுக்குத்தானே அருமை தெரியும், வெறி இருக்கத்தானே செய்யும்?

எங்களூரில் அன்றெல்லாம் மா, பலா ஏறுவதற்கு மிகப்பெரிய சிக்கலே இந்த எறும்புகள்தான். அறியாமல் கைகால்களை உதறி மரங்களிலிருந்து விழுந்தவர்கள் உண்டு. உடலெங்கும் சாம்பலை பூசிக்கொண்டு ஏறினால் கடி குறையும் என்பது நம்பிக்கை, எந்த நம்பிக்கையையும்போல நடைமுறைக்குப்பின் மறுபரிசீலனை செய்யப்படுவது. கடித்தால் மயிரேபோச்சு என ஏறுபவர்களுக்கு ஒன்றுமில்லை.

மிசிறுகளின் உணவு முதன்மையாக மற்ற சிற்றுயிர்கள்தான். செடிகளில் வரும் பூச்சிகளை அழிக்க இவை மிகச்சிறந்த இயற்கைக் காவல். அன்றெல்லாம் நானும் நண்பர்களும் மரங்களில் ஏறி மிசிறுக்கூடுகளில் நூலை கட்டுவோம். சற்றும் அசையாமல் பறித்து நூல் வழியாக மிகமெல்ல கீழிறக்கி கொண்டுவந்து கீரை, வெண்டை, கத்தரி செடிகளில் கட்டிவைப்போம். நம் தோட்டத்தில் மிசிறுபெருகுவது பிறபூச்சிகள் இல்லாமலாக்கும். மிசிறு உள்ள செடியின் காய்கள் மிகச்சுவையானவை.

நீர்ப்பருத்தி நோனி போன்ற சிலசெடிகள் மிசிறுகளை வரவேற்கும் தண்டுச்சாறுகளையும் நறுமணங்களையும் உருவாக்கி தங்களை பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். சில பூச்சிகள் தங்கள் முட்டைகளை மிசிறுக்கூடுகளின் அருகிலேயே போட்டு பிற உயிர்களிடமிருந்து பாதுகாக்கின்றன. சிலவகை சிலந்திகள் மிசிறுகளின் அதே வாசனையை தாங்கள் உருவாக்கி மிசிறுக்கூடுகளுக்குள் புகுந்து புழுக்களை உண்பதுண்டு.

தாய்லாந்தில் மிசிறின் புழுக்களை உணவாக உண்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது இயற்கையான செரிமான அமிலங்கள் சுரக்காதவர்களுக்கு மிசிறு மருந்தாக அளிக்கப்பட்டது. மிசிறுக்கூட்டை எடுத்துவந்து புழுக்களுடன் இளம்சூடான வெந்நீரில் போடுவார்கள். பின்னர் வடிகட்டி அதை அருந்தக்கொடுப்பார்கள். எலுமிச்சைநீர் போல கடும்புளிப்பாக இருக்கும். அரைமணிநேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும்.

குமரிமாவட்டம் ஒருகணக்கில் மிசிறுகளுக்குரியது. எஞ்சிய இடங்களில் மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழ்ந்தோம். இப்போது எங்கு பார்த்தாலும் ரப்பர் என்பதனால் மிசிறுகள் குறைந்திருக்கவேண்டும், ஆனால் குறையவில்லை. என் வீட்டு முகப்பில் சிலசமயம் காலையில் தரையின் வண்ணமே சிவப்பாகத் தெரியும் அளவுக்கு மிசிறுப்படை இறங்கியிருக்கும். கூட்டிப்பெருக்கி கொட்டினால் ஒரு கிலோ அளவுக்கு இருக்கும். ஆனால் பெரிய தொந்தரவு ஏதுமில்லை. அவை அவற்றின் வாழ்க்கையை வாழ்கின்றன. நாம் நம் வாழ்க்கையை.

இன்று மிசிறுகள் இயந்திரஉடலியல் [ robotics] துறையில் விரிவாக ஆராயப்படுகின்றன. மிகச்சிறிய இயந்திரன்களை உருவாக்குவதற்கு அவற்றின் உடலமைப்பு சிறந்த மாதிரி. அவை தங்கள் எடையைவிட ஏழுமடங்கு எடைதூக்கும். ஒற்றைக் காலில் எழுந்து நிற்கும். ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு சங்கிலியாக ஆகும். நாளைய எந்திரன்கள் மிசிறுவடிவில் அமையலாம்.

மாடியில் அமர்ந்து சிலசமயம் மிசிறுக் காலனிகளை பார்த்துக்கொண்டிருப்பேன். வைஃபை வேலைசெய்யாத நாட்களாக இருக்கும் அவை என்பதை சொல்லவேண்டியதில்லை. ஒருநாள் திடீரென்று தோன்றியது அவற்றுக்கு நம்மைவிட அதிவேக வைஃபை தொடர்பு இருக்கிறது என்று. நாளை ஒருவேளை நாம் அவர்களிடமிருந்து வைஃபை தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ளலாம். யார்கண்டது, அவர்களைப்போல மிகமிக முன்னேறிய சமூக அமைப்பைக்கூட நாம் கற்றுக்கொள்ளக்கூடும்.

முந்தைய கட்டுரைகும்பமேளா கடிதங்கள் – 2
அடுத்த கட்டுரைசென்னையில் ஒரு கட்டண உரை