தென்சரிவில் இரண்டு தரப்பினரின் இடுகாடுகளும் அருகருகே இருந்தன. அங்கே புழங்குபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் குறுங்காட்டுக்குள் பந்தங்கள் ஒழுகும் ஒளியும் சிதைகள் வானளாவ எரிந்து நின்றிருக்கும் ஒளியும் பெருகி நிறைந்திருப்பதையும் அவற்றினூடாக மானுட நிழல்கள் பேருருக்கொண்டு அலைவதையும் மட்டுமே பார்க்கலாகும். சுபாகு சிதைகளின் அருகே நின்றிருந்தபோது சுஜாதன் புரவியில் வந்து இறங்கினான். “மூத்தவர் கிளம்பிவிட்டார்” என்றான்.
போர் தொடங்கிய சில நாட்களிலேயே சுஜாதன் முற்றாக மாறிவிட்டிருந்தான். எப்போதும் வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருப்பது அவன் இயல்பு. எதற்கும் அண்ணாந்து தலையை உதறிக்கொண்டு சிரிப்பான். தன்னுள் மூழ்கி, உதிரிச்சொற்களுடன் இருக்கும் அவனைக் காண்கையில் அவன்மேல் கரிய இருள்திரை ஒன்று வந்து மூடிக்கொண்டது போலிருந்தது. சுபாகு “சிதைகள் ஒருங்கியாயிற்றா?” என்று ஏவலனிடம் கேட்டபின் சுஜாதனிடம் “சென்று ஒருமுறை பார். அவர் நெடுநேரம் இங்கே நிற்கக்கூடாது. அனல் மூட்டிய மறுகணமே திரும்பிவிடவேண்டும்” என்றான்.
சுஜாதன் “ஆம்” என தலையசைத்து கிளம்புவதைக் கண்டதும் “நில்” என்றான் சுபாகு. “நீ சென்று குறுங்காட்டின் வாயிலில் நில். அவர்கள் அணுகும்போது என்னிடம் தெரிவி” என்றபின் தனக்குத்தானே என “நானே பார்த்துக்கொள்கிறேன்” என்றான். சுஜாதன் அதற்கும் எவ்வுணர்வையும் காட்டவில்லை. சிதைகளை நோக்கி செல்கையில் உடன்வந்த ஏவலனிடம் “இளையோன் இங்கே கிடக்கும் உடல்களை பார்க்கவேண்டியதில்லை” என்றான். ஏவலன் “ஆணை” என்றான். “போர்க்களத்தில் உடல்கள் மேல் நின்றுதான் போரிடுகிறோம். ஆனால் இங்கே சடலங்களைப் பார்ப்பது வேறு ஓர் நடுக்கை அளிக்கிறது. மெய் சொல்வதென்றால் என்னால் இங்கே நிற்கவே இயலவில்லை” என்றான் சுபாகு.
பெரிய சிதையருகே கீழே குண்டாசியின் உடல் வெண்பட்டுத்துணியால் போர்த்தப்பட்டுக் கிடந்தது. அதை பார்த்ததுமே அது எவருடையது என்று தெரிந்தது. “இன்னும் சிதைமேல் ஏற்றவில்லையா?” என்று சுபாகு கேட்டான். “இல்லை, ஒரு சிறிய குழப்பம். அரசர் தன் இளையோன் குண்டாசியின் உடலுக்கு அனல்மூட்ட விழைவதாகவே செய்தி. முன்னர் இறந்த இளையோரின் உடல்களுக்கு அவர் அங்கிருந்தே அனல் கொடுத்தனுப்புவதுதான் வழக்கம்” என்றான் சுடலைப்பொறுப்பாளன். “ஆகவே குண்டாசியின் சடலத்தை மட்டும் தனியாக சிதையேற்றவேண்டும் என என் உதவியாளன் சொன்னான். தங்களிடம் ஒரு சொல் கேட்டுவிட்டுச் செய்யலாமென்று எண்ணினேன்.”
சுபாகு கீழே கிடந்த மற்ற உடல்களை பார்த்தான். அவர்களின் முகங்கள் வெண்ணிறத் துணியால் சுற்றிக்கட்டப்பட்டிருந்தன. அவன் அவர்களின் முகங்களை நினைவுகூர முயன்றான். பின்னர் “அவன் எங்களில் ஒருவன். இதுவரை மறைந்த கௌரவர்கள் அனைவருமே கூட்டாகவே சிதையேற்றப்பட்டனர். அவ்வாறே இவனும் சிதையேறட்டும்” என்றான். “ஆணை” என்றான் சுடலைப்பொறுப்பாளன். சுபாகு பெருமூச்சுடன் அப்பால் சென்று அங்கே பூரிசிரவஸுக்கு சிதை ஒருங்கிக்கொண்டிருப்பதை கண்டான். சலனின் உடல் மேலே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கீழே பூரிசிரவஸின் உடல் துணிக்குவியல்போல் வைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்த சுடலைக்காவலன் சுபாகுவை அணுகி “இங்கே ஓர் ஐயம் நிலவுகிறது, இளைய அரசே” என்றான். “சொல்” என்று அவன் சொன்னான். “அவர் உடலை தாங்கள் ஒருமுறை பார்க்கவேண்டும். அது விந்தையாக அமர்ந்துள்ளது.” சுபாகு “அமர்ந்திருக்கிறதா?” என்றான். “ஆம்” என்றான் சுடலைக்காவலன். “தாங்களே பாருங்கள்.” அவன் அங்கிருந்த பூரிசிரவஸின் உடலை சுட்டிக்காட்டிய பின்னரே அந்தக் காட்சியின் விந்தை சுபாகுவை வந்தடைந்தது. பூரிசிரவஸின் தலையில்லாத உடல் மலரமர்வில் அமர்ந்திருந்தது. “துணியை விலக்குக!” என்றான் சுபாகு. “இளையவரே” என சுடலைக்காவலன் தயங்கினான். “விலக்குக!” என்றான் சுபாகு.
துணியை விலக்கியபோது சுபாகு ஒருகணம் உளம் அதிர்ந்தான். பூரிசிரவஸின் உடல் கால்களை மடித்து இடக்கையை மடியில் வைத்து முதுகை நிமிர்த்தி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தது. மடியிலிருந்த அவன் தலை விழிமூடி ஊழ்கம் கொண்டிருந்தது. அருகே வெட்டுண்ட கையில் கட்டைவிரலை சுட்டுவிரல் வந்து தொட்டிருக்க சுழிமுத்திரை காட்டியது. சிலகணங்கள் நோக்கியபோது அவன் உடலில் தலை இல்லாமலிருப்பது எவ்வகையிலும் மாறுபாடாகத் தெரியவில்லை. மடியிலிருந்த தலையை கழுத்தின்மேல் அமர்ந்திருப்பதாக உள்ளம் எண்ணிக்கொண்டதா? அந்த முகத்தில் இருந்த ஆழ்ந்த நிறைவுதான் அவ்வாறு எண்ணச்செய்ததா?
“அவர் களத்தில் வீழ்ந்ததைக் கண்டவர் சொன்னார்கள் அப்போது கைவிரல்கள் விரிந்து எதையோ கோருவதுபோலத் தோன்றின என்று. உடலை தேரில் எடுத்துவைத்த தேரோட்டி அவை அதிர்ந்துகொண்டிருந்தன என்றான். ஆனால் தேரில் இங்கே கொண்டுவரும் வழியில் விரல்கள் இவ்வாறு சுழிமுத்திரையை சூடிக்கொண்டிருக்கின்றன” என்று சுடலைக்காவலன் சொன்னான். சுபாகு “என்ன சிக்கல் என்றாய்?” என்றான். “பால்ஹிகக்குடியில் சோமதத்தர் மட்டுமே இப்போது உயிருடன் இருக்கிறார். இரு இளவரசர்களின் மைந்தர்களும் கொல்லப்பட்டுவிட்டனர். சோமதத்தர் எழுந்துநிற்கும் நிலையில் இல்லை. அனல்சடங்குகளைச் செய்ய அந்தணரையே அழைத்திருக்கிறோம்” என்றான் சுடலைக்காவலன்.
சுபாகு அவன் மேலே சொல்லக்காத்து நின்றான். “அந்தணர் அஞ்சுகிறார். சடலம் இவ்வாறு அமர்ந்திருக்க எரியூட்டுவது முறையல்ல என்கிறார். யோகியரின் சடலங்களை மட்டுமே அமரச்செய்து எரியூட்டுவது வழக்கம். யோகியரின் சடலங்களை இல்லறத்தார் எரிகடன் செய்து சிதையேற்றலாகாது” என்றான் சுடலைக்காவலன். “யோகியரின் சிதைக்கு அவர்களின் ஆசிரியர்களோ மாணவர்களோ எரியூட்டலாம். யோகி நாடோடி என்றால் அவர் மாணவர் என தன்னைக் கொண்டு எவரும் எரியூட்டலாம். ஆனால் இவர் யோகியல்ல, யோகம் முழுமையடையாமல் வெட்டுண்டு உயிர்நீத்த உடல். ஆகவே அனைவரும் அஞ்சுகிறார்கள்.”
சுபாகு பெருமூச்சுவிட்டான். சிரிக்கவேண்டும்போல் தோன்றியது. பின்னர் “நன்று, நான் எரியூட்டுகிறேன்” என்றான். “ஆனால்…” என சுடலைக்காவலன் சொல்லெடுக்க “பழி சேராது. சேருமென்றாலும் ஒருநாள் நீடிக்காது… நான் நாளையே உயிர்துறப்பேன்” என்றான் சுபாகு. “இளைய அரசே” என்றான் சுடலைக்காவலன். “அல்லது நாளை மறுநாள். இந்தக் களத்தில் இருந்து நான் உயிருடன் மீளப்போவதில்லை. என் இளையோரும் மூத்தோரும் மைந்தரும் மடிந்த இக்களத்திலிருந்து உயிருடன் மீண்டு நான் எதை அடையமுடியும்?” என்ற சுபாகு. “அவருடைய மாணவன் என சொல்பூண்டு நானே அவர் சிதைக்கு எரியூட்டுகிறேன்” என்றான். “அவ்வண்ணமென்றால் அவரை தனியாகவே சிதையிலேற்ற வேண்டும்” என்றான் சுடலைக்காவலன். “செய்க!” என்றான் சுபாகு.
அவர்கள் சிறிய சிதை ஒன்றின்மேல் பூரிசிரவஸின் உடலை ஏற்றி அமரச்செய்தார்கள். தலையையும் கையையும் மடியில் வைத்தனர். சுபாகு அவன் விரல்களை நோக்கிக்கொண்டிருந்தான். இறந்தபின் அவ்விரல்கள் இரண்டும் சென்று தொட்டுக்கொண்டிருக்கின்றனவா? சுட்டிச்சுட்டி இவ்வுலகை அறியும் விரல் ஒன்று. அனைத்து விரல்களுடனும் இணைந்து இணைந்து அனைத்தையும் படைக்கும் இன்னொன்று. சுட்டுவதும் சுட்டப்படுவதும் தொட்டுக்கொள்ளும் முழுமை நிகழ்ந்துவிட்டதா என்ன? அவர்கள் உடல்மேல் அரக்கையும் நெய்யையும் பெய்தனர். விறகுத்துண்டுகளால் உடலை மூடி அதன்மேல் குந்திரிக்கக் கட்டிகளை வைத்தனர்.
பூரிசிரவஸின் முகத்தில் எப்போதும் இருக்கும் இளமை மேலும் துலங்கியிருப்பதாக சுபாகு எண்ணினான். அது தன் உள்ளத்தின் விழைவாக இருக்கும் என எண்ணிக்கொண்டாலும் அக்காட்சி மேலும் தெளிவுடன் எழுந்தது. அவன் உதடுகளில் இளஞ்சிறுவனுக்குரிய புன்னகை எப்போதும் உண்டு. அவனுக்கு அடர்ந்த மீசை முளைக்கவேயில்லை. பதின்ம அகவையருக்குரிய பூனைமயிர் மீசை. மேலுதட்டில் புகையெனப் படிந்து வாயின் விளிம்பில் மட்டும் சற்றே செறிந்து தொங்குவது. தாடியும் கன்னமயிரும் செறிவடையவில்லை. அவனுடைய மாறா இளமை அதனால்தான் போலும். மலைமக்களுக்கே அடர்ந்த தாடியும் மீசையும் முளைப்பதில்லை. அவர்களின் நிறம் காய்ச்சிச் சுண்டி வெல்லமிட்ட பாலுக்குரியது. பால்பரப்பின் ஒளியும் கொண்டது.
அவர்களின் விழிகளின் கீழிமை சற்றே இழுத்துத் தைத்தது போலிருக்கும். “மலைமக்களுக்கும் பீதர்களுக்கும் கண்களை பிழையாக இழுத்துத் தைத்துவிட்டார்கள்” என அவன் ஒருமுறை சொன்னபோது பூரிசிரவஸ் சிரித்துக்கொண்டே “எங்கள் இரு கண்களும் நேராக அமைவதில்லை, சற்றே திரும்பியிருக்கும் அவை. நாங்கள் விரிந்த மலைப்பரப்பை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்பதற்காக மலைத்தெய்வங்கள் அவ்வாறு அமைத்தன என்பார் என் தாதை” என்றான். “ஆனால் உங்கள் கண்கள் நேராகவே உள்ளன” என்றான் சுபாகு. “ஆம், அதனால்தான் என்னால் முழு மலையையும் ஒருபோதும் பார்க்கமுடியவில்லை. என்னால் நிகர்நிலத்தில் நேராகவே பயணம்செய்ய இயல்கிறது” என்றான் பூரிசிரவஸ்.
அவன் விழிகள் அசைகின்றனவா? உதடுகள் உயிர்ப்பு காட்டுகின்றனவா? எத்தனை வெறியுடன் இறந்தவர்கள் இறக்கவேயில்லை என நம்ப விழைகிறது உள்ளம்? எண்ணி எண்ணியே அவர்களை மீட்டுவிடமுடியும் என்பதுபோல. இப்புவியில் நம்பவே முடியாத நிகழ்வு என ஒன்று உண்டு என்றால் இறப்புதான். இறப்பின்போது அனைத்தும் ஒரு நொடியில் அகன்றுவிட வெற்றுச்சடலம் மட்டும் குப்பையென கண்முன் கிடக்கும் என்பதுதான்.
சுடலைக்காவலன் “ஒருங்கிவிட்டது, இளைய அரசே” என்றான். சுபாகு சென்று சிதை அருகே நிற்க சுடலைக்காவலன் “போர் முதிர முதிர சிதைச்சடங்குகள் எளிதாகிவிட்டன, இளையவரே. மும்முறை நீரையும் அரிசியையும் மலரையும் அள்ளி அவர் கால்களில் இடுங்கள். மும்முறை சுற்றிவந்து வணங்கிவிட்டு நெஞ்சில் அனலை இடுங்கள்” என்றான். குடியிலுள்ளவருக்கே புத்தாடையும் வாய்க்கரிசியும் குடமுடைத்தலும் பிறவும். யோகிகளை அமர்ந்த நிலையில் புதைக்கவேண்டும். ஆனால் பூரிசிரவஸ் யோகியும் அல்ல. எண்ண எண்ண ஒவ்வொன்றும் பொருளில்லாததாகத் தோன்றியது. ஆனால் அந்தப் பொருளில்லாச் சடங்குகளில் ஒன்றை மீறுவதற்குக் கூட எவருக்கும் துணிவு எழுவதில்லை.
அவன் சுற்றிவந்து வணங்கியதும் சுடலைக்காவலன் குந்திரிக்கத்தில் பொதிந்து நெய்யூற்றிய திரி சுற்றப்பட்ட கொள்ளியை அவனிடம் அளித்தான். அதை பந்தத்தில் காட்டியதும் பற்றிக்கொண்டது. “நெஞ்சிலிடுக!” என்றான் சுடலைக்காவலன். அவன் கொள்ளியை சிதை மையம் நோக்கி வீசினான். குந்திரிக்கம் பற்றிக்கொண்டது. நெய் நீலவண்ணமாக உடன் இணைந்துகொண்டது. சிதை உறுமியபடி, சீறியபடி, வெடித்தபடி பற்றிக்கொண்டது. பச்சைவிறகிலிருந்த மரக்கறை எரிந்தபோது மூச்சடைக்கவைக்கும் தைலநெடி எழுந்தது.
“செல்க, இளையவரே” என்றான் சுடலைக்காவலன். அவன் செல்வதற்காக திரும்பும் முன் இயல்பாக ஒருமுறை பூரிசிரவஸின் உடலை நோக்கினான். அனல் அதை மூடிவிட்டிருந்தது. செந்தழல்களின் கொப்பளிப்புக்கு அப்பால் அந்த உடல் அசைவதுபோலத் தெரிந்தது. தழலாட்டமும் புகையெழுச்சியும் உருவாக்கும் விழிமயக்கா என ஐயுற்று கூர்ந்து நோக்கியபோது மெய்யாகவே உடல் துடிப்பதை, கால்கள் துள்ள எழமுயல்வதுபோல் அசைவதை கண்டான்.
சுடலைக்காவலன் “அது வழக்கம்தான், இளையவரே” என்று அவன் தோளில் தொட்டு “செல்க!” என்றான். “எல்லா உடல்களும் இவ்வண்ணம் துள்ளுவதுண்டா?” என்றான். “எல்லா உடல்களும் அல்ல” என்றான் சுடலைக்காவலன்.
சுபாகு சுஜாதனின் குதிரையின் குளம்படிகளைக் கேட்டு துரியோதனன் வந்துவிட்டான் என எண்ணினான். அங்கே சென்றபோது சுஜாதனின் குதிரையின் அருகே இன்னொரு குதிரை நின்றிருப்பதை கண்டான். சுஜாதனின் உடலால் மறைக்கப்பட்டவன்போல யுயுத்ஸு நின்றிருந்தான். சுபாகு அருகே சென்றதும் யுயுத்ஸு தலைவணங்கினான். சுபாகு “அரசமுறையாக நீ இங்கு வரவில்லை என எண்ணுகிறேன்” என்றான். “இல்லை, ஆனால் யுதிஷ்டிரரிடம் சொல்லிவிட்டே வந்தேன்” என்றான் யுயுத்ஸு. “விகர்ணரும் குண்டாசியும் சிதையேறுகையில் நான் உடனிருக்கவேண்டும்… அவர்கள் அதை விரும்புவார்கள்.”
சுபாகு அவனை சில கணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “நன்று” என்றான். “ஆனால் சற்றுநேரத்தில் இங்கே மூத்தவர் வரப்போகிறார். நீ இங்கே வருவதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.” யுயுத்ஸு “அவர் என்னை விரும்புவார் என்பதில் எனக்கு ஐயமே இல்லை” என்றான். “அவர் இன்றிருக்கும் நிலையில் அவருடைய உளநிலை குறித்து எவரும் எதுவும் சொல்லிவிட முடியாது” என்றான் சுபாகு. “நான் சொல்கிறேன், அவர் வந்து சிதைக்கு எரியூட்டுவதுவரை நீ அவர்முன் வரவேண்டியதில்லை. மரங்களுக்குப் பின்னால் மறைந்தபடி நில். அவர் இங்கே சற்றுநேரமே இருப்பார்…” என்றான். யுயுத்ஸு “நான் மறைந்து நிற்கும் இயல்பு கொண்டவன் அல்ல. அவர் வாள் உருவி என்னை கொல்வார் என்றாலும் அவர் முன் நிற்கவே விரும்புவேன்” என்றான்.
சுஜாதன் ஓசைகளுக்காகத் திரும்பி “மூத்தவர் வந்துவிட்டார்” என்றான். சுபாகு சிதையை ஒருமுறை திரும்பி நோக்கியபின் யுயுத்ஸுவிடம் இறுதியாக ஏதோ சொல்ல நாவெடுத்து பின் தலையசைத்து அதை மறுத்துவிட்டு இடுகாட்டின் முகப்புக்குச் சென்றான். நான்கு புரவிகள் நீண்ட நிரையாக வந்தன. முதலில் வந்த காவலன் வெறுமனே “அஸ்தினபுரியின் அரசர் வருகை!” என்று அறிவித்தான். சுபாகு வரவேற்பதுபோல சென்று நின்றான். துரியோதனன் துச்சாதனன் தொடர்ந்து வர விரைவான நடையுடன் வந்தான். அவர்களுக்குப் பின்னால் ஏவலர் வந்தனர். அவன் உடல் வெளுத்திருப்பதுபோலத் தோன்றியது. கண்களுக்குக் கீழே தசை கருகிச்சுருங்கி மடிப்புகளாகத் தொங்கியது.
சுபாகு “அனைத்தும் சித்தமாக உள்ளன, மூத்தவரே” என்றான். துரியோதனன் தலையசைத்தான். அவன் விழிகள் உடனே யுயுத்ஸுவை பார்த்துவிட்டன. யுயுத்ஸு அருகே வந்து தலைவணங்கி “நான் இங்கிருக்கவேண்டும் என்று தோன்றியது, அரசே. விகர்ணரிடமும் குண்டாசியிடமும் விடைபெற்றுக் கிளம்பியவன் நான்” என்றான். துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தான். சுடலைப்பொறுப்பாளன் வந்து தலைவணங்கினான். சுபாகு “சித்தமாகிவிட்டனவா?” என்றான். “ஆம்” என்று சுடலைப்பொறுப்பாளன் சொன்னான். சுபாகு “செல்வோம்” என்றான்.
அவர்கள் நடக்க துச்சாதனன் “அனைவரும் ஒரு சிதையில்தானே?” என மெல்லிய குரலில் கேட்டான். “அப்படித்தான் வழக்கம்” என்றான் சுபாகு. துரியோதனன் நின்று “அவனை பிறருடன் வைக்கவேண்டாம்…” என்றான். “அவன் நம்முடன் இருக்கவில்லை. அவன் அதை விரும்பமாட்டான்.” துச்சாதனன் “மூத்தவரே” என்று அழைக்க “எனக்கு அவன் அகம் தெரியும்… இளையோனே, அவன் சொல்லவேண்டிய சொற்களை நானே நூறாயிரம்முறை சொல்லிக்கொண்டவன்தான்” என்றான் துரியோதனன். துச்சாதனன் தலைவணங்கினான்.
சுபாகு சுடலைப்பொறுப்பாளனிடம் “குண்டாசியை மட்டும் எடுத்து தனிச்சிதையில் வையுங்கள். விரைவாக” என்றான். துரியோதனன் அங்கே நிரையாகக் கிடத்தப்பட்டிருந்த உடல்களை பார்த்தான். துச்சாதனன் “நம் மைந்தர்” என்றான். துரியோதனன் நோக்கை திருப்பிக்கொண்டான். சுபாகு “விரைவாக” என்றான். துரியோதனன் “ஜயத்ரதனின் சிதை எங்கே?” என்றான். துச்சாதனன் “அரசே, பிருஹத்காயரின் முதன்மை மாணவன் ஜயத்ரதரின் உடல் வேண்டும் என்று வந்து என்னிடம் கேட்டான். தந்தையையும் மைந்தனையும் சேர்த்து ஒரே இடுகாட்டில் புதைக்கவேண்டும் என்று சொன்னான். நான் ஒப்புதல் அளித்தேன்” என்றான்.
துரியோதனன் “அவன் இறப்புச்செய்தி அரண்மனைக்கு அறிவிக்கப்பட்டதா?” என்று கேட்டான். “ஆம். தூதன் சென்றுள்ளான். பறவைச்செய்தி சிந்துநாட்டுக்கும் சென்றிருக்கிறது” என்றான் துச்சாதனன். துரியோதனன் திரும்பி யுயுத்ஸுவை நோக்கி “நீ அங்கே போர்முனைக்கு வருகிறாயா?” என்றான். யுயுத்ஸு “ஆம்” என்றான். துரியோதனன் சினத்துடன் “ஏன், அங்கே வீரர்களுக்கா குறைவு? உன்னை எதற்காக அனுப்புகிறார்கள்?” என்றான். “யுதிஷ்டிரர் போர்முனைக்கு நான் வரலாகாதென்றே சொன்னார். வருவது என் கடன் என எண்ணினேன்” என்றான் யுயுத்ஸு. “உனக்கு புண் ஏதும் படவில்லை அல்லவா?” என்றான் துரியோதனன். “இல்லை, மூத்தவரே” என்றான் யுயுத்ஸு.
அப்பால் புரவியின் குளம்படியோசை கேட்டது. “யார்?” என்றான் துரியோதனன். புரவி வந்து நிற்க அதிலிருந்து கிருதவர்மன் பாய்ந்திறங்கி அருகே ஓடிவந்தான். “அரசே, முதன்மைச் செய்தி…” என்றான். “உளவுச்செய்தி என்றால்…” என துச்சாதனன் தொடங்க “உளவுச்செய்திதான். ஆனால் உடனே அரசர் செவிகொள்ளவேண்டிய ஒன்று” என்றான். யுயுத்ஸு தலைவணங்கி விலகிச்சென்று சொல்கேட்காத தொலைவில் சிதைகளின் அருகே நின்றான். கிருதவர்மன் அருகணைந்து மூச்சிரைக்க “அவர்கள் இரவுத்தாக்குதலுக்கு ஒருக்கம்கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். எக்கணமும் அவர்களின் படைகள் நம் மேல் பாயக்கூடும்” என்றான்.
“இரவிலா? யுதிஷ்டிரர் அதற்கு ஒப்பினாரா?” என்றான் துரியோதனன். “அவருடைய ஒப்புதல் இன்றி நிகழாதல்லவா? இரவுத்தாக்குதல் நிகழப்போகிறது, அதில் ஐயமே இல்லை. நான் வரும் வழியில் காவல்மாடம் மீதேறி நோக்கினேன். மறுதரப்பிலிருக்கும் கிராதர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் ஒருங்கிணைகிறார்கள். பாணாசுரனின் மைந்தனும் சம்பாராசுரனின் மைந்தர்களும் இடும்பர்களும் கடோத்கஜனின் தலைமையில் அணிதிரள்கிறார்கள். இருளுக்குள் பந்தங்கள் எரியாமல் அப்படைநீக்கம் நிகழ்கிறது. ஆனால் அவ்வாறு அறிந்தபின் நோக்கினால் வெறும்விழிகளுக்கே அவர்களின் நிரைகள் தெரிகின்றன.”
“வாய்ப்புள்ளது, மூத்தவரே” என்று சுபாகு சொன்னான். “அவர்களின் இடத்தில் நான் இருந்தால் அதை செய்வேன். நாம் இழப்புகளால் சோர்ந்திருக்கிறோம். நமது மாவீரர்கள் இருவர் இன்றைய போரில் தோற்று பின்னடைந்திருக்கிறார்கள். நமது படைகளில் பெரும்பாலானவர்கள் ஷத்ரிய வீரர்கள். அவர்களிடம் அரக்கர்களும் அசுரர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் மிகுதி. அவர்கள் இருளில் நோக்கு துலங்கும் பயிற்சிகொண்டவர்கள். பல தலைமுறைகளாக இருள்மறைவுக்குள் நின்று போரிடும் வழக்கத்தைக் கொண்டவர்கள். அவர்கள் படைகொண்டு வருவார்கள் என்றால் நாம் அழிவோம். இன்றோடு போர் முடியும்.”
“இல்லை, யுதிஷ்டிரர் அதற்கு சொல்லளித்திருக்க வாய்ப்பில்லை” என்றான் துரியோதனன். “அரசே, அவரிடம் உகந்த விளக்கத்தை அளித்திருப்பார்கள். இந்தப் போர் இன்றே முடிந்தால் பல்லாயிரம்பேரின் உயிர் காக்கப்படும், ஆகவே சிறு அறமீறல்கள் பிழையல்ல என்று சொல்லியிருப்பார்கள். அவர் ஏற்றுக்கொண்டிருப்பார்.” துரியோதனன் “என்ன செய்வது?” என்றான். உடனே உளம்சோர்வுற்று “என்ன நிகழுமோ அதுவே நிகழ்க! என்னால் இனி இயலாது” என்றான். சுபாகு “மூத்தவரே, நாம் அங்கரையும் ஆசிரியரையும் ஊக்கம்கொள்ளச் செய்து எழ வைப்போம். நமது படைகள் ஓய்வுகொள்ள வேண்டாம் என அறிவிப்போம். அனைத்து ஆணைகளும் உடனே சென்றாகவேண்டும். நீங்கள் படைக்குத் திரும்பாமல் வேறு வழியில்லை” என்றான்.
துரியோதனன் “நமது படைகளில் அரக்கரும் அசுரரும் இல்லையா?” என்றான். “ஆம், சிலர் உள்ளனர். அஸ்வத்தாமர் அவர்களை வரவழைக்க ஆணையிட்டிருக்கிறார்” என்று கிருதவர்மன் சொன்னான். “தண்டக நிலத்தின் அசுரர்தலைவன் ரிஷியசிருங்கனின் மைந்தன் அலம்புஷன் தன் படைகளுடன் நம்முடன் சேர்ந்திருக்கிறான். ஜடாசுரனும் அவன் மைந்தனாகிய பிறிதொரு அலம்புஷனும் நம் படைகளுடன் உள்ளனர். பகனின் கொடிவழியில் வந்தவனாகிய அலாயுதன் தன் படைகளுடன் நமக்காக போரிட்டுக்கொண்டிருக்கிறான். அவர்கள் நம்மை போரில் வழிநடத்தக்கூடும்.”
சுபாகு “மூத்தவரே, தாங்கள் உடனே கிளம்புக!” என்றான். துரியோதனன் திடுக்கிட்டவனாக திரும்பி நோக்கி “ஆம்” என்றான். சுபாகு துரியோதனனை சிதைகளை நோக்கி அழைத்துச்சென்றான். உடன்பிறந்தாரின் உடல்கள் அடுக்கப்பட்ட பெரிய சிதையை நோக்கி நின்ற துரியோதனன் மெல்லிய தலைநடுக்கம் மட்டும் கொண்டிருந்தான். திரும்பி அப்பாலிருந்த சிறிய சிதையை நோக்கியபின் “அது குண்டாசி அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் சுடலைப்பொறுப்பாளன். “அவனையும் நம் உடன்பிறந்தாருடன் சேர்த்து சிதையேற்றுக!” என்றான் துரியோதனன். சுபாகு மறுசொல் இல்லாமல் விழிகளால் ஆணையிட இரு ஏவலர் ஓடிச்சென்று அங்கிருந்து குண்டாசியின் உடலைக் கொண்டுவந்து பெரிய சிதையில் வைத்தனர்.
துரியோதனன் சடங்குகளைச் செய்வதை அவர்கள் அமைதியாக நோக்கி நின்றார்கள். மெல்லிய முணுமுணுப்புகளாக பேச்சொலிகள் எழுந்தன. தழல் சிறகுகளை உதறிக்கொண்டு எழுந்து ஆடி நெளிந்து காற்றில் தழைந்து மேலும் படர்ந்து ஏறியது. சுபாகு “தாங்கள் கிளம்பலாம், மூத்தவரே” என்றான். துரியோதனன் தீயை சில கணங்கள் நோக்கி நின்றபின் திரும்பிச்செல்ல முனைந்து நின்று யுயுத்ஸுவை நோக்கி கைநீட்டினான். யுயுத்ஸு அருகே ஓடிவந்து நிற்க அவனுடைய மெலிந்த சிறிய தோள்களில் தன் எடைமிக்க கைகளை வைத்தான். அவன் விழிகள் சிவந்திருந்தன. ஆனால் விழிநீர் வெளிப்படவில்லை. அவன் யுயுத்ஸுவிடம் ஏதேனும் சொல்வான் என சுபாகு எதிர்பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லாமல் துரியோதனன் நடந்து புரவிகளை நோக்கி சென்றான்.
சுஜாதனிடம் சுபாகு “நீயும் உடன்செல்க… நான் இங்குள பணிகளை முடித்துவிட்டு வருகிறேன்” என்றான். சுஜாதன் “இங்கே இனி பணிகள் ஏதும் இல்லை என நினைக்கிறேன். உங்கள் அருகமைவு மூத்தவருக்குத் தேவையாகும்” என்றான். ஒருகணம் எண்ணிவிட்டு மறுசொல் பேசாமல் சுபாகு யுயுத்ஸுவை பார்த்தான். “நீங்கள் செல்க மூத்தவரே, சிதை எரிந்து அணையும்வரை உடன்பிறந்தாருடன் நானும் இருப்பேன்” என்றான் யுயுத்ஸு. அவனை ஒருகணம் நோக்கிவிட்டு சுபாகு துரியோதனனுடன் சென்றான்.
துரியோதனன் “அசுரர்களையும் அரக்கர்களையும் என் அவைக்கு வரச்சொல்க!” என்றபடி நடந்தான். கிருதவர்மன் “அஸ்வத்தாமர் திட்டத்தை ஏறக்குறைய வகுத்துவிட்டார், அரசே. நாம் அவர்களை அவையெனக் கூட்டி சொல்லளிப்பதற்கு நமக்குப் பொழுதில்லை. அரக்கரும் அசுரரும் முகப்பில் நின்றிருக்கவேண்டும். ஷத்ரியப் படைகள் ஒவ்வொன்றுடனும் அரக்கரோ அசுரரோ ஒரு படைப்பிரிவு இணைந்திருக்கவேண்டும். அதற்கான ஆணைகளை அஸ்வத்தாமர் அனுப்பியிருப்பார்” என்றான். துச்சாதனன் “நாம் நேராகவே படைமுகப்புக்கு செல்லவேண்டியதுதானா?” என்றான். “ஆம், அவ்வாறுதான் உத்தர பாஞ்சாலரின் எண்ணம்” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றான் துரியோதனன்.
அவர்கள் படைமுகப்பை நோக்கி புரவிகளில் விரைந்தார்கள். “அங்கர் படைமுகப்புக்கு சென்றுவிட்டிருக்கிறார். ஆசிரியரும் படைமுகப்பை அடைந்துவிட்டிருக்கிறார். அஸ்வத்தாமரும் முகப்பை அடைவார்… நம்மை அவர்கள் கருதியதுபோல் எளிதாக வெல்ல முடியாது” என்று கிருதவர்மன் சொன்னான். “ஒலியை காட்சியாக ஆக்கும் சப்தஸ்புடக் கலை தேர்ந்தவர்கள் அவர்கள் மூவரும். இருளிலேயே அம்புகளைச் செலுத்தி அம்புகளை வீழ்த்த அவர்களால் இயலும்.”
துரியோதனன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி “அத்தனை திறன்களும் உடையவர்கள் ஏன் தோற்றோடுகிறார்கள்? அவர்கள் காட்டுவதெல்லாம் வெறும் சொல்திறன் மட்டும்தானா?” என்றான். துச்சாதனன் “மூத்தவரே” என தடுக்க முயல கையால் அவனை தவிர்த்து “அவர்கள் கண்ணெதிரே ஜயத்ரதன் தலைகொய்யப்பட்டான். பூரிசிரவஸ் கை வெட்டப்பட்டு வீழ்ந்தான். பெருந்திறல்வில்லவனாகிய கர்ணனின் கண்முன் அவன் மைந்தர்கள் கொல்லப்பட்டார்கள். என்ன செய்தான் அவன்? வில் கையில் நிலைக்காத அந்த ஊன்குன்று அவனை ஏழுமுறை அம்பால் அறைந்து பின்னடையச்செய்து முகத்தில் உமிழ்ந்துவிட்டுச் சென்றான்” என்றான்.
“மூத்தவரே, போரில் அனைத்தும் நிகழும். இத்தருணத்தில் நாம் நம் சொற்கள் கட்டிலாது பெருகவிடக் கூடாது. அது நமக்கே இழப்பு” என்றான் துச்சாதனன். “இழப்பா? இனி என்ன இழப்பு? இனி என்ன எஞ்சுகிறது எனக்கு? சொல், இனி நான் வென்றடைய என்ன உள்ளது? நான் இப்போது போரிடுவது தன்மதிப்புக்காக மட்டுமே. அந்த அங்கநாட்டுக் கோழை தன்மதிப்பையும் இழந்து களத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறான்… அதை அவனிடம் கேட்காமலிருக்க என்னால் இயலாது.”
“என் சொற்களை உள்ளே அடக்கி அடக்கி பார்த்தேன். நான் சொல்லியாகவேண்டும். ஒருவேளை இன்று களத்தில் நான் விழுந்தால் அச்சொற்கள் என்னுடன் வரலாகாது… நான் அவனிடமும் ஆசிரியரிடமும் கேட்பேன். என்னை ஏன் அவர்கள் கைவிட்டார்கள் என்று. நான் நம்பிய அவர்களின் வீரம் பொய்யா என்று. அல்லது அவர்களின் அன்புக்கு நான் தகுதியற்றவனா என்று…” துரியோதனன் பற்களைக் கடித்து கைகளை வீசினான். “அவர்கள் என் இளையோரின் சிதைமுன் நின்று தற்பெருமை பேசுகிறார்கள். நாளை என் சிதைமுன் நின்று நெறியும் முறையும் பேசுவார்கள்… இன்று என்மேல் கொல்லும் வஞ்சம் இருப்பது பீமனின் உள்ளத்தில் அல்ல. இவர்களிடம்தான்.”
“வேண்டாம், மூத்தவரே” என்றான் துச்சாதனன். “அதோ வந்து நின்றிருக்கிறான் அங்கன். பொற்தேர் ஒளிவிடுகிறது… அவனிடம் கேட்டே தீர்வேன்” என்றபடி துரியோதனன் தன் புரவியைத் தட்டி மரப்பலகை பதிக்கப்பட்ட தேர்ச்சாலையினூடாக கர்ணனை நோக்கி சென்றான். “மூத்தவரே, நில்லுங்கள்…” என அவனுக்குப் பின்னால் எழுந்த துச்சாதனனிடம் “அவர் செல்லட்டும், மூத்தவரே” என்றான் சுபாகு. “என்ன சொல்கிறாய்?” என்றான் துச்சாதனன். சுபாகு “அவர் அச்சொற்களை உமிழட்டும்… இனி இப்போரில் ஊக்கமூட்டும் சொற்களுக்கு எப்பொருளும் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் இறுதித் தளைகளையும் உடைக்கும் சொற்களுக்கே மதிப்பு” என்றான்.