அந்த டீ – ஒரு கடிதம்

Day3-116

நீர்க்கூடல்நகர் – 1

அன்பின் ஜெ..

உங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையைப் படித்து வருகிறேன். சில விலகல்கள்:

பால்:

முதல் கட்டுரையில், நீங்கள் குடித்த டீ

ஒரு வாய் அருந்தியதுமே தெரிந்துவிட்டது அது பால் அல்ல, செயற்கைப்பால். இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும் பால் பற்பல லட்சம் லிட்டர். அத்தனை பால் கறக்கும் மாடுகள் எங்கிருக்கின்றன என்று தேடினால் இப்போதெல்லாம் பசுக்கள் எங்குமே தென்படுவதில்லை. வட இந்தியாவிலேயேகூட எருமைகளும் பசுக்களும் அருகிவிட்டன. சென்னை நகரம் அருந்தும் பால் எவ்வளவு இருக்கும்! எங்கிருந்து அத்தனை பால் வருகிறது? பால்கறக்கும் மாடுகள், அவற்றுக்கான வைக்கோல், அவை போடும் சாணி எங்கே?எவருமே இதை யோசித்துப் பார்ப்பதில்லை.

இன்று நகரங்களில் நாம் அருந்தும் பாலின் பெரும்பகுதி மாவு யூரியா மற்றும் ரசாயன பொருட்களைக்கொண்டு செயற்கையாக தயாரிக்கப்படுவது. இதை பால்பவுடர் என மங்கலமாக அழைக்கிறார்கள். அதை நீருடன் கலந்து பத்து அல்லது இருபது சதவீதம் நிஜமான பாலும் சேர்த்து பாலை உருவாக்குகிறார்கள். அரசுப் பால்நிறுவனங்கள்கூட இதைத்தான் செய்கின்றன. வேறுவழியில்லை. அந்த அளவுக்கு தேவை. இந்தப்பாலால் உருவாக்கப்படுவதே தைராய்டு பிரச்னை உட்பட பல நோய்கள். ஆனால் பாலின்றி வாழ முடியாத நிலையை இன்று வந்து அடைந்துவிட்டிருக்கிறோம். ஒரு கோப்பை பால் ஒருமணிநேரம் குமட்டச்செய்தது.

இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமல்ல, கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனபதே உண்மை. 1950 களில் 20 கோடி இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை இப்போது 30 கோடிக்கும் அதிகம். வெண்மைப் புரட்சியின் பக்க விளைவே இந்தியா உலகின் மிகப் பெரும் கால்நடை இறைச்சி ஏற்றுமதியாளரானது.

இந்தியாவின் பால் உற்பத்தி, ஒரே சீராக இருப்பதில்லை. அக்டோபர் முதல் மார்ச் வரை தேவைக்கு அதிகமாகவும், பின்னர் குறைவாகவும் இருக்கிறது. எனவே, அதிகமாக உற்பத்தி செய்த பால், பௌடராக மாற்றப்படுகிறது. பின்னர், தேவை ஏற்படும் போது, நீர் கலக்கப்பட்டு பாலாக மாற்றப்படுகிறது. இது உலகெங்கும் உள்ள நடைமுறை.  பால் பௌடரில் இருந்து கலக்கப்படும் பாலை, நுட்பமான ரசனை உள்ளவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

மும்பை மற்றும் தில்லி நகரங்களில், ப்ரிட்டிஷ் காலத்தில், மும்பை மில்க் ப்ளான், தில்லி மில்க் ப்ளான் என ஏற்படுத்தப்பட்டன. பால் உற்பத்தியாளர்கள் அழைத்து வரப்பட்டு, நகருக்கு வெளியே இடம் அளிக்கப்பட்டு பெரும் பால் பண்ணைகள் அமைக்கப்பட்டன. மும்பை நகரின் ஆரே மில்க் காலனி அவ்வாறு உருவானதுதான்.  இங்கே இன்னமும் பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். அவற்றைத் தபேலா என அழைப்பார்கள்.

1970 ஆம் ஆண்டுக்குப் பின், வெண்மைப் புரட்சி திட்டங்களை குரியன் தென்னகம் மற்றும் மேற்கு மாநிலங்களில் துவங்கினார். இங்கே கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆவின், நந்தினி, விஜயா, வேர்கா, மில்மா என, மாநில ப்ராண்டுகள் உருவாகின

இன்று இந்தியா தேவைக்கும் அதிகமாகப் பால் உற்பத்தி செய்கிறது எனச் சொல்கிறார்கள். கர்நாடகாவின் நந்தினி மட்டுமே ஒரு நாளைக்கு 75 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்கிறது. சித்தராமையா காலத்தில், ஒரு லிட்டருக்கு மானியமாக ரூபாய்.5 கொடுக்கப்பட்டது. நேற்று அதை இன்றைய கர்நாடக முதல்வர் 6 ஆக உயர்த்தியிருக்கிறார். இந்த ஆண்டு நந்தினி 10000 கோடி வருமானத்தைத் தொடும். இதற்கு இன்னுமொரு காரணம் உண்டு – வேளாண் பொருட்களில், பாலுக்கு மட்டும்தான் ஓரளவு விலை கிடைக்கிறது. அது முறையாகச் சந்தைப் படுத்தப்பட்டு, வாரவாரம், உற்பத்திக்கான பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மற்ற எல்லா வேளாண் பொருட்களும் நஷ்டத்தில் இருக்கையில், உழவர்கள், இதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சொன்னால் நம்பமாட்டார்கள். ஆனால், உண்மை, இந்தியாவில் உணவுக் கலப்பட சட்டங்கள் பெருமளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 20% யூரியா / மாவைக் கலந்து பால் தயார் செய்வது, அதிலும் அரசு நிறுவனங்களே செய்கின்றன என நீங்கள் எழுதியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. எந்தப் பெரிய அரசு/ தனியார் நிறுவனமும் இதைச் செய்வது சாத்தியமேயில்லை.

பால், கொழுப்பு அளவைப் பொறுத்து – 3% கொழுப்புள்ள பால், தரப்படுத்தப்பட்ட பால் எனவும், 5% – ஃபுல் க்ரீம் பால் எனவும் விற்பனை செய்யப்படுகின்றன – இதைத் தான் அரசு மற்றும் தனியார் நிறுவன்ங்கள் செய்கின்றன. மாட்டுப்பாலில் 4% ம், எருமைப்பாலில் 7-8% மும் கொழுப்பு இருக்கும். இந்த அதிகக் கொழுப்பை நீக்கி, வெண்ணெய், நெய் செய்து விற்கிறார்கள்

அப்படியானால், பாலில் கலப்படமில்லையா எனில் இருக்கிறது. அவை இரண்டு வகைப்படும்.

  1. பூச்சி மருந்து residue –

இது பரப்ப்ரும்மம். இது நீங்கள் உங்கள் வீட்டில் மாடு வைத்துப் பால் கறந்தாலும் இருக்கும். ( என் அனுபவத்தில்,1993 ஆம் ஆண்டு, உரம் பூச்சி மருந்துகளே பயன்படுத்தப்படாத களக்காடு  மானாவரி நிலத்தின் மண்ணைச் சோதனை செய்ததில், டிடிடி ரெஸிட்யூ இருந்தது)

  1. டிடர்ஜெண்ட்/ யூரியா :

இது தில்லிப் பகுதிகளில் மிக அதிகம். குரியன் துவங்கிய கூட்டுறவு முயற்சி, வட, மத்திய மாநிலங்களில் பெரும் வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம், அங்கிருந்த உள்ளூர் சிறு உற்பத்தியாளர்கள் (சிறு வியாபாரிகள்), மிக வலுவாக இருந்த்துதான் காரணம் – டிடர்ஜெண்ட் – நுரை வருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இன்றும் காலை தில்லி /மும்பை லோக்கல் ரயில்களில், அட்டை போல் பால் கேன்கள் தொங்கிக் கொண்டு செல்வதைக் காணலாம்.

ஆனால், இந்தப் ப்ரச்சினை, கூட்டுறவு நிறுவன்ங்கள் அல்லது பெரும் நிறுவனங்களில் (ஆவின், ஆரோக்யா, சக்தி, கவின்கேர் போன்ற) இருக்க வாய்ப்பேயில்லை.

கூட்டுறவு துவங்கிய காலங்களில், பாலில் தண்ணீர் கலந்திருக்கிறதா எனச் சோதிக்கப் பால் மானி இருந்த்து. அப்போது, பாலில் நீரை ஊற்றி, கண்டுபிடிக்காமல் இருக்க சில கலப்பட உத்திகள் இருந்தன. ஆனால், 80கள் துவங்கி, பாலுக்கான விலை, அதில் உள்ள கொழுப்பு மற்றும் திடப்பொருள்களின் அளவு, மிகவும் அறிவியற்பூர்வமாக, ஒவ்வொரு உழவரின் பால் கேனில் இருந்தும் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. உலகின் மிக விரிவான, சோதனை முறை இதுதான். பாலுக்கான விலை கொழுப்பின் அளவு வைத்துதான் என்னும் போது, அங்கே நுரை வருவதற்காக டிடர்ஜெண்ட் சேர்க்கத் தேவையில்லை. கொழுப்பை உழவர்களால் கலக்க முடியாது.

அப்படியானால், இதில் கலப்படமே இல்லையா எனில் – வாய்ப்புகள் உண்டு.  ஒன்றிரண்டு உழவர்கள் ஏதேனும் முட்டாள் தனமாக – எடுத்துக்காட்டாக, மாலை கறந்த பாலைக் கொண்டு செல்லாமல், அடுத்த நாள் காலை வரை வைத்திருக்க, உப்புப் போடுகிறார்கள் எனச் சொல்கிறார்கள். நான் கண்டதில்லை. அந்த அளவு தனிநபர் ஒழுக்கமின்மையைச் சோதிக்க, கடவுள் ஒருவர் மட்டுமே உண்டு. ஆனால், இது பெருமளவில் இருப்பதில்லை என்பதே இன்று அந்தத் தொழிலில் இருக்கும் எனது நண்பர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் பயணங்களில் நல்ல சாயா குடிக்க வழி, போகும் போது, அமுல் பாலை டெட்ரா பேக்கில் கொண்டு செல்லுங்கள். டீக்கடைக்காரரிடம், அதைக் கொடுத்து டீ போடச் சொல்லுங்கள்.

அன்புடன்

பாலா

முந்தைய கட்டுரைநீர்க்கூடல்நகர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதொல்பொருள் அழிப்பு மனநிலை