நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீங்கள் ஜனவரி 27ம் தேதி அறிவித்த பிரக்யாராஜ் கும்பமேளா பற்றிய அறிவிப்பினை படித்தேன்.[https://www.jeyamohan.in/117497] அதில் கும்பமேளா நடைபெறுவது அலஹாபாத் என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு அலகாபாத்தை அபிஷியலாக பிரஹ்யாராஜ் என்று மாற்றிய பின்னும் நீங்கள் அதை பழைய பெயரிலேயே அழைப்பது சரியா? சென்னை, கொல்கத்தா, மும்பை என பல பெயர்களை அதன் புதிய பெயரில் அழைக்கும்போது இதற்கு என்ன தடை என அறிந்து கொள்ளலாமா? வரலாற்று, புராதன நோக்கில் நோக்கினாலும் அந்த பெயர் மாற்றம் சரிதான் என்று எனக்கு தோன்றியதால் கேட்கிறேன் சார்..
ஸ்டீபன்ராஜ்
அன்புள்ள ஸ்டீபன்ராஜ்
அரசு பெயரை மாற்றியதுமே உடனடியாக அனைவரும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில்லை. எழுத்தாளன் என்பவன் மக்களிடமிருந்தே சொற்களை பெறவேண்டும். அலஹாபாத் என அம்மக்கள் சொல்லிக்கொண்டிருப்பதுவரை அவன்மொழியில் அதுவும் இருக்கும்.
ஜெ
ஜெ அவர்களுக்கு
வணக்கம்
நீர்க்கூடல் நகர் – அனுபவங்கள் வாசிக்கிறேன்.. நேரில் அமர்ந்து கதை கேட்பதைப் போன்ற உணர்வு.. எவ்வளவு தொலைவு பயணித்திருக்கிறீர்கள்..
மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது என முடிவுசெய்துவிட்டால் அதன் சாத்தியங்களுக்கு எல்லையே இல்லை. – உண்மை தான். சிற்றூர்களில் தான் களி மனப்பான்மை உயிருடன் இருக்கிறது.
வெண்முரசில் வரும் கூடுகை வர்ணனைகள் எல்லாவற்றையும் என் நினைவில் எழுப்புகிறேன்.. நீங்கள் சொல்வது போல ” திருவிழாக்களில் நான் எத்தனை ஆயிரம் சின்னஞ்சிறு செய்திகளை சேகரித்திருக்கிறேன் என்பதை என் நாவல்களை வாசிக்கையில் நானே பிரமிப்புடன் காண்கிறேன்.” எத்தனை எத்தனை தகவல்களை நீங்கள் விரித்து எங்களுக்கு வழங்கி இருக்கிறீர்கள்..
இன்னும் கதைகள் கேட்க ஆவலாய் இருக்கிறேன்..
நன்றி
பவித்ரா..
குறிப்பு: தனியாய் அமர்ந்து சத்தம் போட்டு சிரித்து விட்டேன்.. “தமிழகத்தின் சுவையாபாசத்தின் திரண்டவடிவம் சரவணபவன்.
அன்புள்ள ஜெ
நீர்க்கூடல் நகர் நீங்கள் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதிய அற்புதமான பயணக்கட்டுரை. நான் உங்கள் பயணக்கட்டுரைகளை வாசிப்பது வர்ணனைகளுக்காகவும் கூடவே வந்து சேர்ந்துகொள்ளும் பண்பாட்டுவிமர்சனக் குறிப்புகளுக்காகவும்தான். அவை இரண்டும் அழகாகக் கலந்து அமைந்த கட்டுரைகள் அவை. கங்கையின்மீது இரவு ஒளிவிடுவதும் கூடாரத்திற்குள் பெய்யும் மழையும் அனுபவங்களை எப்படி மொழியாக ஆக்குவது என்பதற்கான சிறந்த உதாரணங்கள்
செ.முருகேஷ்