பனைமரச்சாலை – வாங்க
காட்சன் எழுதி நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் பயணநூலான பனைமரச்சாலை குறித்து
”உழைத்துக் காய்த்த உடல்போல கருமையாக, திடமாக, மண்ணில் வேரூன்றி வானில் தலை தூக்கிப் பனை மரங்கள் நிற்கின்றன. வன்மம் மிக்க முனகல்கள் அவற்றிலிருந்து எப்போதும் எழுந்து கொண்டிருக்கின்றன. பனையேறிகளைப் போல பனைகளும் அதிகம் பேசுவதில்லை. அவை அபூர்வமாக வெறிகொள்வதுண்டு; மதுவுண்டு போதையேறிய பனையேறிகளைப் போல. அவைஅப்போது ஊளையிட்டு அலறி தலை சுற்றித் தாண்டவமாடும். அப்போது கூட அடிமரம் திடமான கருங்கல் கோபுரம் போல அசைவற்று நிற்கும். தொட்டு ப் பார்த்தால் அவற்றின் சிரம் வழியாக க் கடந்துபோகும் புயலின்வேகம் சிறு அதிர்வாகத் தெரியும். இந்த திடத்துடனும், இதே வேகத்துடனும் அவை பேச ஆரம்பித்தால் என்ன ஆகும்? சிதறிபரந்து கிடக்கும் அவை அணிவகுக்கும் ஒரு காலம் வரும் என்று கற்பனை செய்வேன்”.
பின் தொடரும் நிழலின் குரல் – ’கரும் பனை மீது காற்று’
என் 12 வயது வரை பட்டுக்கோட்டைக்கு அருகில் ஆலத்தூர் என்ற கிராமத்தில் தான் வாழ்ந்தோம். எல்லா தஞ்சைவட்டாரக் கிராமங்களைப் போலவே ஆறு, ஏரி, குளங்கள், தென்னந்தோப்புகள், வயல் வெளிகள், எண்ணற்ற மரங்கள், வீடு தோறும் கிணறுகள், சிறிய பிள்ளையார் கோவில், பெரிய சிவன் கோவில், அதன்முகப்பில் இரு பெரிய ஆலமரங்கள், பக்கவாட்டில் மண்டகப் படி என அமைந்த அழகிய ஊர்.
நான் வீட்டில் இருந்த நேரத்தை விட வெளியில் சுற்றித் திரிந்த நேரங்களே மிகுதி. ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கும், தெருவும், ஏரிக்கரையும் அத்துபடியாகுமளவு நடந்தும், சைக்கிளிலும் சுற்றியிருக்கிறேன். ஆலத்தூரில் தென்னை மரங்களே மிகுதி. பனை மரங்கள் ஊரின் ஒதுக்குப் புறமுள்ள பெரிய ஏரியின் கரையில் நீர்மேல் கவிழ்ந்து நிற்கும். அதைத் தாண்டி சுடுகாடு. பேய் ,பிசாசு நம்பிக்கையுள்ளவர்கள் அங்கே குளிக்க போக மாட்டார்கள். தன் பகுத்தறிவால் பேய்,பிசாசையெல்லாம் ஓட ஓட விரட்டும் என் அப்பா ஆற்றில் தண்ணீர் வராதபோது ஏரிக்கு என்னை குளிக்க அழைத்து ப் போவார். அடியில் உள்ள கூழாங் கற்கள் தெரியுமளவு தண்ணீர் பளிங்கு போல் இருக்கும்.
அப்போது தான் பனை மரங்களைப் பார்த்திருக்கிறேன். வேறிடங்களில் கவனித்ததில்லை. அந்த சூழலுடன் இணைந்தே அவை என் மனதில் பதிந்தன. அதன் கருத்த , முரட்டு அடி மரம், சொர சொரப்பான நடுமரப்பகுதி, மட்டைகள் சிலுப்பிக் கொண்டு நிற்கும் உச்சி, காற்றடிக்கும் போது அதில் வரும் கரகர சத்தம் எல்லாமே அதனை ஒரு அமானுஷ்ய மரம் எனக் காட்டிற்று. அதனால்தான் என நினைக்கிறேன், அந்த முரட்டு மரத்தை எனக்கு பிடிக்காமலே ஆயிற்று.
என் எண்ணங்களை உலுக்கி பனை பற்றி நான் கொண்டிருந்த பிம்பங்களை தகர்த்தது காட்சன் எழுதிய ‘பனைமரச் சாலை’. நாகர்கோவில்காரரான காட்சன் சாமுவேல் பதினைந்து வருடமாக எங்கள் குடும்ப நண்பர். பனை மீது பேரார்வம் கொண்டவர்.பனையைத் தேடியும் , பனை சார்ந்த அனுபவங்களை பெறவும், அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் கிறித்தவப் போதகராக பணியாற்றும் மும்பையிலிருந்து கன்யாகுமரி வரை ஏறத்தாழ 3000 கி.மீ. தன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அது பற்றிய நேரடி விவரணைகள் , அனுபவங்களை உடனுக்குடன் பதிவிட்டார். அதன் தொகுப்பே இந்நூல்.
காட்சன் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அன்று பட்டுச்சாலை இருந்திருப்பதை போல, வங்கத்தில் தொடங்கி தமிழகம் வரை கிழக்கு கடற்கரை ஓரமாக பனைமரச் சாலை ஒன்றிருக்கலாம் என்று ஊகிக்கிறார். அதனால் அவர் தேசிய நெடுஞ்சாலைகளை கூடுமானவரை தவிர்த்து கிராம சாலைகள் வழியே பயணிக்கிறார். கிராம சாலைகளில் புல்லட்டில் போவது என்பது நம் நாட்டை பொறுத்தவரை ஒரு சாகசப் பயணம் தான். இரவுகளில் அந்தந்த ஊர் போதகரின் வீட்டிலோ கெஸ்ட் ஹவுஸிலோ தங்கிக் கொள்கிறார். மும்பையில் தொடங்கும் பயணம் கர்நாடக எல்லையான ஹூம்னாபாத்தை அடைந்து அங்கிருந்து ஆந்திரத்தின் கிழக்கு எல்லை வழியாக தமிழக கிழக்கு கரையோரமாக வந்து கன்யாகுமரியில் நிறைவுறுகிறது.
தான் போகும் இடங்களில் பனையையோ, பனையேறியையோ, கள்ளுக்கடையையோ கண்டால் பின் தொடர்ந்து சென்று அதை சார்ந்து தொழில் செய்பவர்கள், அவர்கள் வாழ்க்கை முறை, சந்தை படுத்துதல் போன்ற செய்திகளை கேட்டு அவதானிக்கிறார். சில ஆலோசனைகளை சொல்கிறார். பனை வெட்டப்பட்டு விழுந்து கிடப்பது அவருக்கு மரண வீட்டை நினைவுறுத்துகிறது.
நம்பிக்கையும், சோர்வும் மாறி மாறி வரும் இப்பயணத்தில் பனையின் மையப் பிரச்சனையாக அவர் காண்பது பனையேறும் தொழிலாளர்கள் குறைந்து வருவதையே. அதனாலேயே பனைகள் கைவிடப் படுகின்றன.இது ஒரு கடக்க முடியாத அகழியாக, மாபெரும் சுவராக அவர் முன் நிற்கிறது.
ஆனால் ஆந்திரத்தில் மிகுந்துள்ள பனைகள் ஓரளவு நம்பிக்கை அளிக்கின்றன. அங்கு கள் இறக்குவதும், விற்பதும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு லைசன்ஸ் வழங்கப் படுகிறது. அது அங்குள்ள கிராமியப்பொருளியலின் அடித்தளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ் நாட்டில் கள் இறக்க லைசன்ஸ் தந்து அரசு அங்கீகரிக்காததே பனை அழிய முழுமுதல் காரணம். முழுக்க ,முழுக்க கருப்பட்டி, பனங்கற்கண்டு என்ற இரண்டு உப பொருட்களைத் தரும் ஒரு சிறிய குடிசைத் தொழிலாக சுருங்கி விடுகிறது. கருப்பட்டிக்கும் நாம் நினைக்குமளவு விரிவான சந்தை மதிப்பில்லை. மிகச் சிறிய சதவிகித மக்களுக்கே அதன் தரம் பற்றிய விழிப்புணர்வு உள்ளது. அரசே மதுக் கடைகளை ஏற்று நடத்தும் ஒரு மாநிலத்தில், அயல்நாட்டு மதுவிலிருந்துதான் மிகப் பெரிய வருவாய் வருகிறது என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அரசு கள்ளை நிச்சயமாக ஆதரிக்கப்போவதில்லை.
தமிழ்நாட்டிலும் வேம்பார், உடன்குடி, திருச்செந்தூர், மணப்பாடு, சுப்ரமண்ய புரம் முதலிய இடங்கள் பனைத்தொழில் வாழும் என அவருக்கு நம்பிக்கையளிக்கின்றன. அதுவும் சுப்ரமண்ய புரத்தில் இரண்டு இலட்சம் பனைமரங்களை ஒருசேர பார்க்கும் காட்சன் பரவசம் அடைகிறார்.
தன் பயண அனுபவத்தினூடாக பனைமரத்தின் பொருளியலை, பனைமரத்தை ஒட்டிய வாழ்க்கைகை விரிவாக விளக்கிச் சொல்லும் காட்சன் உலகளாவிய பனைப்பண்பாட்டின் கூறுகளையும் தொட்டுக்காட்டுகிறார். ஜெருசலேமில் ஈச்சையின் கிறிஸ்துவாக இருப்பவர் நம் நாட்டில் பனையோலை கிறிஸ்துவாக மாற்றம் கொள்கிறார்.. குருத்தோலை பவனியில் பனையின் குருத்தோலையே நம் யேசுவுக்கு காணிக்கையாக்க தகுதியானது . ஓலைச் சிலுவையே அழகானது, எளிமையானது, நம் மண் சார்ந்தது என்கிறார்.
பனை இந்தியாவில் பத்ர காளியுடன் ஒப்பிடப்படும் ஐதீகத்தை ஆராய்கிறார். பனை தல விருட்சமாக போற்றபடும் சிவன் கோவில் உள்ள ஊரை தேடி செல்கிறார். சைவத் திருமறைகள், குறள், நாட்டுப் புறப் பாடல்கள் என நம் இலக்கியத்தில் பனை ஆழமாக வேரோடியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். நம் பாரம்பரியம், திருவிழாக்கள், பண்பாடு, சடங்குகளில் அது பிணைந்திருப்பதையும் நாம் அறிகிறோம்.
ரசனையும், அழகுணர்ச்சியும் மிகுந்த காட்சன் அக்கானி விற்கும் கலன், அதன் வடிவமைப்பு, கள் இறக்கும் கலம், சீவும் அரிவாள், பனையேற்ற உபகரணங்கள், உப கரணப் பெட்டி போன்றவை பிரதேசத்திற்கேற்ப மாறுபடுவதை ரசித்து ஒரு கலை ஆர்வலர் போல அவற்றை ஆவணப் படுத்துகிறார். போகிற வழியில் அவர் மயங்கி நிற்கும் கோட்டைகள் , கோவில்கள், தேவாலயங்கள், ஏரிகள், அஸ்தமன சூரியன் எரிந்தணையும் பனங்காடுகள் என முழுமையான ஒரு பயண அனுபவம் இந்நூல்
காட்சனின் மொழி மிக வளமானது. ஒரு புனைவெழுத்தாளனின் மொழி ஆளுமைக்கு நிகரான கச்சிதமான சொல்லாட்சிகள், விவரணைகள், கவித்துவம் மிக்க இடங்கள் வருகின்றன.
உதாரணமாக
“மூதாதையர் விட்டுச் சென்ற வழிபாட்டுத் தலத்தில் தனித்து நிற்கும் பூசாரியைப் போல் உணர்ந்தேன்”
” ஒற்றைத் தூணும் சுற்றுச் சாய்வும் அமைந்த குடிலை எழுப்பியவனே முதல் பொறியாளன்”.
” அனைவருக்குள்ளும் பயணம் விரும்பும் ஒரு பயணி உறைந்திருக்கிறான்”
பைபிளின் கவித்துவமான மொழியும், வசனமும் ஆங்காங்கே வருகிறது. யோவானின் வசனமாக [15-{1-6}] வரும் பகுதியில் திராட்சைக்கு பதில் பனையை இட்டு நிரப்பி பிறிதொரு ஆழத்தை உருவாக்குகிறார். .
திருச்சபை அன்றாட உண்மைகளுடனும் எளிய மனிதர்களுடனும் முரண்படும் இடங்களையும் , பணமும் அதிகாரமும் முதன்மையாகி சேவை இரண்டாம் பட்சமாக ஆவதையும் ஆற்றாமையோடு பகிரும் காட்சன் உண்மையிலேயே மருத்துவ சேவை, கல்வி சேவை செய்யும் திருச்சபைகளையும் பயணம் முழுக்க அடையாளப் படுத்துகிறார். பூனா அருகே ஓர் இடத்தில் முழுக்கமுழுக்க எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக விடுதி ஒன்றை நடத்தும் கிறித்தவ மதகுரு ஓர் உதாரணம்.
ஒரு இலட்சிய பயணி என்பவன் தன் எல்லைகளை தானே கடப்பவன். கிறிஸ்துவின் வழியாகவும், பனை வழியாகவும் அவருக்கு அக தரிசனங்கள் கிடைக்கின்றன ஓர் இடத்தில் பனையேறியின் கால்களிலும் கைகளிலும் நெஞ்சிலும் உள்ள தழும்புகளை ஏசுவின் புனிதகாயங்களுடன் ஒப்பிடுகிறார். அங்கு இரண்டு ஆன்மிகமும் அவருக்குள் ஒன்றாகின்றன. காட்சன் தன்னைக் கண்டுகொள்ளும் இடம் அது.
பயணம் நம்முள் நிகழ்த்துவது என்ன? மனதின் சுருள்கம்பி மெல்ல முறுக்கவிழ்கிறது. மனம் இலகுவாகிறது. நிலக்காட்சிகள் மாறத் தொடங்கும்போது வீடு, வாசல், சுற்றம் விலகிப் போக நாம் புதிய உலகிற்குள் நுழைகிறோம். அக்கணங்களில் நேற்று இல்லை, நாளை இல்லை, சஞ்சலங்கள் இல்லை. முதலில் ஒரு பரவசம், உற்சாகம். பிறகு அதன் அலைகளடங்கி அதுவே ஆழ்நிலை தியானமாகிறது. ஆகவே இப்பயணம் ஓர் ஆன்மிகவாதியின் அகப்பயணமும்கூட.
பயணம் தேடலாகும்போது அதிலுள்ள வசதிக்குறைவுகள் எல்லாம் நோன்புகளாக ஆகிவிடுகின்றன. பயண அசௌகரியத்தை சொல்லும்போது கூட நகைச்சுவையால் கடந்து செல்கிறார் காட்சன். தாகம், சாப்பாடு, தூக்கம், வெயில் எல்லாமே இரண்டாம் பட்சம்தான். புல்லட்டின் ஹாண்டிலை பற்றியிருக்கும் விரல்கள் சிவந்து, வெந்து, பழுத்து புண்ணாகிவிட வாய்ப்புள்ள கோடையிலேயே அவர் பயணம் நிகழ்கிறது. அதுவும் ஆந்திராவில் உச்ச பட்சமாக 44 டிகிரி செல்சியஸ். அவருள் உள்ள 10 வயது சிறுவன் அதையும் சிரிப்புடனே எதிர்கொள்கிறான். 1964 மாடல் புல்லட் அவருடன் ’சொறிமுத்து’வாக பெருமையுடன் உடன்வருகிறது. பெண்கள் கால் பதிக்க இயலா நிலவெளிகளில் அலைந்து திரிவது ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு வரம் இந்தியாவில். அதன் விடுதலையும் அவர்களுக்கே இன்றுள்ளது.
இந்நூலினூடாக நான் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் குமரிமாவட்டத்தில் கண்ட பனைகளை, அடைந்த பனைசார் அனுபவங்களை மீட்டுத் தொகுத்துக்கொண்டேன். இன்று பனை என்றால் எனக்கு என்னபொருள்? தூய கருப்பட்டியின் இனிப்பாக, பனங்கற்கண்டின் படிக ஒளியாக, அக்கானியின் சுவையாக, நுங்கின் குளிர்ச்சியாக அது வளர்ந்திருக்கிறது.
பொட்டல்களில் பனையை தனித்தும், கூட்டமாகவும் கண்டிருக்கிறேன். கைவிட ப் பட்டவையாக, தனிமை நிறைந்தவையாக, மனித அருகாமையை இழந்தவையாக அவற்றைக் காணும் போது மனம் துணுக்குறும். ஆனால் அஞ்சு கிராமம், உவரி, மணப்பாடு வழியாக ச் செல்லும் சாலையில் பயணிக்கும் போது சில செம்மண் தேரிகளில் பனையை பார்க்கும்போது கம்பீரமாக செழிப்புடனும், மிடுக்குடனும் அவை நிற்பதுபோல் தோன்றும்.
பனைபற்றிய ஒரு நாட்டுப்புற ஐதீகக் கதை உண்டு. எட்டு குழந்தைகளைப் பெற்ற ஏழைப் பெண் ஒருத்தி பஞ்சத்தால் உணவின்றி தவித்து குழந்தைகளுடன் தானும் கிணற்றில் விழுந்து உயிர்விட த் துணிகிறாள். அக்கிணறு நாகங்களின் பாதாள உலகத்திற்கான வாசல். அக்கிணற்றில் விழுந்து நாகங்களின் அரசனான வாசுகி முன் கதறியபடி நிற்கிறாள். அவளின் கண்ணீருக்கு இரங்கிய வாசுகி கராளன், கரியன் என்ற இரு கரிய பாதாள நாகங்களை அவளுடன் பூவுலகிற்கு அனுப்பி வைக்கிறான். பூமிக்கு வந்த கராளன் பனையாகியது. கரியன் எருமையாகியது. பசிப்பிணி தீர்த்தது. மேல் தட்டு மக்களின் ஐதீகமான இந்திர லோகத்தின் கல்பக விருட்சத்திற்கும்[ தென்னை], காமதேனுவுக்கும்[காராம் பசு] நேர் எதிரான அடிதட்டு மக்களின் ஐதீகம் இது.
ஆகவேதான் காட்சனின் பனைப்பயணம் எளிய மக்களின் உலகினூடாக நிகழ்கிறது.இந்தியாவின் கலைச்செல்வங்களை, இயற்கை அழகுகளை, பண்பாட்டுப்பெருமிதங்களை, மாநகரங்களை பார்த்துக்கொண்டு பயணம்செய்பவர்கள் காணாத ஓர் உலகம் இது. இந்தியாவை தாங்கி நிற்கும் தூண்கள் வேரூன்றிய பாதாள உலகம்.
புத்தகம் நற்றிணை பதிப்பகத்தால் அழகிய அட்டையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரே ஒரு குறை புகைப் படங்கள் எதுவும் இணைக்கப் படவில்லை என்பதே. பயண நூல்களுக்கும், புனைவல்லா நூல்களில் சில வகை நூல்களுக்கும் புகைப் படங்கள் மிக அவசியம். உ-ம் வெரியர் எல்வினின் பழங்குடிகள் பற்றிய நூலில் தரப்பட்டுள்ள புகைப் படங்கள் நம்முடன் மேலதிகமாக உரையாடுகின்றன.
மார்த்தண்டத்தின் தேவாலய வளாக ஒற்றைப் பனையின் அடியில் தனித்திருந்து கனவுகண்ட அச்சிறுவனின் பெருங்கனவே இப்பயணத்தை , இந்நூலை சாத்தியமாக்கியுள்ளது.
”ஓலைகளே என் சிறகுகள்; ஓலைகளே என் சுவடிகள்; ஓலைகளே என் நண்பன்; என் தனிமையையும், துயரையும் அவற்றை விட்டால் நான் வேறு எவருக்கும் சொல்ல இயலாது”
-அருண்மொழிநங்கை