அலஹாபாத் என்னும் பிரயாக்ராஜுக்கு அந்திக்குள் சென்றுசேர்வதென்று திட்டம். ஆனால் அதற்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. ஐந்துமணிநேரத்தில் போய்விடலாம்தான். ஆனால் காலை என்பது பன்னிரண்டு மணி என கணக்கு. ஒருவழியாக ஒன்பது மணிக்கு எழுந்து சொக்கிய கண்களுடன் பார்த்துவிட்டு பொழுது விடிய இன்னும் கொள்ளைநேரம் இருக்கிறது என்று திரும்பப்படுத்துக்கொள்ளும் மனநிலை. ஆனால் உச்சிப்பொழுதிலும் இதமான இளவெயில்.கொஞ்சம் நிழல் இருந்தால்கூட அங்கே குளிர்.
வட இந்தியாவிற்கு பொதுவாக இருக்கும் ஒரு வெறிச்சிட்ட தன்மையை சாலையில் பார்த்துக்கொண்டே சென்றோம். மஞ்சள்மலர்கள் நிறைந்த வயல்கள் இருந்தாலும் ஏன் அப்படி தோன்றுகிறது என்று எண்ணிப்பார்த்தேன். புழுதி ஒரு காரணம். எங்கும் மரங்களே இல்லை என்பது இன்னொரு காரணம். இங்கே விறகுமரங்கள்கூட இல்லை. ஆங்காங்கே நின்றிருக்கும் மரங்கள்கூட புழுதிபடிந்து இலைகுறுகி கிளை ஒடுங்கி சோர்ந்த காகம்போல் தெரிந்தன.
இங்கே விறகுக்கு வறட்டிதான். வறட்டியில் உமி, வைக்கோல்கூளம் ஆகியவற்றுடன் கொஞ்சம் மெல்லிய மணலையும் கலந்துகொள்கிறார்கள். அது வெப்பம் நீடிக்க உதவுகிறது. இவர்களின் சமையல் மதியம் ஒருவேளைதான். காலை உணவு கிடையாது. அந்தியில் கொஞ்சம் சப்பாத்தி வாட்டிக்கொள்வார்கள். ஆகவே விறகுத்தேவை மிகக்குறைவு. பெண்களின் வேலை பகல்முழுக்க வறட்டி தட்டுவது. அதிலும் இனிவரும் மாதங்களில் இருமடங்கு வறட்டி தேவை. ஜூனில் வரும் மழைக்காலத்தின்போது வீட்டை ஒட்டிய கொட்டகையில் வறட்டி அடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
சிவராமகாரந்தின் மண்ணும் மனிதரும் நாவலில் சென்ற நூற்றாண்டில் பெண்களின் முழுநேர வேலைகளில் ஒன்று விறகுசேர்ப்பது என்பதை காண்கிறோம். வெள்ளப்பெருக்கில் வரும் விறகுத்தடியைப் பிடிக்க உயிரை பணயம்வைத்து நீந்திச்செல்கிறார்கள் ஐதாளரின் மனைவியர். ராஜஸ்தானிலும் மத்தியப்பிரதேசத்திலும், குஜராத்திலும் குடிநீர் சேர்ப்பது வறட்டி செய்வது இரண்டுமே பெண்களின் வாழ்க்கை. இந்தப்பயணத்தில் ஒன்றை காணமுடிந்தது. வறட்டிப்பயன்பாடு பெருமளவுக்கு குறைந்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் சிறிய கிராமங்களில்கூட எரிவாயு அடுப்புகள் புழக்கத்திலிருக்கின்றன. டீக்கடைகளில் முழுக்கமுழுக்க எரிவாயு அடுப்புகள்தான். மிகக்குறைவாகவே கரியடுப்பை பார்க்கமுடிந்தது. இது ஓர் ஆக்கபூர்வமான மாற்றம்.
அதேபோல வியப்புக்குரிய ஒரு மாற்றம் திறந்தவெளியில் மலம் கழிப்பது மறைந்திருப்பது. இரண்டு சிறிய ஊர்களுக்குள் சென்றோம். இரு ஊர்களிலும் சிறியவீடுகளில்கூட கழிப்பறைகள் தென்பட்டன. பொதுக்கழிப்பறைகளும் இருந்தன. முன்பெல்லாம் நம்மூர்போலவே எங்கும் திறந்தவெளிகளில் கால்வைக்க முடியாது. சம்பலின் கரை நம்மூர் ஆற்றங்கரைகளை விட தூய்மையாகவே இருந்தது. அரசின் உக்கிரமான பிரச்சாரமும் கழிப்பறை கட்ட ஊரகத்துறைவழியாக செய்யப்பட்ட முயற்சிகளும் பயனளித்துள்ளன என்றே உணரமுடிகிறது.
ஆனால் இன்னமும் இங்கு உருவாகாதிருப்பது கட்டிடங்கள் சார்ந்த பண்பாடு. புதிய கட்டிடங்கள் இப்போதுதான் உருவாகின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமலேயே புழக்கத்திலுள்ளன. கட்டிடங்களின் முன்பக்கத்தை மட்டும் சிமிட்டி பூசி வெள்ளையடித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். அவை பரிதாபமான பாழடைந்த தோற்றத்தை காட்டுகின்றன. ஒட்டுமொத்த ஊரே குண்டுவீச்சுக்குப் பின்னர் என காட்சியளிக்கிறது. அதேபோல நல்ல வீடுகளுக்கு முன்னால்கூட கேவலமாக தகரக்கூரை போட்டுக்கொள்வதும் எருமையை கட்டி வைத்திருப்பதும் காணக்கிடைக்கிறது.
வட இந்தியாவிலிருந்து நேராக நான் சென்றது கோழிக்கோடு வழியாக கல்பற்றாவுக்கு. கேரளத்தின் அந்தச் சிற்றூர் கான்பூருடன் ஒப்பிடுகையில் ஓர் ஐரோப்பிய நகரம்போன்றது. பங்களா அல்லாத வீடுகளே குறைவு. அத்தனை கட்டிடங்களும் புதியவை, ஆடம்பரமானவை. வட இந்தியர் கேரளத்திற்கு வந்தால் பிரமித்து வாய்பிளந்துவிடுவது இதனால்தான்.
வழியில் கங்கையை கண்டோம். அதன் கரையில் அமைந்திருந்த ஒரு சிற்றூரை சென்று பார்த்தோம். அது நீத்தார்சடங்குகளுக்குரிய துறை. அந்த உச்சிப்பொழுதிலும் நிறைய ஆட்களிலிருந்தனர். சோம்பலாக கங்கை வெயில்காய்ந்தது. பலர் முடியிறக்கிக்கொண்டிருந்தார்கள். சாலையோரமாக ஒரு பழைய சத்திரம் கைவிடப்பட்டுக் கிடந்தது. அதற்குள் சென்று சுற்றிப்பார்த்தோம். ஏதோ ஜமீன்தாரும் தம்பியும் சென்ற நூற்றாண்டில் கட்டிய உறுதியான பெரிய கட்டிடம். இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பது தெரிந்தது. நூறுபேர் வரை தங்க உகந்தது.
அந்த ஊரே சென்றகாலத்தில் இருந்தது என்று தோன்றியது. இளைஞர்கள் ஆங்காங்கே வெயிலில் மாவா மென்றபடி அமர்ந்திருந்தனர். ஓர் ஊரே எருமைக்குரிய தியானநிலையில் இருப்பதை அப்போதுதான் பார்க்கிறேன். ஊரை சோம்பலாக சுற்றிவந்தோம். பருப்புவயல்கள் நடுவே நின்று வேடிக்கை பேசிக்கொண்டோம். முற்றிலும் சம்பந்தமற்ற இடத்தில் எந்தத் திட்டமும் இல்லாமல் சென்றுசேர்வதே எப்போதும் எங்கள் பயணத்தை பொருள்கொண்டதாக ஆக்குகிறது. அங்கே அடையும் அறிதல் வேறெங்கும் நிகழ்வதில்லை.
அங்கே இனிப்பு விற்றுக்கொண்டிருந்தனர். கங்கைச்சமவெளி முழுக்கவே எருமைப்பாலில் அஸ்காசக்கரையை போட்டுக் கிண்டி வற்றவைத்து உருவாக்கப்படும் பேடா எனப்படும் பால்கோவா பிரபலமானது. எனக்கு அது ஒரு வாய்க்குமேல் திகட்டும். ஆனால் கிருஷ்ணன் பழைய சோறு போல உருட்டி உருட்டி தின்பார். நண்பர்களும் இனிப்பை வாங்கி சாப்பிட்டார்கள். “நல்லா இருக்கு சார். கண்டெண்ட் பால்னு நினைக்கிறேன்” என்று ராஜமாணிக்கம் கருத்து சொன்னார்.
வழியெங்கும் டீக்கடைகளில் அமர்ந்து கால்நீட்டி சோம்பல்முறித்து டீ அருந்தினோம். ‘என்னத்தை கும்பமேளா போய் என்னத்தை பார்த்து’ என்பதுபோன்ற ஒரு மனநிலை. இந்தியாவில் அரசு தடைசெய்யவேண்டிய, கறாராக கடைப்பிடிக்கவேண்டிய கொள்கை ஒன்று உண்டு. சாலையோரங்களில் தேவையில்லாத பொருட்களை போட்டுவைப்பது. தமிழகத்திலும் இது மிகுதி. உண்மையில் சாலை ஒரே பொது இடமாக இருக்கிறது இங்கே. ஆகவே நம் ஊர்கள் எந்த அளவுக்கு அவலட்சணமாக இருக்கின்றனவோ அதைவிட மூன்றுமடங்கு சாலைகள் அவலட்சணமாக உள்ளன. வரவேற்பறையில் ஓட்டைஉடைசல்களை கொண்டு குவித்துவைப்பதுபோன்றது இது. சாலைவழிப்பயணம் மிகப்பெரிய விழிச்சோர்வை உருவாக்குவது இதனால்தான்.
அந்தியில் அலஹாபாத் வந்துசேர்ந்தோம். விடுதியறையை முன்னரே பதிவுசெய்திருந்தோம். விடுதிப்பதிவுகளுக்குரிய வலைத்தளம் வழியாக. வந்தபின் அவன் இருமடங்கு விலைகேட்டான். புகார்செய்வோம் என்று சொல்லி மிரட்டினார்கள் நண்பர்கள். வழக்கறிஞர்கள் என்றதும் சொன்ன தொகைக்கே ஒப்புக்கொண்டான். ஆனால் வெந்நீர் கிடையாது. அமிழ்த்தப்படும் சுடுநீர்காய்ச்சிதான் தரப்படும். அது விடுதி அல்ல, ஒரு பகுப்பில்லம்தான். ஆகவே எந்தச் சேவையும் இல்லை. ஆனால் தலைக்கு நாநூறுரூபாய் என்பது பரவாயில்லை என்று தோன்றியது.
வழியில் உத்தரப்பிரதேசத்தின் சமநிலங்களில் வாழும் மான்களை பார்த்தோம். தற்செயலாகவே இவை கண்ணில்பட்டன. வயல்களுக்கு நடுவே உள்ள சற்றுமேடான நாணல்புதர்களிலும் குட்டிக்காடுகளிலுமாக இவை வாழ்கின்றன. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கொண்டவை. ஆகவே நாங்கள் வண்டியை நிறுத்தியதுமே காதுகளை விடைத்து நோக்கிவிட்டு துள்ளி ஓடிவிட்டன.
கூர்ந்து நோக்காவிட்டால் கன்றுகுட்டிகள் என நினைத்துவிடுவோம். ஊர்கள்நடுவே இவை இப்படி சுதந்திரமாக வாழ்வது இவற்றை இம்மக்கள் வேட்டையாடுவதில்லை என்பதையே காட்டுகிறது. அது ஓர் அழகான விஷயம்தான். விவசாயம் வணிகமயமாகி, ஊர்கள் நவீனமாகும்போது அங்கே வனவாழ்க்கையின் கூறுகளுக்கு கொஞ்சமும் இடமில்லாமலாகிவிடுகிறது.
மறுநாள் முதல் கும்பமேளா. அலஹாபாத் நகரம் சுத்தமாக இருந்தது. சாலைகளும் மேம்பாலங்களும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முகலாயர்காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் ஆதலால் மிக அகன்ற தெருக்கள். நாங்கள் தங்கியிருந்தது தொன்மையான சாலை. நீதிமன்றம் அங்குதான் இருக்கிறது. இருமருங்கும் ஏராளமான பழைய மாளிகைகள். எங்கும் கும்பமேளாவின் நெரிசல் இல்லை. உண்மையில் அங்கே அப்படி ஒரு விழா நிகழ்கிறதா என்ற ஐயமே ஏற்பட்டது.
தானியங்கி பணமளிக்கும் கருவியைத்தேடி நகரில் அலைந்தோம். எங்குபார்த்தாலும் கல்விக்கூடங்களின் விளம்பரங்கள். நாங்கள் அதுவரை பார்த்த உத்தரப்பிரதேசம் வேறெங்கோ இருந்தது. உடல்சுருண்டு அசைவிழந்திருக்க படமெடுத்த பாம்புபோல. பிட்ஸா கார்னர்கள், சொமோட்டோ விளம்பரங்கள். குட்டைஆடைப் பெண்கள். வண்ணக்கூந்தல் சிலுப்பல்கள். குளிரத்தொடங்கிவிட்டது. சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வந்து படுத்தோம். “நாளை காலை அஞ்சுமணிக்கு எந்திரிக்கிறோம். ஆறுமணிக்கு கும்பமேளா போறோம்” என்றார் கிருஷ்ணன். துயரார்ந்த அமைதியே அவருக்கு மறுமொழியாக அமைந்தது.