பார்பாரிகன் சொன்னான்: விந்தையான தனிமைகளால் மானுடர் நோயுறுகிறார்கள். தனிமைநோய் ஒரு பருவடிவ ஆளுமைபோல் உடனிருக்கிறது. உள்ளமும், உணர்வுகளும், எண்ணங்களும், அவற்றை இயற்றும் புலன்களும் கொண்டதாக. அதிலிருந்து தப்ப இயல்வதில்லை. அதனுடன் உரையாட முடியும். ஆகவே பூசலிட்டு அகற்ற அவர்கள் முயலக்கூடும். அதனுடன் இணைந்து தழுவி உளம்மயங்கவும் கூடும். எந்நிலையிலும் அது அகன்று செல்வதில்லை. அது நம்மிலிருந்து எழுந்து நமது இயல்புகள் அனைத்தையும் தானும் அடைந்து நம் பேருருவாகவே மாறிவிட்டிருப்பது. ஒரு போதும் நம்மால் அதை வெல்ல இயலாது.
நம்மை அதற்கு முற்றளிக்கலாம். அதன் காலடியில் தலை வைத்து ஓங்கிய கொலைவாளுக்கு கழுத்தை காட்டி ‘எந்தையே, இதோ என் கொடை’ எனலாம். முற்றளித்தவரை அது தன் உள்ளங்கைகளில் ஏந்திக்கொள்கிறது. ‘நீ என் மைந்தன்!’ என்கிறது. ‘உனக்கு அனைத்தையும் அளிப்பேன்’ என்கிறது. பல்லாயிரம் கைவிரித்து பெரும் படைக்கலங்களை ஏந்தி உடன் நிற்கிறது. நமக்கென களம் காண்கிறது. நம் எதிரிகளிடம் அச்சத்தை உருவாக்குகிறது. நமக்கு அணுக்கமானவரை நம்மேல் உளம் திரியச்செய்கிறது.
அன்னையென கனிவது அது. தந்தையென நம்மை காப்பது. தோழன் என உடனிருப்பது. நாம் விழைவதனைத்தையும் அளிக்கிறது. எண்ணம் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்கெனவே சென்று நின்றிருக்கிறது. ஒவ்வொன்றையும் அள்ளி நம் முன்வைத்து ‘இதோ! இதோ!’ என்கிறது. அதன்பின் நம்மிடம் வினவுகிறது ‘இன்னும் என்ன? இன்னும் எதுவரை?’ எண்ணி ஏங்கி இறைஞ்சுகிறோம், திரும்பிவிடவேண்டும் என்று. நாம் அளித்தவற்றில் ஒரு துளியேனும் திரும்ப வேண்டும் என்று. நான் என எஞ்சும் ஒரு சிறு பகுதியையாவது. புன்னகையுடன் ‘கொண்டவற்றை கொடுப்பதில்லை தெய்வங்கள்’ என்று அது சொல்கிறது. ‘கால வடிவானவை தெய்வங்கள், அறிக!’ என்று நகைக்கிறது.
தோழரே, பேருருக்கொண்டவர்கள் தனித்தவர்கள். பெருங்கொடை பெற்றவர்கள் தனிமையால் நோயுற்றவர்கள். தெய்வஅருள் பெற்றவர்கள் தங்கள் வாழ்விடங்களைவிட பெரிதானவர்கள். ஆகவே புதுநிலம் தேடுபவர்கள். அடைந்தவற்றைவிட விரிந்தவர்கள். ஆகவே புதியவற்றை அறிபவர்கள். குருதிச்சுற்றத்திலும் குலப்பெருக்கிலும் விழாக்களத்திலும்கூட தனித்தவர்கள். தனித்தவர்கள் நோயுற்றவர்கள். நோயுற்றவர்கள் நோயுற்றவர்களுடன் மோதும் ஒரு பெரும் நோய்க்களம் இப்புவி. பசியற்றவர்கள் உண்ண முடியாதவர்களைக் கொன்று அங்கே வெறியாடுகிறார்கள். பெருந்தனிமைகள் சுழல்காற்றுகள்போல் இந்தப் பெருநிலமெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் அள்ளி இடம் மாற்றுகின்றன. எழுப்பப்பட்டவற்றை இடிக்கின்றன. இடிபாடுகளை அள்ளிக்குவித்து கோபுரங்களாக்குகின்றன. பெருந்தனிமைகள் கொண்டு இப்புவியில் நாற்களம் ஆடுகின்றது ஊழ்.
தன் தனிமை ஒரு நற்கொடை என எண்ணுகிறார்கள் இளமைந்தர். தான் தான் என தருக்கி நிமிர அதுவே வழிகோலுகிறது. பிறரை அப்பால் நின்று நோக்க, இளிவரல் கொள்ள, முற்றொதுக்கி தங்களுக்குள் ஆழ, தங்கள் ஆழங்களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நோக்கி ‘ஆம், இதுவும் நான்!’ என்று பெருமிதம் கொள்ள அவர்களுக்கு அது வாய்ப்பளிக்கிறது. பின்னர் அத்தனிமை தன் ஆயிரம் கைகளால் தன்னைச் சூழ்ந்து கவ்விக்கொண்டிருப்பதை உணர்கிறார்கள். அதிலிருந்து மீள தன்னால் இயலாதோ என்று ஐயுற்ற பின் தன் வாயில்களில் ஒன்றை மெல்ல திறக்கிறார்கள். அதனூடாக ஐயத்துடன், தயக்கத்துடன் வெளியே எட்டிப்பார்த்து ‘இங்குளேன்’ என்கிறார்கள். ‘அங்கெவர்?’ என வினவுகிறார்கள். ‘வருக!’ என கைகாட்டுகிறார்கள். ‘அருகணைக!’ என்று கூவுகிறார்கள். ‘எவர் அங்கே? எங்கிருக்கிறீர்?’ என்று கதறுகிறார்கள். ‘எவரேனும் இருக்கிறீர்களா?’ என்று உளம் விம்முகிறார்கள்.
எவருமில்லை என அறிந்து அகம் கரைந்து விழிநீர் சிந்துகிறார்கள். எவருமில்லையே என வஞ்சம் கொண்டு பற்களைக் கடித்து மீண்டும் தங்களை இறுக்கிக்கொள்கிறார்கள். எவரும் தேவையில்லை என்று வீம்பு கொண்டு மீண்டும் தருக்கி எழுகிறார்கள். எவருமற்றவன் நான் என்று தனக்கே சொல்லிக்கொள்கிறார்கள். அதை ஊழ்க நுண்சொல்லென ஓராயிரம் முறை உரைத்து பெருகி எழுகிறார்கள். எவருமற்றவனாகிய நான் எனும் சொல்லிலிருந்து எவருக்குமற்றவன் நான் என சென்றடைகிறார்கள். ஏதுமற்றவனாக ஆகிறார்கள். பிற அனைவரையும் ஆக்கி புரந்து அழிப்பவன் என்று தன்னை சமைத்துக்கொள்கிறார்கள்.
மாமானுடர் இரக்கத்திற்குரியவர்கள். தெய்வங்களாடும் களத்தில் தெரியாமல் சென்று சிக்கிக்கொண்டவர்கள். மாமானுடர் புயல்களில் ஏறி பெருவிசை கொண்டுவிட்டதாக எண்ணித் தருக்கும் எளிய சருகுகள். மாமானுடர் தாங்கள் எதுவென்றே அறிந்திராத எதையோ கட்டும் பொருட்டு கல்லும் மணலுமென்றாகி தன்னை ஒப்புக்கொடுத்தவர்கள். அச்சிற்பியை உணர்ந்தாலும் அக்கைகளை அறியும் எளிமை அற்றவர்கள். மாமானுடர் இங்கு வென்று எழுந்து சொல்லில் நிறைபவர்கள். பிறிதெங்கோ முற்றிலும் தோற்றவர்கள்.
இப்புவி இங்கு வகுக்கப்பட்ட வாழ்க்கையை நினைவுகூர்வதில்லை. எல்லைகளை கடந்து சென்று பெருவீழ்ச்சிகளை அடைந்தவர்களை சொல்லில் நிலைநிறுத்துகிறது. அவர்களை நோக்கி எழும் பொருட்டு ஒவ்வொரு குழவிக்கும் ஆணையிடுகிறது. தன் எளிமையால் எல்லையுணர்ந்தவனுக்கு வானும் நீரும் ஒளியும் காற்றும் இன்னுணவுகளும் அளிக்கப்படுகின்றன. நல்லிசையும் நறுமணங்களும் கனிந்த சொற்களும் குளிர்ந்த தென்றலும் அவனை சூழ்ந்துள்ளன. தன் எல்லைக்கு அப்பால் ஓர் இலக்கை நோக்கிவிட்டவனுக்கு கடத்தலெனும் எளிய இன்பத்திற்கு அப்பால் ஏதுமில்லை. தனிமை அவனை நோக்கும் கணம் வரை மட்டுமே அவன் வாழ்கிறான். தனிமையை அறிந்தபின் அவன் தனிமையையே சுவை என, மணம் என, இசை என, தண்மை என, அழகென அறிகிறான். காற்றென, நீரென, ஒளியென, வானென, மண்ணென அவனைச் சூழ்ந்திருக்கிறது அது.
தனிமை கொண்டவன் நோயுற்றவன். தனிமையென உருக்கொண்டு மண்ணுக்கு அடியிலிருந்து எழுந்து வரும் அக்கொடுந்தெய்வத்தை வணங்குக! ஆயிரம் கைகள் விரித்து, பல்லாயிரம் படைக்கலங்கள் ஏந்தி வரும் கருவிழிக் கன்னி அவள். குருதிச் சிவப்பு கொண்ட உதடுகளும் தண்துளியெனச் சொற்களும் இசையிமிழும் சிலம்புகளும் கொண்டவள். தென்றல் என தழுவுபவள். செவிகளில் சிரிப்பவள். துயில்கையில் முத்தமிடுபவள். கனவுகளில் காமம் விளையாடுபவள். வேர்களை தவம் செய்ய வைப்பவள் அவள். விதைகளை காத்திருக்கப் பணிப்பவள். மண்புழுக்களை ஒருகணமும் ஓயாது நெளிய வைப்பவள். ஆழத்து ஊற்றுகளில் தண்மை சேர்ப்பவள். அதற்கும் அப்பால் ஆழத்தில் அடங்கா பெருங்கனலென நிறைந்திருப்பவள். அவள் வாழ்க!
பார்பாரிகன் சொன்னான்: பூரிசிரவஸ் என்றும் உணர்ந்ததுதான் அத்தனிமை. ஆனால் அன்று புலரியில் அது இருளெனச் சூழ்ந்து, நீரெனச் செறிந்து, பாறையென இறுகி அவனை தன்னில் ஓர் வடுவென பதித்து அசைவிலாதாக்கி வைத்திருந்தது. புலரியில் எத்தனை பொழுது அங்கு நின்றிருந்தானென்று அவன் அறியவில்லை. குருக்ஷேத்ரத்தின் வெற்று நடுநிலத்திற்கு அப்பால் அவன் மெல்லிய அசைவொன்றை கண்டான். அது சாத்யகி என்று புலன்களுக்கு அப்பால் இருந்த தன்னுணர்வால் அறிந்தான். நோக்கு தொடும் அளவுக்கு ஒளியிருக்கவில்லை. ஆயினும் அவன் சாத்யகியின் நோக்கை உணர்ந்தான். அதன் பின்னரே தன் தனிமையை உணர்ந்து கலைந்தான். ஒரு சொல்லும் இல்லாத நிலையை அவன் அகம் அடைந்திருந்தது. சொற்களே மகிழ்வும் துயரும் என அவன் அறிந்திருந்தான்.
அப்பால் தனிமையின் திரையில் வரையப்பட்டு நின்ற புரவியை நோக்கி சென்று அதில் ஏறி அமர்ந்து அதன் கழுத்தை மெல்ல தட்டி வழக்கமான இடத்திற்கென உணர்த்திய பின்னர் மீண்டான். கடுந்துயில்போல் அவன் மேல் தனிமை பொழிந்து அழுத்தி உடல் எடைகொள்ளச் செய்தது. தசைகள் தளர, கைகால்கள் ஓய, அவன் புரவி மேல் படிந்தான். சீரான தாளத்துடன் கால்களை எடுத்து வைத்து புரவி சென்றுகொண்டிருந்தது. அவன் மீண்டும் தன்னை உணர்ந்தபோது விந்தையான ஓர் தனி எண்ணம் தன்னுள் எழுந்திருப்பதை கண்டான். காலையில் கலம் திறந்து நோக்குகையில் பூத்திருக்கும் முல்லை மொட்டுகள்போல. விந்தையும் விலக்கமுடியாத உண்மையுமான ஒன்று.
அவன் அதை குனிந்து நோக்கிக்கொண்டிருந்தான். நெடுநேரம் அவ்வெண்ணத்தின் விந்தையாலேயே அது முழுதுற உணர முடியாததாக இருந்தது. பின்னர் விலகி அதை உணர்ந்தபோது திடுக்கிட்டு சூழ்ந்திருந்த கௌரவப் பெரும்படையின் எப்பகுதியினரேனும் அதை உணர்ந்துகொள்கிறார்களா என்பதை நோக்கினான். பின்னர் நீள்மூச்சுவிட்டு அவ்வெண்ணத்தை ஒவ்வொரு சொல்லாக பகுத்தான். அனைத்து சொற்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒற்றை ஆணையென்றாகி அவன் முன் நின்றன. ‘விட்டுச்செல்க!’ எதை? இப்போரையா? இங்கிருக்கும் அனைத்து கடமைகளையும். இதுநாள் வரை கொண்டிருந்த வஞ்சங்களையும் விழைவுகளையும் பற்றுகளையும். இங்குள அனைவரையும். இவ்வுலகை. இதோ பல்லாயிரம் கோடி முகம் கொண்டு என்னைச் சூழ்ந்து அலைக்கும் காலத்தை. விட்டுச்செல்க! பிறிதொரு இடத்திற்கு. பிறிதொரு காலத்திற்கு.
ஒருபோதும் அப்படி ஓர் ஆணை தன்னுள்ளிருந்து முன்னர் எழுந்ததில்லை என்று உணர்ந்தான். ஒவ்வொரு காலையும் புவியில் பேரழகுகளால் ஈர்க்கப்படுபவனாகவே அவன் இருந்திருக்கிறான். புரவியேறி நகரின் புழுதி படிந்த தெருக்களினூடாக, குளிர்ந்த பனிப்படலங்களை சூடி நின்றிருக்கும் மலைகளை நோக்கியபடி செல்லும்போது இருத்தல்போல் இனிதான பிறிதொன்றில்லை என்றே உணர்ந்திருக்கிறான். இல்லையென்றாவதைக் குறித்து ஒருகணமும் எண்ணியதில்லை. விட்டுச்செல்வதைப்பற்றி ஒருசொல்லும் எழுந்ததில்லை அவனுள். ஆனால் எண்ணத்தொடங்கிய நாள் முதல் என்றும் அவனுடன் இருந்ததுபோல் தோன்றியது அப்போது.
விட்டுச்செல்க! எவருடைய ஆணை அது? மானுடரை ஆளும் தெய்வங்களின் ஆணையா? ஒவ்வொரு மனிதருக்கும் தெய்வங்களால் படைக்கப்பட்டு நிழலென்றும் கனவென்றும் உடனுறையும் தனித்தெய்வமா? அதற்கும் பூரிசிரவஸ் என்றே பெயர் என்கின்றன மலைநம்பிக்கைகள். அதற்கு பெயரில்லை, ஆனால் அவன் பெயரை அது மெல்ல மெல்ல தான் இழுத்து எடுத்துக்கொள்கிறது. அவனுடைய ஆடைகளில், படைக்கலங்களில், பீடங்களில், உண்கலங்களில் அது குடியேறுகிறது. ஆகவேதான் மறைந்தவனின் ஆடைகளையும் படைக்கலங்களையும் பீடங்களையும் அவனுடன் சேர்த்தே மண்மறைவு செய்கிறார்கள். அது தன்னுள்ளிருந்து எழுந்த ஆணை என்று அவன் உணர்ந்தான். எது எண்ணங்களாகவும் கனவுகளாகவும் அவனுள் விழிப்பிலும் கனவிலும் கணமொழியாது எழுந்துகொண்டிருந்ததோ அது.
அவன் அச்சொற்களை இருளில் கண்முன் என பார்த்தான். விட்டுச்செல்! விட்டுச்செல்! விட்டுச்செல்! அது தனக்குத்தானே என உரைத்துக்கொண்டிருந்தது. கூரைப் பனித்துளி சொட்டுவதுபோல. சூழ்ந்திருந்த அனைத்து ஒலிகளையும் தன் தாளத்திற்கு அது மாற்றியது. விட்டுச்செல்! விட்டுச்செல்! அந்த ஊழ்க நுண்சொல்லால் அவன் மெல்லிய உளமயக்கடைந்தான். அவனுள்ளிருந்த அனைத்து சலிப்புகளையும், சோர்வுகளையும், நம்பிக்கை இழப்புகளையும், கசப்புகளையும், ஆழத்துத் துயர்களையும் அது அகற்றியது. இனிய நினைவாக, மேலும் இனிய எதிர்பார்ப்பாக அது மாறியது. ஒவ்வொரு அடியாலும் ஒவ்வொரு கணத்தாலும் ஒவ்வொரு எண்ணங்களினூடாகவும் தான் அதை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். அதை நோக்கியன்றி பிறிதொரு வழியே இல்லை. புன்னகை முகமெங்கும் மலர அவனறிந்தான், தன்னை இளமையில் ஆட்கொண்டு, முழுதழுத்திச் சூழ்ந்துகொண்டு, பிறிதொன்று இலாதாக்கிய அப்பெருந்தனிமையிலிருந்து விடுதலை அவ்வாறு மட்டுமே நிகழ இயலும் என.
அவன் அஸ்வத்தாமனின் படைப்பிரிவை அடைந்தபோது முகம் மலர புன்னகை கொண்டிருந்தான். அஸ்வத்தாமன் “எங்கு சென்று வருகிறீர்?” என்றான். “எல்லைக்காவல்படை வரைக்கும் சென்றேன். இறுதியாக அனைத்தையும் ஒருமுறை நோக்கி மீண்டேன்” என்றான். “ஆம், அனைத்தும் ஒருங்கிவிட்டன. இன்னும் அரை நாழிகைப் பொழுது, புலரிமுரசு ஒலிக்கலாகும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “பிழை ஏதும் உண்டா, எங்கேனும் பழுதிருக்கிறதா என்று மீண்டும் ஏழு முறை நம் படை சூழ்கையை பார்த்தேன். சகடச்சூழ்கை மிக எளிதானது. எளிய சூழ்கைகளில் பிழை இருப்பது மிக மிக அரிது.” பெருமூச்சுடன் தலையை அசைத்தபடி “இன்று எந்நிலையிலும் அவர்கள் நம்மை உடைத்து உள்நுழைய முடியாது. ஜயத்ரதரை அர்ஜுனர் அணுகுவது மண்ணில் எந்த மாவீரனும் இயற்றிவிட இயலாதது” என்றான்.
பூரிசிரவஸ் “ஆம், நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான். “செல்க! மூன்றாவது மடிப்பில் தங்களுக்கான இடம். உங்கள் தேர் அங்கு சென்றுவிட்டது” என்றான் அஸ்வத்தாமன். பூரிசிரவஸ் தலைவணங்கி புரவியை விரைவுகூட்டி மூன்றாவது படைமடிப்பை நோக்கி சென்றான். அங்கு அவனுக்காக சலன் காத்து நின்றிருந்தான். “எங்கு சென்றிருந்தாய்?” என்று சிடுசிடுத்த முகத்துடன் கேட்டான். பூரிசிரவஸ் அருகே சென்று தலைவணங்கி “எல்லைக்காவல்மாடங்களை ஒருமுறை பார்த்துவருகிறேன், மூத்தவரே” என்றான். “காவல்மாடங்களில் பார்க்க என்ன இருக்கிறது? இன்னும் சற்று நேரத்தில் இங்கு போர் தொடங்க இருக்கிறது” என்று சலன் சொன்னான். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இன்றுடன் இப்போர் முடிந்தால் நன்று, இளையோனே. நம் படைகள் சலித்துவிட்டன. நிலமக்களின் போர் இது, இதில் நாம் ஏன் தலைகொடுக்கிறோம் என்கிறார்கள்” என்றான் சலன்.
பூரிசிரவஸ் சினம்கொண்டாலும் ஒன்றும் சொல்லவில்லை. “நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான் சலன். “நிலத்தின் விரிவை நீ நம் மலைக்கு கொண்டுவந்தாய். நம் நாட்டில் இளையோர் நதிகளைப்போல என்றும் நிலத்தை எண்ணி ஏங்குபவர்கள். மூத்தோர் மலைமுடிகளை நோக்கி தவம்செய்பவர்கள்… நாம் மூத்தோரை மீறி நிலத்தில் பரவினோம். இன்று அதன்பொருட்டே அழிகிறோம்.” பூரிசிரவஸ் “ஆம்” என்றான். “முற்றிலும் வீணான ஒரு போர். அதில் மேலும் வீணான ஓர் ஊடாட்டம் நம்முடையது. விண்ணுலகு சென்றால் நம் மூதாதையர் நம்மைக் கண்டு தலையில் அறைந்து சலித்துக்கொள்வார்கள்” என்றான் சலன். பூரிசிரவஸ் “ஆம்” என்றான். அப்பேச்சை அவன் தவிர்க்க எண்ணினான்.
அதை உணர்ந்த சலன் “உன் தேர் ஒருங்கியிருக்கிறது, சென்று ஏறிக்கொள்க!” என்றான். பூரிசிரவஸ் தேரில் ஏற படிகளில் கால்வைத்ததும் சலன் அவன் தோளைத்தொட்டு “செல்க!” என்றான். பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தபோது சலன் மறுபக்கமாக திரும்பிக்கொண்டிருந்தான். சலன் தன்னை தொடுவது மிக அரிது என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அன்று தொடவேண்டுமென்று மூத்தவருக்கு ஏன் தோன்றியது என எண்ணிக்கொண்டான். அவன் ஆவக்காவலன் அருகே வந்து “பொழுது அணைகிறது, இளவரசே” என்றான். “ஆம்” என்றபடி பூரிசிரவஸ் தன் தேரிலேறிக்கொண்டு ஆவக்காவலன் அளித்த வில்லை தரையில் ஊன்றி அதன் மேல் நுனியைப்பற்றி வளைத்து உடல்விசையை அதன்மேல் செலுத்தி நாணேற்றினான். மெல்லிய விம்மலோசையுடன் வில் நிமிர்ந்து நாணை இறுக்கியது. “ஆம்” என அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அது முனகியது. “ஆம்” என்று அவன் சொன்னான்.
போர் தொடங்கிய சில கணங்களுக்குள்ளேயே பூரிசிரவஸ் உணர்ந்தான், அதுதான் அவன் ஈடுபடும் இறுதிப் போர் என. துரோணருக்கும் சல்யருக்கும் அரண் நின்று பாண்டவர்களின் கவசக்கோட்டையை தாக்கினான். அஸ்வத்தாமனின் இணை நின்று கோட்டைச்சுவர் பிளந்து வெளிவந்த அர்ஜுனனுடன் போரிட்டான். மீண்டும் மீண்டும் அவன் முன்னால் தோன்றிய அர்ஜுனன் அவனை அறைந்து கவசங்களை உடைத்தான். தேர் சிதைந்து வெறும் தட்டென்றாகியது. வீசிய காற்றில் அவன் கவசங்களூடாக காற்று பீறிட்டு செவியை மூடியது. தன் கவசங்களுக்குள் குருதி ஊறி நிறைந்து வெம்மை கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அர்ஜுனனை நிகர் நின்று ஒரு நாழிகைப் பொழுது தன்னால் எதிர்க்கமுடியும் என்று கண்டுகொண்டான்.
எஞ்சவேண்டும் என்ற விழைவே இறுதியாக வில்லவனின் கையில் பற்றும் பிழை. அதையும் உதறிவிட்டால் அம்புகள் குறிபிழைப்பதில்லை என்று அவன் அறிந்தான். ஒருகணமும் ஒழியாமல் அர்ஜுனன் அனுப்பிய அம்புகள் அனைத்தையுமே அவன் அறைந்து வீழ்த்தினான். ஒருமுறைகூட நெஞ்சு தாழ்த்தி பின்னடையவில்லை. தன் அம்புகள் குறிபிழைக்காதெழுவதை உணர உணர மேலும் ஆற்றல்கொண்டான். அர்ஜுனனின் தோளிலைகளை உடைத்தெறிந்தான். கங்கணத்தை அறுத்தான். அவன் தொடைக்கவசத்தை உடைத்தான். மூன்று முறை அர்ஜுனன் ஊதப்படும் தழல் என உடல் வளைத்து சுழன்று அவன் பிறையம்பிலிருந்து தன் தலையை காத்துக்கொள்ள வைத்தான். அறைந்தறைந்து அர்ஜுனனை பின்னடையச் செய்து கவசப்படைகளுக்குள் மூழ்கி மறையச்செய்தான்.
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் மேலும் மேலும் அவன் உளம் இறுகி சொல்லிழந்ததாயிற்று. வெற்றியின் பெருமிதமும் மகிழ்ச்சியும் முற்றிலும் அகன்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். அவ்வாறு வெற்றி ஒரு பொருட்டென தோன்றாமலான பிறகே வெற்றியை அத்தனை எளிதாக ஈட்டமுடிகிறது என்பதை புரிந்துகொண்டான். அவன் அம்புகளுக்கு முன்னால் அர்ஜுனன் விழிதிகைப்பதை அவன் அருகிலெனக் கண்டான். ஒருகணத்திலேனும் அர்ஜுனனின் உள்ளத்தில் அச்சத்தை அவன் ஊட்டமுடிவதை அவன் உணர்ந்தான். அஸ்வத்தாமன் “ஆம், பால்ஹிகரே! உங்கள் இறுதிப் படியை ஏறிவிட்டீர்கள். இனி அர்ஜுனரும் அங்கரும் உங்களுக்கு நிகரானவர்களே. பரசுராமரும் துரோணரும் பீஷ்மரும் அமர்ந்த பீடம் அது. எழுக, தெய்வங்கள் மட்டுமே இனி உங்களிடம் நின்று பொருதமுடியும்!” என்று கூவினான். அச்சொற்கள் வேறெங்கோ வேறெதையோ நோக்கி ஒலிப்பதுபோல் இருந்தன.
புரவியில் பாய்ந்து வந்த பால்ஹிக படைத்தலைவனாகிய அசலன் “இளவரசே!” என்று கூவி அவனை நோக்கி பாய்ந்து வந்து தேரில் தொற்றி ஏறி “செல்க! அங்கு பாண்டவ மைந்தர் தங்கள் மூத்தவரை எதிர்கொள்கிறார்கள்…” என்றான். “அவருக்கு போரிடத் தெரியும்” என்று அவன் சொன்னான். “அல்ல. அவர்கள் எதிர்பாரா கணத்தில் விசையுடன் எழுந்து தாக்கி பால்ஹிகர்களின் வில்லவர் படைசூழ்கையை அழித்துவிட்டிருக்கிறார்கள். எக்கணத்திலும் அதே திறப்பினூடாக அர்ஜுனர் எழக்கூடும். எனில் தங்கள் மூத்தவரால் அங்கு நிற்க இயலாது. தாங்கள் அங்கு சென்று அவரை துணைக்க வேண்டுமென்று அரசரின் ஆணை” என்றான் அசலன். பூரிசிரவஸின் உள்ளத்திலெழுந்த எண்ணத்தை புரிந்துகொண்டு “அவ்வாணையை முரசினூடாக எழுப்ப வேண்டியதில்லை என்று அரசர் கருதுகிறார். அதை படைகள் அறிய வேண்டியதில்லை. நம் மூத்தவருக்கு அது இழுக்காகும். இயல்பாக நீங்கள் செல்வதுபோல் சென்று அவரைக் காத்து நிலைகொள்க!” என்றான்.
“ஆம்” என்று சொல்லி தேரை திருப்ப பூரிசிரவஸ் ஆணையிட்டான். அம்புகள் எழுந்தமைய கொந்தளித்துக்கொண்டிருந்த படைகளின் அலைகளினூடாக அவனுடைய தேர் சென்றது. பாண்டவர்களின் கவசக்கோட்டை எட்டு இடங்களில் திறந்திருந்தது. சிகண்டியும், சகதேவனும், நகுலனும், திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், அர்ஜுனனும், பீமனும், சுருதகீர்த்தியும் கௌரவப் படைகளுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். எட்டு கால்களில் ஊர்ந்து வந்து தாக்கும் சிலந்திபோல் மாறிவிட்டிருந்தது பாண்டவப்படை. ஒருகணத்தில் அதன் நான்கு கால்கள் மீண்டும் உடலுக்குள் புகுந்துகொள்ள கவசக்கோட்டை மூடி தொடர்ந்துசென்ற கௌரவர்களை தடுத்தது. உடனே வேறெங்கோ இரு வாயில்கள் திறக்க அர்ஜுனனும் பீமனும் அங்கிருந்து விசையுடன் வெளிக்கிளம்பினர். அவர்களுடன் துருபதனும் பாஞ்சாலர்களும் இருந்தனர்.
சுருதசேனனுடன் பால்ஹிகப் படை நின்று பொருதிக்கொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். அவனுக்குத் துணையாக பிரதிவிந்தியனும் சதானீகனும் போரிட்டனர். அப்போது சுருதசேனன் பின்னடையத் தொடங்கியிருந்தான். அவனுக்கு இருபுறமும் சதானீகனும் பிரதிவிந்தியனும் யௌதேயனும் நிர்மித்ரனும் நின்று போரிட்டுக்கொண்டிருந்தார்கள். சலன் வெறியுடன் கைநீட்டி “செல்க! செல்க!” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தான். அவன் தேர் பாண்டவ மைந்தர்களை அறைந்து பின்செலுத்திக்கொண்டிருந்தது. ஆனால் பூரிசிரவஸ் உள்ளுணர்வால் பிழை ஒன்றை உணர்ந்தான். பாண்டவ மைந்தர்கள் பின்னடையவில்லை, பின்னடைவதுபோல் சூழ்ந்துகொள்கிறார்கள். “செல்க! விரைக!” என அவன் பாகனுக்கு ஆணையிட்டான். வில் நின்று துள்ள அம்பு தொடுத்தபடி சலனை நோக்கி சென்றான்.
மேலும் மேலும் பின்னடைந்து கவசகோட்டையின் விளிம்பு வரை சென்ற சுருதசேனன் எதிர்பாராத கணத்தில் முழு விசையுடன் தேரை முன் செலுத்தி பிறையம்பொன்றை எடுத்து தொடுத்து சலனின் வில்லை உடைத்தான். திகைத்து இன்னொரு வில்லுக்காக திரும்பிய சலன் அவர்களை குறைத்து எண்ணியிருந்தமையால் முற்றிலும் திரும்பி குனியவில்லை. அவன் தலை நீண்டு கழுத்து தெரிய, தேரொன்றின் பின்னாலிருந்து எழுந்த சதானீகன் பக்கவாட்டிலிருந்து விரைந்து வந்து பிறையம்பால் சலனின் தலையை கொய்தெறிந்தான். கையிலிருந்து வில் நழுவ பூரிசிரவஸ் திகைத்து பார்த்துக்கொண்டிருந்தான், சலனின் தலை காற்றில் எழுந்து சற்றே சுழன்று தேர்த்தட்டில் அறைந்து உருண்டு கீழே கிடந்த உடைந்த தேர்த்துண்டுகளின் மேல் விழுவதை. அவன் கூந்தல் முடிச்சுகள் அவிழ, தலைக்கவசம் உருண்டு அப்பால் தெறிக்க, விழித்த கண்களில் இறுதியசைவு கூடுவதை. உதடுகளில் எஞ்சும் சொல்லின் நெளிவு திகழ்வதை.
சலன் வீழ்ந்ததும் பால்ஹிகப் படை திகைத்து செயலற்றது. அக்கணத்தில் மேலும் வெறிகொண்டு ஒருங்கிணைந்த சதானீகனும் சுருதசேனனும் பிரதிவிந்தியனும் யௌதேயனும் நிர்மித்ரனும் இணைந்து அம்புகளால் அறைந்து பால்ஹிக இளவரசர்களை கொன்றனர். பால்ஹிக படைத்தலைவர் எழுவர் தலையறுந்து விழுந்தனர். பூரிசிரவஸ் வெறிக்கூச்சலிட்டபடி தன் வில்லைக் குலைத்து அம்பு தொடுத்து சுருதசேனனை தாக்கினான். அந்த அம்புகள் வானிலேயே சுருதசேனனால் சிதறடிக்கப்பட்டன. அவன் தன் முகத்தில் வழிந்த குருதியை கைகளால் வழித்துத் துடைத்தபின் பற்களைக் காட்டி நகைத்தபடி பின்னடைந்து பாண்டவர்களின் படைக்கோட்டைக்குள் நுழைந்துகொண்டான். கேடயங்கள் இருபுறத்திலிருந்தும் எழுந்துவந்து சுவரென்றாகி அவனை முழுமையாக மறைத்தன. பூரிசிரவஸ் தேரிலிருந்து பாய்ந்து ஓடி சலனின் தலையை அணுகி குனிந்து பார்த்தான். அது பிறிதெவரோபோல் இருந்தது. அந்த முகத்திலிருந்தவனை அவன் முன்பு எப்போதுமே பார்த்திருந்ததில்லை.