நீர்க்கூடல்நகர் – 5

Day 4-173

கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்கள். ஆனால் இந்தக்கதைகள் மிகமிக பிற்காலத்தையவை. சொல்லப்போனால் இந்தியாவில் பத்தாம்நூற்றாண்டுக்குப் பின்னர் பக்தி இயக்கம் பெரும் மக்களியக்கமாக ஆனபின்னர், எளியமக்கள் பல்லாயிரக்கணக்கில் இவ்விழாவில் பங்குகொள்ள வரத்தொடங்கியபின்னர், அவர்களின் புரிதலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆகவே பொதுவாக மிகமிக எளிமையானவை.

வரலாற்றுரீதியாக கும்பமேளாவை இரண்டு கோணத்தில்தான் புரிந்துகொள்ள முடியும். ஒன்று சோதிடக்கணக்கு. இந்தியாவில் சூரியவழிபாட்டு மதமான சௌரம் பெருமதமாக இருந்த ஒரு காலம் உண்டு. இன்று இந்தியாவில் இருக்கும் நவக்கிரகவழிபாடு போன்ற பல வழிபாடுகளும்  பொங்கல் போன்ற திருவிழாக்களும் சௌரத்துடன் தொடர்புடையவை. கும்பமேளா சௌரத்தின் திருவிழாவாக தொடங்கியிருக்கலாம்.

Day 4-157

கும்பமேளா நிகழ்வதற்கான சோதிடக்கணக்குகள் தொன்மையான விக்ரம சம்வத்ஸர பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. இவற்றுக்கான நாட்கணக்குகள் சிக்கலானவை. சூரியனும் சந்திரனும் சில குறிப்பிட்ட இடங்களில் அமையும் பொழுதுகளில் கும்பமேளாக்கள் அமைகின்றன. ஹரித்வார், அலஹாபாத், நாசிக், உஜ்ஜையினி ஆகிய இடங்களில் கும்பமேளாக்கள் நிகழ்கின்றன. ஆனால் இந்தியா முழுக்க வெவ்வேறு வகைகளில் கும்பமேளாக்களைப் போன்ற நீராட்டுவிழாக்கள் நிகழ்கின்றன. கும்பகோணம் மகாமகம், தாமிரபரணி புஷ்கரம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் இந்தியா முழுதிலுமே உள்ளன.

இவை அனைத்திலும் முக்கியமான சடங்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பொழுதில் நீராடுவதுதான். இச்சடங்கு எப்போது தொடங்கியது என்று அறுதியாகச் சொல்லமுடியாது. கும்பமேளா குறித்த செய்திகள் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலம் முதலே உள்ளன எனப்படுகிறது. சௌரம் பொலிவுகொண்டிருந்த காலம் அது. கிபி பதினோராம்நூற்றாண்டு வரைக்கும்கூட சௌரம் வல்லமையான தனி இந்துமதப்பிரிவாக நிலைகொண்டிருக்கிறது. இந்தியாவின் மையப்பகுதி ஒரிசாவிலிருந்து மத்தியப்பிரதேசம் வழியாக ராஜஸ்தான் வரை இன்றும் முக்கியமான சௌரமதத்து ஆலயங்கள் கொண்டதாகவே உள்ளது.

Day 4-179

இன்னொரு கோணம் சைவத்தின் ஆறுமதப்பிரிவுகளான காபாலிகம், காளாமுகம், மாவிரதம், வாமம், பாசுபதம், பைரவம் ஆகியவற்றைச் சேர்ந்த துறவிகள் தூநீராடும் பொழுதே கும்பமேளா. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்விடமும் வழிகளும் உண்டு. இந்தப்பொழுதில்தான் அவர்கள் ஒன்றாகக் கூடுகிறார்கள். அவர்கள் நீராடும் அதேபொழுதில் நீராடுவதென்பது பிறப்பறுத்து விடுதலை அளிப்பது என்பது நம்பிக்கையாக மாறியது. பின்னர் அனைத்து இந்துமதப்பிரிவுகளும் இதில் பங்கெடுக்கத் தொடங்கின.

இந்த ஆறு மதப்பிரிவினரும் இன்று தனித்தனியாக இல்லை. ஒட்டுமொத்தமாக இவர்கள் இன்று பிறரால் நாகாபாபாக்கள் என்றும் அகோரிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இன்று அவர்கள பற்பல தத்துவங்களும் பலவகையான துறவுநெறிகளும் கொண்ட மதப்பிரிவினர். இன்று அவர்களில் உள்ள குழுக்கள் அகாராக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த மாபெரும் விழாவின் மையநிகழ்வு என்பது நாகாபாபாக்களின் நீராட்டுதான்.

Day 4-151

காலப்போக்கில் கும்பமேளா இந்துமதத்தின் அனைத்துப்பிரிவினரும் ஒருவரோடொருவர் சந்தித்து உரையாடி முடிவுகளை எடுக்கும் ஒரு பொதுக்கூடுகையாக மாறியது. இந்தியாவே ஒரு நதிக்கரையில் கூடுவதுதான் அது. இன்றும் இந்தச் சடங்கு இந்த நிலையில்தான் நிகழ்கிறது. பலநூறு பிரிவுகளாக, பல ஆயிரம் ஞானவழிகளாக பிரிந்து பிரிந்து வளர்ந்துகொண்டிருக்கும் இந்துமரபின் மையமுடிச்சு என கும்பமேளாக்களை சொல்லலாம்.

தொடர்ச்சியாக ஒரு பிரச்சாரம் இந்தியாவில் செய்யப்படுகிறது, இந்துமதம் என்பது ஒன்று அல்ல. அது வெவ்வேறு தத்துவங்கள், தெய்வநம்பிக்கைகள், ஆசாரங்கள் ஆகியவற்றை அயலார் ஒன்றெனக் கண்டு ஒன்றாகத் தொகுத்துப் பார்த்ததன் வழியாக உருவானது என. இந்துமதம் முதலில் பாரசீகர்களாலும் இறுதியில் ஐரோப்பியராலும்தான் ஒன்றென்று காணப்பட்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டது என்னும் கூற்றை அறியாத இந்துக்கள் இல்லை என்னுமளவுக்கு அப்பிரச்சாரம் நிகழ்கிறது. இப்பிரச்சாரம் மிகமிகப் பிழையானது, உள்நோக்கம் கொண்டது என்பதற்கான கண்கூடான உதாரணம் கும்பமேளா.

Day5-136

இந்துமதத்தின் அத்தனைபிரிவுகளும் பலநூற்றாண்டுகளாக கங்கைக்கரையில் தங்களை ஒன்றாக தொகுத்துக்கொள்கின்றன.  ஒன்றாக முடிவுகளை எடுக்கின்றன. ஒன்றென்றே தங்களை முன்வைத்துக்கொள்கின்றன. பின்னர் தங்கள் தனியடையாளங்களுக்கு, தனிவழிகளுக்கு மீள்கின்றன. இவ்வண்ணம் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை நிகழும் பலநூறு மகாமகங்கள் புஷ்கரங்கள் வழியாக அவை ஒருங்கிணைவின் செய்தியை இந்தியப்பெருநிலமெங்கும் கொண்டுசெல்கின்றன.

இந்துமதமும் இந்தியப்பெருநிலமும் ஒன்றே என்பது இதன் இன்னொரு பாடம். இங்குள்ள நதிகள் மலைகளிலிருந்து இந்துமதத்தை பிரிக்க முடியாது. இங்குள்ள அத்தனை தீர்த்தங்களும் இந்துமதத்தின் குறியீடுகள், தெய்வநிலைகள். மகாபாரதத்தின் வனபர்வம் இந்தியாவின் பல ஆயிரம் தூநீர்களை பட்டியலிட்டு அதனூடாக ஓர் தெய்வநிலத்தை உருவகம் செய்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் இந்தத் தூநீராடல் வழியாக இந்திய நிலத்தை தங்கள் இறைத்தேடலின் பருவடிவமாக கண்டடைந்துகொண்டே இருக்கிறார்கள்.

Day5-139

கங்கைக்கு நாம் செல்கிறோம், கன்யாகுமரிக்கு அங்கிருந்து வருகிறார்கள். ஒருநாளில் இங்குள்ள ரயில்களில் எத்தனை ஆயிரம்பேர் இப்படி வடக்குநோக்கியும் தெற்குநோக்கியும் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்னும் கணக்கே சொல்லும் இன்றும் வாழும் இந்நம்பிக்கையின் ஆற்றலை. இந்தியாவெங்கும் குருதியோட்டம்போல தூநீராடலுக்குச் செல்பவர்கள் பயணம்செய்துகொண்டிருக்கிறார்கள். அழிந்து அழிந்து உருவாகும் செல்களைப்போல இங்கே தூநீராட்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கும்பமேளாவுக்கு மறுநாளும் பத்தரை மணிக்கே சென்றடைந்தோம். குளிர் இருந்தமையால் வெயில் தெரியவில்லை. மீண்டும் பெருகிச்சுழித்துக்கொண்டிருந்த மானுடவெள்ளத்தைப் பார்த்தபடி அந்தக் கூடாரநகரின் சாலைகளில் திரிந்தோம். கங்கைக்கரையில் சென்று அமர்ந்திருந்தோம். அங்கே மணல் மேல் சேறாகாமலிருக்கும்பொருட்டு புல் விரித்திருந்தமையால் அமர்வது வசதியாக இருந்தது.

கங்கைமேல் வெண்ணிற நீர்ப்புறாக்கள் எழுந்து எழுந்து அமைந்து இரைதேடக்காண்பது இனிய காட்சி. ஒழுக்கினூடாக அடித்துச்செல்லப்பட்டு ஓர் எல்லையை அடைந்ததும் எழுந்து பறந்துவந்து மீண்டும் அமர்ந்துகொண்டன அவை. காலம் கடந்த ஒரு பெருக்கு. அதில் நீந்தி விளையாடும் இவை காலத்தை அறியாதவை.

Day5-140

அன்று மாலை கங்கை ஆரத்தியை பார்த்தோம். காசியிலும் ஹரித்வாரிலும் நாளும் நிகழ்வது. கங்கையை போற்றிப்பாடும் பாடல்களை அரைமணிநேரம் பாடினார்கள். முதலில் வந்திருந்தவர்கள் இயல்பாக பாடத் தொடங்குகிறார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் பாடப்பாட அவர்கள் மிகத்தேர்ந்த பாடகர்கள் என்பது புரிந்தது. பொதுவாகவே வட இந்தியாவில் பஜனைப்பாடல்களை பாடுபவர்கள் மிகத்தேர்ச்சி கொண்டவர்கள். வடஇந்திய பஜனையில் இந்துஸ்தானி இசைக்குரிய உச்சநிலை குரல்வெளிப்பாடு உண்டு. அதை எளியபாடகர்கள் குரல் உடையாமல் பாடிவிடமுடியாது.

கங்கையை இறைவியாக எண்ணி செய்யப்படும் பூசை. அதில் முன்னின்று கலந்துகொள்ள சிலரை அழைத்தனர். அதில் ஒரு பெண் ஒருகையால் பூசைத்தட்டைச் சுழற்றியபடி மறுகையால் தன்னை செல்பேசியில் படமும் எடுத்துக்கொண்டிருந்தாள். அசட்டுத்தனத்தின் உச்சம். ஆனால் அங்கே பலர் செல்பேசியில் படம் எடுத்துக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டினர். பெரும்பாலும் அவர்கள் அனைவருமே படித்த உயர்குடியினர். எளிய கிராம மக்கள் மாறாத பக்திப்பெருக்குடன் அதில் ஈடுபட்டிருந்தார்கள்.

Day5-110

ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்தோம். நமாமி கங்கே என்று தலைப்பு. பரதநாட்டியம் நன்றாகவே நடந்தது. நடனமங்கை புகழ்பெற்ற யாமினி கிருஷ்ணமூர்த்தியின் மாணவி. ஆனால் முடியும்போது மேடையில் நாட்டியத்தினூடாக அரசியல்வாதி போன்ற ஒருவர், ஏறத்தாழ மோடி, தன் உதவியாளருடன் தோன்றினார். கைகளை நீட்டி ஏதோ சுட்டிக்காட்டினார், ஆணையிட்டார்.

முதலில் அது நாட்டியத்தின் ஊடாக அடுத்த நிகழ்ச்சிக்கு அளவெடுக்கும் அமைப்பாளரின் சுரணையின்மை என்றுதான் நினைத்தோம். பிறகு தெரிந்தது, அதுவும் நாட்டியமே என்று. கங்கையை தூய்மை செய்கிறார்களாம், அதை நாட்டியத்தில் புகுத்துகிறார்களாம். கொடுமை. அந்த அரசியல்வாதியை கங்கை தாள் பணிந்து வணங்க அவர் கங்கைக்கு ஆசி அளித்தபின் கிளம்பிச்சென்றார்.

Day5-101

‘இனி ஒருகணம் இங்கிருக்கக் கூடாது, கிளம்புவோம்” என்று கிருஷ்ணன் கொதித்தெழுந்தார். “இந்த பெர்ஃபார்மிங் ஆர்ட்டிஸ்டுகளுக்கே சொரணை கிடையாது சார். சும்மா பிராக்டீஸை வச்சு ஒப்பேத்துறாங்க… ஆர்ட்டிஸ்டிக் யூனிட்டின்னா என்னான்னே தெரியாது” என விளாச ஆரம்பித்தார். ஒவ்வாமையை மறக்க இன்னொரு நடனநிகழ்ச்சியை கொஞ்சநேரம் பார்த்து சமனப்படுத்திக்கொண்டோம்.

நடுவே கே.பி.வினோதும் பெங்களூர் கிருஷ்ணனும் சென்னை செந்திலும் எங்கோ சென்று மீண்டனர். ஏற்கெனவே பெங்களூர் கிருஷ்ணன் ஒரு அகோரிபாபாவைக் கண்டு அவரை வணங்கி ஒரு இழுப்பு இழுத்துவிட்டு வந்திருந்தார். இம்முறை மற்றவர்களும் சென்றிருந்தார்கள்.

கஞ்சாவை சாதாரணமாக இழுத்தால் ஒன்றும் நிகழாது. அதை நெடுநேரம் நுரையீரலில் வைத்திருக்கவேண்டும். அது குருதியில் கலந்து உள்ளே செல்லவேண்டும். அதன்பின்னரே மெல்லமெல்ல விளைவுகள் தெரியத் தொடங்கும். நண்பர்கள் சும்மா முகர்ந்து பார்த்திருந்தார்கள். ஆனால் அதற்கே பரவசம், தாங்களே நாகா பாபாக்களாக ஆகிவிட்டதுபோல.

Day5-144

ஒரு நாகாபாபாவின் குடிலுக்குள் கொஞ்சநேரம் சென்றால் என்ன என்று தோன்றியது. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்ய ஒரு நாகாபாபாவை வணங்கி சென்று அருகே அமர்ந்தோம். நாகாபாபாக்கள் சாதாரணமான நீலநிற நைலான் தார்ப்பாயை இழுத்துக்கட்டி கூடாரம் அமைத்து கீழே நைலான் பாய் விரித்து அமர்ந்திருக்கிறார்கள். கும்பமேளா வளாகம் முழுக்க ஏராளமான நாகாபாபாக்களின் கூடாரங்களை காணலாம். அவர்கள் தனித்தனி அகாராக்களாகவே ஓரிடத்தில் முகாமிட்டிருப்பார்கள். அகாரா என்றாலே முகாம் என்றுதான் பொருள்.  ஜூனா அகாரா என்பதே தொன்மையானது, பெரியது என்கிறார்கள்.

நாகாபாபாக்கள் பலவகை. ஆடை அணிந்தவர்கள் உண்டு, அவர்கள் சற்றே கீழ்நிலையில் இருப்பவர்கள். முற்றாகவே ஆடைகளைத் துறந்து உடலெங்கும் சாம்பல்பூசி அமர்ந்திருப்பவரே தீக்ஷை பெற்று முழுமையை நோக்கிச்செல்லும் நாகாபாபா. அவருக்கு துறவிகள் நடுவே உள்ள இடம்  சிற்றரசர்கள் நடுவே பேரரசர்களுக்குரியது. பிற துறவிகள் அவரை மறு எண்ணமின்றி பணிந்து வணங்குவதை காணலாம். எங்கும் ஆடையற்ற, மண்படிந்த மேனியராகவே அவர்கள் செல்கிறார்கள். ஆடை என்பதை அவர்கள் அறிந்ததே இல்லை என்பதைப்போல.

Day5-145

நாகா பாபாக்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சா புகைப்பார்கள்.  கஞ்சா என்பது எதுவாக இருக்கிறோமோ அதை பெரிதாக்குவது. ஆகவே அது தியானத்திற்கு உதவும் சிவமூலியாகவே நம் மரபில் எப்போதும் கருதப்பட்டு வருகிறது. அது சிவனின் கொடை என்பதனால் பெரும்பாலும் கேட்டால் உடனே நமக்கும் இழுப்பதற்கு கொடுத்துவிடுவார்கள்.

நாம் துறவு என்று சொல்லும் எந்த ஆசாரங்களுக்கும் கட்டுப்படாதவர்கள் நாகா பாபாக்கள். சுத்தம், ஒழுங்கு, நாகரீகம் என எதையும் அவர்கள்மேல் போட்டு புரிந்துகொள்ளமுடியாது. நாம் வாழும் இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்றாகவே வெளியே சென்றுவிட்டவர்கள். அவர்களிலேயே இன்று எளிய பிச்சைக்காரர்களும் வித்தைக்காரர்களும் கலந்துள்ளனர். ஆனால் மிகமிக எளிதாக வேறுபாட்டை கண்டுகொள்ள முடியும்.

Day5-142

இந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.

இன்று இந்தியாவின் மரபான உள்ளம் கொண்ட எளிய இந்துக்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ளமுடியும். அல்லது ஹிப்பிகளை, வரலாற்றில் மைய நாகரீகத்தை எதிர்க்கும் அறிவியக்கங்களின் பங்களிப்பை, பண்பாட்டில் புறனடையாளர்களின் இடத்தை  அறிந்த ஐரோப்பியர்களால் புரிந்துகொள்ள முடியும்.

Day5-129

ஒரு பண்பாட்டின் உச்சியில் அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் முழுக்க நிராகரித்த ஒருவர் அமர்ந்திருப்பதென்பது பிரமிப்பூட்டும் முரண்பாடு. விவேகானந்தர் அவருடைய உரை ஒன்றில், உலகின் மாபெரும் செல்வக்களஞ்சியமாக இந்தியா இருந்த காலகட்டத்தில், சக்கரவர்த்திகளால் இந்நிலம் ஆளப்பட்டபோது, இதன் உச்சியில் அமர்ந்திருந்தவர்கள் இங்கே எனக்கு எதுவுமே தேவையில்லை, என்று சொன்ன நாடோடிப் பிச்சைக்காரர்களே என்று சொல்கிறார். நம் பண்பாட்டின் சிம்மாசனம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

துறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர். இந்துமதத்திலும் சமண பௌத்த மதங்களிலும் துறவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்ச இடத்தை புரிந்துகொண்டாலொழிய இந்த மதங்களின் எந்தக் கொள்கையையும் உள்வாங்க முடியாது.

Day5-143

நாகா பாபாக்கள் எதையும் செய்யலாம், ஆனால் அவர்களே ஏற்றுக்கொண்ட கடுநோன்பு அவர்களுடையது. அவர்கள் கொட்டாங்கச்சியில் உணவுண்ணவேண்டும். ஆடை துறக்கவேண்டும். இவ்வுலகின் எந்த இன்பங்களையும் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது.

குளிர், வெப்பம், வலி, நோய், பசி என்னும் ஐந்து உடல்துன்பங்களை அவர்கள் கடக்கவேண்டும். ஆணவம், சினம், ஐயம், அச்சம், அருவருப்பு என்னும் ஐந்து உளநிலைகளை கடக்கவேண்டும். இந்தப் பத்து தளைகளால் கட்டுண்டு, இந்த பத்து திரைகளால் மூடப்பட்டிருக்கும் மெய்மையை அதன்பின்னர் அவர்கள் காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்!” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.

Day 4-156

நாங்கள் சென்ற நாகாபாபா விறகுமூட்டி தீயிட்டிருந்தார். கூடார அறைக்குள் கஞ்சாப்புகையும் விறகுப்புகையும் நிறைந்திருந்தது. எங்களுக்கு அவரே பால்காய்ச்சி டீ போட்டு அளித்தார். ஊரிலிருந்து கிளம்பிய பின் அருந்திய மகத்தான டீ அது. அந்த நெருப்பிலிருந்தே சாம்பலை அள்ளி நெற்றியிலிட்டு பிடரியில் மெல்ல மூன்றுமுறை அறைந்து தலையில் கைவைத்து வாழ்த்தளித்தார்.

அவரிடம் பேசியபடி அங்கே சற்றுநேரம் அமர்ந்திருந்தோம். கஞ்சா சிலும்பியை பற்றவைத்து ஆழ இழுத்து புகைவிட்டார். நண்பர்களும் வாங்கி இழுத்தனர். ஓங்கூர் சாமியை ஜெயகாந்தன் வர்ணிப்பதுபோல ‘வெட்டவெளியில் இல்லையென்றிருக்கும்’ நிலையை அவர் அடைந்தார். முகிலுக்குள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்துவிட்டு வணங்கி கிளம்பினோம்.

Day5-102

என்ன அடைந்தோம்? அதை சொல்ல முடியாது. நான் முதன்மையாக மிகமிக அரிய மனிதர் ஒருவரின் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பெருங்கல்வி கொண்டவர்கள், கனிந்தவர்கள் அடையும் ஓர் உச்சத்தில் இருப்பவர் என. மிகச்சில நிமிடங்களிலேயே ஆடையற்ற உடலுடன் அஞ்சத்தக்க கோலத்துடன் ஒருவர் அங்கே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது ஓரு வியப்பு. இனிய, கம்பீரமான ஆளுமை ஒருவரை அகம் உணரத் தொடங்குகிறது. அந்த உணர்வு ஓரு தொடக்கம். அங்கிருந்தே அவரை நோக்கி செல்லவேண்டும்

இரவில் குளிர் ஏறத்தொடங்கியதும் ஆட்டோவில் எங்களை அடுக்கிக்கொண்டு விடுதியறைக்கு திரும்பி வந்தோம். இருளில் வந்துகொண்டிருக்கையில் கங்கையை சற்று மேலிருந்து நோக்குவது ஓர் அழகறிதல். பல்லாயிரம் விளக்குகள் சூழ்ந்திருக்க சுடர்சூடி வளைந்து கிடந்தது தொல்நதி. ராமனும் கிருஷ்ணனும் தொட்டிருக்கக்கூடிய நதி. எவர் பெயரை எல்லாம் சொல்லி மெய்மையை இன்று உணர்கிறோமோ அனைவருமே இறங்கி நீராடிய அழியாப் பெருக்கு.

முந்தைய கட்டுரைதஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-51