நீர்க்கூடல்நகர் – 2

இன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை வெளியே வரவேண்டும். கருப்பை வடிவில் சூழ்ந்திருப்பது சென்றகாலத்தின் பிராப்தம் என்று சொல்லப்படுவதுண்டு. போர்வைக்குள் இருப்பவை இனிய கனவுகள்.

ஒருவழியாக எழுந்து கீழே சென்று அவுன்ஸ் கிளாஸில் தரப்படும் டீயை நாலைந்து வாங்கிக் குடித்து மீண்டும் மேலே வந்து காலைக்கடன்களைக் கழித்து குளியல். எருமையை கறப்பது கடினம், குழாயில் வெந்நீர் கறப்பது இன்னும்கொஞ்சம் கடினம். அரை பக்கெட்தான் வரும். அதைக்கொண்டு குளிப்பது ஒரு கலை. காரில் ஏறி அமர்ந்தால் இருக்கை பனிக்கட்டிபோலிருக்கும். அதற்கு நாம் ஈட்டிவைத்திருக்கும் வெப்பத்தில் கொஞ்சத்தை கொடுக்கவேண்டும்.

chambal
சம்பலில் ஒரு டீக்கடை

கான்பூருக்கு அந்திக்குள் சென்றுவிடுவது திட்டம். வழியில் பார்ப்பதற்கு பெரிய அளவில் தொல்லியல் இடங்களோ சூழியல் மையங்களோ கிடையாது. உத்தரப்பிரதேசத்தின் நிலத்தை பார்த்தபடி கடந்து போவதுதான் திட்டம். இருபுறமும் கடுகும் எள்ளும் பூத்த மஞ்சள்மலர்வெளி. புழுதிபடிந்த மலர்கள். உத்தரப்பிரதேசமே ஒரு புழுதிப்பரப்பு. இமையமலையின் புழுதி நதிகளினூடாக வந்து படிந்த நிலம் இது. மக்களும் புழுதிக்குள் வாழ்கிறார்கள். ஆங்காங்கே நின்று ‘ஒரு டீயைப்போட்டு’ மேலே பேசிக்கொண்டு சென்றோம்.

சம்பலின் கரையில் ஒரு டீக்கடை. அங்கேயே கிடைக்கும் நாணல்களைக்கொண்டு கட்டப்பட்டது. மழைக்காலம் வந்ததும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். புழுதி பறக்கும் சூழல். பாலைவனத்தின் நடுவே நின்றிருக்கும் உணர்வு. ஆனால் இந்தியாவிலேயே வளம் மிக்க மண் இது. இந்தியாவிலேயே அதிக நீர்வளம் கொண்டதும்கூட. ஆனால் இன்னும் இங்கே மானுடர் வாழ உகந்த சமூகச் சூழல் உருவாக்கப்படவில்லை.

b
யமுனைக்கரை 

உத்தரப்பிரதேசம் பொதுவாகவே வளர்ச்சி குன்றிய மாநிலம். மக்கள்தொகைப்பெருக்கு ஒரு காரணம். நிலச்சீர்திருத்தம் நிகழாமை, சாதிய அதிகாரம் கைமாறாதிருப்பது, கிராமிய அமைப்பின் மாற்றமில்லாமை என பல காரணங்கள். அனைத்தையும்விட முக்கியமான காரணம் சட்ட ஒழுங்கு பேணப்படாமை. அரசு என ஒன்று நடைமுறையில் இல்லை. நகரங்களில் கூட. ஒவ்வொரு பகுதியும் அந்தந்த பகுதிக்குரிய குண்டர்படையால் ஆளப்படுகிறது. உண்மையில் அரசு அவர்களையே கீழ்மட்ட அதிகார அமைப்பாக கருதுகிறது. ரவுடிகள் சாலையிலேயே செக்போஸ்ட் அமைத்து பயணிகளிடம்  ‘வரிவசூல்’ செய்வதை கண்டிருக்கிறோம்.

இந்த சட்ட ஒழுங்குச் சிக்கலால் உத்தரப்பிரதேசத்தில் வணிகம், தொழில் அனைத்துமே பெரும் தேக்கநிலையில் உள்ளன. மரபான ‘பண்ணையார்கள்’ ‘அரசியல்கொள்ளையர்’ அன்றி எவருமே இங்கே செல்வந்தர்களாக திகழவியலாது. முதலீடுகள் செய்யமுடியாது. ஆகவே வளமான நிலமாக இருந்தாலும் உத்தரப்பிரதேசம் வறிய சமூகமாகவே உள்ளது. பட்டினி இல்லை. ஆனால் பரிதாபமான இல்லங்கள். அழுக்கு உடை அணிந்த மக்கள். பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகள். ஏராளமான நாடோடி இனக்குழுக்கள்.

chambal2

‘பிரச்சினை’ ஏதும் இல்லாமல் இருந்தால் போதும் என்பது அரசியல்வாதிகளின் எண்ணம். இந்த ரவுடிகள் அரசியல்வாதிகள் தேர்தலில் வெல்லவும் உதவுகிறார்கள். ஆகவே அரசியல் அவர்களை பேணுகிறது. ரவுடிகளே நேரடியாக அரசியலில் இறங்குவதும் உண்டு. முன்பு டாக்கூர்கள், ஜாட்கள் பெரும் ரவுடிகள். இன்று யாதவர். இஸ்லாமியப் பகுதிகளில் இஸ்லாமியர் பெரும் ரவுடிகளாக ஆட்சி செய்கிறார்கள். சமாஜ்வாதி கட்சி முழுக்கமுழுக்க ரவுடிகளால் ஆனது. யாதவ-இஸ்லாமிய ரவுடிகளின் கூட்டு அந்தக் கட்சி. அந்த ஆதிக்கத்தை உடைக்க முயன்று மாயாவதி தோற்றார். இப்போது ஆதித்யநாத் கடும் நடவடிக்கைகள் வழியாக உத்தரப்பிரதேசத்தை இறுக்கிப்பற்றியிருக்கும் ரவுடிஆதிக்கத்தை ஒழிக்கமுயல்கிறார் என்கிறார்கள். மக்கள் எங்கும் அதை ஆர்வத்துடன் பேசுவதை காணமுடிகிறது. அதில் அவர் வென்றால் நல்லது.

அங்கே ஓராண்டில் மட்டும் ஆயிரம் குற்றவாளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றிருக்கிறது. அச்செய்தி இங்கே அரசியல் ரீதியாக திரிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் உத்தரப்பிரதேசம் பழைய வைல்ட் வெஸ்ட் போன்ற சமூகச்சூழலையே இன்றும் கொண்டிருக்கிறது. சட்டம் கொலைவாளுடன் செல்லாதவரை அங்கே மக்களுக்கு வாழ்க்கை இல்லை. ஜனநாயகம் தேவை, நீதிமன்றங்களும் தேவை. ஆனால் பதினெட்டு கொலைகள் செய்த ஒருவனுக்கு பதினெட்டு முறை ஜாமீன் வழங்கி பதினெட்டு வழக்குகளையும் கிடப்பில்போட்டு பத்தொன்பதாம் கொலைக்காக அவனை சுதந்திரமாக விட்டு வைத்திருக்கும் நமது நீதிமன்றங்கள் இருக்கும்வரை துப்பாக்கியே நீதியின்வழியாக இருக்கும்.

sss

உத்தரப்பிரதேசத்தின் இந்த ரவுடி ஆதிக்கம் என்பது நாநூறாண்டுக்காலத் தொன்மை கொண்டது. இஸ்லாமியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் உருவான அராஜக நிலையில் வேர்கொண்டு எழுந்தது. முன்னாள் படைவீரர்கள் கொள்ளையர்கள் ஆனார்கள். கொள்ளையையே தொழிலாகக் கொண்ட பழங்குடிகள், பாலைவன நாடோடி இஸ்லாமியக் குழுக்கள் பல இருந்தன. தக்கிகள் அல்லது தக்கர்கள் என்னும் அமைப்பு அவ்வாறு உருவாகியது. பதினெட்டாம்நூற்றாண்டில் தக்கிகள் உத்தரப்பிரதேசத்தை ஆட்டிப்படைத்தனர். பிரிட்டிஷாரால் தக்கிகள் ஒடுக்கப்பட்டாலும் இன்றும் பல கொள்ளைக்கார குடிகள் அங்கே போலீஸ் அணுகவே முடியாத அளவுக்கு வலுவாக உள்ளன.

இந்தியாவின் குற்றச்செயல்பாடுகளின் மையம் தெற்கு உத்தரப்பிரதேசம், தெற்குராஜஸ்தான், வடக்கு மத்தியப்பிரதேசம் ஆகியவை அடங்கிய ஒரு நிலப்பகுதி. சம்பல் இங்கேதான் ஓடுகிறது. மத்தியப்பிரதேச அரசு மெல்லமெல்ல தெற்குச் சம்பலை குற்றச்சூழலில் இருந்து விடுவித்து வேளாண்மைக்கு கொண்டுவந்துள்ளது. வளர்ச்சியும் கண்ணுக்கு தென்பட்டது. வடக்குச் சம்பல்பகுதி இன்றும் பாழடைந்தே கிடக்கிறது.

ll
படேஸ்வர்

வழியில் படேஸ்வர் என்னும் ஆலயத்தொகை பற்றிய அறிவிப்பு இருந்தது. மத்தியப்பிரதேசத்தில் சம்பல்கரையில் இருக்கும் படேஸ்வர் கே.கே.முகம்மது அவர்களால் மீட்கப்பட்ட ஆலயத் தொகுதி. இந்தியாவின் மிக முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்று அது. அந்த நினைவில் இங்கும் ஆலயங்கள் இருக்கும் என்று எண்ணி வழிவிசாரித்து சிற்றூர்கள் வழியாக சென்றோம். வயல்கள் வழியாகச் செல்வது விழிவிரியச்செய்வதாக இருந்தது.

யமுனையின் கரையில் அமைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களின் வரிசை இது. தண்ணீர் கன்னங்கரேலென்று கூவத்தைப்போல் ஓடிக்கொண்டிருந்தது. டெல்லியைக் கடந்தபின் யமுனை பத்து கூவத்துக்கு சமம். கான்பூரைக் கடந்தபின் நூறு கூவத்துக்கு சமம் என்பார்கள். அந்த யமுனை சென்று சேரும் கங்கையில்தான் கும்பமேளாவில் நாளொன்றுக்கு ஐம்பது லட்சம் பேர் நீராடி பாவங்களை களையவிருக்கிறார்கள்.

படேஸ்வர்
படேஸ்வர்

படேஸ்வர் ஒரு வட இந்திய தீர்த்தகட்டத்துக்குரிய எல்லா அடையாளங்களுடன் இருந்தது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் சுதையில் கட்டப்பட்ட ஒற்றை அறைக் கோயில்கள். பஞ்சகச்சம் கட்டி அழுக்கு சட்டை போட்ட பூசகர்கள். கும்பல் கும்பலாக சாமியார்கள். செவ்வந்திப்பூ மற்றும் சரிகை மாலைகள் விற்கும் கடைகள். ஓலைவேய்ந்த கடைகளின் முகப்பில் கற்கண்டுப் பொட்டலங்கள், குங்குமக் குவியல்கள். எங்கு பார்த்தாலும் கண்ணை உறுத்தும் விதங்களில் ஆடை அணிந்த, மெலிந்த குறுகிய உடல் கொண்ட பெண்கள் கீச்சுக்குரலில் மாறி மாறி கூவிக்கொண்டிருந்தார்கள்.

வட இந்தியாவில் இந்த ஆலயங்கள் எதிலும் வழிபாட்டுக்கென முறைமையோ ஒழுங்கோ கிடையாது பனிரெண்டாம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய ஆட்சி நிலவியபோது ஆலயங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டன. ஆலய வழிபாட்டு மரபும் இல்லாமல் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு பேஷ்வாக்கள் ஆட்சியில் மீண்டும் சிறிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழிபாட்டு முறை தோன்றியபோது நடுவே ஒரு நீண்ட கலாச்சார மறதி உருவாகிவிட்டிருந்தது. ஆகவே பொதுவாக சில அரிதான ஆலயங்கள் தவிர இங்கே எந்தச் சடங்கு ஒழுங்கும் கிடையாது. என்னவேண்டுமென்றாலும் செய்யலாம். கோயில் கருவறைக்குள்ளேயே மூக்கு சிந்தலாம். ஆடை மாற்றிக்கொள்ளலாம்.

படேஸ்வர்
படேஸ்வர்

“ஏ பேட்டா, ஆவோ” என ஒரு பெண் கருவறைச் சிவலிங்கம் மேல் கையூன்றி நின்று வெளியே நோக்கி கூச்சலிட்டுக்கொண்டிருந்தாள். அவளை விலகச்சொல்லி இன்னொரு பெண் கூச்சலிட்டாள். லேஸ் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி சிவபெருமானுக்கு படைத்தார்கள். மஞ்சள் பையில் கொண்டு போன பொருட்களை சிவலிங்கத்தின்மேலே வைத்துவிட்டு பூக்களை சிவலிங்கத்துக்குக் கீழே வைத்து வழிபடும் பெண்ணை பார்த்தேன். பக்தியால் எதையாவது எப்படியாவது செய்வது என்ற ஒரு முறைமையிலிருந்து உருவான தள்ளுமுள்ளுகள்.

எந்த ஒரு பண்பாட்டுக்கூறும் அழியும் என்றால் மீண்டும் உருவாக்கிவிட முடியாதென்பதே இருபத்தொன்பதாம்நூற்றாண்டு கண்டுகொண்டபாடம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய பழைமையைச் சீர்திருத்தும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டில் மரபு மறுப்பாக உருமாறின. உலகளாவிய அடையாளம் கொண்ட மானுடம் என்னும் கனவு உருவான காலம் அது.

Day2-125

அப்படி ஒரு மானுடம் இருக்க இயலாது என்றும், மானுடப்பண்பாடு என்பது ஒரு தொடர்ச்சியே என்றும் மரபுகள் அழிந்தபின் கண்டுகொண்டார்கள். இன்று ஐரோப்பா மரபுகளை மீட்டு உருவாக்க முயல்கிறது. ஆனால் அது வெறும் போலிநடிப்பு -மீம்- ஆகவே நிகழ்கிறது. எதுவும் ஒரு சடங்கு என, ஆசாரம் என, குறியீடு என உருவாகிவர பல தலைமுறைகள் ஆகும். அவ்வாறு ஆகிவந்தவற்றிலுள்ள ஆக்கபூர்வமான பண்பாட்டுக்கூறுகள் ஒரு சமூகத்தின் பெருஞ்செல்வம். அவற்றை இழந்த சமூகம் கலையை இலக்கியத்தை நுண்ணுணர்வுகளை இழக்கும்.

IMG_1962

எங்குநோக்கினும் அழுக்குகள், குப்பைகூளங்கள். ஆறு முழுக்க பல்லாயிரம் பிளாஸ்டிக் உறைகள் மிதந்துகொண்டிருந்தன. குப்பை மலைகளுக்கு நடுவே கரிய தண்ணீர் சுழித்தோடிக்கொண்டிருந்தது. அங்கே சற்று நேரம் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் சாலைக்கு வந்தோம். இருபுறமும் மைசூர் பருப்பு விளையும் வயல்கள் மஞ்சள் பூத்து பரந்திருந்தன. கடுகு எண்ணெய் எடுக்கப்படும் கடுகு நெடுந்தொலைவு வரை பசுமை கொண்டு நிரந்திருந்தது. பிப்ரவரி இறுதிக்குள் இவை அனைத்தும் அறுவடை செய்யப்பட்டு மார்ச் ஏப்ரல் மே மூன்று மாதங்கள் புழுதியடித்து உச்சகட்ட வெயிலில் வெந்து கிடக்கும் இந்த மண்.

இது பொதுவாக வட இந்தியாவில் கொண்டாட்ட மாதம். அறுவடைக்கு முந்தைய காத்திருப்பு. ஆகவே எங்கும் ஒரு உற்சாகமும் மக்கள் நடமாட்டமும் இருக்கும். சிறு சிறு திருவிழாக்கள் ஆங்காங்கே. சாலையோரங்களில் திடீர் இசைக்குழுக்கள். திடுக்கிடவைக்கும் திடீர்த்தெய்வங்கள். கோயில்களில் புதிய கொடிகளும் தோரணங்களும் பறந்துகொண்டிருந்தன.

IMG_20190128_165319

செல்லும் வழியில் சம்பலில் ஒரு முதலைச் சரணாலயம் இருப்பதாக இணையத்தில் பார்த்து அதை தேடிச் சென்றோம். வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அந்தச் சிறு கிராமத்தினூடாக நடந்து சென்றோம். பெரிய அளவில் வறுமை தென்படவில்லை, எனினும் தமிழகத்தின் நடுவாந்தர கிராமங்களிலிருக்கும் செழிப்பும் காணக்கிடைக்கவில்லை. வயல்களினூடாக இறங்கி ஓடைகளில் ஏறி ஒருவழியாக சம்பலை சென்றடைந்தோம். சம்பலுக்கு அப்பால் மத்தியப்பிரதேசம். இப்பால் உத்தரப்பிரதேசம். நாங்கள் முதலைச் சரணாலயத்தை அடையவில்லை. ஆனால் அந்தச்சிற்றூரை பார்க்க வாய்ப்பு அமைந்தது. பயணங்களில் இப்படி பக்கவாட்டில் நுழைவது எப்போதுமே சுவாரசியமான அனுபவம்.

பெரிய ஆறு. நீலநீர் மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. குளிர்கால மாலை முன்னரே இருட்ட ஆரம்பிக்க நீரும் இருண்டுகொண்டிருந்தது. ஆற்றுக்குள் ஒரு பசு செத்து மிதந்து கொண்டிருந்தது. நாய்கள் அதை கவ்வி கரையில் இழுக்க முயன்றுகொண்டிருந்தன. ஆச்சரியம் என்னவென்றால் அதற்கப்பால் ஒரு பெரிய முதலையும் செத்து மல்லாந்து மிதந்து கொண்டிருந்தது. ஒரு போரின் இரு பலிகளா? சம்பலில் இந்தப்பகுதியில் ஏராளமான முதலைகள் உண்டு. ஆகவே ஆற்றில் எவரும் நீராடுவதில்லை. ஆனால் லண்டன் முத்து நீராடினார். நீராடுவதற்கு அவர் கொண்டுவந்திருந்த கருவிகள் பயன்படவில்லை என்றாலும் அவருடைய நீராட்டு மக்களை போதுமான அளவு அச்சுறுத்தியது.

Day2-129

தொலைவில் ஒரு சிறுதுறையில் இசை கேட்டது. வண்ண உடையணிந்த கிராமத்துக்குழு முழவுகளையும் சங்குகளையும் மணிகளையும் முழக்கியபடி நிற்க பெண்கள் சேர்ந்து எதையோ பாடினர். சம்பலின் கரைவிளிம்பில் நடந்து அங்கே சென்று சேர்ந்தோம். அந்த கிராமத்தில் பாகவதசப்தாகம் எனும் ஏழு நாள் புராணக் கதைசொல்லல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் முதல் நாளாகையால் காவிக்கொடிகளுடன் வந்து ஆற்றில் நீரள்ளி பாடல் பாடிக்கொண்டு சிறு ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தார்கள்.

ஆலயங்கள் அழிக்கப்பட்டபோது வட இந்தியாவின் இந்துமதம் கூட்டுபஜனையையும் கதைசொல்லலையும் வழிமுறையாகக் கொண்டது. தெய்வங்கள் கல்லில் இருந்து சொல்லுக்கு இடம்பெயர்ந்தன. இன்றும் இந்த பஜனை, கதைசொல்லல் நிகழ்வுகள் வட இந்தியாவின் இந்துமதத்தின் மையநிகழ்வுகள்.

Day2-143

அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு நாங்கள் கும்பமேளாவுக்கு செல்லும் தகவலை சொன்னோம். உற்சாகமாக தங்களுக்குத் தெரிந்த தமிழக ஊர்களை சொல்லிக் ண்டார்கள். மதுரை, சென்னை, கன்னியாகுமரியெல்லாம் தெரிந்திருக்கிறது. எங்கு சென்றாலும் பெரும்பாலும் அனைவருக்குமே ஈரோடும் தெரிந்திருப்பது ஓர் ஆச்சரியம். ஈரோட்டுக்கு ஒருமுறையேனும் வந்த எவரேனும் ஒருவர் வட இந்தியாவின் பெரும்பாலான சிற்றூர்களில் இருக்கிறார்கள். ஈரோடுக்கு அதெல்லாம் கொஞ்சம் அதிகம் என கிருஷ்ணனிடம் சொன்னேன். ஈரோட்டை அண்டார்டிகாவிலேயே தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்றார். பெங்குயின்கள் போர்த்தியிருப்பது சென்னிமலை விசைத்தறித் துண்டுகள்தானாம்.

Day2-124

அங்கிருந்து புழுதியினூடாக நடந்து அந்தச் சிற்றூருக்கு வந்தோம் அங்கு எங்களை அமரவைத்து டீ கொடுத்து உபசரித்தார்கள். அவர்களிடம் அந்த ஊரின் பொருளியில் அரசியல் பிறசூழலைப் பற்றி [பெங்களூர் கிருஷ்ணனின் இந்தியின் உதவியால்] பொதுவாக அரைமணிநேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பது தெரிந்தது.

ஆனால் எங்களை உபசரித்து அமரவைத்தவர்கள் ஊர் மையத்தில் வாழும் உயர் ஜாதியினராக இருந்ததனால் இருக்கலாம். ஆகவே அந்நிலைபாடு. அப்பால் எங்கேனும் சேரி இருக்கும், அங்குள்ளவர் சொல்வதென்ன என்று தெரியவில்லை. அவ்வூருக்கு அப்படி முற்றிலும் அன்னியர் வருவது அரிதினும் அரிது. ஆகவே எங்களிடம் ஊர்ப்பெரிய மனிதர்கள் முறையான மரியாதைச் சொற்களுடன் பேசினர்.

Day2-128

இரவு திட்டமிட்டபடி கான்பூரை அடையமுடியவில்லை. கியான்புரா தோடா என்னும் ஊரில் அறைபோட்டு தங்கினோம். வழக்கம்போல அறைக்கு மூன்றுபேர். குளிர் இருந்தமையால் நெரிசல் பெரிய இடைஞ்சலாக தெரியவில்லை. அன்றைய புழுதி தலையை நிறைத்திருந்தது. கண்களுக்குள் மஞ்சள்மலர்களின் நிறம் நிறைந்திருக்க காரில் சென்றுகொண்டே இருக்கும் நினைவு உடலில் எஞ்சியிருக்க துயிலில் ஆழ்ந்தேன்.

முந்தைய கட்டுரைபனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-48