சஞ்சயன் சொன்னான்: பேரரசே, இன்று காலைமுதல் நிகழ்ந்துவரும் இந்தப் போரை நான் உங்களுக்கு முழுமையாக சொல்லி முடிக்க இன்னும் சில பிறவிகள் தேவையாகக்கூடும். இன்று ஒவ்வொருவரும் பலவாகப் பிரிந்தனர். ஒரே போரை வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தினர். களம்பட்டவர்கள் வெவ்வேறு நிலங்களில் விழுந்தனர். வெவ்வேறு உடல்களிலிருந்து எழுந்தனர். விண்ணில் தங்களை தாங்களே கண்டுகொண்டு திகைத்தனர். குருக்ஷேத்ரம் பல்லாயிரம் ஆத்மாக்களை விடுவிக்கும் மாபெரும் தவச்சாலையென ஆகியிருக்கிறது.
இந்தப் போர் தொடங்கி இன்று பதின்மூன்று நாட்கள் ஆகிவிட்டிருக்கின்றன. புரவிகளைப்போல் மிகச் சிறுபொழுது துயிலும்பொருட்டு அவர்களின் உடல்கள் பழகிவிட்டிருக்கின்றன. அவர்களின் உடல்களில் ஐம்புலன்களும் எங்குமென உருகிப்பரவிவிட்டன. உடலெங்கும் காதுகளும் கண்களும் மூக்குகளும் நாவுகளும் கொண்டவர்களாக அவர்கள் ஆனார்கள். அவர்களின் உள்ளம் எல்லைகளை அழித்துக்கொண்டு கலந்தது. கலமே தான் என எண்ணும் மாயையை உதறிய நீர் வானமெங்கும் பரவியது. கொல்லப்படுபவன் கொல்பவனும் தானே என ஆனான். வீழ்ந்தவனில் இருந்து எழுந்து கொன்றவனில் குடியேறி இறங்கினான். நேற்று இன்றுகள், இங்கு அங்குகள், இது அதுக்கள் இயல்பழிந்தன. எங்கும் நிகழும் ஒன்றே அனைத்தும் என நின்றது என்றும் நிகழும் அது.
முற்புலரியில் தன் புரவிமேல் அமர்ந்து எல்லைக்காவல்மாடத்திலிருந்து திருஷ்டத்யும்னன் இருந்த படைமுகப்புக் காவல்மாடம் நோக்கி சென்றுகொண்டிருந்த சாத்யகி வழியில் புரவியிலேயே உளமழிந்து உடல் தொய்ந்து தலைசரிந்து அமர்ந்திருந்தான். அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்றிய காவலன் “யாதவரே!” என்று உலுக்க விழித்தெழுந்து “என்ன? என்ன?” என்றான். “விழுவதுபோலிருந்தீர்கள். புண்பட்டிருப்பீர்களோ என்றுகூட அஞ்சினேன்” என்று காவலன் சொன்னான். வாயை துடைத்துக்கொண்டு “ஒன்றுமில்லை” என்றபின் சாத்யகி கடிவாளத்தை பற்றினான். அவன் நெஞ்சில் சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன. முகம் மலர்ந்திருந்தது. அது ஏன் என அவனே வியந்தான். அச்சொற்களை மீண்டும் ஓட்டிநோக்கினான்.
“விஷ்ணுவிலிருந்து பிரம்மன். பிரம்மனின் மைந்தர் அத்ரி. அவரிலிருந்து சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, யது என எழுந்தது யாதவப்பெருங்குலம். முதல் யாதவ மன்னர் பெரும்பிதாமகரான சஹஸ்ரஜித். ஆயிரம் புதிய நிலங்களை வென்று வளைகோல் சூடி கல்லரியணை அமர்ந்தவர் அவர். அவர் மைந்தர் சதஜித் நூறு நிலங்களை வென்றவர். அவர் மைந்தர் ஹேகயரிலிருந்து எழுந்தது நமது தொல்குடி. அவர் மைந்தர் தர்மர். கணி, பத்ரசேனர், தனகர், கிருதவீரியன் என்னும் கொடிவழியின் ஒளிமிக்க வைரமென எழுந்த மாவீரர் கார்த்தவீரியர். அவர் மைந்தர் மது. மதுவின் மைந்தர் எனப் பிறந்த விருஷ்ணியே நமது குடியின் முதல் தந்தை. நாம் ஆளும் நூற்றெட்டு நிலங்களை அமைத்தவர் யுதாஜித். அவர் மைந்தர் சினி. சினியில் பிறந்தவர் எந்தை சத்யகர். சாத்யகியாகிய என் பெயர் யுயுதானன். நான் விருஷ்ணி குலத்தோனாகிய யாதவன். என் உடல்பொருளாவி மூன்றையும் துவாரகையின் தலைவனுக்கு அளித்தவன். இப்பிறவியில் பிறிதொரு கடமையோ இலக்கோ உறவோ அற்றவன்.”
“என் மைந்தர்களாகிய நீங்கள் யௌயுதானிகள். விருஷ்ணிகளாகிய யாதவர்கள். ஆனால் என் கடமை உங்களையும் ஆளும். நான் ஏற்றது பொறுப்பு அல்ல என்று உணர்க! இது தொழும்பர்க்குறி. உடையோனே விடுத்தால்கூட தொழும்பர்க்கு விடுதலை இல்லை. அவர் ஏழு தலைமுறைகளுக்கும் மீறிச்செல்லும் ஆணை இல்லை.” அவன் முன் மைந்தர்கள் பதின்மரும் அமர்ந்திருந்தார்கள். அசங்கனின் முகம் கூர்கொண்டிருந்தது. உத்ஃபுதன், சந்திரபானு, சபரன், சாந்தன், முக்தன் ஆகியோர் அவன் சொற்களை செவிகொண்டு அமர்ந்திருந்தனர். சாலனின் விழிகளில் புன்னகை. சித்ரன் தன் கையால் சித்ராங்கதனை தொட்டு ஏதோ உரைத்துக்கொண்டிருந்தான். சாத்யகி விழிதிருப்பியபோது விலக்கிக்கொண்டான். சினி வேறெங்கோ நோக்கிக்கொண்டிருந்தான். சாத்யகியின் நோக்கை கண்டு அசங்கன் இளையோனை தொட சினி திடுக்கிட்டு உணர்வுகொண்டு தன் ஆடையை இழுத்து சீராக்கிக்கொண்டான்.
“இப்புவியில் பிறப்பவரில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முழுக்க தேடுவது ஆற்றுவதற்குரிய பணியை, கொள்ளவேண்டிய படைக்கலத்தை, செல்லவேண்டிய திசையை. அவை முன்னரே வகுக்கப்பட்டு இங்கு வருபவர் நல்லூழ் கொண்டவர் என்று உணர்க! தேடுபவர் தேடலை மட்டுமே அடைகிறார். நாமே நம் இலக்கை தெரிவுசெய்ய முடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழும் அனைத்தையும் நுண்ணறிவால் உணர்ந்துதெளிந்து அடையவேண்டிய விடை. அவ்வறிதலுக்கே திசையும் படைக்கலமும் பணிக்களமும் தேவையாகிறது. வழிகாட்டப்படுவோர் பேறுபெற்றோர். வழிநடத்தப்படுவோர் பெரும்பேறுபெற்றோர். அவர்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். தெய்வத்தால் கொடையேற்றுக்கொள்ளப்பட்டோர்.”
“ஆம், இளமையில் நம் வழி நம்மதே என்று தோன்றும். நாமே தேடியறிந்தாலென்ன என்று கனவுகாண்போம். எண்ணுக, இப்புவிவாழ்க்கையில் அவ்வண்ணம் நீங்கள் தெரிவுசெய்து அடைந்தவை எவை? தெரிவுசெய்தா அன்னை வயிற்றில் பிறந்தீர்கள்? அவள் தெரிவுசெய்யப்படவில்லை என்பதனால் பிறிதொருத்தியை அவ்வன்னைக்கு நிகரென வைப்பீர்களா என்ன? குலமும் குடியும் நிலமும் நாடும் தெரிவுசெய்யப்பட்டவை அல்ல. இளையோரே, உங்கள் மொழியும் தெய்வங்களும்கூட நீங்கள் பிறக்கையிலேயே அளிக்கப்பட்டுவிட்டவை. எண்ணிநோக்குக, தந்தையை ஒவ்வொருவரும் தேடிக் கண்டடைந்து வகுத்துக்கொள்ளலாம் எனில் இங்கே எவருக்கு நல்வாழ்க்கை அமையும்?” என்றான் சாத்யகி.
அவர்கள் ரிஷபவனத்தில் யமுனையின் கரையில் ஒரு கடம்பமரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். “நீலக்கடம்பு என் தலைவரின் மரம். அச்சம் கொள்கையில் அந்த மரத்தடியில் சென்றமர்க! அணைக்கப்படுவீர்கள். ஐயமெழுகையில் அதன் நிழல்தேடுக, தெளிவடைவீர்கள்! இன்று நம் தலைக்குமேல் அவர் கைகள் விரிந்திருக்கின்றன. அவருடைய சொல் நமக்கு ஒளியென்று எப்போதும் முன்னமைக!” என்றான் சாத்யகி. அவர்கள் கைகூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர். அவன் எழுந்துகொண்டான். அவர்கள் சிரித்துக்கொண்டே தங்களுக்குள் பேசிக்கொள்ள சினி ஓடிவந்து அவன் கையை பற்றிக்கொண்டு தொங்கி “தந்தையே, எனக்கு வில் தேவையில்லை. நான் கதை பயில விழைகிறேன்” என்றான்.
“கதை பெருந்தோளர்களுக்குரியது, மூடா” என்றான் சாத்யகி. “நான் பெருந்தோளனாவேன். நிறைய ஊனுண்டால் போதும் என்று அடுமனையில் முக்தர் சொன்னார். நான் நேற்றுகூட…” என்றான். சாலன் சாத்யகியின் இன்னொரு கையில் தொங்க முயல சினி அவனை அறைந்து “போடா… போடா” என்றான். சாத்யகியிடம் “தந்தையே, தங்கள் கைகளில் தொங்குகிறான்” என்றான். “ஏன், நீ தொங்குவதில்லையா?” என்றான் சாத்யகி. “நான் சிறு குழவி… அவன் பெரியவன்” என்றான் சினி. சாத்யகி சிரித்து அவன் தலையின் மென்மயிர்ப்பரப்பை கையால் வருடினான். “தந்தையே, நாம் எப்போது உபப்பிலாவ்யத்திற்கு செல்கிறோம்?” என்றான் அசங்கன். “நாளை…” என்றான் சாத்யகி. சினி “நாளையேவா?” என்று கூச்சலிட்டான். கைகளை விரித்து துள்ளிக்குதித்து “நாளை! நாளை!” என்று ஆர்ப்பரித்தான்.
இருளில் காவல்மாடத்தின் முகப்பிற்கு வந்து நின்றான். எதிரே குருக்ஷேத்ரம் ஒழிந்து காத்திருந்தது. பின்னிரவின் மென்பனி மெல்ல அதன்மேல் இறங்கிக்கொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் ஒரு மாபெரும் ஓவியம் வரையப்பட்டு அந்தியில் முற்றாக அழிக்கப்பட்டு குருதிச்செம்மையாக எஞ்சும் பலிக்களம் அது என எண்ணிக்கொண்டான். அவ்வேளையில் எங்கும் ஓசைகள் இருக்கவில்லை. காற்றில் கொடிகள் படபடக்கும் ஓசைகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. விண்மீன்கள் பால்நிறைந்த அகிடில் காம்புகள்போல பிதுங்கி நீண்டிருந்தன. அவன் காவல்மாடத்தின் மூங்கிலில் சாய்ந்தபடி வானை நோக்கிக்கொண்டு நின்றான். பெருமூச்செழுந்தது. அப்போதுதான் தன் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்தான்.
ஏதோ தன்னுணர்வு எழ அவன் இருளுக்குள் கூர்ந்து நோக்கினான். கௌரவப் படைகளின் விளிம்பிலமைந்த காவல்மாடத்தில் தூணில் சாய்ந்தபடி பூரிசிரவஸ் நின்றிருப்பதை கண்டான். அப்பால் காற்றில் கொடி ஆடுவதுபோல் அவன் புரவியின் வால் சுழன்றுகொண்டிருந்தது. தன் உள்ளம் ஏன் கல்லித்திருக்கிறது என்று சாத்யகிக்கு புரியவில்லை. எந்த எண்ணமும் எழவில்லை. வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். பூரிசிரவஸும் தன்னை முன்னரே நோக்கிவிட்டிருந்தான் என அவன் நன்குணர்ந்திருந்தான். விழிகள் சந்திக்க முடியாத தொலைவும் இருளும் இருந்தன. அவன் கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றுவிட்டு பின்னர் காற்றில் பறந்த ஆடையை சீரமைத்துக்கொண்டு கிளம்பினான். ஆனால் உடலை அசைக்க முடியவில்லை. அங்கேயே அது எடையுடன் பதிந்துவிட்டிருந்தது. பலமுறை எண்ணத்தை குவித்து அதை மீட்கவேண்டியிருந்தது. அவன் சென்று தன் புரவிமேல் ஏறிக்கொண்டு திரும்பி நோக்காமல் படைகளுக்குள் சென்று மறைந்தான்.
சஞ்சயன் தொடர்ந்தான்: போர்முரசுகள் ஒலித்தபோது சாத்யகி திருஷ்டத்யும்னனின் அருகே இருந்தான். திருஷ்டத்யும்னன் பதற்றம் கொண்டிருந்தது அவன் கையசைவுகள் மாறுபட்டிருந்ததிலிருந்து தெரிந்தது. “இந்தப் போர் பொழுதுகளுடன் நாம் இயற்றுவது. புலரிமுதல் அந்திவரை. நமக்கிருப்பது ஒரு பகல். நாம் வென்றாகவேண்டும்” என்றான். சாத்யகி தன்னுள் எழுந்த ஐயத்தை அவனிடம் கேட்கவில்லை. ஆனால் அவனிடம் அங்கிருந்த படைப்பெருக்கே அதை கேட்டுக்கொண்டிருந்தது. “ஆம், இயலாததுதான். ஆனால் இயலும். இயலாததை இயற்றுபவர் நம்முடன் இருக்கிறார். நாம் வெல்வோம். அரிதியற்றி வென்றமையால் நாம் இன்று மாலை வெற்றிக்கொண்டாட்டமிடுவோம். வெற்றியே மேலும் வெற்றி நோக்கி கொண்டுசெல்வது. நாம் முழு வெற்றி அடைவோம். இந்நிலத்தில் நம் தலைவனின் சொல்நின்று பெருகும். தலைமுறைகளை அது ஆளும்!” என்றான். அச்சொற்களால் உளம்பொங்கிய சாத்யகி “ஆம், வெற்றி!” என்று பெருமூச்சின் ஒலியில் சொன்னான்.
அவனை அருகழைத்த அர்ஜுனன் “இளையவனே, நீ இன்று முழுக்க என் மூத்தவரை துணைசெய்க!” என்றான். “ஆனால்…” என்று சொல்லவந்த சாத்யகியை அடக்கி “ஏனென்றால் இன்று நாம் பிறிதொரு இலக்கு கொண்டுள்ளோம். அவ்விலக்கு நமது பாதுகாப்புணர்வை திசைமாற்றிவிடக்கூடும். அதை அவர்கள் கணக்கிட்டறியவும்கூடும். நேற்றும் முன்நாளும் அவர்களின் இலக்கு நம் மூத்தவரை பணயம்கொள்வது மட்டுமாக இருந்தது என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றான். “ஆம்” என்றான் சாத்யகி. அவன் தலைவணங்கி பாண்டவப் படைகளினூடாக யுதிஷ்டிரரை நோக்கி சென்றான். படையினர் முழுமையாகவே நிலைகொள்ளாமல் நின்றிருப்பதை கண்டான்.
யுதிஷ்டிரர் பதற்றத்தில் தேர்த்தட்டில் நிற்கமுடியாதவராக இருந்தார். “என்ன நிகழ்கிறது? புதிய சூழ்கை எதையேனும் வகுத்துள்ளோமா?” என்று அவனிடம் கூவினார். “இவர்கள் வகுத்துள்ள இந்தக் கவசக்கோட்டை தற்காப்புக்குரியது. இன்று நாம் தாக்கி வென்று கடந்தாகவேண்டும். சைந்தவனை அந்திக்குள் கொன்றாகவேண்டும். அதற்குரியது சூசிமுகி என்னும் சூழ்கை. அல்லது ஓசையின்றி நெளிந்தேறும் அரவுச்சூழ்கை. இதுவல்ல… இதை உடனே மாற்றியாகவேண்டும்” என்றார். “அரசே, இனி எதையும் மாற்றமுடியாது. இதோ கதிர் எழுகிறது” என்றான் சாத்யகி. போர்முரசுகள் முழங்கின. யுதிஷ்டிரரின் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. “என்னிடம் முரசுகள் சொல்வதென்ன என்று ஒருமுறை சொற்களாலும் சொல்க… என்னால் ஓசைகளை சொற்களாக்கிக்கொள்ள இயலவில்லை” என்றார்.
சாத்யகி யுதிஷ்டிரரின் படையை நடத்திக்கொண்டுசென்று மூன்று முனைகளில் எழுந்து கௌரவர்களை தாக்கினான். கௌரவர்களின் படைத்தலைவனாகிய சார்வஃபௌமனையும் அவனுடைய ஏழு துணைவர்களையும் கொன்றான். மீண்டும் கவசநிரையிலிருந்து எழுந்து சென்று துச்சாதனனை தாக்கினான். வில்லால் பொருதி ஓர் உச்சத்தில் கதையுடன் பாய்ந்தெழுந்து துச்சாதனனை அவன் தாக்கினான். இருவரும் சுழன்று சுழன்று அறைந்து போரிட்டனர். துச்சாதனனின் தோளில் அறைந்து அவனை வீழ்த்தினான். பீமனுடன் பொருதிக்கொண்டிருந்த துச்சகனும் துர்முகனும் துர்மர்ஷணனும் துச்சாதனனின் உதவிக்கு வந்தனர். சாத்யகி எழுந்து துச்சாதனனின் நெஞ்சை உதைத்து அப்பால் தள்ளி அவன் முகத்தில் காறி உமிழ்ந்து “கீழ்மகனே, உன் நெஞ்சக்குருதிக்காக மூத்தவர் விடாய்கொண்டிருப்பதனால் இன்று என்னிடம் உயிர் ஈயப்பெற்றாய்” என்றான். “கொல்க! கொல்க அவனை!” என்று கூவியபடி துச்சாதனன் அவனை நோக்கி ஓடிவர துள்ளி தேரிலேறி பின்னடைந்து மீண்டும் கவசக்கோட்டைக்குள் புகுந்துகொண்டான்.
திருஷ்டத்யும்னனும் துரோணரும் மோதிக்கொண்ட செய்தியை முழவுகள் அறிவித்தன. திருஷ்டத்யும்னன் “என்னை பிறப்பித்த வஞ்சினம் நீங்கள், ஆசிரியரே!” என்று கூவினான். “அதற்கென உங்களிடமே கற்ற அம்புகள் இவை… நீங்கள் நன்கறிந்த கூர் கொண்டவை. முற்றிலும் அறியாத விசை கொண்டவை.” துரோணர் “போரில் தோற்றவனின் வஞ்சம் என்பது வெறும் கீழ்மை, சிறுமகனே” என்றார். “இதோ உன்னை கொல்கிறேன். உன் வழித்தோன்றல்கள் இனி இவ்வஞ்சத்தை சூடுக!” திருஷ்டத்யும்னன் ஒவ்வொரு அம்புக்கும் வசைச்சொற்களை உதிர்த்தபடியே உள்ளச்சினத்தை விசையெனத் திரட்டியபடி துரோணரை அம்புகளால் அறைந்தான். விழிகளும் கைகளுமன்றி எங்கும் அசைவே இல்லாமல் அவர் அவ்வம்புகளை காற்றிலேயே முறித்திட்டார். அவன் கொடியையும் தேர்த்தூண்களையும் உடைத்தார். அவன் கவசங்கள் உடைந்தன.
அவன் பின்னடைவதற்காக ஒருக்கியிருந்த பாதையை முன்னரே நோக்கி அங்கே இரு யானைகளை துதிக்கை அறுத்து வீழ்த்தினார். வெறிகொண்ட யானைகள் தங்கள் பக்கத்துத் தேர்களை அறைந்து சிதறடிக்கவே அங்கே படைமுகம் சிதைந்து திருஷ்டத்யும்னனின் தேர் பின்னடைய இயலாமலாயிற்று. “காக்க! பாஞ்சால இளவரசரை காக்க!” என்று பாண்டவர்தரப்பு முரசுகள் ஓங்கி ஆணையிட்டன. திருஷ்டத்யும்னனின் கவசங்கள் உடைந்தன. அவன் கேடயத்தை தன்மேல் கவிழ்த்தபடி தேர்த்தட்டில் குப்புற விழுந்தான். அந்த இரும்புப்பரப்பின்மேல் அறைந்து மணியோசை எழுப்பின துரோணரின் அம்புகள். தேர்ப்புரவிகள் தலையற்று விழுந்தன. பாகன் இறந்து வலப்பக்கம் சரிந்தான். தேர் அவனுடன் சரிய திருஷ்டத்யும்னன் கீழே குதித்து தன் படை நோக்கி ஓடினான். அவனை துரத்தித் துரத்தி அறைந்தன துரோணரின் அம்புகள். அவன் தன் காலில் அம்புபட மல்லாந்து விழுந்தான். கேடயம் அப்பால் தெறித்தது.
துரோணர் நீண்ட அம்பு ஒன்றை தன் வில்லில் தொடுத்து “வேள்விக்கனலுக்கே மீள்க, பாஞ்சாலனே!” என கூவியபடி அதை எய்த கணம் விழுந்துகிடந்த இரு யானைகளின் நடுவிலூடாக சாத்யகி புரவியில் பாய்ந்து வந்து அவ்விசையிலேயே கொக்கிக் கயிற்றை வீசி திருஷ்டத்யும்னனை கவ்வி இழுத்தெடுத்தான். அதே விசையில் அவனைச் சுழற்றி தன் குதிரைமேல் ஏற்றிக்கொண்டு இரு தேர்கள் மேல் புரவியாலேயே தாவி அப்பால் சென்றான். அவன் ஊர்ந்த புரவி விழுந்த விசையில் முன்னங்கால்கள் ஒடிந்து புரண்டு கனைத்தெழ அங்கிருந்த வீரன் ஒருவன் அதன் கழுத்தை வெட்டிச் சரித்தான். அவன் வந்த இடைவெளியை உடனே கவசப்படை மூடிக்கொண்டது. இடையிலும் தோளிலும் புண்களுடன் திருஷ்டத்யும்னன் கிடக்க அவனை நோக்கி மருத்துவ ஏவலர் ஓடினர்.
சாத்யகி மீண்டும் யுதிஷ்டிரரை நோக்கி விரைந்தான். “என்ன ஆயிற்று? பிழைத்துக்கொண்டாரா?” என்று அவர் கேட்டார். “ஆம்” என்று சாத்யகி சொன்னான். “அவரை கொல்ல இயலாது. அவர் அருந்தவத்தால் அனலில் எழுந்தவர்” என்றார் யுதிஷ்டிரர். “யாதவனே, என் இளையோர் என்ன செய்கிறார்கள்? மந்தன் சூழ்ந்துகொள்ளப்பட்டானோ என ஐயுறுகிறேன்… பொழுதாகிக்கொண்டிருக்கிறது” என்றார். சாத்யகி “அஞ்சற்க அரசே, முரசுகள் அவர்கள் முழு விசையுடன் பொருதிக்கொண்டிருப்பதாகவே அறிவிக்கின்றன” என்றான். “நமக்கு இன்னும் பொழுதில்லை. போர் தொடங்கி இரு நாழிகைகள் கடந்துவிட்டன. நாம் இன்னும் அரணுக்குள் மீண்டுமீண்டு போரிட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார் யுதிஷ்டிரர்.
அக்கணம் துரோணர் கவசப்படையின் அரணை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தார். அம்புகளால் எதிர்நின்றவர்களை கொன்றுவீழ்த்தியபடி யுதிஷ்டிரரை அணுகினார். யுதிஷ்டிரரின் காவலாக நின்றிருந்த கிராதர்குலத்து அரசனாகிய வியாஹ்ரதத்தன் வில்லுடன் சென்று அவரை எதிர்கொண்டான். சென்ற விசையிலேயே அவன் தலை அறுபட்டு தேரிலிருந்து விழ அவன் துரோணரின் தேருக்கு முன்னால் விழுந்து புரவிக்குளம்புகளால் மிதிக்கப்பட்டான். சாத்யகி வில்குலைத்தபடி சென்று துரோணரை எதிர்கொண்டான். அவருடைய விசையை குறைத்தாகவேண்டும் என்ற திட்டத்துடன் அவருக்குத் துணையளித்து பின்னால் வந்துகொண்டிருந்த உத்தரகுருநாட்டின் அரசனாகிய ஜலசந்தனை கழுத்தறுத்திட்டான். துரோணர் அரைக்கணம் விழிதிருப்பிய நேரத்தில் அவர் வில்லை அறுத்தெறிந்தான்.
துரோணர் சீற்றம்கொண்டு அவனை தாக்கத் தொடங்கினார். அவருடைய நிலைபெயராமையை கலைத்தமையே வெற்றி என சாத்யகி எண்ணினான். “அரசர் பின்னடைக! அனைத்து வில்லவர்களும் அரசருக்கு துணையாக சூழ்ந்துகொள்க! முரசுகள் எழுக! எனக்கு பாண்டவ மைந்தர் துணைவரட்டும்!” என்று கூவியபடி அவன் துரோணரிடம் போரிட்டான். ஒவ்வொரு அம்புக்கும் நிகர் நின்று அவரை தடுத்தான். ஏழுமுறை அவர் வில்லின் நாணை உடைத்தான். அவருடைய வலக்காது குண்டலத்துடன் அறுந்து தெறித்தது. புரவிகளில் ஒன்று கழுத்தறுந்து கால்சோர்ந்து பிற புரவிகளால் இழுபட்டது. அவருடைய பாகனின் இடத்தோளில் சாத்யகியின் அம்புகள் தைக்க அவன் அலறியபடி தேரின் அமரபீடத்தில் வலம்சரிந்தான். அவன் துரோணரின் விழிகளை நோக்கியபடியே போரிட்டான். ஒரு சிறு விழியசைவு அவன் நெஞ்சை அதிரச்செய்தது. அதன் பின்னரே தன் விலாவில் பதிந்திருந்த அம்பை அவன் உணர்ந்தான். தேரிலிருந்து அவன் கீழே விழுந்தான்.
தன்னை காக்கும்பொருட்டு அறைகூவிய முரசொலியை சாத்யகி கேட்டான். அவனை நோக்கி துரோணரின் அம்புகள் பறவைகள் மண்ணிறங்கும் ஒலியுடன் வந்து நிலத்தில் தைக்க அவன் புரண்டு புரண்டு உடைந்த தேர் ஒன்றின் அடியில் ஒளிந்துகொண்டான். சதானீகனும் சுருதசேனனும் இருபுறத்திலிருந்தும் வந்து துரோணரை எதிர்கொண்டனர். அவனை கொக்கிச்சரடு இழுத்து அப்பால் கொண்டு சென்றது. இருமியபோது அவன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி தெறித்தது. அவனை இழுத்து அமரச்செய்து கவசங்களை கழற்றினர் மருத்துவ ஏவலர். கவசங்களுக்குள் நிறைந்திருந்த குருதி மடியில் கொட்டியது. தன் குருதியின் மணத்தை ஒருவனால் தனித்தறிய முடியுமா என்ன? “ஆழ்ந்த புண், யாதவரே… தாங்கள் சற்றேனும் ஓய்வெடுக்கவேண்டும்” என்றார் மருத்துவ ஏவலர்.
“கட்டு போடுங்கள்… மது வருக… பீதர்நாட்டு எரிமது!” என்று சாத்யகி ஆணையிட்டான். அவர்கள் அந்த அம்பின் தண்டை மட்டும் பிடுங்கி எடுத்தனர். “அலகு ஆழமாக இறங்கியிருக்கிறது. தசையை அறுத்துத்தான் அதை மீட்க முடியும்” என்றார் மருத்துவர். “அது அங்கிருக்கட்டும்… கட்டு போடுக!” என்றான் சாத்யகி. அவர்கள் அந்த அம்புக்குச் சுற்றும் தேன்மெழுகிட்டு உறுதியாக்கி அதையே சேர்த்துக்கட்டி அதன்மேல் கவசங்களை அணிவித்தனர். எரிமணத்துடன் பீதர்நாட்டு மது வந்தது. குடுவைக்குள் கொதிப்பதுபோல் நுரைக்குமிழிகொண்டிருந்தது. அவன் பற்களைக் கடித்து தசையில் உருகும் மெழுகு பதியும் அனலெரிச்சலை உள்ளிழுத்து உடலில் நிரப்பி கரைத்துக்கொண்டான். பின்னர் கையூன்றி எழுந்தான். காலில் சற்றே தளர்வு தெரிந்தது. மது உடலுக்குள் இருந்து ஆவியென எழுந்து உலுக்கிக்கொள்ளச் செய்தது. விழிகளில் நீராவி படர்ந்தது.
சதானீகனும் சுருதசேனனும் பின்னடைகிறார்கள் என்று முரசுகள் அறிவித்தன. “துணைசெல்க! பாண்டவ மைந்தருக்கு துணைசெல்க!” என்று முரசுகள் முழங்கின. அவன் தேர்த்தட்டில் ஏறும்பொருட்டு படியில் கால்வைத்தபோது உடல் நிகர்நிலையிழந்து வலப்பக்கமாக சரிந்தது. தூணை பிடித்துக்கொண்டு நின்றான். கண்களில் இமைகள் தடித்து கீழிறங்கின. வாயிலிருந்து எச்சில் கோழையாக வழிந்தது. இருமுறை குமட்டி துப்பினான். வில்லை எடுத்தபோது கால்கள் இல்லையென்றே தோன்றியது. நீர்க்குடம்போல் உடல் எதன்மேலோ நிலைகொள்ளாமல் நின்று தளும்பிக்கொண்டிருந்தது.
அவன் குருதிமணத்தை அறிந்தான். மிக அணுக்கமான மணம். மிகமிக ஆழமாக அவன் அறிந்த மணம். எவருடையது அது? எங்கு அறிந்தது? மயங்கிய எண்ணங்கள் அங்குமிங்குமென வழுக்கியலைந்து கொண்டிருக்கையில் தீச்சுட்ட தொடுகை என அவன் அறிந்தான் அது சினியின் குருதிமணம் என. அசங்கனின் மணமும் அதுவே. அது மைந்தரின் மணம். அவர்களின் வாயிலிருந்து எழுவது. வியர்த்த குழலில் நிறைந்திருப்பது. புறங்கழுத்தில், கையிடுக்கில் வீசுவது. அவன் கூச்சலிட்டபடி தேர்ப்பாகனை ஓங்கி உதைத்தான். “செல்க! செல்க!” என்று தேர்த்தட்டில் நின்று துள்ளினான். அம்புகளை செலுத்தியபடி விரைந்து சென்று துரோணரை எதிர்த்தான்.
அவனுடைய விசை அவரை முதற்கணத்திலேயே அஞ்சவைத்தது. அந்த ஒரு கணத் தளர்ச்சியிலிருந்து அவர் எழவே முடியாதபடி அவன் மேலும் மேலுமென அம்புகளால் அவரை அறைந்தான். அவருடைய கவசங்களின் இடுக்குகளிலெல்லாம் அவன் அம்புகள் அறைந்து நின்றன. விழியசைவையே கையசைவென்றாக்கிக் கொண்ட அவருடைய வல்லமையை அவன் தன் வெறியால் கடந்தான். அவர் தோளிலும் விலாவிலும் அவன் அம்புகள் தைத்தன. அவர் குருக்ஷேத்ரக் களத்திற்கு வந்த பின்னர் முதல்முறையாக தேர்த்தட்டில் குப்புற விழுந்து அம்புகளில் இருந்து தப்பினார். அவர் முதுகிலணிந்த கவசத்தை அம்புகள் அறைந்து உடைத்தன. சீற்றம்கொண்ட பேய்கள் என அவை அவரை முட்டி முட்டி ஆர்ப்பரித்தன. புரண்டு எழுந்து அவர் அவனை அறைந்தபோது அவன் மேலும் வெறிகொண்டு கூச்சலிட்டபடி அவரை நோக்கி வந்தான்.
துரோணர் அச்சமென்பதை முதல்முறையாக அறிந்தார். அவனுக்குள் பாதாளத்தின் கொடுந்தெய்வமொன்று குடியேறியது போலிருந்தது. விழிகள் வெறித்திருந்தன. சிதையில் எரிந்து தசையுருகும் பிணத்தின் முகம் என பற்கள் எழ வாய் இளித்து அகன்றிருந்தது. துரோணரின் உடலில் இருந்து அவர் உள்ளத்தை உணர்ந்த பாகன் தேரை பின்னெடுத்தான். அக்கணத்தில் அஸ்வத்தாமனின் அம்புகளால் கவசக்கோட்டை உடைந்து ஒரு வழி திறக்க அவர் அதனூடாக அப்பால் சென்றார். அவரை பூரிசிரவஸும் அஸ்வத்தாமனும் அம்புகளால் அரணிட்டு உள்ளிழுத்துக்கொண்டார்கள். சாத்யகி அவரை துரத்திவந்து மூடிக்கொண்ட கவசச்சுவரின் மேல் முட்டி நின்றான். “திற! திற! இழிமக்களே திறவுங்கள்!” என்று கூவினான்.
கவசப்படைக் காவலன் “மறுபக்கம் அவர்கள் மூவர், யாதவரே” என்றான். “உன்னை கொல்வேன். சங்கறுத்து உன்னை கொல்வேன்… திற!” என்று சாத்யகி தேர்த்தட்டில் ஓங்கி உதைத்தான். தேர்த்தூண்களை வில்லால் அறைந்தான். பின்னால் வந்த யுதிஷ்டிரர் “என்ன செய்கிறாய்? அறிவிலி… அங்கிருப்போர் மூன்று பெருவில்லவர்” என்றார். அவருக்குப் பின்னால் வந்த சதானீகன் “யாதவரே, உங்கள் பொறுப்பு நம் அரசரை காப்பது” என்றான். “ஆம்” என சாத்யகி தணிந்தான். தன் உடல்மேல் சித்தம் எடையுடன் வந்து வந்தமைய கால் தளர்ந்து தேர்த்தட்டை பற்றிக்கொண்டு “ஆம்” என்றான்.