புதிய வாசகர் கடிதங்கள்

dinesh

வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே

நான் உங்களது நீண்ட நாள் வாசகன் என் கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து நான் உங்கள் தளத்தை படித்து வருகிறேன் பின் நவீனத்துவம் என கூகுளில் தேடியபோது நான் உங்கள்  தளத்தில் தற்செயலாக நுழைந்தேன், அன்றிலிருந்து ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் தளத்தை படிக்காமல் என் ஒரு நாளும் கடந்து சென்றது இல்லை.நான் முதலில் உங்கள் நாவல் கோட்பாடு எனும் நூலைப் ,தான்படித்தேன்,அதன் பின்பே இலக்கியத்தைப் பற்றிய தெளிவான பார்வை எனக்கு உருவாகியது.

உங்களின் பெரும்பான்மையான நூல்களையும் உங்கள் தளத்தில் வெளியாகும் பெரும்பான்மை கட்டுரைகளையும் நான் படித்திருக்கிறேன், தமிழின் முக்கியமான  படைப்பாளிகளின் நூல்களை படித்திருக்கிறேன் தொடர்ந்து படித்துக் கொண்டும் இருக்கிறேன்.

ஆறு மாதத்திற்கு முன்பு நான் அனைத்து வகையான சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறினேன் அதன் பின்பே நான் உங்களது வெண்முரசை படிக்க ஆரம்பித்தேன் பன்னிரு படைக் காலம் வரை வந்திருக்கிறேன் வெண்முரசு அளவிற்கு என்னை ஆட்கொண்ட பிறிதொரு நூல் இல்லை. வெண்முரசு ஒரு நூல் என்பதற்கப்பால் அது எனக்கு ஒரு விளக்க முடியாத உணர்வு நிலையாகவே இருக்கிறது. வெண்முரசு விவாத தளத்தில் வரும் கடிதங்கள் வழியே நான் வெண்முரசை மேலும் அணுகி அறிய முடிகிறது.

இலக்கியம் தவிர எனக்கு இந்திய வரலாற்றின் மீதும் தத்துவத்தின் மீதும் ஒரு கறாரான அதேசமயம் மிகவும் தெளிவான பார்வை உங்கள்  வழியே எனக்கு கிடைத்தது. எந்த ஒரு நிகழ்வையும் அதன் வரலாற்று தளத்தில் வைத்து மிகவும் விரிவாக சிந்தனை செய்யும் முறை உங்களிடமிருந்தே நான் பெற்றுக்கொண்டேன்.

இலக்கியத்திற்கு அப்பால் நான் உங்கள் பயண எழுத்தின் மிகப்பெரிய ரசிகன் தற்சமயம் நான் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன். கர்நாடகத்தில் இருக்கும் ஹம்பி சிரவணபெலகுளா பதாமி பட்டடக்கல் பேலூர் ஹளபீடு போன்ற முக்கிய இடங்களுக்கு நான் சென்று வந்துள்ளேன், பயணம் முடித்துத் திரும்பிய உடன் அதைப் பற்றிய ஒரு விரிவான குறிப்பை நான் எழுதுவேன் (உங்கள் அறிவுறுத்தல்படி).

தமிழகத்தில் இன்று நிலவும் எதிர்மறை அரசியல் சூழலும் அதைத் தாங்கிப் பிடிக்க எழுதப்படும் குப்பைகளிலிருந்து மிக மிக விலகி ஒரு அறிவு உலகம் இயங்கிக் கொண்டிருப்பது உங்கள் தளத்தில் தான், அதற்காக உங்களுக்கும் உங்கள் தளத்தில் சிறந்த கடிதங்கள் எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் என் கோடி நன்றிகள். உங்கள் எழுத்துக்கு பக்கபலமாக விளங்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக இருக்கும் சினிமா துறைக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடிதம் நீண்டு விட்டது ஆனால் என்னளவில் இது சுருக்கம் தான்.

நன்றி

தினேஷ்.ர

இலால்குடி

அன்புள்ள ஜெ,

ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் நடத்தும் புதியவாசகர்களின் சந்திப்பு மிக ஆச்சரியமூட்டுகிறது. வாசகர்கள் எல்லா வகையான எழுத்துக்களுக்கும் இருக்கிறது. அர்ப்பணிப்புள்ள வாசகர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களைத் தொடர்ச்சியாக வாசிக்கிறார்கள். உங்கள் வழியாகத் தங்களைக் கண்டுகொள்கிறார்கள். சிலர் பயணம் செய்கிறார்கள். சிலர் எழுதுகிறார்கள். சிலர் சமூகப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். பிறரைப்போல அல்லாமல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக உங்கள் எழுத்துக்களின் பங்களிப்பு என்றால் இந்த வாசகர்கள்தான். அவர்களுக்கு நீங்கள் பாஸிட்டிவான ஊக்கத்தை அளிக்கிறீர்கள். கசப்புகள் காழ்ப்புகளிலிருந்தும் எதிர்மறை மனநிலைகளிலிருந்தும் விலகி தங்கள் சொந்தத்தேடலை முன்னெடுக்கவேண்டும் என்ற செய்தியை அளிக்கிறீர்கள். இந்தியாவின் நிலம், இந்தியப்பண்பாடு பற்றி இங்கே உருவாக்கப்பட்டிருக்கும் கசப்புகளையும் காழ்ப்புகளையும் கடந்துசெல்ல கற்பிக்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பார்க்கவும் சமநிலைகொண்ட நிலைபாடுகளை உருவாக்கிக் கொள்ளவும் கற்பிக்கிறீர்கள். என் வாழ்க்கையிலும் நான் திருப்புமுனையாக நினைப்பது 2016ல் உங்கள் இணையதளத்தைக் கண்டுகொண்டதுதான்.

ஆர்.எஸ்.பிரேம்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52
அடுத்த கட்டுரைஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை