‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56

ele1பூரிசிரவஸ் அர்ஜுனனை அம்புகளால் எதிர்க்கத் தொடங்கியபோதே திருஷ்டத்யும்னன் ஒன்றை உணர்ந்தான், ஒவ்வொருவரும் தங்கள் ஆழுளத்து எதிரியை நேரிலும் கற்பனையிலும் சந்தித்து போரிட்டுப் போரிட்டு தங்கள் திறன்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முதன்மை எதிரி அளவுக்கே ஒவ்வொருவரும் எழுந்துவிட்டிருக்கிறார்கள். போர் ஒரு பயிற்சிக்களம் என மாறி அனைவரையுமே அவர்கள் கொண்டுள்ள தடைகளிலிருந்து எழச் செய்திருக்கிறது. பூரிசிரவஸ் அர்ஜுனனை நிகர்நின்று எதிர்த்தான். முன்பு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அம்புக்கும் அவனை பின்னடையச் செய்த ஒரு தடையை அவன் கடந்துவிட்டிருந்தான்.

ஒவ்வொரு வீரனும் தன் இயல்பால், தன்னுள் உறைந்திருக்கும் தெய்வங்களின் விழைவால் தனக்குரிய தடைகளை கொண்டிருக்கிறான். மேலும் மேலுமென தானே தன்னை கூர்செய்துகொண்டு செல்கையில் எதிர்நிற்பவர்களை முற்றிலும் அறியாதவனாக ஆகிவிடுவது அர்ஜுனனின் தடை. உளம் சீறி எழுந்து போர்புரிந்து விரைவிலேயே ஆற்றல் வடிந்து பின்னடைந்துவிடுவது சாத்யகியின் தடை. தன் இலக்குகளை ஒருகணமும் விழிகொண்டு நோக்காத மிகைநம்பிக்கை கர்ணனின் தடை. தன் அம்புகள் மேல் எந்தப் பார்வையுமில்லாது தொடுவான் நோக்கி விழிதிரும்பியிருப்பது பீஷ்மரின் தடை. தன் இயல்புக்கு மாறான ஒன்றை சூடி பிறிதொன்றை கரந்திருப்பது துரோணரின் தடை. ஒவ்வொரு தனிப்போரிலும் முழுப்போரையும் கூடவே எண்ணிக்கொண்டிருப்பது தன் உளத்தடை.

அத்தடைகளை உருவாக்கும் தனி இயல்புகளை அறிந்து கடந்து பின் தங்கள் படைக்கலங்களென பயிற்றுவித்து மேலும் முன்னெழுவதையே அவ்வீரர்கள் தவம் எனச் செய்திருந்தனர். பூரிசிரவஸ் தன்னை காவியங்களில் சொல்வடிவாக எழுந்த பெருவீரர்களில் ஒருவனாக கற்பனை செய்திருந்தான் என்று திருஷ்டத்யும்னன் அப்போது புரிந்துகொண்டான். அது இளையோரின் இயல்பு. வில் தொட்டெடுக்கையில் அவர்கள் அனைவருமே பரசுராமரோ, சரத்வானோ, பீஷ்மரோ, அர்ஜுனனோதான். ஆனால் வில்லினூடாக அவர்கள் தங்கள் கற்பனை சென்றடைந்த தொலைவிலிருந்து ஒவ்வொரு பின்னடியாக எடுத்து அன்றாடத்திற்கு திரும்பி வருவார்கள். “ஒவ்வொரு பிழைத்த அம்பினூடாகவும் ஓர் அறிதலை அடைந்து தங்களில் வந்தமைவார்கள் வீரர்கள்” என்று ஒருமுறை துரோணர் சொன்னார். “தன்னில் தான் முற்றமைதலும் பிறிதொரு பயிற்சிதான்.”

பூரிசிரவஸ் தன் எல்லைகளைக்கண்டு அதை கடந்து சென்றதில்லை என்று தெரிந்தது. அவன் தன் முதிரா இளமையின் கற்பனைகளில் எழுந்து வெளிக்கடந்ததில்லை என ஒவ்வொரு அம்புக்கும் அவன் உடல் எழுந்தெழுந்து அமைந்தமை காட்டியது. விழிதிருப்பி மீள்வதற்குள் மின்னி சிந்தையைச் சென்றடையும் ஓரவிழிநோக்கில் அங்கே போரிட்டுக்கொண்டிருப்பவன் ஒரு சிறுவன் என்றே உளம் மயங்கியது. சிற்றுடலில் எழுந்தவன், சுவைமிக்க கனியொன்றுக்காகக் கல்லெறியும் இளையோன். தன் திறனை தானே கண்டு மகிழ்ந்து தருக்கும் இனிய அறிவின்மைகொண்டவன். ஆனால் அங்கு நிகழ்ந்த போரினூடாக கற்றுக்கொண்டு அவன் அக்கற்பனைகளில் இருந்த மாவீரனை நோக்கி பெரிதும் முன்னகர்ந்திருந்தான் என மேலும் நோக்கும்போது புரிந்தது. அவனிடமிருந்து சென்ற அம்புகள் விழிக்குத் தெரிந்த அவனிடமிருந்தல்ல என்று எண்ணத் தோன்றியது.

முதல் நாள் போரில் அவன் கைசுழன்று அம்பெடுத்து, நாணிழுத்து, தொடுத்து, எய்யும்போது களிப்பும் பதைப்பும் தவிப்பும் சினமும் என உணர்வுகள் அவன் முகத்தில் மாறி மாறி எழுந்துகொண்டிருந்தன. களத்தில் போர்புரியும் பல்லாயிரம் வீரர்களின் முகங்கள் அவ்வாறே தோன்றும். அரங்கில் ஆடும் கூத்தனின் முகத்தில் உணர்வுகள் மாறிச் செல்வதுபோல. பல தருணங்களில் பித்தளைக்குமிழில் அருகிருக்கும் காட்சிகள் வண்ண மாற்றங்களாக அலைகொள்வதுபோல. ஆனால் மெல்ல மெல்ல பூரிசிரவஸின் முகம் மாறத்தொடங்கியது. இறுகி உணர்வுகள் உறைந்து, விழிகள் கூர்கொண்டு நிலைத்து, ஒற்றைச் சொல்லில் உதடுகள் அமைந்து, போரிடும் தெய்வச் சிலையென்று அவன் ஆனான். அவன் கைகள் மேலும் நெகிழ்ந்தன. வீச்சுகளின் வளைவுகளில் அழகு திரண்டது. அம்புகள் மேலும் இலக்கு கொண்டன. அவன் வெல்லற்கரியவனாக மாறிக்கொண்டிருந்தான்.

முன்னர் மூன்றுமுறை திருஷ்டத்யும்னன் பூரிசிரவஸுடன் நேர்ப்போரில் ஈடுபட்டிருந்தான். முதல் முறை பூரிசிரவஸை மிக எளிதாக அறைந்து கவசங்களை உடைத்து தன் முன்னிருந்து தப்பி ஓடச்செய்தான். மூன்றாம் முறை வில்லெடுத்து முதல் அம்பை எய்ததுமே தன் முன் நின்றிருப்பவன் பிறிதொருவன் என்று உணர்ந்தான். ஏழு அம்புகள் தன் தேர்த்தூண்களில் வந்து அறைந்ததும் எதிரில் அர்ஜுனன்தான் எழுந்துவிட்டானோ என்று ஐயம் கொண்டான். அன்று பூரிசிரவஸ் அவனை அம்புகளால் அறைந்து கவசங்களை உடைத்து பின்னடையச் செய்தான். தன் படைத்திரளுக்குள் திரும்பி வந்த பின்னர் அன்று நிகழ்ந்த போரை உளத்தில் திரட்டி தொகுத்துக்கொண்டபோது பூரிசிரவஸ் தன்னுடலில் பெண்மைக்கூறு ஒன்றை ஏற்றுக்கொண்டிருப்பதை அவன் அறிந்தான்.

கௌரவ வீரர்களில் அர்ஜுனனைப்போல் பெண்மை சென்று படிவதற்கு ஏற்ற உடல்கொண்டவன் அவன் ஒருவனே. பிற அனைவருமே பெருந்தோளர்கள், நிகர்நிலை கொண்ட உடல் கொண்டவர்கள். பூரிசிரவஸ் மலைமகன்களுக்குரிய மெல்லிய சிற்றுடல் கொண்டிருந்தான். மெலிந்த சிவந்த சிறிய உதடுகளும், கூரிய மூக்கும், நீலமணிக் கண்களும் அவனை தொலைவில் நின்று நோக்குகையில் பெண்ணென்றே காட்டின. மலைக்குமேல் எங்கோ அவனுக்கு பேருடல்கொண்ட மைந்தனொருவன் இருக்கிறான் என்று திருஷ்டத்யும்னன் கேட்டிருந்தான். பால்ஹிகருடன் நிகர்நின்று மற்போரிட்டு தூக்கி அறையும் வல்லமைகொண்ட மைந்தன் அவன் என்று ஒற்றன் சொன்னபோது அவன் புன்னகைத்தான். அதை உணர்ந்து ஒற்றன் “அவள் அந்த மைந்தனைப்போலவே பெருந்தோள் கொண்டவள், அரசே” என்றான். “அவனுடைய கனவின் ஈடேற்றம்” என்று திருஷ்டத்யும்னன் சிரித்தபடி சொன்னான்.

பெண்மை படிந்த பூரிசிரவஸின் உடலில் அனைத்துத் தசைகளும் நீர்பட்டு இளகியவைபோல், நெருப்பு கொண்டு உருகியவைபோல நெகிழ்வு கொண்டன. அவை தங்களை ஆளும் சித்தத்திலிருந்து விடுபட்டு தங்களுக்குரிய அசைவை இயல்பாக நிகழ்த்தின. ஆகவே அவன் நிழலில் பெண் நடனமிட்டாள். அவன் அம்புகளை எடுக்கையிலும் தொடுக்கையிலும் மிகக் குறைவான ஆற்றலே தேவைப்பட்டது. எஞ்சிய விசையனைத்தும் அம்புகளில் எழுந்தது. “அம்பில் எழும் விசையென்பது அதற்கு உளம் செலுத்திய விசையில் உடல் எடையும் உறுப்புகளின் பிழையும் எடுத்துக்கொண்டது போக எஞ்சியது” என்று வில்நூல் கூற்றை துரோணர் சொன்னார். “உடலை பயிற்றுவதென்பது உடலில் இருந்து சித்தத்தை விடுவிப்பதே.”

பூரிசிரவஸின் அம்புகள் ஒவ்வொன்றும் அர்ஜுனனின் அம்புகளை அவற்றின் வான் வழியிலேயே அறைந்து தெறிக்கச்செய்தன. விழும்வளைவில் எதிரியின் அம்பைச் செறுப்பவன் வில்தேர்ந்தவன். எழுவளைவிலேயே தன் அம்புகளால் அவற்றைச் சந்திப்பவன் வில்யோகி. அர்ஜுனனை அர்ஜுனனே எதிர்ப்பது போலிருந்தது அப்போர். அம்புக்கு அம்பு மேலும் மேலும் விசைகொண்டு அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினர். அர்ஜுனனின் அம்புகளின் கூர்முனையை தன் அம்புகளின் கூர்முனையால் தொட்டு வீழ்த்தினான். அவர்கள் கைகளிலிருந்து அம்புகள் தீப்பொறிகள்போல் சிதறிப் பரவிக்கொண்டிருந்தன. தொலைவிலிருந்து பார்க்கையில் அவர்களின் தேர்களைச் சுற்றும் அம்புகளாலான இரு வட்டங்களை காண முடிந்தது. அவ்விரு வட்டங்களும் விசையுடன் சுழலும் இரு இரும்பு வளையங்கள்போல தோன்றின. விளிம்புகள் உரசி பொறி எழுந்து பறக்க சூழ்ந்திருந்த அனைவரும் போரை நிறுத்திவிட்டு அவர்களிருவரும் பொருதுவதை நோக்கலாயினர்.

ஒருகட்டத்தில் அர்ஜுனனின் எந்த அம்பும் பூரிசிரவஸை அணுகமுடியாமலாயிற்று. பூரிசிரவஸின் அம்புகள் எவையும் அர்ஜுனனின் வளையத்தை கடக்காமலாயிற்று. இருவரும் ஒருவரை ஒருவர் அம்புகளினூடாக முற்றறிந்துகொண்டிருந்தனர். அம்புகள் வழியாக வில்லவர் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்கு நிகராக பிறிதொன்றில்லை என திருஷ்டத்யும்னன் எண்ணினான். அவை எச்சமின்றி அனைத்தையும் உரைத்துவிடுகின்றன. வேறெங்கும் இருவர் இத்தனை குறுகிய பொழுதில் இத்தனை ஆயிரம் எண்ணங்களை பரிமாறிக்கொள்வதில்லை. இத்தனை ஆயிரம் முறை ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்வதில்லை. இத்தனை கூர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்வதும் இல்லை. முழுமைகொண்ட விற்போர் என்பது இருவர் ஒருவரோடொருவர் கூடுமாறிக்கொள்வது. ஒருவரே என்றாவது.

அர்ஜுனனின் உடலில் பெண் எழுந்த கணம் பூரிசிரவஸின் உடலில் ஆண் திகழ்வதை திருஷ்டத்யும்னன் கண்டான். அக்கணமே அது பெண்ணென்றாக அர்ஜுனன் ஆணென்றாகி மோதினான். ஒருவர் உடலின் வளைவு பிறிதொருவர் உடலின் நெளிவுடன் முழுமையாக இணைந்தது. ஒருவரின் சுழற்சி இன்னொருவரில் வட்டநிறைவை அடைந்தது. இருவரையும் ஒற்றையுரு என ஒரே நோக்கில் மட்டுமே பார்க்கமுடியும் என்றாயிற்று. அப்போர் அவ்வண்ணம் திகழுமெனில் எல்லையிலாக் காலம் வரை தொடர்வதொன்றே வழி என்று தோன்றியது. சூழ்ந்திருந்தோர் பொறுமையிழந்தனர். ஒரு பிழை, ஒரு மீறல் என ஏங்கத் தொடங்கினர். இதோ இதோ என விழிகள் தவித்தன.

ஆனால் அர்ஜுனன் பூரிசிரவஸ் தன்னை நோக்கி எழுவதைக்கண்டு உவகைகொள்ளத் தொடங்கினான். பூரிசிரவஸ் அர்ஜுனனை நோக்கி சென்று கொண்டிருப்பதை எண்ணி மகிழலானான். வஞ்சங்கள் மறைந்தன. சினம் இருந்ததோ என்று ஆயிற்று. சூழ்ந்திருந்த உருவங்கள் கரைந்தழிந்தன. காலம் பெருஞ்சுழியென அவர்களைச் சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்தது. இருவர் பெருங்காதலுடன் ஒருவரை ஒருவர் நோக்கி ஒன்றுமியற்றாமல் உளம்கரைந்து தன்னிலை விரிந்து அங்கு நின்றிருந்தனர்.

தந்தை மைந்தனையும் மைந்தன் தந்தையையும் ஒரே தருணத்தில் கண்டுகொள்ளும் அருங்கணம் போன்றது அது என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். முழு வாழ்வும் ஒருகணமென நிகழ்கிறது. அதன்பின் அதுவரை அவர்களுக்கிடையே நடந்துவந்த உறவாடல் முடிந்துவிடுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரோடொருவர் விழி நோக்கி பேசக்கூட இயலாது. முற்றிலும் ஒருவரை ஒருவர் தவிர்த்து எவரென்றோ ஆகி விலகிவிடவும் கூடும். ஆனால் ஒருவர் பிறிதொருவரை எண்ணி நிறைவுறுவார்கள். அனைத்தையும் அளித்து விடைபெறுவதற்கு தந்தைக்கு அதற்குப் பின் தயக்கமிருப்பதில்லை. அனைத்தையும் அளித்து பணிய மைந்தன் அதன் பின்னர் தயங்குவதில்லை.

அக்கணத்தில் இடப்பக்கத்திலிருந்து சாத்யகி வாளை உருவியபடி பூரிசிரவஸை நோக்கி பாய்ந்தான். அதை அவன் ஏன் செய்தான் என்று திருஷ்டத்யும்னன் திடுக்கிட்டான். கனவிலிருந்து மீண்டவன்போல் தத்தளித்த பூரிசிரவஸ் வில்லை தேர்த்தட்டில் வீசிவிட்டு வாளை உருவியபடி சாத்யகியை நோக்கி சென்றான். சாத்யகி நிலத்தில் விழுந்து கிடந்த இரு புரவிகளின்மேல் மிதித்து பூரிசிரவஸை நோக்கி செல்ல பூரிசிரவஸ் தன் தேரின் புரவியினூடாக கால் வைத்து தாவி வந்து நிலத்தில் குதித்து அவனை எதிர்கொண்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி வாளுடன் நின்றிருக்க மறுபக்கமிருந்து அஸ்வத்தாமன் வந்து அர்ஜுனனை எதிர்த்தான். அவர்களிருவரும் போர்புரிவதை விழிதிருப்பி நோக்கியபின் மீண்டும் பூரிசிரவஸை நோக்கிய திருஷ்டத்யும்னன் சாத்யகியின் முகம் அதே உணர்வைக் கொண்டிருப்பதைக் ண்டு உளம் அதிர்ந்தான்.

உச்சிவெயிலில் ஒளிவிடும் வாள்களுடன் சாத்யகியும் பூரிசிரவஸும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி ஓசையில்லா புலிக்கால் வைத்து ஒரு முழு வட்டம் சுற்றிவந்தனர். வியாஹ்ரவிருத்தம் நீரில் சுழி எனத் தோன்றும். அறியாமல் மையம்நோக்கி குவிந்து செல்லும். ஒருவர் காலசைவே பிறிதொருவரிலும் நிகழ்ந்தது. ஒருவர் தோள் போலவே பிறிதொருவர் தோளும் அசைந்தது. பின்னொரு கணத்தில் எப்போதென்று விழியறியாத தருணத்தில் இரு வாள்களும் முட்டிக்கொண்டன. அந்த ஓசை தன்னை அதிரச்செய்தபோது திருஷ்டத்யும்னன் உணர்ந்தான், சாத்யகியை பொங்கச்செய்த உணர்ச்சி எது என. அஸ்வத்தாமனை அர்ஜுனனை நோக்கி பாயச்செய்ததும் அதுவே என.

திருஷ்டத்யும்னன் பெருமூச்சுடன் வில்தாழ்த்தி நின்றபடி அந்த வாட்போரை நோக்கினான். வாள்கள் நிகழ்த்திக்கொள்ளும் போரின் உச்சம் அது என்று தோன்றியது. பூரிசிரவஸின் வாள் சிறிய நாகம்போல் நெளிந்தது. சில தருணங்களில் சவுக்கென்றும் திரும்பி வருகையில் ஒளிக்கீற்றென்றும் உருக்காட்டியது. சாத்யகியின் நீண்ட எடைமிக்க வாள் நெகிழ்வில்லாத உறுதி கொண்டிருந்தது. ஒருமுறைகூட சாத்யகியின் வாளின் அடியை பூரிசிரவஸ் தன் வாளால் வாங்கவில்லை. வளைந்தும் தவழ்ந்தெழுந்தும் பின்னடி வைத்து விலகியும் விட்டில்போல் தாவி பின்னெழுந்தும் சாத்யகியின் வீச்சுகளை அவன் தடுத்தான். சாத்யகி தன் வீச்சுகள் தவறிச் சுழல்கையில் உருவாகும் நிலையழிவை மறுகையை நீட்டியும் வீசியும் நிகர்கொள்ளச் செய்தான். நிலத்தில் அமர்ந்து எழுந்து தாக்கும் கழுகின் சிறகுகள்போல் அவன் கைகள் விரிந்திருந்தன.

நாரையின் கால்கள்போல தவறாத தாளத்துடன் களத்தில் தாவியும் ஊன்றியும் நின்று சுழன்றும் பூரிசிரவஸின் கால்கள் நடனமிட்டன. எதிர்பாரா கணத்தில் தன் தலையை தானே ஏவும் நாரைபோல் எழுந்து சாத்யகியை வாளால் அறைந்தான். சாத்யகி ஒரு விழிக்கணத்தில் வலக்கையின் கவசவளைவால் பூரிசிரவஸின் அந்த வாள்முனையை வாங்கிக்கொண்டான். சாத்யகியின் வாளேந்திய கையில் தன் வாள் முனையால் கீறலிடுவதையே பூரிசிரவஸ் இலக்காகக் கொண்டிருப்பது தெரிந்தது. ஏன் அவன் சாத்யகியின் முகத்தையோ கழுத்தையோ இலக்காக்கவில்லை என்று ஒருகணம் வியந்த பின் திருஷ்டத்யும்னன் புரிந்துகொண்டான், சாத்யகியின்வாளின் நீளமே பூரிசிரவஸை தடுக்கும் எல்லை ஒன்றை வகுத்துவிட்டது என. அதை கடந்துவந்து சாத்யகியை தாக்குவது அவன் தன்னைத்தானே பொறியில் சிக்கவைப்பதுபோல.

சாத்யகி நாகங்களுக்கு இணையான விசைகொண்டிருந்தான். ஆடி திரும்பும் ஒளிக்கதிரின் விசை கொண்டது பூரிசிரவஸின் வாள் என்பது சூதர் பாடல். பூரிசிரவஸின் வாள் நாகநா என நீண்டு மீண்டும் மீண்டும் மீண்டும் சாத்யகியின் கைகளை குறிவைத்தது. இயல்பாக பூரிசிரவஸை எதிர்கொண்ட சாத்யகி எங்கோ ஒரு புள்ளியில் பொறுமையிழப்பதை காண முடிந்தது. நூறுமுறை வாள் சுழற்றியும் ஒருமுறைகூட அவனால் பூரிசிரவஸின் கவசத்தையேனும் தொட இயலவில்லை. பூரிசிரவஸ் சாத்யகியுடன் விளையாடுகிறான் என்றுகூடத் தோன்றியது. சாத்யகியின் உடலிலும் பெண்மையின் கரவும் நெகிழ்வும் உண்டு. அதுவே அவனை இளைய யாதவராகக் காட்டுவது. அப்போது அது முற்றாக வழிந்து அழிய அவன் பலராமரைப்போல் மாறிக்கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான்.

வாளை முறுகப் பற்றி பற்களைக் கடித்து தசைகள் இறுகி அதிர ஓங்கிச் சுழற்றி சாத்யகி வெட்டினான். அப்போது அவன் உரைத்த வசைச்சொற்களை திருஷ்டத்யும்னன் கேட்டான். காற்றை வாள் கிழிக்கும் ஓசை காதருகே ஒலித்தது. மீண்டும் மீண்டும் சாத்யகி ஓங்கி வெட்டினான். அவ்வெட்டு இலக்கு பிழைத்து உடைந்த தேர்த்துண்டுகளிலும் விழுந்து கிடந்த யானைகளின் உடலிலும் பட்டது. அதிலிருந்த விசையால் மரச்சிம்புகள் உடைந்து தெறித்தன. குருதியுடன் தசை துண்டாகி விழுந்தது. வாள் நுனியிலிருந்து செங்குருதி மணிமாலை சுழன்று வளைந்தது. குருதி குருதி என்று பூரிசிரவஸை தேடிச்சென்றது சாத்யகியின் வாள். அவன் தன் காப்புணர்வு அனைத்தையும் இழந்து வெறிகொண்டு பூரிசிரவஸை தாக்கி பின்னடையச் செய்தான்.

திருஷ்டத்யும்னன் என்ன நிகழக்கூடுமெனும் அச்சத்தை அடைந்தானோ அது அவன் எண்ணியதற்கு சற்று முன்னரே நிகழ்ந்தது. பூரிசிரவஸின் வாள் வாளின் பிடியைப் பற்றியிருந்த சாத்யகியின் விரல்களை மெல்ல தொட்டது. சாத்யகி பாம்புத்தொடுகை என விதிர்த்து வாளை உதிர்த்து பின்னடைந்தான். அவன் உடலெங்கும் வலிப்பு எழுவதை, கைகால்கள் ஒருபக்கமாக இழுபட்டு அதிர்வதை, வாய்கோணலாக அவன் தள்ளாடிச் சரிவதை திருஷ்டத்யும்னன் கண்டான். பூரிசிரவஸ் அக்கணம் சிறகு கொண்டவன்போல் கைவிரித்து பறந்து காற்றிலெழுந்து சாத்யகியின் கழுத்தை ஓங்கி வெட்டினான். நின்றபடியே மல்லாந்து உடல் வளைத்து சுழற்றி அந்த வாள்வீச்சை தடுத்த சாத்யகி துள்ளிப் பாய்ந்து அகன்றான்.

பூரிசிரவஸ் வெற்றுக் கைகளுடன் நின்றிருந்த சாத்யகியை மேலும் வெறிகொண்டு பாய்ந்து தாக்கினான். திருஷ்டத்யும்னன் “பால்ஹிகரே, வாட்போர் முடிந்துவிட்டது. அவரிடம் படைக்கலமில்லை” என்று கூவினான். ஆனால் பூரிசிரவஸ் சொற்களுக்கு அப்பால் சென்றுவிட்டிருப்பதை அவன் விழிகளும் முகமும் காட்டின. முற்றிலும் பிறிதொருவர் அவனுடலில் குடியேறிவிட்டிருந்தார். அதுவரை இலாதிருந்த வஞ்சமும் சீற்றமும் முகத்திலும் உடலசைவுகளிலும் பெருகி எழ அவன் வாளை வீசி சாத்யகியை வெட்டினான். விழுந்து புரண்டு எழுந்தும், தாவி தேர்களுக்குள் பதுங்கியும் சாத்யகி அவன் வீச்சுகளிலிருந்து தப்பினான். ஏழுமுறை பின்னால் துள்ளிப் பாய்ந்து அவன் வாள்வீச்சை ஒழிந்தபோது இறந்துகிடந்த யானையொன்றின்மேல் தடுக்கி மல்லாந்து விழுந்தான்.

சிறகென கைகள் விரித்து கால்களை தூக்கிவைத்து நாரை பறந்தெழுந்தமைவதுபோல் அணுகிய பூரிசிரவஸ் உடைந்த வேலுடன் கையூன்றி எழுந்த சாத்யகியின் நெஞ்சை எட்டி மிதித்தான். அவன் வாள் மின்னி எழுந்தபோது சாத்யகியின் தலை துண்டுபட்டுவிட்டதென்றே திருஷ்டத்யும்னன் எண்ணினான். “நிறுத்துக!” என அலறியபடி அவன் வில்லெடுப்பதற்குள் அர்ஜுனனின் பிறையம்பு பூரிசிரவஸின் கையை வெட்டி வீசியது. என்ன நிகழ்ந்ததென்று திருஷ்டத்யும்னன் விழிகூட்டி நோக்கவில்லை. பூரிசிரவஸின் கை வாளைப் பற்றியபடி தெறித்து அப்பால் கிடப்பதை கண்டான். முதலில் அது அங்கே கிடக்கும் ஒரு வீரனின் கை என எண்ணினான். பின்னர் ஓர் அதிர்வை தன் உள்ளத்தில் அறிந்தான். சாத்யகி கையூன்றி தாவி அகன்றதைக் கண்ட பின்னரே அவன் பூரிசிரவஸின் கை அறுந்து கிடப்பதை உள்வாங்கிக்கொண்டான்.

தன் கை அறுபட்டதை முதலில் பூரிசிரவஸ் உணரவில்லை. தன் உடலில் சற்று நிலைகுலைவு உருவானதையே அவன் அறிந்தான். எழுந்து அகன்ற சாத்யகி தன் முன் கிடந்த பூரிசிரவஸின் கையை எடுத்து அவன் மேல் எறிந்தான். “கீழ்மகனே, இதோ உனக்கு இன்றைய உணவு” என நகைத்தான். அந்தக் கையை பற்றித் தூக்கி தன்முன் கொண்டுவந்து நோக்கியபோதுதான் பூரிசிரவஸ் அது தன் கை என்பதை முழுதுணர்ந்தான். வஞ்சத்துடன் பற்களைக் கடித்தபடி அதை அர்ஜுனன்முன் வீசி “இளைய பாண்டவரே, பிறிதொருவனுடன் போரிடுபவனை தாக்குவதுதான் உங்கள் அறமா?” என்றான். வாளை விரல்கள் இறுகப் பற்றியிருக்க, வெட்டுவாயிலிருந்து குருதி வழிந்தது. விழுந்த விசையில் இரு விரல்கள் துடித்து அகல வாள் நழுவியது. இறுகப் பற்றியிருந்த விரல்கள் ஒவ்வொன்றாக அதிர்ந்து அதிர்ந்து விடுபட்டு விரிய எதையோ கோருவதுபோல் அகன்றன.

அர்ஜுனன் “அவன் என் மாணவன், என் மைந்தனுக்கு நிகரானவன்” என்றான். பூரிசிரவஸ் ஏதோ சொல்ல எண்ணி பின்னர் ஏளனம் தெரிய நகைத்தான். அஸ்வத்தாமன் திகைத்து வில் தாழ்த்தி நிற்க அர்ஜுனனும் வில் தாழ்த்தி இளைய யாதவரிடம் பின்னடையலாம் என விழிகாட்டினான். பூரிசிரவஸ் தன் கையை பார்த்த பின் “இளைய பாண்டவரே, இப்புவி வாழ்க்கை இனி எனக்கில்லை. என் குடிக்குரிய முறையில் முற்றூழ்கத்தில் அமர்ந்து நுதல்மையத்தினூடாக உயிர்விடுவதற்கு எனக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான். திரும்பிக்கொண்டிருந்த தேரில் சுழன்ற அர்ஜுனன் திடுக்கிட்டு நோக்கி பின்னர் “ஆம், அவ்வாறே ஆகுக!. விண்ணுலகு ஏகுக, பால்ஹிகரே! அங்கு வந்து நாம் தோள்தழுவிக்கொள்வோம்” என்றான்.

பூரிசிரவஸ் தன் தேர்த்தட்டில் ஏறி அமர்ந்தான். கண்களை மூடி தலை தாழ்த்தி தன் மூலாதாரத்திலிருந்து கூரிய மூச்சை எடுத்து மேலும் மேலுமென கூர்தீட்டி மேலே கொண்டு சென்றான். அவனுக்குள் நிகழ்வதென்ன என்று திருஷ்டத்யும்னன் அறிந்திருந்தான். தாமரை தன் அனைத்து இதழ்களையும் ஒன்றோடொன்று அடுக்கி கூர் கொள்கிறது. அதனுள்ளிருந்து எழும் மூச்சு அம்பென கிளம்புகிறது. தவளையின் நாபோல் விரைவு கொண்டதாக, வைர மணி சிந்தும் ஒளிபோல் கூர்கொண்டதாக. அது அடுத்த தாமரையின் தண்டின் கீழ்முனையினூடாக மேலே கிளம்புகிறது. அதன் மையப்பீடத்திலுறங்கும் தெய்வங்களை கலைக்கிறது. அங்கிருக்கும் அனைத்தையும் தன்னுடன் சுருட்டி அள்ளிக்கொண்டு மேலும் கூர்கொண்டதாக வெளிப்படுகிறது. தாமரைகள் ஒவ்வொன்றும் மேலும் விசைகூட்ட நெற்றி மையத்திலெழும் ஆயிரமிதழ்த் தாமரையை வந்தடைகிறது.

அத்தருணத்தில் வீழ்ந்த யானைக்கு அப்பால் கையில் உடைந்த வேலுடன் நின்றிருந்த சாத்யகி தன் காலில் வாள் தடுக்குவதை உணர்ந்து குனிந்தான். அதை எடுத்ததுமே அவன் உளம் கொப்பளித்து எழுந்தது. “வீணன்! இழிமகன்!” என்று கூவியபடி விழுந்து கிடந்த தேர்மகுடங்களின்மேல் மிதித்து யானைச்சடலங்களினூடாக பாய்ந்து பூரிசிரவஸின் தேர்த்தட்டில் ஏறினான். திருஷ்டத்யும்னன் “யாதவரே, என்ன செய்கிறீர்கள்! நில்லுங்கள்!” என்று கூவினான். அர்ஜுனன் “சாத்யகி, நில்!” என்றபடி தேரிலிருந்து பாய்ந்திறங்கினான். அதற்குள் பூரிசிரவஸின் தலைமயிர்க் கொத்தை பற்றித்தூக்கி வாளை ஓங்கி “இதோ! என் மைந்தருக்காக!” என்று கூவியபடி வெட்டி அத்தலையை துண்டாக்கி இடக்கையில் தூக்கி தலைக்கு மேல் காட்டினான் சாத்யகி.

யோகமூச்சு வெட்டுப்பட பூரிசிரவஸின் உடல் விந்தையான முறையில் அசைவிலாது அப்படியே அமர்ந்திருப்பதை திருஷ்டத்யும்னன் பார்த்தான். தலை அகன்ற உடலின் சிறுதுடிப்பு கூட அதில் வெளிப்படவில்லை. கால்விரல்கள் ஒன்றையொன்று ஒட்டி செறிந்திருந்தன. கழுத்துத் தசைகள், தோள்கள் அனைத்தும் இனிதாக குழைந்து துயிலிலிருப்பவைபோல் தோன்றின. சாத்யகி அந்தத் தலையை நாற்புறமும் சுழற்றிக்காட்டி “என் மைந்தனின் குருதிக்காக! என் இளைய மைந்தன் சினியின் குருதிக்காக! தெய்வங்களே! மூதாதையரே! இது என் முதல் மைந்தனின் நிறைவுக்காக!” என்று கூவினான்.

அவன் கூச்சலுக்கு எத்திசையிலிருந்தும் மறுமொழி வரவில்லை. பாண்டவ வீரர்கள் செயலற்ற படைக்கலங்களுடன், வெறித்த விழிகளுடன், சொல் அமைந்த உதடுகளுடன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர். திருஷ்டத்யும்னன் “என்ன செய்துவிட்டீர், யாதவரே! பெரும்பழி சேர்த்துவிட்டீர்!” என்று கூவினான். சாத்யகி நோக்கு மறைந்த விழிகளுடன் உரக்க நகைத்தான். “ஆம்! இப்பழி இங்கு என்னை சேர்க! இப்பழி என் குலத்திற்கு புகழென்றாகுக! இப்பழி இனி என்னை எஞ்சிய வாழ்நாளெல்லாம் ஆற்றல் கொண்டவனாக்குக!” என்றபின் வலக்கையிலிருந்த வாளை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்தான். அது உடைந்து தெறிக்க நெஞ்சை தன் கையால் ஓங்கி அறைந்து “இதோ நின்றிருக்கிறேன். நான் சாத்யகி! இப்பழியை இறுதித்துளி வரை நானே கொள்கிறேன். என் கொடிவழிகள் இதை சுமக்கட்டும். என் மூதாதையருக்கு இது சென்றடையட்டும்” என்றான். வெறியுடன் துள்ளிச்சுழன்றபடி “தெய்வங்களே! இன்று அணைந்தது என் நெஞ்சு! இன்று எரியத்தொடங்குகிறது என் சிதை! தெய்வங்களே! மூதாதையரே! வணங்குகிறேன் உங்களை. என் விழிநீரையும் சொற்களையும் ஏற்றுக்கொள்க!” என்று கூவினான்.

இளைய யாதவர் திகைத்து நின்றிருந்த அர்ஜுனனின் தேரைத் திருப்பி படைக்குள் கொண்டுசென்றார். அவ்வசைவால் உறைநிலையிலிருந்து மீண்ட கௌரவப் படைகளிலிருந்து “இளைய பால்ஹிகர் வாழ்க! மலைப்பெருவீரர் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுந்தது. அவ்வொலி பெருகி அகல பாண்டவப் படைகளிலிருந்து எவரோ “பால்ஹிக மாவீரர் விண்ணுறுக!” என்று கூவ பாண்டவப் படைகளும் வாழ்த்தொலிக்கத் தொடங்கின. “பால்ஹிகர் வெல்க! விண்ணிறைந்த பெருவீரர் சிறப்புறுக! சோமதத்தர் வாழ்க! மலைமைந்தர் வாழ்க!” என்று இரு படைகளும் இணைந்து படைக்கலங்களை தூக்கி வீசி முழக்கமிட்டன. பலர் அழுதுகொண்டிருந்தனர். சிலர் தலைகுனிந்து நிலத்தில் அமர்ந்தனர். சிலர் ஒருவரோடொருவர் உடல்தழுவி விம்மினர்.

அங்கிருந்து அனைத்து திசைகளிலும் அத்துயர் உடல்களின் அசைவலையென விரிந்தகன்றது. தேர்மேல் நின்று சாத்யகி அதை பார்த்தான். சுழன்று சுழன்று நோக்கிய பின்னர் பற்களை இறுகக் கடித்து “ஆம், நான் இதை செய்தேன்! எவ்வகையிலும் வருந்தவில்லை! ஒருபோதும் இதன் பொருட்டு துயர்கொள்ளப் போவதுமில்லை” என்றான். பின் அந்தத் தலையை தேர்த்தட்டிலேயே வீசிவிட்டு இறங்கி நடந்து பாண்டவப் படைகளுக்குள் சென்றான். அவனைக் கண்டதும் தீய தெய்வமொன்று அணுகுவதுபோல் உணர்ந்து பாண்டவப் படையினர் பிளந்து வழிவிட்டனர். அவன் உடல் எவர் உடலையும் தொடவில்லை. அவன் சென்று மறைந்த பின்னரும் பாண்டவப் படையில் அப்பிளவு அப்படியே நீடித்தது. அக்காற்றிலேயே அவனில் இருந்த ஏதோ ஒன்று எஞ்சியிருப்பதுபோல. அது தங்களைத் தொடுவதையே அஞ்சியவர்கள்போல.

பூரிசிரவஸின் உடலை திருஷ்டத்யும்னன் திரும்பிப்பார்த்தான். அப்போதும் அது பளிங்குச்சிலையென அசையாமல் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தது. தேர்ப்பாகன் அமரமுனையிலிருந்து எழுந்து சென்று அவ்வுடலின் காலைத் தொட்டு மெல்ல அசைத்தான். பின்னர் அதை தொடையைப்பற்றி சரித்து படுக்க வைக்க முயன்றான். வியப்புடன் அவன் சூழ நோக்கிய பின் கீழே இறங்கி மண்ணில் கிடந்த பூரிசிரவஸின் தலையை எடுத்து கால் மடித்து கோட்டிய வளைவுக்குள் வைத்தான். வெட்டப்பட்ட கையை எடுத்து அருகே வைத்தபின் அமரமுனையில் ஏறி தேரை திருப்பிக்கொண்டு சென்றான். மடியில் தலையும் வெட்டுண்ட கையுமாக முடிவடையா ஊழ்கத்துடன் தேரில் அமைந்திருந்தது பூரிசிரவஸின் உடல்.

முந்தைய கட்டுரைபெரு விஷ்ணுகுமார்
அடுத்த கட்டுரைகடிதங்கள்