கும்பமேளா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒருநண்பர் சொன்னார், சென்ற மூன்று மாதங்களாக கும்பமேளா பற்றி தேசிய ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் அத்தனை செய்திகளுமே எதிர்மறையானவை என. எல்லா தகவல்களுடனும் ஓர் ‘அறிவார்ந்த’ விமர்சனமும் ஊடாடியிருக்கும். கும்பமேளா பற்றி இந்தியாவின் ‘படித்த’ வட்டத்தினரிடம் இருக்கும் உளப்பதிவுகள் எல்லாமே இப்படி ஆங்கில ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டவை.
அங்கே கடுமையான நெரிசல் இருக்கும், ஆகவே சாவு உறுதி என்பது முதல் உளப்பதிவு. அங்கே கழிப்பறைகள் இருக்காது, மக்கள் எங்குபார்த்தாலும் மலமும் சிறுநீரும் கழித்து நாறடித்திருப்பார்கள், குப்பை மலைபோல குவிந்திருக்கும் என்பது இன்னொரு உளப்பதிவு. எங்களுக்கே அந்த உளப்பதிவு சற்று இருந்தது. அங்கே செல்லும்போது அதற்கான எதிர்பார்ப்புகளுடன்தான் சென்றோம்.
இந்தியாவின் அடித்தள மக்களின் அர்த்தமற்ற, காட்டுமிராண்டித்தனமான ஒரு சடங்கு, எவ்வகையிலும் தேவையே இல்லாத ஒன்று, இதனால் அரசுக்கு மிகப்பெரிய செலவு, அது ‘அறிவுள்ள’ மக்களின் வரிப்பணம் என்பது பரவலாக பேசப்படும் ஒரு தரப்பு. கும்பமேளாவை தடைசெய்யவேண்டும் என்று பேசிய முற்போக்காளர்கூட தேசிய ஆங்கில ஊடகங்களில் தோன்றினார்கள்.
கும்பமேளா ‘உலகின் கண்களில்’ இந்தியாவை கீழ்மையாகக் காட்டும் என்றனர் சிலர். ‘இந்த நவீன யுகத்திலே’ என்ற சொல்லாட்சியை அடிக்கடி கேட்கமுடிந்தது. இந்த ஒட்டுமொத்த உலகையும் அமெரிக்க மூலதனத்தாலும் சீனாவின் உற்பத்திப்பொருட்களாலும் இந்தியாவின் நடுத்தரவர்க்க சூனித்தனத்தாலும் மூடிவிடவேண்டும் என்னும் பேரார்வத்துடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன், ஒரு மூலை கூட எஞ்சவிடக்கூடாது. ‘நாகரீகத்தின்’ ஒளியுடன் [ஆப்பிள் செல்பேசியில்தான்] அங்கே சென்று நின்றுவிடவேண்டும்.
அகோரிகளைப்பற்றிய சித்திரங்கள் மேலும் கொடூரமானவை. ஆப்ரிக்காவை கொடூரமாக சித்தரிக்கும் அமெரிக்க-ஐரோப்பிய இனவாத உளநிலையின் நீட்சி அது. அவர்களை பண்பாடே அற்ற பழங்குடிக்கூட்டங்களுக்கு நிகராக சித்தரிக்கிறார்கள். எவ்வகையிலும் அவர்களை புரிந்துகொள்ள முயல்வதில்லை, மாறாக தங்களின் முன்முடிவுகளை, தாங்கள் உருவாக்கிக்கொண்ட முன்வடிவங்களை அவர்கள்மேல் ஏற்றினார்கள். அதற்கேற்ற புகைப்படங்களை எடுத்து வெளியிட்டனர். புகைப்படங்களின் கோணங்களிலேயே இந்த எதிர்மறை அரசியல்நோக்கு வெளிப்பட்டது.
குறிப்பாக என்.டி.டி.வி கும்பமேளாவுக்கு எதிரான கசப்பையும் காழ்ப்பையுமே கக்கிக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ச்சியாக பார்க்கும் ஒருவர் என் தளத்தில் வெளியான புகைப்படங்களைக் கண்டு வியந்து இப்படிப்பட்ட கலாச்சாரநிகழ்ச்சிகள் அங்கே நிகழும் என்றே தனக்கு தெரிந்திருக்கவில்லை, ஆடையில்லாமல் கூட்டம்கூட்டமாக காட்டுமிராண்டிகள் நீராடும் ஒரு சடங்கு என்றுதான் எண்ணியிருந்ததாக சொன்னார்.
அகோரிகள் – நாகா பாபாக்களைப் பற்றிய இந்த ஊடகங்களின் சித்திரங்கள் மிகப்பெரிய ஒரு பண்பாட்டு வன்முறை. ஒரு மாபெரும் நாகரீகத்தை இத்தனை கீழ்மையுடன் அவதூறுசெய்ய இவர்களுக்கு என்ன உரிமை? இதை கருத்துச்சுதந்திரத்தின் பெயரால் செய்கிறார்கள் என்றால் எத்தனை பெரிய விழுமியங்களை கருவியாகக் கொண்டு இக்கீழ்மையை நிகழ்த்துகிறார்கள் இவர்கள்?
அகோரிகள், நாகா பாபாக்கள் பிணத்தை உண்கிறார்கள் என்பது இவ்வாறு கட்டி உருவாக்கப்பட்ட பொய். அவர்களின் இலக்குகளில் அச்சம், அருவருப்பு இரண்டையும் கடத்தல் என்பது மைய இடம் வகிக்கிறது. அதற்கான நோன்புகளின் ஒரு பகுதியாக சுடுகாட்டில் பிணம் மீது அமர்ந்து தவம்செய்தல், பிணத்தின் ஒரு துண்டை ஒரு சடங்காக உண்ணுதல் ஆகியவை உண்டு. ஆனால் அவை மிக அரிதானவை. ஓர் உச்சநிலைச் சடங்குகள் அவை.
ஆனால் சுடுகாடுகளில் இரவு இருப்பது அவர்களின் வழக்கம். உண்மையில் காசி போன்ற ஊர்களின் சுடுகாடுகளில் இரவில் இருப்பதென்பது ஒரு மெய்மையனுபவம். நான் பலமுறை முழு இரவும் அங்கே இருந்திருக்கிறேன், நண்பர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறேன். காசி இந்தியாவின் மகாமயானம் என்று அழைக்கப்படுவது. வாழ்தலுக்கு நிகரான பொருள்கொண்ட இறப்பை அருகமர்ந்து பார்க்கும் வாய்ப்பு அளிப்பது.
நாகா பாபாக்கள் திருடர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் என்பது ஊடகங்களில் சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமானது. இந்த துறவுக்குழுக்களுக்கு எந்த விதமான அமைப்புசார்ந்த கட்டுப்பாடும் இல்லை. கண்காணிப்புகளும் இல்லை. எல்லாவகையான கட்டுப்பாடுகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் அப்பால் செல்வதே அவர்களின் தவமாக உள்ளது என்பதனால் அது இயல்வதும் அல்ல.
ஆகவே தவிர்க்கமுடியாமல் இவர்களுக்குள் பிச்சைக்காரர்களும் குற்றத்தன்மை கொண்டவர்களும் உண்டு. ஆனால் எவ்வகையிலும் பொதுமக்களுடன் ஊடாடுபவர்கள் அல்ல இவர்கள். தங்களை ஒரு தனிச்சமூகமாக, ஒட்டுமொத்த பண்பாட்டுக்கும் புறனடையாளர்களாக நிறுத்திக்கொள்பவர்கள். அவர்களின் உலகை பிறர் அறிவது கடினம், அதன்மேல் தீர்ப்புகளை செலுத்துவதென்பது ஆணவம் மற்றும் கீழ்மை.
ஒவ்வொரு ஆண்டும் பலநூறு நாகா பாபாக்கள் கங்கை நீரில் நீராடி புதிதாக துறவு கொள்கிறார்கள். மண்ணிலுள்ள அத்தனை இன்பங்களையும் துறப்போம் என உறுதிகொள்கிறார்கள். எந்த அமைப்புசார்ந்த முயற்சியும் இல்லாமல் அவர்கள் எழுந்து வந்தபடியே இருக்கிறார்கள். சூழ்ந்திருக்கும் பெருந்திரள் அவர்களை அவதூறுசெய்து சிறுமைசெய்வதையே அவர்கள் அறிவதில்லை.
இன்று வாழ்பவர்களிலேயே கடினமான வாழ்க்கை அவர்களுடையதுதான். சார்தாம் என அவர்களால் அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், முக்திநாத் ஆகிய இடங்களிலும் சூழ்ந்துள்ள மலைப்பகுதிகளிலும்தான் அவர்கள் இருக்கவேண்டும். கடுங்குளிரில் வெற்றுடலுடன் வாழ்கிறார்கள். அவர்கள் தேடுவது, அடைவது எதற்கும் நாம் வாழும் இந்த நுகர்விய உலகியலுடன் தொடர்பே இல்லை. உலகம் அறிவியலில் நுகர்வில் அரசியலில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. அவர்கள் முற்றிலும் வேறொரு உலகில் நிகழ்கிறார்கள். அந்தச் சரடு அறுபடவேயில்லை.
இதெல்லாம் ஒரு ‘நவீனத்துவருக்கு’ நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பொருளை அளிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக இத்தகைய ஓர் இயக்கம் அறுபடாமல் தலைமுறை தலைமுறையாக நிகழ்வதன் விந்தையையாவது அவர் உணரவேண்டும். இத்தகைய மாபெரும் பண்பாட்டுநிகழ்வின் உட்பொருள் என்ன என்று அறியமுயலவேண்டும்.
ஆனால் அதற்கு பண்பாட்டு ஆய்வில் அடிப்படை அறிதல் இருக்கவேண்டும். தத்துவ அறிமுகம் இருக்கவேண்டும். இங்கே பேசிக்கொண்டிருப்பவர்கள் மிக எளிய அரசியல்சரிகளை நாலைந்து வரிகளுக்குள் அடக்கி புரிந்துகொண்டிருக்கும் தற்குறிகள். மானுடப் பண்பாட்டின் பேருருவைவிட தன்னை மேலே தூக்கி வைத்துக்கொள்ள ஆணவம் முற்றியிருக்கவேண்டும். அந்த ஆணவம் அறியாமையிலிருந்தே எழமுடியும்.
நான் என்.டி.டி.வியின் செய்தியாளர்களை, குறிப்பாக அவர்களின் ‘நவநாகரீக’ பெண்களை பார்க்கையில் கொள்ளும் ஒவ்வாமைக்கு எல்லையே இல்லை. மானுட வரலாற்றின், பண்பாட்டின் செயல்பாடுகளைப் பற்றிய ஊசிமுனை அளவுக்குக்கூட அறிவில்லாத பேதைகள். அவர்களின் அலட்டல் மொழி போல இன்று இந்தியாவில் குமட்டலெடுக்கச் செய்யும் பிறிதொன்று இல்லை.
கும்பமேளா இங்கு பலரும் எண்ணுவதுபோல ஒழுங்கற்ற பெருந்திரள் அல்ல. இம்முறை பிரமிப்புடன்தான் இதை பதிவுசெய்யவேண்டியிருக்கிறது. ஏறத்தாழ அரைக்கோடிபேர் கூடியிருந்த ஆற்றுப்படுகையில் ஒரு குப்பையைக்கூட காணமுடியவில்லை. பல்லாயிரக்கணக்கான குப்பைக்கூடைகள். அவை ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தூய்மைசெய்யப்பட்டன. மிகச்சாதாரணமான கிராம மக்கள்கூட குப்பைகளை குப்பைக்கூடைகளில் போடுவதையே கண்டேன்.
யுனெஸ்கோ உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இரண்டு லட்சம் கழிப்பறைகள் நதிக்கரை முழுக்க. அவைகூட வெறும் மறைப்புகள் அல்ல, அவற்றிலிருந்து மலம் குழாய்கள் வழியாக செப்டிக்டேங்குகளுக்கே சென்றது. ஆறுநாட்களில் ஒருநாள்கூட ஒருமுறைகூட திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் ஒருவரை பார்க்கநேரவில்லை.
பார்வையை சற்றே திருப்பினால் ஒரு கழிப்பிடம் கண்ணுக்குப் படும். அத்துடன் கழிப்பிடப் பழக்கத்தில் வட இந்திய கிராமிய மக்கள் மிகமிக உறுதிகொண்டிருந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் ஒரு விடுமுறைநாளுக்குப்பின் அந்தியில் பார்த்தால் குவிந்துகிடக்கும் குப்பைகளை, மலினங்களை எண்ணிக்கொண்டால் இது எவ்வளவு பெரிய சாதனை என்னும் எண்ணமே எழும்.
அத்தனை பெரிய பகுதியில் குற்றங்களும் மிகமிகக் குறைவு. மத்தியப்போலீஸின் கட்டுப்பாட்டில் அவ்விடம் இருப்பது ஒரு காரணம். குற்றங்கள் சற்றும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்னும் செய்தி உறுதிபட முன்னரே அளிக்கப்பட்டுவிட்டிருப்பதே மேலும் பெரிய காரணம். ஆட்டோ உட்பட எந்த வண்டிகளிலும் மிகையான கட்டணங்கள் இல்லை. கட்டணம் கோரி வம்புகள் செய்யப்படுவதும் இல்லை.
எங்கள் ஆட்டோ ஓட்டுநர் முதல் நாள் வெளியிலிருந்து வந்தவர்களிடம் கூடுதல்கட்டணம் கேட்டு சிலர் தகராறுசெய்ததாகவும் புகார் சென்ற சிலமணிநேரங்களிலேயே இரண்டாயிரம் ஆட்டோக்கள் காவலர்களால் மறிக்கப்பட்டு காவல்நிலையம் கொண்டுசெல்லப்பட்டதாகவும் சொன்னார். கட்டணம் நியாயமாகவே வசூலிக்கப்படும், மீறுபவர்களை ஆட்டோ ஓட்டுநர்களே பிடித்து ஒப்படைப்போம் என்னும் உறுதிமொழி அளிக்கப்பட்ட பின்னரே ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாம்.
இந்த முகங்களின் விந்தையிலிருந்து எந்த புனைவெழுத்தாளனும் தப்ப முடியாது. கனவில் என ஆழ்த்தி வைத்திருக்கின்றன. முகமும் உடையும் ஒரு முழுப்பண்பாட்டையே காட்டிவிடுகின்றன. ஒரு விதையில் ஒரு காடு தெரிவதுபோல. மனித முகங்களில் எத்தனை வெளிப்பாடுகள். பக்தி, தயக்கம், பதற்றம், போதை, ஐயம், பரவசம். எத்தனை மதநெறிகள், எத்தனை எத்தனை சடங்குகள். உலகில் இன்று இதற்கிணையான ஒரு காட்சிப்பெருக்கு வேறில்லை என ஐயமின்றி சொல்வேன்.
அன்று காலையில் கங்கையின் மறுகரையின் எல்லைக்கு சென்றிறங்கினோம். மொத்த கும்பமேளா நகரையும் ஒருமுறை பார்த்துவிடலாம் என்பது எண்ணம். ஆனால் அது மிகக்கடினம் என மதியத்திற்குள் தெரிந்துகொண்டோம். கும்பமேளா என்பது எங்கெங்கோ விரிந்து கிடந்தது. செல்லுமிடங்களில் எல்லாம் வெவ்வேறு மதநிறுவனங்களின் வளாகங்கள், கலைக்கூடங்கள், வெவ்வேறு சமூகங்களே அங்கே வாழ்ந்துகொண்டிருந்தன.
முறிவடையாமல் வேதம் முழங்கிக்கொண்டிருந்த குடில்தொகை ஒன்றை உள்ளே சென்று பார்த்தோம். அது ஒரு உயர்நிலை ஆசிரமம். ஐந்து நட்சத்திர விடுதிகளுக்குரிய ஆடம்பரம். ஆற்றுக்கு அப்பால் மிக எளிய கூடாரங்கள் இருப்பதை எண்ணிக்கொண்டேன். அருகே ஒரு கலைக்கூடம். அதற்கப்பால் ஓரு பெரிய நுழைவாயில். ஆனால் அது ஒரு தனியார் நட்சத்திரவிடுதியின் தங்குமிடம். அந்த நட்சத்திரவிடுதி போலவே பிளாஸ்டர் ஆப் பாரீஸில் நுழைவாயிலை அமைத்திருந்தார்கள்.
உச்சிப்பொழுது கடந்தபோது களைப்படைந்துவிட்டிருந்தோம். மொத்த கும்பமேளா நகரையும் ஒருநோக்கு பார்ப்பதற்கு ஒருநாள் போதாது. சிறியசிறிய பயணங்களாக பலநாட்கள் தொடர்ச்சியாக பார்க்கவேண்டியிருக்கும். ஆகவே அந்த முயற்சியை கைவிட்டோம். நான் மாற்றுத்திட்டம் ஒன்றை வகுத்தேன். அன்று அகோரி பாபாக்களை சந்திப்பது. அன்றிரவு கங்கைப்படுகையிலேயே தங்குவது. மறுநாள் நீராடிவிட்டு திரும்பிச் செல்வது. நண்பர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
மீண்டும் சங்கம் பகுதிக்கே திரும்பி வந்தோம். ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தோம். கலைக்கூடங்களைச் சென்று பார்த்தோம். அகோரி பாபா ஒருவரின் குடிலுக்குள் சென்று அவருடன் அமர்ந்திருந்தோம். அவர் தன்பெயர் ராமேஸ்வர் கிரி என்று அறிமுகம் செய்துகொண்டார். பொதுவாக அகோரிகளுக்கு நிலையான பெயர் இருக்காது. பெயருடன் இருப்பது ஒரு முந்தைய படிநிலை.
ராமேஸ்வர் கிரி பாபாவின் வாழ்க்கை பெரும்பாலும் நான்கடவுள் கதையை ஒட்டியது. குடும்பத்திலிருந்து அவர் கங்கைக் கரைக்குச் செல்வது எட்டு வயதில். நிரஞ்சன் அகாராவின் உறுப்பினராக சேர்ந்தார். இருபதாண்டுகள் மாணவனாக இருந்தபின்னர் குரு நிரஞ்சன்பாபா அவருக்கு துறவளித்து யோகதண்டை வழங்கினார். ஆனால் அதற்குப்பின்னரும் பல படிகள். கரிய ஆடை அணிவதிலிருந்து கோவணம் மட்டும் அணிவதுவரை.
ராமேஸ்வர் கிரி கோவணம் மட்டும் அணிந்திருப்பவர். உடலெங்கும் விபூதி. ருத்திராக்க மாலைகள். அவருடைய பேச்சும் சிரிப்பும் மிகமிக இளையவர் போல காட்டின. முந்தைய பாபாவைப்போல ஒருவகையான உள்ளடங்கிய அழுத்தத்திற்கு பதிலாக சரளமாக பேசினார். அவருடைய குருமரபு, துறவுமுறை ஆகியவற்றைப்பற்றி விளக்கமாக சொன்னார். ஒருவரின் இயல்பறிந்தே அவருக்குரிய வழியை ஆசிரியர் கண்டடைவதாகவும், தனக்குரியது பக்தி அல்ல ஞானம் என குரு முடிவெடுத்ததாகவும் கூறினார். மூலநூல்களை குருவிடமிருந்து கற்று மனப்பாடமாக்கிக்கொண்டார் என்றார்.
படகில் ஏறி மீண்டுமொருமுறை கங்கையைக் கடப்பது என திட்டமிட்டோம். ஆனால் இரவெழுந்துகொண்டிருப்பதனால் சங்கம்சென்று நீராட அனுமதி இல்லை என மறுத்துவிட்டார்கள். படகுக்காரர் ஒருவர், உதவ முன்வந்தார். ஆற்றில் மறுகரை வரை கொண்டுசென்று திரும்ப கொண்டுவருகிறேன், சங்கம் கொண்டுசெல்லமாட்டேன் என்றார். தலைக்கு ஐம்பதுரூபாய்தான். ஒன்றரை மணிநேரமாகும். படகில் ஏறிக்கொண்டோம்.
நன்றாக இருட்டிவிட்டிருந்தது. நீர் மேல் இருமருங்கிலும் செறிந்திருந்த பல்லாயிரம் விளக்குகள் சுடர்விட்டன. நீர் கரிய ஒளிப்பாளமாக அலைவுகொண்டது. விண்ணில் மிதந்து செல்வதுபோல் உணர்ந்தேன். ஆழத்தில் வானம் நெளிந்தது. நடு ஆற்றில் இருகரையிலும் இருந்த அத்தனை ஓசைகளும் வெளிச்சங்களும் அகன்று வேறெங்கோ என தோன்றின. ஆறு எதையும் அறியாததுபோல, அனைத்திலிருந்தும் விலகியதுபோல ஓசையிலா ஒழுக்காக இருந்தது.