தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்

dost

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழிலும் சரி, பொதுவாக இந்திய இலக்கியச்சூழலிலும் சரி , எழுதவரும் எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், டோஸ்டோயெவ்ஸ்கி படைப்புக்கள் வழியாகவே ‘வயசுக்கு’ வருகிறார்கள். அவர்களை வாசிக்காதவர்கள் கடைசிவரை அமெச்சூர்களாகவே நீடிக்கிறார்கள். இது வாசகர்களுக்கும் பொருந்துவது. அவர்களை வாசிக்காதவரை உண்மையில் எழுத்தின் இயல்பென்ன என்றும் கடைசி இலக்கு என்ன என்றும் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. இவர்களுக்குச் சமானமான கிளாஸிக்கல் எழுத்தாளர்கள் மேற்கே மேலும்பலர் உண்டுதான். ஆனால் அவர்கள் உண்மையில் கிழக்குநாட்டு மனம்கொண்டவர்களுக்கு பெரிதாக தோன்றுவதில்லை. ஏனென்றால் அவர்களின் சிக்கல்கள் எல்லாமே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் உருவான மனநெருக்கடிகளையே பேசுகின்றன. சுதந்திரம் தனிமனிதன் போன்ற கதைக்கருக்களை விவாதிக்கின்றன. பெரும்பாலும் மனச்சிக்கலைநோக்கிச் செல்கின்றன. அவர்கள் உருவாக்கும் இமேஜ்களும் கொஞ்சம் அன்னியமானவையாக உள்ளன.

ஆனால் டோஸ்டேயெவ்ஸ்கி டால்ஸ்டாய் இருவரும் இந்தியமனசுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். பதினெட்டாம்நூற்றாண்டு முதல் இந்தியவாழ்க்கை மதம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் கொண்டிருக்கும் உறவும்,பாவம் புண்ணியம் என்பதைக் கையாள்வதற்கு கண்டடைந்த இக்கட்டுகளும் இவர்களின் படைப்புக்களில் பேசப்பட்டுள்ளன. விஷால்ராஜா தொடர்ச்சியாக இந்த கிளாஸிக்குகளை வாசித்து தத்துவார்த்தரீதியாக அவற்றை உள்வாங்கிக்கொள்ள முயல்கிறார். ஒரேசமயம் தத்துவக்கோணத்திலும் மறுபக்கம் தனிப்பட்டமுறையிலும் அவர் இந்த ப்படைப்புகளை அணுகி ஆராய்கிறார். அவை டோஸ்டேயெவ்ஸ்கியை மட்டுமல்லாமல் விஷால்ராஜாவையும் புரிந்துகொள்ள மிகவும் உதவக்கூடியவையாக உள்ளன.

டோஸ்டேயெவ்ஸ்கியை அவர் நவீன காலகட்டத்தை அதன் சரிவு திசையில் நின்று தீவிரமாக எதிர்கொண்ட படைப்பாளிகளில் தாஸ்தாயெவ்ஸ்கி முக்கியமானவர். முன்னோடியும்கூட. இறுக்கமும் தன்முனைப்பும்கூடிய நவீன காலகட்டத்தின் பகுத்தறிவுவாதம் தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. என சரியாகவே வரையறை செய்கிறார். டோஸ்டேயெவ்ஸ்கி அன்று உருவாகி வந்துகொண்டிருந்த நவீனக்காலகட்டத்தை வீழ்ச்சியின் காலகட்டமாகவே பார்க்கிறார். அது மனிதனின் சுயத்துக்கு அதிக இடமளித்து அவனை ஆணவம்கொண்டவனாக ஆக்கி கடவுளிடமிருந்து அகற்றுகிறது என அவர் நினைக்கிறார். ஆகவே அவன் தவறுகளை நியாயப்படுத்திவிடமுடியும் என்ற நிலையை அடைகிறான். இந்த புத்திபூர்வ மனிதனுக்காக கிறிஸ்துவை உடைத்து மறுகட்டுமானம் செய்வதையே இந்நாவல்களில் டோஸ்டேயெவ்ஸ்கி செய்கிறார். அவர் ஒரு இருபத்தொன்றாம்நூற்றாண்டு ஐக்கானை உருவாக்கிக்கொள்கிறார். அதை நோக்கி விஷால்ராஜா மிகச்சரியாகவே சென்றடைகிறார்.

vishal

இருபதாம்நூற்றாண்டின் புத்திசார்ந்த மனிதன் தன் நன்மைக்காகவோ ஆணவத்துக்காகவோ பெரும்பழிகளைச் செய்யாதவனாக இருப்பது எப்படி? அல்லது இப்படிச் சொல்லலாம், எதைநம்பி நாம் தப்புசரிகளை அறுதியாக வகுத்துக்கொள்ளவேண்டும்? தப்புசரிகள் வரையறுக்கப்படாத இடங்களில் வாழ்வது சாமானியர்களைவிட அறிவுஜீவிகளுக்கே கடினமானது. ஏனென்றால் எந்த தப்புகளையும் அறிவுஜீவிகள் நியாயப்படுத்திவிடமுடியும். ரொட்டித் துண்டுகளைத் தாண்டி மனிதர்களுக்குச் சமூகப் பாத்திரங்களும், மேன்மையான அர்த்தங்களும், கதைகளும், கடவுள்களும் தேவையாக இருப்பது நோக்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் வெற்றிடத்தில் படியும் வெறுப்பிலிருந்து தப்பித்துக் கொலை செய்யாமல் இருக்கவுமே எனலாம் என்று விஷால்ராஜா அதை வரையறை செய்கிறார்.

இரு கதாபாத்திரங்களைச் சரியாகவே ஒப்பிட்டு அந்த இடத்தை வந்தடைகிறார் விஷால் ராஜா. ஸ்விட்ரிகைலாஃப் ‘அந்த உலகத்திற்காக’ பாவங்களிலிருந்து மீள நினைக்கிறான். ரஸ்கால்நிகாஃப் இந்த உலகுக்காகவே பாவங்களிலிருந்து மீளநினைக்கிறான். அந்தவகையில் மார்ட்டின் ஹைடெக்கர் முதல் நீட்சே வரை சென்றடைந்த தனிமனிதன் தானே உருவாக்கிக்கொள்ளவேண்டிய அறம் என்ற புள்ளியைநோக்கிச் செல்கின்றன டோஸ்டேயெவ்ஸ்கியின் நாவல்கள். மிகச்செறிவான கட்டுரை. நல்லமொழியில் கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு கட்டுரையை இளம் எழுத்தாளரின் எழுத்தின்வழியாகப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

எம்.சந்திரசேகர்

பாரஞ்சுமக்கிறவர்கள்  (அசடன் நாவலை முன்வைத்து)  – விஷால்ராஜா

நவீன நாவல் -விஷால்ராஜா

முந்தைய கட்டுரைபத்மபிரபா நினைவு விருது
அடுத்த கட்டுரைநீர்க்கூடல்நகர் – 5