இனிய ஜெயம்
எனது பதின்பருவ மத்தியில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய முக்கிய திரைப்படங்களில் ஒன்று ஸ்பீல்பர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம். [இதை எழுதும் இக்கணம் மனிதன் கைகளிலிருந்து நழுவிய காவலாளி, மிருகத்தின் வாய்க்குள் செல்லும் இறுதிக் கணம், மனிதனும் மிருகமும் கண்ணுக்குக் கண் பார்த்துக்கொள்ளும் அப் படத்தின் காட்சி வலிமையாக உள்ளே எழுகிறது.உலக திரைப்பட வரலாற்றின் சிறந்த நூறு ஷாட் களில் ஒன்றாக அது இருக்க வாய்ப்பு உண்டு] காரணம் அதில் உயிர் கொண்டு உலவும் ஜுராசிக் காலக்கட்ட டினோசர்களை காண எனது ஏழாம் வகுப்பு நிறைவு காலக்கட்டத்தில் இருந்து மிக்க ஆவலுடன் காத்திருந்தேன் என்பதுதான் .
படம் வெளியான பின்னர் பாக்யா வார இதழில், ஜுராசிக் பார்க் உருவான விதம் குறித்த தொடர் ஒன்று வெளியானது. அதில் இறுதி பகுதியாக ஸ்பீல்பெர்க் நேர்காணல் இடம்பெற்றிருந்தது .அதில் ஜுராசிக் பார்க் படத்துக்கான விதை அவருள் விழுந்த விதத்தை கூறி இருந்தார் . அவரது பதின்பருவ மத்தியில் அவர் பார்த்த ஒரு படம் தி லாஸ்ட் வேர்ல்ட் . பிரபல நாவலை அடிப்படையாக கொண்டு உருவான படம் . எழுபதுகளின் கப்பல் பயணிகள், புயலில் திசை மாறி, உலக மேப்பில் இதுவரை சேராத மனிதக்காலடி படாத தீவு ஒன்றை சேர்கிறார்கள். அங்கே காலத்தால் முற்பட்ட ஜுராசிக் கால டைனோசர்கள் வாழ்கிறது. சிக்கிக்கொண்ட அவர்களில் இருந்து ஒரே ஒரு சாகச நாயகன் மட்டும் தப்பி வெளியேறும் கதை.
தர்க்கமற்ற கேணத்தனமான திரைக்கதையில் மிக சுமாராக எடுக்கப்பட்ட, குறிப்பாக கோரமான டினோசர் பொம்மைகள் நிறைந்த, குறைந்த பட்ஜெட் திரைப்படம். டினோசர் முதன் முதலாக திரையில் தோன்றும் போது, கையில் இருந்த ஐஸ்க்ரீமில் பாப் கார்னை பிசைந்து, [வாந்தி போல தோற்றம் வரும் வகையில்] பால்கனியில்வரிசையில் இருந்து கீழே முதல் வகுப்பு வரிசையில் அமர்ந்திருப்போர் தலையில் பொழிந்து, அரங்க நிர்வாகிகளால் வெளியேற்றப்பட்டேன். பின்னர் நெடுநாள் கழித்து,எனக்குப் பிடித்த டினோசரை நானே செய்து விளையாடினேன். எனது விளையாட்டின் பங்குதாரரே நீங்களும், உலக குழந்தைகளும் என அந்த நேர்காணலில் சொல்லி இருந்தார் ஸ்பீல்பெர்க்.
ஸ்பீல்பெர்க் பார்த்த அந்த படத்தின் நாவலை அடியொற்றி [கதையின் முடிவில் அது குறிப்பிடப்பட்டு இருந்தது] கௌசிகன் என்பவர் எழுதிய மறைந்த உலகம் எனும் தொடர் கதையை எனது ஏழாம் வகுப்பு விடுமுறையில் வாசித்திருந்தேன். வாண்டுமாமா எனும் பெயரில் பால்ய வயதினருக்கு எழுதும் கிருஷ்ணமூர்த்தி அவர்களேதான் கௌசிகன் எனும் பெயரில் இளைஞர்களுக்கும் எழுதினார் என்பதை பின்னர் அறியவந்தேன் .
ஏழாவது விடுமுறை காலத்தில்தான் எனக்கு வாண்டுமாமா அறிமுகம். கனவுகளைப் பெருக்கி கற்பனை உலகில் உலவும், அந்த சுகத்தில் திளைக்கும் மாயத்தை அவரே முதன் முதலாக எனக்குள் ஊட்டினார் . திருச்சி நகரை மையமாகக் கொண்டு அவர் நடத்திய சிவாஜி பத்திரிக்கையில்தான் சுஜாதாவின் முதல் கதை வெளியானது. இன்றைய இணையஉலகிலேயே,பிழைகள் மலிந்து கிடக்கும் தகவல்களே நிறைந்து வழியும் சூழலில், எண்பதுகளில் பாலர் உலகுக்கு அவர் அளித்த கொடை அளப்பரியது. அவரது தகவல் புதையல் இரண்டு தொகுதிகள் இப்போதும் என் சேகரிப்பில் உண்டு. தகவல் பிழைகளே அற்ற பொக்கிஷங்கள் அவை. பாலூட்டிகள், பறவைகள் , விண்மீன்கள், வானவெளி, இயந்திரங்கள் இயங்கும் விதம், புராணக் கதைகள், அறிவியல் விளையாட்டுக்கள், என கிட்ட தட்ட பாலர் உலகின் செல் திசைக்கான அனைத்து பாதைகளையும், பிழையற்ற துல்லியமான தகவல்களுடன், கதை சொல்லிச் செல்லும் சுவாரஸ்யமான மொழி நடையில் பாலகர்களுக்கு கடத்தியவர். புத்தி ஜீவி படைப்பாளி. புராணங்களில் இருந்து பாலகர்களுக்கான அதி நாயகனை உருவாக்கி அளித்தவர்.உதாரணம் கழுகு மனிதன் ஜடாயு. சந்தேகமே இன்றி அவர் காலக்கட்டத்து குழந்தைகளின் விருப்பத்துக்கு உரிய ஆசான்.
இரண்டாயிரத்து பதினாலில் தனது தொண்ணூறாம் அகவையில் இயற்கைஎய்திய அரிமளம் கிருஷ்ணமூர்த்தி எனும் வாண்டுமாமா, அவரது பணிக்காலத்தின் இரண்டாம் பகுதியில் முன்னெடுத்த விஷயங்கள், அந்த காலக்கட்ட சூழல் சார்ந்த மிக மிக முக்கியமான முன்னெடுப்பு. முதல் காலக்கட்டம் முடிந்து, ஏதோ காரணங்களால் அவர் பணியாற்றிய பத்திரிக்கை நின்று போகிறது. 1990 ல் வாண்டுமாமாவை ஆசிரியராகக் கொண்டு, பூந்தளிர் மீண்டும் துவங்குகிறது. தொலைக்காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக பெருகும் சூழல். பத்திரிக்கைத் துறையோ, காசு பணம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு, சாணித்தாளில் தாறு மாறாக, ஜோசியம், மஞ்சள் பத்திரிகை, சிறுவர் காமிக்ஸ், என எல்லா தளத்திலும் ஒரே பத்திரிகை,புத்தகங்களை அச்சிட்டுத் தள்ளிக்கொண்டு இருந்தன. பத்து பத்திரிகை நிறுவனம் இருந்தால், பத்து சிறுவர் இதழ் நிச்சயம். புரட்சித் தலைவர் எம்ஜியார் தோன்றும் காமிக்ஸ் ஒன்று இருந்தது என்பது,இன்று அதை வாசித்த எனக்கே ஆச்சர்யமான தகவல்தான்.
இந்த குப்பைகளில் இருந்து வெளியேறி தனித்து நின்றவை, முத்து மற்றும் ராணி காமிக்ஸ் மட்டுமே. இந்த இரு பத்திரிக்கைகளும் கூட வெளிநாட்டு காமிக்ஸ் உரிமைகளை நம்பி இயங்கிக் கொண்டிருக்க, இந்த சூழலில்தான் வாண்டுமாமா மீண்டும் பூந்தளிர் இதழை துவங்குகிறார். இதழ் முழுதும் அறிவுக்கு வேலை, புதிர்கள், அறிவியல் செய்திகள், கபீஷ்,வேட்டைக்கார வேம்பு, சுப்பாண்டி போன்ற இந்திய காமிக்ஸ் களை கொண்டு பத்திரிகை நடத்த துவங்குகிறார். பூந்தளிர் நிறுவனம் வழியே, அமர் சித்திரக் கதை வரிசை என பாரத கதைகளை காமிக்ஸாக பாலர்கள் மத்தியில் உலவச் செய்தவர் அவர்தான். கோட்டயத்தில் இருந்து வெளியான பைக்கோ க்ளாசிக்ஸ் வரிசையை, தமிழுக்கு தனது பூந்தளிர் நிறுவனம் வழியே கொண்டு வந்தார். முப்பத்தி இரண்டு பக்க காமிக்ஸ்.ஒரு பக்கத்தில் நான்கு படங்கள். இந்த எல்லைக்குள் வைத்து, சிறிய ஆசிரியர் அறிமுகம், அவரது சூழல் பின்னனி அறிமுகம், அவரது பிற ஆக்கங்களின் பட்டியலுடன் தமிழ் மொழிபெயர்ப்பில்,உலக கிளாசிக்குகளை காமிக்ஸ் வடிவில் வழங்கியது பைக்கோ கிளாசிக் நிறுவனம். டான் குவிசாட், ட்வேல்த் நைட், மெர்ச்சன்ட் ஆப் வெனிஸ், மென் இன் தி அயன் மாஸ்க், த்ரீ மஸ்கடேர்ஸ், என பல உலக இலக்கியங்கள் இங்கே காமிக்ஸ் வடிவில் உலவின என்பதை, இன்று எவரும் நம்பப் போவதில்லை. இன்று இவற்றை நினைக்கையில் கண்ணீர் துளிர்க்கிறது. பாலர் இலக்கியத்தில் வாண்டுமாமா செய்து பார்த்தது ஒரு பெரும்பணி.
வெள்ளி மலை வாசித்து முடித்த முதல் கணம்.வாண்டுமாமா நினைவே எழுந்தது. அவர் கதைகள் போலவே, அறியாத ஒன்றை நோக்கிய,துப்பறியும் பயணம், பெரிதும் நிலத்தில் கால் ஊன்றி நிற்கும் கதை. கற்பனை விரிந்து பரவ விரிவான பின்புலம். இளம் வாசகன் தன்னை இணைத்து நோக்கிக் கொள்ளும், நாயின் துணையுடன் சாகச பயணம் மேற்கொள்ளும் சிறுவன் என. என்னை, எனக்குள் உறைந்திருக்கும் பதின் வயதின் துவக்க கால சிறுவனை மீண்டும் கண்டு கொள்ள வைத்தது வெள்ளி நிலம்.
நோர்பா எனும் பௌத்த சிறுவன், பாண்டியன் எனும் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் நரேந்திர பிஸ்வாஸ் எனும் பௌத்தஇயல் ஆய்வாளருடன் இணைந்து,[துணைக்கு நாக்போ எனும் கருப்பு லாப்ரடார்] இமயமலை பகுதிகளில் சாகசப் பயணம் மேற்கொண்டு அடையும் வெற்றியில், அவன் கற்றதும் பெற்றதும் என விரியும் நாவல்.
ஆறாயிரம் வருடத்துக்கு முன்பு சீனத்தில் இயங்கிய நாகரீகத்தில் துவங்கி ,அதிலிருந்து மேலெழுந்த பண்டைய போன் மதம், அதை உடசெறிந்து வளர்ந்த தீபெத்திய பௌத்தம், பௌத்தத்தின்தோற்றம்,பிரிவுகள்,வளர்ச்சி,வகைமைகள்,வண்ண பேதங்கள், அவற்றை முன்னெடுத்த புத்தர், பத்ம சம்பவர், மிலரேபா போன்ற ஆளுமைகள், மானுடவியல், நிலவியல், அரசியல் மதம் பண்பாடு உணவுக் கலாச்சாரம், வைத்தியம், என விரிவான , இமயமலையின் பௌத்த பண்பாட்டு பின்புலத்தில் ஒரு சுவாரஸ்யமான புனைவுக் களத்தில் இயங்குகிறது வெள்ளி நிலம்.
இமையத்தின் நிலமும் பொழுதும் பல்வேறு நுண்ணிய தகவல்களை, சுவாரஸ்ய காட்சிகளாக விவரித்தபடி விரிகிறது. நரேந்திர பிஸ்வாஸ் எனும் ஆய்வாளர், சிறுவன் நோர்பாவுக்கு விவரிக்கும் வகையில் ஒவ்வொரு சூழலும் அமைந்திருப்பதன் வழியே, ஒரு சூழலின் விவரிப்பும், அந்த சூழலுக்கான விளக்கமும், அந்த சூழல் தரும் அனுபவமும் கச்சிதமாக முயங்கி,அலாதியான வாசிப்பின்பத்தை நல்குகிறது .
பொதுவாக புதையல் வேட்டை கதைகள், தீயவர்களின் பேராசை,அது வீழும் இறுதிக் கணம் எனும் புள்ளியில் வந்து முடியும். முடியும் என்பதை விட முட்டி நின்று விடும் என்பதே சரியானது. தீயவர்கள் அந்த பெரும் புதையலுடன் அழிந்து போவார்கள். அந்தனை செல்வத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் என அந்தக் கதையை வாசிக்கும் சிறுவன், கதையின் முடிவில் ஒரு கேள்வியை கேட்டால், அந்தக் கதை திகைத்து நின்று விடும். மாறாக இந்த வெள்ளி நிலம் கதையின் வில்லன் பான் அந்த புதையல் எதற்க்காக என பதிலிறுக்கும் போது, இது வரை வாசித்த கதையை வைத்துக்கொண்டு, சிறுவனால் இதன் கதை தொடர்ச்சி மீது, கற்பனையால் உலவ முடியும் .
கதைக்குள் நிகழும் ஒவ்வொன்றையும் நோர்பா விளங்கிக்கொள்ள பிஸ்வாஸ் சொல்லும் உதாரணம் சுவாரஸ்யமானது .குறிப்பாக ஜாக்கி சான் பட காட்சி ஒன்றை வைத்து, மஞ்சள் முக மானுட வகைமையை விளக்கும் சித்திரம். எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த நாவலை அணுக்கமாக உணர வைத்தது, டைகர் மொனாஸ்ட்ரி யின் சூழல் வர்ணனை. தொங்கு பாலத்தில் அருவியை கடக்கும் போது,குதிரை அளவே நானும் சிலிர்த்து விட்டேன்.
மானுடவியல் துவங்கி, மந்திரங்கள் சடங்குகள், வழிபாடு,தியானம், என மதக்கட்டுமானத்தின் அடிப்படைகள் அனைத்தயும் விவரிக்கும் நாவல் உச்சம் கொள்வது , நோர்பாவும் நாக்போவும் இமைய சிகரத்தில், அந்திச் சூரியனாக புத்தரைக் காணும் சித்திரத்தில். என்னளவில் எனக்கு மிக மிக்கியமான நூல் இந்த வெள்ளி நிலம் . இந்த கதைக்கு பிறகே வாண்டுமாமா எனக்களித்தவற்றை புறவயமாக வகுத்து உணர முடிந்தது . ஆம் நான் வாண்டுமாமாவில் துவங்கி இருக்காவிட்டால் ஜெயமோகனை வந்தடைந்திருக்க மாட்டேன். எண்ணப்பெருகும் வாண்டுமாவின் நினைவுகளை எழுப்பி விட்ட வெள்ளி நிலத்தின் சாரமான புத்தன் கண்ட ஒளிக்கு இவ்விரவு : )
கடலூர் சீனு