ஆயிரங்கால்கள் – கடிதங்கள்

kumarapillai

ஆயிரங்கால்களில் ஊர்வது

அன்புள்ள ஜெயமோகன் சார்

“ஆயிரங்க்கால்களில் ஊர்வது” படித்தேன். இப்போது நான் எனது வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான ஒரு கட்டத்தில் இருக்கிறேன். மனதில் எந்த குழப்பங்களும் இல்லை. எந்த பயமும் இல்லை . ஆனாலும் நீங்கள் ஜி.குமாரபிள்ளை கூறியதாக கூறிய  ‘ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை’ வரி இப்போதுதான் நான் கறாராக கடைபிடிக்க ஆரம்பித்திருக்கும் வழி. உங்களின் எழுத்துவழியாய் வந்திருப்பதினால் ஒரு அசரிசி போல என்னிகொள்கிறேன். எண்ணி எண்ணி விரித்துக்கொள்ள முயல்கிறேன்.  மேலும் நீங்கள் கூறிய “பெரும்கனவுகளை கொண்டிருத்தல், இலட்சியங்களின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைதல் ஆகியவை ஒட்டுமொத்தமான பார்வையை முடிவுசெய்யவேண்டும். ஆனால் அந்தக் கனவுத்தன்மை அன்றாடவாழ்க்கையில் இருந்தால் மிக விரைவிலேயே நடைமுறைச் சிக்கல்களால் சோர்ந்துபோகவேண்டியிருக்கும். உலகியல்வாழ்க்கையின் ஈரமற்றதன்மை, அதன் கணக்குவழக்குகள் சலிப்பூட்டும். ஓரிரு அடிகளுக்குப்பின் அந்த ஒட்டுமொத்த கனவின்மேல், இலட்சியத்தின்மேல் அவநம்பிக்கையும் கசப்பும் உருவாகும்” என்பது  நான் அனுபவித்து உங்கள் மூலம் புரிந்து கொண்டது. ஆனாலும் மீண்டும் அதை கேட்பது எனக்குள் என்னை எழுப்பிவிட்டது.

நன்றி சார்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

அன்புள்ள ஜெ

ஆயிரம்கால்களில் ஊர்வது நான் சமீபத்தில் படித்த அற்புதமான கட்டுரை. கடிதம் என்றோ குறிப்பு என்றோ சொல்லலாம். அது ஒரு கருத்தை ஒரு இமேஜ் ஆக தருகிறது. நீங்கள் வெளிப்படுத்தும் முறை அது. பொதுவாக எப்போதும் இருக்கும் ஒரு சிக்கல் இது. சுதந்திரமான பிடித்தமான வாழ்க்கையை வாழவேண்டும் என விரும்புபவர்கள் மெல்லமெல்ல தோல்வியடைந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி மற்றவர்களையும் பிறர் எச்சரிக்கை செய்து ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகிறார்கள். ஒரு இலட்சியவாதியின் தோல்வி என்பது பல இலட்சியவாதிகள் உருவாகாமல் கனவிலேயே நின்றுவிடச்செய்வது.

இங்கே பெரும்பாலானவர்கள் இலட்சியங்களின் தோல்வியைப்பற்றியே எழுதுகிறார்கள். அதை எழுதி வாசிப்பவர்களின் மனசாட்சியை உலுக்க நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு இலட்சியவாதியின் தோல்வி எந்த மனசாட்சியையும் உலுக்குவதில்லை. மாறாக பெரும்பாலானவர்களின் மனதுக்குள் வாழும் அந்த லௌகீகவாதியை மகிழ்ச்சி அடையச்செய்கிறது. நான் அப்பவே சொன்னேனே என்று சொல்கிறார்கள். இதெல்லாம் வேலைக்காவாது என்கிறார்கள். நான் சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் வறுமை பற்றிய செய்திகளைப் பார்க்கையில் என் அப்பா எப்படிச் சொல்வார் என்று கேட்டிருக்கிறேன். இவனுங்க குடும்பத்தக் கவனிக்காம சுத்தினானுக, இப்ப சோத்துக்கில்லாம இருக்கானுக என்றுதான் சொல்வார். அந்த மனநிலையைத்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் வளர்க்கிறார்கள்.

நீங்கள் இந்தக் கட்டுரையில் யதார்த்தவாதம் இலட்சியவாதம் இரண்டும் எப்படிக் கைகோத்துக்கொண்டு செல்லவேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். இரண்டுக்கும் இடையே முரண்பாடு இருக்கவேண்டியதில்லை. இலட்சியவாதம் என்றால் யதார்த்தத்தை மறுப்பது அல்ல. யதார்த்தத்துடன் இலட்சியவாதத்தை இணைத்து வெற்றிபெறுவதுதான். மேலான இலட்சியங்கள் யதார்த்தமான வெற்றியைப் பெற்றாகவேண்டும். அந்த இணைப்புதான் இன்றைக்குத்தேவை. வணக்கம்

டி. கீர்த்திராஜன்

முந்தைய கட்டுரைபனை – கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைகேசவமணி