பனை – கடிதங்கள்-2

panai

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை

அன்புநிறை ஜெ,

பனைகளின் இந்தியா வாசித்தேன். இந்தத் தலைப்பே மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த ஆரவாரமுமின்றி எளிமையான கிராமத்து மனிதரைப் போல நம் பயணங்களில் கவனம் பெறாது கடந்து பின்நகரும் பனை, ஓலைகளாகத் தாங்கி நின்ற மானுட அறிதல்கள் எத்தனை!! அதற்காக ஒருவர் மேற்கொண்ட பயணம், அதைப் பற்றிய எழுத்து மீண்டும் பனைகளை அடையாளப்படுத்தியிருக்கிறது.

ஆறுமுகநேரியிலிருந்து அடைக்கலாபுரம் வழியாகத் திருச்செந்தூர் செல்லும் சாலையில் நடந்த இளவயது நினைவுகள் கிளர்ந்தெழ வாசித்தேன். இதற்கு முன் உங்கள் ‘கரும்பனை மீது காற்று’  கிளர்த்திய நினைவுகள் மீண்டும் எழுந்தன. மிகப் பொருத்தமாக பின்தொடரும் நிழலின் குரலின் அவ்வரிகளிலிருந்து அருண்மொழி நங்கை தொடங்கியிருக்கிறார்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக பனைகளைக் கண்ட அவரது சிறுவயது நினைவுகளில் தன் கட்டுரையைத் தொடங்கி, நூல் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை மிகக் கோர்வையாக எழுதியிருக்கிறார். பயண நூல் என்றளவில் நின்றுவிடாது, உலகளாவிய பனை சார்ந்த பண்பாட்டின் கூறுகளை காட்சன் எழுதியிருக்கிறார் என்பது இந்த நூலை வாசிக்கத் தூண்டுகிறது. காட்சனின் மொழியின் செழுமையையும் கவித்துவத்தையும் இக்கட்டுரையின் வாயிலாக உணர முடிகிறது.

இவை அனைத்தையும் எழுதிய பிறகு பயணம் குறித்து அருண்மொழி நங்கை எழுதியிருப்பது பயணத்தை மிகவும் நேசிக்கும் ஒருவருக்கே சாத்யியமான ஒன்று – //அக்கணங்களில் நேற்று இல்லை, நாளை இல்லை, சஞ்சலங்கள் இல்லை. முதலில் ஒரு பரவசம், உற்சாகம். பிறகு அதன் அலைகளடங்கி அதுவே ஆழ்நிலை தியானமாகிறது//

//பயணம் தேடலாகும்போது அதிலுள்ள வசதிக்குறைவுகள் அனைத்தும் நோன்புகளாக ஆகிவிடுகின்றன//

அவர் குறிப்பிடும் அஸ்தமன சூரியன் எரிந்தணையும் பனங்காடுகள் ஒரு தீவிரமான சித்திரம். நான் பள்ளிப் பருவத்தில் குடியிருந்த பேயன்விளை வீடு மூன்று புறங்களில் பனை சூழ்ந்தது. வீட்டிற்குப் பின்புறம் இரு கிலோமீட்டருக்கு மேல் காயல்பட்டிண கடற்கரை உப்பளங்கள் வரை விரிந்துகிடக்கும் பனங்காடு. கூட்டமாக இருப்பினும் தன்னுள் ஆழ்ந்து தனித்தே நிற்கும் பனை, காற்று கடக்கும் போது தன் ரகசியங்கள் அனைத்தையும் சலசலக்கும்.

இரவில் பாத்திரங்களைக் கழுவ வீட்டின் பின் கதவுகளைத் திறந்தால் அதன் ஓயாது சிரிப்பும் சலசலப்பும் கேட்கும், பல இரவுகளில் அதைக் கேட்பதற்காக பூட்டிய கதவுகளைத் திறந்து இருளில் நின்றிருக்கிறேன்.

அருண்மொழி எழுதியிருந்தது போல பெண்கள் கால் பதிக்க இயலா நிலவெளிகளில் அலைவது ஆண்களுக்கு மட்டுமேயான வரமாக இருக்கும் அத்தகைய நிலத்தில்  தாத்தாவுடன் அதிகாலையில் பதநீர்  இறக்கும் பனையேறியுடன் பேசிக் கொண்டு நின்ற காலைகள் எனப் பல பனை சார்ந்த நினைவுகளை மலர்த்தியது இக்கட்டுரை.

மிக்க அன்புடன்,

சுபா

அன்புள்ள ஜெ

பனைமரச்சாலை பற்றி அருண்மொழி அவர்கள் எழுதியிருந்த மதிப்புரைக்குறிப்பைக் கண்டேன். தன் சொந்தவாழ்க்கையின் பார்வையிலிருந்து எழுதியிருந்ததனால் என்னால் மேலும் நெருக்கமாக அந்த நூலை உணரமுடிந்தது. அந்தக்குறிப்பைப் பற்றி வாசித்தபோதுதான் பனை பற்றி நம்முடைய இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலும் எதிர்மறையான பதிவுகளே உள்ளன என்பது தெரிந்தது. பனையை பேய் வாழும் இடமாகவும் முனி போன்ற பயங்கர தெய்வங்களுடைய இடமாகவும்தான் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். பனைமரத்திற்கு நிழல் கிடையாது போன்ற எதிர்மறையான பழமொழிகள் உண்டு. பனைமரத்தின் அடியில் நின்றால் இடிவிழும் போன்று எச்சரிக்கைகள் செய்வார்கள்.

எங்களூரில் நுங்கு பனம்பழம் போன்றவை எல்லாம் நான் சின்னப்பையனாக இருக்கும்போதே வழக்கொழிந்துவிட்டன. பனம்பழம் சாப்பிடுவதைப் பற்றி என் அப்பா சொல்வதுண்டு, நான் சாப்பிட்டதே கிடையாது. ஆனால் பனை பற்றிய எதிர்மறையான பிம்பங்கள் மனதில் பதிந்துவிட்டன. அப்படிப் பதிந்த சித்திரங்களில் இருந்து எப்படி இந்நூல் வாசகனை விடுவிக்கிறது, எப்படி பனைமரத்தைப்பற்றிய ஓர் இனிய நினைவை உருவாக்குகிறது என்று அழகாக எழுதியிருந்தார்கள். நூலை வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

பாஸ்கர். எம்

panaimara-saalai_FrontImage_871

அன்புள்ள அண்ணன்,

அருண்மொழி அக்கா எழுதிய பனைமரச் சாலை குறிப்பு வாசித்து நெகிழ்ந்து போனேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதி கடந்து வந்த பாதை பனைமரச் சாலை. நான் இடையறாத பயணங்களின் ஊடாக சென்றுகொண்டிருப்பதனால் பனைமரச் சாலையை விஞ்சும் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. பனை மரச் சாலையின் சாகசங்கள் வேறு வகையில் என்னை இன்று தழுவியிருக்கின்றன. ஒருவகையில் பனைமரச் சாலையை கடந்து வந்துவிட்ட ஒரு புதிய பாதையில் நின்றுகொண்டிருக்கும் தருணம் இது.

ஆனால் வாழ்வில் நின்று திரும்பி பார்க்கவேண்டிய பிரமிப்புகள் அடங்கிய சாலை தான் அது. அக்காவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எண்ணி ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட ஒரு சொற் சித்திரம். பனை மரச் சாலையினை வாழ்த்தும் பாமாலை அது. எவைகளை நான் சிறப்பாக முன்வைத்திருக்கிறேன் என ஊக்கபடுத்தும் ஊக்கமருந்து. எனது குறைகளை தாயுள்ளத்துடன் சொல்லாமல் சொல்லி செல்லும் அன்பு ஒழுக்கு. கிட்டத்தட்ட என் இதயத்தின்  உள்ளிருக்கும் சிறு குழந்தையின்  ஆசைகளை வேடிக்கைப் பார்க்கும் ஒரு உடன்பிறவா அக்காவின் குதூகலம்.

முழுமையாக பனைமரச் சாலையினை வாசித்து அக்கா எழுதிய இக்கடிதம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. 15 வருட நமது குடும்ப நட்புறவு தாண்டி அவர்கள் எனது எழுத்து மீது காண்பித்த இக்கரிசனை பனை மீதான ஒரு பிரியமாக நிறைவடைகையில் வேறென்ன வேண்டும் மனமே என கேட்டுக்கொள்ள தோன்றுகின்றது. எனக்கு எப்போதும் மனதிற்குள் ஒரு நெருடல் உண்டு, நீங்கள் என் மீது கொண்டுள்ள பிரியத்தினாலும் அன்பினாலும்தான் எனது எழுத்துக்களை பொருட்படுத்துகிறீர்களோ என எண்ணிக்கொள்வேன்.  எழுத்தில் என்னை கரம்பிடித்து நடத்தும் அன்பாகவே அதனை நான் எடுத்துக்கொண்டேன். உங்கள் வீச்சு அப்படி.

ஆனால் அக்கா முழு புத்தகத்தையும் வேகமாக வாசித்து எழுதியிருக்கும் இந்த எதிர்வினை பல விதங்களில் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. நேர்மையான பதிவுகளை முதன்மையான வாசகர்கள் கண்டடைவார்கள் என்பது துவங்கி… கிறிஸ்துவை நான் எப்படி அருகுணர்கிறேனோ அதனை கண்டுகொள்ளும் விசால மனங்கள் நம்மிடம் உண்டு என்பது வரை. எனது பார்வைக்கோணத்தில் மிகச்சரியாக வந்தமர்ந்து ரசித்த வரிகள், நானே எழுதி நானே மறந்துபோன வரிகளை நினைவூட்டுதல், குழந்தை மனதிற்கு இணையேதும் இல்லை என ஆழமான நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் இவைகள்.

நான் உங்கள் வீட்டிற்கு வந்தால், அக்காவின் கைபட சில நிமிடங்களிலேயே தேனீர் வந்துவிடும். இது மிகப்பிரம்மாண்டமான விருந்து. உண்டமயக்கத்தினால் உடனே எழு(ம்ப)த முடியவில்லை.

மனம் நிறைந்த மகிழ்வுடன்

காட்சன் சாமுவேல்

சோர்பா    எனும்   கிரேக்கன் – அருண்மொழி நங்கை  

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55
அடுத்த கட்டுரைஆயிரங்கால்கள் – கடிதங்கள்