குட்டுதற்கோ…

ka

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

அன்புள்ள ஜெ

ஈழ எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு வந்த கூச்சல்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த இருநூறுபேர் எங்கேயும் இருப்பார்கள். அவர்கள் அனைவருமே ஒன்றேபோலத்தான் கூச்சலிடுவார்கள். இதில் ஈழம் என்ன தமிழ்நாடு என்ன? ரசனை சார்ந்த அளவுகோல் போல இவர்களைப் பயமுறுத்துவது எதுவும் இல்லை. கு.அழகிரிசாமி மலேசியா பற்றிச் சொன்னபோதும் சரி, வண்ணநிலவனும் பகீரதனும் இலங்கை பற்றிச் சொன்னபோதும் சரி இந்த கூச்சல்கள்தான் எழுந்தன.

ஆனால் இலக்கியத்தில் அழகியல்தரம் என ஒன்று உண்டு, வாசிக்கத்தக்க படைப்புகள் அல்லாத படைப்புகள் என்னும் வேறுபாடு உண்டு என்று அறிந்த சிலரும் அங்கு உண்டு. இது தெய்வீகன் முகநூலில் எழுதிய இரு குறிப்புகள். உங்கள் பார்வைக்காக

பிகு

அதற்கு அடியிலேயே  ‘அது சரி யார் இந்த ஜெயமோகன்? அவரது காத்திரமான படைப்பு ஏதாவது உண்டா?’ என்னும் ஆழமான இலக்கியக்கேள்வியும் இருந்தது

 

ராஜ்.

அந்த இருநூறுபேர்

ஈழத்தின் அந்த இருநூறு கவிஞர்களுக்காகவும் கடந்த இரண்டு நாட்களாக இரவு – பகல் பாராது ஜெயமோகன் என்ற ஒற்றை ஆர்மிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் பெரும்படையை பார்க்கும்போது ஈழ இலக்கியத்தின் எதிர்காலம் எங்கேயோ போய்விட்டது என்பதை தவிர வேறு எந்த உணர்வும் ஏற்படவில்லை. அதேவேளை, அந்த இருநூறு பேருக்கும் அடித்திருக்கும் அதிஷ்டத்தை நினைக்கும்போது கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. பரவாயில்லை, எங்களது ஆட்களுக்கு எல்லாம் காலம் தாழ்த்தி கிடைக்கும் அங்கீகாரம்தானே, விட்டுவிடுவோம்.

ஆனால், இப்போது இந்த “Two Hundred பாதுகாப்பு படையணி” வெறுமனே விழுந்த மாட்டுக்கு குறிசுடுவதுபோல ஜெயமோகனுக்கு எதிராக கிரனேட் அடித்துவிட்டு, அவரது கையிலிருக்கும் பூச்சி மருந்து போத்தலையும் பறிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறது போலிருக்கிறது. அது நடவாது. நடக்கவும் முடியாது. சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் யோ.புரட்சி தலைமையில் ஆயிரம் கவிஞர்களின் கவிதைப்புத்தக்கம் என்று நாலு கிலோவில் ஒரு புத்தகம் வெளியாகியிருந்ததை யாரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள். வெளியீட்டு நிகழ்வு கிட்டத்தட்ட சிட்னி ஹாபர் பிரிட்ஜில் புதுவருட வானவேடிக்கை நிகழ்ந்ததுபோல ஜெக ஜோதியாக நடந்து முடிந்தது.

இப்போது பிரச்சினை என்னென்றால், அந்தப்புத்தகத்தில் எழுதிய கவிஞர்களுக்கு எதிராகப்போராடவேண்டிய கட்டாயமும் இருக்கிறது என்பதை இந்த “Two Hundred பாதுகாப்பு படையணி” மறந்துவிடக்கூடாது. ஏனெனில், அந்தப்புத்தகம் நிச்சயம் ஜெயமோகனுக்கு இப்போதைக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாலு கிலோ புத்தகத்தை விமானத்தில் கொண்டுபோய் கொடுக்க யாரும் உடன்பட்டிருக்கமாட்டார்கள். அனோஜன்தான் சிலவேளை கப்பலில் கொண்டுபோய்க்கொண்டிருக்கிறாரே தெரியவில்லை. அதுதான், கனகலமாக ஆளின் தொடர்பே இல்லை. ஆக, அந்தப்புத்தகம் ஜெயமோகனின் கைளில் கிடைத்தால் என்ன கதி? அவ்வளவுபேரையும் போட்டுத்தள்ளுவதற்கு அவர் அயல்நாட்டு படைகளின் உதவியை நாட மாட்டாரா?

ஆனால், என்னைப்போன்ற பாமர வாசகர்களுக்கு ஒன்று மட்டும் உடனடியாக புரிவதில்லை.

அதாவது வர்ண ராமேஸ்வரனையும் பொன் சுந்தரலிங்கத்தையும் தூக்கிவைத்துக்கொண்டாட தெரியாத எங்களுக்கு, எங்களுக்குள் ஒரு இசைக்கலைஞர் இருக்கிறார் என்று எங்களுக்கு காட்டுவதற்ககே விஜய் ரி.வி.யில் போய் ஜெசிக்கா பாடவேண்டியிருக்கிறது. அவளையும்கூட எங்களுக்குள் உள்ளவரை தூக்கிக்கொண்டாடமாட்டோம். ஆனால், விஜய் ரி.வி. முதல்பரிசு கொடுக்கவில்லை என்றவுடன் தொலைக்காட்சி முழுவதையுமே துரோகி என்று முத்திரை குத்துவோம்.

ஆக, இன்னொருத்தன் எங்களை திட்டும்போதுதான் எங்களுக்குள் யார் இருக்கிறான் என்பதே எமக்கு தெரிகிறது என்பது எங்களுக்கான வரலாறாக இருக்கிறபோது அந்த பூச்சி மருந்து அடியைத்தான் வாங்கித்தொலைவோமே. எங்களில் “விஷயம்” இருந்தால் எதிர்காலம் பயன்பெறட்டும். இல்லாவிட்டால் பூச்சி மருந்து கொம்பனியாவது ஜெயமோன் வழியாக பயன்பெறட்டும்.
டமாரவாதிகள் வாழ்க!

சமூக வலைத்தளங்களில் கும்பலாக நின்று ஒரு விடயத்தை கூப்பாடு போட்டால் அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான கோட்பாடுகளாகவே எடுத்துச்சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை தற்போதெல்லாம் வானுயர வளர்ந்துவருகிறது. சமூக ரீதியாக கவனஞ்செலுத்தப்படவேண்டிய சாபக்கேடான விடயம் இது.

இதன் நீட்சியைத்தான் கடந்த சில நாட்களாக ஜெயமோகனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வசைபாடல்களும் அந்தாதியாக நீழும் கொடுங்கீதங்களும் சாப பஜனை பாடல்களும் அம்மணமாக்கி காண்பித்துக்கொண்டிருக்கின்றன.

விவாதம் என்று வருகின்றபோது கருத்துநிலை சார்ந்து எதிர்ப்பதும் – கோட்பாட்டு ரீதியான எதிர்வாதங்களை முன்வைப்பதும்தான் உரையாடல் வெளியில் ஆரோக்கியமான படிமுறையாக அமையும். அதுதான் ஜனநாயகத்தின் அப்பியாசமும்கூட. சம பரிமாணமுள்ள உரையாடல்கள் பரஸ்பர கருத்துக்களை பரிமாறுபவர்களுக்கான பதில்களாக அமைவது மட்டுமல்லாமல் அந்த முரண்களில் பிறக்கும் கருத்துக்கள் சமூக எழுச்சிக்கான புதிய சிந்தனை வடிவங்களாகவும் அமையும். இலக்கியத்தில் அறம் எனப்படுவது பேசப்படும் உட்பொருள் மாத்திரம் அல்ல. பேசப்படும் முறையும்தான். இதனைத்தான் முன்னையவர்கள் செய்தார்கள். இப்போது மிகச்சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதனை புரிந்துகொள்வதற்கு, விஷ்ணுபுரம் படிக்கத்தேவையில்லை. சாதரண பொது அறிவே போதும்.

ஜெயமோகனுக்கும் ஈழத்தமிழ் படைப்புலகத்துக்கும் இடையில் நடைபெறுகின்ற பேணிப்பந்து விளையாட்டுக்கள் கோவில் திருவிழாக்கள் போன்றவை. அநேகமாக வருடத்துக்கு ஒன்றாவது இடம்பெறும். ஆனால், அந்த பிரச்சினைகள் வரும்போதெல்லாம் ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து நடைபெறும் ஒற்றை எதிர்வினை ஒப்பாரி மாத்திரமே. இந்த ஒப்பாரிகள் இரு முனைகளில் நடைபெறும். ஒன்று, அது குறித்து எந்த விளக்கமும் இல்லாமல் உயர் சுருதியில் குழறும் ஒரு கூட்டம் வீடு வீடாக ஓடிஓடி ஆட்களை சேர்த்துக்கொண்டு வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு கூட்டம், அந்த மனுசன் என்ன சொல்லியிருக்கிறார் என்று நன்றாகவே தெரிந்தும்கூட, இந்தப்பிரச்சினையில் நிலைப்பாடு எடுக்கிறோம், தொலைக்கிறோம் என்று தங்களது இருப்புக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடக்கூடாது என்ற உள்ளுணர்வோடு – நுணுக்கமாக சிந்தித்து – ஒட்டுமொத்த குழப்பத்துக்கு குழையடித்துக்கொண்டிருக்கும்.

இந்த இரண்டாவது வகையினர்தான் மிகவும் பொல்லதவர்களும் எல்லாவகையிலும் ஆபத்து நிறைந்தவர்களும் ஆவர்.

தமிழ்நதியையெல்லாம் ஒரு படைப்பாளியாக மதித்து விகடன்மேடை வரை அழைத்து விருது கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அவரைப்போலவே, “ஈழப்போர்க்கதைகளின் ஒற்றைப்படையினர் தாங்கள் மாத்திரமே” – என்று அகரமுதல்வன் அறிவித்த பட்டாலியனின் மூத்த தளபதி குணா கவியழகன் வருடத்துக்கு ஒரு நாவலாவது எழுதி தனது முகவரி – அகவரி அனைத்தையும் பறைசாற்றிவருகிறார்.

ஒரு இனத்தின் இலக்கியப்பெரும்புலத்திற்கு உரிமை கோருகின்ற இவர்கள் எல்லாம், ஜெயமோகன் முன்வைக்கும் கருத்துக்களுக்கு என்ன செய்திருக்கவேண்டும்?

“இந்தாடா நீ கேட்ட ஈழத்தமிழ் இலக்கியப்பெரும்புலம்” “இந்தா நீ கேட்ட கவிஞர்கள்” “இந்தா, இப்படிப்பட்ட ஈழத்தமிழ் கவிதைகளைவிட, தமிழகத்திலேயேகூட கவிதைகள் இருக்கின்றனவா காட்டு” என்று இவர்கள் கேட்டிருக்கவேண்டாமா? ஒரு குழுவாக இணைந்துகூட ஜெயமோகனின் அந்த குற்றச்சாட்டு என்று இவர்கள் கருதுவதை முறியடித்திருக்கவேண்டாமா?

ஆனால், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சிரிப்பு பொலீஸாட்டம் ஒளிந்திருந்து கல் எறிந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்கு கொஞ்சக்கூட்டம் வேறு!

ஆடு புழுக்கை போட்ட மாதிரி முகநூல் பதிவுகளில் பதில் சொல்லுமளவுக்குத்தான் ஈழத்தமிழ் கவிதைப்புலமிருக்கிறதா? அல்லது அவ்வளவுக்குத்தான் இவர்களுக்கு ஈழத்தமிழ் படைப்புலகத்தைப்பற்றி தெரிந்திருக்கிறதா?

ஜெயமோகன் நகைச்சுவையாக சொன்னதுகூட இவர்களுக்கு சீரியஸான சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், கண்கள் சிவக்க கன்னம் துடிக்க துடிக்க இவ்வளவு காலத்தில் யாராவது ஒருவர் ஈழத்தமிழ் கவி உலகின் உத்தம பாத்திரத்தை பொதுவெளியில் போட்டு விளாசிக்காட்டியிருக்கவேண்டாமா?

இங்கே இலக்கியவாதிகள் என்று வெளிக்களக்கொப்பியில் வெட்டி ஒட்டி தமக்கு தாமே கிரீடம் மாட்டிக்கொண்டு திரியும் பலருக்கு இருக்கின்ற பொதுப்பிரச்சினைதான் இது. அதாவது, தாங்கள் முட்டாள்களாக இருப்பதில் இவர்களுக்கு வெட்கம், சூடு சொரணை எதுவும் கிடையாது. ஆனால், அதனை இன்னொருத்தன் பொதுவெளியில் போட்டு உடைத்துவிடுகிறான் என்றவுடன் அத்தனை சொரணைகளும் இவர்களுக்கு திரண்டு வந்துவிடுகிறது. “உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா” என்று மதிலுக்கு மேல் குந்தியிருந்து கத்திவிட்டு குதித்தோடிவிடுகிறார்கள்.

இதற்கு அடிப்படை காரணமே ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் உரையாடல் தளம் என்பது மிக மிகக்குறைவு என்பதுதான். விவாதங்களை எதிர்கொள்வதும் அதற்கு பதில் கொடுப்பதும்கூட ஒருவித தெருச்சண்டைகள்போலவே நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாராவது ஒருவர் தங்களது படைப்பு குறித்து சிறிய கருத்தைக்கூறிவிட்டலே, தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்துக்கொண்டிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு கலைக்கத்தொடங்கிவிடுகிறார்கள். எல்லோரும் எப்போதும் எங்களை புகழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என்ற போதை மனநிலையைத்தான் இந்த குறுமனங்கொண்டவர்கள் விரும்புகிறார்கள்.

ஒரு நகைச்சுவையைக்கூட ரசிக்க தயாரில்லாத கடுப்பான உருங்களிலிருந்துதான் இலக்கியம் கசிந்து வழியும் என்று திடமாக நம்புகிறார்கள். என்ன சொல்லப்படுகிறது என்பதைவிட யார் சொல்கிறார்கள் என்பதில்தான் இலக்கியத்தின் ஆள்கூறுகள் தீர்மானிக்கப்படுவதாக நம்பும் அப்பாவிகளாக வாழ்வதை விரும்புகிறார்கள்.

இன்னொரு புறம் பார்த்தால், ஈழத்தமிழ் படைப்புலகில் விமர்சன மரபு செத்துப்பலகாலமாகிவிட்டது. முருகபூபதி போன்ற ஒரு சிலர் ஆங்காங்கே முந்தைய படைப்பாளிகள் குறித்த சிறியளவிலான பதிவுகளை தொடர்ந்து எழுதுகிறார்களே தவிர ஆழமான ஆய்வுகள் கிஞ்சித்தும் கிடையாது. நூல் வெளியீடுகள் என்பவை கூடிக்கலைகின்ற “இலக்கிய சாம்ராஜ்யங்களாக” பெருமை கொள்ளப்படுகின்றனவே தவிர, அங்கு வெளியிடப்படும் நூல்கள் குறித்து குறைந்தது ஒரு வருடத்துக்காவது உரையாடப்படுவது கிடையாது. சிற்றிதழ் போக்கும் அப்படித்தான். தமிழகத்துக்கு போட்டியாக சிற்றிதழ்களை கொண்டுவந்து தங்களை இயங்குநிலை இலக்கிய பெருஞ்சிங்கங்களாக காண்பிக்க விரும்புகிறார்களே தவிர, அதன் அடர்த்தி பற்றி எந்த கரிசனையும் கிடையாது. ஆளுக்காள் மாறி மாறி சோப்பு போடுவதுபோல, இதழ்களை தொடங்கிய மடப்பள்ளியினர்களே ஏதேதோ எழுதி பக்கங்களை நிரப்பிவிடுவதுடன் சரி. ஈழத்து எழுத்தாளர்கள் குறித்த சிறப்பிதழ்களை செய்யலாமே என்று கேட்டால் , ஏதோ சம்பந்தரிடம் தீர்வு பற்றி கேட்டதுபோல முறைக்கிறார்கள்.

இதையெல்லாம் ஜெயமோகனாவது சொல்கிறாரே என்று புரிந்துகொள்ள முயற்சிசெய்யாமல், போயும் போயும் ஜெயமோகன் சொல்வதா என்று கோபத்தின் வழியாக ஈழத்து இலக்கியம் பீறிட்டுப்பாய்வதுதான் இங்கு பெருஞ்சோகம்.

அன்புள்ள ராஜ்,

நான் சொல்வதற்குள்ளது ஒன்றே. நான் அழகியலை அளவுகோலாக்கி இலக்கியத்தை அணுகுபவன். இலக்கிய அழகியல் என்பது முந்தைய இலக்கியப்படைப்புகளால் உருவாக்கப்படுவது. இலக்கியவிமர்சகர்களால் திரட்டப்படுவது. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் உரிய தனித்தன்மைகளுடன் உலகளாவிய இயல்புகளும் கொண்டது. வரிசை அறியாது கொடுத்த பரிசில்களை தூக்கி வீசிய கவிஞர்களின் நாடு இது. புலவர்களின் நிலைவரிசையை உருவாக்குவதில், தேர்ந்த பாக்களின் தொகுப்புகளை அமைப்பதில், இலக்கிய நெறிவகுப்பதில் முன்னோடியான ஒரு பண்பாடு நம்முடையது. இங்கே என்றும் விமர்சனம் இருக்கும். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் என பாரதி ஒரு பட்டியல் இட்டபோது அன்றும் நாநூறு சில்லறைகள் எம்பிக்குதித்திருக்கும். ஒன்றுதான் சொல்லுதற்கு

குட்டுதற்கோ  பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை
    குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி
எட்டினமட் டு அறுப்பதற்கோ வில்லியில்லை
    இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தனில்லை
    விளையாட்டாக் கவிதைகளை விரைந்துபாடித்
தெட்டுதற்கோ அவறிவில்லாத் துரைகளுண்டு
    தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47
அடுத்த கட்டுரைபுதிய வாசகர் சந்திப்பு ஈரோடு