காலை எழுந்தது ஆறு மணிக்கு. ஆனால் டீ கிடைக்க ஏழுமணியாகும். வெந்நீர் சூடு செய்து ஒவ்வொருவராகக் குளித்துமுடிக்க ஒன்பது மணி. அதன்பின்னரே கீழே இட்லியும் தோசையும் கிடைக்கும். அந்தத் தள்ளுவண்டிக்கடைக்காரர் இந்திக்காரர். ஆனால் இட்லி பெரும்பாலும் இட்லிபோலவே இருந்தது.
அதேசமயம் வடை தமிழகத்தைவிட சிறப்பானது. தமிழகத்தில் உளுந்துவடை அல்லது மெதுவடை என்னும் உணவுப்பொருளை அழித்தேவிட்டனர். எங்குபோனாலும் இட்லியுடன் கொண்டுவைப்பார்கள். “எடு! எடு!” என கதறவேண்டியிருக்கும். எண்ணைக்காறலுடன் சோடாஉப்பின் நுரைத்தன்மையுடன் இருக்கும் அந்தப்பொருளை ஒரு அர்த்தமில்லாத சடங்குக்காகவே தமிழர்கள் உண்கிறார்கள்.
தமிழகத்தில் உணவுப்பொருட்களைப் பற்றிய வர்ணனைகள்தான் உணவை அழிக்கின்றன. பெரும்பாலும் இந்த வர்ணனைகளைச் செய்பவர்கள் பிராமணர்கள் – அவர்களுக்கு சாப்பாட்டைவிட அதைப்பற்றி பேசுவதில்தான் மோகம். சங்கீதத்தையும் சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்வார்கள். அந்த வர்ணனையை இலக்காக்கி ஓட்டல்கள் சமைக்கின்றன – சுவையை முற்றாக தவறவிட்டு அதை சென்றடைகின்றன.
ஊதினா பறக்கிறாப்ல மெதுவடை, மல்லியப்பூ மாதிரி இட்லி, பேப்பர் மாதிரி தோசை, தும்பைப்பூ மாதிரி சோறு, கள்ளிச்சொட்டு மாதிரி காபி, வாயிலே கரையறது மாதிரி முறுக்கு என்னும் வர்ணனைகள் மக்களிடம் ஒருவகை இலட்சிய உருவகங்களாகிவிட்டன. ஆகவே சோடாஉப்பு போட்ட வடை, ஈஸ்ட் போட்ட இட்லி, மைதாமாவுத் தோசை, தவிடுநீக்கிய சக்கைச் சோறு, சிக்கரித்தூள் காபி என நமக்கு கிடைக்கிறது. முறுக்கு ஏன் வாயில் கரையவேண்டும் என எவரும் கேட்பதில்லை. அதை சொன்னது ஏதோ பல்லுபோன பாட்டியாக இருக்கலாம் என்றும் சிந்திப்பதில்லை. தமிழகத்தின் சுவையாபாசத்தின் திரண்டவடிவம் சரவணபவன்.
சாப்பிட்டுவிட்டு கும்பமேளா நிகழும் கங்கைப்படுகைக்கு சென்றோம். பதினோருபேர் ஒர் ஆட்டோவில். முதலில் ஓர் அடுக்கு. அதில் ராஜமாணிக்கம்போன்ற எடைகொண்ட மானுடர். மேலே நவீன் போன்ற எளிய உடலர். எண்ணையும் நீரும் ஒரே புட்டியில் இருப்பதுபோல எல்லா ஆட்டோ பயணங்களிலும் இரண்டு அடுக்காகவே இருந்தோம். அலகாபாதிலிருந்து 20 கிமீ தொலைவிலிருந்தது பிரயாக்பூமி. கங்கையும் யமுனையும் கலக்கும் இடம். அந்தர்வாகினியாக சரஸ்வதி வந்துசேருமிடம். இந்தியாவில் மாசுபடாத ஒரே ஆறு சரஸ்வதிதான் என்று தோன்றுகிறது.
கும்பமேளாவின் நிலத்தை அலகாபாத்தின் இணை நகரென்றே சொல்ல முடியும். ஏறத்தாழ நாற்பது கிலோமீட்டர் நீளமும் இருபது கிலோமீட்டருக்கு மேல் அகலமும் கொண்டது கங்கையின் இந்தப்பகுதியின் படுகை. ஆறுகளின் நீர்வெளி மட்டுமே நான்கு கிலோமீட்டர் அகலம் இருக்கும். இருபுறமும் மெல்லிய மணல் படிந்த பாலை நிலம் போன்ற பெருவிரிவு. இந்த நிலத்தில்தான் அர்த்தகும்பமேளா ஆறாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்பமேளா.
நெடுங்காலமாக நிகழும் இந்த விழா மெல்ல மெல்ல அதற்குரிய அனைத்துச் சடங்குகளையும் முறைமைகளையும் அடைந்திருக்கிறது. இவர்களுக்கு பெருந்திரள்விழாக்களை நிகழ்த்தும் அனுபவ அறிவு திரண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு என் மகன் அஜிதன் நண்பர் கடலூர் சீனுவுடன் ஒரு பயணமாக அலகாபாத் வந்து இப்பகுதிக்கு வந்தபோது அப்போதே இங்கு கும்பமேளாவுக்கான பணிகள் நிகழ்ந்துகொண்டிருந்தன என்றான். ஒரு தற்காலிக நகரை உருவாக்கியிருக்கிறார்கள். நகர் என்றால் ஒருகோணத்தில் அலகாபாதைவிட பெரிய நகரம்.
ஆற்றுப்படுகைக்கு உள்ளே மணல்மேல் இரும்புப் பலகைகளை சீராக அடுக்கி ஒன்றுடன் ஒன்று முடுக்கிப் போடப்பட்ட நெடுஞ்சாலைகள். ஒவ்வொரு நெடுஞ்சாலையிலிருந்தும் கிளைபிரிந்து செல்லும் துணைச்சாலைகள். இச்சாலைகளால் அமைக்கப்படும் சிறு சிறு துணைநகரப்பகுதிகள் மற்றும் ஊர்கள். முழு இடமும் சீரான தெருவிளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான பெயர். அவற்றை கூடாரத்தாலான சிற்றூர் எனலாம்.
இந்தியா முழுக்க இருந்து நூற்றுக்கணக்கான துறவியர்மடங்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் உரிய கட்டணங்கள் கட்டி தங்களுக்கான இடத்தை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கே வேலி கட்டி தங்களுக்கான சிறு ஊர்களை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சிற்றூருக்குள்ளும் நுழைவதற்கு பிரம்மாண்டமான அலங்கார வாயில்கள். அவை துணியாலும் மூங்கிலாலும் கட்டப்பட்டு பிளாஸ்டர் ஆப் பாரீசில் கட்டிடம்போலவே அமைக்கப்பட்டவை.
பெரிய சிற்பங்கள், தோரணத்தூண்கள். உள்ளே வரவேற்புப்பகுதி, சத்சங்கம் நிகழ்வதற்கான கூடம், உணவுக்கூடங்கள், அவர்கள் தங்குவதற்குரிய நூற்றுக்கணக்கான கூடாரங்கள், குளியலறைகள், கழிப்பறைகள். ஆனால் ஒன்று கவனித்தேன். வட இந்தியாவில் ஆலயங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. சிற்பக்கலை பற்றிய ஞானம் மதத்திலிருந்து மறைந்துவிட்டது. எஞ்சியிருக்கும் அரிய ஆலயங்களும் வழிபாட்டில் இல்லை. ஆகவே எல்லா சிற்பங்களும் பார்ஸி நாடகம் – ரவிவர்மா ஓவியங்களின் பாணியில் அமைந்தவை. சிற்பமுறைமைப்படி அமைந்த சிற்பங்கள் எவையுமே கண்ணில் படவில்லை.
ஒவ்வொரு மடமும் ஆன்மீகத்தலைவரும் தங்கள் பக்தர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டி வந்திருந்ததனால் ஒவ்வொன்றும் தனித்தனியாக உயிர்ப்பு கொண்டிருந்தது. பல மடங்களுக்குள் கலைக்கூடங்கள், பக்திப்பொருள் விற்பனைமையங்கள் அமைக்கப்பட்டிருந்தன ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் கலைநிகழ்ச்சிகள். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பண்பாட்டு தனித்தன்மை இருந்தது. அவற்றை நோக்கி அடையாளம் காண்பதே ஒரு பெரும் விழிக்கொண்டாட்டம்.
அஸாமிய தலையணிகள், பஞ்சாபி தலைப்பாகைகள், ராஜஸ்தானி முண்டாசுகள், இமாச்சலப்பிரதேச தொப்பிகள், குஜராத்தி குல்லாக்கள். சேலைகளை தலைக்குமேல் வளைத்து அணிந்தவர்கள், ஆடிப்பாவைபோல இடவலம் மாறி முந்தானை அணிந்தவர்கள், சரிகைகளும் மணிகளும் கண்ணாடிகளும் தைக்கப்பட்ட மேலாடைகள். செம்பருத்தி மலர்போன்ற, ஊமத்தை மலர்போன்ற பாவாடைகள், நீண்ட பின்னல்கள், சரிந்த கொண்டைகள், தோள்வளைகள், கல்மாலைகள், சங்குவளையல்கள். இந்தியா என்னும் மாபெரும் பண்பாட்டுப்பரப்பின் காட்சிக்கூடம் இது.
இந்த நீர்க்கூடல்மாநகர் முழுக்கவே கூடாரங்களால் ஆனது. நுரை பெருகி நகரம் என்றானது போல் என எண்ணிக்கொண்டேன். நகர் முழுக்க பல்லாயிரம் அரங்குகளில் ஒரே சமயம் கலைநிகழ்ச்சிகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் பஜனைகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன. வெவ்வேறு மொழிகளில் ராமனும் கிருஷ்ணனும் சிவனும் விஷ்ணுவும் புகழப்பட்டனர். ஏத்திப்பாடப்பட்டனர். மொழிகள் அனைத்தையும் ஏற்கனவே நான் அறிந்தவை என என் செவிக்குக் காட்டியவை எங்கும் ஒலித்த தெய்வப்பெயர்கள்.
ஒவ்வொன்றையும் தனித்தனியாக சென்று பார்ப்பதோ ரசிப்பதோ இயல்வதல்ல. எது சிறந்தது, எங்கு செல்வது என்று தெரிவு செய்வதும் அனேகமாக நடவாது. அவ்வளவு முழுமையான பட்டியலும் எவரிடமும் இல்லை ஏனெனில் ஒவ்வொரு குருகுலமும் மடமும் தங்களுக்கென தனி இணையதளத்தை கொண்டுள்ளன. அனைத்துச் செய்திகளையும் ஒன்றாகத்திரட்டுவது எளிதல்ல. ஒட்டுமொத்தமாக அங்கு நிகழும் திருவிழாக் கோலத்தையே நம்மால் ரசிக்க முடியும்.
மதுரை சித்திரைத் திருவிழாவைப்போன்று நூறு அல்லது இருநூறு மடங்கு பெரிய திருவிழா என்றால் ஒருவேளை தமிழர்களுக்கு ஒரு உளச்சித்திரம் உருவாகக்கூடும். திருவிழாவுக்கே உரிய பொங்கி நுரைத்துக்கொண்டே இருக்கும் தன்மை. ஒவ்வொருவரும் தன்னந்தனியாகவும் பெருந்திரளில் ஓர் உறுப்பாகவும் ஒரேசமயம் உணரும் நிலை.
இந்தக் கொண்டாட்டத்தில் எதையாவது அறிகிறோமா? பெரும்பாலும் கூர்ந்து எதையும் கவனிப்பதில்லை. ஏனென்றால் மனம் தாவிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் எண்ணியிருப்பதைவிட பலமடங்கு அறிகிறோம். ஏனென்றால் நம் மனம் உள்திரும்பி எதையேனும் அலம்பிக்கொண்டிருப்பதில்லை. திருவிழாக்களில் நான் எத்தனை ஆயிரம் சின்னஞ்சிறு செய்திகளை சேகரித்திருக்கிறேன் என்பதை என் நாவல்களை வாசிக்கையில் நானே பிரமிப்புடன் காண்கிறேன்.
கும்பமேளா தொடங்கிய நாளிலிருந்து இறுதி நாள் வரை ஒருகணமும் முறியாது வேதக்குரல் எழுப்பும் பர்ணசாலைகள் இருந்தன. அவை புல்லாலேயே கட்டப்பட்டவை. மாபெரும் வேதசாலையும் குடில்களும் மட்டுமல்ல நுழைவாயிலும்கூட. ஒவ்வொரு நாளும் ஒரேசமயம் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழும் அரங்குகள். இந்தியாவின் தலைசிறந்த இசைக்கலைஞர்களும் நடனக்கலைஞர்களும் நிகழ்த்தும் கலைநிகழ்ச்சிகள். எங்கும் கூட்டம். மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது என முடிவுசெய்துவிட்டால் அதன் சாத்தியங்களுக்கு எல்லையே இல்லை.
எளிய மக்கள் இந்தியாவில் அத்தனை கொண்டாட்டங்களையும் தவறாமல் கொண்டாடுகிறார்கள். ஆகவேதான் இன்னமும்கூட வட இந்தியாவில் திருவிழாக்கள் நீடிக்கின்றன. தமிழகத்தின் பெரும்பாலான திருவிழாக்கள் அழிந்துவிட்டன. பெரும்பாலும் வணிகக்கூடுகைகளாக அவை மாறிவிட்டிருக்கின்றன. குடிக்களியாட்டமே மையமான நிகழ்வு என பலசமயம் அவற்றை பார்க்கையில் தோன்றுவதுண்டு, திருவிழாக்களை பார்க்காமல் ஒரு பண்பாட்டை அறியமுடியாது என்று எனக்கு தோன்றுவதுண்டு. சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்தபோது அங்கே சிற்றூர்களில் நிகழ்ந்த வசந்தகாலக் கொண்டாட்டங்களே உண்மையில் அவர்களை எனக்கு அணுக்கமாகக் காட்டின. தமிழகத்தின் அத்தனை முக்கியமான திருவிழாக்களுக்கும் ஒருமுறை சென்றுவிடவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று.
இந்தக் கொண்டாட்டத்தில் தொலைந்துபோய் தலை ரீங்கரிக்க, அர்த்தமில்லாமல் சிரித்துப்பேசியபடி, காலோய நடந்து திரும்பத் திரும்ப சுற்றிவருவது ஒன்றே நம்மால் செய்யக்கூடுவது. அதுவே ஒரு பேரனுபவம். கும்பமேளாவின் தனிச்சிறப்பே இது ஒற்றைப் புள்ளியில் குவிந்திருக்கும் இந்தியப் பெருநிலத்தின் காட்சி என்பதே. நோக்க நோக்க விரிவது. சாரம்நோக்கி செல்லச் செல்ல குவிவது.
வெவ்வேறு நிலப்பகுதிகளைச்சார்ந்த வெவ்வேறு இனக்குழுக்கள் திரண்டு விந்தையான வாத்திய இசைகள் முழங்க தங்கள் வேறுபட்ட ஆடையணிகளுடன் வந்துகொண்டே இருந்தார்கள். தலையணியில் இறகுகள் சூடிய மணிப்புரிப் பழங்குடிகள். இடைவரை ஏற்றிச் சுற்றப்பட்ட வண்ண ஆடைகள் அணிந்த அஸ்ஸாமிய பழங்குடிகள். மூங்கில் வாத்தியங்களை இசைக்கும் மேகாலயப் பழங்குடிகள். ராஜஸ்தானிலிருந்து வரும் ஒட்டகங்களின் நிரை. இமாலயக்குடிகளின் அடர் வண்ண கம்பளி ஆடைகள். லடாக்கிலிருந்து வரும் மக்களின் ஆழ்ந்த குரலில் ஒலிக்கும் மந்திரங்கள்.
இந்தியாவின் எல்லை என்ன என்பதை இங்கு அரசியல் ரீதியாகக் கேட்டுக்கொள்ள வேண்டியதில்லை. அது கண்ணெதிரிலேயே காணக்கிடைக்கும். இந்தியா எதனால் ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது என்பதை எந்த ஆய்வாளரும் அரசியல்வாதியும் இங்கு நமக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. அது தொட்டுணரக்கூடிய உண்மை என கண்முன் நின்றிருக்கும்.
ஓர் இனக்குழுவின் தோற்றத்திற்கும் பிறிதொன்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விழியிடுங்கிய சுருக்கங்கள் அடர்ந்த சீனத்து மஞ்சள் முகங்கள். செங்கல்நிறமான சித்தியன் முகங்கள். பச்சைவிழிகளும் பரந்த தாடையும் சிவந்த உதடுகளும் கொண்ட மத்திய ஆசிய முகங்கள். கன்னங்கரிய முகங்கள். அனைவருமே இந்துக்களோ பௌத்தர்களோ ஜைனர்களோ சீக்கியர்களோ. பெரும்பாலான இடங்களில் சீக்கியர்களின் இலவச உணவுச்சாலைகள். பாதையோரமாகவே உணவுக்கலங்களை வைத்து கூவிக்கூவி உணவளித்தனர். ஆகவே நீர்க்கூடல்நகருக்குள் உணவை விற்கும் கடைகள் அனேகமாக எங்குமில்லை.
ஒரே விழா. ஆனால் சடங்குகளுக்குள் எந்த பொதுத்தன்மையும் இல்லை. வெற்றுக்கால்களுடன் ஒற்றையாடையுடன் செல்லும் ஆந்திரத்து பிராமணர்களுக்கும் உடல் முழுக்க கம்பளியாடை அணிந்து முகம் மட்டுமே தெரிய சென்று கொண்டிருக்கும் இமாசலப்பிரதேசத்தின் அந்தணருக்குமிடையே பொதுவாக ஓடுவது ஓரு மெய்த்தரிசனம், அதன் வெளிப்பாடான ஒரு நம்பிக்கை, அதிலிருந்து கிளைத்த ஓர் ஆசாரம்.
மெய்மையை ஒரு புனித நதியென உருவகிக்கிறது நம் மரபு. அதில் நீராடி மறுபிறப்பெடுத்தோம் என நம்பச்செய்கிறது. அந்நீராட்டை மானுடர் வகுக்க வேண்டியதில்லை விண்ணிலுலாவும் கதிரவன் வகுக்கட்டும் என்று விட்டுவிடுகிறது.
அறிதலின் ஒரு கட்டத்தில் நாம் நம் உணர்வுகளை அடையாளம் காண்கிறோம். ஆகவே நம்மை தனிமனிதன் என உணர்கிறோம். அறிதல் சற்று கனியும் என்றால் நாம் நம் உணர்வுகளின் காலம்கடந்த தன்மையை, மானுடப்பொதுத்தன்மையை அடையாளம் காணத் தொடங்குகிறோம். தனிமனித அவசங்களுடன் நின்றுவிடும் இலக்கியப்படைப்புகள் இளவயதினருக்குரியவை, மேலோட்டமானவை. அத்தனித்துவத்திலிருந்து எழுந்து மாபெரும் பொதுத்தன்மையைக் கண்டு விரிந்து அகன்று இன்மைவரை சென்று மீள்பவையே பேரிலக்கியங்கள்.
நம்மை நம்மிலிருந்து எழச்செய்து விண்ணென விரியவைப்பதில் முதன்மையானது இயற்கை. அதன்பின் வரலாறும் பண்பாடும். வரலாற்றின் பண்பாட்டின் பருவடிவங்களாக நம்மைச் சூழ்ந்திருக்கும் மொழியும் குறியீடுகளும் ஆழ்படிமங்களும். கங்கையும் இமையமும் முக்கடல்முனையும் இந்தியா பல்லாயிரமாண்டுகளாக திரட்டியெடுத்த ஆழ்படிமங்கள். அவற்றின் முன் நிற்கையில் நாம் நீராடி நம் ஆணவத்தை கரைத்துக்கொள்கிறோம்.
கும்பமேளா அப்பேரனுபவத்தின் ஒருதுளியை ஒருமுறையேனும் அடைந்த ஒருவர் தவறவிடக்கூடாத ஓர் அருநிகழ்வு. சூழ்ந்திருக்கும் மானுடப்பெருவெளியை நோக்கி நாம் நாம் என உளம் எழுவது மெய்மையின் கணம். மன்னும் இமையமலையையும் மாசறுநீர் கங்கையாறையும் நானே என உணர்கையில் கும்பமேளாவின் முதன்மை நுண்சொல்லான சிவோஹம் என்பதை அகத்தே அறிகிறோம். சிவமே யாம்!
புகைப்படங்கள் ஏ.வி மணிகண்டன்