அம்பைக்கு இயல் விருது

தமிழில் பெண்ணியத்தின் முதல்குரலாக அறியப்படும் அம்பைக்கு2008 வருடத்துக்கான இயல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அம்பையின் படைப்புகள் சமூக சீர்த்திருத்த நோக்கம் கொண்ட பெரும்பாலான படைப்புகளைப்போலவே சீண்டிவிடும் தன்மை கொண்டவை. ஆகவே நிம்மதியிழக்கச்செய்பவை. நம் பண்பாட்டுப்பாவனைகளின்  அடியில்சென்று நம் வாழ்க்கைநோக்குகளை மறுபரிசீலனைசெய்யச் சொல்பவை அவை. அவரது காலக்ட்டத்து சகபடைப்பாளிகள் நுட்பம் என்ற நோக்குடன் இலக்கியத்தில் அழகியல் ரீதியான பயணத்தை மேற்கொண்டபோது சீற்றத்தின் வேகத்தாலேயே தன் கலையை நிறுவியவர் அம்பை.

அம்பையின் கதைகளின் அடிப்படை இயல்பு எள்ளலும் மீறலும் நுண்ணீய அவதானிப்புகளும் கலந்த அவரது கூறுமுறைதான். பெரும்பாலான சிறுகதைகளில் அவர் சிறுகதைக்கான வடிவஒருமைக்காக முயன்றதில்லை. கதாபாத்திரங்கள் என நினைவில் நிற்கும் எந்த முகங்களையும் அவர் உருவாக்கியதில்லை. ஆனால் காட்சிகளை அவரால் சட்டென்று கவிதை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை கதையில் கதைசொல்லியாகிய பெண் சமயலறையின் மேலே இருக்கும் சிறிய சாலாரம் வழியாகப் பார்க்கும் கையளவு வானம் ஓர் உதாரணம். கதைக்குள் எள்ளலாகவும் அறைகூவலாகவும் ஆசிரியையின் குரல் ஒலிக்கும் வழக்கம் உண்டென்றாலும் பெரும்பாலும் கதையின் சாரமாக உள்ளே ஓடும் அறச்சீற்றம் அவற்றை சமன்செய்துவிடுகிறது.

ஒரு படைப்பாளியாக கூரிய மறுவாசிப்பில் அம்பையின் எல்லைகள் வெளிவரக்கூடும். அது விரிவான இலக்கிய விமரிசனம் மூலமே விவாதிக்கப்படவேண்டும். அவரது பதற்றங்கள், மேலோட்டமான கோட்பாட்டுச்சார்புகள், அவற்றின்மூலம் பல கதைகளில் அவர் முன்வைக்கும் எளிமைப்படுத்தப்பட்ட உலகப்பார்வை ஆகியவை இன்றைய வாசகனின் விமரிசனத்துக்கு உள்ளாகக்கூடும். ஆனால் அம்பை ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. ஒருவகையில் அவர் ஒரு இலக்கியப்போக்கின் குறியீடு. உமா மகேஸ்வரி வரை இன்றைய பெண்கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அவரில் இருந்து உருவானவர்கள்

அம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007)

அம்பைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஇஸ்லாம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாடமி விருது