கேள்வி பதில் – 61

ஆன்மிகநெறி என்பது வாழ்க்கையில் என்ன? மனிதன் புறவாழ்க்கையில் அன்றாடம் அனுசந்திக்கும் அவரவர் மூதாதையர் வழி கேட்டறிந்த ஜாதி, மத ஆசாரங்களா, அன்றி அவன் அகஉணர்வில் இறைமையைத் தேட எடுக்கும் முயற்சிகளும் மனநெறி ஒழுக்கங்களுமா?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

இச்சொற்களை நான் துல்லியமாகப் பகுத்துக் கொள்கிறேன். ஏனெனில் ஓர் சொற்களனில் [Discourse] சொற்களை வரையறுக்காமல் ஆன்மிகம் போன்ற கருத்துவடிவங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பது மேலும் குழப்பத்தையே அளிக்கும். அதேசமயம் மூலக்கருத்துவடிவங்களைப் பற்றி எவருமே முழுமுற்றான வரையறைகளை அளித்துவிட முடியாதென்பதையும் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

ஆன்மிகம், ஆன்மிக நெறி இரண்டையும் முதலில் வேறுபடுத்திக் கொள்கிறேன். ஆன்மிகத்தின் உயர்தளத்தில் நெறி என்று ஏதுமில்லை. ஓஷோவின் புகழ்பெற்ற தலைப்பு ‘எனது பாதை வெண்முகில்களின் பாதை‘. அற ஒழுக்கநெறிகள்கூட இல்லை. ஏதாவது ஒரு பொது நெறியை வகுத்துக் கொண்டு இந்தியமரபில் உள்ள மெய்ஞானிகளில் முக்கியமான பத்துபேரை அதில் அடைக்க முயன்றால் மூன்றுபேராவது வெளியே தான் போவார்கள்.

தன் தளத்தில் ஆன்மிகம் என்பது ஓர் இருத்தல், நிகழ்தல் மட்டுமே. அதற்கடுத்த தளத்தில் அது ஒரு தேடல். இரு வகையிலும் அதில் நெறி என ஏதுமில்லை.

இனி ஆன்மிகம் என்றால் என்ன என்பதை என் அறிதலைமட்டும் சார்ந்து சொல்கிறேன். நம் மரபில் இச்சொல் ‘ஆத்மீகம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. ‘ஆத்மா சார்ந்த’ என்பது எளிய பொருள். இந்து, பௌத்த, சமண, சீக்கிய மரபுகளில் ஆத்மா என்றால் சாதாரணமாக நாம் அறிவதுபோல ‘உயிர்’ அல்லது ‘பிரக்ஞை’ மட்டுமல்ல. ‘அத:’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது அச்சொல். அத: என்றால் அது என்றே பொருள். அவ்வேர்ச்சொல் சம்ஸ்கிருதம் மட்டுமல்ல. பெரும்பாலான இந்திய மொழிகளில் அச்சொல் உள்ளது. மொழிகளுக்கு முந்தைய மிகப்புராதனமான ஓர் ஒலியாக அது இருக்கலாம்.

ஒன்றின் இருப்பைச் சுட்டிக்காட்டும் ஒலி ‘அது‘. அதிலிருந்து வந்தது ஆத்மா என்ற சொல். ஒன்றின் சாராம்சத்தை, உள்ளீடை அது சுட்டுகிறது. ஒவ்வொன்றுக்கும் சுட்டிக்காட்டபடும் சாரம் ஒன்று உண்டு என்ற நம்பிக்கையின் நீட்சி அது. ஆசீவகம் போன்ற புராதனமதங்களில் காண்பவை அனைத்துக்குமே ஆத்மா உள்ளது என்ற கோட்பாடு இருந்தது. இது சர்வாத்மவாதம் என்று சொல்லப்பட்டது.

ஆகவே மொழி வழியாக உள்ளே சென்று பார்த்தால் ஆன்மிகம் என்றால் ‘சாராம்சவாதம்’ என்று பொதுவான பொருள். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும், இருப்புக்கும் சாராம்சமான ஒன்று அதில் உள்ளது. நாம் அறிவது அச்சாராம்சத்தின் ஒரு தோற்றத்தை மட்டுமே. ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம். அவ்வுண்மைகளைத் தொகுத்து, முன்னகர்ந்து, அவை ஒரு முழுமுதல் உண்மையின் தனி வெளிப்பாடுகளே என்ற எண்ணமே ஆன்மிகத்தின் அடுத்தபடி.

ஆன்மிகம் என்ற பொதுவான அடையாளத்துக்குள் வரும் எல்லா மத, தரிசன, தத்துவக் கோட்பாடுகளுக்கும் இப்பொதுவரையறை பொருந்தும்.

ஆன்மிகத்துக்கு நேர் எதிரானது நம் மரபில் பௌதிகவாதம் எனப்பட்டது. பௌதிகம் என்ற சொல் பூதம் என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. பூதம் என்றால் பருப்பொருள். புலன்களால் அறியப்படும் உண்மை தன்னளவில் முழுமை உடையது, அதற்கப்பால் அதற்கு சாராம்சமென ஏதுமில்லை என்ற தத்துவநிலைப்பாடே பௌதிகவாதமாகும். பொருளின் சாராம்சமாகவோ குணங்களாகவோ சொல்லப்படும் எல்லாமே அதன்மீது மனிதனின் அனுபவம் மூலம் ஏற்றப்படுபவை என்பதே இவர்களின் வாதமாகும்.

இவ்வாறு விளக்கும்போது பல விஷயங்களை வேறுபடுத்திக் காட்டவேண்டியுள்ளது. முதல் விஷயம் மேலை மரபில் பிளேட்டோவால் வரையறை செய்யப்பட்ட கருத்துமுதல்வாதம் [Idealism] ஆன்மிகவாதத்துக்கு மிகநெருக்கமான தர்க்கமுறை கொண்டதாயினும் அதிலிருந்து மாறுபட்டது என்பதே. நம் மார்க்ஸிய தத்துவ அறிஞர்கள் ஆன்மிகவாதத்தை கருத்துமுதல்வாதம் என்றே சொல்லியுள்ளனர். புலன்களால் அறியப்படும் பொருளை பிரக்ஞையால் தொகுத்து, அதன் பொதுத்தன்மைகள் வழியாக தூய கருத்து என்ற ஓர் உருவகத்தை அடைந்து, அக்கருத்தே அப்பொருளின் தொடக்கப்புள்ளி என்று எண்ணுவதே கருத்துமுதல்வாதம். அதாவது நாம் பொருள் எனக் கருதுவது பொருள் என்ற கருத்தையே. காரணம் நம் புலன்கள் நம்முள் உள்ள கருத்தையே அறிய முடியும். நாம் அறியாத ஒன்று நம்மைப் பொருத்தவரை இல்லாததுதான். நாமறியும் பொருட்கள் எல்லாம் உண்மையில் கருத்துகள்தான்

ஆன்மிகவாதத்தில் கருத்துமுதல்வாதமும் அடக்கம். ஆனால் ஆன்மிகவாதத்திற்குள்ளேயே பொருளின் முழுமுதல்தன்மையை ஏற்கக் கூடிய சமணமும் பௌத்தமும் அடங்கும். ஆன்மிகவாதமான சமணம் அனைத்திருப்புவாதம் [சர்வாஸ்திவாதம்] என்ற பேரில் பொருட்களின் இருப்பை ஏற்கிறது. அதாவது கருத்துமுதல்வாதத்தைப் பொருத்தவரை பசு என நாம் அறிவது பசுத்தன்மை என்ற கருத்தையே. புலன்கள் அதை அப்படி அர்த்தபடுத்திக் கொள்ளக் காரணம் பசுத்தன்மை என்ற அக்கருத்து ஏற்கனவே இருப்பதுதான். ஆனால் சமண மதத்தைப் பொருத்தவரை பசு என்பது நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் தனக்கென தனித்தன்மைகள் கொண்ட ஒரு இருப்பு. அதன் ஆத்மாவின் ஒரு பகுதியை நாம் அறிகிறோம் அவ்வளவுதான். ஆகவே ஆன்மிகவாதம் சாராம்சத்தைத் தேடுகிறதே ஒழிய சாராம்சம் என்பது தூய கருத்தே என முழுமுற்றாகச் சொல்லி முடிப்பது இல்லை.

இரண்டு. ஆன்மிகம் என்றால் இறைவாதம் அல்ல. ஆன்மிக வாதிகளில் ஒருபெரும்சாரார் சாராம்சமாக தாங்கள் உருவகிப்பதை இறைசக்தியாக உருவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் யூத, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களைச் [மொத்தமாக செமிட்டிய மதங்கள்] சேர்ந்தவர்களே இவ்வுருவகத்தை மிகத்திட்டவட்டமாக வகுத்துக் கொண்டுள்ள பெருமதத்தவர். இந்து மதங்களைப் பொருத்தவரை இறை உருவகம் மிக அருவமான [Abstract] ஒன்று. ஒவ்வொரு உருவ வருணனை அளிக்கும் போதும் உருவமற்றவன், குணங்களற்றவன், சொற்களுக்கே அப்பாற்பட்டவன், அறியவொண்ணாதவன் என்றே இம்மதங்கள் சொல்கின்றன. அதாவது ‘வகுத்துரைக்க முடியாததும் உணர இயல்வதுமான சாரம்’ என்பதே இறைவனாக உருவகிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தைப் பொருத்தவரை அந்த சாரம் என்பது மகாதர்மம். அதாவது ஒவ்வொரு பிரபஞ்ச நிகழ்விலும் ஓரு விதி ஊடாடுகிறது. இதுவே தர்மம். அத்தர்மங்களின் ஒட்டுமொத்தமான பெருவிதியே மகாதர்மம். அத்வைதத்தைப் பொருத்தவரை நாம் காணும் பிரபஞ்சமானது நம் அறிவின் எல்லையால் [அல்லது மாயையால்] நமக்குத் தென்படுவது. இதை தனித்தனிபொருட்களாகவும் செயல்களாகவும் நாம் காண்பது நம் அனுபவத்தின் இயல்பினால்தான். அதற்கு அப்பால் இது எவ்விதமான பேதமும் இல்லாத ஒருமையான பேரிருப்பு. அதுவே பிரம்மம். அதை நாம் நம் அனுபவத்தால் தான் வகுக்க முடியுமென்பதனால் அது வகுக்க முடியாதது. நம் அனுபவதளத்தைத் தாண்டிச்சென்றால் அதன் ஒருமையை உணரலாம். அதுவே சாராம்ச அனுபவம், அப்போது அறிபவன் அறிபொருள் என இரண்டு இல்லை என்கிறது அத்துவிதம்.

இப்படி இறைக்கோட்பாட்டிலேயே பல்வேறு வகை உண்டு. அத்துவைதி தன் இறையுருவகத்தை வழிபடுவதில்லை, ஏனெனில் அவனே அதுதான். அவன் சடங்குகள் செய்வதில்லை. கோவில்களுக்குப் போவதுமில்லை. ‘சோறிடும் நாடு துணிதரும் குப்பை’ என்று வாழ்ந்த சித்தர்களும் ஆன்மிகவாதிகளே. பௌத்தத்தின் யோகாசார மரபில் இறைவழிபாடுகள் ஏதுமே இல்லை. வெறுவெளிவாதமும் [சூனியவாதம்] அறிவகவாதமும் [விஞ்ஞான வாதம்] தான் அதில் உள்ளது. ஆனால் அவர்களும் ஆன்மிகவாதிகளே. ஆகவே ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல.

ஆன்மிகம் ஒரு கோட்பாடாக ஆகும்போது அக்கோட்பாட்டை பொதுவாக முன்வைப்பதற்கு மதம் என்று பெயர். செமிட்டிய மதங்கள் மதத்தை உறுதியான நிறுவனமாக ஏற்படுத்தியுள்ளன. இந்திய மதங்களும் சீன மதங்களுமெல்லாம் நம்பிக்கையாகவோ சிந்தனைமுறையாகவோ மதத்தை உருவகிக்கின்றன. மதம் ஆன்மிகத்துக்கான பாதையாக இருக்கலாமே ஒழிய மெய்யான ஆன்மிகம் மதத்தை மீறியதும் மதத்தின் வரையறைகளுக்கு நேர் எதிரானதுமாகும். ஆன்மிக ஞானிகள் மதம்கடந்த ஆளுமைகளாக இருப்பதை எந்நிலையிலும் காணலாம். ரமணரானாலும் சரி நாராயணகுருவானாலும் சரி அவர்களை மதத்திற்குள் அடக்க இயலாது. ஆகவே ஆன்மிகம் என்பது மதம் அல்ல.

மதம் தன்னை மரபார்ந்த நம்பிக்கைகள் குறியீடுகள் சடங்குகள் மூலமே நடைமுறை வாழ்க்கையில் பொருத்திக் கொள்கிறது. உதாரணம் நீத்தார்சடங்கு என்பது புராதனமான ஒரு நடைமுறை மட்டுமே. அதை மதம் தனக்குரிய பொருள் அளித்து தனது வழிமுறைகளில் ஒன்றாக ஆக்குகிறது. பல நம்பிக்கைகளிலும் குறியீடுகளிலும் சடங்குகளிலும் இவ்வாறு மதம் மூலம் ஏற்றப்பட்ட ஆன்மிக அடிப்படை இருக்கக் கூடும். ஆனால் ஆன்மிகம் என்பது அவை ஏதும் அல்ல.

ஆன்மிகத்தின் வழிமுறை ஒவ்வொருவரிலும் மாறுபடுகிறது. ஒருவருக்கு மதவழிபாடு அதன் வழிமுறையாகலாம். ஒருவருக்கு தியானம். ஒருவருக்கு தூய ஞானம். ஹெகலும் காண்டும் தன் ஆன்மிகத்தைத் தத்துவத்தினூடாக முன்வைத்தார்கள். ஐன்ஸ்டீன் தனது ஆன்மிகப் பாதை அறிவியலே என்று சொல்லியிருக்கிறார். தல்ஸ்தோய்யும் தஸ்தயேவ்ஸ்கியும் இலக்கியம் மூலமும் காந்தியும் அம்பேத்கரும் அரசியல்மூலமும் தங்கள் ஆன்மிகத்தேடலைந் நிகழ்த்தினர். ருஷ்யப் பெண்கள் தங்கள் ஆன்மிகத்தேடலை அழகிய கைக்குட்டைகள் பின்னுவதன் மூலம் நிகழ்த்துவதாக தல்ஸ்தோய் ஒருமுறை சொன்னார்.

ஆக, நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். பைது ஒரு தற்செயல்தொகையல்ல, இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல். ஐன்ஸ்டீனின் சொற்களில் சொன்னால் ‘கடலோரம் சிப்பி பொறுக்குதலாக’ அது ஆகலாம். ஆனாலும் அத்தேடல் மானுட ஞானத்தின் எல்லைகளை மேலும் மேலும் விரிவாக்குகிறது.

நான் பௌதிகவாதத்தின் முக்கியத்துவத்தை நிராகரிப்பவனல்ல. அது ஆன்மிகத்தின் மறுபக்கம். அதனுடனான தொடர் உரையாடல் மூலமே ஆன்மிகம் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ள இயலும். பௌதிகவாதத்தின் பயன்கள் அரசியலில், பொருளியலில், அன்றாட வாழ்வின் ஆயிரமாயிரம் தளங்களில் முக்கியமானவையே. ஆனால் பௌதிகவாதம் ‘மனிதனின் அறிவை’ அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆகவே அவனது அறிவின் எல்லைகளுக்குள் அது நின்றாகவேண்டியுள்ளது. உள்ளுணர்வின் தளங்கள் அதற்கு அந்நியமானவை. நான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி. எனது ஆன்மிகத்தேடல் இலக்கியத்தின் வழியாக நிகழ்கிறது.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 60
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 62, 63