நீர்க்கூடல்நகர் – 7

Day 7-121 C

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பியபின் ஒரு உளஓவியம் துலங்கி வந்தது, அங்கிருக்கையில் அதை உணர்ந்திருந்தேன், வந்தபின் விரித்து அறிந்தேன். கும்பமேளா பெரும்பாலும் அடித்தள மக்களின் விழா. அதாவது தங்கள் பொருட்களை துணியில் மூட்டைகளாகக் கட்டி தலையில் சுமந்தபடி பேருந்துகளில் வந்திறங்குபவர்களே மிகப்பெரும்பாலானவர்கள், பெட்டிகள் பைகள் கூட அவர்களிடமில்லை. இத்தனைக்கும் நூறுரூபாய் விலையில் பைகள் அங்கே விற்கப்பட்டன.

அலகாபாத் நகரிலிருந்து மிகமிகக்குறைவானவர்களே கும்பமேளாவுக்கு வந்தனர். நடுத்தரவர்க்கத்தினர் குறைவு, பணக்காரர்கள் அரிதினும் அரிது.  பெரும்பாலான அலகாபாத் நகர்மக்களுக்கு கும்பமேளா ஒரு பொருட்டாகவே தென்படவில்லை என்பதை நகரில் உணரமுடிந்தது. கும்பமேளா பகுதியிலிருந்து அலகாபாதுக்குள் நுழைந்தால் அந்நகரம் வேறொரு காலத்தில் வேறொரு வெளிச்சத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

Day 7-122

எங்குபார்த்தாலும் பலவகையான தேர்வுகளுக்கான பயிற்சிநிலையங்கள், நுகர்வுப்பொருட்களை விற்கும் கடைகள், கேளிக்கைநிலைகள். அங்கே சாயம்பூசிய இமைகளுடன், கெட்டிநிற உதடுகளுடன், குதிக்கூர் செருப்புகளுடன் வைக்கோல்போன்ற முடியை அள்ளி அள்ளி அப்பாலிட்டு செயற்கையாக சிரிக்கும் பெண்களுக்கும் பொதிபோல முடிவெட்டிக்கொண்டு தாடிவைத்து கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கத்தரிக்கோல் நடைகொண்டிருக்கும் ஆண்களுக்கும் அருகே கும்பமேளா நிகழ்வதே தெரியவில்லை. “கும்பமேளாவுக்கா? அங்கிருந்தா?” என வியப்புகொள்பவர்களையே பார்த்தோம்.

இது இந்தியாவின் இன்றைய நடைமுறை உண்மை. இந்தியாவின் படித்த உயர்குடி, நடுக்குடியினர் பொருளியல் வெற்றி, நுகர்வு ஆகிய இரண்டுக்கும் அப்பால் எதையும் அறியாதவர்கள். அதற்கு தடங்கல் ஏற்படும்போது மட்டும் தெய்வங்களை நாடுபவர்கள். தங்கள் தன்னலத்திற்கு உகந்த ஒரு முதிரா இறைமறுப்பை கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதை மரபு எதிர்ப்பாக உருமாற்றிக்கொண்டிருப்பார்கள். ‘நாகரீகமடைந்த’ கண்களால் இந்தியாவை நோக்கி அதன் ‘காட்டுமிராண்டித்தனத்தை’ கண்டு சலிப்புற்றவர்களாக காட்டிக்கொள்வார்கள்.

Day 7-107

இந்தியாவின் மரபார்ந்த திருவிழாக்கள் அனைத்துமே இவ்வாறாக மாறிவிட்டிருக்கின்றன. தென்தமிழகத்தில் எங்களூரின் தேர்த்திருவிழாக்களில் எல்லாம் நடுத்தரக்குடியினர் பங்கெடுப்பதே இல்லை. உயர்குடியினர் எங்களூரில் குடியிருப்பதில்லை, அவர்கள் சென்னையிலோ திருவனந்தபுரத்திலோ வாழ்கிறார்கள். ஆகவே பத்தாயிரம்பேர் வரை பங்குகொண்டு பலநாட்கள் நிகழ்ந்த விழாக்கள் எல்லாம் இன்று சிலநூறுபேருடன் ஒருமணிநேரத்தில் முடிவடைகின்றன. கலைநிகழ்ச்சிகளுக்கெல்லாம் ரசிகர்கள் என எவரும் வருவதில்லை.

கும்பமேளாவுக்கும் அது நிகழக்கூடும். ஏனென்றால் உயர்குடியினரை நடுக்குடியினர் தொடர்கிறார்கள். நடுக்குடியினரை நோக்கி கீழ்க்குடியினர் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்தியா மிகமிக விரைவாக நடுக்குடியினரின் தொகையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த விழாக்கள், சடங்குகளுக்கு எதிராக மாபெரும் பிரச்சாரம் சுதந்திரசிந்தனை என்றபேரில் இங்கே ஊடகங்கள் வழியாக பரப்பப்படுகிறது. அதை இளையதலைமுறையினர் அள்ளி அள்ளி விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதே கும்பமேளா சில ஆயிரம்பேருடன் சத்தமில்லாமல் நிகழ்வதைக் காணவும் நமக்கே வாய்ப்பு அமையலாம்.

Day 7-100

கும்பமேளாவின் இறுதி இரவை கங்கையிலேயே கழிப்பது என முடிவெடுத்தோம். ஹரித்வார் கும்பமேளாவின் ஓர் இரவை கங்கைப்படிக்கட்டில் கழித்த நினைவு. அன்று யுவன் சந்திரசேகர் பாடிய பாடல்கள் எண்ணத்தில் எழுந்தன. இம்முறை அழைத்தபோது அவன் மனைவி அனுமதி கொடுக்கவில்லை. அங்கே கூடாரங்களில் தங்கமுடியுமா என்று முயன்றோம். எல்லா கூடாரங்களும் நிறைந்துவிட்டன என்றார்கள்.

நூறுரூபாய் செலவில் தங்கக்கூடிய பொதுக்கூடாரங்கள் இருந்தன. அவற்றிலும் ஆட்கள் நிறைந்துவிட்டனர். ராம்குமார் வழியாக கும்பமேளாவை ஒருங்கிணைக்கும் தமிழக அதிகாரியிடம் பேசினோம். அவர் சுட்டிக்காட்டிய கூடாரத்தில் தலைக்கு இரண்டாயிரம்ரூபாய் செலவாகும் என்றார்கள். பேசாமல் அகோரிகளின் தார்ப்பாய் கூடாரத்திலேயே தங்கினாலென்ன என்ற எண்ணம் எழுந்தது. நாங்கள் விசாரித்த போலீஸ்காரர் “அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. எங்கும் தங்கலாம். அவர்கள் மறுக்கமாட்டார்கள்” என்றார்.

Day5-128

ராமேஸ்வர் கிரி பாபாவிடம் கேட்டோம். “இது பொது இடம். தங்கிக்கொள்ளுங்கள்” என்றார். ஆனால் கூடாரத்தில் எல்லாருக்கும் போதுமான அளவுக்கு போர்வைகள் இல்லை. இரவில் ஒரு சுற்று கும்பமேளாப் பகுதியை பார்த்துவந்தோம். சீக்கியர்களின் குருத்வாரா கொட்டகையில் சாப்பாடு போடுகிறார்கள் என்று கண்டு வரிசையில் நின்றோம். உள்ளே இரண்டாயிரம் பேர் அமரும் பந்தி. ஒரு பந்தி முடிந்ததுமே அடுத்த பந்தி. பூரி, சப்ஜி, பருப்புக்கறி, சப்பாத்தி, ஜிலேபி என வயிறுநெருக்குறும் அளவுக்கு சாப்பிட்டோம்.

முத்துவும் கே.பி.வினோதும், ராஜமாணிக்கமும், சக்தி கிருஷ்ணனும் அறைக்குத் திரும்பி பொருட்களை எடுத்துவரச்சென்றார்கள். நாங்கள் இரவு துயில்வதற்காக சில போர்வைகளை வாங்கினோம். இருநூறு ரூபாய் வீதம் நான்கு போர்வைகள். இரண்டு அடுக்கு கொண்ட மெத்தைப்போர்வைகள். நன்றாக குளிர்தாங்குபவை எனத் தெரிந்தது. ஒரு சாமியார் வந்து நின்று தனக்கும் ஒரு கம்பிளிப்போர்வை வாங்கித்தரும்படி கோரினார். அவருக்கும் ஒன்று வாங்கிக்கொடுத்தோம்.

Day 7-108

முத்து அவருக்கும் எனக்கும் உறக்கப்பைகள் கொண்டுவந்தார். சக்தி கிருஷ்ணனும், கே.பி.வினோதும் அறையிலேயே தங்கிவிட்டனர். அவர்கள் செல்லும்போதே திரும்பமாட்டார்கள் என்று தோன்றிவிட்டது. அவர்களை கொண்டுவிட்ட ஆட்டோ ஓட்டுநர் “இங்கேயா தங்குகிறீர்கள்? இங்கே எவரும் தங்கமாட்டார்கள்… விடுதியில் தங்குங்கள்… இங்கே என்ன இருக்கிறது?” என வியந்ததாக முத்து சொன்னார்.

ராமேஸ்வர் கிரி பாபாவின் நிரஞ்சன் அகாராவைச் சேர்ந்த ஒரு துறவி தமிழ் பேசினார். ஆனால் மலையாள நெடி. பேசிவந்தால் அவர் நாகர்கோயிலை சேர்ந்தவர், மலையாளி. ஊரிலேயே நெடுங்காலம் சாமியாராக இருந்தபின் இந்த அகாராவுக்கு வந்துசேர்ந்திருக்கிறார். ஓர் அகோரிபாபாவாக ஆக இன்னும் நெடுங்காலமாகும்.

Day 7-109

துறவுபூண்டு அலையத் தொடங்குபவர்கள் தொடக்கத்தில் அமைதியாக இருப்பார்கள். உள்நோக்கியவர்களாக, உளச்சோர்வுக்குச் சென்றுமீளபவர்களாக. பின்னர் ஒரு கட்டத்தில் நிறைய பேசுவார்கள். எப்போதும் உவகையுடன் துள்ளிக்கொண்டிருப்பார்கள். அடுத்தகட்டத்தில் மீண்டும் சொல்லடங்குவார்கள். அது உளச்சோர்வு இல்லாத சொல்லின்மை. நாகர்கோயில் துறவி அகாராக்களைப் பற்றி, அகோரிகளைப்பற்றி பேசிப்பேசி தள்ளினார். அவர் ரமேஸ்வர் கிரி பாவாவை விட மூத்தவர். ஆனால் “அவர் எங்கள் அகாராவின் சீனியர். நான் அவருக்கு பணிவிடைகள் செய்கிறேன்” என்றார்.

உறக்கப்பை குளிருக்கு மிக அடக்கமானதாக இருந்தது. வெட்டவெளியில் உறங்க மிகமிக உதவியானது. கூடாரத்திற்குள் படுப்பது ஏறத்தாழ வெட்டவெளியில் படுப்பதேதான். மிகமெல்லிய நைலான் தார்ப்பாயை நான்கு கயிறுகளால் இழுத்துக் கட்டியதுதான் அது. எல்லாப்பக்கமும் திறந்திருந்தது. திரைச்சீலையோ மூடியோ கிடையாது. பக்கத்தில் சாலை. அதிலிருந்து மறைப்பதற்காக எங்கிருந்தோ ஒரு விளம்பரத் தட்டியை கவர்ந்து கொண்டு வைத்திருந்தார் ராமேஸ்வர் கிரி பாபா. அதில் ஒரு ஹைடெக் சாமியார் அருளுரை புரிந்து புன்னகைபூத்துக்கொண்டிருந்தார்.

Day 7-111

பதினொரு மணிக்கெல்லாம் படுத்துவிட்டோம். நாங்கள் எட்டுபேர். வேறு சாமியார்கள் நால்வர். ராமேஸ்வர் கிரி பாபா உட்பட பதின்மூன்று பேர். போர்வைகளுக்குள் ஒடுங்கிக்கொண்டு ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு படுத்தோம். நல்லகுளிர். ஆனால் மெல்ல மெல்ல என் உடலுக்குள் இருந்த வெப்பம் பையை நிறைத்தது. பகல் முழுக்க நடந்த களைப்பால் நான் தூங்கிவிட்டேன். சிலர் துயில கொஞ்சம் பிந்தியது என்றார்கள்.

காலையில் எழுந்தபோது மழைபெய்து ஒழுகுவதுபோல கூடாரத்தின் உட்பகுதியிலிருந்து நீர் சொட்டியது. எங்கள் மூச்சில் வெளியேறிய நீராவி குளிர்ந்து சொட்டிய துளிகள். கிருஷ்ணனின் தலை நன்றாக நனைந்திருந்தது. விடியற்காலையிலேயே மக்கள்பெருக்கு தொடங்கிவிட்டிருந்தது. சாலை எங்கள் தலைக்கு மிக அருகே என்பதனால் தலைக்குமேல் பெருங்கூட்டம் சென்றுகொண்டிருப்பதாகவே தோன்றிக்கொண்டிருந்தது

Day 7-120 B

எழுந்து வெளியே வந்து பார்த்தால் சாலையே தெரியாத அளவுக்கு கூட்டம். தோளோடு தோள்முட்டி நெரிசலிட்டு மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அரையிருள். ஒரு டீயை போட்டுவிட்டுச் சென்று எஞ்சியவர்களை எழுப்பினோம். ராமேஸ்வர் கிரி பாபா எங்களை அருகிருந்த ஒரு மடத்திற்குள் அழைத்துச்சென்று அங்கேயே காலைக்கடன்களை முடிக்கும்படி சொன்னார். அவரே அழைத்துச்சென்று காட்டினார்.

அவரைப்போன்றவர்களுக்கு எங்கும் முதன்மை மதிப்பு இருந்தது. பட்டுக்காவி உடுத்து, தங்க உருத்திரவிழிமாலை அணிந்து ஒரு பெரிய மாணவர்குழுவை தலைமை தாங்கி வந்த துறவி அப்படியே நின்று அவரை வணங்குவதை கண்டேன். அந்த மடத்தின் கழிப்பறையில் வெந்நீர் வந்தது. பல்தேய்க்க டாபர் பற்பசையும் தூரிகையும் அளிக்கப்பட்டது.

Day 7-104

பல்தேய்த்துவிட்டு மீண்டும் கூடாரத்திற்கு வந்தோம். ராமேஸ்வர் கிரி பாபா சூடான தேநீர் போட்டு எங்களுக்கு அளித்தார். கங்கையில் குளிக்கச் செல்வதென்பது அன்றைய திட்டம். ஆனால் கடுங்குளிர் இருந்தது. பலமுறை உள்ளம் ஊசலாடியபின் குளிப்பது என்னும் முடிவையே எடுத்தேன்.

கங்கையின் கரை மனிதர்களால் ஆனதாக இருந்தது. அன்றுகாலை மட்டும் முப்பது லட்சம்பேர் நீராடியதாக பின்னர் செய்திகளில் படித்தேன். கங்கைக்கு குறுக்கே மிதக்கும் இரும்புத்தெப்பங்களின்மேல் போடப்பட்டிருந்த பாலங்களின் வழியாக நீர் கரைதொட்டுச் செல்வதுபோல மக்கள் ஒழுகிக்கொண்டிருந்தார்கள்.

Day 7-106

கங்கையில் மலர்களைப் போட்டு வழிபட்டபின் நீராடினர். நீண்ட குச்சிகளில் வலைகளுடன் நின்றிருந்த பணியாளர்கள் உடனே அந்த மலர்களை அள்ளி எடுத்து குப்பைத்தொட்டியில் இட்டனர். கங்கையில் எந்தப்பொருளும் ஒழுகிச்செல்ல விடப்படவில்லை. மூங்கில் கட்டப்பட்டு கங்கைக்குள் ஆழமாக செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது.

நான் நீரிலிறங்கி மும்முறை மூழ்கி பாய்ந்தோடி கரைக்கு வந்து துவட்டி மீண்டும் ஆடைகளை அணிந்துகொண்டு குளிருக்கு மேல்சட்டையையும் போட்டபின்னர்தான் என்ன ஏது என சுற்றிலும் பார்த்தேன். மொத்தக்குளியலுக்கும் ஐந்துநிமிடம் ஆகியிருக்கும். குளிர்விலகி நான் உடல்மீள அரைமணிநேரம் ஆகியது. நல்லவேளையாக கரையோரமாகவே சூடான டீ கிடைத்தது.

Day 7-105

நீராடி முடித்து வரும் வழியில் காலையுணவை சூடாக தொன்னைகளில் பரிமாறி அளித்துக்கொண்டிருந்தார்கள். பூரி, பாயசம். சர்தார்ஜிகள் உணவுக்கு ‘சாஹிப்’ என ஏன் பின்னொட்டு சேர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு மரியாதைச் சொல் கூறி உணவளித்தார்கள்.

பதினொரு மணிக்கு கும்பமேளா பகுதியிலிருந்து மீண்டும் அறைக்கு திரும்பினோம். சற்று ஓய்வெடுத்தபின் மதிய உணவு. பின்னர் அறையை ஒழித்துக்கொண்டு கிளம்பி அலகாபாத்- பிரயாக்ராஜ் விமானநிலையம் சென்றோம். மாலை டெல்லிக்கு விமானம். அங்கிருந்து நான்குமணிநேரக் காத்திருப்புக்குப்பின்னர் கோவை. பின்னிரவு இரண்டு மணிக்கு கோவை. கோவையில் தங்குவதற்கு விடுதி பதிவுசெய்திருந்தேன்.

Day5-149

பிரயாக்ராஜ் விமானநிலையத்தில் இரண்டு புடைப்புச் சிலைகளை பார்த்தேன். ஒன்று மாபெரும் இந்திக் கவிஞரும் நடிகர் அமிதாப் பச்சனின் தந்தையுமாகிய ஹரிவன்ஷ்ராய் பச்சன். இன்னொருவர் பாடகர் பீம்சேன் ஜோஷி. இருவரும்தான் அந்நகரின் பண்பாட்டு அடையாளங்கள் என எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் பெயர்களும் வரிகளும் இந்தியில் இருந்தன. ஆங்கிலத்திலும் பொறித்தாலொழிய அயலவருக்கு அவர்களை தெரியப்போவதில்லை, அச்சிலையின் முழுப்பயன் அதுவே என்பது அவர்களுக்கு உறைக்கவில்லை.

இந்தியாவில் வேறெந்த விமானநிலையத்திலும் கவிஞரின் சிலையும் கவிதையும் காணக்கிடைத்ததில்லை. தமிழகத்தில் அரசியல்வாதிகளும் சினிமாநடிகர்களும் தவிர வேறு மனிதர்களே இல்லை என்பதனால் அதைப்பற்றி யோசிக்கவேண்டியதில்லை. கேரளத்தில் திருவனந்தபுரத்தில் குமாரன் ஆசானின் பாடலையும் சிலையையும் வைக்கலாம். பிணராய் விஜயன் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட விண்ணப்பத்தை எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

Day5-148

ஹரிவன்ஷ்ராய் பச்சன் க.நா.சுவின் நண்பர். அவருடைய அக்னிபாத் [அனல்பாதை] என்னும் கவிதையின் வரிகளை பொறித்திருந்தார்கள்.

இதை விட மகத்தான காட்சி உண்டா என்ன?

கண்ணீர் வழியும் ஒருவன்

வியர்வையும் குருதியும் நனைத்த உடல்கொண்டவன்

ஆயினும் தளராமல்

அனல்பாதையில் நடைபோடுகிறான்!

ஆம் அனல்பாதையில்!

ஆம் அனல்மூடிய பாதையில்!

Day 7-121 D

[நிறைவு]

===============================================================

படங்கள் ஏ வி மணிகண்டன்

மேலும் படங்கள் https://drive.google.com/drive/folders/12aDV1Ye4z8NqYNwqQuO3qCkvXQcautIz

அக்னிபாத் ஹரிவன்ஷ்ராய் பச்சன் கவிதை

அமிதாப் அக்னிபாத் கவிதையை பாடுகிறார்

முந்தைய கட்டுரைஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53