யுதிஷ்டிரர் தேர்த்தட்டிலிருந்து தன் அகவையை மீறிய விசையுடன் பாய்ந்திறங்கி ஊடே நின்றிருந்த வீரர்களை கைகளால் உந்தி விலக்கி அர்ஜுனனின் தேரை நோக்கி ஓடினார். அவரை பற்ற முயன்ற வீரர்களை நோக்காமல் தேர்விளிம்பில் தொற்றி மேலேறி அர்ஜுனனின் இரு தோள்களையும் அள்ளித் தழுவி தன்னோடு அணைத்துக்கொண்டு அவன் கன்னங்களிலும் தலையிலும் முத்தமிட்டார். அவர் விழிகளிலிருந்து வழிந்த நீர் அவன் தோள்களில் சொட்டியது. விம்மலோசையுடன், மூச்சிளைப்புடன், உடைந்து தெறிக்கும் சொற்களுடன் அவர் கொந்தளித்தார். “மைந்தா! மைந்தா!” என்றார். “நான்! நான்!” என திணறினார்.
அவருக்குப் பின்னால் வந்து தேரிலேறிக்கொண்ட சகதேவன் யுதிஷ்டிரரின் தோளைத் தொட்டு “மூத்தவரே!” என்றான். அவர் அவனை நோக்கி சிரித்தார். “என் மைந்தன்! என் மைந்தன்!” என்று அர்ஜுனனைப் பற்றி உலுக்கினார். “படைவீரர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் உணர்வு வெளிப்பாடுகளை அரசர் தவிர்க்க வேண்டும்” என்று சகதேவன் சொன்னான். “ஆம்!” என்றபின் யுதிஷ்டிரர் பின்னடைந்தார். தன் தாடியில் பரவியிருந்த கண்ணீரை கைகளால் அழுத்தி துடைத்தபடி தலைகுனிந்தார். ஆனால் அர்ஜுனன் எந்த உணர்வு மெய்ப்பாட்டையும் காட்டவில்லை. அவன் முகம் சீற்றம்கொண்டவன்போல் தோன்றியது.
அந்த உணர்ச்சிகள் எதையும் அறியாதவர்போல இளைய யாதவர் தேரைத் திருப்பி படைகளுக்குள் கொண்டு சென்றார். மரச்சாலையில் குளம்படிகள் எடையுடன் ஒலிக்க புரவியில் வந்து கால்சுழற்றித் தாவி இறங்கிய பீமன் “வென்றுவிட்டோம்! இன்றொருநாள் கடப்போமா என்று நானே ஐயம் கொண்டிருந்தேன்! வென்றுவிட்டோம், மூத்தவரே!” என்று கையைத் தூக்கி கூவினான். அவனைத் தொடர்ந்து புரவியில் வந்து இறங்கிய நகுலன் “நமது படைகள் வெற்றிகொண்டாடத் தொடங்கிவிட்டன!” என்றான். “ஆம்! இன்றுதான் ஐயமிலாது நாம் வெற்றியை நோக்கி செல்கிறோம் என்பதை உணர்கிறோம்!” என்றான் சகதேவன்.
அர்ஜுனன் தன் வில்லையும் ஆவநாழியையும் காவலனிடம் அளித்துவிட்டு தேரிலிருந்து மறுபுறம் இறங்கி அப்பால் சென்றான். அவனது ஏவலன் புரவியுடன் அருகே வர அதில் தாவி ஏறி தட்டி கிளப்பி கொண்டுசென்றான். இளைய யாதவரும் இறங்கி தன் புரவியில் ஏறிக்கொண்டு அகன்றார். “இளையோன் புண்பட்டிருக்கிறானா?” என்று பதற்றத்துடன் யுதிஷ்டிரர் கேட்டார். “இல்லை, அவர் துயர் கொண்டிருக்கிறார்” என்று சகதேவன் சொன்னான். “ஏன் ஜயத்ரதனை கொன்றதனாலா? அவன் இப்போர்க்களத்தில் கொல்லப்படவேண்டியவன். நமது இளவரசனின் இறப்புக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவன்” என்றார் யுதிஷ்டிரர். “அவர் களம் விழுந்த எவருக்காகவும் துயருறுவதில்லை” என்று சகதேவன் சொன்னான். “இன்று அவருடைய அம்புகள் பட்டு கிருபர் தேர்த்தட்டில் விழுந்தார். அவருடைய புண்கள் ஆழமானவையாக இருக்கக்கூடுமென்று அஞ்சுகிறார்கள். அவரை துயருறச்செய்வது அதுதான்.”
யுதிஷ்டிரர் “ஆம், அவர்களிடையே விற்போர் நிகழ்ந்ததென்று அறிந்தேன்” என்றார். சகதேவன் “பெரும்பாலும் கிருபருடன் போர்புரிவதை மூத்தவர் தவிர்த்துவிடுவது வழக்கம். தனக்கு முதல் படைக்கலம் தொட்டளித்த ஆசிரியர் அவர் என்று மதிப்பு கொண்டிருக்கிறார். இன்று ஜயத்ரதனை கொன்றுவிட்டு வில்லுடன் திரும்புகையில் எதிரே கிருபர் பெரும்சீற்றத்துடன் வஞ்சினச் சொற்களை உரைத்தபடி வருவதைக் கண்டார். கிருபரிடம் ஒருபோதும் அத்தனை பெருவஞ்சம் வெளிப்பட்டதில்லை. கீழ்மகனே, மைந்தன் தலையை தந்தையின் கையில் அளிக்கிறாய் எனில் நீ மானுட உணர்வுகள் எதையும் அறியாத விலங்கு. அல்லது மண்ணுக்கடியிலிருந்து எழுந்த பெருநோய். நில், என் வில்லுக்கு எதிர்நில் என்று கூவியபடி அவரை தாக்கினார்” என்றான்.
“அர்ஜுனன் அவரை மிக எளிதில் வெல்ல முடியும்” என்று பீமன் சொன்னான். “ஆம், ஆனால் எப்போதும் அல்ல. அத்தருணத்தில் கிருபர் உளம்தாளா வெறி கொண்டிருந்தார். அவருடைய வில்லாற்றல் அனைத்தும் கைகளிலும் கண்களிலும் குவியச்செய்தது அது. மூத்தவரோ தளர்ந்திருந்தார். போர் முடிந்துவிட்டதென்ற உணர்வை அடைந்த பின்னர் உளவிசையை மீட்டெழுப்பிக்கொள்வது எளிதாக இருக்கவில்லை. கிருபரின் அம்புகளால் அறைபட்டு அவருடைய கொடி உடைந்து தெறித்தது. தேர் மகுடம் உடைந்தது. அவர் உடலில் நான்கு கவசப்பகுதிகள் சிதைந்தன. அவர் வில்லடி படுவதை பார்த்து இருபுறத்திலிருந்தும் வந்து சூழ்ந்த படைவீரர்களை கைகாட்டி யாதவர் விலக்கிவிட்டார். போர் மேலும் எழ பார்த்தர் கிருபரால் கொல்லப்படுவார் என்றே தோன்றலாயிற்று” என்று சகதேவன் சொன்னான்.
“ஆனால் எங்கோ ஒரு புள்ளி உள்ளதென்று நானும் அறிந்திருந்தேன். ஏனெனில் அவருடன் வில்லாடி வளர்ந்தவன் நான்” என்று அவன் தொடர்ந்தான். “கிருபர் வஞ்சினங்களை கூவிக்கொண்டிருந்தார். மூத்தவர் உளம்தளரக் கண்டபின் மேலும் மேலும் இரக்கமற்ற சொற்களை சொன்னார். உன் குடியை அழிப்பேன், உன் கொடிவழியினர் நாடோடிகளாக இரந்தலையும்படி செய்வேன் என்றார். இறுதியாக உன் ஆசிரியனின் இறுதிச்சொற்களையும் வில்லால் பிளக்கிறேன். அவன் பெயர் இங்கே எஞ்சாமலாக்குவேன். விண்ணிலிருந்து அதை பார் என்றார். அச்சொற்கள் இளைய பாண்டவரை எண்ணியிராக் கணத்தில் பற்றியெரியச் செய்தன. ஆசிரியரே, அச்சொற்களில் ஒன்றை உங்கள் அம்பு தொடுமெனில் விண்ணிலிருந்து பேயுருக்கொண்டு மீண்டும் இறங்கிவருவேன் என்று கூவியபடி அவர் தன் அம்புகளால் கிருபரை அறையத் தொடங்கினார்.”
ஆவக்காவலன் உளஎழுச்சியுடன் “ஆம் அரசே, அது உயிர்விசை மட்டுமே திகழ்ந்த போர். ஒவ்வொரு அம்புக்கும் விசை மேலெழுந்தது. அம்புகள் பட்டு கிருபரின் கவசங்கள் உடைந்தன. நெஞ்சிலும் விலாவிலும் வயிற்றிலும் அம்புபட்டு அவர் தேர்த்தட்டில் விழுந்தார். பிறையம்பை எடுத்து அவர் தலையை வெட்ட இளைய பாண்டவர் முயன்றபோது இளைய யாதவர் கைநீட்டி அதை தடுத்தார். கிருபரை அவர்கள் படைகளுக்குள் அழைத்துச்சென்றனர். அவர் விழிகளிலிருந்து மறைந்ததும் தெய்வங்களே என்று அலறியபடி இளைய பாண்டவர் தன் காண்டீபத்தை கீழே வைத்தார். அப்பொழுது அந்திமுரசு ஒலிக்கத்தொடங்கியது” என்றான்.
யுதிஷ்டிரர் “ஆசிரியர்களுக்கு எதிராக வில்லெடுப்பது துயரளிப்பதே. இந்தக் களத்தில் பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் உடன்குருதியினரையும் வென்று நின்றாகவேண்டுமென்று நமக்கு ஆணையிடுகின்றன தெய்வங்கள். இதற்கப்பால் நாம் எத்தகைய மானுடராக எழுவோம் என்பதை எண்ணிப்பார்க்கவே இயலவில்லை” என்றார். பீமன் “அந்தச் சிறு உளக்கலக்கம் நன்று. அது சற்று நேரம் நீடிக்கும். அதை சூடிக்கொண்டு மீண்டும் போருக்கெழ இயலாது. ஆகவே உள்ளிருந்து ஊறியெழும் பல்லாயிரம் சொற்களால் அதை கரைத்தழிப்போம். அறிந்த நெறிநூல்களையும் தொல்வழக்கங்களையும் நினைத்து நினைத்து எடுப்போம். புண் பொருக்காடி தழும்பாவதுபோல் அந்த உளநிலை நம்மில் உருமாறி அமையும். மேலும் தயக்கமற்றவர்களாக எழ முடியும் நம்மால். இன்னொரு முறை கிருபரை எதிர்கொண்டால் எந்த ஐயமும் இல்லாமல் அவர் நடுநெஞ்சில் தன் நீளம்பை பாய்ச்சி நிறுத்த அர்ஜுனனால் இயலும்” என்றான்.
“மந்தா!” என்று யுதிஷ்டிரர் துயருடன் அழைத்தார். பீமன் “என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்! இது வெற்றியின் தருணம்” என்றான். சகதேவன் “போர் நிறைவுற்றது, மூத்தவரே. அந்தி ஓய்வுக்கென படைகள் திரும்பிக்கொண்டிருக்கின்றன. தாங்கள் பாடிவீட்டுக்கு மீள்க! இன்று மிகவும் களைத்திருக்கிறீர்கள்” என்றான். யுதிஷ்டிரர் அர்ஜுனனின் தேரிலிருந்து பீமனின் கைபற்றி மெல்ல இறங்கினார். அவர் உடலில் மீண்டும் முதுமைக்குரிய நடுக்கமும் எச்சரிக்கையும் குடியேறின. ஏவலர்கள் தேரைத் திருப்பி அப்பால் கொண்டுசெல்ல படைவீரர்கள் யுதிஷ்டிரருக்குரிய புரவியை கொண்டுவந்து நிறுத்தினர். அதில் ஏறி அமர்ந்துகொண்ட யுதிஷ்டிரர் “இளையோனே, என்னுடன் வருக! இன்று என்ன நிகழ்ந்ததென்று சொல்க! இன்று முழுக்க நான் முரசொலிகளை சொற்களாக்கும் திறனை இழந்திருந்தேன். என் உள்ளம் இளையோனை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தது” என்றார்.
நகுலனும் சகதேவனும் அவருக்கு இருபுறமும் செல்ல சற்று பின்னால் பீமன் புரவி மேல் உடல் தளர்ந்து அமர்ந்து தலை திருப்பி அணிதிரண்டு பாடிவீடுகளுக்கு சென்றுகொண்டிருந்த படைவீரர்களை நோக்கிக்கொண்டிருந்தான். சகதேவன் “இன்று கௌரவர்களில் அனைவரையுமே ஒருமுறையேனும் பின்னடைந்து ஓடச்செய்தோம். நம்மால் வெல்லப்படாதவர் பால்ஹிகர் ஒருவரே” என்றான். “அவர் பின்னடைவது நமக்கும் இழுக்கு… அவர் நம் முன்னோரின் மானுடத்தோற்றம்” என்றார் யுதிஷ்டிரர். “இன்று கௌரவ மைந்தர் எழுபதுபேர் கொல்லப்பட்டார்கள். இளைய கௌரவர்களும் களம்பட்டனர்…” என்று சகதேவன் சொன்னான். யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் தலையசைத்தார்.
திருஷ்டத்யும்னன் புரவியில் எதிரே வந்து விரைவழிந்து வளைந்து அருகே அணுகி தலைவணங்கினான். “என்ன நிகழ்ந்தது, பாஞ்சாலரே? இன்று போரில் நிகழ்ந்த அனைத்தையும் சொல்க!” என்றார் யுதிஷ்டிரர். திருஷ்டத்யும்னன் “இன்று போர்முனைகளில் இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே விசைகொண்ட மோதல்கள் உருவாயின. ஒவ்வொரு தருணத்திலும் எண்ணியிராத ஒன்று நிகழ்ந்தது. இளைய பாண்டவர் பீமசேனர் அர்ஜுனனை காக்கும்பொருட்டு எழுந்தபோது அங்கநாட்டு அரசரால் தடுக்கப்பட்டார். அரைநாழிகைப் பொழுதுகூட அங்கர் முன் வில்லுடன் எவரும் நின்றிருக்க இயலாதென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இன்று நூறு அம்புகளால் அறைந்து அங்கரின் பொற்தேரின் கொடியையும் மகுடங்களையும் கவசங்களையும் உடைத்தெறிந்தார். அங்கரை அஞ்சி தேர்த்தட்டில் விழச்செய்து பின்னடைய வைத்தார். இன்று படையெங்கும் பேச்சென இருப்பது அதுவே” என்றான்.
யுதிஷ்டிரர் “நன்று… இளையோனின் ஆற்றலை ஒவ்வொருநாளும் புதியதாக அறிந்துகொண்டிருக்கிறோம்” என்றார். “அங்கர் வெல்லப்படக் கூடியவரே என்று இளைய பாண்டவர் நிறுவிவிட்டார். இனி இப்போரில் நாம் அஞ்சுவதற்குரியவரென எவருமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். யுதிஷ்டிரர் “அவ்வாறு நம்புவது நமக்கு ஊக்கமளிப்பது. ஆனால் போர்க்களத்தில் அனைத்துத் தருணங்களிலும் தெய்வங்கள் ஒன்றுபோல இயல்வதில்லை. துரோணரும் அங்கனும் நம்மை முற்றழிக்கும் ஆற்றல்கொண்ட வீரர்கள் என்பதே உண்மை. உரிய முறையில் அவர்கள் உளம் கொள்ள வேண்டும். அவர்களை ஆளும் தெய்வங்கள் அவர்களுடன் நின்றிருக்க வேண்டும். எதுவும் நிகழும் என்றெண்ணி களமெழுவதே வீரர்களுக்கு உகந்தது” என்றார்.
திருஷ்டத்யும்னன் அவர் அதை கூறுவார் என்று உணர்ந்திருந்தமையால் ஊக்கம் குன்றவில்லை. புன்னகையுடன் “இன்று களத்தில் சாத்யகி இயற்றிய போரும் நிகரற்றது. துச்சாதனரையும் துரியோதனரையும் வில்லாலும் கதையாலும் வென்றார். துரோணரை எதிர்த்து தோற்கடித்து திருப்பி அனுப்பினார். சல்யரையும் அஸ்வத்தாமரையும் களத்தில் வென்றார். பெருந்திறல்மிக்க வீரர்கள் பதினேழு பேரை களத்தில் கொன்றழித்தார். சாத்யகியின் உடலில் இளைய யாதவர் குடியேறி போரிடுவதாகவே கௌரவர் பலர் எண்ணினர். சிலரோ இளைய யாதவரே மாற்றுருக்கொண்டு களமிறங்கிவிட்டதாக எண்ணத்தலைப்பட்டனர். உண்மையில் போர்க்களத்தில் வில்லுடன் நின்று பொருதுகையில் சில அசைவுகளில், சில திரும்பல்களில் அவரிடம் இளைய யாதவர் தோன்றி மறைவதை நானே பார்த்தேன்” என்றான்.
“நேற்றும் இன்றும் கௌரவர்கள் போர்நெறிகளைக் கடந்து படைக்கலமிலாது அமர்ந்திருந்த இளைய யாதவர் மேல் அம்புகளை தொடுத்தனர். அவருடைய கவசங்களை உடைத்தனர். நேற்று அவர் உடலில் பதினெட்டு இடங்களில் புண்கள் இருந்தன என்று கேள்விப்பட்டேன். இன்று ஐந்து அம்புகள் அவருடலில் தைத்து நின்றிருப்பதை நானே பார்த்தேன். எங்கோ அவர் சீற்றம் கொண்டிருக்கக்கூடும். அதுவே சாத்யகியில் எழுந்திருக்கக்கூடும்” என்றான் திருஷ்டத்யும்னன். யுதிஷ்டிரர் “ஆனால் நமது படைவீரர்கள் சாத்யகியை போற்றி ஒரு வாழ்த்தொலிகூட எழுப்பவில்லை” என்றார். அதை எதிர்பார்த்திருந்தமையால் அனைவரும் சொல்லடங்கினர். சற்று அப்பால் வந்துகொண்டிருந்த பாண்டவப் படைத்தலைவனாகிய வியாஹ்ரதத்தன் “படைகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை அவர் இயற்றினார்” என்றான்.
யுதிஷ்டிரர் “ஆம், ஊழ்கத்திலிருப்பவன் தலையை வெட்டுவதென்பது அரக்கர்களும் அஞ்சித் தயங்கும் ஒரு செயல். அதை அவன் ஏன் செய்தான் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் உய்த்துணர இயலவில்லை. ஆனால் மானுடரில் அவர்களறியாத சில எழுவதுண்டு” என்றார். “எதன் பொருட்டென்றாலும் அது எவ்வகையிலும் சொல்லி நிலைநிறுத்தகூடிய செயல் அல்ல” என்றான் வியாஹ்ரதத்தன். “அவர் பூரிசிரவஸின் தேரில் பாய்ந்தேறி கையிழந்து கண்மூடி அமர்ந்திருந்த அவர் குடுமியைப்பற்றித் தூக்கி வாளால் தலையை வெட்டி உயர்த்திக் காட்டிய அக்காட்சியை ஒவ்வொரு கணமுமென மீண்டும் காண்கிறேன். சூழ்ந்திருந்த அத்தனை கண்களிலும் அப்போது குடியேறிய சினத்தையும் கசப்பையும் என்னால் தனித்தனியாகவே இப்போது காண இயல்கிறது. ஒருபோதும் பாண்டவ வீரர்கள் அதை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. ஷத்ரியர்கள் வருந்தலைமுறைகளிலும் அதை ஏற்க மாட்டார்கள்.”
சகதேவன் “ஷத்ரியர்கள்கூட சில மறுசொற்களை சொல்லிக்கொள்கிறார்கள். சாத்யகியை தேர்த்தட்டில் வீழ்த்தியபோது அவர் நெஞ்சில் காலால் உதைத்தார் என்றும் அது பிழையெனில் அதற்கு நிகர்ப்பிழையென இதை கருதலாம் என்றும் சிலர் சொல்வதை கேட்டேன். ஒரு மறுசொல்கூட உரைக்காமல் இதை மறுப்பவர்கள் அசுரரும் அரக்கருமே. அவர்களுடைய நெறிகளில் இச்செயலுக்கு எவ்வகையிலும் இடமில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அவர்கள் விலங்குகளைப்போல முற்றிலும் தங்கள் தெய்வங்களுக்கு தங்களை அளித்துக்கொண்டவர்கள். சொற்களால் தெய்வநெறிகளை மடைமாற்றிக்கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கில்லை” என்றார். சகதேவன் “இன்று நிகழ்ந்த ஒவ்வொன்றையும் மீள எண்ணிப்பார்க்கையில் வெறும் கசப்பே எஞ்சுகிறது, மூத்தவரே. நாம் அனைவருமே இங்கு வருவதற்கு முன்பு இலாத சிலராக மாறிவிட்டோம். அனைத்து வரம்புகளும் அழிந்துவிட்டிருக்கின்றன” என்றான்.
சீற்றத்துடன் “நெறிகளைப்பற்றி எனக்கு நீ கற்பிக்க வேண்டியதில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். சகதேவன் “உங்களுக்குத்தான் மீளமீள கற்பிக்க வேண்டியிருக்கிறது” என்றான். “இங்கு இன்னமும்கூட நா முழுத்து நீங்கள் உரைக்கவில்லை. கூறுக, சாத்யகியின் செயலை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லை எனில் அவரை அழைத்து நீங்கள் ஒரு சொல்லேனும் இடித்துரைக்கப் போகிறீர்களா?” என்று கேட்டான். “ஒரு வேளை உணவு விலக்களியுங்கள். ஓர் இரவு துயில் விலக்களியுங்கள். அல்லது ஆயிரம் படைக்கலங்களை தூய்மை செய்து அடுக்கும் பணியை அளியுங்கள். ஒரு சிறு தண்டனையேனும் நீங்கள் அவருக்கு அளித்தீர்கள் என்று படைகள் அறியட்டும்.”
யுதிஷ்டிரர் “இது போர்க்களம். முறையான அவை கூடி உசாவி இருபுறமும் கண்டு அனைத்து நெறிகளும் சூழ்ந்து முடிவெடுக்கும் தருணம் இங்கில்லை” என்றார். “இது வெறும் சொல். உங்களுக்கே தெரியும், ஊழ்கத்திலிருந்தவனின் தலையை வெட்டுவதென்றால் என்ன பொருள் என்று. அவர் மூலாதாரத்திலிருந்து எழும் மூச்சு அறுபட்டு நின்று துடிப்பதை நான் பார்த்தேன். குலுங்கி புரண்டு சென்ற தேரில் அவர் உடல் அசையாமல் அமர்ந்திருந்தது. அதிலிருந்து மூச்சு வடிவான நுண்சொல் அகலவில்லை. அங்கே சிதையில் அவ்வுடல் நின்று துடிக்கும்” என்றான் சகதேவன். “ஐயமே இல்லை மூத்தவரே, இப்போரில் இதுவரை இயற்றப்பட்டதிலேயே கீழ்மை இது. பூரிசிரவஸ் நம் குடிக்கு எதுவும் பிழையியற்றவில்லை. நாம் எண்ணிக்கொதிக்கும் வஞ்சம் எதுவும் நமக்கு அவரிடமில்லை.”
யுதிஷ்டிரர் பேசுவதற்குள் சகதேவன் தொடர்ந்தான். “இப்போரில் அவர் சாத்யகியின் மைந்தரை கொன்றார். சாத்யகியின் நெஞ்சில் மிதித்தார். ஆனால் போர்க்களத்தில் இயற்றுவனவற்றுக்கு போர்க்களத்தின் நெறிகளே தண்டனையாக முடியும். பூரிசிரவஸை நாம் களத்தில் கொன்றது அதன்பொருட்டே. ஆனால் சாத்யகி இயற்றியது நம் குடிகள் எண்ணி நாணும் செயல். நம் கொடிவழிகள் பிழைநிகர் செய்தாக வேண்டிய கீழ்மை.” யுதிஷ்டிரர் “நான் சொற்களை இழந்துவிட்டேன். மந்தா, நீ கூறுக! நீ கூறுவதைப்போல் நான் செய்கிறேன். சாத்யகி பிழை இயற்றியுள்ளானா?” என்றார்.
பீமன் நகைத்து “நன்று, வழக்கமாக என் சொல்லுக்கு மாற்றாக அவனிடம் கேட்பீர்கள்” என்றபின் மேலும் நகைத்து “போரில் இயற்றலாகாத ஒன்று எண்ணியபின் வருந்துதல்” என்றான். பின்னர் “நாம் சாத்யகியைப்பற்றி பேசுகிறோம். அர்ஜுனன் செய்த பிழையை அச்சொற்களால் மூடிக்கொள்கிறோம்” என்றான். யுதிஷ்டிரர் “இளையோன் என்ன செய்தான்?” என்றார். “பூரிசிரவஸின் கையை அவன் வெட்டுகையில் பூரிசிரவஸ் சாத்யகியுடன் போர்புரிந்துகொண்டிருந்தான். பிறிதொருவனிடம் போர்புரிபவன் கையை வெட்டி எறிவது போர்முறையா?” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “நமக்கு அணுக்கரான சாத்யகியைக் காப்பது நம் கடன். நாம் அவரை இழந்தால் படைக்கலத்தில் ஆற்றல்மிக்க வீரன் ஒருவனை இழக்கிறோம். ஆகவே மாற்று எண்ணம் ஏதும் பொருளற்றதே” என்றான்.
யுதிஷ்டிரர் “ஆம், சாத்யகி அர்ஜுனனுக்கு மைந்தனைப் போன்றவன். அவனைக் காக்க வில்லெடுக்காமலிருந்தால் நாம் இப்போது அர்ஜுனனை பழித்துக்கொண்டிருப்போம்” என்றார். “நாணொலி எழுப்பி அவரை தன்னுடன் போரிட அறைகூவியிருக்கலாமே? வசை கூவி அவரை போருக்கழைத்திருக்கலாமே? விழிதிரும்பி செவிஅணைந்து சித்தம் பிறிதொன்றில் குவிந்திருப்பவனை கை வெட்டி வீழ்த்தியவன் நமது இளையோன். நீங்கள் தண்டம் அளிப்பதென்றால் முதலில் அவனுக்கே அளிக்கவேண்டும்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் சலிப்புடன் “இதை என்னிடம் எவரும் சொல்லவில்லை. அவன் சோர்ந்திருந்தது அதனால்தானா?” என்றார். “அதனாலும்தான்” என்று சகதேவன் சொன்னான். “ஆனால் அதை பெரும்பிழையென நான் எண்ணவில்லை. ஒருகணம் தயங்கியிருந்தால் பூரிசிரவஸ் சாத்யகியின் கழுத்தை வெட்டியிருப்பார். அங்கு நெறியெண்ணப் பொழுதில்லை. அதை இயற்றியது அவரல்ல, அவர் கைகள். அதை ஆண்ட உணர்வு.”
“அத்தகைய உணர்வுகளாலேயே சாத்யகியும் இயக்கப்பட்டான்” என்றான் பீமன். “இல்லை, கையறுந்து விழுந்ததுமே பூரிசிரவஸ் முற்றழிந்துவிட்டார் என்றாயிற்று. ஊழ்கத்தில் அமர்ந்து அவர் உயிர்விடுவதை அர்ஜுனர் ஒப்பிவிட்டார். அதன் பின்னரும் வாளெடுத்துப் பாய்வதென்பது கீழ்மையின் வஞ்சம் மட்டுமே. எதிர்நின்று பொருதி வெல்ல இயலாதவனின் வஞ்சம் அது.” சகதேவனின் தோளில் கைவைத்து “இளையோனே, அவன் ஒரு தந்தை. தந்தையென்று மட்டுமே நின்று அவன் அதை இயற்றியிருக்கலாம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “இங்கு மைந்தரை இழக்காத தந்தை எவர்? மைந்தரைக் கொல்லாத தந்தை எவர்?” என்று பீமன் கேட்டான். “நெறிகள் என்பவை மாறாத கொள்கைகள், மாறுமெனில் அவை நெறிகளல்ல என்று இளமையில் கற்றிருக்கிறோம். பின்னர் வாழ்நாள் முழுக்க நெறிகளை மாற்றுவதெப்படி என்றே சொல்சூழ்கிறோம்” என்றான்.
சீற்றத்துடன் யுதிஷ்டிரர் “நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்… நான் செய்யவேண்டியதுதான் என்ன?” என்றார். “தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை, மூத்தவரே. இப்போரில் தாங்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே. அதற்கப்பால் ஆணையிடுவதற்கும் வழிகாட்டுவதற்கும் நெறியுரைப்பதற்கும் உரிய இடத்தில் இருப்பதாக தாங்கள் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை. அது தங்களுக்கு வெற்றுத் துயரை மட்டுமே அளிக்கும். இறுதியில் அவைச்சிறுமையிலும் கொண்டு சேர்க்கும். ஆகவே அந்த உளச்சிக்கலில் இருந்து விடுபட்டிருங்கள்… அதைத்தான் நீங்கள் செய்யவேண்டும்” என்றபின் பீமன் புரவியைத் திருப்பி கடந்து சென்றான்.
யுதிஷ்டிரர் அவன் செல்வதை சில கணங்கள் நோக்கிவிட்டு “ஆம், அவன் சொல்வது முறையானது. நான் வெறும் பார்வையாளன் மட்டுமே. இங்கு நிகழும் எதிலும் எனக்கு எப்பங்களிப்புமில்லை” என்றார். எரிச்சலுடன் அவரை நோக்காமல் தலைதிருப்பி “இவையனைத்தும் தங்கள் பொருட்டே” என்று சகதேவன் சொன்னான். “ஆம், ஆகவே இவையனைத்திற்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்ளவும் வேண்டும். அதையும் மறுக்கவில்லை” என்று யுதிஷ்டிரர் கூறினார். திருஷ்டத்யும்னன் “நான் பிறிதொரு செய்தியுடன் உங்களை பார்க்க வந்தேன்” என்றான். “இந்தப் போரை இவ்வண்ணமே இரவிலும் தொடரலாம் என்று நான் எண்ணுகிறேன்.”
“இரவிலா? இரவுப்போர் இங்கு வகுக்கப்பட்ட அனைத்து நெறிகளுக்கும் எதிரானதல்லவா?” என்றார் யுதிஷ்டிரர் திகைப்புடன். “சற்று முன்னர் நெறியுரைக்கும் இடத்தில் தாங்கள் இல்லை என்பதை கூறினீர்கள்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் “ஆனால் இது முறையல்ல. இரவுப்போரெனில் அது போரே அல்ல. இருளில் போரிடும் கலையறிந்தவர் பிறரை கொன்றுகுவிக்கும் நிகரிலாப் பூசல் அது. எவரால் எதன்பொருட்டு கொல்லப்படுகிறோம் என்று அறியாமல் இங்கு வீரர்கள் உயிர்விடுவார்கள். வண்ணங்களும் வடிவங்களும் குழம்பிப்போன வெளியில் நம்மவரை நாமே கொன்றுகுவிக்கவும்கூடும்” என்றார்.
“அரக்கர்களும் அசுரர்களும் இருளில் நோக்கும் விழி கொண்டவர்கள். நிஷாதர்களும் கிராதர்களும் அவ்வண்ணமே கண்களை தீட்டி வைத்திருப்பவர்கள். இரவு வேட்டைக்கென விழிகளை நெடுங்காலமாக பயிற்றுவித்து வந்தவர்கள் அவர்கள் என்று தாங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். சினத்துடன் “அவர்களை முன்னிறுத்தி போர்புரியப் போகிறோமா என்ன? ஷத்ரியர்கள் பின்னணியில் நிற்கப்போகிறார்களா?” என்றார் யுதிஷ்டிரர். “எனது நோக்கம் அதுவே. இந்தப் போரை இன்றிரவு அவர்கள் நிகழ்த்தட்டும். எனில் இன்றோடு இப்போர் முடியும். இதுவரை படைசூழ்கையின் நுட்பங்களை அறிந்த ஷத்ரியர்களையே நாம் முகப்பில் நிறுத்தியிருக்கிறோம். ஆனால் இந்தப் போர் அறுதியாக அரக்கர்களுக்கும் அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் கிராதர்களுக்கும் நலம்பயக்கக் கூடியது. இதை அவர்களும் உணர்வார்கள். எனில் போரை இறுதியாக அவர்களே நிகழ்த்தி வெல்லட்டும். தங்களுக்கு அளிக்கப்பட்டதல்ல தாங்கள் ஈட்டியது இவ்வெற்றி என்ற எண்ணமும் அவர்களுக்கு உருவாகும்” என்றான்.
“இல்லை, இரவுப்போர் எவ்வகையிலும் ஏற்கக்கூடியதல்ல. எனது சொல் அதற்கு எழாது” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் “மூத்தவரே, இங்கு அறுதியாக சொல்லவேண்டியவர் இளைய யாதவரே” என்றபின் திருஷ்டத்யும்னனிடம் “இளைய யாதவரிடம் இதைப்பற்றி பேசினீர்களா?” என்றான். “அவரிடம் நேற்றே இதைக்குறித்து பேசினேன். எதிரி உளம் சோர்ந்திருக்கும் தருணத்தில் எவ்வகையிலும் அவன் எதிர்பாராதபடி எழுந்து சென்று தாக்கி முற்றழிப்பதொன்றே இப்போரின் இறுதியாக இருக்க இயலும் என்றேன். அது இரவுப்போரெனில் மிக நன்று என்றும் சொன்னேன். அவர் மறுத்துரைக்கவில்லை.” கைநீட்டி உரத்த குரலில் “ஆனால் அவன் ஏற்கவில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “ஏற்கவில்லையெனில் மறுத்துரைத்திருப்பார்” என்றான் சகதேவன்.
“இரவுப்போர் பெரும்பிழை. இரவில் என்ன நிகழுமென்றே எவராலும் உரைக்க இயலாது. பகலில் விண்ணிலிறங்கும் தெய்வங்கள் அனைத்தும் இரவில் மறைந்துவிடும் என்கிறார்கள். கந்தர்வர்களும் கின்னரர்களும் இரவுக்குரியவர்கள். பாதாள நாகங்களும் இருள் தெய்வங்களும் இரவை ஆள்பவர்கள். இப்போரை நாம் அவர்களுக்கு விட்டுவிடப்போகிறோமா?” என்றார் யுதிஷ்டிரர். “ஏற்கெனவே இப்போர் அவர்களால்தான் நிகழ்த்தப்படுகிறது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்றைய போரை கடோத்கஜன் நிகழ்த்தட்டும். இரவில் ஏழுமடங்கு ஆற்றல் கொள்பவர்கள் அவர்கள். அவன் வழிநடத்தும் இடும்பர் படை இத்தருணத்தில் சென்று அவர்களை அறையுமெனில் போர் நாளை புலர்வதற்குள் முடியும். இன்று பிறை நிலவு. படைக்கலங்களின் கூர் தெரியுமளவுக்கு ஒளியிருக்கும். அதுவே போதும் நமக்கு.”
யுதிஷ்டிரர் தளர்ந்து “இதற்கு நான் என்ன சொல்லவேண்டும், இளையோனே? நான் என்ன சொல்ல வேண்டும்? சொல்க!” என்றார். “தாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்போர் நிகழத்தான் போகிறது” என்று சகதேவன் சொன்னான். “படைகள் அணிதிரும்பிவிட்டன. அனைவரையும் திரட்டி மறுபடியும் போருக்கு கொண்டுசெல்லவிருக்கிறோமா?” என்றார் யுதிஷ்டிரர். “இல்லை, படைகள் மீண்டும் அணிவகுப்பதற்கான அறைகூவல்களை விடுத்தால் எதிரிகள் எச்சரிக்கை கொள்வார்கள்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்று அவர்களின் பெருவீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான எரிசெயல்களை செய்ய துரியோதனர் தெற்குக்காட்டிற்கு சென்றிருக்கிறார். மைந்தனை இழந்த துயரிலிருக்கிறார் அங்கர். கிருபர் நோயுற்றிருக்கிறார். எதிர்த்தரப்பில் இன்று ஊக்கத்துடன் போரிட எவருமில்லை.”
“பிறை எழுகையில் நமது படைகள் கிளம்பட்டும். ஒரு நாழிகைக்குள் கௌரவப் படையை சிதறடிக்க முடியும். மூன்று நாழிகைக்குள் அவர்களின் பெருவீரர்கள் அனைவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து போரை முடிக்க இயலும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “உங்கள் சொல் எழவேண்டும், அதற்காகவே வந்தேன்.” யுதிஷ்டிரர் தவிப்புடன் “இதற்கு நான் என்ன விளக்கம் கூற இயலும்? சொல்க, எந்த நெறியின்பாற்பட்டு இதை ஒப்ப இயலும்?” என்று கேட்டார். “அனைத்துச் செயல்களுக்கும் உரிய விளக்கங்களை அளிக்க அறிவுடையோரால் இயலும். இப்போர் இன்றுடன் முடியுமெனில் இரு தரப்பிலும் பல்லாயிரம் பேர் சாகாமல் தடுக்க முடியும். இரு தரப்பும் முற்றழியாது நிறுத்திவிட முடியும். அதை சொல்லுங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.
யுதிஷ்டிரர் சில கணங்கள் அவனை கூர்ந்துநோக்கிவிட்டு “உங்கள் அனைவர் உள்ளங்களிலும் நிறைந்திருப்பது என் மேலான இளிவரல்தான்” என்றார். திருஷ்டத்யும்னன் விழிகள் கனிய “அல்ல, அரசே. தங்கள் மீதான இளிவரல் அல்ல. இக்களத்தில் மூதாதையரின் சொல்லென, நெறிநூல்களின் வடிவென, தெய்வங்களின் முகம் என நீங்கள் நின்றிருக்கிறீர்கள். இதுவரை எதையெல்லாம் நம்பி வாழ்ந்தோமோ அவையனைத்தும் தாங்களென தெரிகின்றன. நாங்கள் இளிவரலும் சீற்றமும் கொண்டிருப்பது அவற்றின் மீதுதான்” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்றான்.