பெரு விஷ்ணுகுமார்

peru

இனிய ஜெயம்

அடிக்கடி ரயில் கடக்கும் தண்டவாளங்களருகே
ஆடு மேய்ப்பவன் கண்களை ஜன்னல்கள்
தோறும் பதித்து வைத்து விடுகிறான்
தடியின் உதவியாலும் மந்தையுடனும்
இரவில் வீடு திரும்புகிறான்

மறுநாள் ஆடுகள் அவனைப் பத்திரமாகத்
தண்டவாளங்க அருகே அழைத்துப் போய் விடுகின்றன

முதல் ரயில் கடந்து போகையில்
கண்களைத் திருப்பித் தருகின்றன
கடைசி ரயில் வாங்கிக் கொள்கிறது

மனைவியிடம்
இதை சொல்ல வேண்டாமென
ஆடுகளிடம் சொல்லி வைத்திருக்கிறான்
( பெரு. விஷ்ணுகுமாருக்கு)

விகடன் விருது பெறுவதை ஒட்டி ,கவிஞர் பெரு விஷ்ணுகுமார் அவர்களுக்கு கலாப்ரியா அவர்கள் சமர்ப்பித்திருக்கும் கவிதை இது .

படித்து முடித்த கணம் இந்த கவிதையில்  கிராப்ட் இருக்கு சரி .ஆர்ட் எங்க இருக்கு எனும் கேள்விதான் முதலில் எழுந்தது. அடிக்கடி கடக்கும் ரயிலில் காணும் ஜன்னல்கள் தோறும் ,அந்த ஜன்னல் அளவே பறந்து கிடக்கும் நூறு நூறு வாழ்க்கைகள் . அதை காணும் இடயனுக்கோ ,இடையன் எனும் ஒரே ஒரு வாழ்வு மட்டும் . பகலில் காணும் நூறு நூறு வாழ்க்கைகளை பகலிலேயே விட்டு விட்டு,[அதன் பயனாக ] ,அந்த மந்தை ஆடுகளில் ஒன்றாகி இல்லம் திரும்புகிறான் . நல்ல உள்ளடக்கம் .ஆனால் கவிதையாக மாறவில்லை . கவிதையின் பணி உணர்வைக் கடத்துவதே அன்றி ,உள்ளடக்கத்தைக் கடத்துவதல்லவே .   கதையில் இருந்து கதையை வெளியேற்றிய கதைகள் போல ,கவிதையில் இருந்து கவிதையை வெளியேற்றிய கவிதை என்றொரு சொற்றொடர் உள்ளே முகிழ புன்னகைத்துக் கொண்டேன் .

சென்றவருடம் இளம் படைப்பாளிகளால் அதிகம் குறிப்பிடப்பட்ட பெரு விஷ்ணுகுமார் கவிதைகளை கலாப்ரியா வரை குறிப்பிட்ட பிறகு,  வாசிக்கலாம் என முடிவு செய்தேன் . தின்னவேலி பக்கம் வீடளவு தின்பண்டம் வாங்கும் முன் ,அதில்  கொஞ்சம் கையளவு வாங்கி சுவைத்து பார்த்து விட்டு வாங்கும் வழக்கம் உண்டு .அது போல சக படைப்பாளிகள் கோட் செய்த விஷ்ணுகுமாரின் ஐந்து கவிதைகளை வாசித்து பார்த்துவிட்டு ,அவரது ழ எனும் பாதையில் நடப்பவன் தொகுதிக்குள் நுழைவதா வேண்டாமா என முடிவு எடுப்போம் என முடிவு செய்து ,அப்படி கோட் செய்யப்பட்டிருந்த கவிதைகளை வாசித்தேன் .

இந்த நாணயங்களுக்கு
எந்த இடத்தில் விழுவதென்று

விவஸ்தையே கிடையாது

பரபரவென்றே பழகிப்போனதுகள்

தொலைந்துபோகாமல் ஓரிடத்தில்

அணுகி அமர்ந்ததேயில்லை

ஓட்டையான கால்சராயின்வழியே

ஓடும்பேருந்திலிருந்து சக்கரத்தினடியில்

ஒதுக்குப்புற நாற்றத்தில்

கைக்குட்டையை வெளியெடுக்கும் சாக்கில்

ஓட எத்தனிக்கையில்

துவைக்க ஓங்குகையில்

வேகத்தடைமீது ஏறியிறங்குகையில்

இதையெல்லாம் கூட

ஏற்றுக்கொள்ளலாம்

ஆனால் ஒரு மளிகைக்கடையில்

நைட்டியணிந்த பெண்ணின்

கையிலிருந்துகூடவா விழவேண்டும்

விழுந்த நாணயத்தைக்

குனிந்து எடுக்கப்போனவளை தடுத்த

அங்கிருந்த ஒரு சீமாட்டி

ஏம்மா மேல ஒரு துண்டாவது போட்டுவரக்கூடாதா

என்றுகூறிவிட்டு

என்னைப் பார்த்தாள்

பார்க்கட்டும் எனக்கென்ன

எனக்குத்தான் அந்த கடை

எங்கிருக்கிறதென்றுகூடத் தெரியாதே.

விவஸ்தை கெட்ட நாணயங்கள் எனும் தலைப்பு கொண்ட இந்த கவிதை சற்றே தேவதச்சன் சாயல் கொண்டிருந்தாலும் , அவர் உலகம் போலன்றி  இந்தக் கவிதை சற்றே  மலினமான தளத்தில் தொழில்படுகிறது . அது போக குனியும் இளம்பெண்ணின் மார்புக் குவட்டை கண்டு இட போதம் மறக்கும் ‘மேலான ‘ உணர்வை இந்தக் கவிதை எனக்கு அளிக்கவில்லை .

ப்ப்ச்ச்….. ப்ப்ப்பாஆ

பார்த்துப்போகமாட்டீர்களா

மன்னிக்கவும் எனக்குக் கண் தெரியாது

அதற்கு இடிக்கச்சொல்கிறதா

மேடம் நான் பார்வையற்றவன்

அது உங்கள் பிரச்சனை

என்னை ஏன் இடித்தீர்கள்

தெரியாமல் நடந்துவிட்டது

எப்படியோ என்னை இடித்துவிட்டாயென்று

ஒப்புக்கொள்கிறாயல்லவா

அப்படியெனில் உனக்குத் தெரியாமல்

நடந்திருக்க வாய்ப்பில்லை

இவன் எரிச்சலுற்று

தன் நடைக்கோலை ஓங்க

பார்த்தீர்களா பார்த்தீர்களா

முகத்திற்கு நேரே சரியாக ஓங்குகிறான்

இவனா குருடன்

அம்மா புரிந்துகொள்ளுங்கள்

உண்மையிலேயே எனக்கு கண் தெரியாது

ஆனால் இடிக்கமட்டும் தெரியும்

அப்படிதானே

அங்கே வரிசையாய் தோளைப்பிடித்துக்கொண்டு

போய்க்கொண்டிருந்தவர்களில் கடைசியிலிருப்பவன்

ஐய்யோ பின்னால் வந்துகொண்டிருந்த

கண்ணனைக் காணவில்லையேயென்று

தேடிவருகையில்,

கண்ணா எங்கு போனாய்

நேரமாகிறது வா போகலாம்

இல்லை நண்பா நீங்கள் கிளம்புங்கள்

எனக்கு பார்வை வந்துவிட்டது.

அறுவை சிகிச்சை எனும் இந்த கவிதையில்,பெரு அருமையான சீன் ஒன்றை பிடித்து விட்டார் ,ஆனால் இந்த கவிதை ஓஷோ ஜோக்கை மிஞ்சவில்லை .

உரையாடுகையில் உங்கள் முன்னே
கொட்டாவியை விழுங்க தெரிந்த நானே
கைதேர்ந்த நடிகன்

உரையாடல் எனும் கவிதையின் துவக்க வரிகள் இவை .இவற்றில் இருப்பது ஒரு சமத்காரமான சொல்லாட்சி .  தொண்ணூறுகளில் ”சபை நாகரீகம் கருதி அவர் கொட்டாவியை மூக்கால் வெளியேற்றினார் ”  ”அது கொட்டாவி என்பதை அவர் அறியாமலிருக்க ,ஏப்பம் விட்டவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டேன் ” என்றெல்லாம் சுபா இதை வித விதமாக எழுதி விட்டார் . அதை தாண்ட வில்லை பெரு வின் இந்த துவக்க வரிகள் .

ஜன்னலுக்கு வெளியே

ஒரு கலவரம் நடக்கிறது

அதில் நீயுமில்லை நானுமில்லை

கண்ணிவெடிகள் கரைபுரண்டு வருகின்றன

அதனிடம்

கருணையுமில்லை கண்ணுமில்லை

தெரியாத்தனமாய்

ஒரு கால் அதை மிதித்துவிடுகிறது

நல்ல வேளையாய்ப்போயிற்று

அக்கால்

உன்னதுமில்லை என்னதுமில்லை

பரள் எனும் இந்தக் கவிதை ஒரு கூடுதல் வாக்கியம் காரணமாக அறிக்கையாக நின்று விடுகிறது . நல்ல வேளையாய் போயிற்று எனும் வாக்கியம், அது கிளர்த்தும் நிம்மதி ,அல்லது சுட்டும் சுயநலம் , எனக்குள் உணர்வாக மாற விடாமல் இந்த வாக்கியமே தடுக்கிறது .

1.)

வீடுதிரும்ப நேரமாகிவிட்டதால்

வீட்டிற்குள் நுழையும் போதே

எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது

 

என்னைக் கண்டதும்

நெருங்கிவந்து ஆரத்தழுவிக்கொண்ட அப்பா

‘போனவருடம் நடந்த

சாலைவிபத்தில்

நீ அடிபட்டுவிட்டதாகச் சொன்னார்கள்’,

அப்பாடா

பத்திரமாக வந்துவிட்டாயே

சரி நீ இங்கேயே இரு

எதற்கும் நான் வெளியேசென்று

உன்னைத் தேடிவிட்டு வருகிறேன்’

 

என்று கூறிவிட்டு பதற்றத்துடனேயே

கிளம்பிப்போனார்

 

ஒருவேளை அவர் கூறுவது

உண்மையாகவும் இருக்கலாமென்று

நானும் தேடுவதற்கு உடன் சென்றேன்

2.)

வெகுநாளைக்குப்பின்பு

இன்று சாலையில் ஒரு நல்ல விபத்து

சிறிய லாரிதான்

லேசாக நசுக்கியதற்கே

அனைத்து பற்களும் நொறுங்கிப்போய்

அடையாளம் தெரியாதளவு அவர்முகம்

சிதைந்து போயிருந்தது

 

‘எனக்கோ இதெல்லாம் பழகிவிட்டது’

 

போனவருடம் இதேபோல் இறந்துபோன

என் நண்பனை ஒப்பிடும்போது,

இதெதெல்லாம் ஒன்றுமேயில்லை

 

நினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்

இறந்துபோதலோ

 

என் நண்பா

பேசாமல் ‘நீயும்

இன்றே இறந்துபோயிருக்கலாம்’

இன்று இறப்பது அவ்வளவு விசேசம் எனும்தலைப்பு கொண்ட  இந்த கவிதை வரிசையின் முதல் கவிதை  ,  அமானுஷ்யம் கிளர்த்தும் பீதி எனும் உணர்வை அளிப்பதை விடுத்து , வெறுமனே சுற்றி சுற்றி வந்து ,சுற்றலில் விட்டுவிட்டு  நின்று விடுகிறது .

காற்று பலமான மரமொன்றை
அசைக்கிறது
காற்று பலமான மரமொன்றின்
சருகுகளை அசைக்கிறது
புரண்டுபடுக்கத்தெரியாதவர்களின் கல்லறைகள்
காற்றில் பறந்துவிடக்கூடாதென
எல்லாமரங்களும்

சருகுகளை அதன்மேல் எடைவைக்கத்தான் செய்கிறது
ஆனாலும்
காற்று ஊதி நகர்த்துவதோ
பலமான
மிகவும் பலமான சருகளையேயன்றி
மெலிதான

மிகவும் மெலிதான கல்லறைகளையன்று.

மேலிதானவைகள் எனும் இந்தக் கவிதையில் [இதை தேவதச்சனுக்கு சமர்ப்பித்திருக்கிறார் ] ஒரு லாட்டரல் திங்கிங் தான் தொழில்படுகிறது அன்றி இந்த கவிதையின் நோக்கு எந்த பரவச உணர்வையும் அளிக்கவில்லை .நிற்க.

மேற்கண்ட கவிதைகள் யாவும் கவிஞர் என நிலைபெற்றுவிட்டவர்கள் மேற்கோள் செய்திருக்கும் விஷ்ணுகுமாரின்  கவிதைகள் .  இனிதான் இவற்றை அடிப்படையாக கொண்டு  அவரது தொகுதியை இப்போது வாசிப்பதா ,இல்லை ஒன்றிரண்டு வருடம் கழித்து வாசிப்பதா என முடிவு செய்ய வேண்டும் .

//புனைவுகள் என்று வருகையில், என் தேர்வில் கவிதைகள் இரண்டாம் நிலையில் நிற்கக்  காரணம் கவிதை எனும் இயல் ரசனையின் உச்ச சிகரத்தில் திகழ்வது . ஒவ்வொரு முறையும் முற்றிலும் எனது வாசிப்பு பழக்கங்களை கைவிட்டு புதிய வாசிப்பு சாத்தியங்களை மேற்கொள்ள கோருவது , நின்று உலவ நிலம் இன்றி அப்படியே உயர்த்தி வானில் எறிவது .  ஆகவே கவிதைத் தேர்வில் புதிய களம் நோக்கிய ஆவல் இருந்தாலும் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் தான் அதை அணுகுவேன் .  ஆவலில் தேடி சென்று நீங்கள் கை வைக்கும் புதிய கவிதை ஒன்று வெறும் மொழி சிதிலம் என அமைந்து விட்டால் , அல்லது முக்கியமான கவிஞரின் சரியாக அமையாது போன கவிதையே வாசிக்க நேரும் அவருடைய முதல் கவிதையாக அமைந்து போனால் , அது அளிக்கும் ஆயாசம்  கொஞ்சம் நஞ்சம் அல்ல .//

இது முன்பொரு பதிவில் நான் சொன்னது . இவை போக இத்தகு முன்முடிவுகள் அனைத்தயும் ரத்து செய்து விட்டு, இத்தனை ஆளுமைகள் ”பூ தூவிய” காரணம் ,அதற்குள் வேறு கவிதைகளில் இருக்கிறதா என ,  பெரு விஷ்ணுகுமார் கவிதை தொகுதியை முழுதும் வாசித்து முடித்து விட்டு ,அடுத்த மடலில் அது குறித்து விரிவாக எழுதுகிறேன்

கடலூர் சீனு

இனிய ஜெயம்,

தன்மயம்  .   அதுதான் பிரதி அளிக்கவேண்டிய முதன்மை வாசிப்பு அனுபவம்  எனும் ‘நிலைப்பாட்டில் ‘ ‘சிக்கி ‘ அனைத்தயும் அந்த வட்டத்துக்குள் இழுத்து வந்து நிறுத்தப் பார்க்கிறேனோ , என்று ஒவ்வொரு முறையும் புதிய புனைவு வெளியை ,தருணம் ஒன்றினை அறிய நேரும் போதெல்லாம் என்னையே கேட்டுக் கொள்கிறேன் .

அது நிலைப்பாடு அல்ல , அதற்காகத்தான் கலையை தேடியே ஓடிக்கொண்டிருக்கிறாய் ,என வலிமையான புனைவு தருணம் ஒன்றினை தீண்டும் பொழுதெல்லாம் அது எனக்கு உணர்த்தும் .

அது என்னில் கரைய வேண்டும் .ஒரு துளி போல . நான் அதில் கரைய வேண்டும் ஒரு துளி போல .  இதற்க்கு வெளியே நிற்கும் கவிதைகள் [யவனிகா ஸ்ரீராம் ] புனைவுகள் [கோணங்கி] மீது எனக்கு எவ்வித புகாரோ ,விமர்சனமோ கிடையாது .அதற்குள் நான் இல்லை .அவ்வளவே .அதில் நான் செய்வதற்கு ஏதும் இல்லை .ஆகவே அது என்னுடையதும் இல்லை .

மாறாக தன்மயமாக வேண்டிய அடிப்படைகளை கொண்ட பிரதிகள் சும்மா ஒரு விளையாட்டு போல ,துள்ளி வெளியேறி நிற்கும் போது, அட போப்பா வேறு  நிறைய சோலி கிடக்கு என்று தோன்றி விடுகிறது .

பெரு வின் குறிப்பிட்ட கவிதைகளை சக படைப்பாளிகள் பாராட்ட காரணம் . அதில் அர்த்த சாத்தியங்கள்  முதன்மையாக இருக்கிறது என்பதே என கருதுகிறேன் . உதாரணமாக விவஸ்தை கெட்ட நாணயங்கள் கவிதையை எடுத்துக் கொண்டால் , அதில் ஒரு கள்ளத்தனம் , குற்ற உணர்வு , விடுதலை எல்லாம் இருக்கிறது . இது உணர்வாக கவிதைக்குள் கூடி வந்திருக்கிறதா என்றால் இல்லை .  அந்த கவிதையை சொல்லும் நான் , சில்லறை நழுவி ஓடும் வித விதமான தருணங்களை கற்பனையில் காண்கிறேன் . இறுதியாக மளிகை கடை இளம்பெண் ,நாணயத்தை தவறவிடும்போது மட்டும் ,கற்பனை நாணயத்தின் பின்னால் மேலும் ஓடி ,பகல் கனவு எனும் களத்துக்குள் விரிகிறது .அந்த பகல்கனவில் இளம்பெண் குனிகிறாள் ,அவள் மார்புக் குவட்டை கவனிக்கிறேன் .  என்னை அந்த இன்னொரு பெண் கவனிக்கிறாள் . அது பற்றி எனக்கு கவலை இல்லை .காரணம் அதற்க்கு மேல் ஒன்றும் நிகழாது அது பகல் கனவுதானே .எனும் fun statment இல் முடிகிறது கவிதை .

கவிதை அளிக்கும் இன்பம் என்பது ,ஒரு போதும் பகல் கனவு சுதந்திரம் அளிக்கும் கிளுகிளுப்பு இன்பம் அல்ல . இந்த கூறுதான் சற்றே சீண்டுகிறது . கவிதை தன்னளவில் அர்த்த சாத்தியங்கள் கொண்ட ஒன்றாக இருக்கலாம் . அதே சமயம் அர்த்த சாத்தியம் கொண்ட ஒன்று கவிதையாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை .இந்த இரண்டாம் வகைமையை சேர்ந்தவை பெருவின் மேற்கண்ட கவிதைகள் .  இத்தகைய பூத்தூவல்கள் இந்த இரண்டாம் வகைமையை கவிதை என வாசகனை நம்ப சொல்கிறது

கவிதை சார்ந்த உங்களது பரிந்துரைகளுக்கு பெரிய அளவில் மதிப்பு இருப்பதற்கு முதல் காரணம் ,    நான் மேற்ச்சொன்ன  இடக்கரடக்கல் கவிதையை அணுகும் போது எழுந்து வருவதே என யூகிக்கிறேன் . புதிய வாசிப்பு பாணியை கோரும் சில  கவிதை தொகுப்புகளுக்கு உங்களுடையதே முதல் மதிப்புரைக் கட்டுரை .அதன் பிறகே ஒரு மாதிரி பிடி கிடைத்து அதை ஆதரித்தோ ,எதிர்த்தோ வேறு பல கட்டுரைகள் எழுந்து வந்திருப்பதை காண்கிறேன் . : )

கடலூர் சீனு

அன்புள்ள கடலூர் சீனு,

முதலில் ஒரு கவிஞனின் உலகுக்குள் செல்லும் வழி இது அல்ல. கவிஞனுக்கு அளிக்கவேண்டியது நம்பிக்கை, அவனுடைய மொழிக்காக. அவநம்பிக்கையுடன் நான் எந்தத் தொகுதிக்குள்ளும் நுழைவதில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது கவிஞர்கள் கவிஞர்கள் அல்ல என்பதையே சென்றடைவேன் என்றாலும். உங்கள் அவநம்பிக்கை கொண்ட அணுகுமுறை பலசமயம் நல்ல கவிஞர்களை மறைத்துவிடக்கூடும். கொஞ்சம் நம்ப மறுத்தாலும் புனைவுகள் வாயில்மூடிக்கொள்ளக்கூடும். கொஞ்சம் எள்ளல் கொண்டாலும் கவிதையின் நுண்ணிய தளம் மறைந்துவிடக்கூடும்

ஒரு சூழலில் கவிஞன் முதன்மையாக கவனிக்கப்படுவது புதுமைக்காகவே. நல்ல கவிதையின் அடிப்படைக்குணங்கள் மூன்று, புதுமை அல்லது பிறிதொன்றிலாத தன்மை அதில் முதன்மையானது [novelty]. பெரும்பாலும் அந்த முதல்தகுதிக்காகவே புதியகவிஞர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அதுவே இயல்பானது. ஒரு கவிஞனை வருக என்று சொல்ல அதுவே போதுமானது. பெரு.விஷ்ணுகுமார் அவ்வகையில் முக்கியமான வரவு என்றே நினைக்கிறேன்.

அதன்பின்னரே நாம் கவிதையின் அடுத்த இயல்புகளை கவனிக்கத் தொடங்குகிறோம். தனக்கான மீமொழியை கொண்டிருத்தல் இரண்டாவது. கவிதை எழுதும் பெரும்பாலானவர்கள் செய்திகளும், நடைமுறை உரையாடலும் புழங்கும் மேல்மொழியிலேயே கவிதை எழுதுகிறார்கள். அப்பால் வேறொரு மொழி அடியொழுக்காக ஓடிக்கொண்டிருப்பதில்லை. சற்றே கவிதை கொண்டவர்கள் ஏற்கனவே பலரும் எழுதிய படிமங்களின் உருவகங்களின் பழகிப்போன மீமொழியில் எழுதுகிறார்கள். தனக்கான ஒரு மீமொழி நோக்கி செல்பவனே உண்மையான கவிஞன். பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகளில் அக்கூறுகள் உள்ளன.

மூன்றாவதாகவே நாம் கவிஞனை பண்பாட்டின் பதாகையாக நிறுத்தும் அம்சத்தை கருத்தில்கொள்ளவேண்டும். அது கவித்துவதரிசனம் வெளிப்படுவது. அரசியலோ, சமூகமெய்மையோ தத்துவமோ எதுவானாலும் அதை கவித்துவதரிசனமாகவே சென்றடைகிறான். அதன்பொருட்டே கவிதையை ஆள்கிறான். அந்த கவித்துவதரிசனமே அவனை அச்சூழலில் மொழியில் பேசப்படும் அனைத்திலிருந்தும் அப்பால் நிறுத்துகிறது. நாம் நம்மைக் கவரும் அத்தனை கவிஞர்களிடமும் அதை எதிர்பார்க்கிறோம். விஷ்ணுகுமாரிடமும் எதிர்பார்க்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைகேசவமணி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56